Wednesday, 17 June 2020

''ஒரு பலம் பொருந்திய இயக்கத்தின் போராளியாக இருந்த நான் சரணடைந்த காரணத்தால் கைவிடப்பட்டிருந்தேன். எனக்கு மட்டுமல்ல என் போன்ற பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் நிலைமையும் அதுவாகத்தான் இருந்தது:- 34

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:- 34

* எனக்காக எந்தச் சட்டத் தரணியும் வரவில்லை.. எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப்பட்டார்
* சரணடைந்தவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களைச் சமூகத்துடன் இணைந்து வாழச் செய்யும் இலங்கை அரசின் திட்டம் ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களைப் பாதுகாத்ததுடன், சட்டத்தின் இறுக்கப் பிடியிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தது.

தொடர்ந்து....
எனது வழக்குக்காகப் பதினாலு நாட்களுக்கு ஒருதடவை கொழும்பு அளுத்கடையிலுள்ள நிதிவான் நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்டேன்.
எனக்காக ஒரு சட்டத் தரணியை ஏற்பாடு செய்வதற்காக எனது ஏழை அம்மா மிகவும் கஷ்டப்பட்டார்.
மனித உரிமை அமைப்பு ஒன்றிடம் அம்மா பல தடவை சென்று கேட்டபோதும் அவர்கள் என்ன காரணத்தாலோ எனது வழக்கை எடுத்துக்கொள்ள முடியாது என மறுத்துவிட்டனர்.
நான் விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஒரு வருடமளவும் எனக்காக எந்தச் சட்டத் தரணியும் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
எனது வழக்கைக் கையாண்ட நீதிபதி பலதடவைகள் என்னிடம் உங்களுக்குச் சட்டவாளர் இல்லையா?” எனக் கேட்டபோதுஇல்லைஎன்றே பதிலளித்தேன்.

ஒரு பலம் பொருந்திய இயக்கத்தின் போராளியாக இருந்த நான் சரணடைந்த காரணத்தால் கைவிடப்பட்டிருந்தேன்.

எனக்கு மட்டுமல்ல என் போன்ற பல ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளின் நிலைமையும் அதுவாகத்தான் இருந்தது.

எனது சகோதரியின் உதவியுடன் எனக்காக ஒரு சட்டத் தரணியை அம்மா ஏற்பாடு செய்திருந்தார். அவர் மிகவும் மனிதாபிமானம் கொண்ட ஒரு நல்ல மனிதர்.
நாங்கள் அவருக்கு எந்தப் பணமும் கொடுக்காதபோதும் அவரும் அவரது சக சட்டத் தரணியான மஞ்சுளபத்திரான என்ற சிங்கள சட்டத் தரணியும் எனக்காகப் பல தடவை நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்கள்.
அவர்களால் எனது வழக்கில் ஒரு உடனடியான மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பது எனக்குத் தெரியும்.
இருந்தாலும் அவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தில் எனக்கொரு நம்பிக்கையைத் தருபவர்களாக இருந்தனர். எவருமே எதிர்பாராதபடி எனது வழக்கில் ஒரு அதிசயமான மாற்றம் ஏற்பட்டிருந்தது.

என்னை விசாரணை செய்த சி.ஐ.டி.யினர் எனக்குப் புனர்வாழ்வளிப்பதற்கான ஒப்புதலை வழங்கியிருந்தனர்.

சரணடைந்தவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களைச் சமூகத்துடன் இணைந்து வாழச் செய்யும் இலங்கை அரசின் திட்டம் ஆயிரக்கணக்கான போராளிகளின் உயிர்களைப் பாதுகாத்ததுடன், சட்டத்தின் இறுக்கப் பிடியிலிருந்தும் அவர்களைப் பாதுகாத்தது.

