Wednesday, 17 June 2020

தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி உத்தரவிட்ட புலிகள் தலைமை !! - 26

ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு: 

தப்பியோடும் சனங்களை காலிற்கு கீழே சுடச் சொல்லி ஒரு கேவலமான வேலையை செய்ய உத்தரவிட்ட புலிகள் தலைமை !!
• ‘என்னக்கா எங்கட அம்மா அப்பா சகோதரங்களையோ நாங்கள் சுடுறது.
இதைவிட எங்களை நாங்களே சுட்டுச் சாகிறது நல்லது
* இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும் நிலைமை உருவாகியிருந்தது.
* புலிகள் போகச் சொல்கிற இடத்திற்கெல்லாம் போய்க்கொண்டிருந்த மக்கள் புலிகள் மீதான வெறுப்பின் உச்சக்கட்டத்திற்குச் சென்றிருந்தார்கள்.
* காலூன்றி நிற்க ஒரு இடமில்லை, வயிற்றுப் பசியைப் போக்க ஒரு பிடிஉணவில்லை, எந்தக் கணத்திலும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலையில் மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.
* மக்களைப் பணயமாக வைத்துத்தான் மக்களுக்காகப் போராடுவதா, அப்படியானால் இது யாரைப் பாதுகாப்பதற்கான போர் என்ற கேள்விகளுக்கான பதில் படுபயங்கரமாகக் கண் முன்னால் எழுந்து நின்றது.

விடுதலை புலிகள் இயக்கமும் தமிழ் மக்களுக்கான ஆயுதப் போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இனஅழிவை ஏற்படுத்தியிருந்தது?
• “இறுதி யுத்தக்காலத்தில்,
படையணிகளின் பலவீனங்களைப் புரிந்துகொள்ளாமல் பொட்டு அம்மான் வழங்கும் கட்டளைகள் ஏனைய தளபதிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தின.
* "ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை" - மார்ச் மாதம் நடந்த கூட்டத்தில் பொட்டு அம்மான் முன்னறிவிப்பு.

தொடர்ச்சி....
இயக்கத்தின் ஆட்லறி பீரங்கிகளை நிலைப்படுத்தி இராணுவத்தினர் மீது எறிகணைகளைச் செலுத்துவதற்கு வேறு இடங்கள் இல்லாத நிலையில் சுதந்திரபுரம், வல்லிபுனம், தேவிபுரம் ஆகிய இடங்களில் அவை நிலைப்படுத்தப்பட்டிருந்தன.
புலிகளின் ஆட்லறி இலக்குகள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட பதில் எறிகணைத் தாக்குதல்களிலும் விமானத் தாக்குதல்களிலும் அந்த இடங்களில் நெருக்கமாகத் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டார்கள்.

எந்த மக்களுக்காகப் போராடப் போனோமோ அந்த மக்களின் குருதி மண்ணில் ஆறாகப் பெருகி ஓடியது. நாம் ஈடுபட்டுக்கொண்டிருந்த யுத்தத்தின் எந்த நியாயங்களாலும் எமது மனதை ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.
அந்தச் சூழநிலையில் நான் ஆயுதப் போராட்டத்தையே வெறுத்தேன். இயக்கத்தின் தலைமை எடுத்த முடிவுகளால் இனமே அழிந்துபோகும் நிலைமை உருவாகியிருந்தது.

முப்பது வருடப் போராட்டத்திலும் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், இலட்சக்கணக்காக அழிந்து போயிருக்கிறார்கள். கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்திருக்கிறார்கள், பல இலட்சம் பேருடைய எதிர்காலம் சிதைக்கப்பட்டிருக்கிறது. இவைகளெல்லாம் விடுதலைக்கான மக்களின் அர்ப்பணிப்புகள்.
ஆனால் எமது மக்கள் அழிக்கப்பட்டபின் யாருக்காக இந்தத் தேசம்? யாருக்காக இந்த விடுதலை?

இறுதிப் போரில் எமது மக்கள் அனுபவித்து நின்ற அவலங்களை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
எமது போராட்ட வழிமுறை மிகவும் தவறானது என்பதை எனது கண் முன்னே அனுபவத்தில் கண்டேன். எங்களால் நேசிக்கப்பட்ட மக்கள் எமது கண்ணுக்கு முன்பாகவே தெருவோரப் பிணங்களாகக் கைவிடப்பட்டுக் கிடந்தார்கள்.
அதற்குப் போராட்ட இயக்கமும் ஒரு காரணமாகவே இருந்தது. அப்படியாயின் யாருக்காக இந்தப் போராட்டம்? நீண்டகாலப் போராளிகள் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றிருந்தார்கள்.

