ஒரு
கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு:
தளபதி விதுஷா, நான் இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே மனம் விட்டுப் பேசக்கூடிய ஒரு நண்பியைப்போல என்னுடன் பழகினார். அவர் இயக்கத்தில் மூத்தவராகவும் பொறுப்பு கூடியவராகவும் இருந்தாலும்கூட, என்னைப் போன்ற பல மகளிர் பொறுப்பாளர்களுக்குப் புரிந்துணர்வு மிக்க ஒரு தளபதியாகவும் இருந்தார்.
* புலிகளின்
இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில்
உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!
• தலைவர்
பிரபாகரன் எடுத்த மிகத்தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு
• பதினெட்டு
வயதில் தனது ஆயுதப் போராட்ட வாழ்வைத் தொடங்கியவரான விதுஷா, இறுதிப்போரின் ஆரம்ப
காலத்தில் நாற்பது வயதை நெருங்கியிருந்தார்.
• பல்வேறு
களம்கண்ட ஆனந்தபுரத்தில் வீர மரணமடைந்த வீரப் பெண் தளபதியின் விதுஷா உடலைக்
கவனிக்க யாருமின்றித் தோல்வி கொத்தித் தின்றுகொண்டிருந்தது.
• தளபதி
பிரிகேடியர் பால்ராஜ் நீரிழிவு நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையில் வேறு
பல உடல் உபாதைகளும் சேர்ந்து 2008இல் எதிர்பாராத வகையில்
மரணத்தை தழுவியிருந்தார்.
* மிகவும்
திறமையான ஆண் பெண் போராளிகள் உயர்நிலைகளுக்குத் முன்னேறி வந்தபோதும் அவர்கள்
குறுகிய காலத்திற்குள்ளாகவே போர்க்களத்தில் உயிரிழந்துபோன சம்பவங்களே
அதிகமாயிருந்தன.
தொடர்ந்து..
கட்டாய
ஆட்சேர்ப்பிலிருந்து தப்புவதற்காகச் சமூகத்தில் இளவயது திருமணங்கள் வேகமாக
நடைபெறத் தொடங்கின. திருமணமாகாமலே இளவயது ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும்
சூழ்நிலைகள் சமூகத்தில் அனுமதிக்கப்பட்டன. பதுங்குக்குழிகளை அமைத்து மாதக்கணக்கில்
தமது பிள்ளைகளைப் பெற்றோர் மறைத்து வைத்துப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம்
உருவானது.
கட்டாயமாக
இணைக்கப்பட்ட பல போராளிகள் பின்பு தமது சுயவிருப்பத்துடன் மிகச் சிறப்புடன்
செயற்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்தன. அதேவேளை, ஆயுதங்களைக்
களமுனைகளிலேயே எறிந்துவிட்டு வீட்டுக்கு ஓடியவர்களும் உண்டு. இன்னும் சிலர்
கட்டாயத்தின் பேரில் களமுனைகளுக்கு அனுப்பப்பட்டதால் மரணத்தைத் தழுவியவர்களாகவும்
இருந்தனர்.
அக்காலகட்டத்தில்
அரசியல்துறையில் ஒரு போராளியாக இருப்பதே பெருத்த மன உளைச்சலையும் அவமானத்தையும்
ஏற்படுத்துவதாக இருந்தது. அதுவரையிலும் மக்களின் நலனுக்காகப் புலிகள் இயக்கம்
செய்த எல்லா வேலைத் திட்டங்களும் மக்களின் மனங்களிலிருந்து முற்றாக அடிபட்டுப்
போனது.
புலிகள்
இயக்கம் கட்டாய ஆட்சேர்ப்புச் செய்வதன் மூலம் விடுதலைப் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய
முடியும் என நான் ஒருபோதும் நம்பவில்லை. மாறாக நாம் ஒரு படுபயங்கரமான தோல்வியை
நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதை உணரத் தொடங்கினேன்.
