Friday, 5 June 2020

எல்.ரீ.ரீ.ஈ யினால் இனசுத்திகரிப்பு செய்யப்பட்ட வடபகுதி முஸ்லிம்கள் -டி.பி.எஸ்.ஜெயராஜ்

வெளியேற்றப் பட்ட சில முஸ்லிம்களின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாக நான் காண்பதுதமிழர்கள் மீது அவர்களுக்கு வெளிப்படையான காழ்ப்புணர்ச்சி குறைவாக இருப்பதையே. தங்களது இக்கட்டான நிலமைக்கும் அதற்கான காரணத்துக்கும் பொறுப்பானவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரே என அவர்கள் உணர்ந்துள்ளார்கள். சாதாரண தமிழர்களை அவர்கள் அதற்காக பழி சொல்வதில்லை. அரசாங்கத்தினதும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினதும் கரங்களில் அகப்பட்டு அல்லல் படும் தமிழர்களின் நிலையை கண்டு அவர்களும் தமிழர்களுக்காக பரிதாபப் படுகிறார்கள்''.


ஸ்ரீலங்காவில் தமிழ் – முஸ்லிம் உறவுகளின் சரித்திரத்தில் இடம்பெற்ற கொடிய மனிதாபிமானமற்ற அத்தியாயத்தின் 22வது ஆண்டு நிறைவை வரலாறு கடந்த வாரம் பதிவு செய்தது. ஒக்டோபர் 1990 ல் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.ரீ.ரீ.ஈ )தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை வட மாகாணத்தை விட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றி இனசுத்திகரிப்பு செய்த அட்டூழியமான நடவடிக்கை நடந்தேறியது. சில குறிப்பிட்ட நாட்களுக்குள் முஸ்லிம்கள் தாங்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த தங்கள் தாயகத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள்.


1990 ல் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட இந்த நடவடிக்கை ஒரு மனிதாபிமானமற்ற துயரம்தோய்ந்த பேரழிவாகும். துப்பாக்கி முனையில் ஒரு மக்களைஅவர்களின் பணம் மற்றும் நகைகளைப் பறித்துக்கொண்டு,அவர்கள் வாழ்ந்த இடத்தை விட்டு வேரோடு பிடுங்கி எறிந்தசெயல் வெறுக்கத் தக்கதும் மன்னிக்க முடியாததுமாகும். இந்த எழுத்தாளர் தனது முந்தைய எழுத்துக்களில் இந்த ஒட்டுமொத்த வெளியேற்றத்தையும் மற்றும் புலிகளின் சித்தாந்தத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிக் கொண்டு அதேவேளை தங்களை மனித உரிமைகளின் காலர்கள் என இப்போது காட்ட முயலும் தமிழ் சமூக அங்கத்தவர்களின் அவமானகரமான செயலைப்பற்றி ஓரளவு  கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.


யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒக்ரோபர் 15ல் சாவகச்சேரியில் உள்ளவர்களில் ஆரம்பித்து ஒக்ரோபர் 30ல் யாழ்ப்பாண நகரத்திலுள்ளவர்களின் வெளியேற்றத்துடன் முடிவுக்கு வந்தது. வடக்கு பெருநிலப்பரப்பில் முஸ்லிம்களை வெளியேற்றும் நிகழ்வு யாழ்ப்பாண நகரத்தில் ஆரம்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு ஆரம்பித்து குடாநாட்டிலிருந்து முஸ்லிம்களை சுத்தப்படுத்திய சில நாட்களின் பின்னர் நிறைவெய்தியது.

வடக்கு முஸ்லிம்களில் பெருந்தொகையானவர்கள் அப்போது மன்னாரில் வசித்து வந்தார்கள். அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணம் மற்றும் மன்னாருக்கு புறமே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம்களும்கூட வெளியேற்றப்பட்டார்கள். வவுனியால் வாழ்ந்த முஸ்லிம்கள் அதிர்ஸ்டசாலிகளாக இருந்தார்கள் ஏனெனில் அவர்கள் வாழ்ந்த கிராமங்களில் பெரும்பகுதி அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்தன. எல்.ரீ.ரீ.ஈ யினரால் வடக்கு பெரு நிலப்பரப்பிலிருந்து 50,000 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள். குடாநாட்டிலிலுள்ளவர்களையும் சேர்த்து 1990 ல் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 75,000 க்கு மேலிருக்கும்.

வடபகுதி முஸ்லிம்கள் அவர்களது சக தமிழர்களுக்குச் சமமான பாதிப்பை அப்போது நடைபெற்ற யுத்தத்தில் அனுபவித்தார்கள். அவர்களும் தமிழ் குடிமக்களைப்போல திவிரமான ஷெல் மற்றும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றபோது காலத்துக்கு காலம் தங்கள் வீடுகளை விட்டு வெளியெறவேண்டியிருந்தது. அவர்கள் எப்போதும் சில நாட்கள் கழித்து தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுவார்கள். ஆனால் கிழக்கு மாகாண நிலமை வித்தியாசமான ஒரு திருப்பத்தை அடைந்திருந்தது.

தமிழ் – முஸ்லிம் பகை உணர்ச்சி கிழக்கில் அதிகரித்து வந்தது. எல்.ரீ.ரீ.ஈயின் சில முஸ்லிம் அங்கத்தவர்கள் அதை கைவிடவும்இராணுவத் தளபதி கருணா மற்றும் அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் என்பவர்களின் கீழிருந்த வேறு சிலர் எதிரியின் பாசறைக்கு செல்லவும் தொடங்கினார்கள். எல்.ரீ.ரீ.ஈ யிலிருந்த மற்றும் சில முஸ்லிம் அங்கத்தவர்கள் அதன் தலைமையினால் கொல்லப்பட்டார்கள். ஒரு முஸ்லிம் எதிர்ப்பு உணர்வு எல்.ரீ.ரீ.ஈக்குள் தலைதூக்கியிருந்தது.

