ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:
• அந்த
இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப்
பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் கிளிநொச்சியின் சந்து பொந்துகளில்
உலவித் திரிந்தார் என்பதைப் பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்.
• தலைவர்
கொல்லப்பட்ட காட்சிகள் அந்தப் புகைப்படங்களில் வெளியிடப்பட்டிருந்தது. “உங்கட தலைவர் செத்துப்
போனார், அழுங்கோ
எல்லாரும்” எனக்
கூறியதுடன் கேலியாக அழுதும் காட்டினார். மண்டபத்திலிருந்த அனைவரிடமும் சட்டென ஒரு
சிறிய ஒலியெழுந்து அக்கணமே அடங்கிப்போனது.
இனி…..தொடர்ந்து….
முள்ளிவாய்க்கால்
வீதியுடாக வட்டுவாகல்பாலம் கடந்து முல்லைத்தீவின் மையப்பகுதியை நோக்கி மக்கள்
வெள்ளம் போல் நகர்ந்துகொண்டிருந்தார்கள்.
மக்கள்
வெளியேறிக்கொண்டிருந்த பாதையைத் தவிர்த்து வீதியின் இரு கரையோரமுமாக
இராணுவத்தினர் முள்ளிவாய்க்காலை நோக்கித் தாக்குதல்களை நடத்தியவாறு முன்னேறிச்
சென்று கொண்டிருந்தனர்.
பெரும்
எண்ணிக்கையில் மக்களின் வருகையை எதிர்பார்த்து அதற்கேற்ற வகையில் பல பாதுகாப்பு
ஒழுங்குகளை இராணுவத்தினர் அமைத்திருந்தனர்.
யுத்தத்தின்
இறுதிக்கட்டமாக மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதும் ஏற்கனவே
திட்டமிடப்பட்டிருந்தமை தெளிவாகியது.
சற்று
முன்வரை ஆயுதத்துடன் எதிர்த்து நின்ற இராணுவத்தினர் எங்களை என்னவிதமாக நடத்தப்
போகிறார்களோ என்ற அச்சமும் குழப்பமும் சேர்ந்து போராளிகளின் மனங்கள்
குற்றவுணர்வுடன் நடுங்கிக்கொண்டிருந்தன.
முல்லைத்தீவு
மைதானத்தை அடைந்தபோது இருள் சூழத் தொடங்கியிருந்தது. சுற்றிவர முட்கம்பி வேலிகள்
அமைக்கப்பட்டிருந்தன. மைதானத்தைச் சுற்றிலும் இராணுவத்தினர் காவலில்
நின்றிருந்தனர்.
துப்பாக்கி
ரவைகளும் குண்டுச் சிதறல்களும் இல்லாத ஒரு ஆசுவாசத்தை அனுபவித்தபடி பசியும்
களைப்பும் வாட்டியெடுக்க மக்கள் அனைவரும் அந்தந்த இடங்களிலேயே கூட்டம் கூட்டமாக
அமர்ந்துகொண்டார்கள்.
ஒரு
மலைப்பாம்பு போல மரணம் அந்த மக்களை விழுங்கிக் கக்கியிருந்தது. மக்களோடு மக்களாக
ஆயிரக்கணக்கான போராளிகளும் அந்த மைதானத்தில் இலங்கைப் படையினரிடம் எமது தலைவிதியை
ஒப்படைத்துவிட்டு அமைதியிழந்த மனத்துடன் காத்திருந்தோம்.
இராணுவத்தினரால்
தண்ணீர்ப் போத்தல்களும் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. நானும்
சில போராளிகளும் மைதானத்தின் மத்தியாக ஒரு பகுதியில் அமர்ந்திருந்தோம்.
என்னைப்
பொறுத்தவரை பசி தாகத்தை உணரக்கூடிய மனநிலையில் நான் இருக்கவில்லை. பயங்கரமான
தவறொன்றைச் செய்துவிட்டதான குற்றவுணர்வு மட்டுமே வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது.
