Thursday 11 June 2020

இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்;- பாகம் 7 to 9


ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 7)

இந்திய-இலங்கை ஒப்பந்தம், ஈழ விடுதலை இயக்கங்கள் உரிமை கோரிய வடக்கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்தது. மாகாண சபைகள் அமைத்து, அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது என்றும் சம்மதிக்கப்பட்டது. சிங்களப் பகுதி மாகாணங்களுக்கும் அதிகாரப் பரவலாக்கல் சென்றதை, அன்று சில தமிழ் இனவாதிகளால் ஜீரணிக்க முடியவில்லை. முரண்நகையாக, தமிழர்களின் பிரச்சினை தீர்க்கவென கொண்டு வரப்பட்ட மாகாண சபை, இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தினால் வட- கிழக்கில் செயற்படாமல் முடங்கியது. 


இந்தியாவின் திட்டம் நிறைவேறியிருந்தால், வட-கிழக்கு மாகாணம் தனியான போலிஸ், துணைப் படையுடன் சுயாட்சிப் பிரதேசமாக இருந்திருக்கும். ஆனால் இந்தியா தான் விரும்பிய பொம்மை அரசொன்றை நிறுவ முயன்றது. இதற்கு முதற்படியாக "ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி" என்ற பெயரில் ஆயுதக் குழுவொன்றை அமைத்திருந்தது. இந்த புதிய அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு பின்னணியைக் கொண்டவர்கள்.

முன்பு புலிகளால் ஈழத்தில் இயங்க விடாது தடை செய்யப்பட்ட புளொட், ஈபிஆர்எல்எப், டெலோ ஆகிய அமைப்புகளில் இருந்து விலகிய உறுப்பினர்கள். தமிழக முகாம்களில் அடைந்து கிடந்த அகதிகள். இத்தகையோரை சேர்த்து தான் அந்த இந்திய சார்பு அமைப்பு தோன்றியது. பரந்தனிலும், கிளிநொச்சியிலும் நகரையொட்டி நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தின் முகாம்களுக்கு அருகில், ஈஎன்டிஎல்ப் முகாம்கள் அமைந்திருந்தன. அவர்கள் பகிரங்கமாக ஆயுதங்களுடன் காவல் காப்பதை வீதியால் செல்லும் அனைவரும் காணக் கூடியதாக இருந்தது. மாகாண சபையின் தலைமையை, அரசியல் ரீதியாக பலம்பெற்ற ஈ.பி.ஆர்.எல்.எப். பிடம் ஒப்படைக்கவே விரும்பினர். ஆயுதபாணிகளான ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள், இந்திய இராணுவம் முகாமிட்டிருந்த இடங்களில் தங்க வைக்கப் பட்டனர்.

ஒரு முறை யாழ் நகரில், ஈபிஆர்எல்எப் தலைவர் பத்மநாபாவின் பொதுக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு வழமையாக செல்லும் நபர்களை விட, எண்ணிக்கை அதிகமாக்கிக் காட்ட நினைத்தார்கள் போலும். யாழ் நகர் நோக்கிச் சென்ற பேரூந்து வண்டிகளை கூட்டம் நடை பெற்ற இடத்திற்கு திசை திருப்பி விட்டார்கள். எதிர்பாராத விதமாக அகப்பட்டுக் கொண்ட பயணிகள், கூட்டம் முடிவடைந்த பிறகு தான் தத்தமது இடம் நோக்கி செல்ல முடிந்தது. இந்திய அமைதிப் படையினர், இரவிலும் பகலிலும் வீதிகளில் ரோந்து செல்வது வழக்கம். அவர்களுடன் இந்தியாவிலிருந்து வந்த ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களும் கூடச் செல்வார்கள். முன்பு யாழ் குடாநாட்டில் இயங்கிக் கொண்டிருந்த காலத்தில் அந்த அமைப்பில் ஏராளமான உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் இப்போது அரசியலை விட்டொதுங்கி தமது குடும்பத்தை கவனித்துக் கொண்டிருந்தனர். இந்தியப் படையுடன் ரோந்து செல்லும் ஈபிஆர்எல்ப் ஆயுதபாணிகள், முன்னாள் தோழர்களையும் கண்டு பேசி கூட்டிச் சென்றனர். மீண்டும் அமைப்புடன் இணைந்து கொண்டவர்களுக்கு, இந்திய இராணுவம் ஆயுதங்களை வழங்கியது.

