Saturday, 6 June 2020

மன்னிப்புக் கோர வேண்டியவர்கள் யார்?

1990ஆம் ஆண்டு வடதமிழீழத்தில் இருந்து முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஓர் இனச்சுத்திகரிப்பு என்றும், இதனையிட்டுத் தான் வெட்கித் தலைகுனிவதாகவும் இராஜவரோதயம் சம்பந்தரின் பட்டத்து வாரிசான மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரம் வெளியிட்ட கருத்து பலத்த சலசலப்புக்களை தோற்றுவித்திருக்கின்றது.


 முஸ்லிம் மக்களை வெளியேற்றியதையிட்டுத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வருந்துவதாக ஏற்கனவே 1994ஆம் ஆண்டு பி.பி.சி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்திருந்தார். இதன் பின்னர் 2002ஆம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இச்சம்பவத்திற்குத் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மன்னிப்புக் கோரியதோடு, அவ்விடத்தில் உரையாற்றிய தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள், வடதமிழீழத்தில் மீளவும் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று அறிவித்திருந்தார்.
இதன் பின்னர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்கள் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் நிகழ்ந்த பொழுது, உடனடியாக லெப்.கேணல் கௌசல்யன் அவர்களை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக நியமித்து தமிழ்  முஸ்லிம் சமூகங்களிடையே சுமுகமான உறவைத் தோற்றுவிப்பதற்கான முயற்சிகளை தமிழீழத் தேசியத் தலைவர் மேற்கொண்டார். 2004ஆம் ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட கடற்கோளை அடுத்து மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களுக்கு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களைத் தலைவர் அனுப்பி வைத்த பொழுது அவருக்கு வழங்கிய பணிப்புரைகளில் முக்கியமானது முஸ்லிம் சமூகப் பெரியவர்களை சந்தித்து அவர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது.
மறுபுறத்தில் வடதமிழீழத்தில் மீண்டும் முஸ்லிம் மக்கள் குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டார்கள். வன்னிப் பெருநிலப்பரப்பில் இதற்கான ஏற்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டதோடு, நல்லிணக்க சமிக்ஞையாக முஸ்லிம் வணிகர்களுக்கு வரிவிலக்கும் வழங்கப்பட்டது.
இவையெல்லாம் அப்பொழுது கொழும்பு மாநகரில் உப்பரிகையொன்றில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்து லயன் லாகர் புட்டிகளையும், மென்டிஸ் குவளைகளையும் காலி செய்து சிங்களவர்களுடன் மட்டைப் பந்து விளையாடிக் கொண்டிருந்த சுமந்திரனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆனாலும் இந்த விவகாரம் சுமந்திரனால் மட்டுமன்றி அடிக்கடி முஸ்லிம் தலைவர்களாலும் கிளப்பப்படுவதால் இங்கு மன்னிப்புக் கோர வேண்டியவர்கள் யார்? என்பது பற்றி நாம் ஆராய்வது அவசியமாகின்றது.
முஸ்லிம்களின் விடயத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தொடர்ச்சியாக இரண்டு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது வடதமிழீழத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியமை. இரண்டாவது மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசலில் 100 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம். இதில் காத்தான்குடி பள்ளிவாசல்களில் நிகழ்ந்த கொலைகளுடன் தாம் எந்த விதத்திலும் தொடர்புபடவில்லை என்பதை திட்டவட்டமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தார்கள். இக் கொலைகளை நிகழ்த்தியவர்கள் சிங்களப் படைகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் ஊடாக எவ்வித தங்கு தடையுமின்றித் தப்பிச் சென்றமை இதில் தமிழ் ஒட்டுக்குழுக்களின் பங்கு இருந்தமையை உறுதி செய்யும் நிலையில் இதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் மீது எவரும் பழிசுமத்த முடியாது. அவ்வாறு எவராவது பழிசுமத்துவதாக இருந்தால் அது ஆதாரமற்ற, அவர்களின் கற்பனையின் அடிப்படையிலான ஒன்றாகவே இருக்கும்.
எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த தவறு ஒன்றேயொன்றுதான்: முஸ்லிம்களை வடதமிழீழத்தில் இருந்து வெளியேற்றியதுதான் அது. ஆனால் அதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் மன்னிப்புக் கோரியதோடு மட்டுமன்றி, அதனை சீர்செய்வதற்கு சகல முயற்சிகளையும் எடுத்தார்கள். எனவே இனிமேலும் இதுபற்றி பேசிக் கொண்டிருப்பது வீண்பேச்சாகும்.
ஆனால் தமிழ் மக்களுக்கு முஸ்லிம்களால் இழைக்கப்பட்ட கொடுஞ்செயல்களுக்கு இதுவரை எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியோ அன்றி முஸ்லிம் சமயப் பெரியவரோ மன்னிப்புக் கோரவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் எந்த விதத்திலும் தொடர்புபடாத காத்தான்குடி கொலைகளைத் தூக்கிப் பிடிப்பவர்கள் எவரது கண்களுக்கும் தென்தமிழீழத்தில் 11.06.1990 முதல் 31.10.1990 வரையான காலப்பகுதியில் முஸ்லிம்களால் இரண்டாயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தெரிவதில்லை போலும். இதுபற்றி 1990ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் பத்திரிகையில் வெளிவந்த செய்தியை கீழே மீள்பதிவு செய்கின்றோம்:
·         ‘‘கடந்த ஆனி மாதம் 11ஆம் திகதி (11.06.1990) தொடங்கிய தமிழீழ  சிறீலங்காப் போரைத் தொடர்ந்து அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலைப் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் கும்பல்களினால் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாகப் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
·         மிருகத்தனமான முறையில் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் காடையர்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர்.
·         சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்ற பேதமில்லாது காட்டுமிராண்டித்தனமாக வெட்டியும், குத்தியும் கொல்லப்படுகின்றார்கள்.கொல்லப்படும் தமிழர்களின் தலைகள் கொய்யப்பட்டுச் சாக்கினுள் கட்டிக் கடலினுள் வீசப்படுகின்றன.
·         படுகொலை செய்யப்படும் இளைஞர்களினதும், இளம் பெண்களினதும் சடலங்கள் சோடி சோடியாகக் கட்டி, ஆற்றில் எறிந்து மிலேச்சத்தனமாக இரசனைகளை முஸ்லிம் காடையர்கள் வெளிப்படுத்துகின்றனர்.
·         பாண்டிருப்பு கல்முனை, வீரமுனை, சொறிகல்முனை, இவைபோன்று அம்பாறை மாவட்டத்திலிருக்கும் பல தமிழர் கிராமங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டு அங்கே முஸ்லிம் குடியேற்றங்களை உருவாக்கி மண்ணை அபகரிக்கும் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.’’
இது ஒரு சிறு பதிவுதான். இதேபோன்று விடுதலைப் புலிகள் பத்திரிகை இன்னுமொரு செய்தியையும் அன்றைய காலப்பகுதியில் பதிவு செய்திருந்தது. அதனையும் இவ்விடத்தில் மீள்பதிவு செய்கின்றோம்:
‘‘கல்முனையில் இராணுவப் பயங்கரவாதத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருந்த 14 வயதுத் தமிழ் யுவதி ஒருத்தி சிங்களப் படைகளிடம் சிக்கிப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாள். பின்னர் இவள் முஸ்லிம் ஊர்காவற் படையிடம் கொடுக்கப்பட்டாள். ஒரு கல்லை நட்டு, நிர்வாணமாக அதை மூன்று முறை சுற்றும்படி பணிக்கப்பட்டாள். அவ்விதமே சுற்றி வந்ததும், ‘இஸ்லாமிய மார்க்கத்தில் விபச்சாரிக்குரிய தண்டனை இதுதான்’’ எனக் கூறிக்கொண்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட அந்தத் தமிழ் யுவதியைக் கல்லால் எறிந்து கொன்றார்கள். மட்டக்களப்புப் பிராந்திய அரசியல் பொறுப்பாளர் கரிகாலனின் கூற்றுப்படி என்றுமில்லாதவாறு இன்று தென்தமிழீழத்தில் தமிழ் இனப்படுகொலை நடைபெறுகின்றது. இம்முறை சிங்களப் பேரினவாதிகளுடன் முஸ்லிம் வெறியர்களும் இணைந்து விட்டார்கள்.’’
