Sunday, 24 May 2020

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது ஏன்?

புலிகள் விசுவாசிகளோ, கண்ணை மூடிக்கொண்டு வழிபடும் போது தாம் தோற்கவில்லை என்று கருதுகின்றனர். அது அவர்களின் வெறுமையான வரட்டு நம்பிகை தான். வேறு சிலரோ புலிகள் செல்லும் பாதை இன்னமும் சரியானது என்கின்றனர். எந்த சுயவிமர்சனத்துக்கும் புலிகள் உள்ளாகத் தேவையில்லை என்கின்றனர்.
 எல்லாம் சரியாக உள்ளதாக வரட்டுத்தனமாக கூறமுனைகின்றனர்.

புலிகள் தோற்று வருகின்றனர் என்று நாம் கூறுவதை, துரோகமாக, எட்டப்பத்தனமாக வழமைபோல் காட்டுகின்றனர். இது எப்படி தோற்காமல் முன்னேறுகின்றது என்று அவர்களால், காட்ட முடியாதுள்ளது. புலிகள் எதைத்தான், தமிழ் மக்களுக்கு பெற்று தருவார்கள் எனக் கூட அவர்களால் கூற முடிவதில்லை.

இப்படிப்பட்ட புலிப்போராட்டம் பல பத்தாயிரம் மக்களின் மனித உயிர்களை காவு கொண்டது. போராட்டத்தின் பெயரில், இரண்டு பத்தாயிரம் இளமையும் துடிப்பும் தியாக உணர்வும் கொண்டவர்களை பெயரில் பலியிட்டுள்ளனர். புலியுடன் முரண்பட்டதால் இதேயளவு எண்ணிக்கை கொண்ட துடிப்பும் ஆர்வமும் தியாக உணர்வும் கொண்டவர்களை துரோகிகள் என்று முத்திரை குத்தி கொன்றனர்.

இப்படி ஒரு சமூகமே புலியின் சொந்த நலன் சார் அரசியலுக்குள்ளான மதிப்பீட்டுக்குள்ளாகியது. துரோகி அல்லது தியாகி என்ற அரசியல் வரையறைக்குள் அனைத்தையும் வரட்டுத்தனமாக உள்ளடக்கினர். அதற்குள் தான் அவர்கள் போராட்டம் நடத்தினர். புலிகளின் குறுகிய அறிவுக்கு ஏற்ப, அவை மிக எளிய அரசியல் சமன்பாடாகியது. இப்படி அதன் அரசியலே குறுகிப்போனது.

இதுவே பின்னால் பணம் தர மறுத்ததால் துரோகியாகியது. போராட வர மறுத்தால் துரோகியாகியது. கேள்வி கேட்டால் துரோகியாகியது. கட்டாய இராணுவ பயிற்சிக்கு வரமறுத்தால் துரோகியாக்கியது. இப்படி அரசியல் மாபியாத்தனமாகி, துரோக தியாகி என்ற குறுகிய அரசியலுக்கு மேலும் வக்கிரமாகி வழிகாட்டியது.

இப்படி புலிகள் எதை விரும்பினரோ, அதற்கு மாற்றான அனைத்தையும் துரோகமாக்கினர். இதற்கு மரண தண்டனை வரை பரிசாக வழங்கினர். இப்படித் தான் இப்போராட்டம் படிப்படியாக தன்னைச் குறுக்கிய வட்டத்துக்குள் சுருங்கி வந்தது.

இதில் இருந்து மீள்வதன் மூலம் தான், தமிழ் மக்களுக்கு விமர்சனம் கிடைக்கும் என்பதே எமது ஆதங்கமான விமர்சனங்கள். இதைத்தான் இவர்கள் துரோகத்தனமாக காட்டுகின்றனர். இதன் மூலம் அரசியல் ரீதியாக தாம் நீடித்து விடலாம் என்று, மெய்யாகவே இவர்கள் நம்புகின்றனர்.

இது இயல்பாக புலிகளை ஆதரித்தால் அது தியாகம், புலிகளை எதிர்த்தால் அது துரோகமாகி விடுகின்றது. இது சமூகத்தின் மீதான, கொடுமையிலும் கொடுமையாகியது. புலிகள் கண் அசைவுக்கு இசையாத எதுவும், உயிர்வாழ முடியாத அவல நிலை. இப்படி இலகுவான அரசியல் வரையறை சார்ந்த வரட்டுக் கொடுமை. இப்படித் தான், தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு புலிப்போராட்டம் வழிநடத்தப்பட்டது. இதற்குள் தான், புலிகளின் மொத்த அரசியல் வடிவமும் இயக்கப்படுகின்றது.