ஈஎன்டிஎல்ப், ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடுவதை, புலிகள் தமக்கு வந்துள்ள அச்சுறுத்தலாக கருதினார்கள். ஒப்பந்தத்தை ஏற்று ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதால், நிராயுதபாணிகளான தாங்கள் இலக்கு வைக்கப்படுவோம் என்று அஞ்சினார்கள். அவர்களது அச்சத்தை மெய்ப்பிப்பது போல, சில இடங்களில் தெருவில் கண்ட புலி உறுப்பினர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப் பட்டது. தாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரும், சில குழுக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது குறித்து புலிகள் முறைப்பாடு செய்திருந்தனர். ஆயினும் அந்த முறைப்பாடுகளை இந்திய அமைதிப் படை புறக்கணித்தது. ஒரு நாளிரவு, பரந்தனிலும், கிளிநொச்சியிலும் ஈஎன்டிஎல்ப் முகாம்கள் மீது, இந்திய இராணுவம் திடீர்த் தாக்குதல் நடத்தியது. சிலர் காயமடைந்த தாக்குதலில், ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது. இந்தியப் படை தனதருகில் ஒரே வேலியைப் பகிர்ந்து கொண்ட ஈஎன்டிஎல்ப் முகாமை தாக்கியது, அன்றைய சிறந்த நகைச்சுவை. அந்த நாடகம் நடந்து ஒரு சில நாட்களின் பின்னர், மீண்டும் அதே இடத்தில் ஈஎன்டிஎல்ப் உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் காட்சி தந்தனர்.


இராணுவ முகாம்களை தாண்டி செல்லும் வாகனங்களை இந்தியப் படையினர் சோதனையிட்டனர். பயணிகளை இறக்கி விட்டு, ஆயுதங்கள் கடத்தபடுகின்றதா என்பதை ஆராய்ந்தனர். இந்தியப் படை வரும் வரையில் யாழ் குடாநாட்டை கட்டுப் பாட்டில் வைத்திருந்த புலிகள், தமது ஆயுதங்களை நிலத்தை தோண்டி ஒளித்து வைத்திருந்தனர். "ஆயுதங்களை ஒப்படைத்தது தவறு" என்று பொருள் படும் சுவரொட்டிகள் பொது மக்களின் பெயரில் புலிகளால் ஓட்டப் பட்டன. புலிகளின் முக்கிய பொறுப்பாளர்கள் சென்ற வாகனங்களில் இயந்திரத் துப்பாக்கிகள் மறைத்து வைக்கப் பட்டிருந்ததாக நேரில் கண்ட சிலர் கூறினார்கள். அமைதிப் படை நிலை கொண்டிருந்ததாலும், சமாதானம் நிலவியதாலும் யாரும் ஆயுதங்களை பிரயோகிக்க தயங்கினார்கள். இதே நேரம், இரகசியமாக சில கொலைகள் நடப்பதாக மக்கள் பேசிக் கொண்டனர்.

இலங்கையில் வந்திறங்கிய இந்தியப் படையினர் சிலருக்கு, தாங்கள் எந்த நாட்டில் நிற்கிறோம் என்று தெரிந்திருக்கவில்லை. கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த படையினர், தாம் பாகிஸ்தானில் வந்திறங்கியதாக நினைத்தனர். கிழக்கு மாகாணத்தில் கணிசமான அளவு முஸ்லிம்கள் வாழ்ந்ததும், இந்திய இராணுவ சிப்பாய்களில் பெரும்பான்மையானோர் இந்துக்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. தமிழ்-முஸ்லிம் கிராமங்களுக்கு இடையிலான முரண்பாட்டில், இந்திய இராணுவம் தமிழ் (இந்துக்கள்) பக்கம் சார்ந்து நின்றது. இதனால் முஸ்லிம்கள் மத்தியில் இந்திய இராணுவம் மீது அதிருப்தி தோன்றியது.

திருகோணமலையில் இந்திய இராணுவம் வன்முறைக்கு உதவியமை தெளிவாகத் தெரிந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம், தென்னிலங்கையில் "பூசா" முகாமில் சிறை வைக்கப் பட்டிருந்த தமிழ்க் கைதிகள் விடுதலையாகி ஊர் திரும்பினார்கள். திருகோணமலையை சேர்ந்த முன்னாள் பூசா கைதிகள், இந்திய இராணுவத்தின் உதவியுடன், திருகோணமலை வாழ் சிங்களவர்கள் மீது தாக்குதல் தொடுத்தனர். பல சிங்கள குடியேற்றங்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால், சிங்கள மக்கள் இடம்பெயர்ந்தனர். மீண்டும் ஒரு இனக்கலவரத்தை தடுக்கும் நோக்குடன், சிறிலங்கா அரசு அந்த செய்திகளை இருட்டடிப்பு செய்தது. இன்று வரை, திருகோணமலை அசம்பாவிதங்கள் சிங்கள மக்களுக்கு மறைக்கப் பட்டே வந்துள்ளன.

சிறிலங்கா அரசு, புலிகளின் திருகோணமலைப் பொறுப்பாளரான புலேந்திரன் மேல் இலக்கு வைத்திருந்தது. ஈழப்போர் ஆரம்பமாகிய காலங்களில், திருகோணமலை சிங்களப் பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக புலேந்திரன் முக்கிய சந்தேக நபராக கருதப்பட்டார். தற்செயலாக புலிகளின் தலைவர்களான, புலேந்திரன், குமரப்பா சென்ற படகு வட இலங்கைக் கடலில் தடுத்து நிறுத்தப் பட்டது. சிறிலங்கா கடற்படையானது, அவர்களை கைது செய்து, பலாலி இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றது. மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லவிருந்த வேளை, சயனைட் நஞ்சை உட்கொண்டு மாண்டனர். சிறையிலிருந்த அவர்களை பார்வையிடச் சென்ற அன்டன் பாலசிங்கம் போன்றோரே சயனைட் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப் பட்டது. புலித் தலைவர்கள் கொழும்பு கொண்டு செல்லப் படுவதை, இந்திய இராணுவம் விரும்பவில்லை. இருப்பினும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை மாற்ற முடியவில்லை.

