Sunday, 14 June 2020

செப் 1998 ஓயாத அலைகள் 2: கிளிநொச்சி கைப்பற்றப்பட்டது - 7

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 7

கொல்லர் புளியங்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த எமது முகாம் புதுக்குடியிருப்புக்கு மாற்றப்பட்டது. இயக்கத்தின் அனைத்துக் கட்டமைப்புகளும் புதுக்குடியிருப்பை மையப் படுத்தியே அமைக்கப்பட்டன.

இலங்கை இராணுவத்தினர் ஒருபோதும் புதுக்குடியிருப்பை நெருங்க மாட்டார்கள் என்ற ஒரு காரணமற்ற நம்பிக்கை, தலைவர் பிரபாகரன் உட்பட அனைத்துப் போராளிகளிடமும் இருந்தது.

இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தை இயக்கம் அதீத பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டிக் காத்து வந்தது.


1998இன் இறுதிப் பகுதியில் சுதந்திரப் பறவைகள்பத்திரிகையை வெளியிடும் பொறுப்பு தலைவரால் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

முன்னர் பல தடவைகள் இயக்கத்தின் தலைவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் பேசிய சந்தர்ப்பம் சுதந்திரப் பறவைகள் தொடர்பான சந்திப்பாகத்தான் அமைந்தது.

பத்திரிகையில் புதிய பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவருக்கு இருந்தது. பெண்களின் பிரச்சனைகளைப் பெண்களே வெளிக்கொணர வேண்டும்.

பெண்களைவிட ஆண்கள் அதிகம் சிறப்பாகப் பெண் விடுதலை பற்றிப் பேசுவார்கள், ஏன் நான்கூட உங்களை விடவும் நன்றாகப் பெண்ணியம் பேசுவேன். ஆனால் உங்களின் பிரச்சனைகளை என்னால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. எந்த ஆண்களாலுமே பெண்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் சரிவரப் புரிந்துகொள்ள முடியாது.



பெண்களின் பிரச்சனைகளைப் பெண்கள்தான் பேச வேண்டும், எழுத வேண்டும். அப்போதுதான் அது உண்மையானதாக இருக்கும். ஆகவே சுதந்திரப் பறவையில் பெண்கள் அதிக அளவில் எழுத வேண்டும். எழுத்தாற்றல் உள்ள பெண் போராளிகளை இனங்கண்டு எழுத்துப் பயிற்சிகள், கலந்துரையாடல்கள் நிகழ்த்த வேண்டும்எனக் குறிப்பிட்டார்.

அரசியல்துறையின் பொறுப்பில் மாலதி பதிப்பகம்என்ற அச்சுக்கூடம் இருந்தது. அங்கேதான் விடுதலைப் புலிகள் பத்திரிகையும் அச்சிடப்பட்டது.

கணினியோ, ‘ஓப்செட் பிரிண்ட்வசதிகளோ வன்னியில் இல்லாத காலத்தில், ஒவ்வொரு எழுத்தாக அச்சுக் கோத்து, படங்களைப் புளக் செய்து பத்திரிகை வெளியிடுவது பற்றாக்குறைகள் நிறைந்த காலத்தில் பணியாக இருந்தது.

பத்திரிகைகளை அச்சுப் பதிப்பதற்காகப் பாவிக்கப்படும் தாள் தடைசெய்யப்பட்டிருந்த காரணத்தால், அரசியல்துறை மூலமாகவே எமக்குத் தேவையான தாள்களைப் பெற்றுக்கொண்டோம்.

கல்விக் குழு, சுதந்திரப் பறவைகள், அரசியல் விஞ்ஞானப் பிரிவு ஆகிய மூன்று மகளிர் பிரிவுகளின் நிர்வாகப் பணிகளுடன் பிரதேச பரப்புரை வேலைகளிலும் நான் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.

