Sunday, 31 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 157- 160


157: யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடை!
 
இலங்கை அரசு ராணுவத்துக்காக மட்டும் தினந்தோறும் 4 கோடி ரூபாய் செலவிடுகிறது. இந்தச் செலவு என்பது, தமிழர்களை ஒடுக்கத்தான் பயன்படுத்தப்படுகிறது. இதனைச் சமாளிக்க கொரில்லா யுத்தம் தொடங்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் போராளிகளைக் கொண்ட ஓர் இயக்கமாக, அமைப்பாக, மரபுவழி ராணுவமாக உருமாற்றம் பெற்ற விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான மாதச் செலவு 6 கோடி ரூபாய் ஆகிறது.
ஸ்ரீலங்கா ராணுவச் செலவு மாதம் ரூ.125 கோடி என்றால், அதைப் புலிகள் ரூ.8 கோடி ரூபாய் செலவில் சாத்தியப்படுத்த முனைவது எவ்வாறு?
புலிகளின் விடுதலைப் போராட்டத்துக்கான நிதி, அம் மக்களிடமிருந்தே திரட்டப்பட்டது. இந்த நிதியை அவர்கள் "மண்மீட்பு நிதி' என்று அழைத்தனர். தமிழீழ மண்ணில் குறிப்பிட்டப் பகுதியை, தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக வைத்திருந்தாலும், ஒரு சுதந்திர அரசை அவர்கள் இன்னும் நிறுவவில்லை. அதனால், அரசு ரீதியான நிதி வளங்களை வேறு நாடுகளில் இருந்து திரட்ட முடியாது. சொந்த மக்களின் வளங்களும் விவசாயம் செய்ய முடியாமல், தொழில் நடத்த வழியில்லாமல், அழிக்கப்பட்டு, முடக்கப்பட்டு விட்டதால், அவர்களிடம் பெரிய அளவில் தொகையைப் பெறுவது என்பதும் முடியாது.
இது குறித்து, பழ.நெடுமாறன் தனது நூலில், "வசதியும் வாய்ப்பும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் இரண்டு பவுன் தங்கம் அல்லது ஆயிரம் ரூபாயை மண்மீட்பு நிதிக்கு அளிக்குமாறு புலிகள் வேண்டுகோள் விடுத்தனர். இது நன்கொடை அன்று. மாறாக, மக்கள் அளிக்கும் இந்தத் தங்கத்தைப் பெற்றுக்கொள்ளும் புலிகள் அதற்கான கடன் பத்திரங்களை அளிக்கிறார்கள். கடனாகப் பெறப்படும் இந்த இரண்டு பவுன் தங்கமானது, பின்னர் அவர்களுக்கே திரும்ப அளிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் 100 கடன் பத்திரங்களுக்குரிய தங்கம் அவ்வாறு திரும்ப அளிக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவித்துள்ள அவர், இந்த மண்மீட்பு நிதிக்கு, உதவி அளிக்க மக்கள் பெருமளவில் முன்வந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
"விடுதலைப் புலிகளால் கொடுக்கப்படும் மீளக்கொடுப்பமைவுப் பத்திரம்' என்று குறிப்பிடப்பட்டுள்ள தமிழீழ மீட்பு நிதி பத்திரச் சான்றில், நிதிப் பொறுப்பாளர் என்ற இடத்தில் தமிழேந்தியும், விடுதலைப் புலிகள் தலைவர் என்ற இடத்தில் வே.பிரபாகரனும் கையெழுத்திட்டிருந்தனர்.
இந்த நிதியைக் கட்டாயப்படுத்திப் பெறவில்லை. யாழ்ப்பாணத்திலுள்ள வசதியற்றவர்களை ஒதுக்கிவிட்டு, வசதிமிக்க 1 லட்சம் குடும்பத்தினரிடம் மட்டுமே இந்த நிதி பெறப்பட்டது என்றும் இந்த நிதியை புலிகள் திருப்பித் தரமாட்டார்கள் என்று வதந்தியும் பரப்பப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தங்கத்தைத் தர மக்களிடையே தயக்கம் இருந்தது. ஆனால் மாதந்தோறும் 100 குடும்பங்களுக்கு அந்தக் கடன் திரும்பக் கொடுக்கப்பட்டது. அப்போதும் வதந்திகள் வேறுவகையாகக் கிளம்பியது. அதிகம் பெறவே, திரும்பக் கொடுக்கிறார்கள் என்ற பிரசாரத்தைக் கிளப்பினர். அவர்களிடம் நிலைமை விளக்கப்பட்டது என்றும் பழ.நெடுமாறன் குறிப்பிட்டுள்ளார்.
இதையெல்லாம் மீறி அந்த மண்மீட்பு நிதிக்குப் பெருமளவில் தங்கம் குவிந்தது என்கிறது புலிகள் வெளியீடு.
இலங்கை அரசு, ராணுவ நடவடிக்கையால் யாழ்ப்பாணத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியாது எனக் கருதி, ஏற்கெனவே விதித்த பொருளாதாரத் தடையை பிரேமதாசா அரசு மேலும் இறுக்கியது.
ஏற்கெனவே தடை விதிக்கப்பட்ட உணவுப் பொருள், மளிகைச் சாமான்கள், உயிர்காக்கும் மருந்துப் பொருள்கள், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் எண்ணெய் வகைகள், சோப்பு வகைகளுடன் மேலும் பல பொருள்களின் தடை பட்டியல் வெளியிடப்பட்டது.