இவற்றை விட தென்தமிழீழத்தில் உள்ள எத்தனையோ சைவ ஆலயங்கள் முஸ்லிம்களால் அழிக்கப்பட்டு அங்கு மாட்டு இறைச்சிக் கடைகளும், இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களும், இருப்பிடங்களும் கட்டப்பட்டன.
வடதமிழீழத்தில் முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியதை இனச்சுத்திகரிப்பு என்று கூறும் சுமந்திரனும், முஸ்லிம் தலைவர்களும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வரையறுக்கப்பட்ட நிலப்பகுதியை முற்றுமுழுதாக ஒரேயொரு இனம் மட்டும் வாழும் பகுதியாக மாற்றியமைப்பதை மட்டுமே இனச்சுத்திகரிப்பாக ஐக்கிய நாடுகள் மன்றத்தின் அதிகாரபூர்வ ஆவணங்கள் வரைவிலக்கணம் செய்கின்றன. வடதமிழீழத்தை விட்டு முஸ்லிம்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியது அம் மாநிலத்தை முற்றுமுழுதாகத் தமிழர்கள் வாழும் நிலப்பகுதியாக மாற்றியமைக்கும் நோக்கத்தோடு அன்று. இது சுமந்திரனுக்கும், ஏனைய முஸ்லிம் தலைவர்களுக்கும் நன்கு தெரியும். அவ்வாறு தமிழர்கள் மட்டும் வாழும் நிலப்பகுதியாக வடதமிழீழத்தை மாற்றும் எண்ணம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருந்திருந்தால், நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இதற்கு தமிழீழ தேசியத் தலைவர் வருத்தம் தெரிவித்திருக்க மாட்டார். பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் முஸ்லிம்களை மீளவும் வந்து குடியேறுமாறு அழைத்திருக்க மாட்டார்.
அதனைவிட வடதமிழீழத்தை விட்டு முஸ்லிம்களை 1990ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றிய பொழுதும், தமிழ்ப் பெண்களை மணம் முடித்திருந்த முஸ்லிம் ஆண்களும், தமிழ் ஆண்களை மணம் முடித்திருந்த முஸ்லிம் பெண்களும் அங்கு வாழ்வதற்கு அனுமதித்தார்கள்.
எனவே அனைத்துலக சட்ட விதிகளின் படி பார்ப்போமானால் முஸ்லிம்களை வடதமிழீழத்தை விட்டுத் தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேற்றியது ஒரு தற்காலிகப் பாதுகாப்பு ஏற்பாடே தவிர அது நிரந்தரமானதல்ல. எனவே அதனை இனச்சுத்திகரிப்பாகக் கருத முடியாது.
ஆனால் தென்தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது அவ்வாறு அல்ல. தென்தமிழீழத்தில் பல தமிழ் கிராமங்கள் அழிக்கப்பட்டு அவை முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளன. அதாவது தமிழர்கள் தமது பூர்வீக நிலங்களை விட்டு முஸ்லிம்களால் நிரந்தரமாக அடித்து விரட்டப்பட்டு அப்பகுதிகள் இனச்சுத்திகரிப்புக்கு ஆளாக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று தென்தமிழீழத்தில் முஸ்லிம் காடையர்களும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிகாத் ஒட்டுக்குழுவினரும் சிங்களப் படைகளுடன் இணைந்து திட்டமிட்டுத் தமிழர்களைப் படுகொலை செய்திருக்கின்றார்கள். ஒரு இனத்தை முழுமையாகவோ அன்றி பகுதியாகவே அழிக்கும் நோக்கத்துடன் அவ்வினத்தைச் சேர்ந்தோரைப் படுகொலை செய்வதை இனவழிப்பாக (இனப்படுகொலை) பன்னாட்டு சட்டமாக விளங்கும் இனவழிப்புச் சாசனம் வரையறை செய்கின்றது.