புலிகளின் சொந்த விருப்பங்கள் தான், தமிழ் தேசியமாக காட்டப்பட்டது. இதற்கு உட்படாத அனைத்தும் துரோகமாகியது. இப்படித் தான், இதற்குள் தான் புலிகளின் வரலாறு உருண்டது. இதை கண்காணிக்க, இதை நடைமுறைப்படுத்த படுகொலைகள், புலியில் நடைமுறை அரசியலாகியது. இதை நியாயப்படுத்தவே சொந்தப் பலியிடல். இதையே புலிகள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்றனர்.

இதற்கு ஆதரவை பெறுவதும், ஆட்களை திரட்டுவது என்பதும், இயல்பான சமூகத்தின் போராட்ட உணர்வில் செய்யப்படவில்லை. தேச மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளில் இருந்து செய்யப்படவில்லை. மாறாக தமது சொந்தக் கருத்தை ஒற்றைப் பரிணாமத்தில் திணித்து, தமது சொந்த புலி நலனை சாதிக்க முனைந்தனர்.

இப்படி மக்கள் நலன்கள் புலிகளின் நலன்களில் இருந்து வேறுபட்டதால் தான், கருத்து தளத்தை குறுக்கி கட்டுப்படுத்த வேண்டிய நிலை புலிக்கு ஏற்பட்டது. மக்களின் போராட்டத்தில் இருந்த புலிகள் அன்னியமாகிச் செல்ல, மக்களின் கருத்துச் சுதந்திரத்தை வெட்டியெறிந்தனர். மக்களோ கருத்துகளற்ற நடைப்பிணமாகினர்.

இப்படி சமூகத்தின் பன்மைத் தன்மையை அழித்து, ஒற்றைப் பரிணாமத்தில் மக்கள் முன் கருத்தைத் வரட்டுத்தனமாவே திணித்தனர். இப்படி மூளைச்சலவை செய்யப்பட்ட மக்கள் கூட்டத்தை தம் பின்னால் வைத்துக்கொண்டு, வெம்பிய பிஞ்சுகளை உள்வாங்கினர். அறிவியல் ரீதியாக சமூகத்தில் சிந்தித்து செயலாற்ற முடியாத, கடைநிலையில் உள்ள சமூகப் பிரிவையே புலிகள் உள்வாங்க முடிந்தது. இதை வைத்து பிழைத்துக் கொள்ள விரும்பிய ஒரு அறிவுப் பகுதி இதை தனக்காக பயன்படுத்தியது.

இப்படி போராட்டம் மக்களில் இருந்து அன்னியமாகிய, படிப்படியாக ஒரு பிரிவின் குறுகிய சொந்த நலன் சார்ந்த போராட்டமாகியது. இதன் யுத்த தந்திரமும், பிரச்சாரத் தந்திரமும் என்பது, குறுகிய தமது இருப்பு சார்ந்த ஒன்றாகியது. இதுவே மிகமிக மலிவான அரசியலாகியது.

எதிரிகளைத் தாக்குவதும், எதிரி திருப்பி மக்களை தாக்குகின்ற போது அதை வைத்து அரசியல் செய்வதுமாக மாறியது. மக்களின் அரசியல் கோரிக்கைகள் எதுவும் இதற்குள் இல்லாத வகையில், போராட்டம் ஆழமாகவே ஒரு குறுகிய வழியில் குறுக்கப்பட்டது.

இப்படி மக்கள் தாம் போராடாத வகையில், புலிகள் அவர்களை கண்காணித்தக் கொண்டனர். மக்களை புலிகளின் வெறும் மந்தைக் கூட்டமாக்கினர். மேயவிட்டால் அதில் ஓடி மேயும் வகையில், மக்களின் உணர்வை உணர்ச்சியை மலடாக்கினர். மக்களின் உணர்ச்சியை தூண்ட எதிரி மீது தாக்குதலை நடத்தி, எதிரி மக்கள் மேல் தாக்குதலை நடத்துவதை உருவாக்கும் புலிகளின் குறுகிய யுத்த தந்திரம் அரசியலாகியது.

மக்களை அணிதிரட்டாத புரட்சி பற்றி பேசும், சேகுவேராவின் கோட்பாடுகளில் ஒன்றுதான் இது. இப்படித்தான், இதற்குள் தான் புலிகள் மக்களின் உணர்வை, உணர்ச்சியை அறுவடை செய்தனர். இப்படி புலிகள் மக்களை போராட்டத்தில் இருந்து அன்னியமாக்கினர். புலியின் செயலுக்கு ஏற்ப உணர்வும் உணர்ச்சியும் என்ற எல்லைக்குள், போராட்டம் கீழ் இறங்கியது.

