Friday, 5 June 2020

“முடங்கிப்போய் நிற்கும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம்: தடையாக நிற்கும் தமிழ்-முஸ்லிம் மீளொருங்கிணைப்பு”


கலாநிதி எம். எஸ். அனீஸ்சிரேஷ்ட விரிவுரையாளர்:
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முழுமையாக முற்றுப்பெற்றுள்ளன. அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்போரின் மீள்குடியேற்றப் பணிகள் பலமட்டங்களிலும் பல்வேறு பிரிவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்த ஏறத்தாள 300,000 மேற்பட்ட வன்னித்தமிழ் மக்களை முடியுமானவரை வேகமாக மீள்குடியேற்றம் செய்துவிட்டதாக அரசாங்கம் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் மார்தட்டிக்கொள்கின்றது.



மக்கள் கம்பிவேலியினாலான மாணிக்க பண்ணை (மெனிக் பார்ம்) முகாம்களை விட்டு வெளியேற்றப்பட்டு தமது பூர்வீக இருப்பிடங்களை நோக்கி அனுப்பப்பட்டுள்ளார்கள். எனினும் இன்னும் அவர்கள் தமது அடிப்படை வசதிகளைக்கூட பெறமுடியாமல் தவித்துக்கொண்டிருப்பதாகவும்தமது மீள்குடியேற்றம் என்பது பெயரளவிலானதே என்று தமிழ் மக்கள் தரப்பில் பலமானதும் தொடர்ச்சியானதுமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறு உள்நாட்டில் யுத்தத்தின்போது பாதிக்கப்பட்ட மற்றுமொரு பிரிவினர்தான் “வடக்கு முஸ்லிம்கள்” ஆவர். 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி இரண்டு மணித்தியால அவகாசத்தில் விடுதலைப் புலிகளினால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டு கடந்த 23 வருடங்களாக வடக்கிற்கு வெளியே பல்வேறு அரசியல்சமூகபொருளாதார மற்றும் கலாச்சார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்த நிலையில் வாழ்ந்துவரும் யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவற்றில் காணப்படும் தடங்கல்கள் தொடர்பாகவே இக்கட்டுரை விசேடமாக ஆராய்கின்றது.

பல நூற்றாண்டுகால வரலாற்றை உடைய யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது பூர்வீக பிரதேசங்களை விட்டும் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட நிகழ்வானது விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் ஒரு கறைபடிந்த நிகழ்வு மட்டுமின்றி ஒரு வரலாற்றுத்தவறாகவும் பலராலும் இன்றுவரை பார்க்கப்படுகின்றது. ஒரு இனச்சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலின்கீழ் இம்மக்கள் வேரோடு பிடுங்கியெறியப்பட்ட நிகழ்வானது ஒரு மனிதாபிமானமற்ற ஒரு செயல் மட்டுமின்றி எந்தவொரு நாகரீக சமூகத்தினாலும் ஜீரணிக்க முடியாத ஒரு துரோகச் செயலாகும். இன்று இவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக எதிர்கொள்ளப்படும் சவால்களைப் பற்றி ஆராயமுன்னர்முதலில் இவர்கள் எவ்வாறானதொரு அரசியல் பின்புலத்தில் வெளியேற்றப்பட்டார்கள் என்பதை சிறிது ஆராய்வது சாலப்பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் அவ்வாறதானதொரு ஆய்வின் மூலம்தான் இன்றைய யதார்த்த நிலையை நாம் சரிவரப் புரிந்துகொள்ள முடியும்.

1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையினரின் இறுதி பிரிவினரை ஏற்றிய கப்பல் திருகோணமலை துறைமுகத்தை விட்டும் இந்தியாவை நோக்கிய தனது பயணத்தை ஆரம்பித்தபோது விடுதலைப் புலிகள் ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டனர். அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஆர். பிரேமதாஸாவுடன் செய்துகொண்ட தமது இரகசிய பேச்சுவார்த்தைக்கும் தமது இராஜதந்திரத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே விடுதலைப் புலிகள் இந்தியப் படையினரின் வெளியேற்றத்தைப் பார்த்தனர்.

ஏறத்தாள 32 மாதங்கள் (1987 ஜூலை-1990 மார்ச்) தமக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்த இந்திய அமைதி காக்கும் படையினரை தமது பிரதேசத்தை விட்டும் வெளியேற்றிய பின்னர் வழமை போன்றே தமது காலம் கடத்தும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கத்துடன் விடுதலைப் புலிகள் ஆரம்பித்தார்கள். தம்மை இராணுவரீதியாக பலப்படுத்திக் கொள்ளவே இந்த பேச்சுவார்த்தை மூலம் கிடைத்த நேரத்தை அவர்கள் பயன்படுத்தினார்கள் என பின்னர் இலங்கை அரசாங்க தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. வழமையாகவே விடுதலைப் புலிகள் சமாதான காலங்களை அல்லது யுத்தநிறுத்த காலங்களை தமக்கு சார்பாகவே பயன்படுத்த முனைந்தமை யாவரும் அறிந்தவொரு பொதுவான விடயமாகும். பேச்சுவார்த்தை மூலம் ஏற்படும் தீர்வில் ஒருபோதும் நம்பிக்கை கொண்டிருக்காத விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் தம்மை இராணுவ ரீதியாக மீள்கட்டியெழுப்பிக் கொள்ளவே பேச்சுவார்த்தை காலங்களையும் அதன் சூழ்நிலை அமைவுகளையும் பயன்படுத்தியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அபிப்பிராயமாகும்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான குறித்த இந்த பேச்சுவார்த்தை எனும் ‘தேன்நிலவும் வழமை போன்றே அதிக காலம் நீடிக்கவில்லை. அரசாங்கத்தரப்பில் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்துச்செல்ல நியமிக்கப்பட்டிருந்த அமைச்சர் ஏ. ஸீ. எஸ். ஹமீத் பலமுறை யாழ்ப்பாணம் சென்று பேச்சுவார்த்தைகளை நடாத்தினாலும் கூட ஒவ்வொரு முறையும் அவர் விரக்தியுடனேயே கொழும்புக்கு திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. காரணம் விடுதலைப் புலிகள் ஒருபோதும் ஒரு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தையில் பங்குகொள்ளவில்லையென அரசாங்க தரப்பினர் உறுதியாக நம்பினர்.

விடுதலைப் புலிகளின் நோக்கமும் மனோநிலையும்தமக்கு பாரிய அழிவுகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தி தமது நடமாட்டத்தையும் கெரில்லாத் தாக்குதல்களையும் பெருமளவு வன்னிக்காடுகளுக்குள் மாத்திரம் முடக்கி தமது போராட்டத்திற்கு பெரும் சவாலாக இருந்த இந்திய இராணுவத்தை முழுமையாக தமது தாயக மண்ணில் இருந்து வெளியேற்றுதல் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் ஆட்சி செய்த வரதராஜப் பெருமாளின் மாகாண அரசாங்கத்தை இல்லாமல் செய்தல் என்ற இரண்டு மிகப் பெரும் விடயங்களையும் கனகச்சிதமாக செய்துமுடிப்பதிலேயே இருந்தது. விடுதலைப் புலிகள் தம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு தன்னை இலங்கை அரசாங்கம் சுதாகரித்துக் கொள்வதற்கு முன்பதாகவே விடுதலைப் புலிகள் தமது இலக்கை அடைந்து விட்டார்கள். இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளின் உள்நோக்கத்தை அறிந்து கொண்டபோது அது ஓர் காலம் தாழ்ந்த ஞானமாகவே இருந்தது.

இந்திய அமைதி காக்கும் படையினரின் பிரசன்னம் இலங்கையில் இருக்கும்போதே 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதி விடுதலைப் புலிகளும் இலங்கை அரசாங்கமும் செய்துகொண்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையானது 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போதைய ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்தில்நிராயுதபாணிகளாக விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த ஏறத்தாள 600 சிங்கள மற்றும் முஸ்லிம் பொலிஸாரை சுட்டுக்கொல்வதுடன் இரண்டாம் கட்ட ஈழப்போரை விடுதலைப் புலிகள் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வுடன் மீண்டும் கிழக்கு மாகாணத்தில் தமிழ்-முஸ்லிம் இனக்கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன.

விடுதலைப் புலிகள் முஸ்லிம் கிராமங்களையும் முஸ்லிம்களையும் தாக்கும் போதெல்லாம் கிழக்கின் முஸ்லிம் ஊர்காவல் படையினர் கிழக்கில் நிலைகொண்டிருந்த விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் தமிழ் கிராமங்கள் மீதும் தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் தொடுத்து தமது பழியைத் தீர்த்துக் கொண்டனர். இந்த தொடர் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த தமிழ்-முஸ்லிம் உறவினை வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாதளவு சீர்குலைத்தது. ஒரு சமூகம் மற்றைய சமூகத்தை எப்போதும் தனது நிரந்தர பகையாளியாகவே பார்க்கும் ஒரு துரதிஸ்டநிலை உருவானது. இரண்டு சமூகங்களும் எப்போதுமே ஒருவித பதட்டத்துடனேயே தமது நாட்களைக் கடத்தினர்.