அந்தப் பட்டியலில் (1) ஆயுதங்கள், (2) வெடிமருந்துகள், (3) விளையாட்டுத் துப்பாக்கிகள், (4) மின்சார வயர்கள், (5) தூரத்துக் கட்டுப்பாட்டுக் கருவிகள், (6) மின்.எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருள்கள், (7) தலைக் கவசங்கள், (8) நுணுக்குக் காட்டிகள், (9) தொலைநோக்குக் கண்ணாடி (டெலஸ்கோப்), (10) காம்பஸ், (11) பாதுகாப்புப் படையினரின் உடைகளையொத்த துணிவகைகள், (12) இரும்புகள், இரும்புக் கம்பிகள், (13) அலுமினியம், அலுமினியப் பொருள்கள், (14) சாக்குப் பைகள், (15) சிமெண்ட், (16) சைக்கிள் ரேசர்கள், (17) மரங்கள், (18) முட்கம்பிகள், (19) கம்பி வெட்டும் கருவிகள், (20) தீப்பற்றும் பொருள்கள், (21) கற்பூரம், (22) நிலக்கரி, (23) யூரியா உரம், (24) சகலவகையும் சார்ந்த பேட்டரிகள், (25) வானொலி உதிரி பாகங்கள், (26) மின்கருவிகள், (27) பிளாஸ்டிக் கேன்கள், (28) மோட்டார் வாகன டயர்கள், (29) மோட்டார் வாகன உதிரி பாகங்கள், (30) மோட்டார் சைக்கிள்கள், (31) அச்சிடும் தாள்கள் (எல்லாவகையும்), (32) அச்சு இயந்திரங்கள், அதன் பாகங்கள் மற்றும் அதன் உபயோகப் பொருள்கள், (33) ஜெராக்ஸ் போன்ற பதிவு எந்திரங்கள், (34) பாடசாலைப் பைகள், (35) தங்கம், கட்டியாகவும் நகைகளாகவும், (36) மதுபானங்கள், (37) மேலும் சில உயிர்காக்கும் மருந்துகள், மற்றும் அறுவைச்சிகிச்சைக் கருவிகள் (ஆக்ஸிஜன் உள்ளிட்டவை), (38) உராய்வுப் பொருள்கள், (39) பாலிதீன் பைகள் எல்லாவகையும், (40) மெழுகு, மெழுகுவர்த்திகள், (41) டர்பென்டைன் போன்ற பொருள்கள், (42) அனைத்து வகை சோப்புகள், (43) அனைத்துவகை ரசாயனப் பொருள்கள், (44) சோயா-புட்டியில் அடைக்கப்பட்ட உணவுகள், (45) இனிப்பு வகைகள் ஆகியவை யாழ்ப்பாணம் உள்ளிட்டவை வடக்கு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்துக்கோ ஆயுதங்கள் (வெடிகுண்டுகள்), வெடிமருந்துகள், யூரியா உரம் மட்டும் தடை என்றும் அறிவிக்கப்பட்டது.
தடை செய்யப்பட்டப் பொருள்கள் வவுனியா பிரதேசத்திலிருந்து, ஆனையிறவைத் தாண்டிச் செல்வது என்பது குற்றமாக அறிவிக்கப்பட்டது. அதையும் மீறி எடுத்துச் செல்கிறவர்கள் தேசிய விரோதிகள் என்றும் தண்டிக்கப்பட்டார்கள்.
இவ்வாறு பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி, யாழ்ப்பாணத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் கூட்டுத்தண்டனையை பிரேமதாசா நிர்வாகம் மேலும் இறுக்கியபோதிலும், யாழ்ப்பாணவாசிகள் இதுபற்றி அஞ்சவில்லை.
இதுகுறித்து வே.பிரபாகரன் வெளியிட்ட அறிக்கையில், "தற்போது ஈழத்தமிழர்கள் இரு யுத்தங்களை ஒருசேர நடத்திக்கொண்டிருக்கிறார்கள். முதலாவது, எமது தாயகத்தை எதிரிகளிடமிருந்து மீட்பதற்கான விடுதலைப் போராட்டம். இரண்டாவது, போதிய உணவை உற்பத்தி செய்து, பொருளாதாரம் என்ற பெயரில் சிங்கள அரசால், உணவுப் பொருள்களை வடக்கு-கிழக்குக்கு அனுப்புவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை முறியடிப்பது. இந்த இரு போராட்டங்களிலும் நாம் வெற்றி பெற்று எமது லட்சியமான தமிழீழத்தை அடைவோம் என்பதில் உறுதியுடன் இருக்கின்றோம்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "ஆங்கிலேய ஆட்சியில் தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்டப் பயிர்களை அறிமுகம் செய்து, அவர்களின் நிர்வாக வசதிக்காக தமிழீழத்தையும் மற்ற பகுதிகளையும் ஒருங்கிணைத்து, கொழும்பு நகரை உணவுச் சந்தைப்படுத்தலின் பிரதான மையமாக்கினர் என்றும், ஆங்கிலேயரைத் தொடர்ந்து வந்த சிங்கள அரசுகளும் தமிழர்கள், தமிழ்ப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் கொழும்பில் தங்கி வாழும் தன்மையை ஊக்கப்படுத்தினர் என்றும், இவர்களின் முதலீடுகள் மூலம் வரும் வருமானத்தை கொழும்பில் உள்ள நிறுவனங்கள் மூலம் பெறுகிறவரை, விடுதலைப் போராட்டம் வெற்றிபெற முடியாது என சிங்கள இனவெறியர்கள் கருதிச் செயல்படுகின்றனர் என்றும் இதன் காரணமாகவே விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுகிற நிலையை அடையும்போதெல்லாம் ஸ்ரீலங்கா அரசு பொருளாதாரத் தடையை எமது பகுதிகள் மீது விதிக்கிறது என்றும் தெரிவித்திருந்தார்.
