தமிழ்
ஆயுதக் குழுக்களின் அடாவடித்தனங்களாலேயே முஸ்லிம் ஊர்காவல் படைகள் தோற்றம் பெற்றன
வடக்கிலிருந்து
முஸ்லிம்கள் எல்.ரீ.ரீ.ஈ. ஆல்
வெளியேற்றப்பட்டு 22வது ஆண்டு நிறைவு என்ற பெயரில் ஒரு
கட்டுரையை டி.பி.எஸ்.ஜெயராஜ் என்பவர் அண்மையில் தனது இணையத்தளத்திலும் வேறு
இணையத்தளங்களிலும் வெளியிட்டிருந்தார்.
இக்கட்டுரையில் நல்ல பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போதிலும் சில
தவறான தகவல்களும் முஸ்லிம்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில்
சாவகச்சேரியில் முஸ்லிம் ஒருவரின் கடையிலிருந்து 75 வாள்களை புலிகள் கைப்பற்றியிருந்ததாக
அவர் குறிப்பிட்டள்ளார். அதே போன்று ஒக்ரோபர் 22 ஆம் திகதி இராணுவத்துக்கு தகவல் வழங்குவோர்
எனக் கூறி சில முஸ்லிம்களை மன்னார் மறிச்சுக்கட்டியில் வைத்தும் வேறு ஒருவரை
முல்லைத்தீவு தண்ணீரூற்றில் வைத்தும் புலிகள் கைது செய்திருந்தனர் என்றும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில்
மறிச்சுக்கட்டியிலும் தண்ணீரூற்றிலும் சிலர் கடத்திச் செல்லப்பட்டது உண்மை. இதை
ஏன் புலிகள் செய்தார்கள் என்பதை நாம் ஆராய கடமைப்பட்டுள்ளோம். வடபகுதி முஸ்லிம்கள் ஆயிரம் வருடத்துக்கு
மேற்பட்ட பூர்வீகத்தைக் கொண்ட வரலாற்றை கொண்டுள்ளனர். 1990 ஆம் வெளியேற்றப்படும் போது அவர்களின் சனத்தொகை 75000 முதல் 84000 வரை இருக்கும் என
மதிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான ஒரு பூர்வீகத்தையும் சனத்தொகையையும் கொண்ட
முஸ்லிம்களை வெளியேற்றினால் உலகம் இதனை ஏற்றுக் கொள்ளுமா? அல்லது தமிழர்கள் தான் அதனை ஏற்றுக்
கொள்வார்களா? மனித உரிமை அமைப்பக்களை எவ்வாறு
திருப்திப்படுத்துவது?
எனவே
தமிழ் மக்களையும் உலகத்தின் பல்வேறு ஊடகங்களையும் மூளைச் சலவை செய்ய வேண்டிய
கட்டாய நிலமைக்கு புலிகள் ஆளாகியிருந்தனர். எனவே தான் முஸ்லிம்கள் தொடர்பாக பல
புரளிகளையும் பல கற்பனைக் கதைகளையும் புலிகள் கட்டவிழ்த்து விட்டிருந்தனர். இந்த
கற்பனைக் கதைகள் கேட்பதற்கு உண்மை போல் இருப்பதுடன் கேட்பவருக்கு முஸ்லிம்கள் மீது
கடும் கோபத்தையும் உண்டாக்கும். இவ்வாறான கட்டுக்கதைகள் மூலம் வடபகுதி முஸ்லிம்கள்
கொல்லப்பட வேண்டும் அல்லது துரத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மக்கள் மத்தியில்
ஏற்படுத்தப்பட்டது.
1990 செப்டம்பர் 26ஆம் திகதி இராணுவம் யாழ்
கோட்டையிலிருந்து வெளியேறிய பின்னர் யாழ்ப்பாணத்தில் சண்டை தனிந்து புலிகளுக்கு
வேறு விடயங்களைப் பற்றி சிந்திக்க நேரம் கிடைத்தது. இந்த நேரத்தில் கிழக்கு புலித்
தளபதி கரிகாலன் வடக்கு முஸ்லிம்களை கொல்ல
வேண்டும் என்ற திட்டத்தை தலைமையிடம் கூறியிருக்கிறான். இந்த திட்டத்தை ஆரம்பத்தில்
நிராகரித்த வடக்கு புலிகள் கடுமையான அழுத்தங்கள் காரணமாக ஒப்புக் கொண்டனர். தமிழ்
சமூகத்துக்கும் சர்வதேசத்துக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பதனால் முஸ்லிம்களை
துரோகிகளாக சித்தரிக்கும் கட்டக் கதைகள் வெளியிடப்பட்டன. இதன் ஓர் அங்கமாக
முஸ்லிம்களிடம் கூட கிழக்கில் உங்கட ஆட்கள் தமிழ் பிள்ளைகள் பத்து பேரையாவது
தினமும் வல்லுறவு புரிகிறார்கள் என்று கூறப்பட்டது.