இந்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளினால் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு எதிராக பலவிதமான தாக்குதல்களும் படுகொலைகளும் நடத்தப்பட்டன. இவற்றில் முழு உலகையுமே அதிரவைத்த இரண்டு தாக்குதல்கள் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டது. முதல் சம்பவம் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி காத்தான்குடியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த அப்பாவி முஸ்லிம் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இதில் ஏறத்தாள 147 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நடந்து சரியாக 8 நாட்களின் பின்னர் மற்றுமொரு முஸ்லிம் கிராமமாகிய ஏறாவூரில் நடத்திய தாக்குதலில் ஏறத்தாள 173 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.

முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இந்த வகையான தாக்குதல்கள் முஸ்லிம் பிரதேசங்களை அண்டியிருந்த தமிழ் கிராமங்கள் மீதும் எதிரொலிக்கத் தொடங்கியதன் விளைவாக பல தமிழ் கிராமங்கள் மீது ஏற்கனவே குறிப்பிட்டது போல முஸ்லிம் ஊர்காவல் படையினர் விசேட அதிரடிப்படையினருடன் சேர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு பல அப்பாவி தமிழ் பொதுமக்களை கொலை செய்தனர். அவ்வாறானதொரு தாக்குதல் சம்பவம் 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தில் (வந்தாறுமூலை) இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புக்காக கூடியிருந்த பல நூற்றுக்கணக்கானவர்களில் ஏறத்தாள 158 அப்பாவித் தமிழ் மக்கள் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுசென்ற பின்னர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகின்றது. மேலும் இந்த சம்பவத்திற்கு முன்பு 1990 ஆகஸ்ட் 12 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தில் உள்ள வீரமுனை கிராமத்தில் கோயிலில் தஞ்சம் புகுந்திருந்த 15 வயதுக்கு மேற்பட்ட 50 க்கும் அதிகமான ஆண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது ஏறாவூர் சம்பவத்திற்கு பழிக்குப் பழியாக செய்யப்பட்டதாக பலராலும் குறிப்பிடப்பட்டது.

இவ்வாறு பழிக்குப்பழி எடுக்கும் மனோநிலையில் கிழக்கு மாகாண தமிழர்களும் முஸ்லிம்களும் எதிரெதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை மிகவும் சிறுபான்மையினராக வடக்கில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் மிகவும் அச்சப்பட்டனர். தம்மையும் விடுதலைப் புலிகள் தாக்கத் தொடங்கிவிடுவார்களோ என நினைத்து அச்சப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் தான் 1990 அக்டோபரில் அந்த துயர சம்பவம் இடம்பெற்றது.

தமிழின மேலாதிக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில்வடமாகாணத்தை முழுமையாக ஒரு தூய தமிழ் பிரதேசமாக மாற்றும் நடவடிக்கையில் ஏற்கனவே இந்த மாகாணத்தை விட்டு சிங்கள மக்களை முழுமையாக வெளியேற்றுவதில் விடுதலைப் புலிகள் வெற்றி கண்டிருந்தனர். எஞ்சியிருந்த முஸ்லிம் சமூகத்தையும் வெளியேற்ற சிலர் ஏற்கனவே கங்கணம் கட்டிக்கொண்டிருந்தனர். இந்த எண்ணப்பாட்டிற்குத் தேவையான களத்தினை கிழக்கு மாகாணத்திலே ஒருவரையொருவர் பழிவாங்கும் வகையில் அரங்கேறிய அசாதாரண சூழ்நிலையானது அமைத்துக் கொடுத்தது.

1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி காலையிலேயே அந்த அதிர்ச்சி தரும் பகிரங்க அறிவிப்பை விடுதலைப் புலிகளின் பிரதேச மட்ட தலைவர்கள் அறிவித்தார்கள். யாழ் ஒஸ்மானியா கல்லூரி மைதானத்துக்கு சகல முஸ்லிம்களையும் ஒன்றுகூடும்படி தமது வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்தபின்னர் அங்கு கூடிய மக்கள் முன்னிலையில் உரையாற்றிய இளம்பருதி (ஆஞ்சனேயர் என்றும் அழைக்கப்பட்டார்) விடுதலைப் புலிகளின் தலைமைத்துவத்தின் முடிவினை பகிரங்கமாக அறிவித்ததோடுஅவர்களின் வெளியேற்றத்திற்கு இரண்டு மணித்தியால அவகாசமே கொடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இம்மக்கள் மீள்வதற்கு முன்னமே குறித்த இந்த கட்டளைக்கு அடிபணியாதவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்நோக்கவேண்டிவரும் என்ற விடயத்தையும் அவர் கடும் தொனியில் கூறினார். ஏற்கனவே கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் முரண்பாடுகளையும் அதனால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருந்த அழிவுகளையும் அறிந்திருந்த இந்த மக்கள் விடுதலைப் புலிகளின் இந்த கடுமையான உத்தரவினை ஏற்றுக்கொண்டு செயற்படுவதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து கொண்டு தாம் பிறந்து தவழ்ந்து வளர்ந்து வந்த அந்த மண்ணை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

1981 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏறத்தாள 14,800 முஸ்லிம்கள் இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 1990 ஆம் ஆண்டளவில் நிச்சயம் குறைந்தபட்சம் 20,000 ஆக இருந்திருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. யாழ்ப்பாண நகரில் வாழ்ந்த இந்த முஸ்லிம்கள் பலவந்தமாக எழுப்பப்படுவதற்கு முன்னமே (1990 ஆகஸ்ட் 15 ஆம் திகதி) சாவகச்சேரியில் வாழ்ந்துவந்த ஏறத்தாள 1,500 முஸ்லிம்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டிருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண முஸ்லிம்களை குடியெழும்பும்படி உத்தரவு இடப்படுவதற்கு சில காலங்களுக்கு முன்னமே யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஏறத்தாள 37 முஸ்லிம் வர்த்தகர்கள்தனவந்தர்கள்சமூகசேவையாளர்கள் மற்றும் கல்விமான்கள் என்போரை விடுதலைப் புலிகள் பலவந்தமாக கடத்தி வைத்திருந்தனர். அவர்களில் சிலர் முஸ்லிம்களின் யாழ் மண்ணிலிருந்தான வெளியேற்றத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டாலும் பலருக்கு இன்றுவரை என்ன நடந்ததென்பதே தெரியாத நிலையே இன்றுவரை காணப்படுகின்றது.

குறித்த வெளியேற்ற அறிவிப்பைத் தொடர்ந்த இம்மக்களின் தீர்மானத்திற்கு இந்த கடத்தல் சம்பவமும் அது இம்மக்களின் மனத்தில் ஆழமாக பதிந்து ஏற்படுத்தியிருந்த அச்ச உணர்வும் ஓர் காரணமாக இருந்தது. மேலும்இவற்றிற்கெல்லாம் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாப்பினைப் பெறும் ஒரு சூழ்நிலையும் இம்மக்களுக்கு இல்லாதிருந்ததால் தமது சொந்த மண்ணிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு எந்தவிதமான தெரிவும் இந்த யாழ் முஸ்லிம் மக்களுக்கு இருக்கவில்லை.