கிழக்கு மாகாணப் போராளிகள் ஜெயசிக்குறு களமுனைக்காக அடர்ந்த காடுகளுக்கூடாகப் பல இடர்ப்பாடுகளையும் இராணுவத்துடனான மோதல்களையும் சந்தித்து, பல மாதக் கணக்காக நீண்ட தூரம் நடந்து பயணித்து வன்னிக்கு வந்து சேர்ந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை வன்னியிலிருந்தும் சில தேவைகளுக்காக அணிகள் கிழக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

1998இன் இறுதி அல்லது 1999 ஆரம்ப காலமாகவோ இருக்க வேண்டும்.
இந்த அணி புறப்பட்டுச் சென்ற ஒரு மாத காலத்தின் பின்னர் ஒரு பயங்கரமான செய்தி வந்திருந்தது.

அந்த அணியினர் சென்றுகொண்டிருந்த பயணத்தின் இடை நடுவில் கொலராஎன்கிற கொடிய வாந்திபேதி நோயினால் அவர்களில் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் பலர் நோயின் தாக்கத்தினால் உயிரிழந்து விட்டதாகவும் எஞ்சியவர்கள் அனைவருமே மோசமான பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாகவும், அவர்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவ தாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் செய்தி வந்த ஓரிரு நாட்களின் பின் நள்ளிரவுக்குப் பின்னரான பொழுதில் அவசரமாக முல்லைத்தீவுக் கடற்கரைக்கு வரும்படி அழைக்கப்பட்டிருந்தோம்.
நானும் வேறு சில பெண் போராளிகளுமாக அங்குச் சென்றபோது, கடற்புலிகள் உயிரிழந்த நிலையிலும், உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நிலையிலும் தளபதி கீரனுடன் மட்டக்களப்புக்குச் சென்ற போராளிகளில் எஞ்சியவர்களைக் கொண்டுவந்து சேர்த்திருந்தனர்.

அவர்களது உடல்களை ஏற்கனவே அங்குத் தயாராகக் காத்திருந்த வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றனர்.

எனக்கு மிகவும் அறிமுகமான நிரோஜினி என்ற போராளி கொலராவினால் உயிரிழந்து காட்டுப் பாதையிலேயே புதைக்கப்பட்டுவிட்டதாகக் கேள்விப்பட்டேன்.

சுதர்சினி என்கிற இன்னுமொரு போராளி கடுமையான பாதிப்படைந்த நிலைமையில் உயிரற்ற சடலம் போலக் கண்மூடிக் கிடந்தார்.

அதே நிலையில்தான் ஏனையவர்களும் இருந்தனர். அதுவரையிலும் உயிர் ஊசலாடிக்கொண் டிருந்த கீரன். முல்லைத்தீவுக் கரையை வந்தடைந்த பின்னர் உயிரிழந்துவிட்டிருந்தார்.

மோசமான நிலைமையிலிருந்தவர் களுக்குச் சிகிச்சையளிப்பதற்காகத் தனியிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தீவிர மருத்துவச் சிகிச்சையின் மூலம் அவர்கள் முழுமையாகக் குணமடைவதற்கு ஒரு மாதத்திற்கும் அதிகமான காலம் சென்றது.

ஆனாலும் அவர்கள் முழுமையான சுகதேகிகளாவதற்குப் பல மாதங்கள் சென்றன. அவர்கள் குணமடையத் தொடங்கிய பின்னரே அவர்களுக்குக் கொலரா நோய்த் தாக்கம் ஏற்பட்டதற்கான காரணத்தை ஆராய முனைந்தோம்.

