Thursday, 4 June 2020

குரூரப் படுகொலைகளும் குருதியாய்ச் சிவந்த கீழ்வானமும்!! - எஸ்.எம்.எம்.பஷீர்

"காத்தான்குடிப்
பள்ளிவாசலில்
எங்களின் மானுடக்
கனவுகள் அழிந்தன
எமது வேர்களில்
எஞ்சியிருந்த
மனிதமும்
அன்றுடன் தொலைந்து போனது

கல் தோன்றி மண் தோன்றாக்
காலத்து முன் தோன்றியதால்த்தான்
பின்னர் தோன்றிய
"கல்" எங்கள் இதயத்திலும்
"மண்" எங்கள் தலைக்குள்ளும்
புகுந்து கொண்டதோ " 
                                         (கவிஞர் அருந்ததி - பிரான்ஸ்)


வடக்கு கிழக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரை 1990 ஆகஸ்து மாதம் முழுவதும் புலிகளின் திட்டமிடப்பட்ட  இனப் படுகொலைக்கும் இனச் சுத்திகரிப்புக்கும் உட்பட்ட மாதமாகும்

 Ranjith Newton and karikaalan

முஸ்லிம்களின் கறுப்பு ஆகஸ்து (1990) நினைவில் பல தொடர்ந்தேர்ச்சியான படுகொலைச் சம்பவங்கள் கிழக்கில் நடந்தேறின. காத்தான்குடி மீராணியா பள்ளிவாசல் ஹுசைனியாப் பள்ளிவாசல் படுகொலைகள் நடந்து சுமார் பத்து நாட்களின் பின்னர்  11ஆம் திகதி நள்ளிரவில் ஏறாவூர் சதாம் ஹுசைன் நகரிலும் ஏறாவூரின் நகர எல்லைப்பகுதியிலும்    தொடங்கிய புலிகளின் கொலை வெறியாட்டம் அடுத்த நாள் அதிகாலை (12/08/2012) வரை நடைபெற்றது . புலிகளின் அந்தக் குரூர நிகழ்வின்  22வது வருட நினைவு இன்றாகும் . மீண்டும் அக்கோர நிகழ்வை திரும்பிப் பார்த்துக் கொண்டு  அதற்குக் காரணமான புலிகள் அழிந்தொழிந்தபடியால்  ,  எதிர்கால  தமிழ் முஸ்லிம் சமூக ஐக்கியத்துக்கும் சக வாழ்வுக்கும் பரஸ்பர கவுரவுத்துடன் புரிந்துணர்வுடன் வாழ வழி காண வேண்டும் என்ற அவாவுடன்  இக்கட்டுரை பதிவிலிடப்படுகிறது.


தமிழ் ஈழம் அமைக்கும் புலிகளின் திட்டத்திற்க்கு  வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் மிகப் பெரிய இடையூறாக மாறிவருவதை புலிகளின் தலைமைகள் உணர்ந்து கொண்டன. முஸ்லிம்கள் அரசியல் மயப்படுத்தப்படுவது குறிப்பாக " தென் தமிழீழத்தில் "  மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களின் தாயக இலக்கிற்கு ஆதரவளிக்காமல் முஸ்லிம்கள் என்ற வகையில் தங்களுக்குள்ளே அரசியல் ரீதியில் ஒன்றிணைவது தனித்துவம் பேணுவது என்பன புலிகள் எண்பதுகளின் இறுதி பகுதியில் எதிர்கொண்ட சவால்களாகும். 

பொதுவாக கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு  எண்பதுகளின் மத்திய பகுதியில் முஸ்லிம்கள் மீதான் ஆய்தம் தரித்த இயக்க வன்முறைகளினூடாக விரிசலடைந்தது முஸ்லிம்களும் கிழக்கில் தங்களைப் பாதுகாப்பதற்கு அரசை நாட வேண்டி ஏற்பட்டது . புலிகள் தங்களின் ஆயுத பலத்தை அச்சமூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு ஒரு புறம் செயற்பட்டுக் கொண்டு மறுபுறம் முஸ்லிம் இளைஞர்களை புலி இயக்கத்தில் சேர்த்துக் கொண்டு நல்ல பிள்ளை பாசாங்குடன் முஸ்லிம்களுக்குள் ஊடுருவத் தொடங்கினார்கள் . முஸ்லிம் சமூகத்தில் கல்வியறிவற்ற ஏழைச் சிறுவர்கள் பலர் புலிகளின் ஆயுதப் பலத்தை கண்டு கவரப்பட்டு சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அந்தஸ்தினை பெறுவதாக எண்ணி புலிகளில்  இணைந்தனர். அவ்வாறான இணைப்பினூடாக பெற்ற அதிகாரத்தினூடாக  தமது சொந்த சமூகத்தையே தொல்லைக் குட்படுத்துபவ்ர்களாக அவர்கள் மாறினார்.