மக்களை தமக்கு வாலாட்டவும், குலைக்கவும் பழக்கப்படுத்தினர். எந்த சுயமுமற்ற மக்கள் கூட்டத்துக்கு, வேடிக்கையும் வித்தையும் (இராணுவ சாகசங்களையும்) காட்ட வேண்டியிருந்தது. இராணுவம் மீதான தாக்குதல்கள் மூலம், ஊதிவிட்ட பலூன் போல் உணாச்சிவசப்படுத்தும் வித்தையை புலிகள் நடைமுறைப்படுத்தினர். மறுபக்கத்தில் தாக்குதல் இல்லாத போது, காற்றுப் போன பலூன் போல் உணர்ச்சியை இழந்து அது புலியை விராண்டுகின்றது.

இதில் உள்ள சோகம் என்னவென்றால், மக்கள் மட்டுமல்ல சொந்த புலிப் படையே இந்த நிலைக்குள் சோர்ந்து துவண்டு போவதுதான். புலியின் முன்னணி தளபதிகளுக்கும் இந்த கதி ஏற்பட்டுவிடுகின்றது. தலைவர் புலிகளின் தளபதிகளுக்கே எல்லாளன் படையைக் காட்ட வேண்டிய அளவுக்கு, நிலைமை நெருக்கடிக்குள்ளாhகியுள்ளது. தலைவர் தாக்குதலை நடத்தி தம் மீது நம்பிக்கையை உருவாக்க வேண்டியுள்ளது. இப்படி சொந்த புலித் தளபதிகளினதும், அணிகளினதும் நம்பிக்கையைப் பெற வேண்டிய அளவுக்கு அவலம். இதானாலேயே தாக்குதல்களை செய்து காட்ட வேண்டிய கட்டாய நிலை.

இப்படி புலிகளின் அரசியலே, இராணுவ தாக்குதல் தான். அதைச் சுற்றித்தான் புலிகள் உருவாக்கப்பட்டனர். அமைப்பையும், தன்னையும் பாதுகாக்க இராணுவத் தாக்குதல் என்ற குறுகிய எல்லைக்குள், இப்படி புலிகள் முடங்கிவிட்டனர். போராட்டம் இப்படி குறுகிய எல்லைக்குள் சிதைந்தது. இப்படியான நெருக்கடிக்குள் புலிகளும், புலிகளின் தலைவரும் சிக்கியுள்ளனர்.

மீள்வதற்கான தமது பாதைகள் குறுகி, அவற்றை தாமே மூடிவிட்டனர். இனி புலிகள் அரசியல் பேச முடியாது. இராணுவத்தைக் கொன்றும், மற்றவனைக் கொன்றும், அதையே அரசியலாக செய்யப் பழக்கப்பட்ட ஒரு இயக்கம், இயல்பாகவே தனிமைப்பட்டு விடுகின்றது. குறுகிய எல்லைக்குள் சுருங்கி, வெளிவர முடியாது தானாகவே மரணிக்கத் தொடங்குகிறது.

மக்களில் இருந்து அன்னியமாக, அது பணக்கார இயக்கமாகியது. பணத்தை குவிப்பதே, அதன் சொந்த அரசியல் இலட்சியமாகியது. இதனால் தன்னை ஒரு மாபியா இயக்கமாக வளர்த்துக் கொண்டது. இதன் மூலம் மக்களை சார்ந்து இருத்தல் என்பதற்குப் பதில், பணத்தை சார்ந்து இயங்குதல் என்ற வகையிலும் தன்னை மாற்றிக் கொண்டது.

இதற்கு ஏற்ப நவீன ஆயுதங்கள் புரட்சி செய்யும் என்பது புலிகளின் மற்றொரு அரசியல் சித்தாந்தம். இப்படி நவீன ஆயுதங்கள் கொண்ட தேசியத்தைக் கட்டினர். இதன் முன் மக்களோ அந்த நவீன ஆயதங்களை வேடிக்கை பார்த்தனர். அதைப்பற்றி கதைத்தனர். நவீன ஆயதங்கள் புரட்சி செய்ய, மக்களை வேடிக்கை பார்ப்பதன் மூலம் போராட்டத்தில் இருந்து அவர்களை ஒதுக்கி வைத்தனர்.