மறுபக்கத்தில் அப்போதிருந்த ஐதேக அரசு மோசமான இந்த உணர்வுகளைப் பயன்படுத்தி காரியம் சாதிக்கத் தொடங்கியது. அநேக முஸ்லிம் சமூக விரோத சக்திகளை உள்ளுர் பாதுகாப்பு காவலர்களாக அரசாங்கம் நியமனம் செய்தது. இந்த பிரிவினர் பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து தமிழ் எதிர்ப்பு வன்முறைகளை தூண்டிவிடத் தொடங்கினார்கள். சில சந்தர்ப்பங்களில் சில தமிழர்களின் கொலைக்கு இந்த முஸ்லிம் உள்ளுர் பாதுகாப்பு காவலர்கள் பொறுப்பாக இருந்துள்ளார்கள். இவர்கள் தலைமை தாங்கிய கும்பல்கள் பல தமிழ் குக்கிராமங்கள் மற்றும் கிராமங்களை அழித்து நாசமாக்கின. பாதுகாப்பு படைகளின் ஒரு பிரிவினரால் அவர்களுக்கு மறைமுக ஆதரவு வழங்கப்பட்டது.

இதற்குப் பதிலடியாக எல்.ரீ.ரீ.ஈ முஸ்லிம் பொதுமக்கள்மீது கொடூரமும் பயங்கரமுமான படுகொலைகளை நடத்தியது. சம்மாந்துறை மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள்மீது தாக்குதல் நடத்தி பிராத்தனை செய்து காண்டிருந்த முஸ்லிம்களை கொலை செய்ததும்மற்றும் ஏறாவூரில் உள்ள சதாம் ஹுசைன் மாதிரிக் கிராமத்தில் பொதுமக்களை படுகொலை செய்ததும் இதற்கான மோசமான உதாரணங்கள்.

தமிழ் – முஸ்லிம் உறவுகள் கிழக்கில் மிகவும் தாழ் நிலையை எட்டியிருந்த போதும்,வடக்கின் நிலைமைகள் அதற்கு முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது. அங்கு இரு சமூகத்தினரும் தொடர்ந்தும் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதற்கான ஒரு காரணம் ஒரு சிறிய அளவான முஸ்லிம்களால் பெரும்பான்மை தமிழர்களுக்கு எதுவித அச்சுறுத்தலும் இல்லாததுதான்.

சாவகச்சேரி


கிழக்கில் முறுகல்கள் இடம்பெற்றுவரும் வேளையில் வடக்கில் முஸ்லிம்கள் அமைதியாக வாழ்வதை கிழக்கு புலிகளால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது. கிழக்கு அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் தலைமையிலான தூதுக்குழுவொன்றுமுஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதற்கு பிரபாகரனை இணங்கச் செய்வதற்காக வடக்குக்கு வந்தது. முஸ்லிம்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று கரிகாலன் வெளிப்படையாகவே வரும்பினார். இந்த வகையான அழுத்தங்கள் புலிகளின் உயர் பீடத்துக்கு வழங்கபட்டுக் கொண்டிருந்தவேளை சாவகச்சேரியில் ஒரு சம்பவம்நடந்தது.

1990 செப்ரம்பர் 4 ல் எல்.ரீ.ரீ.ஈ யின் உதவியாளர்கள் என்றழைக்கப்படும் ஒரு தமிழ் குழுவினர் சாவகச்சேரி மசூதி அருகில் வைத்து சில முஸ்லிம்களுடன் வாய் தர்க்கத்தில் ஈடுபட்டார்கள். சிலர் மசூதியை தாக்கவும்கூட முயற்சித்தார்கள். முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் அதில் தொடர்புபட்டிருந்த தமிழர்கள் சிலரைப் பிடித்து எல்.ரீ.ரீ.ஈயிடம் ஒப்படைத்தனர். புலிகள் அவர்களை விடுதலை செய்ததுடன் தமிழ் பெரும்பான்மையினரை கோபமூட்ட வேண்டாம் என முஸ்லிம் சிறுபான்மையினரை எச்சரிக்கையும் செய்தனர். 

செப்ரம்பர் 25 ந்திகதி குடாநாட்டை விட்டு வெளியேறுவதற்கு எல்.ரீ.ரீ.ஈ தனக்கு பாஸ் வழங்காததையிட்டு ஒரு முஸ்லிம் யுவா எதிர்ப்பு தெரிவித்தபோது அவர் புலி அங்கத்தவர்களால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் காணாமல் போய்விட்டார்.

சாவகச்சேரியில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் நகரிலுள்ள டச்சு வீதியிலேயே வசித்து வந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ யினர் முஸ்லிம்களின் உள்ளக வன்முறை சம்பவம் ஒன்றை விசாரிக்க வந்தவேளை அங்கு சில வாள்கள் இருப்பதை கண்டு பிடித்தார்கள். புலிகளின் விளக்கங்களின்படி இது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது. முஸ்லிம்களின் வீடுகள் கடைகள் மற்றும் வியாபார நிலையங்கள் என்பனவற்றில் எல்.ரீ.ரீ.ஈ தேடுதல் நடத்தி ஒரு முன்னணி முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமான கடையொன்றுக்குள் 75 வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தது. இது ஒரு இரகசிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டது. இந்த விளக்கம் உண்மையானதாக இருந்தாலும்கூடவெறும் 75 வாட்கள் எல்.ரீ.ரீ.ஈயினரின் துப்பாக்கிகளுக்கு எதிராக ஏதாவது பயன்தருமா?

இந்த வாட்கள் கண்டெடுத்த கடையானதுவியாபாரத்துக்காக அடிக்கடி லாரிகளை கொழும்புக்கு பயணப்படுத்தும் ஒரு முஸ்லிம் வியாபாரிக்கு சொந்தமானது என்று கண்டறியப்பட்டது. அளவுக்கு அதிகமான சித்தப்பிரமை கொண்ட எல்.ரீ.ரீ.ஈயின் புலனாய்வுப் பிரிவினர் இதில் ஏதோ பெரிய சதி இருப்பதாக சந்தேகம் கொண்டனர். இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு உபகரணங்கள்,அடிக்கடி கொழும்புக்கு பயணம் செய்யும் முஸ்லிம் வியாபாரியை நாச வேலைகளில் ஈடுபடவோ அல்லது ஒற்றனாக பணியாற்றவோ தூண்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் என உணரப்பட்டது.