கட்டாய ஆட்சேர்ப்பில் இணைக்கப்பட்டிருந்த புதிய போராளிகள் பலர் போதிய பயிற்சிகளும் இல்லாத நிலையில் களமுனையில் தாக்குப்பிடிக்க முடியாது ஆயுதங்களை வைத்துவிட்டு வீடுகளுக்குச் செல்வது அதிகமாக இருந்தது.
மிகக் குறுகியதாக இருந்த மக்கள் வாழ்விடங்கள் எங்கணும் போர்க்களமாகவே மாறிவிட்டிருந்தன. கணத்துக் கணம் மரண ஓலம் எழுந்துகொண்டேயிருந்தது.

புலிகள் இயக்கம் மிகவும் பரிதாபகரமான நிலையில் தனது இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தது.
ஆயுதம் தமிழீழத்தைப் பெற்றுத் தரும் என்கிறதான கனவு உண்மையாகவே உடைந்து நொறுங்கிய சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழத் தொடங்கின. 

புலிகள் போகச் சொல்கிற இடத்திற்கெல்லாம் போய்க்கொண்டிருந்த மக்கள் புலிகள் மீதான வெறுப்பின் உச்சக்கட்டத்திற்குச் சென்றிருந்தார்கள்.
காலூன்றி நிற்க ஒரு இடமில்லை, வயிற்றுப் பசியைப் போக்க ஒரு பிடிஉணவில்லை, எந்தக் கணத்திலும் உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற நிலையில் மக்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.

முதன்முதலாக உடையார்கட்டுப் பிரதேசத்தின் இருட்டுமடு பகுதிக்கூடாகவே மக்கள் பெருமெடுப்பில் வெளியேறத் தொடங்கியிருந்தார்கள். உடனடியாக மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்து நிறுத்துமாறு இயக்கத் தலைமையால் அறிவிக்கப்பட்டது.
அதற்காக அரசியல்துறைப் போராளிகள் அவசரமாக அனுப்பப்பட்டார்கள். இனிமேலும் எத்தகைய நம்பிக்கை வார்த்தைகளைக் கூறி மக்களைத் தடுத்து நிறுத்துவது என்று எவருக்குமே புரியவில்லை.
மக்களைப் பணயமாக வைத்துத்தான் மக்களுக்காகப் போராடுவதா, அப்படியானால் இது யாரைப் பாதுகாப்பதற்கான போர் என்ற கேள்விகளுக்கான பதில் படுபயங்கரமாகக் கண் முன்னால் எழுந்து நின்றது.

ஒரு ஆண் பொறுப்பாளர் என்னிடம் இரகசியமாக இவ்வாறு கூறினார்; “தமிழினியக்கா சனங்கள் எங்களத் தள்ளி விழுத்திக்கொண்டு போகுதுகள், இனியும் மறிச்சுப்பிடிச்சால் அடிச்சு விழுத்திப் போட்டுத்தான் போகுங்கள், போற சனம் போய் உயிர் தப்பிப் பிழைக்கட்டுமெண்டு நினைச்சு நான் பேசாமலே நிண்டிட்டன்என்றார்.
அந்தப் போராளியின் உணர்வுதான் எனக்கும் இன்னும் பல போராளிகளுக்கும் இருந்தது. ஆனாலும் நான் அந்தப் போராளிக்கு எதுவும் கூறாமல் மௌனமாக நின்றேன்.

சுதந்திரபுரத்தை நோக்கி இராணுவம் முன்னேறத் தொடங்கியது. அங்கிருந்த மக்களை இராணுவத்தின் பகுதிக்குப் போகவேண்டாமெனவும், அவர்களை இரணைப்பாலைப் பகுதிகளுக்குச் செல்லும்படியாகவும் இயக்கம் தெரியப்படுத்தியது.
பகல்பொழுது முழுவதும் நடந்த தாக்குதல்களினால் மக்கள் காயங்களுடனும் உயிரிழப்புகளுடனும் தொடர்ந்தும் இடம் பெயர்ந்துகொண்டே இருந்தார்கள்.