2012.06.22 அன்று கொழும்பு புதுக்கடை நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கம்புலி அவர்கள் வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடப் புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின் என்னை விடுதலை செய்யும்படியான உத்தரவைப் பிறப்பித்தார்.
நீதிமன்ற உத்தரவின்பேரில் வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து 2012.06.26 அன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டேன்.
எனது வாழ்வின் திசைதெரியாத ஒரு இருண்ட கட்டம் முடிவுக்கு வந்திருந்தது.
2012.06.26
அன்று வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்குக் கொண்டு செல்லப் பட்டேன்.

சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் கீழ் இலங்கை இராணுவத்தினரது பொறுப்பிலே புனர்வாழ்வு நிலையம் செயற்படுத்தப் படுவதாக அறிந்திருந்தேன்.
மனதுக்குள் பெரும் குழப்பமாக இருந்தது. நான் அங்கு எப்படி நடத்தப்படப் போகிறேனோ எனப் பயந்தேன்.
சிறைச்சாலையில் நான் பேசக் கற்றுக்கொண்ட சிங்களம் ஓரளவுக்கு உதவிசெய்யும் என்றாலும், நேரடியான யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் துவேசமாகவும் பழிவாங்கும் விதமாகவும் நடந்துகொள்வார்களோ என்ற எண்ணம் இருந்துகொண்டேயிருந்தது.

வெலிக்கடைச் சிறையதிகாரிகளிடமிருந்து என் தொடர்பான சகல ஆவணங்களும் சரிபார்க்கப் பட்டதன் பின்பு புனர்வாழ்வு நிர்வாகம் என்னைப் பொறுப்பெடுத்துக்கொண்டது.
வவுனியா புனர்வாழ்வு முகாமின் இணைப்பதிகாரியாக இருந்த இராணுவ உயர் அதிகாரியின் அலுவலகத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டேன்.
புனர்வாழ்வு நிலையத்தின் நடைமுறைகள் பற்றிய விளக்கங்களை அந்த அதிகாரி எனக்குத் தெரியப்படுத்தினார். நீங்கள் வீட்டிலிருப்பதுபோல இங்கு ஏனைய பிள்ளைகளுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
இங்கிருப்பவர்களுடைய கடந்த காலத்தைப் பற்றிக் கதைப்பது இனித் தேவையில்லாத ஒரு விடயம். நீங்கள் நல்லவிதமாகப் புனர்வாழ்வுப் பயிற்சிகளை நிறைவுசெய்து சமூகத்துடன் கலந்து வாழ வேண்டும் என்பதுவே எங்களது விருப்பம்'' எனத் தெரிவித்தார்.

நான் ஏதாவது தெரிவிக்க விரும்புகிறேனா எனக் கேட்டார். இங்கிருக்கும் காலப் பகுதியில் எந்தக் கட்டத்திலும் ஊடகங்களில் எனது செய்தி வருவதோ, ஊடகவியலாளர்களைச் சந்திப்பதோ எனக்கு மிகவும் சங்கடங்களை உருவாக்கும்என்ற எனது கருத்தை தெரிவித்தேன்.
உங்களது சம்மதமின்றி எந்த ஊடகங்களும் உங்களைச் சந்திக்க முடியாதுஎனக் குறிப்பிட்டார். எனக்கு அதுவே மிகவும் நிம்மதியாக இருந்தது.
(வன்னியி்ல் பிபிஸி நிருபர் ஃபிரான்ஸிஸ் ஹாரிசனுடன்  )
கூட்டுறவுக் கல்லூரிக்குச் சொந்தமான வளாகத்தில்தான் புனர்வாழ்வு நிலையம் இயங்கிவந்தது.
ஒரு பெரிய மண்டபத்தில் பதினாறு பெண்பிள்ளைகள் தங்கியிருந்தனர்.
வெலிக்கடையின் மனித நெருசலுக்குள் சிக்கிக் கிடந்த எனக்கு இந்த இடத்திற்கு வந்தது பெரிய ஆறுதலாக இருந்தது.
இன்னும் சரியாக ஒரு வருடத்தில் நான் வெளியே போகமுடியும் என்ற உணர்வுடன் எனது புனர்வாழ்வுப் பயிற்சிகளில் ஈடுபட ஆரம்பித்தேன்.
ஏற்கனவே அங்கிருந்த பிள்ளைகள் பலவிதங்களிலும் என்னுடன் அன்பாகவும் உரிமையுடனும் பழகினார்கள். அவர்களில் அதிகமானவர்கள் என்னைவிட வயது குறைந்தவர்கள்.
எனக்கு அவர்களுடன் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எப்போதுமே என்னைவிடச் சிறியவர்களுடன் பழகும்போது மிகவும் உற்சாகமாக உணர்வேன்.