எனவே சாவகச்சேரி முஸ்லிம்கள் பிரதானமாக டச்சு வீதியில் வசிப்பவர்கள் 1990 ஒக்ரோபர் 15ல் வெளியேற்றப் பட்டார்கள். ஏறக்குறைய 1000 மக்கள் துப்பாக்கி முனையில் வெளியேறும்படி வற்புறுத்தப் பட்டார்கள். வடமாகணத்தின் தென்பகுதி எல்லையிலுள்ள பட்டினமான வவுனியாவுக்கு அப்பால் செல்லும்படி அவர்களிடம் கூறப்பட்டது. சாவகச்சேரி முஸ்லிம்கள் ஒக்ரோபர் 18ல் வவுனியாவுக்கு வந்தார்கள். ஒருக்கால் சாவகச்சேரி முஸ்லிம்கள் வெளியெறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சங்கிலி தொடர் போன்று அது நீண்டது.

இந்த வெளியேற்றத்தின் சோகம் என்னவென்றால்முஸ்லிம்கள் ஒரு ஆயுதக்குழுவின் கட்டளைக்கு அடிபணிந்து தாங்கள் பரம்பரை பரம்பரையாக குடியிருந்த பிரதேசங்களை விட்டு தப்பியோடவேண்டி இருந்ததுதான். அங்கு கேள்வி இருக்கவில்லைஎதிர்ப்புகள் இருக்கவில்லைஅதுதான் எல்.ரீ.ரீ.ஈயின் அதிகாரம் மற்றும் பயங்கரவாதம் என்பது. தவிரவும் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாகவும் இருந்தார்கள்.

ஐந்து வருடங்களின் பின்னர் 1995ல் தமிழர்களும் பெரும் எண்ணிக்கையில் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றது. பின்னர் 2007 – 2009 காலப்பகுதியில் வடக்கு பெரு நிலப்பரப்பான வன்னியிலிருந்த தமிழர்கள் போர் தீவிரமடைந்ததின் காரணமாக இடத்துக்கு இடம் அலைந்து திரியவேண்டி ஏற்றபட்டது. இறுதியில் அவர்கள் முல்லைத்தீவு கடற்கரையோரமாக இருந்த ஒரு பட்டை போன்ற சிறிய துண்டுப் பகுதிக்குள் கட்டுப்படுத்தப் பட்டார்கள். ஒருவேளை இது செய்த பாவத்தின் கர்ம விதி அல்லது தர்மத்தின் கொள்கை என்றும் சிலர் சொல்லலாம்.

கரிகாலன்

எல்.ரீ.ரீ.ஈ யினால் பின்னர் தரப்பட்ட விளக்கத்தின்படிஒக்ரோபர் மாதம் வடக்கில் பிரசன்னமாகியிருந்த கரிகாலனின் கீழ் இயங்கிய கிழக்குப் பகுதி படைப்பிரிவே இந்த ஒட்டுமொத்த வெளியேற்றத்தை மேற்கொள்ளும் முடிவுக்கு பெருமளவில் பொறுப்பாக இருந்தனர் என்று தெரியவந்தது. முக்கியமாக இது கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு ஒருவகையில் எச்சரிக்கையாக வழங்கப்பட்ட பதிலடி என்றே சித்தரிக்கப்பட்டது. இந்த முடிவு மிகைப் படுத்தப்பட்ட அச்சுறுத்தலுக்கான கருத்தை உருவாக்குவதில் மேலும் செல்வாக்கு செலுத்தியது. முஸ்லிம்கள்தமிழ் சமூகத்துக்கு குழிபறிக்கும் முக்கிய ஐந்தாம் படையாளர்களாக பார்க்கப்பட்டது அப்பட்டமான ஒரு இனவாத மனோநிலையாகும். இந்தப் பின்னணியை கருத்தில் கொண்டுதான் வெளியேற்ற நடைமுறை இடம்பெற்றது.

1981ம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி மன்னார் மாவட்ட சனத்தொகையின் 26 விகிதமானவர்கள் முஸ்லிம்கள். தள்ளாடி தரைப் பாலத்தினூடாக பெரு நிலப்பரப்பை இணைக்கும் மன்னார் தீவில் அவர்களது சனத்தொகை 46 விகிதமாகும். 

மன்னார் தீவிலுள்ள முதன்மையானதும் செல்வச் செழிப்பானதுமான முஸ்லிம் கிராமம் எருக்கலம்பிட்டியாகும். கிட்டத்தட்ட 300 வரையான புலி அங்கத்தவர்கள் 1990 ஒக்ரோபர் 21ல் எருக்கலம்பிட்டியை சுற்றி வளைத்து முஸ்லிம்களின் பணம் நகை மற்றும் பெறுமதியான இலத்திரனியல் உபகரணங்கள் என்பனவற்றை கொள்ளையடித்தனர். ஏறக்குறைய 800 – 850 வீடுகள் இதில் இலக்கு வைக்கப்பட்டன.

ஒக்ரோபர் 22ல் மன்னார் – புத்தளம் எல்லைக்கு அருகிலிருந்த மறிச்சுக்கட்டி எனும் கிராமத்திலிருந்த சில முஸ்லிம்கள்,ஆயுதப் படையினருடன் இரகசிய தொடர்புகளை ஏற்படுத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டின் பேரில் எல்.ரீ.ரீ.ஈ யினால் கைது செய்யப்பட்டார்கள். ஒக்ரோபர் 23ல் மறிச்சுக்கட்டி கிராமத்தவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறும்படி பணிக்கப் பட்டார்கள். இதைத் தொடர்ந்து ஒக்ரோபர் 24ல் மறிச்சுக்கட்டி அமைந்துள்ள உதவி அரசாங்க அதிபர் பிரிவான முசலியை சேர்ந்த அனைத்து முஸ்லிம்களுக்கும் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. யதேச்சையாக முசலி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு உதவி அரசாங்க அதிபர் பிரிவாகும்.

இந்த வெளியேற்ற நடவடிக்கை மன்னாரில் தொடர்ந்து இடம்பெற்றது. ஒக்ரோபர் 24ல்எல்.ரீ.ரீ.ஈ ஒலிபெருக்கி வழியாக மன்னார் தீவில் வாழும் அனைத்து முஸ்லிம்களும்ஒக்ரோபர் 28 க்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் வெளியேற்ற நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்தக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் அறிவிப்புச் செய்தது. 

நாதியற்ற முஸ்லிம்கள் அவ்வாறு செய்வதற்கு தயாராகி தங்கள் உடமைகளை பொதி செய்யலானார்கள். ஒக்ரோபர் 26ல் எல்.ரீ.ரீ.ஈ மீண்டும் எருக்கலம்பிட்டியை ஆக்கிரமிப்புச் செய்து முஸ்லிம்களின் பொதி செய்யப்பட்ட உடமைகள் யாவற்றையும் கைப்பற்றினார்கள்.

