தமிழர்கள் தனிநாடு போராட்டங்களை ஆரம்பித்த
காலத்திலிருந்து முஸ்லிம்கள் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டனர். சொத்து இழப்புகள்
தொழில் இழப்புகள் என்று ஆரம்பித்து உயிரிழப்புகள் வரை தொடர்ந்தது. 1990இல்
இந்திய இராணுவம் வெளியேறிய காலத்தில் புலிகள் மீண்டும் ஊர்களுக்குள்
வந்தனர். இதன் பின்னர் முஸ்லிம்கள் பாரிய இனப்படுகொலைகளினால் ஆயிரக்கணக்கான
உயிர்களையும் இனச்சுத்திகரிப்பினூடாக கிழக்கில் சிறிய பெரிய ஊர்களையும் வடக்கில்
மாவட்ட மட்டத்தில் பெரும் பிரதேசங்களையும் இழந்தனர்.
ஈழப்போராட்டம்
ஆரம்பமான காலகட்டத்தில் 18 ஜுலை
1983 அன்று கந்தர்மடத்தில்
கண்ணிவெடித்தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
அதையடுத்து யாழ் நகரில் பல பகுதிகளிலும் இராணுவம் துப்பாக்கிச் சூடுகளை
நடத்தியிருந்தது. இந்த தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டனர். அப்போது யாழ் வைத்தியசாலையின் முன்னால்
நண்பனொருவனுடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அப்துல் அஸீஸ் அம்ஜத் என்ற ஒஸ்மானியாக் கல்லூரியின் மாணவன் மீது
இராணுவத்தினர் சுட்டதில் அவ்விடத்திலேயே அவர் பலியானார். இராணுவத்தின் கவச
வாகனமொன்றிலிருந்து சுடப்பட்ட துப்பாக்கி ரவைகள் சோனகதெரு சிவல பள்ளிவீதியில்
நின்ற மஹ்ரூப் என்பவரின் வயிற்றில் பட்டதால் அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.
அந்த வகையில் ஈழப்போராட்டம் தாக்குதல் வடிவம் பெற்ற முதல் நாளிலேயே முஸ்லிம்கள்
இருவரையும் பலிகொடுத்திருந்தது. அம்ஜத்துக்கு அப்போது 14 வயது. இவர்கள் இருவரும் தான்
ஈழப்போராட்டம் ஆரம்பமான காலத்தில் முதன் முதலில் கொல்லப்பட்ட முஸ்லிம்களாவர்.
1985இல் மீரான் முஹிதீன் என்ற சித்த
சுவாதீனமற்ற நபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டார். இவர் ஒரு
அரசாங்க உளவாளி என்ற முட்டாள் தனமான நம்பிக்கையடிப்படையில் கடத்தப்பட்டு பின்னர்
சுட்டுக் கொலை செய்யப்பட்டு குளக்கரையொன்றில் வீசப்பட்டிருந்தார். புலிகளே அவரைக்
கடத்திச் சென்றதாகவும் கொலை செய்ததாகவும் பின்னர் தெரிய வந்தது.
1988இல் ஜமீன் என்ற சித்த சுவாதீனமற்ற நபர்
புளொட் அமைப்பினால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். பிறகு யாழ்
முஸ்லிம்கள் சிலர் தலைப்பட்டு அவர் சித்த சுவாதீனமற்றவர் என்று கூறியதால்
விடுவிக்கப்பட்டார். இருந்த போதிலும்
சித்திரவதையினால் ஜமீனுடைய ஈரல் வீங்கி விடுவிக்கப்பட்டு இரண்டு
மணித்தியாளத்தினுள் இறந்து விட்டார். சின்னப்பள்ளிவாசலுக்கு முன்னாள் தூக்கி
வீசப்பட்டிருந்த ஜமீன் தண்ணீர் தாகத்தால் துடித்துக் கொண்டிருந்த வேளையில்
அருகிலிருந்த கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீரை எடுத்து அவருக்கு குடிப்பதற்காக
ஊற்றினேன். ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் தான் அவருடைய வயிற்றுக்குள் சென்றது.
