Wednesday, 17 June 2020

“இவ ஏன் உயிரோட வந்தவ, இதுகள் செத்திருக்கவேணும், இதுகளை நம்பி நாங்கள் உதவி செய்து போட்டு இங்க வந்திருக்கிறம்” என திட்டிய சிறையிலிருந்த பெண்கள்: - 32

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 32

* புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினரால் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பல பொதுமக்களுடைய வாழ்க்கை அனைவராலும் மறக்கப்பட்டுவிட்டது.
தேர்தல் காலங்களில் பேசப்படும் விடயமாக மட்டுமே தமிழ்க் கைதிகளின் விடுதலை ஆகியிருக்கிறது.

தொடர்ந்து...
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கடலிலும், தரையிலும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் உயிருடன் பிடிபட்ட பெண் போராளிகளும், கரும்புலி நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் வவுனியா மற்றும் கொழும்பு போன்ற நகரங்களில் கைது செய்யப்பட்டவர்களான பெண் கரும்புலி உறுப்பினர்களும் அங்கிருந்தனர்.
நான் அங்குப் போயிருந்தபோது விடுதலைப் புலி வழக்கிலிருந்த ஒரு சில பெண்கள் மட்டுமே என்னுடன் இயல்பாகக் கதைத்துப் பழகினார்கள்.

பெரும்பாலானவர்கள் விலகி நின்றதுடன் என்னைக் கோபமாக விமர்சித்தும் திட்டியும் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள்.
இவ ஏன் உயிரோட வந்தவ, இதுகள் செத்திருக்கவேணும், இதுகளை நம்பி நாங்கள் உதவி செய்து போட்டு இங்க வந்திருக்கிறம்இவ்வாறாக ஏசுவதன் மூலம் இயக்கத்தின் மீதிருந்த கோபத்தினையும் வெறுப்பையும் என்மீது காட்டியவர்கள் அநேகம் பேர்.
எனது காதிற்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே மிகமோசமான வார்த்தைகளால் திட்டிய ஒருசிலரும் இருந்தனர்.

என்னைப் பற்றி வெளியாகியிருந்த அவதூறான செய்திகளை அறிந்திருந்தபடியினால், அதனை உண்மை என்று நம்பிக்கொண்டு என்னை மிகவும் மோசமாக விமர்சித்தவர்களுடன் நான் ஒரு வார்த்தையேனும் திருப்பிக் கதைக்காமல் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்கப் பழகிக்கொண்டேன்.
அங்கிருந்தவர்களில் எவருடைய சிறையிருப்புக்கும். தனிப்பட்ட ரீதியாக நான் பொறுப்பாளியாக இல்லாவிட்டாலும், நான் சார்ந்திருந்த இயக்கம் முழுப் பொறுப்பாக இருந்தது.
என்னைப் போலவே அவர்களும் நாட்டுக்காகச் சேவைசெய்யும் நோக்கத்துடன் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்திருந்த காரணத்தால் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.
அவர்கள் எவ்வளவுதான் என்னை விமர்சித்தாலும் கோபமோ வருத்தமோ ஏற்படுவதற்கு மாறாக அவர்களுடைய நிலையைக் கண்டு வேதனையடைந்தேன்.
இத்தனைக்கும் மத்தியில் கலங்கிய கண்களுடன் பெற்ற தாயைப்போல என்னை அணைத்துக்கொண்ட தாய்மாரும் சகோதரிகளும் அங்கிருந்தனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினரால் ஆதரவாளர்களாகப் பயன்படுத்தப்பட்ட பலர் 2007-09 காலப் பகுதிகளில் பயங்கரவாத தடுப்பு புலனாய்வுப் பிரிவினராலும், சி.ஐ.டீயினராலும் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த தமிழ்ப் பிரதேசங்களிலும், கொழும்பிலும் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் பலர் பூசா தடுப்பு முகாமில் இரண்டு வருடங்களுக்கும் மேலாக விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னர் வெலிக்கடை விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தனர்.
தமது வழக்குகளுக்கு என்ன நடக்கும் எனத் தெரியாத நிலைமையில் விரக்தியடைந்தவர்களாக நீதிமன்றத்திற்குப் போய்வந்து கொண்டிருந்தனர்.
இவர்களுக்கான அடுத்தடுத்த வழக்குத் திகதிகள் அறிவிக்கப்பட்டதே தவிர வேறு எவ்விதமான முன்னேற்றங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.
பொருளாதார வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு சிலர் அதிகமான பணம் கேட்ட திறமையான சட்டத் தரணிகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
பெரும்பான்மையானவர்களுடைய குடும்பத்தவர்கள் சிறைக்கு வந்து பார்த்துச் செல்லவே வசதியற்றவர்கள்.
மனித உரிமைச் சட்டத் தரணிகள் விடுதலைப் புலி வழக்கில் கைதுசெய்யப்பட்டிருந்தவர்களுக்கான சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள்.

நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஒரு பிராமணக் குடும்பத்துப் பெண்ணான வசந்தி சர்மாவை நான் சிறையில் சந்தித்தபோது, அவருடைய நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
அவரது கணவர் மகசீன் சிறையிலும் அவர் வெலிக்கடை சிறையிலுமாக இருந்துவரும் நிலையில் இவர்களது பிள்ளைகள் பராமரிப்பு இல்லமொன்றில் வளர்க்கப்பட்டு வந்தார்கள்.
நடுத்தர வயதைக் கடந்துகொண்டிருக்கும் இவர் சிறைக்கு வந்த காலத்திலிருந்து அனுபவித்துவரும் துன்பங்களை நேரடியாகக் கண்ட பல சிங்களப் பெண்கள் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள்.
அவருக்காகப் பல சிறையதிகாரிகளும் வருத்தப்படுவார்கள். அனைவராலும் ஐயரம்மா என அழைப்படும் இவர் என்னுடன் மிக அன்பாகப் பழகுவார். மனம் திறந்து பேசுவார்.
பிள்ளை, நான் ஒரு இயக்கப் பெண் போராளியையும் நேரடியாகக் கண்டதே கிடையாதுஎன அடிக்கடி கூறும் அவர்மீது சாட்டப்பட்டிருந்த குற்றமும் அதற்கான காரணங்களும் ஜீரணிக்க முடியாதவை.
அந்தத் தாயின் கண்ணீருக்கு நம்பிக்கை மிகுந்த ஒரு ஆறுதல் வார்த்தையைக்கூட என்னால் கூற முடிந்ததில்லை. தொடர்ச்சியான தலைவலி காரணமாக அவர் பாவிக்கும் மாத்திரைகள் வீரியம் கூடியவை.
நாளாந்தம் பருப்பும் சோறும் கிடைக்கிற சைவ உணவுகளையும் மாத்திரமே உட்கொள்ளும் அவரது உடல்நிலை மோசமாகப் பாதிப்படைந்த நிலையில் பல நோய்களையும் உடலிலே சுமந்தபடி அவர் அனுபவிக்கும் துன்பத்திற்கு யாரால் பொறுப்புக் கூற முடியும்?

குழந்தைகளோடு இருந்த தாய்மார் அனுபவித்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.
ஒரு பெண் ஓமந்தை சோதனைச் சாவடியில் தனது கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இன்னொருவர் அனுராதபுரம் பஸ்நிலையத்தில் தனது கைக்குழந்தையுடன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இருவருமே மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவரது கணவர் யுத்தத்தில் காணாமல் போயிருந்தார். இவர்களது ஏனைய பிள்ளைகள் உறவினர்களது பொறுப்பில் வளர்ந்துவந்தனர்.
குழந்தைகளது வளர்ப்புக்குக் கொஞ்சம்கூடப் பொருத்தமேயில்லாத அந்தச் சூழ்நிலையில் பல தொற்றுநோய்களுக்கு உள்ளாகி அந்தக் குழந்தைகள் பல துன்பங்களை அனுபவித்தனர்.
மனிதாபிமானம் கொண்ட சிங்களக் கைதிகள் பலர் அந்தக் குழந்தைகளுக்கான உணவு, உடை, விளையாட்டுப் பொருட்களை வெளியிலிருந்து பெற்றுக்கொடுத்து நிறைய உதவிகள் செய்திருந்தார்கள்.

விடுதலைப் புலிகள் வழக்கில் கைதாகியிருந்த பல இளம் பெண்களுக்கு ஏற்கனவே அவர்களுடைய பெற்றோரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமண ஒழுங்குகள் குழம்பிப் போயிருந்தன.
பல இளம்பெண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதும், அவர்களுடைய காதல் உறவுகளாலும் கைவிடப்பட்டிருந்த நிலையில் பலவிதமான மன உளைச்சல்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.

இயக்கத்தில் போராளிகளாக இருந்து தாக்குதல் நடவடிக்கைகளில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டவர்களும் கைதுசெய்யப்பட்டிருந்தவர்களும் நீண்டகாலமாகத் தமது உறவுகளுடைய தொடர்புகளும் இல்லாமல் சிறைவாசம் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.

மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு இளம்பெண் புலிச் சந்தேக நபர் வழக்கில் சிறைக்கு வந்து முழுமையான மனப் பாதிப்புக்குள்ளாகிப் பைத்தியமாகவே மாறியிருந்தார்.

மலசலகூட வாசற்பகுதியில் சக கைதிகளிடம் அடியும் உதையும் வாங்கிக்கொண்டு கழிந்தது அவருடைய வாழ்க்கை.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இன்னொரு பெண் முகமாலையில் 2001இல் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் காயமடைந்த நிலையில் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தார்.

