அடிப்படையிலேயே இனவாதக் கோரிக்கை அது. இங்கிருந்து நாம் இலங்கைத்
தமிழர்கள் என்ற சொல் வழியே பார்க்கும் மக்கள் வேறு; அங்குள்ள
மக்கள் வேறு. மலையகத் தமிழர்கள் தனித்திருக்கிறார்கள்,
தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனித்திருக்கிறார்கள்;
அவர்களுடைய பிரச்சினைகள் இங்கு பேசப்படுவது இல்லை. ஈழத்தின்
பரப்பாகக் கேட்கப்பட்ட வட - கிழக்கு மாகாணங்களை எடுத்துக்கொண்டால்,
கிழக்கு மாகாணத்தில் மூன்றில் இரு பங்கினர் தமிழர் அல்லாதவர்கள்;
வட பகுதியோடு இணைவதில் விருப்பம் இல்லாதவர்கள்;
அவர்களுடைய நியாயங்களை விவாதிக்க இங்கு அனுமதிக்கப்படுவதுகூட
இல்லை.
அப்புறம், அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக,
புவியரசியல்ரீதியாக நீடிக்க வாய்ப்பே இல்லாதது அது. முக்கியமாக,
வியூக முக்கியத்துவம். அந்தப் பகுதியை ராணுவரீதியாக யாரும்
விட்டுவைக்க மாட்டார்கள் - ஒருபோதும் அது நீடிக்க முடியாதது. கடைசியில் அதுதான்
நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், ஒன்றுபட்ட
இலங்கை என்ற அமைப்பின் கீழ், சுயாட்சிக்கு
இணையான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுதான் இலங்கைத் தமிழர்களுக்கு அமைதியையும்
நன்மைகளையும் தருமேயன்றி பிரிவினை அல்ல.