ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 3
*1996 ஜூலை 17ஆம் திகதி அன்று புலிகள் தமது முழுப்
பலத்தையும் திரட்டி முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது பாரிய தாக்குதலைத்
தொடுத்திருந்தனர்.
‘ஓயாத அலைகள்-1′ எனப் பெயரிடப்பட்டிருந்த நடவடிக்கை மூலமாக
முல்லைப் படைத்தளம் முழுமையாகப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
தொடர்ச்சி..
பூநகரியைப் நடவடிக்கைகளைப் புலிகள்
மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனே இந்த
நடவடிக்கையின் தளபதியாகவும் செயற்பட்டார்.
இவர் இந்தியப் படைகளுடனான புலிகளின் போரில்
தென்மராட்சிப் பகுதியில் தன்னுடனிருந்த சிறிய அணியுடன் சிறப்பாகச் செயற்பட்டு, தலைவரின்
நன்மதிப்பைப் பெற்றிருந்தார்.
இதன் பின்னர் 1993இல் அரசியல் பொறுப்பாளராக
நியமிக்கப்படும்வரை யாழ்ப்பாண மாவட்டத்தின் இராணுவத் தளபதியாக தினேஷ் என்ற
பெயருடன் செயற்பட்டிருந்தார்.
இயக்கத்தின் நிதிப் பொறுப்பாளரான தமிழேந்தி
யாழ்ப்பாணம் இழக்கப்பட்டதன் காரணமாக உணர்வு ரீதியாக மிகவும்
பாதிப்படைந்திருந்தார்.
போராளிகள் மற்றும் தளபதிகள் மத்தியில் நடந்த
ஒரு ஒன்றுகூடலில் அவர் உரையாற்றியபோது, இயக்கத்தின் நிதிநெருக்கடி பற்றி
விளக்கமளித்தார். போராளி களுக்கான நாளாந்த உணவுத் தேவைகள், உடைகள், பாவனைப்
பொருட்கள், மருத்துவச் செலவு என்பவற்றை நிறைவு
செய்வதற்கு மாதாந்தம் பல கோடி ரூபாய்கள் தேவைப்படுவதாகக் கூறினார்.
“நாளாந்தம் சண்டையில் உயிரைக் குடுக்கிற
போராளிகளுக்கு ஒழுங்கான சாப்பாடுகூட இயக்கத்தால குடுக்க முடியுதில்லை” எனக் கூறிக்
கண்ணீர் வடித்தார்.
அங்கிருந்தவர்களின் மனதை அவரது வார்த்தைகள்
கலங்கடித்தன. பின்னரான காலப் பகுதிகளில் வன்னியில் பல பாரிய விவசாயப் பண்ணைகளை அமைப்பதற்கான
அத்திவாரத்தை அவரே இட்டிருந்ததுடன் புலிகள் அமைப்பின் மீது சாதாரண மக்களுக்கு
வெறுப்பேற்படு வதற்கான காரணங்களில் முக்கியமானதான வரிவிதிப்பு முறையையும் அவரே
ஆரம்பித்து வைத்தார்.
அப்போது நான் அரசியல்துறையின் கல்விப்
பிரிவு மகளிர் பொறுப்பாளராகச் செயற்பட்டுக்கொண்டிருந்தேன்.
பொலிகண்டியில் அமைக்கப்பட்டிருந்த மகளிர்
அடிப்படைப் பயிற்சி முகாமில் முப்பத்து மூன்றாம் அணியில் பயிற்சி பெற்ற இருபது
பெண் போராளிகள் எனது பொறுப்பில் விடப் பட்டிருந்தனர்.
தென்மராட்சியில் உள்ள கனகம்புளியடிச்
சந்தியில் இருந்த எமது முகாம் வட்டக்கச்சி விவசாயப் பண்ணை வளாகத்திற்கு
மாற்றப்பட்டிருந்தது.
