Sunday, 24 May 2020

புலிகள் மூதூரில் நடத்தியது என்ன ? -


இது இராணுவம் மீதான தாக்குதல் அல்ல. முஸ்லீம்கள மீது மிகவும் திட்டமிட்டு நடத்திய ஒரு இனவெறி தாக்குதலே. இதன் போதே இராணுவம் தாக்கப்பட்டது. நூற்றுக் கணக்கான முஸ்லிம் மக்கள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் திட்டமிட்ட படுகொலைகள் நடந்துள்ளது. பல பத்து பேர் புலிகளால் கடத்தப்பட்டுள்ளனர். சொத்துகள் சூறையாடப்பட்டுள்ளது. சொத்துகள் நாசமாக்கப்பட்டுள்ளது. மிக மோசமான கொடூரமான நடத்தைகளால் பல பத்தாயிரம் மக்களின் புலம்பெயர்வுக்கே இது வித்திட்டுள்ளது. நடத்ததோ மறுபடியும் முஸ்லீம் மக்கள் மீதான புலிகளின் மற்றொரு இனவழிப்புத் தாக்குதல் தான்.



இந்த கொடூரத்தின் முழுமையான உண்மை, மெதுவாக ஆனால் அழுத்தமாக மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளது. தமிழ் செய்தி ஊடகங்களின் வக்கிரமான உண்மைக்கு புறம்பான செய்திகளையும மீறி, இவை மனித இனத்தின் நாடி நரம்புகளையே உலுக்கும் வகையில் மெதுவாக கசியத் தொடங்கிவிட்டது.


பலரும் கருத முனைந்தது போல் அண்மைய மூதூர் யுத்தம் போரை நோக்கிய ஒரு நகர்வல்ல. அது குறுகிய சொந்த நலனை அடிப்படையாக கொண்டதும் தமிழ் மக்களுக்கு எதிரானதுமான, ஒரு குறுந்தேசிய வெறியாட்டம். இது நீரை பாதுகாப்பதற்கான புலிகளின் எதிர் யுத்தமுமல்ல. பேரினவாதம் நடத்திய திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் மீதான ஒரு யுத்தமும் அல்ல. மாறாக மறுபடியும் முஸ்லீம்கள் மீதான திட்டமிட்ட இனவெறித் தாக்குதலே.


மே இறுதி வாரத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக வெளிவந்த துண்டுப்பிரசுரம் மூலம் விடப்பட்ட ஒரு எச்சரிக்கையின் அடிப்படையில் முழுமையாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

அந்தத் துண்டுப்பிரசுரம் கூறும் வாசகம் என்ன? இதுதான்.


'
மூதூர் மக்களுக்கு

கடந்த காலங்களாக வடக்கு கிழக்கு தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதும் கடத்தப்படுவதும் அவர்களது சொத்துக்கள் திட்டமிட்டு தீக்கிரையாக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் சாதாரண செயலாக மாறிவிட்டது. இதில் உச்சக்கட்டமாக கடந்த காலங்களில் அரச துணைப்படைகளாலும், அவர்களோடு ஒன்றிணைந்துள்ள முஸ்லீம் ஆயுத அருவருடிக் குழுக்களாலும் மூதூர் பகுதியில் வைத்து பல தமிழர்கள் பட்டப்பகலில் ஈவிரக்கமற்ற முறையில் கட்டாக்காலி நாய்களைப் போல் இராணுவ துணைப்படைகளின் உதவியுடன் முஸ்லிம் ஆயுத குழுக்களால் நாளாந்தம் தமிழர்கள் அழிக்கப்பட்டுள்ளனர். இன்னும் அழிக்கப்படுகின்றனர்.
அவற்றைப் பார்த்து பரவசப்படும் முஸ்லிம் தலைமைகள் இனி எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த இருபது வருடங்களாக நடந்து வரும் தமிழீழ தாயக மீட்புப் போராட்டத்தில் மூதூரில் நிகழ்ந்ததைப் போன்ற மானக்கேடான ஒரு நிகழ்வை எந்தவொரு தமிழனும் எந்தப் பிரதேசத்திலும் அனுபவித்தது கிடையாது. இதனால் பொறுத்தது போதும் இழந்தது போதும் தமிழீழ தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


இதுவரை மூதூரில் தமிழர்கள் முஸ்லீம் ஆயுத அருவருடிக் குழுக்களால் கொலை செய்யப்பட்டதை எந்த ஒரு முஸ்லீம் தலைமையும் கண்டிக்கவும் இல்லை. அவர்களை தண்டிக்கவும் இல்லை.


