Saturday 13 June 2020

பெண்களை “மதித்து கௌரவிப்பதில்” ஈழத்து இலக்கியவாதிகள் பாஜகவுக்கே முன்னோடிகள்!


பெருமளவு புலம்பெயர் ஈழத்தமிழரின் வெளிநாட்டு வெள்ளிக்காசு உபயத்தில் மட்டுமே இன்னமும் ஆண்டுக்கொருமுறை தமிழ்நாட்டில் உயிர் பெறும் தமிழ்த்தேசியர்களின் வருடாந்த இருநாள் திவசத்துயர் முடிந்த களைப்பு ஒருபக்கம். பொதுவாழ்வில் தம்மை விமர்சிக்கும் அல்லது எதிர்தரப்பு பெண்களை எதிர்கொள்வதில் பாஜகவினர் தொடர்ந்து பொதுவெளியில் வெளிப்படுத்தும் கீழ்மையால் கனன்று கொண்டிருக்கும் கொந்தளிப்பு மறுபுறமுமாக இருக்கும் தமிழ் சமூக ஊடக வெளியில் நான்காண்டுகளுக்கு முன் நடந்த இந்த சர்ச்சையை நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும்.

தமிழினி என்று அறியப்பட்ட சிவகாமி ஜெயக்குமரன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க மகளிரணி அரசியல் பிரிவுத்தலைவியாக இருந்தவர். ஈழப்போரில் தம் ஒட்டுமொத்த வாழ்வையும் தொலைத்த பல்லாயிரம் பெண்களில் ஒருவர்.
- LR Jagadheesan

இறுதிவரை இயக்கத்தில் இருந்து போராடி முள்ளிவாய்க்காலின் கோரமுடிவுக்குப்பின் இலங்கை இராணுவத்திடம் பிடிபட்டு சிறைக்கொடுமை அனுபவித்து விடுதலையானதும் புற்றுநோய்க்கு பலியானவர். போராட்டமே வாழ்வென வாழ்ந்த அவர் மறைவுக்குப்பின் அவரது தன் வரலாற்று நூலை அவர் கணவர் ஒரு கூர்வாளின் நிழலில்  என்கிற பெயரில் புத்தகமாக வெளியிடுகிறார். அதில் அவர் தன் வாழ்வின் நேரடி அனுபவங்களை அதில் தான் கற்ற பாடங்களை விவரிக்கிறார். அது ஒன்றும் புலிகள் மீதோ பிரபாகரன் மீதோ பெரிய விமர்சன நூல் கூட கிடையாது. புலிகள் தரப்பின் நியாயங்களை ஏற்றுக்கொண்டே பேசும் தமிழினி அந்த அமைப்பு பிழைவிட்ட இடங்களாக தான் கருதியவற்றை சொல்கிறார். அதுவும் லேசுபாசாகத்தான். அதில் ஒன்றும் பெரிய காத்திரமான விமர்சனமெல்லாம் இல்லை. எல்லோருக்கும் ஏற்கனவே தெரிந்ததை லேசுபாசாக சுட்டிக்காட்டினார்.


அவ்வளவுதான். புலிப்பூசாரிகளுக்கு வந்ததே கோபம். அவருக்கு எதிராக ஆத்திரம் ஓயுமட்டும் ஆடித்தீர்த்துவிட்டார்கள். புதைக்கப்பட்ட அவர் உடலை தோண்டி எடுத்து புலிகளின் வழக்கப்படி விளக்கு கம்பத்தில் முச்சந்தியில் கட்டி தொங்கவிடவில்லையே தவிர அவரது corrector assasinationஐ வெறிகொண்டு நடத்தினார்கள்.

தன் ஒட்டுமொத்த வாழ்வையும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காகவே ஒப்புக்கொடுத்த ஒருத்திக்கு தான் கண்டதை தன் கருத்தை சொல்லக்கூட உரிமை இல்லை. அடிமையாய் சேர்ந்தாய். அடிமையாய் இருந்தாய் அப்படியே போகாமல் ஏன் வாய் திறக்கிறாய் என்பதாக ஆத்திரம் பொங்க திட்டித்தீர்த்தார்கள். அதில் பலது பகிரக்கூட முடியாதவை. இதில் உச்சகட்ட அறுவெறுப்பான அர்ச்சனை ஈழத்தமிழ் இலக்கியத்தின் அடுத்த தலைமுறை ஆதர்ஷமென ஆனப்பெரிய இலங்கை மற்றும் இந்திய எலக்கிய ஆளுமைகள் முதல் விமர்சகர்கள் வரை பலதரப்பாராலும் உச்சிமோந்து பாராட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அகரமுதல்வன் என்கிற எலக்கிய அராத்து எழுதிய சாகாள் என்கிற சிறுகதை தான்.