அரசியல்துறையின் பயிற்சிக் கல்லூரியும்
அவ்வளாகத்திலேயே செயற்பட்டுவந்தது. கல்விக் குழுவால் போராளிகளுக்கும், அரசியல்
வேலைகளுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்த காயமடைந்த போராளிகளுக்கும் வகுப்புகள்
நடாத்தப்பட்டன.
அரசியல்துறைப் போராளிகளின் ஒன்றுகூடல்களும்
அங்கே இடம்பெறுவது வழக்கம். அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், இயக்கத்தின்
முக்கிய உறுப்பினர் பாலகுமாரன் உட்பட அரசியல் ஆய்வாளர்கள் சிலரும் அங்கே
வகுப்புகள் நடாத்தினார்கள்.
‘பெண்களும் சமூகமும்’ என்ற
தலைப்பில் நானும் அங்கு வகுப்புகள் எடுத்திருக்கிறேன். எமது கல்விக் குழுவின்
பணியானது போர்க்களமுனைகள், அடிப்படைப் பயிற்சி முகாம்கள்
ஆகியவற்றிற்குச் சென்று போராளிகளைச் சந்தித்து முன்பு மகளிர் படையணி ஒரே நிர்வாக
அலகாகவே இயங்கி வந்தது.
மகளிர் படையணியின் சிறப்புத் தளபதியே பெண்கள்
அனைவருக்குமான முழுமையான அதிகாரமுள்ள அதிகாரியாக இருந்தார்.
அதன் பின்னரான காலப் பகுதியிலேயே மகளிர்
படையணியானது மாலதி படையணியாகவும் அரசியல்துறை, நிதித்துறை, புலனாய்வுத்துறை, கடற்புலிகள்
எனப் பல்வேறு அலகுகளாகவும் பிரிந்து செயற்படத் தொடங்கியது.
பெண் போராளிகள் செயற் படும் களமுனைகளுக்கு
அடிக்கடி செல்லக்கூடிய சந்தர்ப்பங்கள் எனக்கிருந்ததால் போராளிகளுடைய பல
பிரச்சனைகளையும் என்னால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.
கடற்புலி மகளிர் பயிற்சி முகாம் அமைந்திருந்த
வடமராட்சி கற்கோவளம் கடற்கரைப் பகுதிகளுக்கும் சென்று அரசியல் வகுப்புகளை
நடத்தினேன்.
1996 ஜூலை 17ஆம் திகதி அன்று புலிகள் தமது முழுப்
பலத்தையும் திரட்டி முல்லைத்தீவு இராணுவத் தளம் மீது பாரிய தாக்குதலைத்
தொடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை
அண்மித்திருந்த பகுதியில் மருத்துவப் பின்தளத்தில் நானும் என்னுடனிருந்த கல்விக்
குழுப் போராளிகளும் நிறுத்தப்பட்டிருந்தோம்.
காயமடைந்து வரும் போராளிகளின் குருதி
வெளியேற்றத்தைத் தடுத்து, அவர்களைப் பின்னணியில் இயங்கும் சத்திர
சிகிச்சை நிலையங்களுக்கு வேகமாக அனுப்பிவைக்கும் பணியை மேற்கொண்டிருந்தோம்.
‘ஓயாத அலைகள்-1′ எனப் பெயரிடப்பட்டிருந்த நடவடிக்கை மூலமாக
முல்லைப் படைத்தளம் முழுமையாகப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தது.
அந்தச் சமரில் புலிகளும் படையினருமாக
ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருந்தனர். 1996இல் வன்னிப் போர்க்களத்தின் முதலாவது
பிரம்மாண்டமான வெற்றியைப் புலிகள் நந்திக் கடலோரத்தில்தான் பெற்றிருந்தனர்.
கைப்பற்றப்பட்டிருந்த முகாமுக்கு நானும் ஏனைய
போராளிகளும் போயிருந்தோம்.
அகன்று விரிந்துகிடந்த வங்கக்கடலின் பேரலைகள்
முல்லைத்தீவுக் கரையில் மோதி எமது போராளிகளின் தீரத்தைப் பறைசாற்றிக்
கொண்டிருந்தன.