இதனால் மானத்தை இழந்து உடமையை இழந்து. உயிரையும் இழந்து வாழ்வதை விட தமிழீழ மீட்புப் போராட்டத்தில் மூதூர் மீட்புப் போராட்டம் ஆரம்பித்து விட்டது. எனவே முஸ்லிம் மக்களே தங்களால் கண்டிக்கப்படாதவர்கள் எங்களால் தண்டிக்கப்படப் போகிறார்கள்.


தங்களுக்கும் இப்படுகொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று எண்ணும் மக்கள் மூதூரை விட்டு இன்னும் மூன்று தினங்களுக்குள் வெளியேறிவிட வேண்டும். அப்போது தான் எமது தமிழ் மக்களின் அகதி வாழ்வின் அர்த்தம் தங்களுக்கும் புரியும். இதையும் மீறி மூதூரில் தான் இருப்போம் என்று ஆவேச வார்த்தை பேசுபவர்கள் தமிழீழத்திற்கு எதிரானவர்களாகவே கருதப்படுவார்கள். ஏன் எமது மூதூர் மீட்பில் மாண்டும் போவார்கள்.

இது தங்களுக்கான விரட்டலும் அல்ல. பயமுறுத்தலும் அல்ல. எமது தமிழீழ தாயக மீட்புப் போராட்டத்தில் முதலில் மூதூர் மீட்புப் போராட்டம் ஆரம்பித்து விட்டது என்பதற்குரிய அழைப்புமணியே.


பொறுத்ததிற்காக தமிழன் பயந்தவன் அல்ல. மீட்பதற்காகவே அவன் பொறுத்துள்ளான் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரியும்.
சொல்லிச் செய்பவன் தமிழனடா அதையும் அஞ்சாமல் செய்பவன் தமிழ் மறவனடா.


தமிழீழ தாயக மீட்புப் படை"


இது முஸ்லீம் மக்களுக்கு எதிராக மே இறுதிவாரத்தில் புலிகளால் மக்களின் பெயரில் வெளியிடப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரம். (கடும் எழுத்தால் அடையாளப்படுத்தி காட்டியது நாம்.) 'இன்னும் ஒருசில நாட்களில் தெரியும்" என்பதையே நடைமுறையில் நடத்திக்காட்டிய ஒரு தாக்குதலே இது. 'தமிழீழ தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்." என்ற கூறிய அடிப்படையில் ஒரு குறுந்தேசிய வெறியாட்டம் நடந்துள்ளது. அகதி ஆக்குவதும், அவர்களை கொன்று ஒழிப்பதும் என்பது எல்லாம் முன் கூட்டியே திட்டமிடப்பட்டவைதான், அதை இந்த முன்கூட்டிய துண்டுப்பிரசுரம் அம்பலமாக்குகின்றது.


மனித இனம் மீதான காட்டுமிராண்டித்தனம்


இலங்கை பேரினவாத அரசும், குறுந்தேசிய புலிகளும் நடத்துகின்ற இனவாத குறுகிய நடத்தைகள், மக்கள் வாழ்விற்கான அனைத்து சமூக ஆதாரங்களையும் தவுடுபொடியாக்குகின்றன. மக்கள் எதுவும் செய்ய முடியாத ஏதிலிகளாக, தமது மனித வாழ்விழந்து கொலைகார மனிதவிரோதக் கும்பல்களின் காலடியில் சிதைகின்றனர். மறுபுறத்தில் தேசியம் காட்டுமிராண்டித்தனமான ஒன்றாகவே தன்னை வக்கிரப்படுத்தி இழிந்து நிர்வாணமாகி நிற்கின்றது.


எங்கும் கோரமான இனவெறி அவலங்கள். மனித பிளவுகள். சமூக வக்கிரங்கள். குறுகிய மலினப்பட்ட இனவுணர்வுடன் நடத்தும் வக்கிரமான குதிராட்டம். இதுவே புலம்பெயர்ந்த பெரும்பான்மையான தமிழ் மக்களுக்கு குஷியான பொழுது போக்கான வம்பளப்பாகிவிட்டது. இந்த மனித அவலத்தையிட்டு, இந்த இனவழிப்பில் மரணப்போரின் வாழ்வுபற்றி அக்கறையற்ற பொழுது போக்குக்கு, இதுவே அவர்களின் விதண்டவாதமான வம்பளப்புக்கு தீனியாகிவிட்டது.