முள்ளிவாய்க்கால்
பகுதியில் கேட்டுக்கொண்டிருந்த வெடியதிர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத்
தொடங்கியிருந்தன.
வெளியேறி
வர விருப்பமிருந்தும் சரணடைந்தால் என்ன நடக்குமோ என்ற பயத்துடன் தயங்கி நின்ற பல
போராளிகளின் முகங்கள் என் மனதிற்குள் சுழன்றுகொண்டேயிருந்தன.
இராணுவத்தினர்
மும்முரமாக மக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். மறுநாள்
புலரத் தொடங்கியது. அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம் நிறைந்தவர்களாக மக்கள்
அனைவரும் அடுத்த கட்டத்திற்குத் தயாராகத் தொடங்கியிருந்தார்கள்.
தமது
அடையாள அட்டைகளையும் இதர ஆவணங்களையும் தயாராக எடுத்துவைத்துக் கொண்டிருந்தார்கள்.
எங்களிடம் தயார்படுத்திக் கொள்வதற்கு ஆவணங்கள் எதுவுமிருக்கவில்லை.
எனது
இலங்கை தேசிய அடையாள அட்டையும் கடவுச் சீட்டும் எங்கே கைவிடப்பட்டது என்பதுகூட
நினைவிலில்லை. ஏனெனில் அவற்றை எனது வாழ்க்கையில் மீண்டும் பயன்படுத்துவதற்கான
சந்தர்ப்பம் ஒன்று அமையுமென நான் நினைத்திருக்காததால் அவற்றைப்
பத்திரப்படுத்தவில்லை.
என்னுடன்
வந்திருந்த சில போராளிகளும் அவர்களின் உறவினர்களையோ ஊரவர்களையோ தேடிக்
கண்டுபிடித்து அவர்களுடன் போய்ச் சேரத் தொடங்கினார்கள்.
நானும்
எனது அம்மாவையோ சகோதரிகளின் குடும்பங்களையோ அந்த மக்கள் கூட்டத்திற்குள்
எப்படிக் கண்டுபிடிப்பது எனப் புரியாமல் திகைத்து நின்றேன்.
பதினெட்டு
வயதில் அம்மாவுக்குப் பொய் சொல்லிவிட்டு இயக்கத்திற்குப் போய் இணைந்துகொண்ட
நாளுக்குப் பின்பு இப்போதுதான் அம்மாவின் பாதுகாப்பு மீண்டும் எனக்குத்
தேவைப்பட்டது.
எனது
தங்கையின் கணவர் அந்தச் சனக்கூட்டத்திற்குள் எப்படியோ என்னைக் கண்டுபிடித்து
விட்டார்.
வேகமாகச்
சென்று எனது அம்மாவையும் கூட்டிக் கொண்டு நான் நின்ற இடத்திற்கு வந்து
சேர்ந்தார்.
இறுதிவரை
எனக்காகவே யுத்தப் பிரதேசத்திற்குள் நின்றிருந்த எனது தாயார் இனி என்னைக் காணவே
முடியாது என்கிற நிலைமையில் ஏனைய சகோதரிகளுடன் வெளியேறியிருந்தார்.
முல்லைத்தீவு
மைதானத்தில் என்னைக் கண்டதும் கட்டியணைத்து முத்தமழை பொழிந்து கண்ணீர்விட்டுக்
கதறத் தொடங்கிவிட்டார்.
தான்
வணங்கிய தெய்வங்களையெல்லாம் கூப்பிட்டு, உயிர் மீண்டு வந்த
பிள்ளையை இனியும் காப்பாற்றித் தருமாறு கண்ணீருடன் வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்.
திருவிழாவில்
தொலைந்துபோன தனது நாலு வயது பிள்ளை மீண்டும் கிடைத்துவிட்ட நிம்மதியுடன் என்னைத்
தனது நெஞ்சோடு அணைத்துக்கொண்ட அம்மாவின் அன்புக்கு முன்னால் குற்ற
மனச்சாட்சியுடன் ஒடுங்கிப் போயிருந்தேன்.