இந்த விடயம் பற்றி அன்றைய ஐக்கிய தேசிய அரசின் புலியுடனான பேச்சுவார்த்தைக்கு  சமாதான தூதுவராக செயற்பட்ட நியமிக்கப்பட்ட ஏ .சீ. எஸ்.  ஹமீதுடன் இன்று கிழக்கு மாகாண சபையில் போட்டியிடும் அலி  ஸாகிர் மௌலானாவும் மட்டக்களப்புக்கு வந்து புலிகளுடன் பேசுவதில் கலந்து கொண்டிருந்தார். 1989ம்  ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மட்டக்களப்பு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வியடைந்ததும் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உடனடியாக மாறியிருந்த படியினாலும் அவருக்கு புலிகளுடனான தொடர்புகள் (குறிப்பாக கருணா -முரளிதரன்) இருந்த படியினாலும் அவரும் அந்த பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்ற பொழுது நான் இங்கு குறிப்பிடும் புலிகளில் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களைப் பற்றி "தகுதியற்ற மக்களை மதிக்கத் தெரியாத முஸ்லிம் ஏஜெண்டுகள் " என்று ஏ சீ எஸ்,ஹமீத் .புலிகளிடம் கூறியதாகக் குறிப்பிடுகிறார். (தமிழ்ப்) புலிகள் அல்லது தமிழ்ப் புலி ஏஜெண்டுகள் தகுதியானவர்கள் மக்களை மதிக்கத் தெரிந்தவர்கள் என்பது போல்  ஏ சீ எஸ். ஹமீதின் வாய்க்குள் வாத்தைகளைத் திணித்தவர் அலி ஸாகிர் என்பது ஒரு புறமிருக்க அதே புலி இயக்கத்திலிருந்த தகுதியற்ற மக்களை மதிக்கத்தெரியாத ஓரிரண்டு முஸ்லிம் புலியை அல்லது புலி  ஏஜெண்டுகளை அவர்கள் புலியை விட்டுப் பிரிந்த பின்  தான் எம்.பீ யானதும் தனது மெய்ப்பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டவர்  அலி ஸாகிர்



மௌலானா தனது எட்டாம் திகதி பங்குனி மாதம் 2011 ஞாயற்றுக்கிழமை வெளிவந்த தினகரன் சண்டே ஒப்சேர்வர் பத்திரிகை நேர்காணலில்   பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்

“1990களில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையேயான சமாதான பேச்சு ஆரம்பமானது. அரச தரப்பில் பிரதான சமாதான தூதுவராக அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீது நியமிக்கப்பட்டிருந்தார். இந்தக் காலக் கட்டத்தில் கேர்ணல் கருணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அப்போது எம்.பியாக இருக்கவில்லை. கருணா அம்மானுடன் கரிகாலனையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது . அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீத்பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் தலைவராக இருந்த அர்ஜுன அலுவிகாரே ஆகியோருடன் புலிகளைச் சந்தித்தோம். கிழக்கு பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது தொடர்பாக பேச்சு நடத்தினோம். கருணா உடனடியாக அதற்கு செவிமடுத்தார். புலித் தலைமையின் கவனத்திற்கும் உடனடியாகக் கொண்டு வந்தார். 

மட்டக்களப்பு விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் தப்பபிப்பிராயங்கள் களையப்படுவது குறித்தும் பேசினோம். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக புலிகளால் நியமிக்கப்படுகின்ற முஸ்லிம் ஏஜென்டுகள் தரமானவர்கள் அல்ல. தகுதி வாய்ந்தவர்கள் அல்ல மக்களை மதிக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை ஏ. சி. எஸ். ஹமீத் சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார். உடனடியாக குறிப்பிட்ட நபர்களை நீக்கவும் தகுதியானவர்களையும் கனம் பண்ணத் தெரிந்தவர்களையும் நியமித்தார். 