"இதனைச் சமாளிக்க உணவு உற்பத்தி மற்றும் எல்லாவகையிலும் தன்னிறைவு அடைதல், தமிழீழத்தை அடைவதற்கான மிக அத்தியாவசிய முன்தேவையாக உள்ளது' என்றும் அவர் அவ்வறிக்கையில் வலியுறுத்தியிருந்தார்.
இதன்படி, பொருளாதாரத் தடையை முறியடிக்க உணவுப் பொருள் தேவையில் 30 சதவீதத்தை தமிழீழப் பகுதியில் உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வென்றனர். அந்நிலையிலும் பற்றாக்குறை அவர்களை மேலும் நிர்பந்திக்க, உணவு உற்பத்தியில் மேலும் தீவிரம் காட்டினர்.
கல்விக்கான அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலையிலும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும் மின்சக்தி பெற சைக்கிள் டைனமோ முறையும், விளக்கெரிய திரி விளக்குகளும் பயன்படுத்தப்பட்டன. சவக்காரத் தடையைப் போக்க, பனம்பழச்சாற்றைக் கொண்டு உடைகளைச் சலவை செய்தல் உள்ளிட்ட பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி வென்றனர்.
158: போராட்டம் தொடர்கிறது...
ராஜீவ்காந்தி படுகொலையைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதன் ஆதரவாளர்கள் மீது தடா சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவை பிரயோகிக்கப்பட்டன. இதன் உச்சகட்ட நடவடிக்கையாக விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்திய அரசு தடைவிதித்தது.
இது குறித்து பழ.நெடுமாறன் தனது நூலில், "தமிழகத்தில் செயல்படாத ஓர் இயக்கத்தின் மீது உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மீட்புப்படை என்ற பெயரில் சில இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க, விடுதலைப் புலிகள் சதி செய்தனர் என்ற குற்றச்சாட்டு நகைப்புக்கு இடமான குற்றச்சாட்டாகும்.
தமிழ் தேசிய மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையே இன்னும் தொடங்கப்படவில்லை. வழக்கு விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டு உண்மை என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. அவ்வாறு நிரூபிக்கப்பட்ட பின்பே தமிழ்த் தேசிய மீட்புப்படை உண்மையில் இருந்தது என்பது நிரூபணம் ஆகும். இந்த வழக்கே விசாரணைக்கு வராத நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்துள்ளது சரியல்ல' என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு தடை அறிவிக்கப்பட்டதும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஓர் அறிக்கையினை வெளியிட்டது. அவ்வறிக்கையில், "தமிழ்நாட்டு இளைஞர்கள் சிலருக்கு யாழ்ப்பாணத்தில் ஆயுதப் பயிற்சி அளித்ததாகவும், தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்தைத் தூண்டிவிட்டதாகவும் இந்தியா, விடுதலைப் புலிகள் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்துகின்றது. இந்தக் குற்றச்சாட்டில் எந்தவித உண்மையுமில்லை' என்று தனது மறுப்பினை வெளியிட்டு, இலங்கையின் இனப் பிரச்னையில் இந்தியாவின் தவறுகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதிக்கும் நடவடிக்கையைக் கூட சட்டப்படி இந்திய அரசு செய்யவில்லை. 14-5-1992 அன்று இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்வதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இந்தத் தடை சரிதானா? என்பதைப் பற்றி முடிவு செய்ய நடுவர் மன்றம் ஒன்றையும் அமைத்தது (தமிழீழம் சிவக்கிறது - பழ.நெடுமாறன், பக்-488).
8-7-1992 அன்று நடுவர் மன்றம் வெளியிட்ட அறிவிப்பில், "விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்ப்பவர்கள் தங்கள் மனுக்களை, தம்மிடம் அளிக்கலாம்' என்றும் தெரிவித்திருந்தது.
இதனையொட்டி, பழ.நெடுமாறன், மணியரசன், தியாகு, தீரன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்தனர். விடுதலைப் புலிகளின் பன்னாட்டுச் செயலகம் சார்பில் திலகர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "தமிழீழ மக்களுக்கு எதிரான இன ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிற ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக, ஆயுதப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டுள்ளார்கள். பன்னாட்டுச் சட்டங்களின் கீழும், பன்னாட்டு முறைமைகளின் கீழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட நிலை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. 1985-ஆம் ஆண்டில் திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போதும், 1987-ஆம் ஆண்டில் இந்திய-இலங்கை உடன்படிக்கையின்போதும் இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் பேராட்ட ஈடுபாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. விடுதலைப் புலிகள் தங்கள் போராட்டத்தைத் தொடங்குவதற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்துள்ளது.
