Sunday, 14 June 2020

மாத்தையா அண்ணர் மீதான துரோகக் குற்றச்சாட்டு வெளிக் கிளம்பியது. 13

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு -13

* இயக்கத்தின் இரகசியங்கள்: வெளியே சொல்பவருக்கு நூறு கசையடி, கேட்பவருக்கு ஐநூறு கசையடி!!
மாத்தையா அண்ணர் தளபதி சொர்ணத்தினால் மானிப்பாயில் அமைந்திருந்த அவரது முகாம் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்
* இயக்கத்தின் நடவடிக்கைகளிலும் தீர்மானங்களிலும் இருந்த சரி, பிழைகளை இனங்கண்டு கொள்ளவோ அல்லது அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து எமது நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதோ இயக்கத்திற்குள் கற்பனையிலும் நடக்க முடியாத ஒரு காரியமாக இருந்தது.

தொடர்ந்து...
வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் போகிற வழிகளில் உள்ள வெட்டைகளில் எதிர்காற்றுக்குச் சைக்கிள் ஓட்டிச் செல்வதே பெரும் போராட்டமாக இருந்தது.
இந்தக் காலகட்டத்தில் மகளிர் படையணியின் இரண்டாம் நிலைத் தளபதியாகக் கேணல் விதுஷா பொறுப்பெடுத்திருந்தார்.

பெண் போராளிகளுடைய தனிப்பட்ட பிரச்சனைகளையும் நிர்வாகப் பொறுப்பு மாற்றங்களையும் தீர்மானிக்கின்ற அதிகாரம் அவருக்கிருந்தது.
புன்னாலைக்கட்டுவன் பெண்கள் நன்னடத்தைப் பண்ணைக்கு வருகை தந்த அவர் மிகுந்த ஆச்சரியத்துடன் அங்கு நாம் மேற்கொண்டிருந்த வேலைகளைப் பார்த்துப் பாராட்டினார்.

1993 ஏப்ரல் யாழ்ப்பாணம் வலிகாமம் கோட்டத்தின் மகளிர் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டேன். ஊரெழுவில் எமது அரசியல் முகாம் அமைந்திருந்தது.
அங்கு என்னுடன் சேர்த்து இருபது பெண் போராளிகள் இருந்தனர். அவர்கள் அனைவரிலும் நான் இயக்க அனுபவம் குறைந்தவராக இருந்தேன்.
ஆரம்பத்தில் அவர்களை வைத்து எவ்வாறு வேலைகளை நகர்த்தப் போகிறேன் எனக் கலக்கமடைந்தாலும் நாளோட்டத்தில் 
இயக்கத்தில் பெரியதொரு அலையாக மாத்தையா அண்ணர் மீதான துரோகக் குற்றச்சாட்டு வெளிக் கிளம்பியது.
மூத்த போராளிகளிடையே அந்த விடயம் மிகுந்த அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. பலர் அழுதார்கள், இன்னும் சிலர் ஆத்திரப்பட்டார்கள்.

இயக்கத்தின் தலைவர் இந்தியாவில் நிரந்தரமாகத் தங்கியிருந்த 1980 களின் நடுப்பகுதியில், வன்னிப் பிரதேசத்தில் இயக்கத்தைக் கட்டுக் கோப்புடன் வளர்த்ததில் மிக முக்கியப் பங்கு வகித்தவர் மாத்தையா எனப் பல மூத்த பெண் போராளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அத்துடன் வேறு இயக்கத்தில் இணைந்த பெண்களைத் தந்திரமாகப் புலிகள் இயக்கத்தினுள் உள்வாங்கிப் பயிற்சிக்கு அனுப்பியவரும் இவர்தான் எனவும் அப்படி உள்வாங்கப்பட்ட மூத்த பெண் போராளிகள் சொல்லியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்திய இராணுவத்துடனான போரில் புலிகள் ஈடுபடத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் வன்னிப் பகுதியில் பல தாக்குதல்களை வழி நடத்தியவரும், அந்தத் தாக்குதல்களில் ஈடுபட்ட பெண் போராளிகளின் அணிகளை வழி நடத்தியவரும் மாத்தையா அண்ணர்தான் என எமது பயிற்சி ஆசிரியரும் பல தடவைகள் கூறியிருக்கிறார்.