வடமராட்சியின் ஆழக் கடற்பரப்பை இழந்து
போயிருந்த புலிகள் ‘கடலை ஆள்பவனே தரையையும் ஆளுவான்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில்
முல்லைத்தீவுக் கடலைத் தமது பிரதான தளமாகக்கொண்டு, கடற்புலிகளின் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத்
தொடங்கியிருந்தனர்.
இலங்கைத் தீவின் பெரும் பகுதிக் கடல் ஆளுமை
தம் வசமே இருக்கவேண்டும் என்பதில் இயக்கம் முனைப்பாக இருந்தது.
வங்கக் கடலின் சர்வதேச கப்பல் பாதையின்
அனுகூலங்களையும் புலிகள் பெற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தமையால் கனரக ஆயுதங்களையும்
பீரங்கிகளை யும் வெடிபொருட்களையும் தமக்குச் சொந்தமான கப்பல்கள் மூலம்
நேரடியாகப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியது. இருந்தது.
கடற்புலிகளின் படையணியில் பெண் போராளிகள்
ஆண்களுக்கு நிகராகக் களமுனைச் செயற்பாடுகளை முன்னின்று நடாத்தினர்.
முல்லைத்தீவு முகாம் புலிகளால்
கைப்பற்றப்பட்ட ஒருசில நாட்களிலேயே கிளிநொச்சி நகரத்தைக் கைப்பற்றும் நோக்குடன்‘சத்ஜெய1,2,3′ ஆகிய தொடர் இராணுவ நடவடிக்கையை இலங்கைப்
படையினர் முன்னெடுக்கத் தொடங்கினர்.
வட்டக்கச்சியில் அமைந்திருந்த எமது கல்விக்
குழுப் போராளிகளை வேறு பாதுகாப்பான இடத்திற்கு உடனடி யாக நகர்த்த
வேண்டியிருந்தது. அதே வளாகத்தில் புதிய போராளிகளின் முகாமும் அமைந்திருந்தது.
அதன் பொறுப்பாளர் எனது இடத்திற்கு
வந்திருந்தபோது அவருடன் நூறு புதிய போராளிகளும் அங்கிருந்தனர். போராளிகளை
நகர்த்துவது பற்றி எதுவும் அதுவரையிலும் தனக்குத் தெரிவிக்கப்பட்டிருக்காத
நிலையில் என்ன செய்வது எனப் புரியாமல் அவர் குழம்பிக் கொண்டிருந்தார்.
பயங்கரமான எறிகணை வீச்சுகளுடன் பரந்தன் பகுதி
அதிர்ந்துகொண்டிருந்தது,. தற்பாதுகாப்புக்காக நிலையெடுப்பது என்பதுகூடத் தெரியாத
புதிய போராளிகளை இனியும் அங்கு வைத்துக்கொண்டிருப்பது சரியானதாக எனக்குப்
படவில்லை.
அந்தக் கணத்தில் அவசரமான முடிவொன்றினைப்
பொறுப்பாளர்களின் அனுமதியின்றி நானே எடுக்க வேண்டியதாக இருந்தது.
அப்புதிய போராளிகளின் உயிருக்கு ஏதாவது
ஆபத்து ஏற்பட்டால் நான் எடுத்த முடிவுக்கான தண்டனையை நான் தலைமையிடமிருந்து
பெற்றுக்கொள்ள நேரிடும் என்பது எனக்குத் தெரிந்திருந்தாலும் நான் அப்போராளிகளின்
உயிரைக் காப்பாற்றும் நோக்குடனேயே அந்த முடிவைத் தன்னிச்சையாக மேற்கொண்டேன்.
அடிப்படைப் பயிற்சி முகாம் நிர்வாகத்தினர்
இன்னும் பொறுப்பெடுத்திருக்காத காரணத்தால் பயிற்சிச் சீருடைகள் கூட
அப்போராளிகளுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. வீட்டி லிருந்து வந்த கோலமாகவே
அவர்கள் நின்றிருந்தனர்.
