Monday, 15 June 2020

1995 அக் 30: சிலமணி நேரத்தில் 5 லட்சம் மக்களை அழைத்துச் சென்ற புலிகள் - 15

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 15

* 1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள்.
ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்?”, “ஏன் ஏனைய இயக்கப் போராளிகள் புலிகளால் அழிக்கப்பட்டார்கள்?” போன்ற கேள்விகளால் இளநிலைப் போராளிகளாய் இருந்த நாங்கள் திணறிப்போன சந்தர்ப்பங்கள் அநேகமிருந்தன.
உண்மையில் அந்தக் கேள்விகளுக்கான விளக்கம் அப்போதெல்லாம் எங்களுக்கே சரிவரத் தெரிந்திருக்கவில்லை.

* 1995 ஒக்­ரோ­பர் மாதம் இராணுவத்தினர் வடமராட்சியைக் கைப்பற்றி வலிகாமத்தை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையை முடுக்கியபோது பிரபாகரன் எவரும் எதிர்பார்த்திராத அதிரடி முடிவொன்றை எடுத்தார். வலிகாமத்திலிருந்து அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற முடிவு மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது....... வீடுவாசல்கள், சொத்துச் சுகங்கள், தோட்டங்கள், செல்லப் பிராணிகள் என அத்தனையையும் பிரிந்து குறிக்கப்பட்ட சில மணித் தியாலங்களில் ஐந்து இலட்சம் மக்கள் நாவற்குழி பாலம் கடந்த நிகழ்வை எப்படிப் பதிவு செய்தாலும் புரியவைக்க முடியாத மாபெரும் மனித அவலம் என்றே கூற வேண்டும்.

** மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்!


தொடந்து....

1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள்.

ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்?”, “ஏன் ஏனைய இயக்கப் போராளிகள் புலிகளால் அழிக்கப்பட்டார்கள்?” போன்ற கேள்விகளால் இளநிலைப் போராளிகளாய் இருந்த நாங்கள் திணறிப்போன சந்தர்ப்பங்கள் அநேகமிருந்தன.

உண்மையில் அந்தக் கேள்விகளுக்கான விளக்கம் அப்போதெல்லாம் எங்களுக்கே சரிவரத் தெரிந்திருக்கவில்லை.

அரசியல் நிகழ்வுகளைத் தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்களாகவும், விடுதலைப் போராட்டத்தின் முழுச்சுமையையும் தாங்கி நிற்பவர்களாகவும் மக்கள் இருந்தனர். அவர்களுக்காகப் போராடுகின்ற நாங்கள் மக்களுக்கு விசுவாசமானவர்களாக இருக்க வேண்டும். அவர்களின் மனங்களில் திருப்தியேற்படும் வகையில் எமது செயற்பாடுகள் அமையவேண்டும் என்ற மனப்பாங்கு பல போராளிகளிடம் இருந்தது உண்மை.


ஆனால் இயக்கத்தின் சில செயற்பாடுகள் மக்களுக்குப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்போது போராட்டக் காலத்தில் இவை தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்கள், அர்ப்பணிப்புகள் என்ற வகையில்தான் பார்க்கப்பட்டன.

ஏனைய இயக்கங்கள் விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்ட விடயம் தொடர்பில் புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கு எந்தக் காலத்திலும் சரியான விளக்கம் கொடுக்கப்பட்டதில்லை.

மாறாக, மாற்று இயக்கங்களின் புலிகள் இயக்கத்தால் அவை தடை செய்யப்பட்டதான கருத்துருவாக்கமே இயக்கத்திற்குள் வளர்க்கப்பட்டிருந்தது.

புதிய போராளிகளைப் பதிவு செய்யும் படிவத்தில் சகோதரர்கள், உறவினர்கள் எவராவது வேறு இயக்கங்களில் இருந்திருக்கிறார்களா என்ற விபரம் கட்டாயமாகப் பெறப்படுவது வழக்கமாகும்.

2000க்குப் பிற்பட்ட காலப் பகுதியில் ஏனைய இயக்கங்களிலிருந்து உயிரிழந்த குறிப்பிட்ட சிலரை விடுதலைப் புலிகளின் மாவீரர் பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.

எனக்குத் தெரிய கொக்காவில் பகுதியில் இராணுவத்தினருடனான மோதலில் உயிரிழந்த உஷா என்கிற ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்தைச் சேர்ந்த பெண் போராளி மாவீரர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தார். அவருடைய மேலதிகமான விபரங்கள், எந்த ஆண்டு அச் சம்பவம் நடைபெற்றது ஆகிய விபரங்கள் எனக்குத் தெரியாது.