இயக்கத்தில் அனுபவம் குறைந்த ஆரம்பகட்ட அரசியல் போராளியாக இருந்த எனது தனிப்பட்ட உணர்வுகளில் மாத்தையா விவகாரம் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தா விட்டாலும், இயக்கத்தின் பிரதித் தலைவராக இருந்த ஒருவர் மீது ஏற்பட்டிருந்த இந்தக் களங்கம் அதிர்ச்சியாக இருந்தது.

நான் மாத்தையா அண்ணரை இரண்டொரு தடவை மாத்திரமே நேரிலே சந்தித்திருந்தேன்.
 
வடமராட்சியில் அரசியல் போராளிகளுக்கு நடத்தப்பட்ட ஒரு பேச்சுப் பயிற்சி வகுப்பின்போது, குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும் தலைப்புகளில் உடனடியாகப் பேசவேண்டும். எனக்குத் தரப்பட்ட தலைப்பில் நான் பேசி முடித்தபோது சிரித்தபடி மாத்தையா அண்ணர் தனது கரங்களைத் தட்டி என்னைப் பாராட்டிய நினைவு மாத்திரமே இருந்தது.

மானிப்பாயில் அமைந்திருந்த அவரது முகாம், தளபதி சொர்ணத்தினால் சுற்றிவளைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட செய்தியைப் பொதுமக்களும் அறிந்திருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஏற்பட்டிருந்த இந்த விடயம் மக்கள் மத்தியில் பெரிய விடயமாகப் பேசப்பட்டது. மாத்தையாவுக்கு என்ன நடந்தது?” என்ற கேள்வி திரும்பும் திசையெல்லாம் மக்களால் கேட்கப்பட்டது.

எங்களைப் போன்ற இளநிலைப் போராளிகளுக்கு எதுவுமே புரியாத குழப்ப நிலையாகவே இருந்தது. ஆனால் அவர் அண்ணைக்குத் (பிரபாகரன்) துரோகம் செய்துவிட்டார்.
இந்தியாவின் றோஉளவு நிறுவனத்தின் கையாளாக மாறியதுடன் தலைவரைக் கொலை செய்துவிட்டுத் தானே இயக்கத்தின் தலைவராகச் செயற்படுவதற்கு முயற்சித்தார் என எமது மூத்த போராளிகள் விளக்கம்.

அப்பாற்பட்ட விடயங்களை ஆராய்வதும் போராளிகள் செய்யத்தகாத காரியங்களாக இருந்தன.

இயக்கத்தின் இரகசியத்தை வெளியே சொல்பவருக்கு நூறு கசையடிகளும் கேட்பவருக்கு ஐநூறு கசையடிகளும் கொடுக்கப்படும் என்பது பரவலாக இருந்த கருத்தாகும்.
எனவே போராளிகள் கூடியிருந்து தேவையற்ற கதைகளைப் பேசுவதற்குப் பயந்தனர்.

புலிகளின் அரசியல் பிரிவை ஒரு அரசியல் கட்சிக்குரிய கட்டமைப்புகளுடன் மாத்தையா ஒழுங்குபடுத்தியிருந்தார்.

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி, மகளிர் முன்னணி என்ற பெயர்களுடன் மக்கள் மத்தியில் இணக்க சபை’, ‘பிரஜைகள் குழுபோன்ற அமைப்புகளும் இயங்கிக்கொண்டிருந்தன.

போராளிகளின் முகாம்களில் தலைவரும் மாத்தையாவும் சேர்ந்து நிற்கிற படங்கள் பெரிதாகத் தொங்கிக்கொண்டிருந்த காலம்.

இயக்கத்தில் மாத்தையாட ஆக்கள்என்று குறிப்பிட்டுக் கதைக்கும் பழக்கமும் இருந்தது. பெண் போராளிகளில்கூட மாத்தையா அண்ணரில் அளவற்ற விசுவாசமுடையவர்கள் இருந்தனர்.

மாத்தையா கைதுநடைபெற்றதன் பின்பு அவரால் ஏற்படுத்தப்பட்டிருந்த அனைத்து அமைப்புகளிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.