கொல்லப்பட்டவனின் எண்ணிக்கை பற்றி கற்பனைப் பெருமைகள். யாரின் கட்டுப்பாட்டில் குறித்த பிரதேசம் என்ற பிரமைகள். இராணுவ வியூகம்பற்றி வகைவகையான தந்திரக் கதைகள். மனிதாபிமான யுத்தம் பற்றி வம்புப் பேச்சுகள். இப்படி பலவகையான, முண்டங்களாகவே பிறக்கும் முரணான அரசியல் வம்பளப்புகள். ஆனால் மனிதவினம் வரைமுறையின்றி சதா செத்துக் கொண்டிருக்கின்றது.


இதை தற்காப்பு என்றும், மட்டுப்படுத்தப்பட்ட யுத்தம் என்கின்றார்களே! யுத்தத்தின் நோக்கம் மக்களுக்கானதாக இருக்கின்றதா என்றால் இல்லை. ஒரு இளைய தலைமுறையை உயிருடன் பலியிட்டு, மக்களை நடுவில் நிறுத்தி கொன்று குதறுவது எதற்காக? குறுகிய சொந்த நலனை அடைய இனவாத வக்கிரங்கள் அவசியமாகிவிட்டது. முன்பெல்லாம் இனவாத பேச்சு அரசியல் செய்யவே போதுமானதாக இருந்தது. இன்று இனவாத கொலைகள், சூறையாடல்கள் அவசியமாகிவிட்டது.


ஏழை எளிய மக்களின் நீர் மீதான புலிகளின் தடை


புலிகள் நீர் மீதான தடையை தாம் செய்யவில்லை, மக்கள் தான் தடுத்தனர் என்று கூறிய படி, முஸ்லீம் மக்கள் மீதான இன அழிப்பை நோக்கி ஒரு யுத்தத்தை வலிந்து திணித்தனர். ஒரு நேரக் கஞ்சிக்கே வழியற்ற ஏழை எளிய தமிழ் மக்களின் பெயரில், இப்படி ஒரு அக்கிரமம் நடந்தேறியது. புலிகளின் பிரதேசத்தில் இந்த மக்களுக்கு புலியை விட அதிகாரம் உள்ளது என்று கூறியபடி, புலிகள் தமது சொந்தக் காதுக்கே பூச்செருகியபடி அரோகரா போடுகின்றனர்.


புலிகள் வலிந்து திணித்த நீர் மீதான தடை, கடந்தகால குடியேற்றத்தினை முடக்க முன்வைக்கப்பட்டதா எனின் இல்லை. தமது குறுகிய நலன் சார்ந்த பேரங்களுக்குள் இதை முன்னிறுத்தி, அரசியல் ஆட்டம் போட்டனர்.

சிங்கள் குடியேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப்பற்றி என்றுமே புலிகள் அக்கறைப்பட்டது கிடையாது. திட்டமிட்ட சிங்கள இனவாத குடியேற்றத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் கூலித்தொழிலாளர்களையும், விவசாயிகளையும் புலிகள் சார்ந்து நின்றது கிடையாது. அவர்களுக்கே எதிரான அரசியலைக் கொண்ட வலதுசாரிப் புலிகள், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நிற்பதாக காட்டுவது அரசியல் வேடிக்கை.


இன்றைய புலித் தமிழ் தேசியம் திட்டமிட்ட குடியேற்றம் சார்ந்து உருவானது கிடையாது. குடியேற்றத்தின் போதெல்லாம் அதை அரசியல் சடங்குக்கு எதிர்த்தவர்களும் சரி, தீவிரமான ஆயுதப்போராட்டமாக மாறிய போதும் சரி, போராட்டமே யாழ் மேலாதிக்க குறுந் தேசியமாகவே வக்கிரப்பட்டது. கடந்த காலத்தில் குடியேற்றம் பற்றி ஒரு தெளிவான மக்கள் சார்புக் கோட்பாடே இருந்தது கிடையாது.


சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டு உருவாக்கிய இனவாத திட்டங்கள் மூலம் தமிழ் மக்களின் பராம்பரிய பிரதேசங்களிலேயே அவர்களை சிறுபான்மை இனமாக்கினர். இதை விரிவாக படிக்க இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்


சிங்கள பேரினவாதம் தமிழ் இனத்தை சிறுபான்மையாக்கி, அவர்களின் வாழ்வை நாசமாக்கிய போது, அதற்காக இன்றுவரை போராடியது கிடையாது. ஆனால் அதை இனவழிப்புக்கு நிகராக, மேலும் குறுகிய தமிழ் குறுந்தேசிய வக்கிரத்துடன் சொந்த இனத்தையே இன்று அழித்து வருகின்றனர். தமிழ் இனத்தையே இந்த மண்ணில் இருந்து தேசியத்தில் பெயரால் ஒடோட அடித்து விர ட்டப்படுகின்றனர். இதுவே இன்றைய உண்மை நிலையாகும்.

தமிழ் தேசியம் கூட தனது பாரம்பரிய பிரதேசத்தை மீட்டெடுக்க வேண்டுமெனின், அந்த பிரதேசத்தில் வாழும் அனைத்து இன மக்களையும் வென்று எடுக்கும் வகையில் அல்லது தமிழ் இனமல்லாத மக்களை நடுநிலைப்படுத்தும் வகையில் அணுகுவது அவசியமானது. அதாவது அந்த மக்களை குறுகிய இனவாதிகளின் அதாவது எதிரியின் கையில் சிக்கவிடாது தடுப்பது அவசியமாகும். ஆனால் தேசியத்தின் பெயரில் குறுகிய தமிழ் இனவாத வக்கிரத்துடன், அந்த மக்களை மேலும் எதிர்நிலைக்கு தள்ளிவிட்டதும், தள்ளிவிடுவதும் நிகழ்கின்றது. மற்றயை இனத்தைக் குறைந்தபட்சம் நடுநிலைப்படுத்துவது மட்டும்தான், வெற்றிகரமாக பாரம்பரிய தமிழ் பிரதேசத்தை மீட்டு எடுக்க உதவும்.


நீர் மீதான பயன்பாட்டு உரிமையை இனங்களுக்கு இடையிலான பகையுணர்வுடன் பிரித்து கையாள்வது என்பது, மிக மோசமான இழிவான ஒரு இனவாத நடவடிக்கையாகும். இங்கு அந்த நீரை நம்பி வாழும் சிங்கள மக்கள், பேரினவாத சுரண்டலுக்கும் உள்ளாகிய அடிமட்ட ஏழை எளிய விவசாயிகள். இதில் தமிழர் முஸ்லீம்கள் என கணிசமான ஒரு பகுதியினர் அடங்குவர். இந்த மக்கள் இனவாத கூத்தில் குளிர் காயும் மக்கள் கூட்டமல்ல. அன்றாடம் உழைத்து வாழும் கஞ்சிக்கே வழியற்ற பரம ஏழைகள்;. அவர்களிடம் புலிகளின் சொந்த நடத்தை சார்ந்த அச்சத்தை தவிர, அவர்கள் எந்த எதிர்வினையையும் ஆற்றுபவர்கள் அல்லர். ஆனால் நீர் தடுப்பு அவர்களின் அன்றாட வாழ்வின் அனைத்துக் கூறுகளையும் அழித்ததுடன், தீவிர இனவாதிகளின் பிடிக்குள் அவர்களை வலிந்து தள்ளியதையே தமிழ் மக்களின் பெயரில் புலிகள் செய்துள்ளனர்.


பேரினவாதம் பேசும் இனவாத கட்சியாக தம்மை முழுமையாக அடையாளம் காட்டும் ஜே.வி.பி முதல் அனைவரும் இதையே எதிர்பார்த்து, எலும்பை சுவைக்க காத்திருக்கும் ஓநாய்களாக களத்;தில் இறங்குகின்றனர். சொல்லப் போனால் புலிகளின் இனவாத நடத்தைகள் தான், ஜே.வி.பி போன்ற பேரினவாதிகளின் அரசியலை தக்கவைக்கும் அரசியல் நெம்பு கோலாகிவிடுகின்றது.