நூற்றாண்டு காலமாக சகோதர வாஞ்சை தாங்கி தமிழ் மக்களுடன் வாழ்ந்த இந்த மக்களுக்கு மிகக்குறுகியமட்டுப்படுத்தப்பட்ட கால அவகாசத்தினுள்பல திணிக்கப்பட்ட நிர்ப்பந்தங்கள் மத்தியில் தாம் உடுத்திருந்த உடையுடன் மாத்திரம் வெளியேறவேண்டிய ஒரு துர்ப்பாக்கியம் ஏற்பட்டமையானது மனித குலத்தின் நாகரீகத்திற்கே விடப்பட்ட ஒரு சவாலாகவே பலராலும் பார்க்கப்பட்டது. குழந்தைகள்கர்ப்பிணித் தாய்மார்கள்சிறுவர்கள்வயோதிபர்கள்நோயாளிகள் என அத்தனை பேரும் அவர்களுடைய வயதுபருவம்உடல் நிலை என்ற எவற்றினதும் கரிசனைக்கு உட்படுத்தப்படாது கால்நடையாக ஏறத்தாள 135 கிலோ மீற்றர் தூரத்தை நடந்து வந்துதான் தாம் பாதுகாப்பான பிரதேசம் எனக் கருதிய வவுனியா நகரை இம்மக்கள் வந்தடைந்தனர். இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியில் உலகில் நடந்த மிகக் கொடூரமானதொரு இனச்சுத்திகரிப்பு நிகழ்வாக இதனை பதிவு செய்யுமளவிற்கு விடுதலைப் புலிகள் இந்த மக்களின் விடயத்தில் நடந்து கொண்டார்கள் என்பதுதான் இதயத்திற்கு கனதியான யதார்த்தம்

இந்த முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்திற்கான அடிப்படையானதும் உண்மையானதுமான காரணத்தினை இறுதிவரை விடுதலைப் புலிகள் உறுதியாக முன்வைக்காமையானது அடிப்படை நோக்கத்திற்கும் நிகழ்விற்குமான பின்னணி யதார்த்தம் தொடர்பில் ஒரு மாபெரும் இடைவெளியினை இது தொடர்பாக பேசியும் எழுதியும் வருபவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்பதுதான் நிதர்சனமாகும். இந்த இடைவெளியினை நிரப்பும் முயற்சியில் பலரும் பலவிதமான யூகங்களை வெளியிட்டிருந்தனர். அவ்விதம் முன்வைக்கப்பட்ட சில முக்கியமான அனுமானங்களை இங்கு பதிவதன் மூலம் இந்த வெளியேற்றம் தொடர்பான சில அடிப்படை பின்னணிகளை நாம் விளங்கிக்கொள்ள இயலும் என நான் அபிப்பிராயப்படுகின்றேன்.

§  கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் (ஊர்காவல் படையினர்) தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பழிதீர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே விடுதலைப் புலிகள் இதனை வடக்கில் செய்தார்கள்;
§  கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கிற்கு வந்த விடுதலைப் புலிகளின் பிராந்திய இராணுவ மற்றும் அரசியல் தளபதிகளின் வற்புறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் இந்த முடிவினை விருப்பமில்லாமல் ஓர் நிர்ப்பந்தத்தின் பேரில் எடுக்க நேர்ந்தது;
§  கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கிற்கு வந்த விடுதலைப் புலிகளினால் வடக்கின் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தினாற்தான் அவர்களைப் பாதுகாப்பதற்காக விடுதலைப் புலிகளின் தலைமைத்துவம் இப்படியானதொரு முடிவினை எடுத்தது. இது தொடர்பான கருத்துக்களையும் இதே காரணத்தையும் 1993 மற்றும் 1994 ஆம் ஆண்டுகளில் பி.பி.சி. க்கு அளித்த செவ்வியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். எனினும் இது உண்மையான காரணம் அல்ல என பலரும் உறுதியாக இன்றுவரை நம்புகின்றனர்;
§  வடக்கு முஸ்லிம்களை இப்படி தண்டிப்பதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தி அவர்களையும் கிழக்கு மாகாணத்தை விட்டும் வெளியேற்றுவதை நோக்கமாகக்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது;
§  வடக்கு முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை இலங்கை அரசாங்கத்திற்கும் இராணுவத்தினருக்கும் காட்டிக் கொடுத்ததால்தான் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்;
§  சாவகச்சேரியில் முஸ்லிம் வீடொன்றில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதங்கள் (வாள்கள்) தமிழருக்கு எதிராக முஸ்லிம்கள் தாக்குதல்களை மேற்கொள்ள முயற்சிக்கின்றார்கள் என்று விடுதலைப் புலிகள் எண்ணியதனால் தான் அவர்களை முழுமையாக இந்த மாகாணத்தையே விட்டு வெளியேற்ற வேண்டும் என முடிவெடுக்க வைத்தது;
§  பல வழிகளிலும் இஸ்ரவேலர்கள் அக்கால கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு உதவியதால்அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்டார்கள்;
§  முஸ்லிம்களை வெளியேற்றுவதன் மூலம் சூறையாடப்படும் கோடிக்கணக்கான சொத்துகளை தமது போராட்டத்திற்குப் பயன்படுத்தலாம் என விடுதலைப் புலிகள் நம்பியதனால் தான் முஸ்லிம்களை வெறும் கைகளோடு மட்டும் வெளியேற உத்தரவிட்டனர்;
§  ஜிஹாத்’ போன்ற அமைப்புகளை நிறுவி இராணுவத்தினருடன் சேர்ந்து கொண்டு வடக்கின் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் செயற்பட்டதனாலேயே விடுதலைப் புலிகள் இந்த முடிவினை எடுத்தார்கள் என சிலர் நம்பினர். இதற்கு சிறந்த உதாரணமாக மன்னார் எருக்கலம்பிட்டியை சேர்ந்த எச். எம். பாயிஸ் என்பவர் ஏற்கனவே விடுதலைப் புலிகளினால் 1986 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பஸ் குண்டுவெடிப்பின் மூலம் கொல்லப்பட்டமையை குறிப்பிடலாம். இவரை வடக்கு ஜிஹாத் அமைப்பின் தலைவராக விடுதலைப் புலிகள் நம்பியிருந்தனர்;
§  வடகிழக்கு இணைந்த நிலையிலான விடுதலைப் புலிகளின் தமிழ் ஈழக்கோரிக்கைக்கு எதிராக குரல்கொடுத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வடக்கு முஸ்லிம்கள் காட்டிவந்த ஆதரவினால் அச்சமுற்றுத்தான் அவர்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றினார்கள்;
§  வடகிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீகத் தாயகம்எனவே ஏனைய இனத்தவர்கள் யாருமே இந்த மண்ணில் இருக்கக் கூடாது என விடுதலைப் புலிகள் கருதியதன் விளைவாகவே முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டார்கள்மற்றும்,
§  வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றுவதன் மூலம் தென்னிலங்கை முஸ்லிம்களைக் கொதிப்படையச் செய்து தெற்கிலே கொழும்புகண்டி போன்ற பிரதேசங்களிலே வாழும் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை முஸ்லிம்களைக் கொண்டே நடத்திவைத்து அதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்ட விடுதலைப் புலிகள் எண்ணியமை.
§   
மேற்கூறிய காரணங்கள் யாவும் வெறும் யூகங்களே தவிர இவற்றில் எதுவுமே குறித்த இந்த வெளியேற்றத்திற்கான உண்மையான பின்னணிக் காரணங்களாக விடுதலைப் புலிகளினால் முன்வைக்கப்படாமையானது இங்கு கவனிக்கத்தக்கது. சிலவேளைகளில் மேற்சொன்ன காரணங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களோ இதற்கு அடிப்படையாக இருந்திருக்கலாம். சிலவேளைகளில் இதில் குறிப்பிடப்படாத வேறு ஏதேனும் காரணங்கள் கூட இந்த வெளியேற்றத்திற்கான உந்துதலாக அமைந்து இருந்திருக்கலாம் என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

இதேநேரம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றத்திற்கு பின்னர் பி. பி. சி. தமிழோசைக்கு செவ்வியினை வழங்கிய கலாநிதி அன்ரன் பாலசிங்கத்திடம் முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பான காரணம் வினாவப்பட்டபோது அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
அதாவது “இலங்கையின் வடகிழக்கு பிரதேசம் என்பது தமிழர்களின் பாரம்பரிய தாயக பூமியாகும். அதில் வாழும் தகுதி தமிழர்களைத் தவிர ஏனைய இனத்தவர்களுக்கு இல்லை.” எனினும் பின்னர் ஒருதடவை இது விடுதலைப் புலிகளின் தலைவரின் முடிவா என அவரிடம் கேட்கப்பட்டபோது, “இல்லை” என அவர் பதில் அளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடப்படல் வேண்டும்.

மேலும் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி கிளிநொச்சியில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது ஒரு ஊடகவியலாளனால் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் தொடுக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதுவடக்குகிழக்கு (தமிழீழம்) என்பது முஸ்லிம்களுக்கும் சொந்தமான பிரதேசமே என அவர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதோடுஅவர்களை வெளியேற்றியமைக்காக தமது வருத்தத்தையும் தெரிவித்து  அவர்களை மீள்குடியேறுவதற்கான அழைப்பை உரிய நேரத்தில் தம் தலைவர் (பிரபாகரன்) மேற்கொள்ள இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இவ்விடத்தில் சுட்டிக்காட்டவேண்டிய ஓர் விடயம் என்னவெனில்இவ்வாறு நூற்றாண்டு காலமாக தமிழ் மக்களுடன் மிகவும் ஒற்றுமையாகவும் அந்நியோன்யமாகவும் வாழ்ந்த இந்த மக்கள் வெளியேற்றப்பட்டபோது அதனை சிறிதேனும் விரும்பாத பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இருந்தார்கள்எனினும் தமது விருப்புவெறுப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தமுடியாத நிலையில் அவர்கள் சூழ்நிலைகளினுள் கட்டுண்டு இருந்தார்கள் என்பதுதான் உண்மை.