மக்கள் முன்னணியாக இருந்த புலிகளின் அரசியல் பிரிவு அரசியல்துறைஆக்கப்பட்டது.
இதன் பொறுப்பாளராக அதுவரை யாழ்ப்பாண மாவட்டச் சிறப்புத் தளபதியாகச் செயற்பட்டு வந்த தினேஸ் (தமிழ்ச்செல்வன்) நியமிக்கப்பட்டார்.

மாத்தையாவின் அரசியல் வேலைகள் அனைத்தும் முழுமையாக வேறு வடிவங்களை எடுத்தன.

அவரால் உருவாக்கப்பட்டிருந்த கல்விக் குழுவைச் சேர்ந்த போராளிகள் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வேறு வேலைகளுக்குப் பிரித்து அனுப்பப்பட்டனர்.

இயக்கத்திற்குள் மௌனமான குழப்பம்அனைவரது மனங்களுக்குள்ளும் அலை மோதிக்கொண்டிருந்த காலமாக அது இருந்தது.

அப்போது நான் வலிகாமக் கோட்டத்தின் மகளிர் பொறுப்பாளராக இருந்தேன். தினசரி மக்கள் சந்திப்புக்களைச் செய்ய வேண்டிய நிலையும், கூட்டங்களில் உரையாற்ற வேண்டிய நிலையும் எனக்கிருந்தது.

வலிகாமக் கோட்டம் எனும் பெரும் பகுதிக்குள் யாழ்ப்பாணத்தின் மையப்பகுதி அடங்கியிருந்தது. வலிகாமம் கோட்டத்தின் கீழ் ஏழு வட்டச் செயலகங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அதன்படி யாழ் வட்டம், நல்லூர் வட்டம், கோப்பாய் வட்டம், உடுவில் வட்டம், சண்டிலிப்பாய் வட்டம், சங்கானை வட்டம், தெல்லிப்பளை வட்டம் என அமைக்கப்பட்டிருந்த பகுதிகளுக்குள் தெல்லிப்பளை வட்டம் இயங்கவில்லை.
அப்பகுதி மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறி இடம் பெயர்ந்திருந்தனர்.
வலிகாமத்தின் ஏனைய பிரதேசங்கள் பலாலி இராணுவ தளத்தின் அச்சுறுத்தல் பிரதேசங்களாக இருந்த காரணத்தால், மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.
அதனால் அவை மனித நடமாட்டங்களற்ற சூனியப் பகுதிகளின் பெரும்பகுதி கைப்பற்றப்பட்டதன் காரணமாகப் பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்து வலிகாமம் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் வசித்து வந்தனர்.

அந்த மக்களிடையே தீவக கோட்டத்திற்குரிய அரசியல்பிரிவு உறுப்பினர்கள் வேலைத் திட்டங்களை முன்னெடுத்தனர்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் அந்த மக்கள் பட்ட துன்பங்களும் அவர்களுடைய கண்ணீர்க் கதைகளும் ஏராளமானவை.
வலிகாமத்தில் எமது பிரதான வேலைத் திட்டங்களாக இருந்தவை மாதந்தோறும் மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வுகளை நடாத்துதல், கிராம மக்களுடனான சந்திப்புக்களை நடத்துதல், இயக்கத்திற்குப் புதிய போராளிகளை இணைத்தல்,
இயக்கத்தின் சுதந்திரப் பறவைகள், விடுதலைப் புலிகள் ஆகிய பத்திரிகைகளை வீடுவீடாக விற்பனை செய்தல், உயிரிழந்த போராளிகளின் இறுதி நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துதல், காலத்திற்குக் காலம் இயக்கத்தின் தேவைகளுக்கேற்பப் பணிக்கப்படும் வேலைகளை முன்னெடுத்தல் ஆகியன இந்த வேலைகளில் ஈடுபட்ட காரணத்தால் பல இடங்களையும், பல்வேறுபட்ட குண இயல்புகளைக் கொண்ட மக்களையும் அறிந்துகொள்ளும் அனுபவம் எனக்குக் கிடைத்தது.

உண்மையில், மக்களுடன் பேசிப் பழகி அவர்களது இன்ப துன்பங்களில் பங்கெடுக்கும் சந்தர்ப்பங்கள் எமக்குக் கிடைப்பது எம்மை மேலும் பக்குவப்படுத்தும் என்பதை உணர்ந்துகொண்டேன்.