இந்த அணியினர் சென்றுகொண்டிருந்த பாதையில் இராணுவத்தினருடனான தொடர்ந்த மோதல்களினால் அதிகமான நாட்கள் மறைவிடங்களில் தங்க நேரிட்ட தாகவும், தாங்கள் எடுத்துச் சென்ற உணவுப் பொருட்கள் முடிவடைந்துவிட்ட காரணத்தால்…..,

ஏற்கனவே அங்குத் தங்கிச்சென்ற அணியினரால் பதப்படுத்தப்பட்ட நிலையில்

மரங்களிலே மறைத்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த எருமை இறைச்சி வத்தளை சமைக்காமல் உன்ன நேர்ந்ததாகவும், அக்காட்டுப் பகுதியில் குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரையே குடிக்க நேர்ந்ததாகவும் அதன் பின்னரே தமக்கு தொடர்ந்து வயிற்ரோட்டமும் வாந்தியும் ஏற்பட்டதாகவும் உயிர்தப்பிய போராளிகள் தாங்கள் அனுபவித்த பயங்கர அனுபவங்களை கூறினார்கள்.

தம்முடன் இருந்த ஒவ்வொரு போராளியாக உயிரிழந்து கொண்டு இருந்தபோது அவர்களில் சிலரை மட்டுமே புதைக்க முடிந்ததாகவும், அனைவரும் நோய்வாய்ப்பட்டு நலிவடைந்த பின்னர் உயிரிழந்தவர் உடலை அப்படியே காட்டுக்குள் கைவிட்டு வந்ததாகவும் கூறினார்.

பயங்கர அனுபவமாக இருந்தது. அதன் பின்னர் வன்னி மக்களிடமும் கொலரா என்ற வாந்தி பேதி ஏற்படத் தொடங்கியது. ஆங்காங்கே ஒருசிலரிடம் அந்த நோய்க்கான அறிகுறி தென்படத் தொடங்கிய உடனே மருத்துவர்கள் விழிப்படைந்து விட்டனர்.
ஒருபுறம் உக்கிரமான போருக்கும் மறுபுறம் வறுமை போஷாக்கின்மை போன்ற இடர்களுக்கும் இடையே மக்கள் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த வேளையில் கொலரா என்னும் பயங்கர உயிர்க்கொல்லி நோய் பரவத் தொடங்கியதால் எத்தையதொரு பேரனர்த்தம் ஏற்படும் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியாதிருந்தது.

தலைவரின் பணிப்பின் பேரில் அரசியல் துறையினரும் மருத்துவ துறையினரும் இணைந்து மிகத் தீவிரமாக பணியாற்ற தொடங்கினோம்.

விழிப்புணர்வு வேலைத் திட்டமும், நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கான சிகிச்சை யளித்தலும் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டன.

அனைத்துப் பிரதேசங்களிலும் பல அணிகளாகப் பிரிந்து ஓய்வொழிச்சல் இன்றிக் கண்ணயராது செயற்படத் தொடங்கினோம்.

கொலரா வாந்திபேதிக்கான அறிகுறிகள் பற்றியதும், அதன் பாதிப்புகள் பற்றியதுமான விளக்கம் ஒலி பெருக்கிகள் மூலமாகவும், ஈழநாதம் பத்திரிகை, புலிகளின் குரல் வானொலி என்பவற்றுக்கூடாகவும், விசேட துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் மக்களுக்கு அதிவேகமாக எடுத்துச் சொல்லப்பட்டது.

மக்களும் எமது தடுப்பு நடவடிக்கைகளில் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். கொலரா நோய் அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டிருந்த ஒவ்வொருவரையும் கிராமத்தவர்களே முன்வந்து அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த மருத்துவ ஏற்பாட்டிடங்களுக்குக் கொண்டு சென்று சேர்த்தனர்.

வன்னியில் தொடர்ச்சியாக மலேரியா காய்ச்சலும் மக்களை மூர்க்கமாகத் தாக்கிக்கொண்டிருந்தது. மக்களும் போராளிகளும் இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர்.

குளொரோ குயீன், பிறீமா குயின், தாரா பிறீம்என அதற்கான மாத்திரைகளின் பெயரைக் கேட்டாலே வாந்தி ஏற்படும் உணர்வு ஏற்படும்.
ஆறு மாதத்திற்கொரு தடவை என்னையும் பீடித்த மலேரியா காய்ச்சலால் நானும் மிகுந்த உடல் வேதனைப்பட்டேன்.