அதற்கு முன்னர், வட-கிழக்கு மாகான சபையில் புலிகளின் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க இந்திய இராணுவம் முன் வந்தது. திரை மறைவில் பேரம் பேசல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் கசிந்தன. ஆனால் எதுவுமே நடைமுறையில் வந்ததாகத் தெரியவில்லை. புலிகளின் கோரிக்கைகளை முன்வைத்து, அந்த இயக்கத்தின் முக்கிய தலைவர் திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். இந்திய அமைதிப் படை, திலீபனின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள தயக்கம் காட்டியது. இறுதியாக நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் மரணமடைந்த திலீபனின் பூதவுடல், யாழ் குடாநாடு முழுவதும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. திலீபனின் சாத்வீக போராட்டத்தினால் கவரப்பட்ட பொது மக்கள், பெருமளவில் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அஹிம்சா வழிப் போராட்டத்தினால் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் மக்களின் ஆதரவு இருந்தது. ஆனால் திலீபனுக்கு பிறகு யாரும் உண்ணாவிரதம் இருக்கவில்லை. புலிகளின் தலைமைப் பீடம் மீண்டும் ஒரு போருக்கு தயாராவதை மக்கள் உணர்ந்து கொண்டனர்.

குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் கைது நடவடிக்கையால், போர் நிறுத்தத்தை முறித்துக் கொள்வதாக புலிகள் அறிவித்தனர். கிழக்கு மாகாணத்தில் வீதியில் ரோந்து சென்ற படையினர் மீது நிலக்கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப் பட்டது. இந்திய, இலங்கைப் படையினர் அடுத்தடுத்து சென்ற போதிலும்; சிங்களப் படையினர் சென்ற பார ஊர்தி கண்ணி வெடிக்கு இலக்காகியது. புலிகள் மீண்டும் ஆயுதம் ஏந்தி விட்டதை புரிந்து கொண்ட இந்திய இராணுவம், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. அக்டோபர் மாதம் வழமையான ரோந்துப் பணிகளை முடித்துக் கொண்டு, யாழ் கோட்டை முகாமுக்கு திரும்பிய இந்தியப் படையினரின் வாகனம் தாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆயுதமேந்திய புலி உறுப்பினர்கள், யாழ் கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர் என்பது தெரிய வந்தது.


யாழ் கோட்டை மட்டுமல்ல, யாழ் குடாநாட்டில் இருந்த இராணுவ முகாம்கள் யாவும் முற்றுகையிடப் பட்டன. எதிர்பாராத முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்ட இந்திய இராணுவம், கண்மூடித் தனமான ஷெல் தாக்குதல் நடத்தியது. முகாம்களுக்கு அருகில் இருந்த புலிகளின் காவலரண்கள் மட்டுமல்லாது, குடியிருப்புகளும் ஷெல் வீச்சுக்கு இலக்காகின. மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம் பெயர்ந்தனர். இரண்டு மாத சமாதானத்தின் பின்னர், மீண்டும் யுத்தம் தொடங்கி விட்டதை மக்கள் உணர்ந்து கொண்டனர். இம்முறை, இந்தியப் படையினரின் தாக்குதல்கள், சிறிலங்காப் படையினரை விட மிகவும் ஆக்ரோஷமாக அமைந்ததிருந்தது. யாழ் குடாநாட்டு மக்கள், மாபெரும் மனிதப் பேரழிவை எதிர்நோக்கிக் காத்திருந்தார்கள்.


(தொடரும்...)


ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 8)


இந்திய இராணுவத்துடன் யுத்தம். பலரால் நம்ப முடியாமல் இருந்தது. கோட்டை முகாமில் இருந்து யாழ் நகரை நோக்கி, சரமாரியான எறிகணை வீச்சுகள் நடந்தன. இதனால் யாழ் நகருக்கு வேலைக்கு சென்ற அனைவரும், நேரத்தோடு வீடு திரும்பினார்கள். என்ன நடக்கின்றது என்று அவர்களால் ஊகிக்க முடியவில்லை. யாழ் நகர வீதிகள் எங்கும் புலி உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் நடமாடினார்கள். சில மாதங்களுக்கு முன்னர் நடந்த யுத்தம் நினைவுக்கு வந்தது. இப்போதும் இலங்கை இராணுவமே மோதுவதாக நினைத்தனர். ஆனாலும், அவர்கள் எப்படி திரும்ப வந்தார்கள்? எல்லோர் மனதிலும் குழப்பம். ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை முறித்துக் கொண்ட புலிகளும், ஆரம்பத்தில் சிங்கள இராணுவத்தையே குறி வைத்து தாக்கினார்கள். கிழக்கு மாகாணத்தில் நடந்த கண்ணி வெடிச் சம்பவத்தில், இந்தியப் படையின் டிரக் வண்டிக்கு பின்னால் சென்ற, சிறிலங்கா படையினரின் வாகனமே தாக்கப்பட்டது.