இயக்கத்தின் பல தளங்களும் சுதந்திரபுரத்திலே நிலைப்படுத்தப்பட்டிருந்தன.
சுதந்திரபுரம் பாடசாலைப் பகுதியில் தாக்குதலணிப் போராளிகள் நிலை கொண்டிருந்தனர். எமது பிரிவைச் சேர்ந்த மூன்று பெண் போராளிகளும் இரண்டு ஆண் போராளிகளும் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நின்றிருந்தோம்.
பெரும்பான்மையான மக்கள் ஏற்கனவே அங்கிருந்து வெளியேறிவிட்டிருந்தார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில குடும்பங்கள் மட்டும் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தன.

இரவின் மெல்லிய நிலவொளியில் சாரிசாரியாக மக்கள் வயல்வெளிகளுக்கூடாக நடந்துகொண்டிருப்பது தெரிந்தது. உடையார்கட்டுப் பகுதியில் புலிகளின் எரிபொருள் சேமிப்பு வைத்திருந்த இடமொன்று வெடித்துச் சிதறி வானளவுக்கு நெருப்பு எழுந்து எரிந்துகொண்டிருந்தது.
அந்த நேரத்தில் மிகவும் அதிசயமாகச் சூட்டுச் சத்தங்கள் எதுவுமே கேட்கவில்லை. அந்தச் சூழ்நிலையின் மௌனம் மிகவும் பயங்கரமாயிருந்தது. சுதந்திரபுரம் பாடசாலையின் வேலியோடு எந்தக் கணமும் தொடங்கப்போகும் ஒரு சண்டைக்குத் தயாராகப் போராளிகள் நின்றுகொண்டிருந்தார்கள்.

அங்கு மாலதி படையணி போராளிகளுடன் தளபதி விதுஷாவும் நின்றிருந்தார். அவரைச் சந்தித்துச் சில தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக அந்த இடத்திற்குச் சென்றோம்.
மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்த விதுஷாக்கா என்னைக் கண்டதும் வெடித்துப் புலம்பத் தொடங்கினார். இயக்கம் எண்டு நினைக்கவே வெட்கமா இருக்குது, பிள்ளைகள் கேக்கிற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் இருக்குதுஎன ஒருபோதுமில்லாதவாறு மனங்கசந்து விரக்தியுடன் பேசினார்.
சனம் இனி ஏலாத கட்டத்தில ஆமியிட்ட போகுது, அப்பிடிப்போற சனத்திற்குக் காலிற்கு கீழே சுடச் சொல்லி இயக்கம் சொல்லுது. என்ர கடவுளே சனத்திற்குச் சுடு எண்டு எந்த மனசோட நான் சொல்லுறது.
அப்பிடியிருந்தும் சில பிள்ளைகளிட்ட இயக்கம் இப்பிடிச் சொல்லுது என்ற தகவலைச் சொன்னபோது, அந்தப் பிள்ளைகள் கேக்குதுகள் என்னக்கா எங்கட அம்மா அப்பா சகோதரங்களையோ நாங்கள் சுடுறது.
இதைவிட எங்களை நாங்களே சுட்டுச் சாகிறது நல்லதுஎண்டு சொல்லிக் குழம்புதுகள்.
உண்மை தானேயடி. இப்பிடி கேவலமான ஒரு வேலையை செய்ய வேண்டிய கட்டத்திற்கு இயக்கம் வந்திட்டுது,” என்று புலம்பினார்.

அன்று அவர் மனமுடைந்து நின்ற காட்சி இன்றும் எனது கண்களுக்குள் நிற்கிறது. உடலும் மனதும் விறைத்துப்போன மனநிலையுடன் அவருடன் கதைத்துவிட்டுத் திரும்பினேன்.

ஒரு வோக்கி டோக்கியை விதுஷாக்காவிடம் வாங்கி என்னுடன் வந்திருந்த ஆண் போராளியிடம் கொடுத்தேன். நாங்கள் ஒரு பரந்த வயல்வெளியைக் கடந்து மீண்டும் சுதந்திரபுரம் வீதிக்கு வர வேண்டியிருந்தது.
சூழ்நிலை இப்போதும் அமைதியாகவே இருந்தது. இராணுவத்தினர் எங்கேயும் பதுங்கியிருப்பார்கள் என்ற சந்தேகத்தை அது கிளப்பியது.