அங்கிருந்த பலர் தமக்கு வயது போய்விட்டதாகக் கூறி விரக்தியுடன் வருத்தப்பட்டுக் கொள்வார்கள். எனக்கு அப்படியான வருத்தங்கள் ஒருபோதும் ஏற்பட்டதில்லை.
எப்போதும் மனதைப் பலப்படுத்திக்கொள்வதும், புத்துணர்ச்சியோடு இருக்கக் கற்றுக்கொள்வதும் இளமையைத் தக்கவைக்கும் என்பதே எனது கருத்தாகும்.
புனர்வாழ்வு முகாமில் காலையிலிருந்து மாலை வரையும் இறுக்கமான நாளாந்த நிகழ்ச்சி நிரல் இருந்தது.
வார நாட்களில் பயிற்சி வகுப்புகள், வேலைகள், வெள்ளிக்கிழமை காலையில் ஓம் சக்திஅமைப்பினரின் தியானப் பயிற்சி, ஞாயிற்றுக் கிழமை களில் கிறிஸ்தவ ஆராதனை என எமக்கு ஓய்ந்திருக்க நேரம் கிடைப்பதில்லை.

நான் அங்கிருந்த காலப் பகுதியில் ஆறு மாத காலத் தையல் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. மூன்று மாத கால கணனிப் பயிற்சியும், நான்கு மாத கால அழகுக்கலை பயிற்சியும், ஆங்கில சிங்கள வகுப்புகளும் நடாத்தப்பட்டன.
இவற்றைவிட வணிக முகாமைத்துவம், பால் பொருட்கள் உற்பத்தி, உளவளத் துணைப் பயிற்சி என்பன போன்ற பயிற்சிப் பட்டறைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பல பிள்ளைகள் மிகவும் விருப்பத்துடன் இந்தப் பயிற்சிகளில் கலந்துகொண்டனர்.
ஒருசிலர் வேண்டா வெறுப்பாகக் கட்டாயத்தின் பேரில் கலந்துகொண்டனர்.

வாரந்தோறும் உறவினர்களைச் சந்திக்கும் ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன.
காலை ஒன்பது மணிக்கு வந்து மாலை நான்கு மணிவரை கதைத்துக்கொண்டிருந்து விட்டுச் செல்ல முடியும்.
தொலைபேசியைத் தவிர உணவு, உடைகள் எனத் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
வாசலில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுப் பொருட்கள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டதன் பின்பே உள்ளே அனுமதிக்கப்பட்டது.
எனது தாயார் மாதத்தில் இரண்டு தடவை என்னை வந்து பார்ப்பதை வழமையாக்கி இருந்தார்.

எனக்குப் புனர்வாழ்வளிக்கப்பட உள்ளதாகச் செய்திகள் வெளியானதுமே பல தரப்பட்ட விமர்சனங்கள் எழத் தொடங்கின.
சரணடைந்த காலப் பகுதியின் தொடக்கத்தில் விமர்சனங்களைக் கண்டு நான் மனவேதனைப் பட்டதுபோல இப்போது வேதனைப்படவில்லை.
அந்த விமர்சனம் எங்கிருந்து வருகிறது, என்ன அடிப்படையில் விமர்சிக்கப்படுகிறது என்பதைக் கொண்டு மனித மனங்களை எடைபோடக் கற்றுக் கொண்டேன்.
ராஜ பறவை எனக் குறிப்பிடப்படும் கழுகைப் பற்றிப் பைபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் எனது மனதை மிகவும் வலுப்படுத்தியது என்று சொல்லலாம்.
காற்று எதிராக வீசும்போதும் பறக்கக்கூடிய வல்லமையை அதன் சிறகுகள் பெற்றிருந்தன.
தன்னை முழுவதுமாகப் புதுப்பித்துக் கொண்டு புதுப் பலத்துடன் எழும்பிப் பறக்கும் கழுகைப் போல நானும் என்னைப் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதிபெறத் தொடங்கினேன்.