இயக்கத் தின் மருத்துவப் பிரிவினர் தொடர்ச்சியாக மலேரியா தடுப்பு மாத்திரைகளை விநியோகித்து வந்த காரணத்தால் சற்றுக் காலத்தின் பின்னர் வன்னியில் மலேரியா நோய்த் தாக்கம் இல்லாமல் போனது.

1998.08.13 அன்றைய தினத்தில் சுதந்திரப் பறவை பத்திரிகைக்கான களமுனைக் கட்டுரை ஒன்றுக்காகத் தகவல்களைத் திரட்டுவதற்காகக் கிளிநொச்சிப் பகுதியின் களமுனைத் தளபதி தீபனைச் சந்திப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தேன்.

யுத்தக் களத்தை அண்மித்திருந்த திருவையாறு பகுதியில் அவருடைய கட்டளை மையம் அமைந்திருந்தது.

முதல் நாளிரவு கோணாவில் பகுதியில் இராணுவத்தினருடன் மோதல் ஒன்று நிகழ்ந்திருந்தது எனக்குத் தெரியும். ஆனால் ஒருத்தி என்னைக் கண்டதும் ஓடிவந்து எனது கையைப் பற்றிக்கொண்டு சொன்ன செய்தி எனக்குள் நெருப்புப் போல இறங்கியது.

'' தமிழினி எங்கட சந்தியா நேற்றிரவு கிளிநொச்சி கோணாவில் பகுதியில் நடந்த சண்டையில் தலையில் காயம் பட்டு உயிரிழந்து விட்டால் '' என்று கூறினாள்.

தொடர்ந்து கொண்டிருந்த கொடிய உத்தத்தில் நானோ என் தங்கையோ அல்லது இருவருமோ உயிரிழந்து விடுவோம் என்பது நிதர்சனமாயிருந்த போதிலும் என்மீது கொண்டிருந்த அளவற்ற அன்பின் காரணமாக என்னைப் பின்பற்றி இயக்கத்தில் இணைந்து கொண்ட என் தங்கை எனக்கு முன்னராகவே களத்தில் உயிரிழந்து போனால் என்ற செய்தி என் இதயத்தை அறுத்துச் சாய்ப்பது போல இருந்தது.

1975-07-09 ல் பிறந்தவள் எனது தங்கை நாகேஸ்வரி கெளரி சுப்ரமணியம். நான் படித்த அதே பாட சாலையில் படித்திருந்தாள்.

1992ல் இயக்கத்தில் இணைந்து என்னுடன் ஒரே பயிற்சி முகாமில் ஆயுதப் பயிற்சி எடுத்ததன் பின் சிறுத்தை படையணி உள்வாங்கப்பட்டிருந்தாள்.

அவளது சிவந்த மெல்லிய அழகிய தோற்றத்தை பார்த்தவர்கள் இவ உன்ர தங்கச்சியா '' என்று ஆச்சரியப்பட்டு கேட்பார்கள் .

குடும்பத்தினரில் அளவற்ற பாசமும் குறும்புத்தனங்களும் துணிச்சலும் நிரம்பியவள். அழகான கையெழுத்தில் கவிதைகள் எழுதுவாள்/ ஓவியம் வரைவாள். 1997 காலப் பகுதியில் நானும் என் தங்கையும் ஒரே சமயத்தில் மூன்றுநாள் விடுமுறையில் வீட்டுக்கு சென்றிருந்தோம்.

சிறு வயதிலிருந்தே அடிக்கடி சண்டை போட்டுக்கொள்ளும் நாங்களிருவரும் அப்போதும் சண்டை போட்டுக்கொண்டோம்.