அது மாலைப் பொழுதாக இருந்த காரணத்தால்
அவர்களை அவ்வாறான தோற்றத்துடன் வீதியில் அழைத்துச் செல்வது பெரிய பிரச்சனையாக
இருக்காது என எண்ணினேன்.
எனவே என்னுடனிருந்த இருபது போராளிகளையும்
அவர்களுடன் கலந்து சிறு அணிகளாகப் பிரித்தேன். இந்த நெருக்கடி நேரத்தில் வாகனங்களை
எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்க முடியாது.
எனவே வீதியில் கால்நடையாகவே அழைத்துச்
செல்வது என்ற முடிவுடன் வட்டக்கச்சி மகாவித்தியாலய முன்வீதியில் அவர்களைச் சிறு
அணிகளாக நகர்த்தி இரணைமடுவின் குளக்கட்டு அமைந்திருக்கும் பகுதியின் கீழ் வீதியைக்
கடந்து இரணைமடுச் சந்தியை அடைந்தோம்.
ஏ9 பிரதான வீதியூடாக முறிகண்டியை நோக்கி
மீண்டும் எமது நடைப் பயணத்தைத் தொடர்ந்தோம்.
முறிகண்டியை அடைந்துவிட்டோமானால் ஏ9 பாதையிலிருந்து
விலகிக் காட்டுப் பாதையூடாக எறிகணை வீச்சின் தாக்குதல் பகுதியை அடைந்துவிடலாம்
என்ற நோக்குடன் நடந்தோம்.
புதிய போராளிகள் ஓடியோடி நடந்து வந்ததினால்
களைத்துப் போய் வியர்வையில் தோய்ந்திருந்தார்கள். எறிகணைகள் மிக அண்மையாக
விழுந்து வெடித்துக்கொண்டிருந்ததால் அவர்களில் பலர் பயத்தில் உறைந்திருந்தார்கள்.
முறிகண்டி சந்தியிலிருந்து அக்கராயன்
செல்லும் வீதிக்கு இறங்கி நடந்து சென்றபோது, யூனியன் குளத்தை அண்மித்த பகுதியில்
அரசியல்துறைப் பெண் போராளிகள் தெருவோரமாக ஒரு கொட்டகை அமைத்துத் தங்கியிருந்ததை
எதேச்சையாகக் கண்டோம்.
எனக்கு நன்கு அறிமுகமான வினோ என்ற பெண்
போராளி அம்முகாமுக்குப் பொறுப்பாக இருந்தார். அவருடைய உதவியுடன் சற்றுப்
பாதுகாப்பான காட்டுப் பகுதியில் அந்தப் புதிய போராளிகளை இரவு தங்க வைத்தோம்.
அண்மித்த பகுதிகளில் குடியிருந்த மக்களின்
உதவியுடன் வினோ எமக்கான இரவு உணவைச் சமைத்துத் தந்தார். மறுநாள் காலை எமது
அரசியல்துறை மகளிர் பொறுப்பாள ரான லெப்.கேணல் தாரணி அங்கு வந்து சேர்ந்தார்.
புதிய போராளிகளை அடிப்படைப் பயிற்சி
முகாமுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ததுடன் எமது கல்விப் பிரிவினருக்கான
ஒரு பாதுகாப்பான முகாமையும் அமைக்கும்படித் தெரிவித்தார்.
அன்றிரவு நடந்திருந்த யுத்தத்தில்
இராணுவத்தினர் பரந்தன் பகுதியில் சில குறிப்பிட்ட இடங்களைக் கைப்பற்றிவிட்டதாகவும்
கூறினார்.
இதற்குப் பின்னர் வட்டக்கச்சிப் பண்ணைப்
பகுதிக்கு மீண்டும் செல்ல முடியவில்லை; அது சூனியப் பிரதேசமாக மாறியிருந்தது.
வன்னியில் ஒரு வதிவிடத்தை அமைப்பதற்கு
இடத்தைத் தெரிவு செய்யவேண்டுமாயின் அந்தப் பிரதேசத்தின் புவியியல் அமைப்பு பற்றிய
முழுமையான அறிவு இருந்தேயாக வேண்டும்.