பலர் மௌனமாக நின்றுகொண்டு மனதுக்குள் அழுதுகொண்ட சம்பவங்களும் இருக்கவே செய்தன. அவர்களது வாய்களுக்கு விடுதலைப் புலிகளின் ஆயுத கலாச்சாரம் ஏற்கனவே பூட்டுப் போட்டு தாழ்ப்பாள் இட்டிருந்தது. காரணம் விடுதலைப் புலிகளின் தீர்மானங்களுக்கும்அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும் மாற்றமாக கருத்து தெரிவிப்பது என்பது எதிர்த்து நிற்போரின் வாழ்வோடு விளையாடும் ஒரு விடயமாகவே அக்காலத்தில் பலராலும் பார்க்கப்பட்டது.

எனினும் இந்த சவால்களையெல்லாம் மீறி முஸ்லிம் மக்களுக்காக குரல் கொடுத்த பல தமிழ் மக்களும் இருக்கவே செய்தார்கள் என்ற வரலாற்று உண்மையை நாம் இவ்விடத்தில் ஏற்று பாராட்டாமல் இருக்க முடியாது. 1989 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் திகதி தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் அ. அமிர்தலிங்கம் அவர்களின் படுகொலையின் பின் அக்கட்சியினை தலைமைதாங்கி வழிநடாத்துவதில் பெரும்பங்காற்றிய முதுபெரும் அரசியல் தலைவரும்கரவெட்டியில் பிறந்து பின்னர் ‘உடுப்பிட்டிச் சிங்கம்’ என தமிழ் மக்களினால் செல்லமாக அழைக்கப்பட்டவருமான எம்.சிவசிதம்பரம் அவர்கள் இந்த இனச்சுத்திகரிப்பு விடயத்தை பகிரங்கமாகவும் தீவிரமாகவும் கண்டித்து எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் “இந்த முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தில் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படும்வரை எனது கால்கள் யாழ் மண்ணை மிதிக்காது” என சபதம் பூண்டதோடு மட்டுமின்றிஅவரது மரணம் வரை தனது சபதத்தை செயலிலும் காட்டியமை முஸ்லிம் சமூகத்தினரால் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும். 2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி மறைந்த அந்த மாமனிதரின் உயிரற்ற உடலை சுமந்து சென்றவர்களின் கால்கள்தான் அந்த யாழ் மண்ணை மிதித்தன என்ற விடயமானது சகல முஸ்லிம் மக்களினதும் கண்களை பனிக்கச்செய்த ஒரு விடயமாகும்.

மேலும் அண்மையில் காலமான பேராசிரியர் கா. சிவத்தம்பி போன்ற பல பேரறிஞர்களும் தமது மட்டுப்பாட்டுடன் கூடிய  எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தார்கள். தமது இலக்கிய படைப்புகள் மூலம் பல ஈழத்து கலைஞர்களும் தமது ஆதங்கங்களை யாழ் முஸ்லிம் மக்கள் தொடர்பிலான விடுதலைப் புலிகளின் முடிவு தொடர்பில் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

உதாரணமாககவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்களின் ஒரு கவிதைவரி பின்வருமாறு அமைந்தது:

மண் காக்க எழுந்து
களத்திலும் வெளியிலும் வீழ்ந்த
முஸ்லிம் மாவீரர்கள் மீதும்
என் தாய் மண் புனிதப் பட
அவர்கள் சிந்திய செங்குருதியின் மீதும் ஆணை-
நான் வாழும் தமிழ் மீதும் ஆணை-
எனதும் கனவான ஈழத் தாயகம்
முஸ்லிம்களின் ஆனந்தக் கண்ணீரில் மட்டுமே மலரும்

இந்த உணர்வுபூர்வமான கவிதைவரிகள் ஈழம் என்பது தனியே தமிழர்களுக்கு மாத்திரம் சொந்தமானதொன்றாக இருக்கமுடியாது எனவும்அதில் முஸ்லிம்களுக்கு உள்ள பங்கினையும் தெளிவாகக் கோடிட்டுக்காட்டி நிற்கின்றது. மேலும் டி. பி. எஸ். ஜெயராஜ் போன்ற பிரபல்யமான அரசியல் ஆய்வாளர்களும் பல எழுத்தாளர்களும் தமது எழுத்துகள் மூலமாக இந்த இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையினை கடுமையாக விமர்சனம் செய்தமையும் கட்டாயம் குறிப்பிடப்படவேண்டிய ஆதாரங்களாகும். இவ்வாறு பல சூழ்நிலை வரம்புகளின் மத்தியிலான எதிர்ப்புகள் இருந்தாலும் கூட அவை யாவும் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்துடன் கூடிய தீர்மானங்களுக்கு முன்னால் செல்லாக் காசுகளாகவே காணப்பட்டன.

மறுபுறமாகஇந்த வெளியேற்றத்தை ஆதரித்துநின்ற அல்லது அதன் மூலம் ஒரு சொற்ப நன்மையடைந்த ஒரு பிரிவினரும் தமிழ் சமூகத்தில் இருக்கவே செய்தார்கள் என்பதுதான் ஆழமான வடுவினை முஸ்லிம்களிடம் ஏற்படுத்திய விடயமாகும். விடுதலைப் புலிகளின் வெளியேற்றத்திற்கான அறிவிப்பினைத் தொடர்ந்து கதிகலங்கிப்போய் செய்வதறியாது திகைத்துநின்ற வேளையில் அவர்களின் கண்களுக்கு எதிரிலேயே அவர்களது வீடுகளையும்உடைமைகளையும்வியாபார ஸ்தலங்களையும் பங்கு போட்டுக் கொள்வதில் முண்டியடித்துக்கொண்டு நின்ற தமிழ் சகோதரர்களும் இருக்கவே செய்தார்கள். “மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது” போலவும் “தவித்த முயலினை அடிப்பவர்களாகவுமே இவர்களின் செயல்பாடுகள் காணப்பட்டன. 

ஆண்டாண்டு காலமாக தம்முடன் அன்நியோன்யமாக பழகி கூடிக்குலாவிய தமது அண்டை வீட்டார்களும்நண்பர்களும் இவ்விதம் நடந்துகொண்டபோது இந்த முஸ்லிம் மக்களின் மனோநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதை நாம் வார்த்தைகளினால் மட்டும் அளவிட முயல்வதானது அந்த மனோநிலையினை கொச்சைப்படுத்துவதாகவே அமையும் என நான் கருதுகின்றேன். 

அதுமட்டுமல்லாமல்முஸ்லிம்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பொருட்களை யாழ்ப்பாணத்திலே விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட ‘மக்கள் கடைகள்’ எனப்படும் அங்காடிகளிலே விற்பனைக்காகப் போடப்பட்டபோது அவற்றை வாங்குவதற்காக மக்கள் நீண்ட கியூ வரிசைகளிலே ஒருவரையொருவர் முண்டியடித்துக்கொண்டு நின்ற கசப்பான வரலாறுகளும் இருக்கவே செய்கின்றன. 

இந்த போட்டாபோட்டிகள் ஒருபுறமிருக்கஇந்த முஸ்லிம் மக்கள் வெளியேறியபோது அவர்களின் பெறுமதியான (பணம்தங்க நகைகள்) பொருட்களை (விடுதலைப் புலிகளுக்கு தெரியாமல்) அவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு அவற்றைப் பக்குவமாகப் பாதுகாத்து பின்னர் யுத்த சூழ்நிலையிலும் கூட தமது உயிரைப் பணயம் வைத்து புத்தளம் போன்ற பிரதேசங்களுக்கு அவர்களைத் தேடிவந்து அந்தப் பொருட்களை உரியவர்களிடம் சேர்த்துவைத்த பண்பான மனிதப்புனிதர்களும் இதே யாழ்ப்பாண தமிழ் சமூகத்தின் மத்தியிலே இருக்கவே செய்தார்கள் என்பதையும் நாம் இவ்விடத்தில் சுட்டிக்காட்டி நிற்பதானது அப்பேற்பட்ட நற்பண்புகளுடன் கூடிய மனிதர்களை நாம் இவ்விடத்தில் கௌரவிப்பதாகவே அமையும்.