மிகுதியை அவர் குடிக்க முயன்றும் அது அவருடைய தொண்டையயை தாண்டிச் செல்லவில்லை.
அவர் நன்றாக தாக்கப்பட்டுள்ளார் என்பதையறிந்து அவருடைய வயிற்றைப் பார்த்த போது அது
பச்சை நிறமாக காணப்பட்டது. அவர் பிழைப்பது கடினம் என்பது விளங்கியது.
1986இல் ஈழப்போரில் முதன் முதலாக
கொல்லப்பட்ட அம்ஜத்தின் தந்தையார் அப்துல் அஸீஸ் அவர்கள் யாழ்ப்பாணம் பஜாரிலுள்ள
தனது கடையிலிருந்து வெளியே வந்த போது இராணுவம் ஏவிய ஷெல் பட்டு அவ்விடத்திலேயே
வபாத்தானார்.
1986ஆம் அப்போது ஜமாஅதே இஸ்லாமிக்கும்
இஸ்லாமிய இளைஞர் அமைப்புக்கும் முறுகல் நிலை காணப்பட்ட காலம். ஜெலீல் மாஸ்டர் என்பவருக்கும் நிஹார்
என்பருக்கும் தனிப்பட்ட மோதல் ஒன்று இடம்பெற்றது. இந்த மோதலின் பின்னர் ஜெலீல்
மாஸ்டரின் தம்பி நவாஸ் என்பவர் கொழும்பிலிருந்து வந்திறங்கி நடைபெற்ற சம்பவத்தை
கேட்டறிந்து வீதியில் நின்று சத்தம் போட்டுள்ளார். அப்போது அங்கு நின்ற ஹக்கு
என்பவர் நாங்கள் வந்தாலும் தாக்குவீர்களா? என்று
கேட்க நவாஸ் ஆம் என்று கூறியுள்ளார். இதையடுத்து தனது பிரதேசத்துக்கு சென்ற ஹக்கு
பொம்மைவெளி என்ற பிரதேசத்தில் இருக்கும் சண்டியர்களை அழைத்துக் கொண்டு குளத்தடி
சந்திக்கு வந்தனர். இதைக் கேள்விப்பட்ட இளைஞர் அமைப்பினர் தாமும் ஆயதங்களை
தூக்கிக் கொண்டு வந்தனர். இரு குழுவினருக்குமிடையே பயங்கரமான வாள் சண்டையும்
அடிபிடியும் இடம்பெற்ற வேளையில் நிலமை கட்டுக்கடங்காமல் போகவே வெள்ளை என்பவர்
தன்னிடமிருந்த கிரணட்டை எடுத்துக்காட்டி எல்லோரையும் போய் விடுமாறு கூறினார்.
இந்நிலையில் கிரணட்டின் கிளிப்பையும் கழற்றி விட்டார். அதன் கிளிப் கையத் தள்ளவே
பாடசாலை வளவிலுள்ள குப்பைக்குள் அதைப் போட முயற்சித்தார். அங்கு மாணவர்கள்
சிரமதானப் பணியிலிருந்ததால் அங்கு
வீசினால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமெனக் கருதி ஹக்கு இருந்த பக்கமாக கிரணட்டை
வீசினார். இதனால் ஹக்கு என்பவரும் ஜவ்ஸி என்ற சிறுவனும் வபாத்தாகினர். கிராம
அதிகாரியான ஜவ்பர் என்பவர் தலையில் காயம்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு வபாத்தானார். இதைவிட ஒன்பது பேர் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்திருந்தனர். இன்னும் 18 பேருக்கு சாதாரண காயங்கள்
ஏற்பட்டிருந்தன.