தனது
கால்வலியையும், இயலாமைகளையும்
மறந்து, இராணுவத்தினரால்
விநியோகிக்கப்பட்டுக் கொண்டிருந்த உணவுப் பார்சல், குடிநீர் என்பனவற்றை
அந்த மக்கள் நெரிசலுக்குள் மிகுந்த பிரயத்தனப்பட்டுப் பெற்றுக்கொண்டு வந்து என்னை
வற்புறுத்தி உண்ணச் செய்தார்.
அப்பாவை
இழந்த நிலையில் குடும்பத்தில் மூத்த மகளாகிய நான் அம்மாவுக்கு எப்போதுமே ஆறுதலாக
இருந்தது கிடையாது. அம்மாவின் நம்பிக்கைகளைப் பாழடித்து அவருக்குத் துன்பம்
கொடுத்ததைத் தவிர, வேறு
எவ்விதத்திலேனும் பிரயோசனமில்லாத பெண்ணாகவே இதுவரை நான் இருந்திருக்கிறேன்.
இப்போதும்
ஒரு ஆபத்து நிறைந்த சுமையாகவே அவரிடம் வந்து சேர்ந்திருக்கிறேன். என்னைத் தனது
கைப்பிடியிலிருந்து நழுவவிடாமல் ஒரு சிறு குழந்தையைக் கண்பார்வைக்குள்
வைத்திருப்பதைப்போல அம்மா என்னைக் காத்துக்கொண்டு வந்து சேர்த்திருக்காது
விட்டால் இன்று நான் உயிரோடிருந்திருக்க முடியாது.
அன்றைய
பகல்பொழுதும் முல்லைத்தீவு மைதானத்திலேயே கழிந்தது. மக்கள் படிப்படியாக
உள்வாங்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் அலையலையாக இன்னும் மக்கள் வந்து
சேர்ந்துகொண்டே இருந்தார்கள்.
மீண்டும்
இரவு நேரமாகியபோதுதான் எமது பரிசோதனைகள் முடிந்து நானும் எனது அம்மாவும் உள்ளே
அனுமதிக்கப்பட்டோம். அந்த இரவும் அதே மைதானத்தில். நானும் எனது அம்மாவும் இன்னும்
இரண்டு போராளிப் பிள்ளைகளுமாகத் தங்கினோம்.
வெறும்
புழுதி நிலத்தில் ஒரு போர்வையை விரித்து நீண்ட வருடங்களுக்குப் பின்பு
அம்மாவுக்கருகில் பாதுகாப்பாகப் படுத்துக்கொண்டு என் துயரச் சுமைகள்
பாறாங்கற்களாய் அழுத்த நான் இரவு முழுவதும் விழித்திருந்தேன்.
மறுநாள்
காலை முல்லைத்தீவு வீதியில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பேருந்துகளில்
மக்கள் ஏற்றப்பட்டனர்.
நானும்
அம்மாவும் ஒரு பேருந்தில் ஏறிக்கொண்டோம். எமது வாகனத்தில் வேறு சில போராளிகளும்
இயக்கத்தின் பராமரிப்பு நிலையத்திலிருந்து வந்திருந்த குழந்தைகளும் இருந்தனர்.
அந்தக்
குழந்தைகளை உதவி வழங்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரேனும் பொறுப்பெடுப்பார்கள்
என்ற நம்பிக்கை இருந்தது.
இந்த
மட்டில் உயிர்மீண்டிருந்த அவர்களின் முகங்களைப் பார்க்கவே முடியாமல் எனது நெஞ்சம்
கொதித்துக்கொண்டிருந்தது. அந்த வாகனத் தொடரணி இடையிடையே பல இடங்களில் நின்று
தாமதித்து நகர்ந்தது.