இவ்வாறு ஒரு இனச்சுத்திகரிப்பு முயற்சியின் மூலம் பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்போர் கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் தேசிய மட்டத்தில் பல சாதனைகளையும் பெருமைகளையும் தேடித்தந்துள்ள ஒரு சமூகப் பிரிவினர் ஆவர். கல்வி மற்றும் வியாபாரம் என்பவற்றில் பல வரலாறுகளையும் தனித்துவங்களையும் கொண்டவர்களாக இவர்கள் காணப்பட்டனர். இலங்கையின் பல தலைசிறந்த முஸ்லிம் கல்விமான்களையும் இந்த சமூகம் உருவாக்கியிருக்கின்றது. உதாரணமாகஇலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் முதலாவது சிவில்சேவை உத்தியோகத்தராகத் தெரிவுசெய்யப்பட்டு பல சாதனைகளை தேசிய மட்டத்தில் புரிந்த டாக்டர் ஏ.எம்.ஏ. அசீஸ் ‘துருக்கி தொப்பி’ என்பது முஸ்லிம்களின் அடையாளச் சின்னம் என ஆங்கிலேயரின் நீதிமன்றத்தில் போராடி வெற்றிபெற்ற வழக்குரைஞர் எம்.சி.அப்துல் காதர் மற்றும்யாழ் மாநகரசபையின் முதல்வராக இருந்து சபையை அலங்கரித்த எம்.எம். சுல்தான் சிறந்த கல்விமான்களான ஏ.எச். ஹமீம்அரசாங்க அதிபராக கடமையில் இருக்கும் போதே மன்னாரில் வைத்து பயங்கரவாதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எம். மக்பூல்எம்.எம்.ஏ. குத்தூஸ் போன்ற பலரை நாம் குறிப்பிடலாம்.

விரிவஞ்சி ஏனையவர்களின் பெயர்களைக் குறிப்பிடுவதிலிருந்தும் தவிர்ந்து நிற்கின்றேன். கல்விக்குப் பெயர்போன யாழ்ப்பாண தமிழ் சமூகத்தின் மத்தியில் இவர்கள் வாழ்ந்தார்கள் என்ற ஓர் காரணமும்அதாவது ‘பூவுடன் சேர்ந்த நாரும் மணம் வீசும்’ என்பதற்கு ஒப்பஇவர்கள் கல்வித்துறையில் சிறப்புற்று மிளிர்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது. தமது யாழ் மண்ணிலான இன ரீதியான குடித்தொகைப் பரம்பலின் எண்ணிக்கைக் குறைவு காரணமாக தேசிய மட்டத்தில் அவர்களால் சிறந்த முஸ்லிம் அரசியல்வாதிகளை உருவாக்க முடியாமல் போனாலும் பல தலைசிறந்த சமூகசேவையாளர்களை இவர்கள் உருவாக்கியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமக்கேயுரிய பல தனித்துவமான பண்புகளை கொண்டிருந்தார்கள். பல இலக்கியவாதிகள் ஈழத்து இலக்கியத்திற்கு மெருகூட்டினார்கள்கவிஞர்கள்எழுத்தாளர்கள் என பலதரப்பட்ட இலக்கிய சிற்பிகள் தமது மண்ணின் மகிமையைப் போற்றும் விதத்தில் பல படைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். தமது மண்ணின் மீது ஆழமான காதல் கொண்டிருந்த இவர்கள் எப்போதும் யாழ்ப்பாணத் தமிழர்களைப் போலவே தம்மை ஏனைய முஸ்லிம்களின் முன்நிலையில் ‘யாழ்ப்பாண முஸ்லிம்கள்’ என அழைத்துக் கொள்வதில் எப்போதுமே பெருமிதம் கொண்டிருந்தனர் என்பதுதான் உண்மை.

இலங்கையின் கடந்த கால வரலாறுகளை ஆய்வு செய்கின்ற எவரும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் 1990 ஆம் ஆண்டு பலாத்கார வெளியேற்றத்திற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு யாழ்ப்பாணத்தின் சில பிரதேசங்களில் இருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்பது யாழ்ப்பாணத்தில் ஆண்டாண்டு காலமாக எப்படி இருந்ததோ அதேபோல சிலநேரங்களில் முரண்பாடுகளும் இருக்கவே செய்தன. மிக நீண்டகாலத்திற்கு முன்பிருந்தே இந்த இரண்டு சமூகங்களும் தமக்குள் அவ்வப்போது முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். குறிப்பாகபோர்த்துக்கீசர் 1620 களில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபோது யாழ்ப்பாணத்தின் தலைநகராக இருந்த நல்லூரின் ‘குருக்கள் வளவில்’ குடிகொண்டிருந்த இஸ்லாமிய ஆன்மீகவாதியான (சூபி) “சிக்கந்தர்” எனும் ஞானி தமிழர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களும் போர்த்திகீசரை எதிர்த்து போராடியபோது கொல்லப்பட்டார் என வரலாறுகள் குறிப்பிடுகின்றன. பின்னர் 1658 இல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய ஒல்லாந்தரின் காலத்தில் இந்த முஸ்லிம்களை நல்லூரை விட்டும் விரட்டுவதில் கத்தோலிக்கர்கள் வெற்றிகண்டார்கள்.

ஏறத்தாள 1500 பேர் ஒரே நேரத்தில் தொழுகையை மேற்கொள்ளக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றும் நல்லூரில் இருந்ததாக யாழ்ப்பாண வரலாறுகள் கூறிநிற்கின்றன. 1749 ஆம் ஆண்டளவில்தான் நல்லூர் கந்தசுவாமி கோவில் வளவிற்குள் இருந்த இஸ்லாமிய ஞானி சிக்கந்தரின் அடக்கஸ்தலம் தமிழ் இந்துக்களால் இல்லாமல் செய்யப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றனஆனால் அது இப்போதும் மறைவாக கோவிலுக்குள்ளேயே பக்குவமாக பாதுகாக்கப்பட்டுவருவதாக பலரும் நம்புகின்றனர். முஸ்லிம்களை குறிப்பிட்டதொரு பிரதேசத்தில் இருந்து வெளியேற்ற அவர்களின் மார்க்கத்தில் விலக்கப்பட்டுள்ள பண்றியின் இரத்தத்தை அவர்கள் குடி நீருக்காக பயன்படுத்திய கிணற்றில் சிலர் போட்டு அவர்களை அந்தப் பிரதேசத்தை விட்டும் வெளியேற்றிய கசப்பான நிகழ்வுகளும் யாழ்ப்பாண வரலாற்றில் உண்டு. இதுபோன்ற மேலும் பல வரலாற்று நிகழ்வுகளை நாம் யாழ்ப்பாணத்தில் காணமுடியும்.

இந்த அனைத்துப் பின்னணிகளையும் கொண்டதாக அமைந்த யாழ்ப்பாண முஸ்லிம்களின் திட்டமிடப்பட்ட வலுக்கட்டாயமான இடப்பெயர்வானதுஅவர்களின் சொந்த இடங்களிற்கான மீள்திரும்புகையையும் பெரும் சவால்களின் மத்தியிலான நிகழ்வாக உருவாக்கியுள்ளது. இம்மக்களின் மீள்திரும்புகையானது 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கைக்குப் (புரிந்துணர்வு உடன்படிக்கை) பின்னரேயே சற்று அதிகமாக முன்னெடுக்கப்பட்டது. எனினும் மீண்டும் ஒரு யுத்த சூழ்நிலைக்கான சாத்தியக்கூறுகளை மனதிற்கொண்ட இவர்களில் பலர் தமது முன்னைய இடங்களுக்கு சென்று தமது காணி நிலங்களை தமிழர்களுக்கு விற்பதிலேயே அதிகம் அக்கறை காட்டினர். கிடைத்த சமாதான சூழலைப் பயன்படுத்தி கிடைத்ததையாவது பெற்றுக்கொள்வோம் என்ற எண்ணத்தில் தமது அசையா சொத்துகளை விற்று பணமாக்குவதிலேயே இவர்கள் அதிக கவனம் செலுத்தினர்.