இதைப்பற்றி
விசாரித்த புலிகள் அக்கைக்குண்டு இஸ்ரேல் தயாரிப்பு என்றும் இராணுவத்திடம் மட்டும்
அது இருந்தது. உங்களிடம் அது எப்படி வந்தது என்ற தோரணையில் விசாரனை நடத்தினர். 1986இல் யாழ் கோட்டை பொலிஸ் நிலையம்
தாக்கப்பட்டு அங்கிருந்த ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்ட வேளையில் ஒரு பெட்டி
ஜே.ஆர். ரக கைக்குண்டுகள் மட்டும் கைவிடப்பட்டிருந்தது. அதுவே ஜெலீல் மாஸ்டர்
கைக்கு கிடைத்தது. அப்போது தமிழ்
இயக்கங்கள் முஸ்லிம்களுக்கெதிரான கடத்தல்கள் கப்பம் கேட்டல் போன்றவற்றிலிருந்து
பாதுகாப்பு பெறும் நோக்குடன் அது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இக்குண்டை பற்றி
கேள்விப்பட்ட ஜெலீல் மாஸ்டரின் சகோதரர்கள் அதனை உரிய நபரிடமிருந்து மிரட்டிப்
பெற்றிருந்தனர். அதுவே இருதியில் மூன்று உயிர்களைக் குடித்தது. சகோதர
முஸ்லிமொருவரின் இரத்தத்தை ஓட்டுபவர்
சுவர்க்கம் செல்ல மாட்டார் என்ற முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பு இங்கு
நோக்கப்படல் வேண்டும். முதலில் குண்டைப்பற்றி அவ்வளவாக புலிகள்
அலட்டிக்கொள்ளவில்லை. முஸ்லிமொருவரே ஜே.ஆர். குண்டின் கிளிப்பை எடுத்து அவர்கள்
கேட்காமலே கொடுத்தார். இது தன் கண்ணை தன் கையால் குத்துவது போன்ற ஒரு
முட்டாள்தனமான ஒரு செயல். குண்டு ஜே.ஆர். ரகம் என்று தெரிந்ததும் விசாரணை
வேறுவிதமாக இருந்ததுடன் கடுமையாகவும் புலிகள் செயற்பட்டனர். இதன் பின்னர் ஜெலீல் மாஸ்டர் வெள்ளை உட்பட
நாற்பது முஸ்லிம் இளைஞர்கள் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இவர்களை
நாற்பது நாட்கள் வரை புலிகள் தடுத்து வைத்திருந்தனர். அவர்களை சுட வேண்டுமென
முஸ்லிம் பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டமொன்றைச் செய்தனர். இதற்கு ஒரு
இஸ்லாமிய அமைப்பும் துணை போயிருந்தது.
இதன் போது ஜெலீல் மாஸ்டருடைய வீடும் அவரின் இரத்த உறவினர்களின் வீடுகளும்
அடித்து நொறுக்கப்பட்டது..
அதனைத் தொடர்ந்து மறு நாள் காலை நான்கு
மணியளவில் ஜெலீல் மாஸ்டரும் (36
வயது) வெள்ளையும் (இபுறாகிம் நமீஸ்) (17வயது)
சோனகதெருவிலுள்ள ஐந்து சந்திக்கு கொண்டு வரப்பட்டனர். இருவரும் இரண்டு
ரக்கத்துகள் சுன்னத்து தொழுத பின்னர் கிளி என்ற முஸ்லிம் புலி உறுப்பினரால்
சுட்டுக்கொல்லப்பட்டனர். கிளியுடன் அக்கரைப்பற்று பாரூக் என்ற புலியுறுப்பினரும்
வந்திருந்தார். இருவரையும் சுட்டுக்கொன்ற அவர்கள் அருகிலுள்ள முஸ்லிம்
வீடுகளிலுள்ளவர்களை எழுப்பி தகவலை உறவினர்களுக்குச் சொல்லுமாறு சொல்லி விட்டு
சென்றிருந்தனர். ஜெலீல் மாஸ்டருக்கும் கிரணட் வீச்சுக்கும் நேரடியாக எந்த
சம்பந்தமும் இல்லை. இந்த பாரூக் தான் 1986
இல் யாழ் டெலிகொமினிகேசன் இராணுவ முகாம் மீது தாக்குதல் இடம்பெற்ற வேளையில்
சுடப்பட்டு கொல்லப்பட்டார். இவர் புலிகளின் உள்வீட்டு மோதலில் கிட்டுவின்
உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக பின்னால் தெரியவந்தது. கிளி தற்போது
கட்டாரில் வேலை செய்கின்றார்.