சிறைக்கு வரும்போது மிக நல்ல மனநிலையில் இருந்த இவருக்கு உறவினர்களுடைய தொடர்புகள் எதுவுமே கிடைக்காத நிலையில் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகிக் கொஞ்சம் கொஞ்சமாக….மனநிலை பாதிப்படையத் தொடங்கியதுடன், ஏனைய கைதிகளுடன் மிகவும் வன்முறையாக நடந்துகொண்டார். இறுதியில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் தனியறையில் அடைத்துவைக்கப்பட்டு, அங்கொடை மனநோயாளர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
 
இப்படியாக நான் வெலிக்கடையில் இருந்த காலத்தில் எழுபதிற்கும் மேற்பட்ட பெண்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்ட வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இதன் பின்னரான காலப் பகுதியில் அதிகமானவர்களுக்கான முடிவுகள் நீதிமன்றத்தினூடாக வரத் தொடங்கின. சிலர் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்னும் சிலரது வழக்குகள் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. எந்த மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார்களோ அந்த மாவட்ட நீதிமன்றத்திற்கு அவர்களது வழக்குகள் மாற்றப்பட்டன.
தொடர்ந்தும் விளக்கமறியலில் இருந்து தமது காலம் கடந்துபோவதை விரும்பாத சில பெண்கள் தம்மீது சாட்டப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையைப் பெறுவதன் மூலம் தமக்கான தண்டனைக் காலம் முடித்து விடுதலையாகிச் செல்லமுடியும் என்ற முடிவுடன் குற்றத்தைப் பொறுப்பெடுக்கத் தொடங்கினர்.

இதேவேளை மட்டக்களப்பைச் சேர்ந்த புவனேஸ்வரி, காத்தாயி ஆகிய இரண்டு பெண்களுக்குப் பதின்மூன்று வருடங்களாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்ததன் பின்னர் இருவருக்கும் தலா ஐந்து வருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்கப்படுவதில்லை என்ற அடிப்படையில் இந்தப் பெண்கள் இருவரும் வழக்கு நடந்த காலங்களிலும் விளக்கமறியலிலேயே வைக்கப்பட்டிருந்தார்கள்.
அதில் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத் தனது தண்டனையை முடித்து வீடு செல்வதற்கு முன்பதாகவே 2013 வெலிக்கடைச் சிறையிலேயே உயிரிழந்துபோனார் என அறிய முடிந்தது.

2010க்குப் பின்னர் இறுதி யுத்தத்தில் சரணடைந்த புலி உறுப்பினர்கள் நூற்றுக்கணக்கில் பூசா தடுப்பு முகாமிலிருந்து வெலிக்கடை சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர்.
அவர்களில் பலர் குறிப்பிட்ட சில நாட்களில் நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்டார்கள். வேறுசிலர் என்னைப் போலவே நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப் பட்டிருந்தனர்.

தைப்பொங்கல், தீபாவளி ஆகிய தினங்களில் கொழும்பு இந்து மாமன்றத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு உடுபுடைவைகளும் சில பாவனைப் பொருள்கள் அடங்கிய பொதிகளும் வழங்கப்படுவது வழக்கம்.
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் சிலரின் உதவியுடன் தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் நானிருந்த காலப் பகுதியில் இரு தடவைகள் உடுபுடவைகளையும், இதர பாவனைப் பொருட்களையும் கொண்டுவந்து வழங்கியிருந்தனர்.
அவர்கள் வரும்போது அங்கிருந்த பிள்ளைகள் அவர்களுடன் கோபமாகச் சண்டையிடுவார்கள். எங்களது விடுதலைக்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள் எனக் கேட்டு முரண்படுவார்கள்.

இறுக்கமான சட்டவிதிகளுக்கமைவாக அவர்களுடைய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலைமையில் அரசியல் ரீதியான அணுகுமுறைகளைக் கையாள்வதன் மூலமாகவேனும் தமக்கு விடுதலை கிட்டாதா என்ற நப்பாசையுடன் இப்போதும் வசந்தி சர்மா, சத்தியா போன்றோர் சிறையில் வாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினரால் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட பல பொதுமக்களுடைய வாழ்க்கை அனைவராலும் மறக்கப்பட்டுவிட்டது. தேர்தல் காலங்களில் பேசப்படும் விடயமாக மட்டுமே தமிழ்க் கைதிகளின் விடுதலை ஆகியிருக்கிறது.
ஆண்கள் சிறையில் நூற்றுக்கணக்கானவர்கள் பாரிய குற்றங்கள் சுமத்தப்பட்டுத் தமது குடும்பங்கைளையும் எதிர்கால வாழ்க்கையையும் இழந்து வருந்திக்கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பொறுப்புச் சொல்லவேண்டிய கடமை இன்று எவருக்குமே இல்லாமல் போய்விட்டது.
 
தமிழினி
தொடரும்
நன்றி : இணையதளம்