இது பற்றி எழுதிய எனது முழுக் கட்டுரையையும் பார்க்க http://www.bazeerlanka.com/2011/03/blog-post_9158.html )


தங்களுடன் இணைந்து கொண்ட   (புலிகள் தமது கட்டாய ஆட்பிடிப்பினை  முஸ்லிம்களுக்குள் செய்ய முடிய வில்லை) இணைந்த கொண்ட  முஸ்லிம் இளைஞர்களைக் கொண்டு தமது  உறுப்பினர்களின் மேற்பார்வையில் முஸ்லிம் மக்களின் மீதான அடக்கு முறைகளை கட்டவிழ்த்து விட்டார்கள். பலாத்கார நிதி வசூலிப்பு சமூகக் குற்றங்களுக்கு தண்டனை வழங்கள் ஆட்கடத்தல் என்பன நடந்தேறின. 

இந்த சூழ்நிலையில் தான் சமூக நலன்களுக்காக குரல் கொடுத்த முஸ்லிம் புத்தி சீவிகள் சமூக பிரமுகர்கள் முன் வந்தபோது புலிகளால் அவர்கள் மெது மெதுவாக வேட்டையாடப் பட்டனர். 

கிழக்கில் பரவலாக புலிகளின் முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனங்கள் பரவலாக கட்டவிழ்த்து விடப்பட்டாலும் . கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து (புலிகளின் தென் தமிழீழ நடுவீட்டிலிருந்து )  முஸ்லிம்களை வெளியேற்றுவது  தங்களின் மூலோபாயத்தின்  முதற்படி என்பதால் அங்கு தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் அதிகளவான அத்துமீறல்கள் நடந்தேறின.  


இது தொடர்பில் 2008ஆம் ஆண்டு நான் விரிவாக ஆங்கிலத்தில் எழுதிய   கட்டுரையை விரிவாகப் பார்க்க


இந்த பின்னணியில் ஏறாவூர் படுகொலைகளுக்கு முன்பாக மிக முக்கிய சமூகப் பிரமுகர்கள் கடத்தப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு பொதுவான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

அந்த முக்கிய பிரமுகர்களில் ஏறாவூரின் அலிகார் தேசியப் பாடசாலையின் அதிபர் யு எல்.தாவூத் உட்பட ஏறாவூர் பற்று முஸ்லிம் காதி நீதிபதியான அல்ஹாஜ் எம்.எம்.ஏ கபூர் அவரின் மாமனார் வர்த்தகர் ,அலி முஹம்மது ஹாஜியார். இவர்கள் மூவரும் ஜூலை மாதம் மூன்றாம் திகதி (1990) புலிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். 

கபூர் ஹாஜியாரை மக்ரிப் எனப்படும் மாலைத் தொழுகையின் பின்னர் கடத்திக் கொண்டு போன இரண்டு புலிகள்  அவருக்கு  என்ன செய்யப்ப் போவதாக கூறினார்கள் என்பதைக் கூடக் கேட்ட  சாட்சிகளை என்னால் பல வருடங்களின் பின்னர் நேரடியாக விசாரிக்க நேரிட்டது. புலிகள் முழு முஸ்லிம் சமூகத்தின் மீதான எச்சரிக்கையாக இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களைப் பயப் பீதியில் வைத்திருந்தனர். 

இந்த சம்பவம் நடந்து சுமார் ஒரு மாதத்தின் பின்னர் புலிகள் காத்தான்குடியில் பள்ளிவாசல் படுகொலைகள் நடாத்தப் பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தின் வட முஸ்லிம் கிராமமான ஓட்டமாவடிக் கிராமத்தின் மீதான எச்சரிக்கையாக    29/06/1990 அன்று ஹிஜார் பள்ளிவாசலில் ஆறு  முஸ்லிம்கள்  கொல்லப்பட்டார்கள்.  (http://www.bazeerlanka.com/2011/03/1983-1990.html)

அன்று புலிகளில் இருந்த கருணா எனும் முரளிதரன் காத்தான்குடி  ஏறாவூர் படுகொலைகளிலோ   சம்பந்தப்பட்டதற்கான  ஆதராங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஏனெனில் புலிகளின் வரலாறு பற்றி எழுதிய முன்னாள் புலி உறுப்பினர் பின்னாளில்  புலிகளாலே படுகொலை செய்யப்பட்ட அற்புதன் காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலைகள் பற்றி எழுதும் பொழுது அக்கொலைகளில் சம்பந்தப்பட்ட மூன்று முக்கிய புலிகளின்  தலைவர்களான கரிகாலன்நியூட்டன் ரஞ்சித்  பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 

மறைந்த காத்தான்குடி ஜின்னா முதலாளி எனப்படும் நபர் மூலமும் இன்னும் பல தகவல்கள் மூலமும் இம்மூவரின் சமபந்தம் உறுதிப்படுத்தப்படக் கூடியதாகவே உள்ளது. 