இந்திய அமைதிப் படையும், தமிழர்களுக்கு சாதகமாகத் தான் நடந்து கொண்டது. உதாரணத்திற்கு திருகோணமலையை ஈழ சுயாட்சிப் பிரதேசத்தின் தலைநகரமாக்குவதற்கு இந்திய இராணுவம் ஒத்துழைப்பு வழங்கியது. வருங்கால மாகாண சபையும் அங்கேயிருந்து இயங்கவிருந்தது. அதற்கு முதல் படியாக, அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களை அப்புறப் படுத்த உதவியது. அத்தகைய சம்பவத்தை, அதற்கு முன்னரும், பிறகும் இலங்கை வரலாற்றில் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. 

சிங்களப் பேரினவாத அரசு, தென்னிலங்கையில் சிறை வைக்கப்பட்ட சிங்கள குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, தமிழர் பகுதியில் குடியேற அனுப்பி வைத்தது. பாரம்பரிய தமிழர்களின் நிலங்களை அபகரித்து, தங்கள் குடும்பத்தை தருவித்து குடியேறினார்கள். 1983 கலவரத்திற்கு முன்னரே, திருகோணமலை கலவரப் பூமியாக காட்சியளித்தது. கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் காடையர்களுக்கு போலிஸ் பாதுகாப்பும் கிடைத்து வந்தது. இந்திய இராணுவத்தின் வருகையுடன் நிலைமை தலைகீழாக மாறியது. திருகோணமலை நகரிலும், அதைச் சுற்றிய பகுதிகளிலும் குடியேறிய சிங்களவர்களை விரட்டியடித்த தமிழ் இளைஞர்களுக்கு கிரேனேட் விநியோகம் செய்தது. முன்னர், சிங்களக் குடியேறிகளால் பாதிக்கப் பட்டு, பூசா சிறையில் அடைத்து வைக்கப்பட்டு விடுதலையானவர்கள் பழி தீர்க்க கிடைத்த சந்தர்ப்பமாக கருதினார்கள்.

கிழக்கு மாகாணத்திற்கென தனித்துவமான பிரச்சினைகளை புரிந்து கொள்ளாமல், இலங்கையின் இனப்பிரச்சினையை புரிந்து கொள்ள முடியாது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்று மூவின மக்கள், இன அடிப்படையில் பிளவுண்டு மோதிக் கொள்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வுகளாகும். சிறிலங்கா அரசு, சிங்கள, முஸ்லிம் கிராமங்களில் ஊர்காவல் படை அமைத்து, ஆயுதங்களைக் கொடுத்திருந்தது. (இந்தியா, ஒரிசாவில் உள்ள "சல்வா ஜூடும்" போன்றது.) சிறிலங்கா இராணுவத்துடனான யுத்தம் நடைபெற்ற காலங்களில், ஊர்காவல் படைகளால் பல தமிழ்க் கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், தமிழ் ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டிருந்தது. இதனால் பெருமளவில் முஸ்லிம் கிராமங்களும், சிறிதளவு சிங்களக் கிராமங்களும் பாதிக்கப்பட்டன. இலங்கையின் இனப்பிரச்சினையை, இந்தியாவும் எளிமையாக புரிந்து கொண்டதையே இது எடுத்துக் காட்டுகின்றது. இயற்கை வளம் நிறைந்த கிழக்கு மாகாணத்தில், இனங்களிடையே பகை முரண்பாடுகளை சிறிலங்கா அரசு, திட்டமிட்டு வளர்த்திருந்தது.

இனப்பிரச்சினைப் புயல் கிழக்கில் மையங் கொண்ட போதிலும், போர் மேகங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. ஒரு சிறிய நிலப்பகுதியைத் தவிர, நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டுள்ள, யாழ் குடாநாட்டின் பூகோள அமைவிடம் எப்போதும் இராணுவத்திற்கு சாதகமாக அமைந்திருக்கவில்லை. இராணுவ முகாம்கள் அனேகமாக கடற்கரைப் பகுதியை ஒட்டியே இருந்ததால், அவற்றை முற்றுகையிடுவது போராளிகளுக்கு இலகுவாக இருந்தது. சிங்கள இராணுவம் நிலை கொண்டிருந்த காலங்களில், சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு சூனியப் பிரதேசம் இருக்கும். மயான பூமியாக காட்சி தரும் அந்த இடத்திற்கு அருகில் செல்லக் கூட, மக்கள் அஞ்சுவார்கள். சமாதான காலத்தில், இந்தியப் படையினர் முகாம் அருகாமையில் செல்லும் வீதிகள் பொது மக்கள் போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டன.