1967-ஆம் ஆண்டு சட்டவிரோதச் செயல்பாடுகள் சட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள கருத்துகளின் கீழ் விடுதலைப் புலிகளின் இயக்கம் வரவில்லை. இந்திய அரசின் நீதி-நிர்வாக எல்லைக்குள்ளும் அஃது இயங்கவில்லை. எனவே, எந்தச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டாலும் அது செல்லத்தக்கதன்று.
இந்தியாவின் உள் அரசியலிலோ அல்லது அதனுடைய எல்லைகளுக்கு அபாயம் விளைவிக்கும் வகையிலோ, நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறுக்கிடும் எண்ணம் விடுதலைப் புலிகளுக்கு அறவே இல்லை' என்று கூறிய அவர், மேலும் கூறுகையில், "இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை வீணானது; தேவையற்றது. சட்டத்தினால் செயல்படுத்த முடியாதது' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந் நிலையில், நடுவர் மன்றத்தில் தங்களது கருத்துகளைச் சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும் என்றும், விசாரணைகள் ரகசியமாக நடக்கின்றன என்றும், இதனால் ஒருதலைப்பட்சமான முடிவு அறிவிக்கப்படலாம் என்றும் இவ்விசாரணைக்குத் தடை கோரி, தியாகு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இம் மனுவை ஏற்ற உயர்நீதிமன்றம், 27-10-1992 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டு, இரண்டு வாரத்தில் பதிலளிக்க நடுவர் மன்றத்தின் பதிவாளருக்கு அறிவிப்புக் கொடுக்க உத்தரவிட்டது.
ஆனால், உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு கிடைக்கும் முன்பாகவே, நடுவர் மன்றம் ரகசியமாகக் கூடி விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்கப்பட்ட தடை செல்லும் என்ற தீர்ப்பை வழங்கியது (ஆதாரம்: மேலது நூல்).
விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு இந்தியாவில் அரசியல் தலைவர்கள் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். பத்திரிகைகளும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டன. அது குறித்த விவாதங்கள் தொடர்ந்துகொண்டே இருந்தன.
159: கிட்டுவின் உயிர்த்தியாகம்!
புலிகள்-பிரேமதாசா பேச்சுகளுக்கு முற்றுப்புள்ளி விழும் முன்பாக, கிட்டுவும் அவரது மனைவி சிந்தியாவும் லண்டன் சென்றார்கள். அங்கு கிட்டுவின் இழந்த காலுக்கு ஏற்ற சிகிச்சை மேற்கொண்டதுடன், புலிகளின் பன்னாட்டுச் செயலகத்தை அமைக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார்.
உலக நாடுகளின் 52 நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் அலுவலகங்களை லண்டன் அலுவலகத்துடன் இணைத்தார். இதன்மூலம் வெளிநாடுகளில் வசித்த ஈழத்தமிழர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழர்களும் ஒன்றிணைந்தனர்.
மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேசி புலிகளின் பிரச்னைகளையும், ஸ்ரீலங்கா அரசு இழைத்துவரும் அடக்குமுறைகளையும் விவரித்தார் கிட்டு. இந்நிலையில், இந்தியா மற்றும் இலங்கை அரசுகள், கிட்டுவை லண்டனிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தின. இறுதியாகக் கிட்டு, லண்டனிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஐரோப்பிய நாடுகளில் ஒரு நாடோடி போலத் திரிந்தார். எந்த நாட்டில் இருந்தாலும், அந்நாட்டிலிருந்தே தனது அலுவலக வேலைகளைச் செய்தார்.
மேற்குலக நாடுகளில் பிரபலமான குவேக்கர்ஸ் அமைப்பு இலங்கை சென்றது. அங்கு அரசுத்தரப்பு மற்றும் புலிகளுடன் பேசி, சமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தியது. இலங்கையைத் தவிர்த்து வேற்று நாடொன்றில் அந்தப் பேச்சு அமைவது என முடிவெடுக்கப்பட்டது. அந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னணியில் கிட்டு இருந்ததால், அவர் பிரபாகரனிடம் நேரில் பேசி, முடிவெடுக்க, தமிழீழம் நோக்கிப் புறப்பட்டார்.
1993-ஆம் ஆண்டு ஜனவரி 13-ஆம் நாளன்று, எம்.வி.அகதா என்ற கப்பலில், இந்தியாவின் கடல் எல்லைக்கு 440 கடல் மைலுக்கு அப்பால் வந்து கொண்டிருந்தார். அவருடன் லெப்டினன்ட் கர்னல் குட்டிஸ்ரீ உள்ளிட்ட 9 போராளிகளும் உடன் வந்தனர். இந்தக் கப்பலை, இந்தியக் கடற்படை முற்றுகையிட்டது. கப்பலை இந்தியாவை நோக்கித் திருப்பும்படி சொல்லப்பட்டது. கிட்டு அதற்கு உடன்பட மறுத்தார்.