இப்படி குறுகிப்போன புலிகளின் அரசியல் மற்றும் யுத்த தந்திரத்ததை வரையறுத்துவிட முடியும். இதற்குப் பின்னால் மக்களின் அரசியல் உணர்வும், உணர்ச்சியும் கிடையாது. மக்கள் மந்தைகளாக, வேடிக்கை பார்ப்பவர்களாக வைத்துக் கொண்ட அடக்குமுறை தான், புலிப் போராட்டம். தமிழ் மக்களுக்கும் புலிக்குமான அரசியல் உறவு இதற்கு உட்பட்டது தான்

இப்படி கூனிக் குறுகிக் போன போராட்டமாகியது. இதற்கு மக்கள் அரசியல் கிடையாது. மக்கள் சார்ந்த நோக்கம் கிடையாது. இதுவே கடந்து போனதும், இன்றும் ஒரு சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

இதுவல்லாத சமூகத்தின் இருந்த அனைத்துக் குரல்களையும் வெட்டிச்சாய்த்தனர். கண்மூடித்தனமான அரசியல் படுகொலைகள் மூலம், சமூகத்தை இருண்ட சூனியத்துக்குள் தாழ்த்தி அடிமைப்படுத்தினர். தம்மை தாம், தமிழரின் ஏகப்பிரதிநிதிகளாக்கிக் கொண்டனர். இந்த கொடுமை என்பது சமூகத்தில் உயிர் உள்ள அனைத்து சமூகக் கூறுகளையும் பிடுங்கி எறிந்தது. சமூகமோ மூச்சுத்திணறி தானாக மடியத் தொடங்கியது.

புலிகளின் இந்த பாசிசத்தை எதிர்கொள்ளமுடியாது திணறிய மற்றைய குழுக்கள், வேட்டையாடப்பட்டனர். ஆயிரம் ஆயிரமாக கொல்லப்பட்டனர். இப்படி போராட்டம் என்பது சமூகத்தில் இருந்து அன்னியமாகி, தன்னைக் குறுக்கி அழிக்கத் தொடங்கியது.

புலிப் பாசிசத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பியவர்கள் கண்மண் தெரியாத திசையில் ஓடினர். அதில் ஒரு பகுதியை இந்திய இலங்கை அரசுகள், தமது சொந்த அரசியல் இராணுவ கூலிக் குழுக்களாக மாற்றின. இப்படி புலிகள் தமக்கு எதிரான எதிரியை பலப்படுத்தினர். எதிரியின் பக்கத்தில், தமிழரின் ஒரு பிரிவை செல்லுமாறு எட்டி உதைத்தனர்.

இப்படி தொடர்ச்சியாகவே புலிகள் சமுகத்தினுள் எதிரிகளை உற்பத்தி செய்தனர். ஒரு பாசிச சூழலை சமூகத்தின் முன் வித்திட்டனர். புலிகளின் கொடுமைகள் பலவாகப் பெருகியது. இதனால் தமிழ்ச் சமூகம் தானாகவே தப்பியோடத் தொடங்கியது. எதிரியின் பிரதேசம் பாதுகாப்பானதாக கருதும் அளவுக்கு, புலிப் பாசிசம் அவர்களை விரட்டியது. இதுவே சமூக எதாhத்தமாகியது. மக்கள் தப்பியோடாதவாறான புலிகளின் பாஸ் மற்றும் தடைகள் இதை தடுத்து நிறுத்திவிடவில்லை.

தப்பியோட முனைந்தவர்கள் கதியோ, தமது பொருளாதார வாழ்வையே இழந்தனர். கொழும்பு என்பது சுயமாக வாழமுடியாத எல்லைக்குள் பொருளாதார சுமைக்குள் மக்களை அன்னியமாக்கியது. வாழ வழியற்று அதை தேடியவர்கள், அரச கூலிக் குழுக்களின் வலையில் இலகுவாக சிக்கிக்கொள்ளத் தொடங்கினர். இப்படி புலிகள் போராட்டம், எதிரியை பலப்படுத்தும் வகையில் மக்கள் விரோதத்தை அரசியலாக்கியது. இப்படி வரலாற்றில் நம்ப முடியாத ஒன்று தான், நம்பும்படியாக நடந்தது.

இப்படி புலிகள் தம்மைச் சுற்றி, சதா எதிரியை உற்பத்தி செய்தனர். நம்பமுடியாத வேகத்தில் அது பெருகியது. அது பல தளம் கொண்ட, பல முனைப்புக் கொண்ட ஒன்றாகியது. உண்மையில் அவர்களாக அதில் ஓடிச் சென்றது கிடையாது. மாறாக புலிகள் தான் எதிரியை பலப்படுத்தும்படி, தமது பாசிசத்தை சமூகம் மீது நிறுவினர். இப்படி தம்மைத்தாம் குறுக்கி வந்தனர்.