இந்நிலையில்
புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க பணமும் தேவைப்பட்டது. உடனடியா யாழ்ப்பாணத்தில் 22 செல்வந்தர்களும் மன்னாரில் முப்பது
செல்வந்தர்களும் சாவகச்சேரியில் இருவரும் கடத்தப்பட்டனர். சாவகச்சேரியில்
கடத்தப்பட்ட முஸ்லிம் செல்வந்தரான அகமது கலீல் (சுல்தான்ஸ்) தன்னிடம் பணமில்லை என்று கூறவே புலிகளால் அவரது
கடை உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
கடைகளை உடைத்த போது முஸ்லிம்கள் காரணத்தை அறிய முற்பட்ட போது அந்தக்கடையில்
வயர்லஸ் கருவிகள் இருந்ததாக புலிகள் தெரிவித்துள்ளனர். மறுநாள் யாழ்
பத்திரிகைகளில் 75 வாள்கள் மீட்கப்பட்டதாக செய்தி
வந்துள்ளது.வயர்லஸைப் பற்றி எதுவும் பத்திரிகையில் வரவில்லை. இதிலிருந்து இந்த 75 வாள்கள் விடயம் ஒரு கட்டுக்கதை என்பதை
விவேகமுள்ளவர்கள் அறிந்து கொள்ளலாம்.
இரண்டாவது
புலிகளுக்கெதிராக சாவகச்சேரியில் செயற்படும் ஒரு நிலமை இருக்கவில்லை. தேவைப்படவும்
இல்லை. யாழ்ப்பாணம் கொழும்பு லொறி போக்குவரத்து கடைசியாக 1990 ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி சலாம்ஸுக்கு சொந்தமான லொறி
யாழ்ப்பாணத்தை விட்டு கேரதீவு பாதையூடாக வெளியேறியதுடன் நிறைவுற்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்களின் லொறிகள் எதுவும் திரும்பி யாழ்
செல்லவே இல்லை. இந்நிலையில் கொழும்பு யாழ் போக்குவரத்து வசதியை பயன்படுத்தி
புலிகளுக்கெதிராக சதி செய்வதென்பதெல்லாம் கட்டுக்கதை. 130000 பேர்களை கொண்டிருந்த இந்திய இராணுவத்துக்கோ அல்லது 70000 படைவீரர்களை கொண்டிருந்த இலங்கை
இராணுவமோ புலிகளை வெல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்த ஒரு காலம் அது. அந்த
நேரத்தில் யாராவது 75 பேர்களைக் கொண்ட ஒரு வாற்படை புலிகளை
என்ன செய்துவிட முடியும்.
சாவகச்சேரியிலிருந்து
ஆணையிரவு படைத்தளம் யாழ் கோட்டை படைமுகாம் என்பன 18 கிலோமீட்டருக்கு அப்பாலே உள்ளன.
இந்நிலையில் இராணுவ முகாம்களுக்கு பல மைல் தூரத்துக்கு அப்பால் இருந்து கொண்டு
வாள்களை கொண்டு புலிகளை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முடியுமா?
எனவே
இந்த விடயம் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு காரணம் சொல்ல புலிகள் அவிழ்த்து விட்ட
புழுகு மூட்டைகளில் ஒன்று.
அதேபோன்று
மன்னார் மறிச்சுக்கட்டியில் இராணுவத்துக்கு தகவல் வழங்கிய இரண்டு பேர் கைது
செய்யப்பட்ட சம்பவம் மற்றும் தண்ணீரூற்றில் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள்
ஆகும். இவையெல்லாம் புலிகள் வகுத்த வியூகங்கள். புலிகள் மேற்கொண்ட பொய்யான
பரப்புரைகளை தமிழர்கள் மட்டுமன்றி முஸ்லிம்களில்; சிலரும் நம்பியிருந்தனர். ஆனால்
புலிகளின் செயற்பாடுகளில் பேச்சுக்களில் காணப்பட்ட வேறுபாடுகளை அவதானித்து வந்து
முஸ்லிம்கள் அவர்கள் தமக்கு ஏதோ செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்து கொண்டார்கள்.
இதனால் சில முஸ்லிம்கள் புலிகளைப் போய் சந்தித்து தங்களை அழிக்க ஏதாவது சதி
நடக்கிறதா என்று கேட்டு விட்டும் வந்தார்கள். எனவே புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றியதை
நியாயப்படுத்தவே இந்தக் கட்டுக்கதைகள் சொல்லப்பட்டன என்பதை ஜெயராஜ் அவர்கள்
உணரவேண்டும்.