புனர்வாழ்வு முகாமில் நான் எதிர்பார்த்ததைவிட இராணுவத்தினரும் பெண்களின் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த மேஜர் தர அதிகாரி உட்பட பலரும் கண்ணியமான அணுகுமுறைகளைக் கையாண்டனர்.
பெண் அதிகாரியான கேப்டன் ஜயானி ஹேரத் அங்கிருந்த பிள்ளைகளுடன் ஒரு தாய் போலப் பழகினார் என்பதை மறக்க முடியாது. அதேவேளை புனர்வாழ்வு நடைமுறைகளை இறுக்கமாகக் கடைபிடிப்பதில் மிகவும் கண்டிப்பாகவும் இருந்தார்.
அவர் ஒரு ஆசிரியராக இருந்து பின்னர் இராணுவத்தில் இணைந்து பணியாற்றியிருந்ததால் அந்த ஆசிரியக் குணத்தை அவரிடம் காணக்கூடியதாக இருந்தது.
அவர் எல்லோரிடமும் பழகுவதைப் போலவே என்னுடனும் மிகவும் நட்பாகப் பழகினார். தங்குமிடங்களில் தத்தமது பொருட்களை ஒழுங்கான முறையில் அடுக்கி வைத்துக்கொள்ள வேண்டும் என வற்புறுத்துவார்.
ஓரிரு பிள்ளைகள் அப்படியல்லாது அங்குமிங்குமாகப் பொருட்களை வீசியெறிந்திருப்பதைக் கண்டால் அந்தப் பொருட்களை மேலும் தூக்கியெறிந்துவிடுவது அவரது வழக்கம்.
ஒருநாள் வாசலில் செருப்புகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை என்பதற்காக அவற்றைத் தூக்கித் தூரத்தில் எறிந்துவிட்டுப் போய்விட்டாராம்.
இந்தச் சம்பவம் நான் அங்குப் போவதற்கு முதல் நடந்திருந்தது. இதனால் அங்கிருந்த பிள்ளைகள் அவர் தூரத்தில் வரும்போதேசுனாமி வருகிதுஎனக் கூறுவார்கள்.
ஒருநாள் இரவு எமது தங்குமிடத்தில் பக்கத்திலிருந்த சில பிள்ளைகள் வட்டமாக அமர்ந்து இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
திடீரெனத் திறந்திருந்த ஜன்னலூடாக ஒரு குரல் ஒலித்தது. பிள்ளைகள் சுனாமி வருகிது ஆ . . .அந்த உச்சரிப்பு வித்தியாசமானதாக இருக்கவே உற்று அவதானித்துவிட்டு அனைவரும் சிரிக்கத் தொடங்கினார்கள்.
தன்னைத்தானே சுனாமி எனக் கூறி அனைவரையும் சிரிக்கப் பண்ணியிருந்தார்.

ஏனைய பெண் இராணுவத்தினரும் நெருங்கிய நண்பிகளைப் போலப் பழகினார்கள்.
வீசுகத்திகளைப் பாவித்துப் புல்லு வெட்டுதல் உட்பட எந்த வேலைகளையும் புனர்வாழ்வு பெற்றுவந்த பெண் பிள்ளைகளுடன் சேர்ந்து பெண் இராணுவத்தினரும் மேற்கொண்டனர்.
உண்மையில் புனர்வாழ்வு செயற்றிட்டத்திற்கமைய இராணுவத்தினருக்குத் தொடர்பாடல் மற்றும் உளவியல் பயிற்சிகள் சிறந்த முறையில் வழங்கப்பட்டிருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது.
தமிழினி
தொடரும்
நன்றி : இணையதளம்