2002 சமாதான நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்புகளில் முஸ்லிம் மக்களின் அரசியல் தலைவர்களுடன் புலிகள் நடத்திய பேச்சு வார்த்தைகளும் உடன்பாடுகளும், அதன் பின்னரான காலத்தில் முஸ்லிம் மக்கள் தத்தமது சொந்த வாழ்விடங்களுக்குத் திரும்பிய சம்பவங்களும் இடம்பெற்றன.

மன்னார் மாவட்டத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த முழங்காவில் நாச்சிக்குடா மற்றும் முல்லைத் தீவு மாவட்டத்தின் முள்ளியவளையில் நீராவிப்பிட்டி, யாழ்ப்பாணம் ஐந்து சந்தி ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம் மக்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எனக்கும் கிடைத்தன.

கடலை நம்பியும், நிலத்தை நம்பியும் வாழ்ந்தவர்களான மிகவும் சராசரியான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்த அந்த மக்களைச் சந்தித்தபோது என் மனதில் மிகுந்த குற்றவுணர்ச்சி ஏற்பட்டது.

அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட எமது இயக்கம், இந்த அப்பாவி மக்களின் வாழ்வுரிமையை அடக்குமுறைக்குள்ளாக்கிய நியாயத்தை எனது இதயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது.

1994 இறுதிப் பகுதியில் மிகப் பெரிய அளவில் இயக்கத்தின் படையணிகள் ஒன்றிணைக்கப்பட்டுப் பாரிய வலிந்த தாக்குதல் ஒன்றிற்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அணிகளுக்கான பயிற்சிகள் நடந்தன.

அரசியல்துறையிலிருந்தும் போராளிகள் அனுப்பப்பட்டிருந்தோம். மகளிர்ப் படையணிக்கான பயிற்சி அரியாலை மணியந்தோட்டத்தில் இடம்பெற்றது.
கடல் மூலமாகப் படகுகளில் குறிப்பிட்ட தூரம்வரை நகர்ந்து அதன்பின் கழுத்தளவு நீருக்குள் இறங்கி நடந்துசென்று தாக்குதல் நடத்தவேண்டுமென விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

காயமடைந்தவர்களையும் கடல் வழியாகவே கொண்டு வரவேண்டும் என்கிற நிலைமையில் அதுவொரு சவால் நிறைந்த தாக்குதலாகவே இருக்குமெனக் கூறப்பட்டிருந்தது.

மண்டைத்தீவு இராணுவ தளத்தின் மீதான தாக்குதலுக்குரிய இறுதிக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், எமது அணிகளை அணிகள் தயாராக்கப்பட்டிருந்தன.

திடீரென வந்த ஒரு செய்தியில் அத்தாக்குதல் கைவிடப்பட்டிருப்பதாகக் கூறி, எம்மைத் தங்குமிடங்களுக்கு அனுப்பிவிட்டனர்.

அந்தத் தாக்குதல் கைவிடப்பட்டதற்கான சரியான காரணம் எமக்குத் தெரியப்படுத்தப்படவில்லை. ஆனால் வேவுத் தரவுகள் இராணுவத்தினருக்குக் கசிந்துவிட்டன என்பதை அறிய முடிந்தது.

மீண்டும் எமது அணி அரசியல்துறைக்கு அனுப்பப்பட்டது. இதன்பின்னர்

1995 ஆரம்பத்தில் மணலாற்றுப் பகுதியில் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, டொலர்பாம், கென்பாம் ஆகிய ஐந்து இராணுவ தளங்களின் மீது ஒரே நேரத்தில் பாரிய தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இந்த நடவடிக்கைக்குத் தலைவரின் நெருக்கமான நேரடிக் கண்காணிப்புடன் வளர்க்கப்பட்ட சிறுத்தைப் படையணிகளே பெரிய அளவில் ஈடுபடுத்தப்பட்டன.
அவர்களை இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்கள்கூடப் பார்க்க முடியாது. அவர்களுக்கு முதல் ஐந்து வருடங்களுக்கு விடுமுறை கிடையாது.

வருடக் கணக்கில் தொடர்ந்து கடினமான பயிற்சிகளும் இராணுவத் தொழில் நுட்பங்களும் கற்பிக்கப்பட்டன. அந்த அணியின் பெண் உறுப்பினர்கள் தமது கூந்தலைக் கட்டையாக வெட்டிக்கொள்வதே வழக்கமாயிருந்தது. அவர்களுக்குக் கராத்தே, மல்யுத்தம், குத்துச்சண்டை எனப் பல தற்காப்புக் கலைகளும் பயிற்றப்பட்டிருந்தன.