இரண்டாவதாக
ஜெயராஜ் முஸ்லிம்கள் தமிழர்களை தாக்கியதனாலே புலிகள் முஸ்லிம்களை தாக்கி கொன்று
குவித்ததாக எழுதியுள்ளார். இவையும் தவறான
புரிதல்களாகும்.
தமிழீழ
வரலாற்றிலே முஸ்லிம்கள் தமிழர்கள் மீது இன ரீதியான படுகொலையை 1990 ஆகஸ்ட் வரை செய்யவில்லை. தமிழர்களின்
ரெலோ, ஈபிஆர்எல்எப், ஈஎன்டிஎல்எப் மற்றும் எல்ரீரீஈ போன்ற
இயக்கங்கள் மாறி மாறி முஸ்லிம்களை அடக்குமுறைக்கு உள்ளாக்கி வந்தனர். 1984 ஆரம்பத்தில் கப்பம் கேட்பதில்
ஆரம்பித்து பின்னர் கடத்தல்கள் வாகனப் பறிமுதல் கடைகளை உடைத்து கொள்ளையடித்தல்
விவசாய பொருட்களை பலாத்காரமாக பிடுங்கிச் செல்லுதல் என்று தொடர்ந்தது. இது பின்னர்
1985களில் படுகொலைகளாக தொடர்ந்தது. பணம்
கொடுக்க மறுத்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இதன் விபரங்கள் எல்லாம் திகதி
வாரியாக பெயருடன் முஸ்லிம் காப்பகத்தில் பேணப்படுகின்றன.
இந்திய
இராணுவம் முஸ்லிம்களுக்கெதிரான ஒரு போக்கைக் கொண்டிருந்ததால் அவர்களின் காலத்தில்
முஸ்லிம்கள் மீது அடாவடித்தனங்கள் பெருகியிருந்தன. தமிழ் தேசிய இராணுவம் உருவாக்கப்பட்ட காலத்தில்
முஸ்லிம்களை அழிக்கவும் ஈபிஆர்எல்எப் மற்றும் ரெலோ அமைப்புகள் முயன்றன.
இதன்
ஓரங்கமாக 1988.3.19 அன்று வீரகேசரி செய்திப்படி
நிந்தவூரில் 7 முஸ்லிம்கள் கடத்திச்
செல்லப்பட்டிருந்தனர். தொடர்ந்து 1988 மார்ச்சில் கல்முனையில்
வைத்து 25 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 1988 நவம்பர் மாதம் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், ஈ.என்.டி.எல்.எவ் இணைந்து உருவாக்கிய
தமிழ் தேசிய இராணுவம் சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருவைச் சேர்ந்த முஸ்லிம்
பொலிசார் 42 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து படுகொலை
செய்தனர். கொல்லப்பட்டவர்களின் முகத்தில் அசிட்டும் வீசப்பட்டது. தமிழ் பொலிசார்
விடுவிக்கப்பட்டனர்.
1989.2.2 அன்று வீரகேசரி செய்திப்படி
கல்முனையில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி நடந்த ஆர்ப்பாட்டம் மீது வீசிய
கிரனைட் குண்டு வெடித்ததில், இருவர் கொல்லப்பட ஏழு பேர் காயமடைந்தனர். 11.4.89 வீரகேசரி செய்திப்படி கிண்ணியாவில் 5 முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 4.12.89 வீரகேசரி செய்திப்படி
காத்தான்குடியில் மூன்று முஸ்லிம்கள்
கொல்லப்பட்டனர். இவை புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்கள் செய்த
அடக்குமுறைகளினதும் இனப்படுகொலையினதும் பட்டியல்.
1990 மார்ச்சில் இந்திய இராணுவம் வெளியேறிய
பின்னர் எல்.ரீ.ரீ.ஈ. முழு வடக்கு கிழக்கையும் தமது கட்டுப்பாட்டின் கீழ்
கொண்டுவந்திருந்தனர். இக்காலப்பகுதியில் முஸ்லிம்களை பல்வேறு
அடக்குமுறைகளுக்குள்ளாக்கினர். ஆட்கள் கடத்தி கப்பங்கள் பெறப்பட்டது. முஸ்லிம்கள்
கிழக்கில் மரியாரதயீனமாக நடத்தப்பட்டனர்.