18.05.2009 நள்ளிரவு ஓமந்தை இராணுவச் சோதனை நிலையத்தைச்
சென்றடைந்தோம். வாகனத்திலிருந்து இறக்கப்பட்டபின் அனைவரையும் ஒரு இடத்தில்
அமர்ந்துகொள்ளும்படி கூறப்பட்டது. நள்ளிரவிலும்
மின் விளக்குகள் ஒளிவெள்ளத்தை வாரியிறைத்துக்கொண்டிருந்தன. இலங்கை நாட்டின்
ஜனாதிபதி அவர்களால் மக்கள் அனைவரும் வரவேற்கப்படுவதாகவும், நீண்டகால யுத்தம்
வெல்லப்பட்டு மக்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், இனி அவர்கள் எதற்கும்
பயப்படத் தேவையில்லை என்றும், இன்னும் வேறு பல
விடயங்களைப் பற்றியும், ஒலி
பெருக்கியில் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
சற்று
நேரத்தில் “இயக்கத்தில்
இருந்தவர்கள் எழும்பி வாருங்கள்; ஒருநாள் இயக்கத்தில்
இருந்தாலும் சரி கட்டாயமாக எழுந்து வரவும்” என அறிவிக்கப்பட்டது.
அம்மா
மிகவும் பயப்படத் தொடங்கினார். நிச்சயமாகவே இயக்கத்திலிருந்தவர்களுக்கான பதிவுகள், நடவடிக்கைகள்
வேறுபட்டதாக இருக்கும் என்பது எனக்குப் புரிந்த காரணத்தால் நான் அம்மாவை ஆறுதல்
படுத்தினேன். “நீங்கள்
பயப்பட வேண்டாம் அம்மா. உங்களை
மக்களுக்கான இடம்பெயர்ந்தோர் முகாமுக்கு அனுப்புவார்கள். அங்கே தம்பி
தங்கச்சிமாரின் குடும்பங்களோடு, நீங்கள் கவனமாகப்
போய்ச் சேர்ந்துகொள்ளுங்கள். நான்
எப்படியாவது உங்களுடன் தொடர்புகொள்வேன் அம்மா, பயப்படாதையுங்கோ” என ஆறுதல் கூறிவிட்டுத்
தாமதிக்காமல் என் சிறிய பையுடன் எழுந்து சென்று இயக்கத்திலிருந்தவர்களின்
வரிசையில் சேர்ந்துகொண்டேன்.
என்னை
மறைத்துப் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இந்த
மாதிரியான நிலைமையில் நேர்மையாகச் செயற்படுவது ஒன்றுதான் என்னைக் காப்பாற்றும்
என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு குறிப்பிட்டளவு ஆட்கள் சேர்ந்ததும் ஒரு
வழிகாட்டி எங்களை அருகிலிருந்த இன்னொரு இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அன்று
மே மாதம் பத்தொன்பதாம் திகதி பொழுது விடியத் தொடங்கியிருந்தது. சிறிது தூரம்
நடந்துசென்றதும் ஒரு பெரிய மண்டபத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் அமர்ந்திருப்பதைக்
காணக்கூடியதாக இருந்தது.
அத்தனை
பேருமே இயக்கப் போராளிகள். ஆண்கள் தனியாகவும் பெண்கள் தனியாகவும் பதிவு
செய்யப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது.
இப்போது
வெடியதிர்வுகளே கேட்காத தூரத்திலிருந்தோம்; பிரிந்து வந்த உறவுகளை
நினைத்தபோது தாங்க முடியாத வேதனையில் மனம் புண்ணாக வலித்துக்கொண்டிருந்தது.
மண்டபத்தில்
இருந்தவர்கள் அனைவரும் இயக்கத்திலிருந்தவர்கள் என்றாலும், நன்கு அறிமுகமான முகங்கள்
இருக்கின்றதா எனக் கண்கள் தேடியலைந்தன.
ஆனாலும்
எவருடனும் பேச வேண்டும் எனத் தோன்றவில்லை. என்னைப் போலவே பலரும் மனமொடிந்த
நிலையில், மௌனமாக
அமர்ந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
இயக்கத்திலிருந்தவர்கள்
ஒவ்வொருவரது முழுமையான விபரங்களும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் அதிக
சிரத்தையுடன் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
தனித்
தனியாகப் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. இப்படியாக ஒவ்வொருவரையும் பதிவு
செய்வதற்கு அதிக நேரமானது.