எனது தங்கையும் இந்த அணியிலேயே செயற்பட்டுக் கொண்டிருந்தாள்.

Janaka Perera
இயக்கம் எதிர்பார்த்த வகையில் அந்தத் தாக்குதல் திட்டம் வெற்றி பெறவில்லை. மாறாக இயக்கத்திற்குப் பாரிய இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தது.
தலைவரின் கனவுப் படையணியான சிறுத்தைப் படையணி பெரும் அழிவைச் சந்தித்திருந்தது. இருநூறுக்கும் மேற்பட்ட ஆண், பெண் போராளிகள் உயிரிழந்திருந்தனர்.

சிறுத்தைப் படையணியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் உயிரிழந்த நிலையில் சிதைக்கப்பட்டிருந்த அவர்களின் சடலங்கள் இலங்கை அரசால் ஐ.சி.ஆர்.சி. மூலமாகப் புலிகளிடம் வழங்கப்பட்டன.

அப்போது நான் வடமராட்சி பகுதியில் பணி செய்து கொண்டிருந்தேன். சிறுத்தைப் படையணி ஈடுபட்ட பாரிய தாக்குதல் நடவடிக்கை தோல்வியடைந்ததாகவும், அதிக அளவு பெண் போராளிகள் உயிரிழந்துவிட்டதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்திருந்தது.

எனது தங்கையும் இந்நடவடிக்கையில் கலந்துகொண்டாளா இல்லையா என்பது பற்றி எனக்குத் தெரியாத நிலையில் மனது தவித்துக்கொண்டிருந்தாலும் அமைதியாக எனது வேலைகளில் மூழ்கியிருந்தேன்.

உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அறிவித்தல் கொடுக்கும்படி பெயர்ப் பட்டியல்கள் வடமராட்சி கோட்டத்திற்கும் அனுப்பப்பட்டிருந்தது. நினைக்கும்போதே தலைசுற்றி மயங்கிவிழும் வேளையாக அது இருந்தது.

ஐந்து வருடங்களாகக் தவித்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களிடம், அந்தப் பிள்ளைகளின் மரண அறிவித்தல்களை எப்படிக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும்

அந்தச் சந்தர்ப்பத்தில் எனது அம்மாவை நினைத்துப் பார்த்தேன்.
எனது தங்கையை அவர் நான்கு வருடத்திற்கு மேல் காணாது இருக்கும் நிலையில் இப்படி ஒரு செய்தி அவருக்குச் சொல்லப்பட்டால், எவ்வளவு வலியுடன் அழுகையும் ஆவேசமும் கொண்டு துடிப்பார்? என்ன செய்வது?

இயக்கத்தின் கட்டளையைச் சிரமேற் கொண்டு அவர்களுடைய முகவரிகளைக் கண்டுபிடித்து, பயந்து நடுங்கியபடி சென்று செய்திகளை அறிவித்தபோது, பெரும் பிரளயமே வெடித்தெழும்பியது.

ஒரு சில பெற்றோர் எம்மைக் கட்டியணைத்து அழுது புலம்பினார்கள். வேறு சிலர் எமக்கு அடித்தும், தூசண வார்த்தைகளால் திட்டியும் தமது வேதனையைக் கொட்டினார்கள்.

அவர்களுடன் சேர்ந்து கண்ணீர் விடுவதைத் தவிர எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.

ஐம்பதிற்கும் மேற்பட்ட உடல்கள் வடமராட்சியில் இறுதிக் கிரியைகளுக்காக அனுப்பப்பட்டிருந்தன.

அவை நேரடியாக மயானத்திற்கே கொண்டு செல்லப்பட்டன. பெற்றோரிடம் கையளிக்கக் கூடிய அளவுக்கு அடையாளம் தெரியக் கூடியதாகவோ நல்ல நிலைமையிலோ அவை இருக்கவில்லை.

வரிசையாக மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகளில் தமது பிள்ளைகளின் பெட்டி எதுவாக இருக்கும் என்பதைக்கூட அறிய முடியாத நிலையில் ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மாரின் கண்ணீரும் கதறலும் என் காதில் இப்போதும் ஒலிக்கிறது.