முஸ்லிம்
ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியாமல் உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த போது 1990 ஜுன் மாதம் 10ஆம் திகதி புலிகளுக்கும் இலங்கை
இராணுவத்துக்கும் இடையே மீண்டும் போர் மூண்டது. பொலிஸ் நிலையங்களை சூழ்ந்து கொண்ட
புலிகள் பொலிஸாரை சரணடையும்படி கோரிக்கை விடுத்தனர். அரசாங்கம் அவர்களை சரணடையச்
சொன்னது. சரணடைந்த 800 பொலிஸாரில் 200 தமிழ் பொலிஸார் விடுதலை செய்யப்பட 600 பேர் புலிகளால்
சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் 400 பேர் முஸ்லிம்களாவர். தமிழர்களை விடுவித்து முஸ்லிம்களை மட்டும்
படுகொலை செய்த இந்தச் செயல் எல்ரீரீஈயிலிருந்த முஸ்லிம் உறுப்பினர்களை கவலை கொள்ள
வைத்திருந்தது.
யுத்தம்
ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் முஸ்லிம்களின் சொத்துக்கள் கடைகள்
என்பன புலிகளால் கொள்ளையடிக்கப்பட்டன. சில கடைகள் எரிக்கப்பட்டன. சிலரிடம் ஆயத
முனையில் கப்பமும் பெறப்பட்டது. இந்த அடடூழியங்களின் தொடர்ச்சியாக 1990.7.16 வீரகேசரி செய்திப்படி மட்டக்களப்பு
குருக்கள் மடத்தில் 68
முஸ்லிம் ஹஜ் சென்று திரும்பிய பயணிகளை கடத்திக் கொலை செய்ததுடன் அவர்களை
வாகனத்தில் வைத்தே எரித்தனர். இச்செயல் முஸ்லிம்களை ஆத்திரத்தின் எல்லைக்கே கொண்டு
சென்றது. இதனால் முஸ்லிம்களில் சிலர் இராணுவத்துடன் சேர்ந்து புலிகளின்
மறைவிடங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ஏறாவூரில் 62 முஸலிம்களை புலிகள் கடத்தினர். இதனால்
மேலும் ஆத்திரமடைந்த முஸ்லிம்கள் புலிகளின் மறைவிடங்கள் மீது தாக்குதல்களை
அதிகரித்தனர். இதனால் புலிகளுக்கு கிழக்கு மாகாணத்தில் நிலை கொள்ள முடியாமல்
போனது.
தோல்வியை
சகிக்க முடியாத புலிகள் 1990
ஆகஸ்ட் 3ஆம் திகதி காத்தான்குடியில் இரண்டு
பள்ளிவாசல்களில் தொழுது கொண்டிருந்தவர்கள் மீது ஆயுதங்களுடன் வந்த 50 புலிகள் தாக்குதல் நடத்தியதில் 103 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து காத்தான்குடியில் ஊர்காவல் படையொன்று உருவாக்கப்பட்டிருந்தது.
முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கவே இந்த ஊர்காவல் படைகள்
உருவாக்கப்பட்டன. இதனை ஜெயராஜ் முஸ்லிம் சமூகவிரோத சக்திகள் என்று கூறுகின்றமை
ஜெயராஜின் உள்ளத்தை படம்பிடித்து காட்டுகின்றதா? இந்த ஊர்காவல் படை காத்தான்குடி எல்லைகளில்
தங்கியிருந்த புலிகளை காட்டுக்குள் விரட்டிவிட்டார்கள். இதனையடுத்து புலிகளின்
கவனம் ஏராவூர் மீது திரும்பியது. 1990 ஆகஸ்ட் 11
அன்று இரவு ஏராவூரில் இரண்டு கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 122 முஸ்லிம் ஆண், பெண், சிறுவர்கள், சிறுமிகள் கொல்லப்பட்டார்கள்.
புலிகளின் கோழைத்தனமான இந்த தாக்குதலில் பெண் புலிகளும் பங்குபற்றியிருந்தனர்.
அவர்களில் ஒரு பெண் புலி கர்ப்பிணியான ஒரு முஸ்லிம் பெண்ணின்; வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியில்
எடுத்து சுவற்றில் அறைந்து கொன்றிருந்தாள்.
இதன்
பிறகு ஏராவூரிலும் முஸ்லிம் ஊர்காவல் படை உருவாக்கப்பட்டது.
இந்த
ஊர்காவல் படைகள் உருவாக்கப்பட்ட பின்னனியில் புலிகள் கிழக்கின் கட்டப்பாட்டை
இழந்தனர். இதனால் புலித்தலைவர்கள் வடக்குக்கு தப்பியோடியிருந்தனர். தமது தோல்வியை
புலித்தலைமையி;டமிருந்து மறைக்கவே கிழக்குப் புலிகள்
முஸ்லிம்கள் தமிழ் பெண்கள் பத்து பேரை தினமும் வல்லுறவு புரிகின்றனர் என்றும் ஆயிரக்கணக்கில்
அப்பாவித் தழிழர்களை கொல்கின்றனர் என்றும் நீழிக்கண்ணீர் வடித்து நின்றனர்
(முஹம்மத்)
09.11. 2012
Courtesy ஜப்னா முஸ்லிம்