இந்நிலையில் ஏனையவர்களை தினமும் இரண்டு பேர் வீதம் சுட்டுக்கொல்லுமாறு
பிரபாகரனிடமிருந்து பாரூக்குக்கு நேரடியாக உத்தரவு கிடைத்திருந்தது. அதே வேளை முஹிதீன்
தம்பி நவாஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு புலிகளின் முகாமுக்கு சென்றது. முகாமை
அண்மித்த வேளை அது ஆயிரம் பேரைக் கொண்ட பெரும் மக்கள் அணியாக மாறியிருந்தது. நாரே
தக்பீர் சத்தம் அங்கே முழங்கியதால் அங்கு காவலில் இருந்த புலிகள் பெரும்
அச்சத்துடன் காணப்பட்டனர். அங்கிருந்த புலிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் முறுகல்
ஏற்பட்ட வேளையில் கிட்டு தலையிட்டு சமரசப்படுதிதியதுடன் கடத்தப்பட்ட ஏனையவர்களை
விடுவிக்குமாறு கிட்டுவால் கட்டளையும் விடப்பட்டது. முஸ்லிம்கள் தமக்கிடையில்
சண்டையிடக் கூடாது என்பதும் ஒரு குழுவுக்கு எதிராக இன்னொரு குழுவைச் சேர்ப்பதும்
கூடாது கொலையை விட கொடிய குற்றம் என்பது
இச்சம்பவம் நமக்குத் தரும் படிப்பினையாகும்.
அடுத்த
பாகத்தில் புலிகள் முஸ்லிம்களை எவ்வாறு பகடைக்காய்களாக பாவித்தார்கள் என்பதைப்
பார்ப்போம்..!
கருப்பு
ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு (பாகம்-2)
1987
ஜனவரியில் புலிகளின் அலுவலகம் ஒன்று
முஸ்லிம் பிரதேசத்தில் காதி அபூபக்கர் வீதியில் அமைந்திருந்தது. இந்த முகாம்
நடமாட்டங்கள் ஹெலியிலிருந்து அவதானிக்கப்பட்டு அந்த முகாம் குறிவைக்கப்பட்டது.
இராணுவத்தால் ஏவப்பட்ட ஷெல் ஒன்று அந்த அலுவலகத்துக்கு முன்னிருந்த
மின்கம்பத்தில் பட்டதால் முகாமுக்கு
முன்பிருந்த வீட்டின் மீது ஷெல் விழுந்து ஒரு தாயும் (மீராஸாஹிபு நாச்சியாவும்) அவரது
மகள் தாஹிராவும் பலியாகினர்.
ஈழப்போராட்டத்தின்
ஆரம்ப காலங்களில் முஸ்லிம்களையும் தம்முடன் இணைத்துக்கொள்ளவே தமிழ்
ஆயுதக்குழுக்கள் முனைந்தன. 1986இல்
ரெலோவும் அதன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் போன்றவற்றின் செயற்பாடுகள்
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் தடைசெய்யப்பட்டன. இதன் பின்னர்
விடுதலைப்புலிகளே அப்பிரதேசங்களில் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கில்
முஸ்லிம்களின் குடியிருப்புகள் புலிகளின் தமிழீழ கோரிக்கைக்கு தடையாக இருப்பதாக
எண்ணிய புலிகள் முஸ்லிம்களை வேரறுக்க வேண்டுமென முடிவு செய்தனர்.