எமது உறவினர்கள் சிலர், காங்கேசன்துறை முகாம் அருகில் மீள்குடியேற்றத்திற்காக சென்றிருந்தனர். அவர்களின் வீட்டிற்கு செல்லும் வழியில், முகாமின் மத்தியில் இருந்த மைதானத்தில் ஆர்ட்டிலறி பீரங்கிகள் துருத்திக் கொண்டு நின்றன. முன்பு சிறிலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் விழுந்து வெடிக்கும் ஓசையை மட்டும் கேட்டு வந்தோம். எறிகணைகளை ஏவும் ஆர்ட்டிலறிகளை அப்போது தான் நேரில் பார்த்தோம். இன்னும் சில வாரங்களில், இந்திய இராணுவம் இதே ஆர்ட்டிலரிகளை பயன்படுத்தி பொது மக்களின் குடியிருப்புகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் என்று, அப்போது யாரும் நினைக்கவில்லை. இலங்கை இராணுவம் காசுக் கணக்குப் பார்த்து ஷெல் வீசியிருப்பார்கள். இந்திய இராணுவத்தினர் வகை தொகையின்றி அள்ளிக் கொட்டினார்கள். நிமிடத்திற்கொரு ஷெல் வந்து விழுந்து வெடித்தது.

காங்கேசன்துறை, பலாலி முகாம்களில் இருந்த படையினரே முதலில் முற்றுகையை உடைத்துக் கொண்டு முன்னேறினார்கள். அதனால், அந்த முகாம்களை சுற்றி பத்து மைல் சுற்றாடலில் இருந்த வீடுகள் எல்லாம் தரை மட்டமாகின. 

இந்தியப் படையினர் முன்னேறுவதற்கு டாங்கிகளும் பெருமளவு உதவின. வீதிகளில் கண்ணி வெடி புதைத்து வைக்கப் பட்டிருக்கலாம் என்பதால், டாங்கிகள் வீட்டு வளவுகளைக் கடந்து முன்னேறின. எதிரில் அகப்பட்ட மதில் சுவர், மரம்,செடி எல்லாவற்றையும் இடித்து தள்ளி விட்டு முன்னேறின. சில இடங்களில் அலறி ஓடிய பொது மக்கள் மீதும் டாங்கிகள் ஏறிச் சென்றன. இந்திய இராணுவத்தின் போரிடும் முறை, சிறிலங்கா இரானுவத்தினதை விட முற்றிலும் மாறுபட்டிருந்தது. நிலங்களை கைப்பற்ற முன்னேறும் சிறிலங்கா படையினர், தமது பக்கத்தில் அதிக இழப்பு ஏற்பட்டால் பின்வாங்கி விடுவார்கள். ஆனால் சனத்தொகை பெருக்கம் அதிகமுள்ள இந்தியாவை சேர்ந்த இராணுவத்திற்கு, ஆட்பற்றாக்குறைப் பிரச்சினை இருக்கவில்லை. எத்தனை போர் வீரர்கள் செத்து மடிந்தாலும், அலை அலையாக வந்து கொண்டே இருந்தனர்.

இவ்வளவு தீவிரமாக போரிட்டும், இந்தியப் படை யாழ்நகரை அடைவதற்கு ஒரு மாதம் எடுத்தது. யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதி பெருமளவு நகரமயக்கப் பட்டிருந்தது. குடாநாட்டிலேயே சன நெரிசல் அதிகமுள்ள பிரதேசமும் அது தான். வலிகாமம் என்றழைக்கப்படும் செம்மண் பிரதேசம் முழுவதும், புலிகளுக்கும், இந்திய இராணுவத்திற்கும் இடையில் நடந்த உக்கிரமான சண்டையில் சிக்கி சின்னாபின்னப் பட்டது. ஈழப்போர் தொடங்கியதில் இருந்து, யாழ்குடாநாடு சந்தித்த முதலாவது மனிதப் பேரவலம் அப்போது தான் ஏற்பட்டது. வடக்கே காங்கேசன்துறையில் இருந்து, தெற்கே யாழ் நகரம் வரையிலான பகுதி, யாருமற்ற சூனியப் பிரதேசமாகிக் கொண்டிருந்தது. மக்கள் சாரிசாரியாக கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர்.

யாழ் குடாநாட்டின் கிழக்குப் பகுதியான, வடமராட்சியும், தென்மராட்சியும் அமைதியாக காட்சியளித்தன. அங்கே வந்து சேர்ந்த இடம்பெயர்ந்த மக்கள், தமக்குத் தெரிந்த உறவினர்கள் வீடுகளில் தங்கினார்கள். உறவினர்கள் இல்லாதோர் பாடசாலைகளில் தங்கினார்கள். இன்னும் சிலர் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.  