என்னைப் போல எந்த நேரமும் புத்தகத்துடன் பொழுது போக்காமல் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகள் எல்லாம் செய்வாள். உறவினர்களின் வீடுகளுக்குப் போய் வருவாள்.

தமிழினியின் பெற்றோர்
நான் கெதியிலை, அப்பாவுடன் போயிடுவன். நீ அம்மாவைப் பாத்துக்கொள்எனச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

நான் வழக்கம்போல இரண்டு குத்துக் கொடுத்துவிட்டுப் பைத்தியம் மாதிரி அலட்டாதேஎனக் கடிந்துகொண்டேன்.

அப்போது எனது தாயாரும் சகோதரர்களும் விசுவமடு பிரதேசத்தில் இளங்கோபுரம் என்னும் கிராமத்தில் எமக்கிருந்த காணியொன்றில் வசித்துவந்தனர். குடும்பத்தில் கடும் வறுமை நிலவியிருந்தது.

எனது மூன்றாவது தங்கை திருமணம் முடித்திருந்தாள். தம்பி படிப்பை இடையில் நிறுத்திவிட்டுக் கடையொன்றில் வேலைக்குப் போய்க்கொண்டிருந்தான். ஏனைய தங்கைகள் படித்துக்கொண்டிருந்தனர்.

அம்மா வீட்டைச் சுற்றிச் சிறிய தோட்டமொன்றினைப் பயிரிட்டிருந்தார்.
தங்கையின் இழப்பு குடும்பத்தவர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
தொடர்ந்துகொண்டிருந்த போரில் எனக்கும் ஏதாவது நேரிட்டு விடுமென அம்மா அதிகமாகப் பயந்தார்.

தங்கையின் இறுதி நிகழ்வுகள் முடிந்த கையோடு எனது முகாமுக்குச் செல்ல நான் புறப்பட்டபோது என்னை கட்டியணைத்தபடிஇனிக்காணும் இயக்கத்திலிருந்து விலத்தி வந்துவிடம்மாஎனக் கதறியழுதார்.

என்னை நம்பி இயக்கத்தில் பல வேலைகள் தரப்பட்டிருந்தன. அத்துடன் எனது அன்புக்குரிய பல போராளிகள் உயிரிழந்து விட்டிருந்தனர்.

அம்மாவின் முகத்தை நிமிர்ந்து பார்ப்பதற்கான திராணி என் மனதிற்கு அக்கணத்தில் இருக்கவில்லை. மௌனமாகத் தலையைக் குனிந்தபடி அம்மாவின் கைகளை விலக்கிக்கொண்டு நெஞ்சில் நிறைந்த சுமையோடு எனது முகாமைச் சென்றடைந்தேன்.

1997-98இல் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்காக இரண்டுக்கும் மேற்பட்ட தடவைகள் புலிகள் இயக்கம் மிகப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது.

இம்முயற்சிகளில் கரும்புலிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான போராளிகள் உயிரிழந்திருந்தனர். மூன்றாவது தடவையாக 1998 செப்டெம்பர் மாதம் ஓயாத அலைகள்-02′ நடவடிக்கை மூலம் கிளிநொச்சியைப் புலிகள் கைப்பற்றிருந்தனர்.


இந்தச் சண்டை மூன்று நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றது. முதல்நாள் புலிகளின் தாக்குதல் அணிகளால் கைப்பற்றப்பட்டிருந்த இடங்கள் இரண்டாவது நாள் மீண்டும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது.

அப்போது தலைவருடைய பிரதான கட்டளை மையத்தில் நின்றிருந்த தமிழ்ச்செல்வனிடம் ஒரு முக்கியமான பணியைத் தலைவர் கொடுத்திருந்தாராம்.
அது என்னவெனில், தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தளபதிகளின் மனநிலை எவ்வாறு அமைந்துள்ளது என்பதை அறிந்து வருவதாகும்.

தமிழினி
தொடரும்..
நன்றி : இணையதளம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.