ஹெலிகாப்டர் மூலம் அதிரடிப் படைகள் கப்பலில் இறங்கி, கிட்டுவையும் அவருடன் வந்த போராளிகளையும் கைது செய்ய முயன்றனர். இரு நாள்கள் நடந்த இந்தப் போராட்டத்தில், அதிரடிப் படைவீரர்கள், கப்பலில் இறங்க முயன்ற நேரத்தில் கிட்டுவும் அவரது நண்பர்களும் சயனைட் குப்பி கடித்து உயிர்துறந்தனர். கோபமுற்ற கடற்படையினர் அக் கப்பலைத் தாக்க முயன்றபோது, கப்பல் வெடித்துச் சிதறி, கடலில் மூழ்கியது.
கப்பலை இயக்கிய மாலுமி உள்ளிட்ட ஊழியர்கள் கைது செய்யப்பட்டு விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
கிட்டுவின் உயிர்துறப்பு உலகின் கவனத்துக்கு வந்தபோது, யாழ்ப்பாணத் தமிழர்கள் மட்டுமல்ல, உலகளாவிய மனித உரிமை ஆர்வலர்கள் அனைவருமே கலங்கினர். ஆனால், சதிவேலைகளுக்காக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது, கப்பல் சுற்றிவளைக்கப்பட்டதாக இந்திய அரசு கூறியது. ஆனால், இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே வராத இந்தக் கப்பல் ஏன், எதற்காக இப்படிச் சுற்றி வளைக்கப்பட்டது என்பதற்கு யாரும் எந்தவித விளக்கமும் இன்றுவரைத் தரவில்லை.
இதுபற்றித் தில்லியில் உள்ள ராணுவ இலாகா அதிகாரி கூறிய செய்தி, சென்னை நாளிதழ்களில் பின்வருமாறு இருந்தது. கிட்டு பயணம் செய்த கப்பலில் நிறைய ஆயுதங்களும் வெடிமருந்துகளும் இருந்தன. கப்பலை மடக்கிக் கொண்டுவரும்பொழுது, விடுதலைப் புலிகள் கப்பலை மூழ்கடிக்கும் வண்ணம் வெடிவைத்துவிட்டனர். தீப்பிடித்த கப்பலில் இருந்து ஒன்பது விடுதலைப் புலிகள் கடலுள் குதித்தனர். அவர்களைக் கடற்படை வீரர்கள் காப்பாற்றி, நமது கப்பலுக்குக் கொண்டுவந்து காவலில் வைத்தனர். கைதான விடுதலைப் புலிகளில் கிட்டு இல்லை. இவ்வாறு அந்தச் செய்தி கூறியது.
கிட்டுவின் கப்பல் சுற்றிவளைக்கப்பட்ட செய்தியை பிரான்ஸிலிருந்து திலகர், பழ.நெடுமாறனுக்குத் தெரிவித்தார். இதனையொட்டி, பழ.நெடுமாறன் பத்திரிகையாளர்களின் கூட்டத்தைக் கூட்டி, தகவல் தெரிவித்த பின்னரே இந்தச் செய்தி, தமிழீழப் பத்திரிகைகளில் வெளியானது.
இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறுகையில், "1993-ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் கிட்டுவின் படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்துப் பேச அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றினைக் கூட்டியிருந்தேன். இதில் பெருஞ்சித்திரனார், சாலை.இளந்திரையன், பண்ருட்டி ராமச்சந்திரன், துரைசாமி, மணியரசன், தியாகு, தீனன், சுப.வீரபாண்டியன், புலமைப்பித்தன் உள்ளிட்ட 26 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கிட்டுவின் மரணத்தைக் கண்டித்து, தென்பிராந்திய ராணுவத் தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தோம். செய்தி வெளியான அன்றே என்னையும், புலமைப்பித்தன், சுப.வீரபாண்டியன், தீனன், சரஸ்வதி இராசேந்திரன் ஆகியோரையும் கைது செய்தனர். ஐந்து நாள்களுக்குப் பிறகு ஜாமீனில் விடப்பட்டோம். ஜனவரி 27-ஆம் நாளன்று மீண்டும் என்னையும், பெருஞ்சித்திரனார், பொழிலன் ஆகியோரையும் தடா சட்டத்தில் கைது செய்தனர். கிட்டுவின் படுகொலையையொட்டி தமிழகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு, எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
சிறையில் இருந்தபடியே சென்னை உயர் நீதிமன்றத்தில் கிட்டு பற்றிய ஆட்கொணர்வு மனு ஒன்றினைத் தாக்கல் செய்தேன். எதிர்மனுதாரர்களாக இந்தியப் பாதுகாப்புத் துறை, இந்திய உள்துறை, தமிழகக் காவல்துறைத் தலைவர் ஆகியோரைச் சேர்த்திருந்தேன். இவர்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு, வாதாடுவதற்காக இந்திய அரசின் இணை.சொலிசிட்டர் ஜெனரல் கே.டி.எஸ்.துளசி வந்தார். இந்த மனு தாக்கல் செய்யப்பட்டபோது, இந்திய அரசு முதலில் சாதாரணமாகத்தான் நினைத்தது. ஆனால், அரசின் உயர் வழக்கறிஞர் வந்து வாதாடவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த வழக்கின் மூலம் பல உண்மைகள் வெளியாயின. கிட்டு, இந்தியக் கடல் எல்லையில் ஊடுருவவே இல்லையென்பதும், அவர் வந்த கப்பல் இந்தியாவின் கடல் எல்லைக்கு அப்பால் 440 கடல் மைலுக்கு வந்துகொண்டிருந்ததாகவும், கிட்டு கப்பலில் வரும் உளவுத் தகவல் கிடைத்தபிறகு அவரது கப்பலை வழிமறிக்க, இந்தியக் கப்பற்படை சென்றது என்பதும், அவரது கப்பலை வலுக்கட்டாயமாக இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசிக்கும்படி மிரட்டப்பட்டார் என்பதும், அவர் அதற்கு ஒத்துழைக்காத நிலையில் அதிரடிப்படை ஹெலிகாப்டர் துணையுடன் கப்பலினுள் இறங்கிய நிலையில், அவரும், அவருடன் வந்த போராளிகளும் சயனைட் அருந்தி உயிர்துறந்தனர் என்பதும் தெரிய வந்தது.