அந்த கதை தமிழினியை எப்படி சிறுமைப்படுத்தியது என்பதை அருண்மொழிவர்மனின் இந்த வரிகள் உங்களுக்கு விளக்கும்.

அகரமுதல்வனின் சாகாள் கதை வெளியான சமகாலப்பகுதியிலேயே தமிழினி எழுதிய ஒரு கூர்வாளின் நிழலில்உம் வெளியாகியிருந்தது. இந்நூலில் தமிழினி விடுதலைப் புலிகள் இயக்கம் பற்றியும், அதன் தலைமை பற்றியும், அரசியல் நகர்வுகள் பற்றியும், போராட்டம் முன்னெடுக்கப்பட்ட விதம் பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். இந்த விமர்சனங்களுக்கான அகரமுதல்வனின் எதிர்வினையாகவோ அல்லது இந்த விமர்சனங்களால் தமிழினி மீது அதிருப்தியுற்றிருந்தவர்களை திருப்திப்படுத்தும் முயற்சியாகவோதான் சாகாள்ஐப் புரிந்துகொள்ளமுடிகின்றது. அத்துடன் சிவகாமிக்கு அல்லது தமிழினிக்கு இவ்வாறாக நடந்தது என்பதை அவரே வாக்குமூலம் சொல்வதாக எழுதுகின்ற புனைவினூடாக அவரது ஒரு கூர்வாளின் நிழலில் என்கிற நூலில் அவர் இவற்றையெல்லாம் குறிப்பிடவில்லை என்றுகூறி ஒரு கூர்வாளின் நிழலில் நூலின் நம்பகத்தன்மையை இல்லாது செய்துவிடலாம் என்கிற மோசமான உத்தி ஒன்றும் இதன்பின்னணியில் இருக்க வாய்ப்புண்டு. சில பஞ்சாயத்து முறைகளில் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு செய்வதை அவர்களுக்கான தண்டனையாக வழங்கும் வழக்கமிருப்பதை செய்திகளில் பார்த்து அதிர்ச்சியடந்திருக்கின்றோம். அவ்வாறான தண்டனையை வழங்கும் அதிகாரம் கைவரப்பெறாத அகரமுதல்வன் தன் எழுத்தினூடாக அந்தத் தண்டனையை சிவகாமி மீதும் சிவகாமியின் பெண்ணுடல் மீதும் நிகழ்த்தியிருப்பதன் விளைவே சாகாள். அதன் உச்சபட்ச விளைவே எய்ட்ஸ் நங்கிஎன்கிற எள்ளிநகையாடல்.

இந்தக் கதையை போர்க்குற்றங்களை அம்பலப்படுத்துவதாக எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிடமுடியாது. போர்க்குற்றங்களை புனைவுகளின் ஊடாக அம்பலப்படுத்துவது என்றால் குற்றம் இழைக்கப்பட்டவர்கள் மீது காண்பிக்கப்பட்டிருக்கவேண்டிய குறைந்தபட்ச பரிவைக்கூட காட்டாமலேயே போராளிகள் காண்பிக்கப்படுகின்றனர். //மெகஸின் சிறையில் கொண்டுவந்து அடைக்கப்பட்டாள். வதைமுகாமில் பறிக்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட்டதே தவிர அங்கிருந்தவர்கள் எல்லாரும் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்// என்று எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் எழுதுகின்றார் அகரமுதல்வன். போரில் கைதாகியும், சரணடைந்தும் சிறைகளில் அடைக்கப்பட்டும், புனர்வுவாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியில் வந்த பெண்கள் இன்றளவும் சமூகத்தில் இயல்புவாழ்க்கைக்குத் திரும்பமுடியாமல் இருக்கின்றபோது இவ்வாறான புனைவுகள் எவ்வளவு குரூரமானவை? போராளிகள் அவர்கள் அமைப்புகளில் போராளிகளாக இருந்தாலும் மீண்டும் பொதுச்சமூகத்தில் இணையவேண்டி ஏற்படும்போது அங்கு நிலவும் சமூகநம்பிக்கைகளை அவர்களும் எதிர்கொள்ளவேண்டியவர்களாக அல்லவா இருக்கின்றார்கள். அப்படி இருக்கின்றபோது இவ்வாறு நடந்ததாக சிவகாமியே வாக்குமூலமாக அரசியல்வாதி ஒருவருக்குக் கூறப்பட்டதாகக் கூறுவதில் என்ன எத்தனை வக்கிரம் இருக்கின்றது? தன் மீது பாலியல் பலாத்காரம் நிகழ்த்தப்படவில்லை என்று தமிழினி பதிவுசெய்கின்றபோது //தொடர்ந்து 23 தடவைகள் எல்லாருக்கும் தெரிந்து வன்புணர்வு செய்யப்பட்ட சிவகாமியை இராணுவக் கோப்ரல் எய்ட்ஸ் நங்கி என்றுதான் இப்போது கூப்பிடுகின்றான்// என்று எழுதுவதை வன்மத்தைத் தவிர வேறு எதைத் துணையாகக்கொண்டு எழுதமுடியும் என்று தெரியவில்லை.