அதே ஆண்டு முற்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் முன்னேறிப் பாய்தல்என்றொரு இராணுவ நடவடிக்கை வலிகாமம் கிழக்குப் பகுதியில் சண்டிலிபாய் ஊடாக மேற்கொள்ளப்பட்டது.
அதனை வழிமறித்துப் புலிகள் ஒரு அதிரடியான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். அப்போது வான் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நவாலி தேவாலயம் தாக்கப்பட்டது. அங்குத் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.

அங்குச் சின்னஞ் சிறுவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்து துடித்த காட்சிகள் இனி ஒருபோதும் எமது தேசத்தில் மட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையிலும்கூட நிகழக்கூடாது.

அந்தக் காலகட்டத்தில் இளைஞர், யுவதிகள் அதிகளவில் புலிகள் இயக்கத்துடன் இணைந்து கொண்டனர். இயக்கத்தின் பயிற்சிப் பாசறைகள் நிரம்பி வழிந்தன. பல புதிய மகளிர் அணிகள் கடல், தரைத் தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டன.

இலங்கை இராணுவம் யாழ்ப்பாண மாவட்டத்தை முழுமையாகக் கைப்பற்றும் ரிவிரெச்’ (சூரியக்கதிர்)இராணுவ நடவடிக்கையை 1995 ஒக்டோபர் நடுப்பகுதியில் ஆரம்பித்திருந்தனர்.

பலாலி இராணுவ கூட்டுப்படைத் தலைமையகத்தைப் பின்னணியாகக் கொண்டு இலங்கைப் படையினரால் இந்தப் படை நகர்த்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டத் தாக்குதலணிகள் முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தினசரி படையினரின் தாக்குதல்கள் விஸ்தரிக்கப்பட்டன.

ஆரம்பத்தில் படிப்படியாக முன்னேறிய இராணுவத்தினருடன் விடுதலைப் புலிகள் தமது முழு பலத்தையும் ஒருங்கிணைத்துப் போராடினார்கள்.

நாளாந்தம் போராளிகளின் இழப்பு அதிகரித்துச் சென்றது. மக்கள் மத்தியில் வேலைத் திட்டங்களில் ஈடுபட்டிருந்த நாம் களத்தில் உயிரிழக்கும் போராளிகளின் வீர மரண நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருந்தோம்.

இராணுவத்தினர் வடமராட்சியைக் கைப்பற்றி வலிகாமத்தை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையை முடுக்கியபோது விடுதலைப் புலிகளின் தலைவர், எவரும் எதிர்பார்த்திராத அதிரடி முடிவொன்றை எடுத்தார்.

வலிகாமத்திலிருந்து அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்ற முடிவு மக்களுக்கு ஒலிபெருக்கிகள் மூலம் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டது.
விரும்பியோ விரும்பாமலோ மக்கள் அந்த அறிவித்தலுக்குச் செவிசாய்த்து, கையில் எடுத்த பொருட்களுடன் நாவற்குழி பாலம் நோக்கி நகரத் தொடங்கினார்கள்.

வீடுவாசல்கள், சொத்துச் சுகங்கள், தோட்டங்கள், செல்லப் பிராணிகள் என அத்தனையையும் பிரிந்து குறிக்கப்பட்ட சில மணித் தியாலங்களில் ஐந்து இலட்சம் மக்கள் நாவற்குழி பாலம் கடந்த நிகழ்வை எப்படிப் பதிவு செய்தாலும் புரியவைக்க முடியாத மாபெரும் மனித அவலம் என்றே கூற வேண்டும்.


நானும் வேறு பல போராளிகளும் அந்த மக்களுக்கு எம்மாலான உதவிகளைச் செய்தபடி தென்மராட்சிப் பகுதியில் நின்றிருந்தோம்.


இராணுவத்திற்கும் புலிகளுக்குமான தாக்குதல்களில் மக்கள் அகப்பட்டு உயிரிழந்துவிடக் கூடாது என்ற நோக்கத்துடன் இப்படியொரு முடிவு எடுக்கப்பட்டதாக இயக்கம் விளக்கம் கூறியது.

ஆனாலும் அதற்காக அந்த மக்கள் பட்டபாடும் கொடுத்த விலையும் கொஞ்ச நஞ்சமல்ல. தென்மராட்சி பிரதேசம் மக்களால் நிறைந்து போயிருந்தது.

Video - 1995 ல் ஐந்து லட்சம் மக்களை வெளியேற்றிய புலிகள்  
 
அங்கிருந்த பாடசாலைகள், கோயில்கள், வீடுகள் நிறைந்து தோட்ட வெளிகளும் ஒழுங்கைகளும் வீதிகளும்கூட நிறைந்திருந்தன. இடைவிடாமல் மழை பொழிந்துகொண்டிருந்தது.