இப்படி புலிப் போராட்டம் என்பது ஆக்கத்துக்கு பதில், அழிவைக் கொண்ட ஒன்றாக மாறியது. புதிது புதிதாக எதிரியை உற்பத்தி செய்யும் போராட்டம் தான், புலித் தேசியமாகியது. சமூகத்தின் பல்வேறு கூறுகளை உண்மையான தமிழ் தேசியமாக்க அதனால் முடியவில்லை. மாறாக தமிழ் தேசியத்துக்கு பதில், புலித்தேசியத்தை வைத்த, ஒரு குறும் கும்பலாகவே சீரழிந்து வந்தனர். அது தனக்குள் தானே ஒரு கிணற்றுத் தவளையாக முடங்கிக் கொண்டது. பரந்து விரிந்த மனித சமூகத்துடன் எப்படி இணைவது என்பதை, அதனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அந்தளவுக்கு அதன் அரசியல் குறுகியது.

அவர்கள் தமது குறுகிய புலி அரசியலைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தை மேலும் ஒடுக்கினர். இப்படி உண்மையான தேசியத்துக்கு தலைமை தாங்க வேண்டிய புரட்சிகரமான மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். இப்படி தேசியத்துக்கு தலைமை தாங்கும் தகுதியை புலிகள் இழந்தனர். புலிகளின் இராணுவ பொம்மைகளின் ஆட்சியை, மொத்த மக்கள் மேல் திணித்தனர். அனைத்தும் இராணுவ வகைப்பட்ட இராணுவ ஆட்சியாகியது. தமிழ்த் தேசியப் போராட்டத்தின் நியாயமான தன்மை என்பது, இராணுவத் தன்மையாகி, அதையே அது மறுக்கத் தொடங்கியது. ஒரு இராணுவ சூனியம் தோற்றுவிக்கப்பட்டது.

ஒடுக்கப்பட்ட மக்கள் மேலும் மேலும் ஆழமாக ஒடுக்கப்பட்டனர். சமூக உள் முரண்பாடுகளான ஒடுக்குமுறை ஒருபுறம். அதன் மேல் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறை மறுபுறம். புலிகள் ஒடுக்குமுறை, மக்கள் தமது வாழ்வையே தாங்கிக் கொள்ளமுடியாத அவலமான வாழ்வுக்குள் வீழ்ந்தனர். சமூகம் தப்பிப் பிழைக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

புலிகள் இதை எதிரியின் நடவடிக்கையாக முத்திரை குத்தினர். இப்படி புலிகள் அரசியல் என்பது குறுகிவந்தது. தன்னை நியாயப்படுத்த, சமூகத்தில் எதிரியை உற்பத்தி செய்வதே புலி அரசியலாகியது. சமூக முரண்பாடுகளையே புலிகள் தமது எதிரிக்குரிய அடையாளமாக்கினர். தமது எதிரிகளின் அடையாளம், இந்த முரண்பாடுகளினான அடையாளமாக மாற்றினர். இப்படி தமிழ் மக்களின் எதிரிகள் என்று, ஆயிரமாயிரமாக புலிகள் உருவாக்கினர். இப்படி சமூகமே புலிக்கு எதிராக மாறியது. தமிழ்த் தேசியமே புலிக்கு எதிராக மாறியது. தமழ் மக்களின் அரசியல் உரிமைகளை மறுத்து, புலி உரிமையை அதனிடத்தில் திணித்துவிட்டனர். இதை கண்காணிக்க மக்கள் மேல் வன்முறையை ஏவினர்.

உண்மையில் இப்படி தமிழ்ச் சமூகம் சொல்லவும் மெல்லவும் முடியாத பாரிய அவலத்தையும், சோகத்தையும் சந்தித்தனர். மக்கள் புலிகளுடன் வாழமுடியாத ஒரு நிலையை அடைந்தனர். புலிகளுடன் இருப்பதில் இருந்தும் தப்பியோடவே விரும்பினர். இப்படி போராட்டம் மக்களிடம் இருந்து விலகிச்சென்றது.

இலட்சம் இலட்சமாக தமிழ் சமூகம் பிறந்து வளர்ந்த மண்ணைவிட்டு அன்னிய நாட்டுக்கு தப்பி ஓடினர். புலிகளின் பாசிசமே தேசிய மொழியாகி, அது மட்டும் தான் தேசமென்னும் நிலையில் மக்கள் அங்கு வாழமுடியவில்லை. புலியின் பொருளாதார கொள்கையால், தமிழ் தேசிய பொருளாதாரம் அழிக்கப்பட்டது. மக்கள் எப்படியும் புலிகளுடன் வாழமுடியாத நிலை.