சரளமாகத்
தமிழ் பேசக்கூடிய இராணுவத்தினரே பதிவுகளை மேற்கொண்டனர். அன்றைய பகல்பொழுதும்
கடந்துகொண்டிருந்தது. இன்னும் புதிதாக ஆட்கள் வந்துகொண்டேயிருந்தார்கள்.
பதிவு
நடவடிக்கைகள் முடிந்தவர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு வேறெங்கோ ஒரு இடத்திற்கு
அனுப்பப்பட்டனர். அவர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக
அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள்.
இராணுவத்தினருக்கு
உதவியாக ஒருசில தமிழ் இளைஞர்கள் ஓடித் திரிந்து வேலைகள் செய்வதை அவதானிக்க
முடிந்தது.
அவர்களில்
சிலர் பேசிய அவமானப்படும்படியான பேச்சுக்கள், வெந்த புண்ணில் வேல்
பாய்ச்சுவது போல இருந்தது. உச்சக்கட்ட சகிப்புத் தன்மையுடன் மனதை ஒரு கோமா
நிலையில் வைத்துக்கொண்டிருந்தேன்.
மெதுவாக
நகர்ந்துகொண்டிருந்த வரிசையில் முன்னேறி, பதிவு மேசைக்கு அருகாக
வந்துவிட்டிருந்தேன். அப்போது “தமிழினியக்கா . . . தமிழினியக்கா
. . .” என்னை
நன்கு அறிந்தவர் போல ஒருவர் அழைக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினேன்.
அந்தத்
தமிழ் இளைஞர்களில் ஒருவர் என்னை எழுந்து வரும்படி சைகை செய்தார். அவருடன் மேலும்
இரண்டு இராணுவத்தினர் அவ்விடத்தில் நின்றிருந்தனர்.
என்ன
நடக்கப்போகிறதோ என்ற தயக்கத்துடனும் பயத்துடனும் அவ்விடம் சென்றேன்.
நான்
தமிழினிதான் என்பதை மறைக்காமல் அவர்களிடம் ஒப்புக்கொண்டேன். என்னை நேராகப்
பதிவுசெய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
எனது
முழுப்பெயர், முகவரி, இயக்கத்தில் செயற்பட்ட
காலம் என்பவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டன. எந்த ஒளிவுமறைவுமில்லாமல் எனது
தனிப்பட்ட விபரங்களைப் பதிவுசெய்துகொண்டேன். என்னைப்
புகைப்படமும் எடுத்தனர்.
நான் உண்மையாக இருக்கும் பட்சத்தில் யுத்தத்தில் சரணடைந்த
ஒருவருக்குக் கிடைக்கும் நீதி எனக்கும் கிடைக்குமென ஆரம்பத்திலிருந்தே மெலிதான ஒரு
எதிர்பார்ப்பு என்னிடம் இருந்தது.
எனது
விபரங்கள் அனைத்தும் பதிவுசெய்யப்பட்டதும் அந்த மண்டபத்தின் ஒரு ஓரத்தில் தனியாக
இருத்தி வைக்கப்பட்டேன். எனக்கான நடவடிக்கைகள் வித்தியாசப்படுவதை உணர முடிந்தது.
அப்பொழுது
அங்கு வந்த இராணுவ உயர் அதிகாரி ஒருவர் என்னைக் கண்டதும் “வணக்கம் தமிழினி” எனச் சரளமான தமிழில்
பேசினார். அவரைக் கண்டதும் எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.
அந்த
மனிதரை முன்னர் எங்கேயோ சந்தித்துப் பேசிய நினைவு பொறி தட்டியது. ஒரு கணம்தான்.
தலைக்குள் மின்னலடித்ததைப்போலச் சுதாகரித்துக்கொண்டேன்.