முஸ்லிம்களுக்கெதிராக பல சதித் திட்டங்களை தீட்டினார்கள். இந்தக்காலப்பகுதியில்
முஸ்லிம்களுக்கு எதிராக கொலைகளையும் ஆட்கடத்தல் கப்பம் போன்ற கொடுஞ்செயல்களையும்
கட்டவிழ்த்து விட்டிருந்தனர். இந்தக்
காலப்பகுதியில் புலிகள் எவ்வாறு
முஸ்லிம்களை பலிகொடுக்கத்தயாரானார்கள் என்பதை சில நிகழ்வுகளுடன் ஒப்பு
நோக்குவோம்.
1987
ஜனவரியில் யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தில் அமைந்திருந்த படை முகாம் மீது கிட்டு
தலைமையிலான புலிகள் தாக்கி 5 படையினரையும்
3 பொலிஸாரையும் கைதுசெய்திருந்தனர். இந்த தாக்குதல் இறுதிக்கட்டத்தை
அடைந்தவேளையில் விமானப்படை ஹெலிகொப்டர்கள் வந்து தாக்குதல் நடத்தின. இந்த
தாக்குதலை திசை திருப்பும் நோக்கில் புலி உறுப்பினர் ஒருவர் சோனக
வட்டாரத்திலுள்ள ஜின்னாவீதி வழியாக தனது
மோட்டார் சைக்கிளின் லைட்டைப் போட்டுக்கொண்டு வேகமாக செலுத்தினார். கோட்டை பக்கமாக
தாக்கிக் கொண்டிருந்த ஹெலி திடீரென திரும்பி மோட்டார் சைக்கிளை நோக்கிச்சுட்டது.
சூடுகள் முஸ்லிம் பகுதியிலுள்ள வீடுகள் மீது விழுந்ததில் ஆறு மாதக்குழந்தையொன்று
காயமடைந்தது. இன்று வளர்ந்து வாலிபனாகிவிட்ட அக்குழந்தை பாலக வயதில் ஏற்பட்ட
காயங்கள் காரணமாக வளர்ச்சி குன்றி கால்கள் பலமற்றதாக காணப்படுகின்றார். இவ்வாறு விடுதலைப்புலிகள் பொதுமக்களை
பலிகொடுக்கும் வகையிலான செயற்பாடுகள் ஏராளம்.
1987
ஒக்டோபர் 16ஆம் திகதி இந்திய படையினர்
அராலியூடாக யாழ் கோட்டையை நோக்கிச் செல்ல எத்தனித்தது. அவ்வேளை இந்திய
படையினர் கடுமையான மோட்டார் செல்
தாக்குதலை சோனகத் தெரு மீது மேற்கொண்டது.
இதனால் பலர் காயமடைந்தனர். இந்நிலையில் பொதுமக்கள் சிலர் ஒன்று திரண்டு இந்திய
படையினர்; நிலை நோக்கி வெள்ளைக் கொடியொன்றை
ஏந்திய வண்ணம் சென்றனர். வழியில் ஓட்டுமடச் சந்தியில் புலிகளின் இரு உறுப்பினர்கள்
நின்றனர். அவர்களிடம் இந்தியப் படை மீது தாம் திரும்பிவரும் வரை தாக்குதல் நடத்த
வேண்டாம் எனவும் தாம் படையினரிடம் சென்று
எமது பகுதி நோக்கி செல் தாக்குதல் நடத்தவேண்டாமென கூறவே செல்வதாகவும்
கூறினர். புலிகள் இருந்த இடத்திலிருந்து
படையினர் மீது நேரடியாக சுட முடியாதவாறு
ஒரு வளைவு வீதியில் இருந்தது. ஓம் என்று கூறிவிட்ட முஸ்லிம்கள் அந்த வளைவை
அண்மித்த போது புலிகள் வானை நோக்கிச் சுட்டனர். சனத்தை கண்டதும் இந்திய
படையினரும் பலமான துப்பாக்கிப் பிரயோகம்
செய்தது. பொதுமக்கள் எல்லோரும் பலதிசைகளில் பிரிந்து ஓடினர் துப்பாக்கி குண்டுகள்
அருகிலுள்ள சுவர்களில் பட்டுத்தெரித்த போதும் இறைவன் அருளால் யார் மீதும்
படவில்லை. இவ்வாறு புலிகள் பொதுமக்களை பலிகொடுப்பதற்கு அஞ்சுவதில்லை. சிதறியோடிய
மக்கள் புலிகளின் கண்ணுக்கு புலப்படாத ஓரிடத்தில் ஒன்று கூடி இந்திய படையினரை
சந்தித்து தமது பகுதியை நோக்கி தாக்குதல் நடத்தவேண்டாமென வேண்டிக்கொண்டனர். அவர்கள் சென்று வந்தபின்னர் திடீரெண கடும் மழை
பொழியத் தொடங்கி இரவு முழுவதும் பெய்தது. இராணுவ பங்கர்களுக்குள் தண்ணீர்
சென்றதால் இராணுவம் வாபசாகி மீண்டும் அராலிக்கு சென்றிருந்ததுடன் அராலியூடான தமது
முன்னேற்ற முயற்சியையும் கைவிட்டிருந்தது.