மிக நீண்டகால இடப்பெயர் வாழ்வுநிரந்தர சமாதானத்தின் மீதான நம்பிக்கையின்மைமற்றும் குடும்பங்கள் எதிர்நோக்கிய பொருளாதார நெருக்கடிகள் என்பன இவற்றிற்கு அடிப்படைக் காரணங்களாக இருந்தன எனலாம். சிலர் தமது தற்காலிக வர்த்தக நடவடிக்கைகளை யாழ் மண்ணில் மேற்கொள்வதிலும் ஈடுபட்டனர். எனினும் விடுதலைப் புலிகளின் பிரசன்னமானது இவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருந்தது. குறிப்பாக இவர்களின் வர்த்தக நடவடிக்கைகளில் கொண்டுவரப்பட்ட மிதமிஞ்சிய வரி விதிப்புமற்றும் குறிப்பிட்ட சில வர்த்தகங்களின் மீது போடப்பட்ட கட்டுப்பாடுகள் என்பன அவர்களை முழுமனதோடு யாழ்ப்பாணம் சென்று மீள்குடியேறுதல் மற்றும் வர்த்தகம் செய்தல் என்பவற்றில் இருந்து தடுத்தது எனலாம். மேலும் சிலவேளைகளில் இராணுவத்திற்கு உளவுவேலை பார்க்கின்றார்களா என விடுதலைப் புலிகளினால் சந்தேகக் கண்கொண்டு கொண்டு இவர்கள் பார்க்கப்பட்டதும் இவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலைக் கொடுத்தது. இந்த காரணங்களினால் ஏறத்தாள 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்படும் வரை இவர்கள் மீள்குடியேற்றத்தில் அதிகம் நாட்டம் செலுத்தாமலேயே இருந்தார்கள்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாண முஸ்லிம்கள் பாரியளவில் தமது மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்தபோதுதான் உண்மையான இன்றைய பிரச்சினைகளும் சவால்களும் ஆரம்பமாகின. இந்த சவால்களை  நாம் அரசியல் மற்றும் நிர்வாக ரீதியிலான சவால்களாகவும் மற்றும் சமூக அடிப்படையிலான சவால்களாகவும் அடையாளப்படுத்தலாம். ஏறத்தாள இருபது ஆண்டுகளின் பின்னர் இவர்கள் மீள்குடியேற்றத்திற்காக யாழ்ப்பாணம் சென்றபோது இவர்கள் எதிர்பார்த்திருந்த வரவேற்பு யாழ் மண்ணிலிருந்து கிடைக்கவில்லைஇவர்களின் மீள்வருகையினை பெரும்பாலான தமிழ் மக்கள் விரும்பியிருக்கவில்லை. தமது மட்டுபடுத்தப்பட்ட பற்றாக்குறையுடன் கூடிய பொருளாதார வளங்களை சுரண்டுவதற்காக தம் மண்ணை மிதித்த மக்களாகவே யாழ் தமிழ் மக்களின் கண்கொண்டு இந்த முஸ்லிம்கள் பார்க்கப்பட்டார்கள். கல்விவேலைவாய்ப்புகள்வியாபாரம்மற்றும் காணி நிலங்கள் என்பவற்றில் தம்முடன் ஒரு புதிய சமூகப்பிரிவினர் போட்டிபோடுவதற்கு வருவதாகவே இந்த புதிய யாழ்ப்பாண தமிழ் தலைமுறையினர் அந்த முஸ்லிம்களை பார்த்தார்கள்.  ஏறக்குறைய இரு தசாப்த கால மிகநீண்ட இடப்பெயர்வு வாழ்வை இந்த முஸ்லிம்கள் அனுபவிக்க நேர்ந்ததால் ஏற்பட்டதன் ஒரு பாரிய விளைவாகவும் நாம் இதனை கண்டு கொள்ளலாம். காரணம்அதுவரை தாம் மாத்திரமே அந்த மண்ணிற்குச் சொந்தக்காரர்கள் என நினைத்துக் கொண்டிருந்த யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு இந்த முஸ்லிம்களின் திடீர் மீள்வருகையானது ஒருபோதும் திருப்தியையோ அல்லது மகிழ்ச்சியையோ கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. இதனால் இந்த தமிழ் மக்களால் முஸ்லிம்களை தமது பாரம்பரிய பிரதேசங்களுக்கு மீள்குடியேற திரும்பிவரும் மக்களாக பார்க்கமுடியவில்லைமாறாக தம்மையும்தமது பொருளாதார வளங்களையும் சுரண்ட வருகின்ற ஒரு சமூகப் பிரிவினராகவே பார்த்தனர்.

இது தவிரயுத்தத்தின் பின்னரான யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படும் அதிகளவிலான இராணுவ பிரசன்னம்மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்லும் சிங்கள-பௌத்த மயமாக்கம் என்பவற்றால் எரிச்சலுற்று விரக்தியடைந்திருக்கும் இந்த தமிழ் மக்கள் தமது எதிர்ப்பினை சிங்கள மக்கள் மீது வெளிக்காட்டமுடியாத ஒரு கையறு நிலையில் இருப்பதால் தமது உள்ளக் குமுறல்களையும் சீற்றத்தையும் ஒன்றுசேர்த்து மிகவும் நலிவான சமூகப்பிரிவினரான முஸ்லிம்களிடம் காட்டுவதற்கு எடுக்கின்ற ஒரு முயற்சியாகவும் தற்போதைய நிலையினை நாம் எடுத்துக் கொள்ளலாம்இது சாதாரணமாக மனித வாழ்வில் எங்கும் ஏற்படும் ஒரு இயற்கை நிலையே.

இவற்றின் வெளிப்பாடுகளாகத்தான் இன்று இந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது அரசியல்மற்றும் நிர்வாக மட்டங்களில் ஒரு இரண்டாம் தர விடயமாகப் பார்க்கப்படுகின்றது என பலரும் நம்புகின்றனர். இன்று யாழ்ப்பாணத்தில் அரசியல் மற்றும் நிர்வாக விடயங்களில் அதிகமாக ஆதிக்கம் செலுத்தும் புதிய இளம் தலைமுறையினருக்கு யாழ் மண்ணுடன்அந்த மக்களுடன் முஸ்லிம் மக்கள் கொண்டிருந்த  உறவு தொடர்பில் போதிய விளக்கமோ அன்றில் அனுபவமோ சிறிதேனும் கிடையாது. முஸ்லிம்கள் போராட்டத்தை காட்டிக் கொடுத்ததனால்தான் அவர்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றினார்கள் என்றவகையில் அதிகம் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாகவே இவர்களில் அநேகர் காணப்படுகின்றனர். இவற்றின் காரணமாக இவர்களை ஒரு வேண்டப்படாததொரு மக்கள் கூட்டத்தினராகவே இன்றைய யாழ்-இளம் சமூகத்தினர் நோக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு அதிகமான அரசியல் மற்றும் நிர்வாக அடிப்படையிலான ஆதரவு தேவைப்படும் இந்நேரத்தில் அதனை பெற்றுக்கொள்ள முடியாததொரு நிலையிலேயே முஸ்லிம்கள் காணப்படுகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தினாலும்சர்வதேச சமூகத்தினாலும் அதிகம் கவனிக்கப்படாத ஒரு பிரிவினராக இவர்கள் இருப்பதும் இவர்களின் மீள்குடியேற்றத்திற்கு உகந்ததொரு சூழ்நிலையினை உருவாக்கவில்லை.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தம்மாலான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என சில அரசியல்வாதிகளும் நிர்வாக உயர்மட்ட உத்தியோகத்தர்களும் விரும்பினாலும் கூட அதற்கு மாற்றமாக சிந்திக்கும் பிரிவினரின் எண்ணிக்கை ரீதியான அளவு கூடுதலாக இருப்பதால் இது ஒரு பாரிய சவாலாகவே இன்றுவரை காணப்படுகின்றது. இதனால் மீள்குடியேறும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் எந்தவிதத்திலும் சம்பந்தப்படமுடியாத வகையில் நிகழும் ஏதேனும் சம்பவங்கள் இந்த மக்களுடன் வலிந்து தொடர்புபடுத்தி பூதாகரமாக்கி வெளிஉலகிற்கு சில தமிழ் ஊடகங்களினால் காண்பிக்கப்பட்டு இந்த மக்கள் நோக்கிய எதிர்நோக்குப் பார்வையையும் எதிர்ப்பையும் மேலும் ஆழப்படுத்துவதற்கும் நியாயப்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் தாராளமாகவே நிகழ்ந்தேறிவருகின்றன. உதாரணமாகஅண்மையில் யாழ்ப்பாண முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான காணியை வாங்கிய ஒருவர் அந்த காணியில் இருந்த பாழடைந்த கிணற்றை துப்புரவு செய்யும் வேளையில் கிணற்றுக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்ட பாவனைக்கு உதவாத வெடிபொருட்களை மையமாக வைத்து கிழக்கு மாகாண முஸ்லிம் தீவிரவாதிகளுடன் (கற்பனையில்) அதனை தொடர்புபடுத்தி சில ஊடக அநாச்சாரங்கள் அரங்கேறியமை உலகறிந்த விடயமாகும்.