தண்ணீரை பெறும் வாதத்துடன் பேரினவாதம் புலிகள் மீது ஒரு தாக்குதலை தொடங்கியது. பேரங்கள் பேச்சுகள் நடக்கமுடியாத வகையில் புலிகள் செயற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகினற ஒரு நிலையில், புலிகள் தமிழ் மக்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுக்கின்றது என்கின்றனர். அந்தக் கோரிக்கைகள் என்ன என்பதை மட்டும் அவர்கள் கூறவில்லை. பின்னால் ஒரு சில உலகவங்கி திட்டத்தை அரசு தடுத்ததாக கூறுவது நிகழ்கின்றது. ஒரு மோசடி அரசியல் மக்களின் பெயரால் புனையப்படுகின்றது.


மக்கள் நலன் எதையும் முன்வைக்க முடியாத பேரங்கள், குழு நலன் சார்ந்தே உருவானது. அரசு தனது பேரினவாத கோர முகத்துடன் தண்ணீருக்காக தாக்குதலை தொடங்கிய போது, அங்கு மக்கள் பற்றி மூக்கால் சிணுங்கி அழுதனர். தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை பேசித் தீர்க்கப் போவதாக வாய்ச்சவடால் அடிக்கும் இந்தப் பேரினவாதம், அதை ஒரு தலைப்பட்சமாக கூட முன்வைக்கத் தயாரில்லை. இதை சுயமாக எந்தக் கட்சியும், ஏன் பேசி தீர்க்க வேண்டும் என்ற கூறும் கட்சிகளும் கூட முன்வைப்பது கிடையாது. இதை புலிகளும் கூட கோருவது கிடையாது. பரஸ்பரம் இனவாத யுத்தத்தின்; மூலம் தங்களை தக்கவைக்கும் மக்கள் விரோதிகளாகவே, தாக்குதலை தமது குறுகிய பேரம் பேசலுக்காக செய்ய விரும்புகின்றனர். தாக்குதலை தண்ணீரின் பெயரில் அரசு தொடங்கியது. வெற்றி பெற முடியாத தாக்குதலை திணித்து, சமூகங்களை பிளந்து போடுவதில் காட்டும் ஆர்வத்தை, பேசித் தீர்ப்பதில் ஒரு துளி கூட நேர்மையாக இரண்டு தரப்பும் செய்வதில்லை. யுத்தம் அடிநாத கோசமாக, இதை தொடங்கியது யார் என்று குற்றம்சாட்ட, பரஸ்பர காரணங்கள் கூறியபடி தாக்குதலை தொடங்குகின்றனர். இந்த வகையில் தண்ணீரை முன்வைத்து அரசு தாக்குதலை நடத்தியது.

ஆனால் இதற்கு முன்பாகவே தாங்களாக வலிந்து செய்த கொண்ட ஒப்பந்தத்தை மீறி, கிளைமோர்கள், கிரனைட்டுகள் மூலம் அன்றாடம் மனிதவுயிரைப் பலிவாங்கி வந்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட புலியல்லாத நபர்கள் இனம் கண்டு அழிக்கப்படுகின்றனர் பேரினவாதம் புலி சுத்திகரிப்பு படுகொலைகளை நடத்துகின்றது.


யுத்தமும், தாக்குதலும் முன் கூட்டியே நடக்கின்றது. தண்ணீர் இரண்டு தரப்புக்கும் ஒரு சாட்டு. தண்ணீரைப் பயன்படுத்தும் தமிழ் சிங்கள் மக்களையிட்டு எந்த அக்கறையுமற்ற வக்கிர புத்தி கொண்ட இனவாத யுத்தவெறியர்கள், யுத்தத்தை தாக்குதலை மக்களின் பெயரில் வலிந்து திணித்து தமது குறுகிய நோக்கத்துக்காகவே நடத்துகின்றனர்.


மூதூர் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலுக்கு, தண்ணீரை பயன்படுத்தியது


இது வரலாற்று ரீதியாக மன்னிக்க முடியாத, மன்னிப்புக் கேட்க முடியாத மற்றொரு அரசியல் குற்றமாகும். குற்றங்கள் தமிழ் மக்களின் பெயரில் மீண்டும் மீண்டும் தொடருகின்றது. தமிழ் இனத்துக்கு எதிராக, தொடர்ச்சியாக முஸ்லீம் மக்களை வலிந்து இது தள்ளிச் சென்றுள்ள ஒரு இழிவான நடவடிக்கையாகும்.