வடக்கில்
மட்டுமன்றி கிழக்கு மாகாணத்திலும் புலிகள் பல சதித் திட்டங்களை
முஸ்லிம்களுக்கெதிராக செயல்படுத்தியிருந்தனர். 1987ஆம் ஆண்டு இந்தியப்
படையினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் மூதூர்
கட்டைப்பறிச்சானில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியில் புலிகளால் இந்தியப்படை
மீது கிளைமோர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து
இந்தியப்படை 10 பொதுமக்களை சுட்டுக்கொன்றது. சனசந்ததி மிக்க ஒரு பிரதேசத்தில்
நடத்தப்பட்ட இந்த தாக்குதல் முஸ்லிம்களை அழிக்கும் திட்டத்தின் ஒர் அங்கமாகவே
செயல்படுத்தப்பட்டிருந்தது.
1988
ஜனவரி 22ஆம் திகதி மன்னாரில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த
எம்.எம். மக்பூல் என்பவர் புலிகளின் ஜேம்ஸ் அணியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இலங்கையின் முதல் முஸ்லிம் அரசாங்க அதிபராக இருந்த மகபூலின் இழப்பு முஸ்லிம்
சமூகத்துக்கே பேரிழப்பாகும். இவரைத் தொடர்ந்து உதவி அரசாங்க அதிபர் உதுமான் மூதூர் உதவி அரசாங்க அதிபர் ஹபீப்
முஹமட் மட்டக்களப்பு மேலதிக அரசாங்க
அதிபர் வை.அஹமது குச்சவெளி உதவி அரசாங்க அதிபர் இபுறாஹிம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளராக
கடமையாற்றிய பளீல் ஆகியோர்
கொல்லப்பட்டனர். இவை முஸ்லிம்களின் புத்தி ஜீவிகளை அழிக்கும் புலிகளின்
திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளாகும்.
அடுத்த
பாகத்தில் தமிழ் ஆயுதக்குழுக்கள் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அடக்குமுறைகளைப்
பற்றி பார்ப்போம்..!
கருப்பு
ஓக்டோபர் எனும் ஈழப்போராட்டத்தில் கரைபடிந்த வரலாறு (பாகம்-3)
1988
இல் முஹமட் என்பவர் ஈ.பி.ஆர்.எல். எப் அமைப்பினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தனிப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் கொல்லப்பட்டார் என அவர்களின் குடும்ப
உறுப்பினர்கள் கூறியிருந்தனர். 1988இல் ஜுனைதீன் என்பவர் ஈ.பி.ஆர்.எல். எப் அமைப்பைச் சேர்ந்த ஒருவரால்
நல்லூரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். ஜுனைதீனின் மோட்டார் சைக்கிள் ஆசை
என்பவரால் பறித்துச் செல்லப்பட்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிள் இந்திய
இராணுவத்தின் உதவியுடன் மீட்டெடுக்கப்பட்டது.