மன்னாரில் வாழ்ந்த கத்தோலிக்க மதகுருமார் உள்ளிட்ட அநேக தமிழர்கள் இந்த வெளியேற்ற உத்தரவுக்கு எதிராக எல்.ரீ.ரீ.ஈ யினரிடம் ஆட்சேபணை தெரிவித்தபோதும் அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. பின்னர் எல்.ரீ.ரீ.ஈ இந்த வெளியேற்றத்துக்கான கடைசி நாளாக நவம்பர் 2 ஆக மாற்றியமைத்தது.

ஒக்ரோபர் 28 மாலையில் மன்னார் தீவிலுள்ள,எருக்கலம்பிட்டி மற்றும் இதர முஸ்லிம் பகுதிகளை எல்.ரீ.ரீ.ஈ மூடியது. மன்னார் தீவிலுள்ள மன்னார் நகரம்மற்றும் எருக்கலம்பிட்டிதாராபுரம்புதுக்குடியிருப்புஉப்புக்குளம்கோந்தன்பிட்டி போன்ற பிரதேசங்களிலுள்ள முஸ்லிம்கள் யாவரும் கடற்கரையிலுள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு திரளாகச் சென்று தங்கும்படி வற்புறுத்தப் பட்டார்கள். அங்கு அவர்கள் உணவோ,குடிநீரோ,அல்லது சுய தேவைக்கான முறையான வசதிகளோ இல்லாமல் தனித்து விடப்பட்டார்கள். மன்னாரிலிருந்த கரிசனையுள்ள தமிழ் மக்கள் எல்.ரீ.ரீ.ஈ யினருடன் விவாதம் செய்து கடற்கரையிலிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவும் குடிநீரும் எடுத்துச் சென்று வழங்கினார்கள்.

மன்னார் தீவினை சேர்ந்த முஸ்லிம்கள் கடல்வழியாக 60 மைல்களுக்கு தெற்கிலிருந்த வடமேற்கு மாகாணத்தை சேர்ந்த கற்பிட்டிக்கு கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டனர். மன்னார் மற்றும் புத்தளம் பகுதிகளை சேர்ந்த முஸ்லிம்களின் படகுகள் இந்த நோக்கத்துக்காக பயன்படுத்தப்பட்டன. இந்த முழு நடவடிக்கைகளும் முற்றுப்பெற மூன்று நாட்கள் எடுத்தன. குறைந்தது ஒரு குழந்தையாவது தண்ணீரில் தவறி விழுந்து இறந்தது. சில குழந்தைகளும் மற்றும் வயதானவர்களும் கற்பிட்டியை அடைந்த உடனேயே இறந்து போனார்கள்.

பெருநிலப்பரப்பு


மன்னார் தீவில் வாழ்ந்த முஸ்லிம்களின் பரிதாபமான நிலமை அதுவாக இருந்தால்மன்னார் மாவட்டத்தின் பெருநிலப் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் நிலமையும் அதற்குச் சமமான கேடுகெட்ட நிலையிலிருந்தது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள முசலி உதவி அரசாங்க அதிபர் பிரிவினை சேர்ந்த முஸ்லிம்கள் மற்றும் அதேபோல விடத்தல்தீவுபெரியமடுசன்னார்முருங்கன்வட்டக்கண்டல்பறப்பாங்கண்டல் போன்ற ஏனைய இடங்களில் வாழ்ந்த முஸ்லிம்களையும் அவர்களது உடமைகளான மிதி வண்டிகள்வாகனங்கள்எரிபொருள்,மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் என்பனவற்றை உள்ளுர் பாடசாலை அல்லது மசூதியில் கையளிக்குமாறு ஒக்ரோபர் 25ல் எல்.ரீ.ரீ.ஈ கட்டளை பிறப்பித்தது.

ஒக்ரோபர் 26ல் எப்படி மாவட்டத்தை விட்டு வெளியேறுவது என்ற அறிவுறுத்தல்களைப் பெறுவதற்காக உள்ளுர் எல்.ரீ.ரீ.ஈ அலுவலகத்துக்கு சமூகமளிக்குமாறு அவர்களுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 

ஒவ்வொரு குடும்பமும் தங்களுடன் ஐந்து பயணப் பைகளையும்பணமாக 2000 ருபாவையும்மற்றும் ஒரு தங்கப் பவுணையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். மடுபண்டிவிரிச்சான்மற்றும் வவுனியாவுக்கு அருகில் உள்ள மற்றொரு இடம் என்பனவற்றில் வைத்து முஸ்லிம்கள் சோதனையிடப்பட்டார்கள். மடு மற்றும் பண்டிவிரிச்சான் பகுதிகளில் அதிக பொருட்களை எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் அவைகளைப் பறிமுதல் செய்து அதற்கான ரசீதை எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் வழங்கிய பின்பு அவர்களை செல்ல அனுமதித்தார்கள். ஆனால் வவுனியாவுக்கு அருகில் அநேக பொருட்கள்,சுடுநீர் குடுவைகள் போன்றவைஎழுந்தமானத்துக்கு கொள்ளையடிக்கப்பட்டன. இந்தப் பிரிவு மக்கள் கால்நடையாகவே வவுனியாவை வந்தடைந்தார்கள்.

வடக்கு வன்னி பெரு நிலப்பரப்பின் ஏனைய பகுதிகளிலும் இந்த வெளியேற்றம் நடந்தேறியது. ஒக்ரோபர் 22, காலையில்,முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நீராவிப்பிட்டி எனும் இடத்திலிருந்த சில முஸ்லிம்கள் ஆயுதப்படையினருக்கு தகவல்கள் வழங்குகிறார்கள் என்கிற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். அதே நாள் மாலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்த அனைத்த முஸ்லிம்களும் ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அடுத்த நாள் ஒக்ரோபர் 23ல் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் முஸ்லிம்களை ஐந்து நாட்களுக்குள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என்று கட்டளை வெளியானது. 1981 ன் குடிசன மதிப்பீட்டின்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லிம்கள் 4.6 விகிதமும் கிளிநொச்சியில் 1.6 விகிதமும் வசித்து வந்தார்கள்.


தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவாகள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை.

வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கிஅவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றிஅவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான  பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,

வவுனியா மாவட்டம் 1981ன் குடிசன மதிப்பீட்டின்படி 6.9 விகிதம் முஸ்லிம்களைக் கொண்டிருந்தது. இவர்களில் பெருந்தொகையானவர்கள் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே இருந்தார்கள். எனினும் எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த ஒரு சில முஸ்லிம்களையும் நவம்பர் முதலாம் திகதிக்குள் அங்கிருந்து வெளியேறும்படி கட்டளையிடப்பட்டது.

வன்னியில் வெளியேற்ற நடவடிக்கைகள் நடைபெறும்போதும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பாதிப்புக்குள்ளாகவில்லை. 1981ன் குடிசன மதிப்பீட்டின்படி யாழ்ப்பாண மாவட்டத்தின் சனத்தொகையின் 1.6 விகிதமானவர்கள் முஸ்லிம்களாவார்கள். அவர்களில் சாவகச்சேரியில் வாழ்ந்த ஒரு பகுதியினர் ஏற்கனவே விரட்டப்பட்டு விட்டனர். ஆனால் யாழ்ப்பாண நகரத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் தங்களுக்கு வரக்கூடிய எந்த ஆபத்தையும் காணவில்லை. இது மற்றவர்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் தங்களை யாழ்ப்பாணத்துடன் ஒருங்கிணைத்தே பார்த்தார்கள்.

தங்களின் தமிழ் சகோதரர்களால் தங்களுக்கு எதுவும் நிகழாது. ஹிட்லரின் யுகத்தில்கூட சில யூதர்கள் உருவாகியுள்ள பேரழிவை அலட்சியம் செய்து தங்கள் சாதாரண வாழ்க்கையை தொடர்ந்தது போலவே இதுவும் என அவர்கள் நினைத்தார்கள்.

யாழ்ப்பாணம்

அது முற்றிலும் நேர்மாறாகத் தோன்றியதுமற்றவர்களைவிட யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீது எல்.ரீ.ரீ.ஈ மிகவும் கடுமையாக நடந்து கொண்டது. யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவதற்காக நம்பமுடியாத மிகக் குறுகிய காலக்கெடுவே அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது நவம்பர் மாதத்துக்குள் முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து சுத்திகரிப்பு செய்துவிட வேண்டும் என எல்.ரீ.ரீ.ஈ முடிவு செய்த காரணத்தால் நடந்திருக்கலாம். ஒப்பீட்டளவில் புலிகள் யாழ்ப்பாண முஸ்லிம்களிடத்தில் கடைசியாக வந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ அவர்களுக்கு குறித்த இறுதிக் காலக்கெடு ஒக்ரோபர் 30.


யாழ்ப்பாண முஸ்லிம்களில் அநேகர் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் மேற்கத்தைய நாடுகளில் தஞ்சம் கோரினார்கள். சிலர் கனடாவுக்கும் வந்தார்கள். இவர்களில் அநேகரை நான் ரொரான்ரோவில் சந்தித்து அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தினேன்மற்றும் அவர்களில் சிலர் இப்போது எனது நெருங்கிய நண்பர்கள். அவர்கள் தொடர்பான அச்சம் தோய்ந்த கதைகளையும் வெளியேற்றத்தின் பின்னர் அவர்களின் பயங்கர அனுபவங்களையும் நான் கேடடுள்ளேன். அவர்களின் அனுபவங்கள் கவலை நிறைந்ததாகவும் என்னை பெருமளவு வருத்தப்பட வைப்பதாகவும் இருந்தன.

காலை 10.30 மணியளவில் ஒலிபெருக்கி பூட்டப்பட்ட எல்.ரீ.ரீ.ஈயின் வாகனங்கள் முஸ்லிம்கள் வாழும் இடங்களிலுள்ள வீதிகள் ஒழுங்கைகள் எங்கும் பாய்ந்து திரிந்தன. முஸ்லிம்களின் குடும்பத்தின் ஒரு பிரிதிநிதி மதியம் 12 மணிக்கு ஒஸ்மானியா கல்லூரியின் ஜின்னா மைதானத்துக்கு வரவேண்டும் என்கிற ஒரு ஒழங்கான அறிவிப்பு தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஆயுதம் தாங்கிய புலிகள் வீதிகளில் ரோந்து வரத் தொடங்கினார்கள். சிலர் சனநெருக்கம் மிக்க ஒழுங்கைகள் மற்றும் குச்சு ஒழுங்கைகளுக்குள் உள்ள வீடு வீடாகச் சென்று அறிவிக்கத் தொடங்கினார்கள்

இளம்பரிதி
தாங்கள் செய்துகொண்டிருந்த வேலைகளையெல்லாம் அப்படியே போட்டவிட்டு மக்கள் மைதானத்தை நோக்கி விரைந்தார்கள். பிப் 12.30 மணியளவில் புலித் தலைவர் ஆஞ்சநேயர் அவர்கள் முன் உரையாற்றினார். ஆஞ்சநேயர் பின்னாளில் இளம்பரிதி என்கிற மற்றொரு பெயரால் அழைக்கப்பட்டார். ஆஞ்சநேயர் அல்லது இளம் பரிதி ஒரு குறுகிய செய்தியையே வெளியிட்டார். பாதுகாப்புக் காரணங்களுக்காக எல்.ரீ.ரீ.ஈ உயர்பீடம் சகல முஸ்லிம்களும் யாழ்ப்பாணத்தை விட்டு  இரண்டு மணித்தியாலங்களுக்குள் வெளியெற வேண்டும் எனத் தீர்மானித்துள்ளது. அப்படிச் செய்யத் தவறினால் தண்டனை வழங்கப்படும். என்பதை தவிர வேறு விளக்கம் கொடுபடவில்லை.

மக்கள் கேள்வி அவரிடம் கேள்வி கேட்கத் தொடங்கியதும் இளம்பரிதி தனது அமைதியை இழந்து விட்டார். ''முஸ்லிம்கள் கட்டளைக்கு வெறுமே கீழ்படிய வேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்'' என அவர் உரத்து சீறிப் பாய்ந்தார். பின்னர் அவர் தனது துப்பாக்pயால் வானத்தை நோக்கி பல தடவைகள் சுடத் தொடங்கினார். அவருடைய மெய் பாதுகாவலர்களில் சிலரும் அவரைப் பின்பற்றிச் சுட்டார்கள். செய்தி வெகு தெளிவாக இருந்தது. 