இந்திய இராணுவம், யாழ் நகரம் வரை வந்து விட்டதால், புலிகளும் தென்மராட்சி ஊடாக வன்னிக் காடுகளை நோக்கி பின்வாங்கினார்கள். தென்மராட்சிப் பகுதி, யாழ் குடாநாட்டை வன்னி பெரு நிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவிருந்தது. அதனால் அங்கே யுத்தம் நடக்காமல் தவிர்க்கப் பட்டது. இருப்பினும் தென்மராட்சியை கைப்பற்றும் நோக்குடன், இந்திய இராணுவம் அதிர்ச்சி தரும் படுகொலையை நடத்தியது.

(தொடரும்...)

அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு

[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 9)

யுத்தப் பிரதேசம் முழுவதும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பகுதியில் கடுமையான சண்டை நடக்கும் அதே நேரம், இன்னொரு பகுதி அமைதியாகக் காட்சியளிக்கும். ஒரு பக்கம் மக்கள் செத்துக் கொண்டிருப்பார்கள். மற்ற பகுதிகளில் மக்கள் சிறிது பதற்றத்துடன் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியில், இந்திய இராணுவத்துடன் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. கிழக்குப் பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கூட கேட்கவில்லை. மக்கள் தமது வழமையான கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் அது ஒன்றும் சாதாரண இயல்பு வாழ்க்கை அல்ல. அமைதி காக்க வந்த இந்தியப்படை பொருளாதாரத் தடை விதித்து தமிழ் மக்களை நசுக்கியது. கொழும்பில் இருந்து வந்த விநியோகம் தடைப்பட்டதால், உள்ளூரில் இருந்த பாவனைப் பொருட்கள் தீர்ந்து கொண்டிருந்தன. வியாபாரிகள் மட்டுமல்ல, அரசு நடத்தும் கூட்டுறவு சங்கக் கடைகளையும் இழுத்து மூடி விட்டார்கள். எமது ஊர் மக்கள் வேறு வழியின்றி, சங்கக் கடையை உடைத்து திறந்து, அங்கிருந்த பாவனைப் பொருட்களை தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

சாவகச்சேரி நகர சந்தை வழமை போல கூடியது. உள்ளூரில் விளையும் காய்கறியின் விலை சரிந்து கொண்டிருந்தது. வழக்கமான வியாபாரிகளை விட புதிதாக சிலர் வந்திருந்தனர். வசதியற்றவர்கள் சந்தையில் எதையாவது விற்று பணம் புரட்டலாம் என நினைத்தார்கள். வாங்கும் திறன் படைத்த மத்திய தர வர்க்கத்தினரின் சேமிப்புப் பணமும் கரைந்து கொண்டிருந்தது. இதற்கிடையே, யுத்தம் நடைபெறும், யாழ் நகர், வலிகாமம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் உணவு கொடுக்க வேண்டிய தேவையிருந்தது. அன்று ஒவ்வொரு வீடும் குட்டி அகதி முகாமாக மாறியிருந்தது. பொதுவாகவே சனத்தொகை அடர்த்தி குறைந்த, நிலப்பரப்பால் விரிந்த தென்மராட்சிப் பிரதேசம், இடம்பெயர்ந்த அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டவில்லை. தென்மராட்சி பிரதேசம், காடுகளும், சோலைகளும், தென்னந் தோப்புகளும் கொண்டது. நகரமயமாக்கலில் வளர்ச்சி அடைந்த, யாழ் நகர், வலிகாமம் பகுதிகளை சேர்ந்த மக்கள், தென்மராட்சியை "குழைக் காடு" என்று தாழ்வாகக் குறிப்பிட்டு பேசுவது வழக்கம். அத்தகைய நகர மாந்தர், தற்போது குழைக் காட்டில் அடைக்கலம் கோர நேரிட்டதை எண்ணி, தென்மராட்சி மக்கள் பெருமிதம் கொண்டனர்.

சாவகச்சேரி நகரில் போர் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆயுதமேந்திய புலி உறுப்பினர்களும் மிகக் குறைவாகவே நடமாடினார்கள். சாவகச்சேரி நகர சந்தை கூடிய பகற்பொழுதில், திடீரென ஆகாயத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தோன்றியது. நகரை சுற்றி வட்டமிட்டு விட்டு, சந்தையை நோக்கி சிறிய ரக எறிகணைகளை வீசியது. எறிகணைகள் ஹெலியின் இரண்டு பக்கமும் உள்ள இறகுகளில் பொருத்தப் பட்டிருந்தன. ரஷ்யத் தயாரிப்பான MI -24 சுடும் பொழுது, அது நெருப்பைக் கக்குவது போலிருந்தது. அதைக் கண்டதும், சிறுவர் கதைப் புத்தகத்தில் படித்த நெருப்பைக் கக்கும் டிராகன் நினைவுக்கு வந்தது. இதற்கு முன்னர், தொலைக்காட்சியில் ஆப்கானிஸ்தானில் நடந்த போரைக் காட்டும் படங்களில் அந்தக் ஹெலிகாப்டர் வரும். அப்போது தான் கண்ணெதிரே பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. சாமானியரின் நாவில் அது "முதலைக் ஹெலி" என்று அழைக்கப் பட்டது. நான் கண்ட காட்சியை, ரம்போ சினிமா போன்று இரசிக்க முடியவில்லை. ஹெலிகாப்டர் தாக்குதலில் சந்தையில் இருந்த பத்துக்கும் குறையாத பொது மக்கள் கொல்லப்பட்டனர். சந்தை வளாகத்தில் மரண ஓலம் கேட்டது. மக்கள் அன்றைய கருமங்களை அப்படியே போட்டு விட்டு வீடுகளுக்குள் சென்று மறைந்து கொண்டனர். சாவகச்சேரி நகரம், ஒரு சில மணிநேரத்தில் வெறிச்சோடியது. அன்றிரவே நாவற்குழி முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவம், சாவகச்சேரி நகர மத்தியில் இருந்த பாடசாலைகளில் முகாமிட்டது. அடுத்து வந்த சில நாட்களுக்கு மக்களுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாகியது.