நாம் இரண்டு அணிகளாகப் பிரிந்து போவது நல்லது என நினைத்தேன். வயல்வெளிக்கூடாக நாங்கள் சென்று கொண்டிருந்தபோது, வோக்கியில் ஆண் போராளிகளைத் தொடர்புகொண்டு பேசினேன்.
எங்கிருந்தோ ஒரு ரவை கூவிக்கொண்டு வந்து நான் உட்கார்ந்திருந்த வயல் வரம்பில் குத்தியது. இராணுவம் எமக்கு மிக அருகில் நிற்பது புரிந்தது.
முன்னணியில் நிற்கும் தாக்குதலணிகளுக்குத் தெரியாதபடி இரகசியமான முறையில் இராணுவம் பின்புறமாக நகர்ந்திருப்பதை அனுமானித்துக்கொண்டேன்.
இப்போது என்னுடன் வந்த ஆண் போராளிகளின் தொடர்பை ஏற்படுத்தவும் முடியாத நிலைமை உருவாகியிருந்தது. வோக்கியில் கதைக்க முடியாத காரணத்தால் சற்று உரத்த குரலில் தம்பீ . . .எனக் கூப்பிட்டுப் பார்த்தேன்.
அவர்களை எப்படியும் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் போன திசையை நோக்கி நகரத் தொடங்கினோம்.

சற்று தூரம் போனதும் நிழலுருவங்கள் இரண்டு அசையாமல் இருப்பதை அவதானிக்க முடிந்தது. அது எம்முடன் வந்த ஆண் போராளிகளாக இருக்குமோ என்ற யோசனையுடன், அந்த நிழலுருவங்களை நோக்கி நகரத் தொடங்கினேன்.
அக்கா . . . அங்கால போகாதேஎனக் கத்தியவாறு நான் தேடிப் போன போராளிகளில் ஒருவன் என்னைத் தடுத்து நிறுத்தியதுடன் என்னைப் பிடித்துத் தரதரவெனப் பின்னோக்கி இழுக்கத் தொடங்கினான்.
அனைவருமாகச் சற்றுதூரம் ஓடிவந்து சேர்ந்தபின்பு அக்கா அதில ஆமிதான் நிற்கிறான். சனங்கள் ஆமிக்குள்ள போய்க்கொண்டிருக்குதுகள் போல. அதுதான் பேசாமல் இருக்கிறான்.
நாங்களும் கிட்டத்தில் போய்ட்டுத்தான் உங்களுக்குச் சொல்லுறதுக்காக ஓடி வந்தனாங்கள்எனக் கூறினான்.

அதன்பின்பு நான் விதுஷாக்காவுக்கு நிலைமையைத் தெரியப்படுத்திவிட்டு எனது பொறுப்பில் இருந்த காயப்பட்ட போராளிகளை நகர்த்துவதற்காக விரைந்தேன்.
பொழுது புலர்ந்தபோது சுதந்திரபுரம் முழுவதுமாக இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்தது.
அன்று இயக்கம் எதிர்பார்த்தபடி ஒரு சண்டையைச் செய்து இராணுவ நகர்வைத் தடுத்து நிறுத்த முடியாமல் போயிருந்தது.

புதுக்குடியிருப்பின் இரணைப்பாலை, ஆனந்தபுரம் பகுதிகளில் மக்கள் இடைவெளியில்லாதபடி நிறைந்து போயிருந்தார்கள்.
புதுக்குடியிருப்பு ஊடாகச் செல்லும் முல்லைத்தீவு பிரதான வீதியில் வல்லிபுனம் பகுதியில் வீதி நோக்கிய எறிகணைத் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து கொண்டிருந்த மக்களது லான்ட்மாஸ்டர், ட்ராக்டர் வாகனங்களும் சேதமடைந்திருந்தன.
பாத்திரம் பண்டங்களும் வேறு வீட்டுப் பாவனைப் பொருட்களும் மக்களின் சடலங்களும் மிருகங்களின் உடல்களும் வீதியெங்கும் சிதறிக் கிடந்தன.
அந்தப் பிரதேசம் முழுவதுமே துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

மக்கள் சுதந்திரபுரத்திலிருந்து இரணைப்பாலையை அடைவதற்குத் தேவிபுரம் காட்டுப்பாதையூடாகவே நகர்ந்தனர்.
அந்தப் பகுதிகளில் சில முக்கியக் கடற்புலித் தளங்களும் ஆட்லறி நிலைகளும் அமைந்திருந்த காரணத்தால் இலங்கை விமானப் படையினரின் வான் தாக்குதல்கள் இடைவெளியின்றி நடாத்தப்பட்டன.
அப்படியொரு தாக்குதலில் நானும் என்னுடன் வந்த போராளியும் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினோம்.