இவற்றை விட சிங்கள ஆயுதப் படைகளில் அங்கம் வகித்த கேணல் முத்தலீப், நிலாப்தீன் போன்ற முஸ்லிம் படையதிகாரிகளாலும், முஸ்லிம் படைச் சிப்பாய்களாலும் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டும், கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளக்கப்பட்டும் பல கொடுரங்களுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆக முஸ்லிம்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இழைத்த தவறு அவர்களை வடக்கில் இருந்து வெளியேற்றியது மட்டும்தான். ஆனால் தமிழ் மக்களை முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பிற்கும், இனவழிப்பிற்கும், பல்வேறு கொடூர மனித உரிமை மீறல்களுக்கும் உட்படுத்தியிருக்கின்றார்கள்.
எனவே மீண்டும் புண்ணைத் தோண்டி காயத்தை உருவாக்குவதை விடுத்து, முஸ்லிம்களால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்பிற்கும், இனவழிப்பிற்கும், கொடூர மனித உரிமை மீறல்களுக்கும் முஸ்லிம் தலைவர்களும், முஸ்லிம் சமூகப் பெரியவர்களும் உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும். இதுதான் கடந்த காலக் கசப்புணர்வுகளை மறந்து தமிழர்களும், முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் தமிழீழ மண்ணில் வாழ்வதற்கு வழிகோலும்.
தமிழர்களாகிய நாங்கள் முஸ்லிம்களை எமது எதிரிகளாகக் கருதியது கிடையாது. எமது சகோதரர்களாக, தமிழீழ தேசத்தின் இணைபிரியாக அங்கமாக, தமிழ் மொழியால் எம்மோடு ஒன்றித்தவர்களாகவே கருதுகின்றோம். முதலாவது இஸ்லாமியத் தமிழ் மறவன் லெப். ஜுனைதீன் தொடக்கம் 2009ஆம் ஆண்டு ஆனந்தபுரத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகைதீன் வரையான இஸ்லாமியத் தமிழ் வீரவேங்கைகளையும், யாழ்ப்பாணத்தில் இருந்து ஐந்து இலட்சம் தமிழர்கள் வெளியேற்றப்பட்டதால் கொதித்தெழுந்து தனக்குத் தானே தீமூட்டித் தமிழகத்தில் ஈகச்சாவைத் தழுவிக் கொண்ட அப்துல் ரவூப்பையும் நாங்கள் எங்கள் இதயங்கள் வைத்துப் பூசிக்கின்றோம். ஒவ்வொரு மாவீரர் நாளிலும் இந்த மாவீரர்களுக்கும் சேர்த்தே நாங்கள் சுடரேற்றி, கார்த்திகைப் பூக்களையும், கண்ணீரையும் சொரிந்து வணங்குகின்றோம்.
இதனை முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களப் பேரினவாதம் ஈழத்தீவை விட்டுத் தமிழர்களை மட்டுமன்றி முஸ்லிம்களையும் பூண்டோடு வேரறுப்பதையே தனது இலக்காகக் கொண்டுள்ளது. எனவே தமிழீழ தேசிய விடுதலைக்கான தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் என்பது தமிழ் மக்களுக்கானது மட்டுமன்றி முஸ்லிம் மக்களின் விடுதலைக்கானதுமே. இதனை முஸ்லிம் தலைவர்கள் புரிந்து கொள்கின்றார்களோ, இல்லையோ, முஸ்லிம் மக்கள் உணர வேண்டும்.
நன்றி
 
கலாநிதி சேரமான்
ஈழமுரசு
courtesy - eelamaravar