சமாதான
காலத்தில் வன்னிக்கு வந்த ஊடகவியலாளர்களோடு ஏதோவொரு சிங்கள ஊடகத்தின் சார்பில்
அதன் பிரதிநிதியாக இவரும் வந்திருந்தார்.
அரசியல்
பொறுப்பாளர் உள்ளிட்ட பல இயக்க முக்கியஸ்தர்களைச் சந்தித்ததுடன் கிளிநொச்சியில்
அமைந்திருந்த அரசியல்துறை மகளிர் செயலகத்தில் என்னையும் சந்தித்திருந்தார்.
சரளமாகத்
தமிழில் பேசக்கூடிய அவர், பல
போராளிகள், பொறுப்பாளர்களுடன்
போராட்டத்திற்குச் சார்பான ஒருவர் என்ற தோரணையுடன் மிக இலகுவாக நட்புரிமையுடன்
பழகிய ஞாபகங்கள் வந்தன.
அது
மட்டுமல்லாமல், 2004ஆம் ஆண்டில் முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப் மாலதியின்
நினைவுநாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாகக் கிளிநொச்சியில் நடத்தப்பட்டபோது
இவரும் கலந்துகொண்டு அனைவரோடும் தன்னை ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு
மிக இயல்பாகப் பல விடயங்கள் பற்றியும் உரையாடியதும் நினைவுக்கு வந்தது.
அந்த
இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப்
பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுக் கிளிநொச்சியின் சந்து பொந்துகளில்
உலவித் திரிந்தார் என்பதைப் பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்.
எத்தகைய
தந்திரோபாயங்களைப் பாவித்துப் புலிகளின் பிரதேசங்களுக்குள், இராணுவப் புலனாய்வு
அணியினர் ஊடுருவி இருந்துள்ளார்கள் என்ற உண்மையைப் புரிந்துகொள்வதற்கு இதுவே நான்
கண்ட சாட்சியாகும்.
நான்
தன்னை அடையாளம் கண்டுகொண்டேன் என்பதை அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரியும்
புரிந்துகொண்டார். அவர் என்னுடன் மிகவும் மரியாதையுடன் உரையாடினார்.
“தமிழினி!
நீங்கள் பயப்படத் தேவையில்லை. எல்லோரைப் போலவும் இப்பொழுதே உங்களைப்
புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்ப முடியாது.
நீங்கள்
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு பொறுப்பாளராகச் செயற்பட்டுள்ள காரணத்தால்
உங்களைச் சில விசாரணைகள் செய்ய வேண்டியிருக்கிறது.
எனவே
உங்களை சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கவுள்ளோம். நீங்கள் சட்ட ரீதியான
நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவீர்கள்” எனக் கூறினார்.
அதன்
பின்பு நீண்ட மணித் தியாலங்களாக மீண்டும் அந்தப் பதிவு மண்டபத்தின் ஒரு ஓரத்தில்
தனிமையாக அமர்த்தி வைக்கப்பட்டிருந்தேன்.
அடுத்து
என்ன நடக்கப்போகிறது எனச் சிந்திப்பதை இயன்றவரை தவிர்க்க முனைந்தேன். ஒரு
ஜடப்பொருள் போல அவ்விடத்தில் அமர்ந்திருந்து கண்ணுக்குத் தென்பட்ட காட்சிகளை
வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தேன்.
எதனையும்
மூளைக்கு எடுத்துச் சென்று அலசி ஆராய்ந்து முடிவெடுக்கும் சக்தியை நான் முற்றாக
இழந்திருந்தேன்.
ஒரு
தமிழ் இளைஞர் அன்றைய பத்திரிகையொன்றைக் கொண்டுவந்து அதிலிருந்த புகைப்படங்களை
அனைவருக்கும் காட்டினார்.
தலைவர்
கொல்லப்பட்ட காட்சிகள் அந்தப் புகைப்படங்களில் வெளியிடப்பட்டிருந்தது. “உங்கட தலைவர் செத்துப்
போனார், அழுங்கோ
எல்லாரும்” எனக்
கூறியதுடன் கேலியாக அழுதும் காட்டினார்.