இக்காலப் பகுதியில் இயக்கத்தின் காவல்துறைப் போராளிகள் பிரதேசக் காவல் நிலையங்களை அமைத்துச் செயற்படத் தொடங்கினர்.

அதுவரை மக்களின் பிரச்சனைகளை அரசியல் போராளிகளே தீர்த்து வைத்தனர். அதன் பின்பு அப்படியான பிரச்சனைகள் எமது முகாம்களுக்கு வரும்போது அவர்களைக் காவல்துறைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
கோட்ட மட்டத்திலான வேலைகளில் பெண் போராளிகளுக்கெனச் சில வேலைகள் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டிருந்தன. அதை விடுத்து இயக்கத்தால் மக்கள் மத்தியில் பொதுவாக முன்னெடுக்கப்படும் வேலைகளில் பெண் போராளிகளுக்கும் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகக் குரல் கொடுத்துப் பல ஆண் பொறுப்பாளர்களது எதிர்ப்பையும் முரண்பாடுகளையும் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.

அரசியல் போராளிகளுக்கான அரசறிவியல் பயிற்சிக் கல்லூரிஒன்று இருபாலையில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு அனைத்து உறுப்பினர்களும் ஒன்று சேர்க்கப்பட்டு வகுப்புகள் நடைபெறுவது வழக்கம்.

இயக்கத்தின் மூத்த பயிற்சிகள், விவாத அரங்குகள் என்பனவும் பொதுஅறிவுப் பரீட்சைகளும் நடைபெறும். இப்படியான சந்தர்ப்பங்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அறிவு புகட்டுவதாகவும், அவர்களின் திறமைகளை இனங்காணும் களங்களாகவும் இருந்தன.

புதிதாகக் கல்விப் பிரிவுஒன்றை உருவாக்குவதற்காகப் போராளிகள் தெரிவு செய்யப்பட்டனர்.
 
ஆண் பெண் போராளிகளை உள்ளடக்கிப் பத்துப் பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். கல்விக் குழுப் போராளிகள் ஒவ்வொருவரும் ஒரு பொறுப்பாளருக்குரிய தகமைகளுடன் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனால் தெரிவு செய்யப்பட்டனர்.

யுத்தக் களங்களில் அணிகளை வழிநடத்திய அனுபவமுள்ளவர்களும், மக்கள் மத்தியில் அரசியல் வேலைகளைச் செய்தவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

அந்த அணிக்கு நானும் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். இயக்கத்தில் எந்த வேலையைத் தந்தாலும் ஒரு உடுப்புப் பையைத் தூக்கிக்கொண்டு உடனே புறப்படத் தயாராக இருந்தனர் போராளிகள். நானும் அப்படியே செயற்பட்டேன்.

நின்று நிதானிக்காத காட்டாறுபோலக் காலம் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு இறுக்கமான நிறுவனமாகக் கட்டியெழுப்பப் பட்டிருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் செயற்பட்ட காலம் அதனுடைய உச்ச எழுச்சிக் காலமாகவே இருந்தது.
இயக்கத்தின் நடவடிக்கைகளிலும் தீர்மானங்களிலும் இருந்த சரி, பிழைகளை இனங்கண்டு கொள்ளவோ அல்லது அவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து எமது நிலைப்பாடுகளை மாற்றியமைப்பதோ இயக்கத்திற்குள் கற்பனையிலும் நடக்க முடியாத ஒரு காரியமாக இருந்தது.

மேலும் களமுனையில் நாளாந்தம் எந்தக் கேள்விகளுமே கேட்காது எமது சக போராளிகள் தமது உயிரை இழந்து கொண்டிருந்தார்கள்.

அந்தத் தியாகங்களுக்கு முன்னால் வேறு எதனாலும் எழுந்து நிற்க முடியாதிருந்தது. வீரமரணம்அடையும் வரை விடுதலை இயக்கத்தின் விசுவாசமிக்கப் போராளியாகக் கடமையாற்ற வேண்டும் என்பதைத் தவிர எனது சிந்தனைகளில் வேறு எதுவுமே தென்படவில்லை.

காலநதி எல்லா மேடு பள்ளங்களையும் நிரப்பியபடி வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது

தமிழினி
தொடரும்
நன்றி : இணையதளம்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.