ஆரம்பத்தில் மக்கள்இராணுவம் யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்கப் போகிறது அதனால்தான் எல்.ரீ.ரீ.ஈ எல்லோரையும் வெளியெறும்படி கேட்டுள்ளது என்றுதான் நினைத்தார்கள். ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும்தான் வெளியேறும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை தாமதமாகத்தான் அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

மேலும் மேலும் ஆயுதம் தாங்கிய புலிகள் அந்த இடத்தை நோக்கி வரத்தொடங்கவே அமைதியற்ற நிலையிலிருந்த முஸ்லிம்கள் தங்கள் உடமைகளை பொட்டலம் கட்டத் தொடங்கினார்கள். ஆரம்பத்தில் அவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்களைப்பற்றி எந்த கட்டுப்பாடும் தெரிவிக்கப்படவில்லை. எனவே அவர்கள் துணிமணிகள் மதிப்புள்ள பொருட்கள் நகை என்பனவற்றை பொதி செய்து எடுத்துக் கொண்டார்கள். புலிகளினால் பேருந்துகள் சீருந்துகள் லாரிகள் போன்றவை அவர்களின் போக்குவரத்துக்காக  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அநேக முஸ்லிம்கள் தங்கள் சொந்த வாகனங்களை போக்கு வரத்துக்காக ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ஐந்து முச்சந்தி

தங்கள் வீடுகளைவிட்டு வெளியே பாய்ந்து வந்த முஸ்லிம்களுக்கு இப்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஐந்து முச்சந்தி சந்திப்பில் அவர்கள் அனைவரையும் வரிசையாக நிற்கும்படி கேட்கப்பட்டது. மகிழ்ச்சியற்று வாடிப்போயிருந்த அந்த மக்கள் வரிசையாய் நின்றார்கள் அவர்கள் பயங்கர அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள். 

எல்.ரீ.ரீ.ஈயின் ஆண் மற்றும் பெண் அங்கத்தவர்கள் முஸ்லிம் மக்களிடம் அவர்கள் வைத்திருந்த பணம் உடமைகள் நகைகள் யாவற்றையும் தங்களிடம் ஒப்படைக்கும்படி கேட்டார்கள். ஒவ்வொரு நபருக்கும் தலைக்கு 150 ருபாவை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஒவ்வொரு நபருக்கும் ஒரு செட் உடைகளை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

அற்பமான எதிர்ப்புகள் ஆங்காங்கே கிளம்பின. நான்கு பக்கமிருந்தும் நீண்ட நவீன ஆயுதங்களும் மற்றும் அடக்கும் தொனியில் எழுந்த அச்சுறுத்தல்களும் விரைவிலேயே அவர்களை மௌனமாக்கியது. ஆடைகள் நிறைந்த பெட்டிகள் மற்றும் ஏனைய உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. முதலில் அவை திறக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட ஆடைகள் வெளியே எடுக்கப்பட்டன. 

கால்சட்டை அணிந்த ஒருவருக்கு மேலதிகமாக ஒரு கால்சட்டையும் ஒரு சேட்டும் மட்டும் வழங்கப்பட்டது. சாரம் அணிந்த ஒருவருக்கு மேலதிகமாக மற்றொரு சாரமும் சேட்டும் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. எல்லாப் பணமும் காணி உறுதி மற்றும் அடையாள அட்டை என்பன உட்பட சகலமும் பறிமுதல் செய்யப்பட்டன.

பெண்கள் யுவதிகள் போன்றவர்களிடமிருந்த நகைகள் உருவி எடுக்கப்பட்டன. சில பெண் அங்கத்தவர்கள் மிகவும் கொடூரமான முறையில் காதுத் தோடுகளை காதுத் துளைகளில் இருந்து இரத்தம் வரும்படி இழுத்து எடுத்தார்கள். சிறுவர்களைக்கூட விட்டு வைக்கவில்லை. ஒரு கைக்கடிகாரம் கூட மிஞ்சவில்லை. இந்த முழு நடவடிக்கையையும் மட்டக்களப்பை சேர்ந்த கரிகாலனே மேற்பார்வை செய்ததாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் பின்னர் தெரிவித்தார்கள்.

கிட்டத்தட்ட 35 வரையான செல்வந்த முஸ்லிம் வர்த்தகர்கள் கடத்தப்பட்டார்கள். அவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினால் தடுத்து வைக்கப்பட்டார்கள். சில முஸ்லிம் நகை வியாபாரிகள் மறைத்து வைத்துள்ள தங்கம் பற்றிய விபரங்களை அறிந்து கொள்வதற்காக சித்திரவதை செய்யப்பட்டார்கள். மற்றவர்கள் முன்னால் வைத்து பலமாக அடித்ததில் ஒரு நகை வியாபாரி கொல்லப்பட்டார். பின்னா அவர்களை விடுதலை செய்வதற்காக பெருந்தொகையான பணம் கோரப்பட்டது. சிலர் 30 லட்சம் ரூபா வரை செலுத்தினார்கள். கடத்தப்பட்ட நபர்கள் பின் வந்த வருடங்களில் கட்டம் கட்டமாக விடுதலை செய்யப்பட்டார்கள். எனினும் 13 பேர் திரும்பி வரவேயில்லைமற்றும் அவர்கள் இறந்துவிட்டதாக ஊகிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண முஸ்லிம்களை வெளியேற்றிய பின்னர் எல்.ரீ.ரீ.ஈ அந்த பிரதேசத்தை கயிறுகளினால் சுற்றிக் கட்டியது. 1990 நவம்பர் 2ந்திகதிய வீரகேசரி பத்திரிகை முஸ்லிம்கள் திரும்பி வரும்வரை அவாகள் உடமைகளை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டது என செய்தி வெளியிட்டது. திகைப்பிலாழ்ந்திருந்த சில முஸ்லிம்கள் கூட தங்கள் வெளியேற்றம் தற்காலிகமான ஒன்று என்றுதான் எண்ணினார்கள். இந்த விவகாரங்களின் உண்மை நிலையை அறிந்து கொள்ள அவர்களுக்கு பல மாதங்கள் பிடித்தன. காலம் செல்லச் செல்ல ஒரு காலத்தில் செல்வச் செழிப்பிலிருந்து இப்போத பரம ஏழையாகிவிட்ட முஸ்லிம்கள் இந்த புதிய சூழலுடன் இணங்கிப்போக முடியாதவர்களாக இருந்தார்கள். அவர்கள் பெரிதும் பின்தங்கிப் போனார்கள்.

குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களை பொறுத்த மட்டில் எல்.ரீ.ரீ.ஈ மிகவும் குரூரமாக நடந்து கொண்டது. யாழ்ப்பாண முஸ்லிம்கள்யாழ்ப்பாண மாநகரசபை வட்டாரத்தின் இரண்டு அல்லது மூன்று வட்டாரங்களில் மிகவும் அடர்த்தியாக வசித்து வந்தார்கள் சோனக தெருஓட்டுமடம்மற்றும் பொம்மைவெளி போன்றவைகளே அவர்களது பகுதிகள். யாழ்ப்பாண சமூகத்தின் ஒரு ஒரங்கிணைந்த பகுதியாகவே அவர்கள் வாழ்ந்தார்கள். 

முன்பு ஒரு காலத்தில் யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாண புதிய சந்தை கட்டிடத்தை கட்டியபோதுஅதில் கிட்டத்தட்ட முஸ்லிம்களின் ஆதிக்கமே நிறைந்திருந்தது. மூன்று கட்டிட தொகுதிகளில் இரண்டு முஸ்லிம்களின் ஏகபோக உரிமையாக இருந்தன. வன்பொருட்கள்,லாரி போக்கு வரத்து நகை வியாபாரம் மற்றும் இறைச்சி வியாபாரம் என்பன யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்திலேயே இருந்தன.

யாழ்ப்பாண முஸ்லிம்கள்யாழ்ப்பாணத் தமிழர்களைப் போலவே ஒரு பெருமையான கல்விப் பாரம்பரியத்தை கொண்டிருந்தார்கள். முன்னாள் அரச உத்தியோகத்தரும் மற்றும் ஸகிரா கல்லூரி அதிபருமான ஏ.எம்.ஏ அசீஸ்உச்ச நீதிமன்ற நீதியரசர் அப்துல் காதர்மேன்முறையீட்டு நீதிபதி எம்.எம்.ஜமீல்கல்விப் பணிப்பாளர் மன்சூர் போன்றவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களில் சில முன்னணி பிரமுகர்கள். மாநகரசபை அங்கத்தவர்களும் அவர்களில் இடம்பெற்றுள்ளார்கள்இரண்டு மாநகரசபை அங்கத்தவர்களான பசீர் மற்றும் சுல்தான் ஆகியோர்கள் யாழ்ப்பாண உதவி மேயர் மற்றும் பதில் மேயர் ஆகக் கடமையாற்றியுள்ளார்கள். வெளியேற்றத்துக்கு பிந்தைய அபிவிருத்தி முயற்சியாக யாழ்ப்பாண முஸ்லிம் சட்டத்தரணி இமாம் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

அகதிகள்
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பெரும்பாலான முஸ்லிம்கள் புத்தளம் மாவட்டத்தில் தற்காலிகமாக குடியமர்ந்தார்கள். அநேகர் வவுனியாநீர்கொழும்பு,மற்றும் கொழும்பு ஆகிய இடங்களை நாடிச் சென்றார்கள். ஏனையோர் அனுராதபுரம்குருநாகல்கம்பகாமாத்தளைமற்றும் கண்டி போன்ற மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். பெருமளவிலான யாழ்ப்பாண முஸ்லிம்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.

வடக்கின் பெருநிலப் பரப்பிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் அதிகளவிலான செறிவு கல்பிட்டி மற்றும் புளிச்சகுளம்  பிரதேசங்களிலேயே இருந்தது. யாழ்ப்பாண குடாநாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் அதிகளவிலானவர்கள் புத்தளம் தில்லையாடி பகுதியில் இருந்தார்கள்.

அதேவேளை எல்.ரீ.ரீ.ஈமுஸ்லிம்களின் வீடுகளில் எஞ்சியிருந்த உடமைகளில் அநேகமாக எல்லாவற்றையும் கொள்ளையடித்தது. அநேக வீடுகளின் கூரையில் வேய்ந்திருந்த ஓடுகள்மரச்சட்டங்கள்கதவுகள்யன்னல்கள் போன்றவைகள் கூட உருவப்பட்டன. கொள்ளையடித் தளபாடங்களில் அநேகமானவை மக்கள் கடை எனப்படும் எல்.ரீ.ரீ.ஈ யின் கடைகளின் ஊடாக தமிழர்களுக்கு விற்பனை செய்யப்பட்டன. 


யுத்த நிறுத்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் வடக்குக்கு திரும்பி வந்த சில முஸ்லிம்கள் தங்கள் உடமைகள் அடுத்த வீடுகளிலும் மற்றும் வியாபார நிலையங்களிலும் இருப்பதை அறிந்தனர். அநேக முஸ்லிம்களின் காணிகள்வீடுகள் மற்றும் வாகனங்கள் என்பன சட்டத்துக்கு புறம்பாக எல்.ரீ.ரீ.ஈ யினால் தமிழர்களுக்கு விற்பனை செய்யப் பட்டிருந்தது.

இராணுவம் 1995 – 96ல் யாழ்ப்பாண குடாநாட்டை திரும்பக் கைப்பற்றியது மற்றும் 2009ல் எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவத் தோல்விக்குப் பின்னர் வன்னியை கைப்பற்றியது என்பனவற்றின் விளைவுகளால் வட மாகாணத்தில் முஸ்லிம் மீள் குடியேற்றம் நடைபெற வழியுண்டானது. யுத்தம் முடிவடைந்து விட்ட போதிலும் மீள் குடியேற்றத்துக்கான வேகத்தில் இன்னும் அதிக எதிர்பார்ப்புகள்  எதிர்பார்க்கப் படுகிறது.

1981ம் அண்டு குடிசன மதிப்பின்படி வட மாகாணத்திலுள்ள முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை 50,991 அல்லது 4.601 விகிதம் ஆகும். முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தெரிவிப்பது, 1990ல் இந்த வெளியேற்றம் நடந்தபோது அப்போதிருந்த முஸ்லிம்களின் சனத்தொகை கிட்டத்தட்ட 81,000 என்று. இதில் ஏறக்குறைய யாழ்ப்பாணத்தில் 20,000,மன்னாரில் 45,000, முல்லைத்தீவில் 7000 ,வவுனியாவில் 8000 மற்றும் கிளிநொச்சியில் சுமார் 1000 என்பன உள்ளடங்கும். இவை தவிர வவுனியா மற்றும் நயினாதீவுகளைச் சுமார் 7500; பேர்களும் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இந்த ஒட்டுமொத்த வெளியேற்றம் நடைபெற்ற உடனடியாக 67,000 பேர்கள் தங்களை உள்ளக இடம்பெயர்ந்தவர்கள் முகாம்களில் பதிவு செய்துள்ளார்கள். மீதியுள்ளவர்கள் முகாம்களுக்கு வெளியே உறவினர்களுடனும் மற்றும் நண்பர்களுடனும் தங்கியிருந்தார்கள்.