இப்படி மேற்கு நோக்கி புலம் பெயர்ந்த ஓடியவர்கள் 10 இலட்சத்தை தாண்டிவிட்டது. இது மட்டுமா இல்லை. மேற்கு நோக்கி புலம்பெயர முடியாதவர்கள், சிங்களப் பகுதிகளை நோக்கி ஓடினர். அதுவும் பத்து இலட்சமாகி விட்டது. இதைவிட இந்தியாவில் ஒன்றில் இருந்து இரண்டு இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்தனர். மத்திய கிழக்கு நோக்கி புலம்பெயர்வு என்று, ஒரு தேசிய இனமே புலம் பெயர்ந்தது. புலிகள் வைத்த தேசியத்துடன் மக்கள் நிற்க முடியவில்லை. அவர்களுடன் ஒன்றாக சேர்ந்து வாழ முடியவில்லை.

இப்படி புலிப்போராட்டம் மக்களையே சொந்த மண்ணில் இருந்து விரட்டி அடித்தது. அது மக்களை தலைமை தாங்கும் தகுதியையும், மக்களுக்காக போராடும் தகுதியையும் இழந்தது. மக்களைப் போராட்டத்தில் இருந்து விரட்டி அடிக்கும் பாசிசத்தை விசிறி அடித்தனர்.

புலிப் பாசிசம் சொந்த மக்களை மட்டும் ஓடு என்று துரத்தவில்லை. தமிழ் மக்களுடன் சேர்ந்து போராடிய முஸ்லீம் மக்களை, கூட்டாகவே அடித்து விரட்டினர். வாழ்ந்த ப+மியை விட்டே அவர்களை துரத்தினர். புலிகளின் குறுகிய புலிப்போராட்டம், அனைத்து மக்களையும் துரத்தி அடித்தது. மக்கள் தமது வாழ்வுக்காக போராட வேண்டியவர்கள், தமது வாழ்வை இழந்தனர். குறைந்தது மக்களுக்காக போராட வேண்டியவர்களால், மக்கள் வாழ்வை இழந்த அவலம். இப்படி இந்தப் போராட்டம், தமிழ் மக்களுக்கு எதிராக மாறியது. இதை தவறு என்றவர்களை துரோகி என்றனர். வெட்டியும், கொத்தியும், சுட்டும் போட்டனர்.

இப்படி போராட்டம் என்ற பெயரில் மக்கள் சிதைக்கப்பட்டு சின்னாபின்னமாக சிதறியோடிய அவர்கள் உதைப்பட்ட நிலையில், ஐயோ போராட்டமே வேண்டாம் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். போராட்டம் என்பது வெறுமனே, புலிகளின் அபிலாசைக்குள் சுருங்கி வெம்பியது.

இந்த வெம்பிப்போன அரசியல் சமூகத்தின் இழிவான ஆதிக்கத்தை சார்ந்த தன்னை நிலை நிறுத்த முனைந்தது. யாழ் மையவாதம் தலைக்கேற, பிரதேசவாத உணர்வுகளை கொண்டு முழு தமிழ் சமூகத்தையும் இதற்குள் ஒடுக்கினர். பிரதேசவாத உணர்வுகளையும், அது சார்ந்த ஒடுக்குமுறையை தக்கவைத்தபடி, பிரதேச ரீதியாக மக்களைப் பிரித்தாளுவதை கையாண்டனர். இன்று இதன் விளைவால் பிரதேசங்கையே விட்டு ஓட வேண்டிய அளவுக்கு, புலிகள் பிரதேசவாத அரசியல் இருண்டு போனது. வெளிச்சதுக்கு பதில் இருட்டு என்பதே புலி அரசியல்.

எங்கும் எதிலும் சூனியவாதம். புலிப் போராட்டம் அறநெறியற்ற ஒன்றாகியது. பொதுவாக இந்த சமூக அமைப்பில் நிலவும் தந்தைக்குரிய வழிகாட்டல் கிடையாது. தாய்க்குரிய கனிவு கிடையாது. தலைமைக்குரிய சமூகப் பொறுப்பு கிடையாது. அடி உதை, வெட்டுக் கொத்து, போட்டுத் தள்ளுதல், சதியும் சூதும், பொய்யும் புரட்டும், இதுவன்றி புலியில்லை என்றாகிவிட்டது.

