பண்டாரநாயக்க இந்திய வம்சாவளியினரை நாடு கடத்த வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்து வந்த சூழ்நிலையில் தான் 1939ஆம் ஆண்டு நாவலப்பிட்டி கலவரம் நிகழ்ந்தது. இலங்கையின் முதலாவது தமிழ் சிங்கள இனக்கலவரமாக இதைக் கொள்வது வழக்கம். சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாச்சலம் போன்றோர் இலங்கைக்கான தேசியம், இலங்கைக்கான தேசிய ஒருமைப்பாடு என உழைத்து களைத்து, தோற்று அவ்வொருமைப்பாடு காலாவதியாகியாகி வந்த காலம் 1930கள் எனலாம். அவர்களின் சகாப்தமும் முடிவுற்று சிங்களத் தேசியவாதத்திலிருந்து தற்காத்துக்கொள்ள தமிழர்களுக்கான தனித்தேசிய அடையாளத்தின் தேவை உணரப்படத் தொடங்கிய காலம் 1930கள் எனலாம்.
இலங்கையின் முதலாவது இனக்கலவரம் என்று அழைக்கப்படுகிற நாவலப்பிட்டி கலவரம் கூட இதன் நடுப்பகுதியில் இன்னும் சொல்லப்போனால் 1939 இல் தான் நிகழ்ந்தது. 1939 இல் கலவரத்துக்கு காரணமாக நாம் ஜி.ஜி.பொன்னம்பலத்தின் மகாவம்சம் பற்றிய உரையைக் காரணமாககே கொள்வது வழக்கம். ஆனால் அதேவேளை. அந்த உரைக்குத் தள்ளிய வேறு சில நிகழ்வுகளையும் இங்கு நாம் நினைவுக்கு கொண்டு வருவது முக்கியம்.