நாவற்குழி முகாமிலிருந்து, ஆனையிறவு முகாம் வரையிலான கண்டி வீதி இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. தற்போது கிராமப் பகுதிகளில் மட்டும் புலி உறுப்பினர்கள் நடமாடினார்கள். அவர்களைக் கேட்டால், "இந்தியப் படையினர் கண்டி வீதியை பயன்படுத்துவதற்கு தாம் அனுமதி வழங்கியுள்ளதாக," கூறினார்கள். அடுத்து வந்த சில நாட்களில், இந்தியப் படையினர் கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். இந்தியப் படைகள் வருவதைக் கண்காணிப்பதற்கென்று, ஒவ்வொரு சந்தியிலும் இவ்விரண்டு புலி உறுப்பினர்கள் காவலுக்கு நின்றனர். ஒரு சந்திக்கருகில் பட்டப் பகலில் இராணுவம் ஜீப் வண்டியில் வந்ததைக் புலிகள் கிரனேட் அடித்து விட்டு தப்பியோடினார்கள். இன்னொரு சந்தியில் கும்மிருட்டில் சத்தமின்றி வந்த படையினர், காவலுக்கு நின்ற புலிகளை பிடித்து விட்டார்கள். சில வாரங்களில், சந்தியில் தற்காலிக முகாம் அமைத்திருந்த இராணுவம் பின் வாங்கிய பிறகு, அவர்களின் உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப் பட்டன.

இந்திய இராணுவத்துடன் போர் தொடங்கி ஒரு மாதம் கழிந்த பின்னர், யாழ் குடா நாடு முழுவதும் இராணுவமயமாக காட்சியளித்தது. இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம் காணப்பட்டது. இராணுவம் நிலை கொண்டிராத சந்தியைக் கடந்து செல்வது கஷ்டம். ஒவ்வொரு முகாமிலும், போவோர் வருவோரை நிறுத்தி அடையாள அட்டை பார்த்து தான் விட்டார்கள். "கொல்லைப் புற வழியாக நமது நாட்டினுள் புகுந்த அந்நிய இராணுவம், எம்மிடம் அடையாள அட்டை கேட்கின்றது..." என்று மக்கள் மனதுக்குள் புழுங்கினார்கள்.

பெரும்பாலான முகாம்களில், ஏற்கனவே பிடிபட்ட புலி உறுப்பினர் "தலையாட்டியாக" நிறுத்தி வைக்கப்பட்டார். தனக்கு தெரிந்த புலி உறுப்பினர்களை தலையாட்டி காட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் நிராயுதபாணிகளான முன்னாள், இந்நாள் புலி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, சில அப்பாவிகளும் தடுத்து நிறுத்தி கைது செய்யப் பட்டனர். யாழ் குடா நாடு முழுவதும், இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், புலிகளும் மறைந்திருந்தனர். அவர்கள் அடிக்கடி தமது மறைவிடங்களை மாற்றிக் கொண்டிருந்தனர். ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்கையில் இராணுவ முகாம்களை தவிர்க்க வேண்டியிருந்தது. குறுக்கு வழிகளை, ஒழுங்கைகளை பாவித்து கடந்து சென்றனர். இருந்த போதிலும், எதிர்பாராத விதமாக சந்திக்கும் இந்தியப் படைகளுடன் மோதல்கள் ஏற்படுவதுண்டு.

யாழ் குடாநாட்டிற்குள் பதுங்கியிருந்த புலி உறுப்பினர்கள், பொது மக்களின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. பெரும்பாலான பொது மக்கள், "எங்கட பெடியள்" என்ற எண்ணத்தில் அனுதாபம் காட்டினார்கள். எந்தப் பாதையில், எந்த திசையில் இராணுவம் போகின்றது, என்பன போன்ற தகவல்களை வழங்கினார்கள். பொதுவாக ஊர் விட்டு ஊர் இடம்பெயரும் புலிகள், சிறுவர்களை முதலில் அனுப்பி உளவு பார்த்து விட்டு வரச் சொல்வார்கள். "பாதையில் தடங்கல் இல்லை" என்ற சமிக்ஞை கிடைத்ததும் புறப்படுவார்கள். 