இப்படி சர்வதேச ரீதியாக, தமது இழிசெயல்களால் அம்மணமானார்கள். சர்வதேச மக்களைச் சார்ந்து இருப்பதற்கு பதில், அந்த மக்களை ஒடுக்கிய அரசுகளின் தயவுகளை வேண்டி நிற்குமாறு தள்ளிவிட்டனர். அவர்களோ புலிகளின் மக்கள் விரோத செயல்களை பட்டியலிட்டு, அவர்களைத் தனிமைப்படுத்தி தடை செய்து ஒடுக்குகின்றனர். இப்படி புலிகள் உலகளவில் தனிமைக்குள் சிக்கிச் சிதைகின்றனர்.

இந்தியாவில் ராஐPவை வெறும் தனிமனித பழிவாங்கும் உணர்வுடன் கொன்றதன் மூலம், இந்தியாவிலும் தமக்கான அரசியல் கிறுக்குத்தனம் கொண்ட சூனியத்தை நிறுவிக் கொண்டனர். எங்கும் எதிலும் தனிமைப்பட்டு, ஒரு சிறிய கிணற்றுக்குள் நின்று கத்தும் தவளையாக மாறினர்.

இவர்கள் ஒரு அரசியல் பேச்சுவார்த்தையைக் கூட நடத்தும் தகுதி தமக்கு கிடையாது என்பதை நிறுவினர். அரசியல் சூனியமாகிவிட்ட நிலையில், தமது நலன் என்ற எல்லைக்குள் நின்று அதிலும் தம்மை அம்மணமாக்கினர். தமிழ் மக்களின் அரசியல் உரிமை என்பதற்குப் பதிலாக அவர்கள் பேசியதோ அற்பத்தனமானவை. இப்படி ஒரு அரசியல் இராஜதந்திரமே கிடையாது. தமிழ் மக்களை தலைமைதாங்கி வழிநடத்திச் செல்லும் தகுதி தங்களுக்கு கிடையாது. என்பதை, பேச்சுவார்த்தையிலும் மீள நிறுவினர்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமையை பேச்சுவார்த்தையில் கோருவது தான் அடிப்படையானது. பேரினவாதத்தின் அரசியல் இருப்பில் கைவைத்து, அரசியல் பேசத்தெரியாத முட்டாள்கள் என்பதை நிறுவினர். சிங்களப் பேரினவாத அரசு தமிழ் மக்களுக்கு வைக்கும் அரசியல் தீர்வை அல்லவா அவர்கள் கோரியிருக்க வேண்டும். இது கூட தெரியாமல் புலிகள் அரசியல் நடத்தினர். இப்படி புலி அரசியல் பேரினவாத அரசை பாதுகாக்கும் அரசியலாகிப் போனது. தமிழ் மக்களின் அரசியல் உரிமையை மறுக்கும் புலிகள், எப்படி அதை அரசிடம் கோருவர் என்பதே இங்கு நிதர்சனமாகியது.

இந்தியாவை நிர்ப்பந்திக்கும் வகையில், இந்தியா வாலாட்டாத வகையிலும், இந்திய மாநிலங்களுக்கு குறைந்த எதையும் நாம் பேச முடியாது என்று அழகாகவும் ஆணித்தரமாகவும் இராஜதந்திரமாகவும் கூறியிருக்க முடியும். இப்படி உலகை வெல்வதற்கு எத்தனையோ இராஜதந்திர அரசியல் வழிகள் இருந்தது. எல்லாவற்றையும் புலிகள் நாசமாக்கினர்.

எங்கும் எதிலும் இருட்டு. தமிழ் மக்கள் வெளிச்சத்தைப் பார்க்க எந்த வழியுமில்லை. இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் பத்து வருடத்தில் தமிழ் மக்கள் எம்மண்ணில் வாழ்ந்தார்கள் என்று சொல்லும் வகையில் எதுவும் எஞ்சாது. தமிழ் இனமே இன்று குறுகி சிறுத்துவிட்டது. இலங்கையில் இரண்டாவது பெரிய இனம், நாலாவது சிறிய இனமாக எப்போதே மாறிவிட்டது. மக்கள் சொந்த வாழ்வைத் துறந்தோடுகின்றனர். தமிழ் மக்கள் அங்கு வாழவ்தற்காக இருக்கமாட்டார்கள் என்ற நிலைக்கு, புலிகள் தமிழ் மக்களின் வாழ்வுக்கான சூழலை அழித்துவிட்டனர்.