தமிழ் மக்கள் வாழாத ஒரு பிரதேசத்தின் ஊடாக, இராணுவம் மீதான தாக்குதல் என்றாலே தவறானது. எந்த அரசியல் அடிப்படையுமற்ற ஒரு நிலையில், முன்னைய காலத்தில் கசப்பான அனுபவங்களை முஸ்லீம் மக்களுக்கு உருவாக்கிய ஒரு இயக்கம், அந்த மக்கள் பிரதேசத்தின் ஊடாக தாக்குதலை தொடங்கிய போது அதன் விளைவு பாரதூரமானது. ஆனால் தாக்குதலின் நோக்கம் இராணுவம் மீதானதல்ல, முஸ்லீம் மக்கள் மீதானது என்பது படிப்படியாக அம்பலமாகி வருகின்றது. முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதலை நடத்த, இராணுவம் மீதான தாக்குதல் அவசியமாகியது.


முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட இனவெறித் தாக்குதலே இன்று நிகழ்ந்துள்ளது. முன் கூட்டியே விடப்பட்ட எச்சரிக்கையின் அடிப்படையில், 'தாயக மீட்பை விட மூதூரின் மீட்பு முதன்மையானதாக கருதி தமிழீழ தாயக மக்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்" என்ற புலிகளின் "மக்கள்" கூற்றுக்கு இணங்க இது நிகழ்ந்தது. அந்த மக்களின் வாழ்விடங்கள் மேலான சிதைவின் மேல் நடத்தப்பட்ட புலிகளின் குறுந்தேசிய இனவாத தாக்குதல் என்பது, முன்கூட்யே அந்த மக்கள் மேல் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இனச் சுத்திகரிப்பை எப்படி நடத்துவது என்பது முதல் யாரை கைது செய்வது என்பது வரை அனைத்தும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்;தப்பட்டது. முஸ்லீம் மக்கள் மேலான புலிகளின் தொடர்ச்சியான அச்சமூட்டுகின்ற படுகொலை நடவடிக்கையில், இதுவும் ஒன்றாகிவிட்டது.


குறித்த மக்கள் பிரதேசத்தைக் கைப்பற்றிய பின், அந்த மக்களின் பெரும் பகுதி புலிகளின் சுற்றி வளைப்புக்குள் சிக்கிய பின் அவர்களை சிதைத்தனர். கசப்பான இழிவான நிலைக்கு அவர்களை இட்டுச் சென்றனர். அவர்களின் அவலங்கள், அந்த மக்கள் சொல்லியழுகின்ற துயரங்கள் எண்ணற்றதாகி அவை அன்றாடம் கசிந்து வெளிவருகின்றன.


பிரச்சனை என்னவென்றால் முஸ்லீம் மக்கள் பற்றி நல்லெண்ணப்பாடு புலிகளிடம் கிடையவே கிடையாது. இதையே பொதுவாக தமிழ் மக்கள் மத்தியில் சதா நஞ்சாக விதைக்கின்றனர். அங்கு இந்த நடத்தை நெறிகளே மிக மோசமானதும் இழிவானதுமான ஒன்றாகவே மாறிவிடுகின்றது. குறிப்பாக தமிழ் மக்கள் பற்றியே நல்ல அபிப்பிராயம் அற்ற புலிகள், மக்களுக்கு ஜனநாயகம் அவசியமற்றது என்கின்றார்கள். இன்னுமொரு இனமான முஸ்லிம் மக்கள் பற்றி புலிகளின் கருத்து மிக இழிவானதும் மிக வக்கிரமானதுமாகும். முஸ்லீம் மக்கள் பற்றி வெறுப்பூட்டுகின்ற, இழிவுபடுத்துகின்ற, அடக்கியொடுக்கின்ற மனித விரோத வக்கிரத்துடன் ஆயுதபாணியாக்ப்பட்டவர்கள் தான் புலிகள். அவர்கள் முஸ்லீம் மக்களுக்கு அன்பையும் சமாதானத்தையும் அமைதியையும் போதிப்பவர்களல்ல.