22 வருடங்களின் பின்னர் இந்த சனத்தொகை இயற்கையான பெருக்கம் காரணமாக இரண்டு மடங்காக உயர்ந்திருக்கும் என நம்பப்படுகிறது. வடபகுதி முஸ்லிம்களில் 75 விகிதமானவர்கள் வடக்குக்கு திரும்பச் சென்று மீள் குடியேறுவதற்கு விருப்பம் தெரிவித்து தங்களை பதிவு செய்துள்ளார்கள். ஆனால் அப்படி செய்வதற்கு விருப்பம் உள்ளபோதிலும், 2012 குடிசன மதிப்பு வெளிப்படுத்துவதுவடபகுதி முஸ்லிம்களில் ஒரு சிறிய அளவினரே தங்கள் தாயகங்களுக்கு நிரந்தரமாகத் திரும்பி வந்துள்ளார்கள் என்று.


மதிப்பீடு

வட மாகாணத்திலுள்ள முஸ்லிம் சனத்தொகை மற்றும் அவற்றின் விகிதாச்சாரம்என்பன முறையே 2012 குடிசன மதிப்பின்படி கீழ் குறிப்பிட்ட மாவட்டங்களில் பின்வருமாறு உள்ளன. மன்னார் 16,087 – 16.2 விகிதம்,வவுனியா 11,700 – 6.8 விகிதம்,யாழ்ப்பாணம் 2139 – 0.4 விகிதம்முல்லைத்தீவு 1760 – 1.9 விகிதம்கிளிநொச்சி 678 – 0.6 விகிதம். 1990 ல் கட்டாய வெளியேற்றம் நடைபெற்ற நேரத்திலிருந்த மதிப்பீடுகளுடன் ஒப்பீடு செய்கையில்அப்போது முற்றாக பாதிக்கப்படாத வவுனியாவை தவிர ஏனைய மாவட்டங்களில் முஸ்லிம்களின் சனத்தொகையில் பாரிய குறைவு என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. வட மாகாணத்தின் தற்போதைய முஸ்லிம்களின் சனத்தொகை 32,396 அல்லது 3.061 விகிதம் மட்டுமே.


இந்த குறைவான முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு பல்வேறு சமூககலாச்சாரபொருளாதாரமற்றும் அரசியல் காரணங்கள் இருக்கலாம். இந்த சிக்கலான காரணங்களை மற்றொரு சந்தர்ப்பத்தில் விரிவாக ஆராய்ந்து விளக்கப்படும். இப்போதைக்கு என்னால் முன்பு எழுதப்பட்ட சில குறிப்புகளை மீண்டும் எழுதி இந்த விடயத்தை முடிக்க விரும்புகிறேன்.

“ வெளியேற்றப் பட்ட சில முஸ்லிம்களின் உயர்ந்த பண்புகளில் ஒன்றாக நான் காண்பதுதமிழர்கள் மீது அவர்களுக்கு வெளிப்படையான காழ்ப்புணர்ச்சி குறைவாக இருப்பதையே. தங்களது இக்கட்டான நிலமைக்கும் அதற்கான காரணத்துக்கும் பொறுப்பானவர்கள் எல்.ரீ.ரீ.ஈ யினரே என அவர்கள் உணர்ந்துள்ளார்கள். சாதாரண தமிழர்களை அவர்கள் அதற்காக பழி சொல்வதில்லை. அரசாங்கத்தினதும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யினதும் கரங்களில் அகப்பட்டு அல்லல் படும் தமிழர்களின் நிலையை கண்டு அவர்களும் தமிழர்களுக்காக பரிதாபப் படுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ,தமிழ் மொழி,அதன் இலக்கியம் மற்றும் ஊடகங்கள் என்பனவற்றின் மீதுள்ள அவர்களது பற்று கொஞ்சமும் குறையவில்லை. இன்னும் சொல்லப்போனால் யாழ்ப்பாணத்தை பற்றிய தங்கள் பழைய நினைவுகளை ஆவலுடன் நினைவுகூர்ந்து வடக்கும் தங்களது தாயகமே என அவர்கள் பெருமையுடன் வலியுறுத்துகிறார்கள்.

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தும் அதை தவிர்த்து அவர்கள் காட்டும் இந்த பெருந்தன்மை தமிழ் சமூகத்தை பெருமளவில் வெட்கித் தலை குனிய வைக்கிறது. ஒரு சில குரல்களைத் தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடுமையை கண்டித்து எல்.ரீ.ரீ.ஈ இழைத்த குற்றத்துக்கு எதிராக சக்தி வாய்ந்த கூக்குரல் எழுப்ப படவில்லை. வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களுக்கு முழு நட்டஈடு வழங்கிஅவர்களது பழைய வீடுகளில் மீள்குடியேற்றிஅவர்களது சொத்துக்களை திரும்ப மீட்டுக் கொடுப்பதோடு தேவையான மாற்று ஏற்பாடுகளையும் வழங்க வேண்டும் என்று ஒரு தீவிரமான  பெரிய கோரிக்கை தமிழர்களால் முன்வைக்கப்பட வேண்டும்,

நல்லிணக்கம் பற்றி தேசிய அளவிலும் மற்றும் உலக அளவிலும் பேசப்பட்டு வரும் இப்படியான சூழலில்வடக்கிலுள்ள தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய இரு பகுதியினரிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டியது கண்டிப்பாக அவசியம். ஒரு உறுதியானதும் உண்மையானதுமான நட்புக்கரம் முஸ்லிம்களை நோக்கி நீட்டப்பட வேண்டும். 22 வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ யினால் நடத்தப்பட்ட திரளான வெளியேற்றத்துக்காகநீதியானதும் பணிவானதுமான ஒரு முற்று முழுதான வெகுஜன மன்னிப்பை முஸ்லிம்களிடம் கோரவேண்டும்.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
-தேனீ-