ஏனெனில் சில இடங்களில் நீர்வளம் போதிய அளவு
இருக்கும், சில இடங்களில் அப்படி இருக்காது. எவ்வளவு
ஆழமாகக் கிணறு தோண்டினாலும் தண்ணீரையே காண முடியாது.
அதுமட்டுமல்லாமல் கோடைகாலத்தில் காய்ந்து
வறண்டு போயிருக்கும் பகுதிகள் மாரிக் காலத்தில் வெள்ளநீர் தேங்கியிருக்கும்
குளமாகக் காட்சி தரும்.
நானும் கல்விக் குழுவின் ஆண்கள்
பொறுப்பாளரும் சேர்ந்து கொல்லர் புளியங்குளம் என்ற கிராமத்தில் ஒரு இடத்தைத்
தெரிவு செய்திருந்தோம்.
அது ஒரு காட்டுப் பகுதியாக இருந்தபோதிலும்
அடர்ந்த பெருங்காடாக இருக்கவில்லை. மாறாக ஆங்காங்கு பெரு மரங்களையும் கீழ்
வளரிகளையும் கொண்ட பற்றைக் காடாக இருந்தது.
இடையிடையே கட்டுக் கிணறுகள்
அமைக்கப்பட்டிருந்தன. அப்படியான கட்டுக் கிணறுகளுக்கு அருகில் எமது முகாம்களை
அமைத்துக்கொண்டோம். சுற்றிவர மக்கள் குடியிருப்புக்கள் எதுவும் இருக்கவில்லை.
அருகிலிருந்த சிறிய கோயிலில் பூஜை செய்பவரது
குடும்பம் மட்டுமே அவ்விடத்தில் வாழ்ந்து வந்தது. அவருக்குப் பெரிய காய்கறித்
தோட்டமும் நிறைய மாடுகளும் இருந்தன.
அவர் அந்தப் பிரதேசத்தைப் பற்றிய விஷயங்களை
நன்கு வந்து போய்க்கொண் டிருப்பார்கள். முன்னைய காலங்களில் வெளியிடங்களிலிருந்து
வந்த மக்கள் அந்தப் பிரதேசத்தில் பல்வேறு விதமான பயிர் செய்கைகளில்
ஈடுபட்டிருந்ததாகக் கூறினார்.
ஒருநாள் அதிகாலை எமது முகாமுக்கு அண்மையில்
இருந்த சிறுவெளியில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது எமக்கு அண்மையாகப்
பத்துப் பதினைந்து மான்கள் சாவகாசமாக உலாவிக்கொண்டிருந்தன.
பல கிளைகளாகப் பிரிந்திருந்த கொம்புகளுடன்
அழகும் சாந்தமும் நிறைந்த அந்தப் புள்ளிமான்களின் அழகில் நாம் அனைவரும் மயங்கிப்
போயிருந்தோம்.
அவற்றிற்கு இடையூறு ஏற்படுத்தாதபடி எமது
பயிற்சிகளைச் சற்று நிறுத்திவிட்டு அவற்றை இரசிக்கத் தொடங்கியிருந்தனர்
போராளிகள். அந்தநேரம் இந்த உலகையே மறக்கும்படியான மகிழ்ச்சியில்
திளைத்திருந்தோம்.
இச்சம்பவத்தை எமது ஆண் போராளிகளிடம்
சொன்னபோது “அருமையான சந்தர்ப்பம்; ஒரு மானையாவது
சுட்டிருந்தால் நல்ல இறைச்சி கிடைச்சிருக்கும்” எனக் கூறினார்கள்.
“உங்களுக்கு
எப்பவும் சாப்பாட்டு நினைப்புத்தான்” என எமது பெண் போராளிகள் அவர்களுடன் வாய்த்
தர்க்கத்தில் இறங்கினார்கள். 1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் ‘சத்ஜெய’ சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
தமிழினி
தொடரும்…
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.