இதற்கு பலிவாங்களாகவே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த ஜுனைதீன் முன்பு
முஸ்லிம்கள் வாழாத யாழ் அராலி
பிரதேசத்தில் வாழ்ந்தார். அங்கு சென்ற சில மாட்டு வியாபாரிகள் இவரை முஸ்லிம் பிரதேசத்துக்கு வருமாறு கூறி அங்கு
சின்னப்பள்ளிவாசலுக்கு சொந்தமான ஓரிடத்தில் ஒரு வீட்டையும் அமைத்துக்
கொடுத்திருந்தனர். இவர் ஊரைப் பிரிக்கும் ஒரு நபருடன் சேர்ந்து தனக்கு உதவி
செய்தவர்களையே சுட்டுக்கொல்ல சபதமெடுத்த வேளையில் தான் இவ்வாறு சுட்டுக்
கொல்லப்பட்டிருந்தார். அல்லாவிடின் பத்து முஸ்லிம் வாலிபர்களை இவர் சுட்டுக் கொன்றிருப்பார்.
1990
ஜனவரியில் சாம்சன் என்பவரிடம் ஈ.பி.ஆர்.எல்.எப். இலிருந்து தப்பியோடிய நபரொருவர்
தனது துப்பாக்கியை ஒழித்து வைக்குமாறு கூறி கொடுத்துவிட்டு சென்று விட்டார். அந்த
நபரை பிடித்த ஈ.பி.ஆர். எல்.எப் இனர் சாம்சனையும் கடத்தி அடித்து கொலை செய்து
விட்டனர். இதே விடயத்துக்காக சமீன் றியாஸ் என்பவர் 1990 ஏப்ரிலில் புலிகளால்
கடத்திச் செல்லப் பட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். இவர் கொல்லப்பட்ட விபரம் 2009 மேயில் இராணுவம்
வெள்ளா முள்ளிவாய்க்காலை கைப்பற்றிய பின்னரே தெரிய வந்தது. குறிப்பிட்ட அந்த இயக்க உறுப்பினர் தனது
ஆயுதத்தை கையளிக்க றியாஸையே முதலில்
அனுகியிருந்தார் என்பதற்காகத் தான் றியாஸ் புலிகளால் கடத்தப்பட்டிருந்தார். அவரைக்
காட்டிக் கொடுத்தது நைனா முஹம்மது என்ற முஸ்லிமினத் துரோகி ஒருவராவார். ரவுப்
ஹக்கீம் பிரபாகரனுடன் முஸ்லிம்கள் தாமாகவே வெளியேறினார்கள் என்று உடன்படிக்கை
செய்த போது அளிக்கப்பட்ட விருந்தை இவரே சமைத்ததாக சொல்லப்பட்டது. இவர் தற்போது கட்டாரில் வசிக்கின்றார்.
1990
மார்ச்சில் புலிகள் மீண்டும் யாழ் நகருக்குள் நுழைந்திருந்தனர். அதையடுத்து
சோனகதெருவிலுள்ள முஸ்லிம் கல்லூரி வீதியின் முடிவில் பிள்ளையார் விலாசுக்குச்
சொந்தமான வீடொன்றில் புலிகள் முகாமொன்றை அமைத்திருந்தனர். இந்த முகாம் மீது
தாக்குதல் மேற்கொள்வதற்கு பதிலாக அங்கிருந்து 100 மீட்டர் தூரத்திலிருந்த
வீடொன்றின் மீது 1990 செப்டம்பரில் விமானத்திலிருந்து தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டிருந்தது. இக்குண்டு வீச்சில் அப்துல் வஹாப் லாபிர் (29வயது),
மீரான்
ஸாஹிப் (55வயது) (சாச்சிக் காக்கா) மற்றும் நுஸ்லா சிமோல் (8வயது )என்ற சிறுமி
ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர்.