இந் நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தனக்கு இந்த வழக்கை இதற்குமேல் விசாரிக்க அதிகாரமில்லை, ஆந்திர உயர் நீதிமன்றத்திற்குத்தான் அதற்கான அதிகாரம் உள்ளது என அறிவித்து ஒதுங்கிவிட்டது. எனவே, ஆந்திராவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மூலமே, கிட்டு மரணம் குறித்த உண்மைகள் பல வெளி உலகுக்குத் தெரிய வந்தன' என்ற நெடுமாறன், "தமிழீழம் சிறந்த தளபதி ஒருவரை இழந்துவிட்டது. கிட்டு ஒரு சிறந்த ராஜதந்திரியாக உருவானார். அவர் பேச்சுவார்த்தைகளில் சமர்த்தர். பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண உலக நாடுகள் முயற்சிப்பது கிட்டு வழியாகத்தான் என்பதை உணர்ந்தே அவரைப் பழிதீர்த்திருக்கிறார்கள்' என்றும் குறிப்பிட்டார்.
கிட்டுவின் இழப்பு, வே.பிரபாகரனுக்குத் தாங்கமுடியாத சோகத்தை ஏற்படுத்தியது. அவர் கிட்டுவின் இழப்பைத் தொடர்ந்து, வெளியிட்ட அஞ்சலியில், "என் ஆன்மாவைப் பிழிந்த சோக நிகழ்வு. அதனைச் சொற்களால் வார்த்துவிட முடியாது. நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக என் சுமைதாங்கும் லட்சியத் தோழனாக இருந்தவர். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாற்பட்டது. ஒரே லட்சியப் பற்றுணர்வில், ஒன்றித்த போராட்ட வாழ்வில், நாங்கள் பகிர்ந்துகொண்ட அனுபவத்தில், ஒருவரையொருவர் ஆழமாக இனங்கண்ட புரிந்துணர்வில், வேரூன்றி வளர்ந்த மனித நேயம் இது.
கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். ஓய்வில்லாது புயல் வீசும் எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு. வங்கக் கடலில் பூகம்பமாக அவர் ஆன்மா பிளந்தது. அதன் அதிர்வலையில் எமது தேசமே விழித்துக் கொண்டது. கிட்டு... நீ சாகவில்லை. ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்' என்று குறிப்பிட்டிருந்தார்.
160: பிரேமதாசா மரணமும் சந்திரிகாவின் அணுகுமுறையும்!
கிட்டுவின் உயிர்த் தியாகத்தையொட்டி, 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 முதல் 20-ம் தேதி வரை, மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் துக்கம் அனுசரிக்கப்பட்டன. கிட்டு கப்பலில் வருவது மாத்தையாவால்தான் இந்திய உளவுப் பிரிவுக்குத் தெரியவந்தது என்ற சந்தேகம் பலருக்கு இருந்தது. எனவே யாழ்ப்பாணத்தில் அனுசரிக்கப்பட்ட அஞ்சலிக் கூட்டத்தில் மாத்தையா கலந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து அடேல் பாலசிங்கம் எழுதிய நூலில், 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு நாள், கொக்குவில் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த மகேந்திரராசா உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும், ஓர் அறையை ஒதுக்கித் தர வேண்டும் என்று கேட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாலசிங்கம் உண்ணாவிரதம் இருப்பதன் அவசியம் என்ன என்று கேட்டபோது, அவர், புலிகள் இயக்கத்தின் உப தலைவர் பதவியிலிருந்தும் அரசியல் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் தாம் விலக்கப்பட்டது காரணமாக இயக்கத்தின் தலைமைப் பீடத்தின் மீது ஏமாற்றம் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணியில் மாத்தையா மீது, தனக்கென ஒரு குழுவை உருவாக்கி, செயல்படுவதாகவும் தனக்கு விசுவாசமான ஒரு சிலரின் விருப்பத்தை மட்டுமே நிறைவேற்றி வருவதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையொட்டி, அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்திய உளவுத் துறையின் வலையில் சிக்கி, பிரபாகரனை அகற்றும் திட்டத்துக்கு உடன்பட்டு, பெரும் சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரியவந்து, அவரும் அவரது சகாக்களும் கைது செய்யப்பட்டனர்.
இதன் பின்னர் விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி கலைக்கப்பட்டு, அதற்குப் பதில் அரசியல் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் யாழ்த் தளபதியாக இருந்து வந்த சுப. தமிழ்ச்செல்வன் நியமனம் ஆனார்.