மண்டபத்திலிருந்த
அனைவரிடமும் சட்டென ஒரு சிறிய ஒலியெழுந்து அக்கணமே அடங்கிப்போனது.
எந்த
மனிதரை மரியாதைக்குரிய அண்ணனாகவும் பாசமிகுந்த தந்தையாகவும் கண் முன்னேயிருந்த
கடவுளாகவும் ஒவ்வொரு போராளியும் எமது இதயத்தில் இறுக்கமாக
நிலைநிறுத்தியிருந்தோமோ, எந்த
மனிதரின் வார்த்தைகளை மந்திரம் என்றெண்ணிச் செயற்பட்டோமோ, அந்த மனிதரின் மரணச்
செய்தியைக் கேட்டும் கேளாதவர்களைப் போல இருக்க முயற்சித்த அந்தச் சூழ்நிலையைப்
புரியவைப்பது மிகவும் கடினமானது.
அங்கிருந்த
ஒவ்வொரு போராளியின் முகமும் பேயறைந்ததாக மாறியிருந்தது.
புலிகள்
இயக்கத்தின் தலைவர் வகுத்த இறுதித் திட்டத்தை ஓரளவு தெரிந்துவைத்திருந்தவர்களுக்கு, நந்திக்கடல் நீரேரியில்
என்ன நடந்திருக்கும் என்பதை அந்தச் செய்தி உணர்த்தியது.
இருப்பினும்
எவருமே வாய் திறந்து எதையுமே பேசிக்கொள்ளவில்லை.
இப்போது
ஒவ்வொருவரும் தனிநபர்கள் என்ற வகையில் தத்தமது நிலைமைகளை மேலும் மோசமாக்கிக்
கொள்ளாமல் இருப்பதே சிறந்ததாகப் பட்டிருக்க வேண்டும்.
பத்தொன்பதாம்
திகதி மாலையானதும், அங்கே
கொண்டு வரப்பட்ட ஒரு பஸ் வண்டியினுள் ஏற்றப்பட்டேன். ஏற்கனவே பல ஆண் போராளிகளும்
அதற்குள் இருந்தனர்.
வாகனம்
ஓமந்தை கடந்து வவுனியா நோக்கிச் செல்லத் தொடங்கியது. சாதாரண உடை அணிந்திருந்த
சி.ஐ.டி அதிகாரிகள் இருவர் அந்த வாகனத்தில் இருந்தனர். அவர்கள் என்னைப்
பார்ப்பதும் தமக்குள் சிங்கள மொழியில் உரையாடிக்கொள்வதுமாய் இருந்தார்கள்.
விரைந்துசென்ற
வாகனம் மரங்களடர்ந்த ஒரு வளைவினுள் நிறுத்தப்பட்டது. அனைவரும் இறக்கப்பட்டு ஒரு
கட்டடத்தினுள் அழைத்துச் செல்லப்பட்டோம்.
கம்பிக்கூடுகளாலான
சிறையறைகளைக் கொண்ட மண்டபம் ஒன்றினைக் கடந்து சென்றோம். அந்தக் கம்பியறைகளில்
இளைஞர்கள் பலர் நெருக்கமாக அடைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.
அதில்
ஒரு சிலர் எனது பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்கள். வேகமாக
நடந்துசென்றுகொண்டிருந்த காரணத்தால் எனக்கு அவர்களைத் திரும்பிப் பார்க்க
முடியவில்லை, தலையைக்
கவிழ்ந்தபடி நான் அவர்களைக் கடந்து சென்றேன்.
என்னோடு
கொண்டு வரப்பட்ட ஆண்கள், வேறு
வழியால் அழைத்துச் செல்லப்பட்டு விட்டார்கள்போலத் தெரிந்தது. இப்போது நான்
மட்டும் தனியாக ஒரு அலுவலகத்திற்குக் கூட்டிச் செல்லப்பட்டேன்.
-தமிழினி
தொடரும்….
தொடரும்….
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.