ஏறத்தாள 1950 முஸ்லிம் குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றத்திற்காக தமது பெயர்களை பதிவு செய்திருந்தாலும் கூட இந்த நான்கு வருட காலத்தில் ஏறத்தாள 350 குடும்பங்களே யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி இருப்பதானது மிகவும் கவலைப்படக் கூடியதொரு விடயமே. இவர்களில் சிலர் ஏற்கனவே தமது காணிகளை வெவ்வேறு சூழ்நிலைகளின் நிமித்தம் விற்றுவிட்டதனால் தற்போது மீளச்சென்று குடியேறுவதில் காணிப்பிரச்சினைக்கு உள்ளாகவேண்டிய நிலைமை உண்டு. வேறு சிலரோ தமது தசாப்த கால இடப்பெயர்வினால் தென்னிலங்கையில் தமது இருப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்டதனால் யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேறுவதில் அதிகம் நாட்டம் காட்டவில்லை என்பதையும் இங்கு நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் பிரச்சினைக்குரியவர்கள் யார் என்றால் மீண்டும் குடியேற விரும்பியும் அதற்கான சூழல் இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களே ஆவர். இந்த குறித்த தொகையினரின் மீளக்குடியமரும் வாஞ்சையை மனதில் இருத்திக்கொண்டுஅவர்களின் விருப்பினை சவால்கள் இன்றி சாத்தியப்படுத்த வேண்டியதன் நியாயப்பாட்டினையும்அதற்கான பொறுப்புதாரிகளையும்அவர்களால் முன்னிறுத்தப்படவேண்டிய ஏற்பாடுகளையும் அடுத்து தெளிவுபடுத்துதல் சாலப்பொருத்தமாகும்.
இலங்கையின் உள்நாட்டு இடப்பெயர்வு வரலாற்றினை அடிப்படையில் இரண்டு பிரதான வகைப்பாட்டினுள் உள்ளடக்கலாம்: இடப்பெயர்வின் கால நீட்சிமற்றும்இடப்பெயர்வினை உந்திய காரணிகள். கால அடிப்படையில்இலங்கையின் சில பிரதேசங்களில் குடும்பங்கள் 5 தடவைகளிற்கும் மேலாக தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேறவேண்டிய சூழ்நிலைக்கு முகங்கொடுத்து உள்ளதோடு மீள்குடியேற்றம் என்பது அவர்களின் சொந்த குடியிருப்புக்களில் பாதுகாப்பானது என கருதும்போது சாத்தியமாவதாகவும் அமைந்திருந்தது. இந்த சாத்தியப்பாட்டிற்கான கால அளவு என்பது குறித்த அனர்த்தத்தின் தன்மைக்கும் வீரியத்திற்கும் ஏற்றாற்போல் குறுகியதாகவோ அல்லது நீண்டதாகவோ அமைந்து காணப்பட்டது. இந்த அடிப்படையில்ஒப்பீட்டளவில்இலங்கை முஸ்லிம்களின் இடப்பெயர்வு என்பதே இதுவரை மிகவும் பிற்படுத்தப்படும் மீள்குடியேற்றமாகவும் போதிய கரிசனைகளை அதுதொடர்பில் அக்கறை எடுக்கவேண்டிய பொறுப்பான அதிகாரிகள் மத்தியில் அதிகம் கொண்டிராத ஒன்றாகவும் காணப்படுகின்றது. அடுத்துஇடப்பெயர்விற்குக் காரணமாக இருந்த காரணிகள் அடிப்படையில் 3 வகையின: அபிவிருத்தி நடவடிக்கைகள் ஏற்படுத்திய இடப்பெயர்வுஉதாரணமாக 1948-1952 கல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் 1970-2000 மகாவலி அபிவிருத்தி திட்டம்இயற்கை அனர்த்தம் ஏற்படுத்திய இடப்பெயர்வுஉதாரணமாக வெள்ளம்மலைச்சரிவுசூறாவளி மற்றும் சுனாமிஇறுதியாகஇனமோதல் மற்றும் உள்நாட்டு யுத்தம் ஏற்படுத்திய இடப்பெயர்வு. இலங்கையின் சிங்களதமிழ்முஸ்லிம் என்ற மூவினத்தையும் சேர்ந்த மக்களும் இந்தவகையான இடப்பெயர்வு நிகழ்விற்குள் உள்வாங்கப்பட்டிருந்தாலும்எண்ணிக்கை அடிப்படையில்  பார்க்கும்போது தமிழ் மக்களின் இடப்பெயர்வு அனுபவமே ஒப்பீட்டளவில் அதிகம். அதேசமயம்இன்றுவரை ஓர் உரிய உத்தரவாதமோஅதற்கான ஏற்பாடுகளோ தமது மீள்குடியேற்றம் தொடர்பில் ஏற்படுத்தப்படாது அல்லலுறுவோராக முஸ்லிம் இடப்பெயர்வாளர்களே காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களே அதிகம் இதனால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான நெறிமுறை விதி 28 கூறுகையில், “உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தம் குடிமனைகளுக்கு அல்லது வழமையான இருப்பிடங்களுக்கு தாமாக பாதுகாப்புடனும் கௌரவத்துடனும் திரும்பிச்செல்வதற்கு அல்லது நாட்டின் மற்றொரு பகுதியில் தாமாகக் குடியேறுவதற்கு வாய்ப்பான நிலைமைகளை உருவாக்குவதுடன் அதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவதும் பொறுப்பு வகிக்கின்ற அதிகாரிகளின் பிரதான கடமையும் பொறுப்புமாகும்.” இந்த விளக்கத்துடன் யாழ் முஸ்லிம் இடப்பெயர்வாளர்களையும் அவர்களின் சிரமங்கள் இன்றிய மீள்குடியேற்றத்திற்கான விருப்பின் நியாயப்பாட்டின் பொருத்தப்பாட்டினையும் ஒப்பிட்டு நோக்குதல் இயலுமைக்கு உட்பட்டதே. எனவே வெளியேற்றப்பட்ட யாழ்-முஸ்லிம் மக்கள் ஐ.நா அமைப்பின் இடப்பெயர்வாளர்கள் தொடர்பான வரையறுத்தலில் நின்றும் எந்தவிதத்திலும் விலகிச்செல்லவில்லை.

உண்மையில்உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றமானது அடிப்படையில் பாதுகாப்புசொத்துமற்றும் மீள்குடியேறிய பிரதேசங்களிலான ஸ்திரமான வாழ்வு இருப்பிற்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் சூழ்நிலை அமைவுகளையும் உத்தரவாதப்படுத்துவதாக அமையவேண்டும்இந்த ஏற்பாடுகளைச் செய்துகொடுக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பு குறித்த நாட்டின் தேசிய அரசாங்கத்திற்கே உரியதாகும். காரணம்உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என்ற அடையாளப்படுத்துகை குறித்த நாட்டின் ஆள்புல எல்லைகளினுள் நகர்வினை ஏற்படுத்தும் மக்களையே குறிக்கின்றது. இதனை ஐ.நா சபையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான நெறிமுறை விதிகள் கோவை உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை வரைவிலக்கணப்படுத்துவதில் இருந்தும் கண்டுகொள்ளலாம்: “உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் எனப்படுவோர் ஆயுதப் பிணக்குகள்பொதுப்படையான வன்செயல் நிலைமைகள்மனித உரிமைகள் மீறப்படுதல் அல்லது மனிதனால் ஏற்பட்ட அனர்த்தங்கள் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பிழைக்கும் பொருட்டு தம் குடிமனைகள் அல்லது வழமையான இருப்பிடங்கள் முதலியவற்றை விட்டுவிட்டு இடம்பெயர்ந்து ஓடவேண்டிய நிர்ப்பந்தம் அல்லது நிலைமைக்கு உள்ளான போதிலும் சர்வதேச வாரியாக அங்கீகரிக்கப்பெற்ற தேச எல்லையைக் கடந்து செல்லாதிருப்பவர்களாவர்.” எனவே குறித்த நாட்டின் பிரஜைகளாகவே தொடர்ந்தும் இந்த மக்கள் இருக்கின்றார்கள்.

மேலும்நடைமுறையில் குறித்த இந்த மக்களை அவர்களின் சொந்த இருப்பிடங்களில் மீள்குடியமர்த்துதல் என்பது பொறுப்புவாய்ந்த அரசாங்கங்களிற்கு மிகவும் வலி மிகுந்ததும் சுமையான அமுல்படுத்துகையுமாக இருப்பதனால் சர்வதேச உதவிகள் பெருமளவிற்கு வேண்டப்படும் ஓர் ஏற்பாடாகவும் அமைந்திருக்கும். அதுதவிரஇந்த மீள்திரும்புகை அல்லது மீள்குடியமரும் செயன்முறையில் இம்மக்கள் தொடர்பில் பாரபட்சம் காட்டப்படல் ஆகாது என்பதையும் ஐ.நா சபையின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பான நெறிமுறை விதி 29 சுட்டி நிற்கின்றது: அதாவது, “தமது குடிமனைகளுக்கு அல்லது வழமையான இருப்பிடங்களுக்கு அல்லது நாட்டின் வேறொரு பகுதிக்குச் சென்று மீளவும் குடியேறியுள்ள இடம்பெயர்ந்த மக்கள்இடம்பெயர்ந்தவர்கள் என்னும் காரணத்தின் பொருட்டு பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்படலாகாது.”  மேலும் இதே விதி 29 இல்இந்த மக்கள் “தாம் விட்டுச்சென்ற அல்லது இடம்பெயர்வின் போது இழந்த சொத்துக்களையும் உடைமைகளையும் மீளப்பெறுவதற்கு முடிந்தவரை உதவும் கடமை பொறுப்புவாய்ந்த தரப்பினரைச் சார்ந்ததாகும். அத்தகைய சொத்துக்களையும் உடைமைகளையும் மீட்டுக்கொள்வது சாத்தியமில்லாதவிடத்துதகுந்த நட்ட ஈடு அல்லது வேறுவகையான இழப்பீடு வழங்க அல்லது பெறபொறுப்புவாய்ந்த தரப்பினர் உதவுதல் வேண்டும்.