புலிகள் இயக்கத்தின் அறிவித்தலை ஏற்றுக்கொண்டு மக்கள் யாழ்ப்பாணம் விட்டு வெளியேறியதைப் புலிகள் தமக்கான ஒரு அரசியல் வெற்றியாகவே பார்த்தனர்.

ஐ.நா. உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் நேரடியாகவே புலிகளுக்கு ஊடாக மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளும் வகையில் ஒரு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்வாக அது கருதப்பட்டது.


புலிகளின் தலைமைக்குப் பின்னால்தான் தமிழ் மக்கள் அணி திரண்டுள்ளார்கள் என்ற செய்தியை உலகத்துக்குக் காட்டும் ஒரு சம்பவமாக இதனை இயக்கம் வெளிப்படுத்தியது.

இலங்கை இராணுவம் யாழ்ப்பாண மாவட்டத்தை முழுமையாகக் கைப்பற்றியிருந்தாலும் மக்களில்லாத பிரதேசத்தைக் கைப்பற்றியது அவர்களுடைய அரசியல் தோல்வி என்பதுடன், கட்டடங்கள் நிறைந்த மக்களில்லாத யாழ்ப்பாணத்தை நீண்ட நாட்கள் இராணுவத்தால் தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலையில் தாமாகவே பின்வாங்க வேண்டியேற்படும் எனவும் புலிகளால் கருதப்பட்டது.

யாழப்பாணம் இழக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இயக்கத்தின் முக்கியத் தளங்களும், ஆவணங்களும் கிளாலி கடலேரி மூலம் வன்னிக்கு நகர்த்தப்பட்டன.

மக்களையும் வன்னிக்குச் செல்லுமாறு கூறப்பட்டது. அதிக அளவு மக்கள் வன்னி நோக்கி நகரத் தொடங்கினார்கள். சிலர் தென்மராட்சியிலேயே தங்கியிருந்தனர்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அதிகளவு இளைஞர், யுவதிகள் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்கள். இரகசியமான இராணுவ நகர்வொன்றை மேற்கொண்டு தென்மராட்சியின் கனகம்புளியடிச் சந்தியை இராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.

இதனைத் தொடர்ந்து தென்மராட்சி முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றினார்கள்.

இராணுவத்தினரின் வான் தாக்குதல்களையும் பொருட்படுத்தாது கிளாலி கடலேரி வழியாகப் பெருமளவு மக்கள் வன்னிக்கு நகர்ந்தார்கள்.

அதுவரை வன்னியே தெரியாத மக்களும் ஏதோவொரு நம்பிக்கையில் வன்னிக்கு இடம் பெயர்ந்தார்கள். 
இன்னொரு தொகுதி மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கே திரும்புவதற்குத் தீர்மானித்துத் தென்மராட்சியிலேயே தங்கியிருந்தார்கள்.


அந்த மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் செல்வதைப் புலிகள் அறவே எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில், அவர்களைத் தடுக்க முடியாமல் இருந்தனர்.


இருப்பினும், தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலைகொள்ளும் இராணுவத்தினருக்குப் புலிகள் தொல்லை கொடுக்கும் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டுமாயின் யாழ்ப்பாண இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் மக்கள் இருப்பது புலிகளுக்கு நன்மையளிக்கும் எனக் கருதப்பட்டது.


வெறிச்சோடிப் போயிருந்த சாவகச்சேரிச் சந்தியில் நான் விதுஷாக்காவுடன் நடந்துகொண்டிருந்த இறுதி நாள் மறக்க முடியாதது.

அதுவரை வன்னிக்கான நகர்வுப் பாதையாக இருந்த கிளாலி கடற்கரை திருவிழா முடிந்த கோயில் வீதியைப்போல வெறுமையாயிருந்தது.

இறுதியாக நின்றிருந்த படகுகளில் ஏறியமர்ந்தபடி கண் மறையும் வரைக்கும் யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி கரைகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஒரு அழகான நகரத்தையும், அங்கிருந்த மக்களின் வாழ்வையும் யுத்தம் எப்படிக் கொடூரமாக அழித்துச் சிதைத்துவிட்டது என்பதை நினைத்துப் பார்க்கவும் முடியாமலிருந்தது.

வாழையடி வாழையாக வாழ்ந்து வந்த மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கிப்போட்டிருந்தது போர்.

தமிழினி
தொடரும்…..
நன்றி : இணையதளம்