மக்கள் அனைவரும் புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்று கூற முடியாது. ஒரு சிலர், புலிகளின் நடமாட்டம் குறித்து இந்திய இராணுவத்திற்கு தகவல்களை வழங்கினார்கள். சில நாட்களில் மோப்பம் பிடித்து விடும் புலிகள், காட்டிக் கொடுத்தவரை தெருவோரமாக சுட்டுப் போட்டு விட்டுப் போவார்கள். அவ்வாறு சுட்டுக் கொல்லப் பட்டவர்களில், காட்டிக் கொடுத்ததாக நிரூபிக்கப் படாதவர்களும் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களான உணவுக்கு வழியற்ற ஏழைகள். போரினால் ஏற்பட்ட பொருளாதார தடையினால் அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள். இந்திய இராணுவ முகாமில் இலவசமாக கொடுத்த அரிசியை வாங்கிக் கொண்டு வந்த காரணத்திற்காக கொலை செய்யப் பட்டனர்.

யாழ் குடாநாட்டை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும், இந்தியப் படையினர் ஊர் ஊராக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறிப்பிட்ட ஒரு நாளில் திடீரென ஒரு ஊரை சுற்றி வளைப்பார்கள். அந்த ஊரில் வீடு வீடாக சென்று, ஆண்கள் எல்லோரையும் அழைத்து வந்து தெருவில் உட்கார வைப்பார்கள். பின்னர் அவர்கள் எல்லோரையும் முகமூடி அணிந்த நபரின் முன்னால் வரிசையாகப் போகச் சொல்வார்கள். மக்கள் என்ற தண்ணீரை வடி கட்டி, புலிகள் என்ற மீன்களை பிடிக்கும் நடவடிக்கை அது என்று எல்லோருக்கும் தெரியும். இதிலே அதிசயம் என்னவென்றால், இராணுவ சுற்றி வளைப்புக்கு ஒரு நல்ல முன்னதாகக் கூட, அந்த ஊரில் புலிகள் நடமாடி இருப்பார்கள். ஆனால் முற்றுகைக்குள் எவரும் அகப்பட மாட்டார்கள். முகமூடி அணிந்த நபர் யாரையாவது காட்டிக் கொடுத்தாலும், அது முன்னர் ஒரு நேரம் இயக்கத்தை விட்டு விலகியவராக இருப்பார். எமதூரில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தில், முத்து என்றொரு தமிழ்நாட்டை சேர்ந்த சிப்பாய் இருந்தார். சிடு சிடுப்பான மூஞ்சியைக் கொண்ட படைவீரர்களிடையே வித்தியாசமானவர். மக்களுடன் கடுமையாக நடந்து கொள்வதில்லை. இராணுவ நடவடிக்கை தொடர்பாக முத்து வழங்கிய தகவல்கள் காரணமாகவே புலிகள் தப்ப முடிந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. சில மாதங்களில் அவரை இடம் மாற்றி விட்டார்கள்.

ஆரம்ப காலத்தில், இந்தியப் படையினர் புலி உறுப்பினர்களை மட்டுமே குறி வைத்து தேடிக் கொண்டிருந்தார்கள். இதனால் புலிகளுடன் தொடர்பற்ற பெரும்பான்மை மக்கள் படையினருடன் ஒத்துழைத்தனர். அல்லது ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம். எங்கேயும் ஓடி ஒளிக்க முடியாது. ஒரு முறை, பல கிராமங்களை ஒரே நாளில் சுற்றி வளைத்து, ஆண்கள் எல்லோரையும் நகரில் இருந்த பாடசாலை முகாமில் ஒரு நாள் வைத்திருந்தார்கள். அன்றிரவு சாப்பிட ஆளுக்கொரு சப்பாத்தியும், சாம்பாரும் தந்தார்கள். இரவு படுக்கும் பொழுது நுளம்புத் தொல்லையை சமாளிக்க ஒரு எண்ணை கொடுத்தார்கள். அடுத்த நாள் காலை, அனைவரையும் வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் இந்தக் கவனிப்பு எல்லாம் ஒரு சில வாரங்கள் மட்டும் தான்.  

ரோந்து செல்லும் இந்தியப் படை வாகனங்கள், புலிகளின் கண்ணி வெடிக்கு இலக்காகி பல வீரர்கள் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு படையினரின் நடவடிக்கைகளில் மூர்க்கம் தெரிந்தது. தாக்குதல் நடந்த இடத்தில் அகப்பட்ட பொது மக்கள் படையினரின் பழிவாங்கும் நடவடிக்கையால் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டால், கடுமையாக அடித்து நொறுக்கினார்கள். சந்தேக நபர்களை சித்திரவதை செய்வதும் வழக்கமான சமாச்சாரங்களாகி விட்டன. ஒரு நாள் புலி உறுப்பினர்களை பிடிப்பதற்காக, வீதியோரம் மறைந்திருந்த படையினர் விரித்த வலையில் நானும் அகப்பட்டேன்.


(தொடரும்...)
  -
courtesy - Kalaiyarasan




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.