பிரேமதாசாவால் ஒதுக்கப்பட்டிருந்த அதுலத் முதலியும், காமினி திசநாயக்காவும் தங்கள் பகையை மறந்து, புதிய கட்சி ஒன்றைத் தொடங்கி மேற்கு மாகாண இடைத் தேர்தலில் தீவிரம் காட்டினர். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரால் லலித் அதுலத் முதலி சுட்டுக் கொல்லப்பட்டார் (ஏப்ரல் 23, 1993).
அதற்கடுத்த பத்து தினத்துக்குள் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அதிபர் பிரேமதாசா, ஆர்மர் வீதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியை தானே சரிசெய்கிறேன் என்று இறங்கினார். அந்த ஊர்வல நெருக்கடியிலும் கூட்டத்தில் ஊடுருவிய சைக்கிளைத் தடுத்து நிறுத்த காவலர்கள் முயன்றபோது, அந்த சைக்கிள் வெடித்து, பிரேமதாசா உள்ளிட்டோர் இறந்தனர்.
இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று புலிகள் அறிக்கை வெளியிட்டனர். ஒருவாரத் துக்கத்திற்குப் பிறகு மே 7-ல் பிரதமராக இருந்த திங்கரி விஜேதுங்க, தற்காலிக அதிபராக ஆறு மாதங்கள் பதவி வகித்தார்.
கணவர் விஜயகுமாரதுங்க கொலையுண்ட பின்னர், லண்டனில் வசித்து வந்த சந்திரிகாவை உடனே நாடு திரும்பும்படி, தாயார் ஸ்ரீமாவோ உத்தரவிட்டார். நாடு திரும்பிய சந்திரிகா குமாரதுங்க நாட்டில் அமைதியை நிலைநாட்டப் பாடுபடப் போவதாக அறிவித்தார். மக்களும் அதையே விரும்பியதால், வலுவான கூட்டணியும் அமைத்து 19.8.1994-ல் பிரதமரானார். பதவி பொறுப்பை ஏற்றதும், தமிழர் பகுதிகளில் பிரேமதாசா விதித்த பொருளாதாரத் தடைகளை சிறிதளவு தளர்த்தினார்.
சந்திரிகாவின் இந்த நடவடிக்கையை வரவேற்று, விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன், செப்டம்பர் 2, 1994 அன்று, கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் ஒரு பிரதியை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் சந்திரிகாவுக்கும் அனுப்பி வைத்தார்.
அவ்வறிக்கையில், ""முந்தைய அரசின் பொருளாதாரத் தடையை சிறிதளவு நீக்கிக் கொண்டதற்கு எங்களது வரவேற்பைத் தெரிவித்துக் கொள்வதுடன், அந்தத் தடையை முழுவதுமாக நீக்குவதற்கும் உத்தரவிட வேண்டும். இவ்வகையாக எமது பகுதியில் முற்றிலுமாக அமைதி நிலவ ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு புலிகள் இயக்கம் முழு ஒத்துழைப்பத் தரும். இதன் நல்லெண்ண வெளிப்பாடாக போர்க் கைதிகளாக எம்மிடம் உள்ள பத்துப் போலீஸôரை விடுதலை செய்யவும் தயாராக இருக்கிறோம். நான்காண்டு பொருளாதாரத் தடையால் அவதியுறும் மக்கள் சிங்களர்களைப் போன்று அனைத்து அத்தியாவசியப் பொருள்களையும் பெறுவதற்குண்டான வழிவகைகளைச் செய்வது, எம்மை மகிழ்ச்சி அடையச் செய்யும். மேலும், நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தால், நாங்கள் போர் நிறுத்தம் செய்யவும் தயாராக இருக்கிறோம்'' என்றும் அதில் உறுதியளித்திருந்தார்.
இந்த அறிக்கை தனக்கு கிடைக்கப் பெற்றதும் மகிழ்ந்த சந்திரிகா குமாரதுங்க, செப்டம்பர் 9, 1994 அன்று வே. பிரபாகரனுக்கு பதில் கடிதம் எழுதியதன் மூலம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கடிதம் எழுதிய முதலாவது பிரதமர் என்ற பெயரையும் பெற்றார்.
அந்தக் கடிதத்தில், ""முந்தைய அரசு ஏற்படுத்திய பொருளாதாரத் தடையை நீக்கியதை வரவேற்று புலிகள் வெளியிட்ட அறிக்கையைக் கண்டு மகிழ்கிறேன். நல்லெண்ணம் மற்றும் நல்லுறவு மேம்பட வேண்டும் என்ற அவாவில் பொருளாதாரத் தடையின் சில அம்சங்களை விலக்கி இருக்கிறேன். அதேபோன்று பல ஆண்டுகளாக புலிகளின் சிறையில் இருந்த பத்து போலீஸôரை விடுவிக்கும் முடிவும் வடக்கு-கிழக்குப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும்.
யாழ்ப்பாண மக்களுக்கு அனைத்துப் பொருள்களும் கிடைக்க வேண்டுமானால், அங்கே பொருள்களைக் கொண்டு வந்து இறக்குவதே முக்கியப் பிரச்னையாகும். அதற்கான வழிகளை உடனடியாகக் கண்டறிவோம்.