புலிகள் போராட்டம் தோற்றுப் போவது இப்படித் தான். எங்கும் எதிலும் தோல்வி. அவர்களை வாழ வைத்த, இர ாணுவ சாகசங்கள் கூட பெரும் தோல்வியில் முடிகின்றது. மீள்வதற்கான மீட்சிக்கான பாதை கிடையாது. சுயவிமர்சனம் என்ற மீள்வதற்கான பாதையை, எல்லாம் சரியாக சிறப்பாக நடப்பதாக நம்பும் கொங்கிரீட்டைப் போட்டு அடைத்து வைத்துள்ளனர்.

இப்படி கடந்து வந்த வரலாறு எங்கும் பாரிய மனித விரோதத்துடன் அரங்கேறியது. மனித விரோதமல்லாத எதையும், அவர்கள் உருவாக்கியது கிடையாது. தமிழத் தேசிய விடுதலைப் போராட்டம் மக்களுடையது என்பதையே மறுத்தனர். அனைத்தையும் புலியாக்கி, புலிப் போராட்டமாக்கி குறுக்கினர். வெறும் வரட்டுத்தனமான நம்பிக்கையைக் கொண்டு, உயிராற்றல் உள்ளவற்றை கருக்கினர். குறுகி குறுகி, வன்னிக்குள் முடங்கிய நிலைக்குள் சென்றுவிட்டனர்.

அங்கு வாழ்ந்த மக்களை தப்பியோடாத வண்ணம் சிறைப்பிடித்தனர். தம்மைச் சுற்றி தமது பாதுகாப்புக்காக அவர்களை நிறுத்தியுள்ளனர். மக்கள் வெளியேறாத வண்ணம், ஒரு திறந்த வெளிச் சிறையில் மக்களை அடைத்துள்ளனர். புலிகள் தமது குறுகிய வட்டத்தை சுற்றி நடக்கின்றனர். அவர்களுக்கு மனித கேடயங்களாகவே வன்னி மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர்.

இப்படி வன்னியில் ஒரு லட்சம் மக்கள் புலிகளால் சிறைவைக்கபட்டுள்ளனர். அவர்களை பலாத்காரமாக ஆயுதபாணியாக்குகின்றனர். இந்த மக்களைக் கொண்டு தான், மீட்சிக்கான புலிகளின் இறுதி தற்கொலைக்கு ஒப்பான தமது தாக்குதலை நடத்த முனைகின்றனர்.

ஆனால் புலிகளின் ஆயுதம் ஏந்திய படைப்பிரிவும், அவர்களால் கட்டாயப்படுத்தப்பட்ட மக்களின் உளவியல் என்பதும், போராடும் ஆற்றலை இழந்துவிட்டது. யுத்தத்தை விரும்பாத மக்கள் முன், யுத்தம் வலிந்து திணிக்கப்படுகின்றது. இது எண்ணிக்கையற்ற மனித இழப்பையும், தமிழ் தாய்மையையுமே தொப்புள் கொடியுடன் அறுத்தெறிகின்றது. மனித அவலமும், மனிதத் துயரமும், வன்னி மேல் கவிழ்ந்து கிடக்கின்றது. மனித வாழ்வே பிணமாகி நாற, மக்கள் நடைப்பிணமாகி விட்டனர். தாம் எதற்கு உயிருடன் வாழ்கின்றோம், ஏன் வாழ்கின்றோம் என்று தெரியாத ஒரு நரக வாழ்க்கை.

புலிகள் என்ற குறுகிய சூனியத்தில், எல்லாமே பூச்சியமாகிவிட்டது. இவை இன்று இராணுவத்தின் வெற்றியாக மாறுகின்றது. புலிகளின் பாரிய மனித இழப்புகளாக மாறி வருகின்றது. தமிழ் மக்களின் சூறையாடிய பொருட் செல்வம், எதிரியிடம் அன்றாடம் சென்றுவிடுகின்றது அல்லது அழிந்து விடுகின்றது. தமிழ் மக்கள் பெறப் போவது என்ன? இறுதியில் எதுவுமில்லை. இழப்புகளைத் தவிர எதுவுமில்லை. தமிழர்கள் வாழ்ந்த ப+மியில், தமிழர்கள் வாழ்வார்களா என்ற நிலை கூட இன்று உருவாகியுள்ளது. இது தான் இன்றைய உண்மையான எதார்த்தம். தமிழ் மக்கள் எப்போதோ யார் யாரிடமெல்லாமோ இழிந்து நலிந்து தோற்றுவிட்டார்கள். இப்படி தமிழ் மக்களை உருவாக்கி, அதற்கு தலைமை தாங்கியவர்கள், இன்று தாங்கமுடியாது அதற்குள் தோற்றுப் போகின்றனர்.

பி.இரயாகரன்
08.12.2007