சிவகாமியைத் தாக்கி எழுதுவதை மையாமகக்கொண்ட இந்தக்கதை சிவகாமி மாத்திரமல்ல, கைதுசெய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அத்தனை போராளிகளும் வன்புணர்வுசெய்யப்பட்டார்கள் என்கிறது. மகசீன் சிறையில் இருந்து வெளியில்வந்து வாழ்ந்துகொண்டிருக்கும் அத்தனை பெண்களுக்கு இது எத்தனை உளவியல் சித்திரவதையைத் தரும் என்கிற குறைந்தபட்ச அக்கறையேனும் உள்ள ஒருவரால் இந்தக் கதையை எழுதவோ அல்லது ஏதேனும் காரணங்கள் காட்டியோ அல்லது நிபந்தனைகளில் அடிப்படையிலோ இதைக் கடந்து செல்லவோ ஏனும் முடியுமா?

இக்கதையில் இன்னொரு இடத்தில் வருகின்ற //அக்கா நீங்கள் ஏன் இவங்களிட்ட பிடிபட்டனீங்கள்? இன்னொரு பிள்ளை இவளிடம் கேட்டாள். அந்தக் கேள்வியின் அடியாழத்தில் நீங்கள் குப்பி கடித்திருக்கலாம் என்கிற இன்னொரு சாரமும் இருந்தது// என்ற பகுதி உண்மையில் அகரமுதல்வன் போன்றவர்களின் ஆதங்கமாக இருக்கவேண்டும். போரில் மரணமடையாத, குப்பி கடிக்காத அனைவரும் இவர்கள் பார்வையில் துரோகிகளே அல்லது துரோகம் இழைக்கக் கூடியவர்களே! அதற்கான தண்டனை அவர்களுக்கு எவ்விதத்திலும் வழங்கப்படலாம், இவ்வாறு புனைவுகள் என்ற பெயரில் எந்தவித மனிதத்தனமும் இல்லாத வக்கிரங்களை அள்ளி இறைப்பது உட்பட என்பதே இவர்கள் நிலைப்பாடு.

அகரமுதல்வன் வெறும் இருபத்துமூன்று வயதே ஆனவர் என்பதாகக் கூறி அவர் மீது சலுகைகாட்ட முனைவது அடுத்த அபத்தம். அனுபவமின்மையாலும், அறியாமையாலும் செய்த தவறுகளை வயதைக் காரணம்காட்டி மீளாய்வுசெய்யலாம். ஆனால், //கட்டிலில் கிடந்த சிப்பாய் ஒருவன் எழும்பி வந்து அவளின் பிறப்புறுப்பில் தனது கைகளால் சத்தம் வரும்படி பொத்தி அடித்தான். எல்லாரும் கைதட்டி மகிழ்ந்தார்கள்// என்று எழுதுகின்ற வக்கிரம் இருபத்துமூன்று வயதிலேயே எப்படி வந்தது என்பதுதான் இங்கே கேள்வியாக இருக்கின்றது. இந்த வக்கிரத்தை எல்லாம் போர்க்குற்ற அம்பலப்படுத்தல் என்பதுவும், இப்படி எழுதுகின்றவரை தமிழ்த்தேசியத்தின் ஆதரவாளராகவும், முன்னெடுப்பவராகவும் கூறுவதும் மிகவும் பிற்போக்கான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. உண்மையில் தமிழ்த்தேசியத்தின் ஆதரவாளர்களும், அதனை முன்னெடுப்பவர்களும் முற்போக்குச் சிந்தனைகளையும், தெளிவான பரந்த பார்வையையும் கொண்டியங்குவதே ஆரோக்கியமானது. அதைவிடுத்துத் தமிழ்தேசியத்தை ஆதரிக்கின்றார் என்றோ அல்லது புலிகளை ஆதரிக்கின்றார் என்றோ ஒருவரை ஆதரிப்பதும், பரிவுகாட்டிக் காப்பதும் எமது சமூகத்தில் ஏற்பட்டிருக்கின்ற ஒருவிதமான நோய்க்கூறு என்றே கருதவேண்டும்.

முழு கட்டுரைக்கான இணைப்பு:
பிகு: இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அன்று அகரமுதல்வனை ஆதரித்தவர்கள் இன்று ஜோதிமணிக்காக குரல் கொடுக்கிறார்கள் என்பது தான். நடிப்புசுதேசிகள் சூழ் உலகு

நன்றி - LR Jagadheesan

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.