இரணைப்பாலையில் அமைந்திருந்த மருத்துவ முகாமொன்றில் தளபதி விதுஷாவை மீண்டும் சந்தித்தேன்.
நீண்ட நாட்களின் பின் தலைவரைச் சந்தித்துவிட்டு வந்ததாகக் கூறினார்.
இந்த நெருக்கடிக்குள் தலைவர் எங்கேயிருப்பார் என நினைத்துக்கொண்டேன்.
ஆனாலும் கேட்கவில்லை.
தலைவருடைய இருப்பிடத்தைப் பற்றி ஆராயும் பழக்கம் போராளிகளிடையே இருந்ததில்லை.
சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியைப் பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாகச் சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா.

பொட்டம்மான் கதைக்கிற கதைகளை நினைச்சா விசர்தான் பிடிக்கும். எனக்கென்டால் அவரில இருந்த கொஞ்சநஞ்ச மரியாதையும் போட்டுது. நிலைமைகள் விளங்காமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறார்மேலதிகமாக எதுவும் கதைக்கத் தோன்றாமல் அமைதியாக இருந்தார்.
அவரது மனதிலும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பயங்கர வேதனையை ஏற்படுத்தியிருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்தது.

போதிய நித்திரை இல்லாது நெருப்புப்போலச் சிவந்து போயிருந்த கண்களில் நீர் மல்க சனங்கள்தான் பாவம்எனக் கூறிப் பெருமூச்சு விட்டுக்கொண்டார்.
அந்த விரக்தியான சூழ்நிலையை விபரிப்பது மிகவும் கடினமானது. அதுதான் அவருக்கும் எனக்குமான இறுதிச் சந்திப்பாக இருந்தது.

இறுதி யுத்தக்காலத்தில் பொட்டு அம்மான் மீது ஏனைய தளபதிகள் மிகுந்த கோபமடைந்திருந்ததை வெளிப்படையாகவே உணரக்கூடியதாக இருந்தது.
படையணிகளின் பலவீனங்களைப் புரிந்துகொள்ளாமல் அவர் வழங்கும் கட்டளைகள் பலருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தின. 
அங்கங்களை இழந்த போராளிகள் வெடி மருந்துகளோடு புதுக்குடியிருப்பைச் சுற்றி நிலைகளை அமைக்க வேண்டும் என்ற கருத்தை அவர் முன்வைத்திருந்தார்.

இராணுவத்தினர் முன்னேறி வரும்போது அவர்கள் வெடித்துச் சிதறவேண்டும் என அவர் கட்டளையிட்டிருந்தார்.

கரும்புலிப் போராளிகள் பலர் கிளைமோர் குண்டுகளுடன் முன்னணிக்குப் போய் இராணுவத்தினருக்கு எதிராகத் தாக்குதல் நடத்த வேண்டும் எனவும் அவரால் கூறப்பட்டது.

அப்படியே பல போராளிகள் முன்னணி நிலைகளுக்குப் போய் வெல்லப்பட முடியாத ஒரு யுத்தத்தில் அநியாயமாக உயிரிழந்து போனார்கள்.

பலவீனமான இனத்தின் பலமான ஆயுதமாகவே கரும்புலிகளை நான் உருவாக்கினேன்என ஒருமுறை கூறியிருந்தார் எமது தலைவர்.
ஒரு கரும்புலி வீரன் வாகனத்தில் ஏற்றப்பட்ட வெடிமருந்தோடு புதுக்குடியிருப்பு கேப்பாபிலவு வீதியில் அமைக்கப்பட்டிருந்த இராணுவக் காவலரண் ஒன்றை அழிப்பதற்காகச் சென்று மோதி வெடித்தான்.