1990இல்
இந்தியப்படை வெளியேறியதுடன் புலிகளின் திட்டங்கள் மாறியிருந்தன. வடக்கு
கிழக்கிலிருந்து முஸ்லிம்களை முற்றாக வெளியேற்ற வேண்டுமென்ற திட்டம்
வகுக்கப்பட்டது. மார்ச்சில் இந்தியப்படை வெளியேறிய காலப்பகுதியில் இலங்கை படையினர்
புலிகளுடன் தேனிலவு கொண்டாடிய காலமாக இருந்தது. புலிகளின் தலைமைப்பீடம் இலங்கைப்
படையினரையும் தமிழீழ எல்லையை விட்டு அப்புறப்படுத்த திட்டமிட்டது. இதற்கான
தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. படையினரையும் பொலிஸாரையும் பல இடங்களில் புலிகள்
சீண்டிப்பார்த்தனர். படையினருக்கு புலிகளுடன் மோதல் தரும் ஒரு சூழ்நிலையை உருவாக்க
வேண்டாம்; என்ற கண்டிப்பான உத்தரவு
பிறப்பிக்கப்பட்டிருந்தன. அதனால் படையினர் புலிகள் விடயத்தில் மிகவும் நலினமான ஒரு
போக்கை கையாண்டனர். இருந்த போதிலும் புலிகள் படையினரை தாக்க சந்தர்ப்பம்
பார்த்துக்கொண்டிருந்தனர்.
1990
யூன் 11 அன்று முஸ்லிம் தையல்காரர் ஒருவர் தனது காதல் நடவடிக்கைக்காக பொலிஸாரால்
கைது செய்யப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்யுமாறு புலிகள் பொலிஸாரை
வற்பறுத்தினர். அவர் விடுதலை செய்யப்படாததை அடுத்து அந்த பொலிஸ் நிலைய அதிகாரியும்
சில பொலிஸாரும் புலிகளால் கடத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட முறுகல் நிலையை
அடுத்து கிழக்கு மாகாணத்திலிருந்த அனைத்து பொலிஸ் நிலையங்களையும் சுற்றி வளைத்த
புலிகள் பொலிஸாரை சரணடையுமாறு வேண்டினர். ஏறக்குறைய 600 பொலிஸார் பிரேமதாஸ
அரசாங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் சரணடைந்தனர். அவர்களில் தமிழர்கள் 200 பேர்
விடுதலை செய்யப்பட்டனர். முஸ்லிம் பொலிஸார் 200 பேரும் சிங்கள பொலிஸார் 200 பேரும்
புலிகளால் 1990 யூன் 11 அன்று
சுட்டுக்கொல்லப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டனர்.
கொல்லப்பட்ட
முஸ்லிம் பொலிஸார் மூதூர் தோப்பூர் ஏராவூர் காத்தான்குடி அம்பாறை போன்ற பகுதிகளைச்
சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களாகவிருந்தனர். அவர்கள் குடும்ப வறுமை காரணமாக பொலிஸ்
சேவையில் புதிதாக இணைந்திருந்தனர்.
இவர்கள் கொல்லப்பட்டதால் கிழக்கு
மாகாண முஸ்லிம்கள் கொதித்தெழுந்தனர். குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதற்காக
பழிவாங்க அவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர். இராணுவம் புலிகளை தாக்க முன்னேறி வந்த
சமயம் அவர்களில் சிலர் படையினருடன் சேர்ந்து புலிகளை தாக்கினர். இதனால் புலிகள்
எதிர்பாராத திருப்பம் கிழக்கில் ஏற்பட்டது.கிழக்கு ஏற்கனவே முஸ்லிம் இளைஞர்களுக்கு
பரீட்சயமான இடமாக இருந்ததால் இராணுவத்தில் சேர்ந்திருந்த முஸ்லிம்களால் குறுக்கு
வழிகள் கண்டறியப்பட்டு புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் புலிகள்
கிழக்கின் சன நடமாட்டமுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறி காட்டுப்பகுதிகளுக்கு
சென்றனர்.
அடுத்த
பாகத்தில் புலிகள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை பட்டியல்களைப்
பார்ப்போம்..
தொடரும்...!
அப்துல்லாஹ்
Thursday,
October 27, 2011 .jaffnamuslim