மேற்கூறிய விடயங்கள் இடம்பெயர்க்கப்பட்ட யாழ்-முஸ்லிம் மக்களின் அனைத்து உரிமைகளையும்சர்வதேச நெறிமுறைகள் மற்றும் உள்நாட்டு ரீதியில் இடம்பெயர்ந்தவர்களின் வாழ்வினை மீள கட்டியெழுப்புவதற்காக எடுக்கப்படவேண்டிய பொறுப்புவாய்ந்த நடவடிக்கைகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்தில் கோரி நிற்பதனூடாகநியாயப்படுத்தி விளக்கினாலும் நடைமுறையில் இன்று இந்த மக்கள் தமது மீள்குடியேற்றம் தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளைப் பார்க்கின்றபோது குறித்த நெறிமுறைகள் யதார்த்த நிலைமைகளுடன் தொடர்ந்தேர்ச்சியாக விலகிச்செல்லும் தன்மைகொண்டே காணப்படுகின்றது.

ஏனெனில் மீள்குடியேற்றம் என்பது வெறுமனே ஆள் ரீதியான நகர்வோ அல்லது தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பி செல்லும் செயற்பாட்டுடனோ மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. அங்கு ஏற்கனவே இருக்கும் சமூகப்பிரிவினரின் உளவியல்உளப்பாங்கு மற்றும் நடத்தைகள் தொடர்பான பிரச்சினையுடனும் இது அதிகம் தங்கி இருக்கின்றது. நீண்ட காலத்திற்கு பின்னர் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச் செல்லும் இவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் அதற்கான முதிர்ச்சியும் ஏற்கனவே அங்கு வாழும் சமூகத்திடம் காணப்படல் வேண்டும். ஏனெனில் அவர்கள் தனி மனிதர்களாக தமது வாழ்விடங்களில் வாழமுடியாதுமாறாக “மனிதன் ஒரு சமூக விலங்கு” என கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்ரோட்டில் கூறியதற்கு ஒப்ப சமூகம் என்பது மனிதனின் பிரிக்கமுடியாத அங்கம். இந்நிலையில்குறித்த இந்த யாழ்-முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் என்பதும் அங்கு வாழும் தமிழ் சமூகத்தினருடன் ஒருங்கிணைந்து செல்லவேண்டிய தேவைப்பாட்டிற்கு உட்பட்டதாகவே உள்ளது. இதற்கு அவர்களின் குடிசன எண்ணிக்கை மற்றும் அங்குள்ள சமூகஅரசியல்பொருளாதாரமற்றும் நிர்வாக விடயங்கள் காரணமாகக அமைகின்றன. சரியான வகையிலான மீள் ஒருங்கிணைப்பினை (Re-integration) அதிகம் வேண்டிநிற்கும் ஒன்றாகவே யாழ்-முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் அமையவேண்டும்.

இவைதொடர்பில் ஏற்கனவே கூறியது போல்அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகம் என்பவற்றிற்கு பாரியதொரு பொறுப்பும் வகிபாகமும் இருப்பதும்எதிர்பார்க்கப்படுவதும் போலவே சிவில் சமூக அமைப்புக்களும் இது விடயத்தில் அதிகம் சிரத்தையுடன் பங்குகொள்ள வேண்டும் என்பது தவிர்க்க முடியாததும் அவசியம் வேண்டப்படுவதுமான ஒன்றாகும். ஏனெனில் சமூக மட்டத்தில் கருத்துக்களையும் அவற்றை நோக்கி முன்னிறுத்த வேண்டிய செயற்பாடுகளையும் மிகவும் செறிவான வகையில் மக்கள் மத்தியில் கொண்டுசெல்லக்கூடிய ஆற்றலும் அனுபவமும் சிவில் சமூக அமைப்புக்களிற்குத் தாராளமாகவே உண்டு. சமூக மட்டத்தில் செல்வாக்குப் பெற்ற உறுப்பினர்கள் இவ் அமைப்புக்களில் அங்கம் வகிப்பதனால் இந்த இயலுமை சாத்தியமாகின்றது எனலாம். மேலும்கட்டமைப்பு ரீதியான ஏற்பாடுகளையும்செயற்பாடுகளையும் அதிகம் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடிய இயலுமை கொண்ட இயந்திரமாக தேசிய அரசாங்கம் காணப்படும் அதேவேளைஉள ரீதியான நேர்நோக்கு மாற்றங்களை சமூக உறுப்பினர் மத்தியில் ஏற்படுத்தி ஓர் உறுதியானநிரந்தரமானசுமூகமான உறவினை மீளக்கட்டியெழுப்பக்கூடிய ஆற்றல் சிவில் சமூக அமைப்புக்கள் கொண்டிருக்கின்ற அதிவிசேட அம்சமாகும். இதனாலேயே இந்த அமைப்புக்களினால் சமூக மட்டத்திலான  வெற்றிகரமான மீள் இணக்கப்பாடுஒருங்கிணைவுநல்லிணைவு என்பன சாத்தியமாகின்றது.

யாழ்-முஸ்லிம் மக்களின் இயல்பான மீள்குடியேற்ற வாழ்விற்கான அத்தியாவசிய அடிப்படைகளாக மேற்கூறிய ஏற்பாடுகள் அமைகின்றன. இதற்கான முன்னேற்பாடுகளாக குறித்த இரண்டு சமூகங்களிடமும் ஒரு பரஸ்பர புரிந்துணர்வுமற்றும் நம்பிக்கை என்பன அவசியம் கட்டியெழுப்படல் வேண்டும். இவை மிகவும் அடிமட்டத்திலிருந்து செய்யப்பட வேண்டியவையாகும். இந்த இரு சமூகங்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் அறிஞர்கள்கல்விமான்கள்புத்திஜீவிகள்மதத்தலைவர்கள்சமூகசேவையாளர்கள்நலன் விரும்பிகள் என்று எல்லோரதும் உளப்பூர்வமான பங்களிப்பையும் பங்குபற்றலையும் சிவில் சமூக அமைப்புக்களை முன்னிறுத்து செயற்படவேண்டிய உடனடித்தேவைப்பாடு இன்று பெருமளவில் வேண்டப்படுகின்றது. இது விடயத்தில் ஊடகங்களுக்கும் ஒரு மகத்தான பங்கும் வகிபாகமும் தார்மீகப் பொறுப்பும் இருப்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

ஏனெனில்கருத்துக்களை செறிவான முறையிலும் உரிய வகையிலும் கொண்டுசெல்லக்கூடிய இயலுமையும் ஆற்றலும் கொண்டவையே ஊடகங்கள். இந்நிலையில்ஊடகங்கள் தமது கடமையினை பாரபட்சம்காழ்ப்புணர்வு விதைப்பு என்பவற்றிலிருந்தும் தூர விலகிதமது சமூக அக்கறையை ஊடக ஒழுக்க வரன்முறைக்கு உட்பட்டவகையில் நின்றுகொண்டுகுறித்த மக்களின் பிரச்சினைகள்ஏக்கங்களை மனதில் நிறுத்தி நடுநிலை நின்று செயற்பட்டு இரண்டு சமூகங்களின் சமூக ஒற்றுமைநல்லிணக்கம்ஒருமைப்பாட்டிற்காக உறுதிபூண்டு செயலாற்ற வேண்டும். இந்த அனைத்து வழிவகைகளினூடும்சரியான முறையிலும்நேர்நோக்குடன் கூடிய உளப்பூர்வமான பங்களிப்புடனும் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் செயற்பாடுகள் செறிவாக முன்னெடுக்கப்படுகின்றவிடத்துயாழ்-முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற வாழ்வு மீளவும் செழுமை பெற்று பழைய நிலையை தமது சொந்த மண்ணில் நிலையூன்ற வழிவகுப்பது மட்டுமன்றிஅவர்களின் மனதில் குறித்த இடப்பெயர்வு ஏற்படுத்திய ஆழமான துயர்மிகு அனுபவ வடு ஆற்றப்படுவதற்கும் ஏதுவாக அமையும் என்பது எனது உறுதிபட எதிர்பார்க்கும் ஆரூடம் ஆகும்.

கலாநிதி எம். எஸ். அனீஸ்சிரேஷ்ட விரிவுரையாளர், அரசியல் விஞ்ஞானத்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்


Coutesy - kanttankudiinfo

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.