இப்படியான தாக்குதல்கள் எவையுமே இராணுவத்தினருடைய முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தும் வலுக் கொண்டவையல்ல என்ற களநிலை யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத நடவடிக்கைகளால் பல போராளிகளின் உயிரர்ப்பணிப்புக்கள் பெறுமதியற்றதாகிப் போயின.
சமாதானம் முறிவடைந்து மீண்டும் யுத்தம் மூண்டிருந்த நிலையில் இயக்கத்தின் திரைப்பட மொழியாக்கப் பிரிவால் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்த முந்நூறு போர் வீரர்கள்என்ற திரைப்படம் தலைவரின் ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
அத்துடன் ஹிட்லரின் இறுதி நாட்கள்என்பது போன்ற திரைப்படங்களும் மொழியாக்கம் செய்யப்பட்டுப் போராளிகளுக்குக் காண்பிக்கப்பட்டன.

விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற ஒரு பிரம்மாண்டமான விடுதலை அமைப்பு செயலிழந்துபோன விதத்தை நம்பமுடியாத அதிசயமாக உலகம் பார்த்தது.
ஆனால் தோல்வியைக் கற்பனை செய்தபடிதான் தலைவர் இறுதி யுத்தத்தை ஆரம்பித்தாரோ என நான் அடிக்கடி நினைத்துப் பார்த்திருக்கிறேன்.

எத்தனையோ இலட்சம் பேருடைய இரத்தமும் கண்ணீரும் இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு நீர்ப் பாய்ச்சியிருக்கிறது. அப்படியிருக்கையில் விடுதலைப் புலிகள் இயக்கமும், தமிழ் மக்களுக்கான ஆயுதப் போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இனஅழிவை ஏற்படுத்தியிருந்தது?

2009ஆம் ஆண்டின் மூன்றாம் மாதமளவில் புதுக்குடியிருப்பில் அமைந்திருந்த முகாமொன்றில் அனைத்துப் பொறுப்பாளர்களுக்குமான சந்திப்பு புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானால் நடாத்தப்பட்டது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது.

அன்றைய சந்திப்பு அதிக நேரம் நீடிக்கவில்லை. மிகவும் சுருக்கமாகப் பின்வரும் விடயங்களைப் பொட்டம்மான் தெரிவித்தார்,ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை; இயக்கத்தின்
ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை முற்றாக அழித்துவிடுங்கள்.மக்கள் இராணுவத்திடம் செல்லத் தொடங்கிவிட்டார்கள்"
"இறுதிக் கட்டத்தில் போராளிகளும் அவர்களோடு சேர்ந்து செல்ல வேண்டி வரும்போது இதிலே புலி இருந்தால் எழும்பி வாஎன்று கூப்பிடுவான்.
அப்போது நான் புலிஎன எழுந்து போகும்போது சுட்டுக் கொல்லுவான். இதுதான் நடக்கப்போகுது. யுத்தத்தில ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்குத் தலைமை முழு முயற்சிகளையும் செய்துகொண்டுதான் இருக்கிறது"
"ஆனாலும் திரும்பவும் ஒரு விடயத்தைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்; அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்லுறது சாத்தியமில்லை. நான் உங்களைக் குழப்புவதற்காக இப்படிச் சொல்லவில்லை.
உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லுகிறேன்; முக்கியமாக, உங்களை இன்றைக்குக் கூப்பிட்ட விடயம் உங்களிடமிருக்கும் ஆவணங்களை அழித்துவிடுங்கள் என்பதைக் கூறுவதற்காகத்தான்”. அத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.
காயப்பட்டிருந்த போராளிகளைப் பற்றியோ அல்லது இயக்கத்தையே நம்பி பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்களைப் பற்றியோகூட ஒரு வார்த்தை கூறப்படவில்லை.
பெண் போராளிகள் எதிர் நோக்கக்கூடிய இரட்டிப்பு ஆபத்து பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை.
ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவும் தோன்றாத மனநிலையில், அனைவரும் கலைந்து சென்றோம். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களுக்குப் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இறுதியான ஒன்றுகூடல் அதுவாகத்தான் இருந்தது.

-தமிழினி-
நன்றி : இணையதளம்

Escaping civilians from LTTE hostage -1

Escaping civilians from LTTE hostage 2

 Civilians Leave NFZ Using Sea Routes

Raw Video: Sri Lankan Civilians Escape Civil War

LTTE Activities in No Fire Zone Monitored by SLA

Suicide bomb attack at IDP rescue centre - Kilinochchi Sri Lanka 09-02-2009

The Massive Civilians Exodus (UAV Footage) (English Version)

LTTE 130mm artillery piece destroyed in Mullaittivu 31st March 2009

LTTE defector accuses group of civilian murder - 30 Apr 09