இந்த சூழ்நிலையில் கருணா 1990 களின் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் இருந்திருந்தாலும் சித்திரை மாதம்   1990 ஆம் ஆண்டு சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை பேத்தாளையிலிருந்து புலிகளின் சிறுவர் படைக்கு  ஆட்சேர்க்க கடத்திச் சென்றதாக ஒரு செய்தி இருப்பினும்  குறிப்பிட்ட காத்தான்குடி ஏறாவூர் சம்பவங்களின் போது கருணா எனப்படும் முரளிதரன்  மட்டக்களப்பில்  இருக்கவில்லை  எனபதை இலங்கை இராணுவத்தின் உளவுப் பிரிவில் பணியாற்றிய ஒரு முஸ்லிம் உயர் உத்தியோகத்தர் என்னிடம் உறுதி செய்தார். அவர் அந்தக் கால கட்டத்தில் கருணா வன்னியில் இருந்து  மட்டக்களப்பில் உள்ள புலிகளுடன் கதைத்த சம்பாசனைகளை அவரே கையாண்டார். என்றும் கருணாவிற்கு இராணுவ சங்கேத பாசையில் வழங்கப்பட்ட பெயர் "கிலோ நவம்பர்" என்றும் குறிப்பிட்டார். 

இது பற்றி நான் முன்னரே எனது கட்டுரைகளில் எழுதியுள்ளேன்  என்றாலும் இங்கு கருணா பற்றி வேறு பல குற்றச்சாட்டுக்கள் உண்டு என்றாலும் குறிப்பிட்ட காத்தான்குடி ஏறாவூர் சம்பவங்களுக்கு கருணா பொறுப்பல்ல என்பதை அவர் கருணா புலிகளிலிருந்து பிரிய முன்னரே என்னிடம் நேரடியாக தெரிவித்த தகவலாகும். அந்த வகையில் சந்திரகாந்தன் இயக்கத்தில் அந்த வருடம் சித்திரை மாதம் சேர்ந்ததால் அவரும் சேர்ந்து சில மாதங்களில் இவ்விரு படுகொலைகளும் ஆகஸ்து மாதம் 1990 (ஆவணி) இடம் பெற்றதும் மேலும் கலந்து கொண்டவர்களில் பலர் நன்கு பயிற்றப்பட்ட  புலிகள் என்பதும் எமது விசாரணைகளில் தெரிய வந்த சங்கதிகளாகும். சந்திரகாந்தன் புலிகளின் பயிற்சிகால கட்டத்தைப் பொறுத்தவரை (புலிகளின் பயிற்சிக் கை நூலின்படியான தகவல்களின் படி )  பங்கு கொண்டிருக்க வாய்ப்பில்லை . 

எவ்வாறேனினும் இந்த சம்பவம் நடந்து இன்றுடன் இருபத்திரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. புலிகளில்  அட்டகாசம் புரிந்தவர்கள் சிலர் கிழக்கிலே புதிய பிறவிகளாக புனர் ஜென்மம் எடுத்ததனால் புலிகளின் அஸ்தமனமும் துரிதப்படுத்தப்பட்டது. புலிகள் அழிக்கப்பட்டுப் போனார்கள்   சகல சமூகங்களும் ஆயுதப் போராட்டத்தால் சொல்ல முடியாத இன்னல்களை அனுபவித்துள்ளார்கள். அதுவும் புலிகளின் மிலேச்சத்தனமான இனப்படுகொலைகளால் இனச் சுத்திகரிப்பால் முஸ்லிம்கள் மறக்க முடியாத ஒரு வரலாற்றுச் சோகத்தை சுமந்தவர்களாகவே இன்றும் இருக்கிறார்கள். இராணுவ அத்துமீறல்களால் தமிழர்களும் பல துன்பங்களை நினைவு கூரக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். சிங்களவர்களும் புலிப் பயங்கரவாதத்தின் இன்னலுக்குட்பட்டே இருந்திருக்கிறார்கள் . எனவே இந்த நாளின் சோகங்களோடு நமக்கு முன்னாள் நடந்து முடிந்துவிட்ட  மாற்றங்களையும் அவதானித்து இன குரோத செயற்பாடுகளை தணிக்கும் வழி வகைகளை அறிவுபூர்வமாக கையாளவேண்டியதே இன்றைய நமது  பாரிய பணியாகும்.
- எஸ்.எம்.எம்.பஷீர்