மின்சாரம், சாலைகள் மேம்பாடு, விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதிகள் போன்றவை கிடைக்க உடனே முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு தங்களின் ஒத்துழைப்பும் தேவை. பேச்சுவார்த்தையில் ஈடுபட இருக்கும் பிரதிநிதிகள் பெயரை அறிவித்தால், அதற்கான முன்னேற்பாடுகளில் ஈடுபடலாம்'' என்றும் சந்திரிகா குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்தில் பிரபாகரன் எழுப்பியிருந்த முற்றிலுமான பொருளாதாரத் தடையை நீக்குதல் மற்றும் போர்நிறுத்தம் குறித்து சந்திரிகா எதுவும் குறிப்பிடாத நிலையிலும், புலிகள் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட அரசியல் பிரிவுத் துணைத் தலைவர் கரிகாலன், எஸ். இளம்பரிதி, ஏ. ரவி, எஸ். டொமினிக் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
பொருள்கள் நடமாட்டத்துக்குண்டான தடையை நீக்குவது பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருந்தது. (12.9.1994 பிரபாகரனின் கடிதம்).
இவ்வாறு கடிதப் போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையிலும், கடற்படைத் தாக்குதலும், புலிகளின் எதிர்த்தாக்குதலும் மன்னார் பகுதியில் நடந்து கொண்டுதான் இருந்தது. செப்டம்பர் 19-ல் நடைபெற்ற தீவிரமான தாக்குதலில், சிங்களக் கடற்படையின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதில் 24 வீரர்கள் கொல்லப்பட்டனர். கடலில் மூழ்க இருந்த கப்பலின் காப்டனும் இதர அதிகாரிகளும் காப்பாற்றப்பட்டு, போர்க் கைதிகளாக்கப்பட்டனர்.
இவ்வகையான தாக்குதலில் புலிகள் மகிழ்ச்சி அடையாத நிலையிலும், செப்டம்பர் 21-ம் தேதி சந்திரிகா பிரபாகரனுக்கும் மீண்டும் ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், பேச்சுவார்த்தைக்கான அரசுப் பிரதிநிதிகள் பட்டியல் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிரதமரின் செயலாளர் பாலபட்டபெந்தி, சுற்றுலாச் செயலாளர் லயனல் ஃபெர்னாண்டோ, பேங்க் ஆப் சிலோன் தலைவர் ஆர். ஆசிர்வாதம், கட்டட நிர்மாணப் பிரிவு தலைவர் என்.எல். குணரத்னே ஆகியோர் பேச்சுவார்த்தையில் பங்கேற்பர் என்றும், அக்டோபர் மாதத்தில் 30-ம் தேதியிலிருந்து 6-ம் தேதிக்குள் ஒரு நாளும், 12-ம் தேதியிலிருந்து 15-ம் தேதிக்குள் ஒரு நாளும் சந்தித்துப் பேசுவார்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சந்திரிகாவின் பிரதிநிதிகளின் யாழ்ப்பாணம் வருகை அக்டோபர் 13, 14-ல், இருந்தால் வசதியாக இருக்கும் என்று பிரபாகரன் குறிப்பிட்டதுடன், பிரதிநிதிகளின் பாதுகாப்புக்கும் உறுதி அளித்திருந்தார்.
இதன்படி பலாலி விமான தளத்தில் அவர்கள் வந்து இறங்குவார்கள் என்று சந்திரிகா குறிப்பிட்டதையொட்டி, பிரபாகரன் பலாலி என்பதைவிட யாழ். பல்கலைக்கழக திறந்தவெளி சரியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
விமானப் பயணம் சரியாக வராது என்று பிரதமர் கருதினால் காங்கேசன் துறைக்கு செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் வந்து சேர்ந்தால், அங்கிருந்து எமது ஆட்கள், அந்தப் பிரதிநிதிகளை அழைத்து வந்து சுபாஷ் ஓட்டலில் தங்க வைப்பார்கள். அந்த ஓட்டல் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ளதால் அவர்களின் பாதுகாப்புக்கும் பிரச்னை இல்லை என்றும் பிரபாகரன் (8.10.1994) தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த பாலபட்டபெந்தி யாழ்ப் பல்கலை திறந்தவெளியில் வந்து பிரதிநிதிகள் இறங்குவர் என்றும், அதற்கான "எச்' என்கிற பெரிய அடையாளத்தை வெள்ளை நிறத்தில் திடலில் பொறிக்கும்படியும், அதுவே தரையிறங்க வசதியாக இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். உடன், எதுகுறித்துப் பேசப் போகிறோம் என்ற குறிப்புகளும் அதில் இடம்பெற்றிருந்தன.
1. பொருள்களைக் கொண்டு செல்ல போக்குவரத்து வசதி.
2. மின் விநியோகம், சாலை மேம்பாடு, நீர்ப்பாசன வசதிகளை உறுதி செய்தல்.
3. யாழ்ப் பல்கலை. நூலகம் மீள உருவாக்கம்.
4. போர் நிறுத்தத்துக்கான வழிவகை காணுதல்.
ஈழத் தமிழர் பிரச்னைக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் இந்தப் புதிய முயற்சிக்கு அனைத்துத் தரப்பினர் மத்தியிலிருந்தும் வரவேற்பும் எதிர்பார்ப்பும் குவிந்தன.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.