அந்த மக்களை இழிவுபடுத்தி வெறுப்ப+ட்டும் வகையில் மீண்டும் மீண்டும் நடந்துவருகின்றனர். இது அம்பலமாகும் போது இதை மூடிமறைக்கவே அவசர நிவாரணம் என்ற பெயரில், பெயர்ப்பலகை அடித்து சில உதவிகளை வழங்கி அதை படமெடுத்து உலகுக்கு அனுப்புகின்றனர். இது போன்ற வேடிக்கையான மிக மோசமான இழிவாடலைத் தவிர, அவர்களால் எதையும் அந்த மக்களுக்கு இதைத் தாண்டிச் செய்ய முடியாது என்பதை மறுபடியும் புதிதாக நிறுவியுள்ளனர். அன்று யாழ் முஸ்லீம் மக்களை வெளியேற்றிய பின் அது தவறு என்ற போலி நாடகத்தை எப்படி இன்று நடத்திக் காட்டி வருகின்றனரோ, அதையே மறுபடியும் நிவாரணம் ஊடாக நடிக்கின்றனர்.


உண்மையில் இந்த புலி நடவடிக்கை, முஸ்லீம் மக்களை பேரினவாதத்தின் தேவைக்கு பயன்படுத்தும் வகையில் மிக மோசமாக இட்டுச் சென்றுள்ளது. பாராளுமன்ற கதிரை அரசியலைலைத் தவிர, அந்த மக்களை வழிகாட்டி செல்ல யாருமற்ற நிலையில், அந்த மக்களை பகடைக்காயாக மாற்றுகின்ற அபாயம் அதிகரித்துள்ளது. இராணுவரீதியாக தம்மீதான அவலத்தை எதிர்கொள்ள முடியாத சமூகத்தை, எதிரி இலகுவாக பயன்படுத்தும் வகையில் இப்படையெடுப்பும் அதன் பின்னான ஒடுக்குமுறையும் வழிவிட்டுள்ளது. எதிரி மேலும் வலுவாக வெற்றி பெற்றுள்ளான்.


இராணுவ ரீதியான தாக்குதல் வெற்றிகளை மட்டும் கொண்டு இதை நாம் ஆய்வு செய்ய முடியாது. ஒரு இராணுவம் என்ற வகையில் இராணுவமும் புலிகளும், மிக பெரிய வெற்றிகரமான தாக்குதலை நடத்த முடியும். அதிலும் பேரினவாத இராணுவம் கூலிப்பட்டாளமாக இருப்பதால், புலிகளின் திடீர் தாக்குதல் சார்ந்த வெற்றிகள் சாத்தியமானதே. ஆனால் இது அரசியல் வெற்றியாக மாறிவிடாது. அரசியல் வெற்றி என்பது மக்களை அரசியல் ரீதியாக தம் பக்கம் வென்று எடுப்பதில் தங்கியுள்ளது.


உண்மையில் திருகோணமலை முழுக்க தமிழ் சிங்கள, முஸ்லீம் மக்களிடையான நல்லுறவை மேலும் சிதைத்தன் மூலம், பதற்றமான வாழ்வியல் சூழலைத்தான் தமிழ் மக்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. நிம்மதியாக வாழ முடியாத அவலமும் சமூகச் சிதைவும் உருவாகுகின்றது. முஸ்லீம் மீதான புலியின் இனச்சுத்திகரிப்பை பயன்படுத்திய பேரினவாதிகள், புலிகளின் கட்டுப்பாட்டு ப் பிரதேசம் மீது நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல் மூலம், தமிழ் மக்கள் மேலான அழிவுகளும் சிதைவுகளும் செய்தியாக கூட யாரும் கொண்டுவரவில்லை. தமிழ் மக்களின் மேல் அக்கறையாக நடிக்கும் கயவர் கூட்டம் கூட, அதை பூசிமெழுகிவிட்டன. இதை கூறும் தார்மீக பலத்தை, தவறான இழிவான புலி நடத்தைகள் மூடிமறைத்துவிடுகின்றது. அந்தளவுக்கு இழிவான ஒரு முஸ்லீம் விரோத நடவடிக்கை தான் மூதூர் சம்பவமாகும்.


தமிழ் மக்களின் தேசியத்துக்கு எதிரான, புலியின் குறுந் தேசியத்தின் குறுகிய நலன் சார்ந்த வக்கிர நடவடிக்கையே இதுவாகும். போலியான மன்னிப்பு கோரல்களைத் தாண்டியும், இது போன்ற இழிவான செயல்கள் கால இடைவெளியின்றி தொடரத்தான் செய்கின்றன. இதுவே இன்றைய எமது எதாத்தம்.
பி.இரயாகரன்
06.08.2006