ஆனாலும், தலைவரின் பிடிவாதமான
நடவடிக்கைகளால் மக்களும் போராளிகளும் மனரீதியாகப் பாதிப்படைந்ததுடன் தாங்க முடியாத
அலைக்கழிவுகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.
தலைவர்
பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு
என்பது எனது நிலைப்பாடு.
இந்தக்
காரியத்தில் சூழ்நிலைக் கைதிகளாகப் பல போராளிகளும் பொறுப்பாளர்களும் மன
விருப்பின்றிச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். கட்டாய
ஆட்சேர்ப்பில் அரசியல்துறை மட்டுமன்றி, தாக்குதல் தளபதிகளும்
படையணிகளும் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. புதுக்குடியிருப்பில் நடைபெற்ற ஒரு
கூட்டத்தில் மூத்த தாக்குதல் தளபதி ஒருவரிடம் மக்களின் அபிப்பிராயங்களை நான்
எடுத்துக்கூற முற்பட்டபோது
அவர்
சொன்னார்: “தமிழினி, ஏன் இப்பிடி
குழம்புறிங்கள்? தலைவர்
சொன்ன வேலையைத்தான் நாங்கள் செய்யுறம், உங்களுக்கு ஏலாட்டில்
விட்டிட்டுப் போங்கோ, மற்றவங்களையும்
குழப்ப வேண்டாம்”.
அதன்
பின்பு ஏற்பட்ட சில மனக் கசப்புகள், அதனால் ஏற்பட்ட
மனச்சோர்வு காரணமாக என்னால் தொடர்ந்தும் உற்சாகமாக வேலைகளை முன்னெடுக்க முடியாத
நிலை ஏற்பட்டது.
அரசியல்
பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் என்னிடம் கூறினார்; “தமிழினி, நீங்கள் பெண்கள்
தொடர்பான வேலைகளில் கூடுதலான கவனம் செலுத்துங்கள். ஏனைய வேலைகளைக் கவனிப்பதற்கு
வேறு ஒரு பொறுப்பாளரை நியமிக்கலாம் என முடிவு செய்திருக்கிறோம்” எனக் கூறினார். அச்செய்தி
எனக்கு மிகுந்த நிம்மதியாக இருந்தது. ஏதோ இறுக்கம் தளர்ந்து மனதும் உடலும்
இலேசானதுபோல உணர்ந்தேன்.
பொறுப்பாளராக
இருந்து நிர்வாகப் பிரச்சனைகளில் மனப் பாதிப்புகள் அடைவதை விட ஒரு போராளியாக இருந்து
அதுவும் பெண்களுக்கான வேலைகளை மகிழ்ச்சியோடு செய்வதே உகந்தது எனக் கருதினேன்.
அரசியல்துறை
மகளிர் பொறுப்பாளராகத் தாக்குதலணியைச் சேர்ந்த மூத்த போராளி ஒருவர்
நியமிக்கப்பட்டார். எனக்குக் கிடைத்த சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்
எனக் கருதினேன்.
களமுனையில்
நின்ற மகளிர் படையணிப் போராளிகளுடன் அதிக அளவு நாட்களைச் செலவு செய்தேன்.
இயக்கத்தின் பரப்புரைக் கூட்டங்களுக்கான அழைப்புகளிலும், அரசியல்துறையின்
முக்கியமான கலந்துரையாடல்களுக்கான அழைப்புகளிலும் கலந்துகொண்டேன்.
கடினமான
நிர்வாகப் பணிச் சுமைகளின் அழுத்தங்களுக்குள் சிக்கிக்கொள்ளும்போது, எமது போராட்டத்தின்
முழுப் பரிமாணத்தையும் சிந்தித்துச் செயலாற்ற முடியாமல் மட்டுப்படுத்தப்பட்ட
வேலைகளுடனேயே உழல வேண்டியேற்படுவதை மகளிர் பொறுப்பாளராக இருந்த காலத்தில் எனது
அனுபவத்தில் உணர்ந்துகொண்டேன்.
விடுதலைப்
புலிகள் இயக்கம் ஒரு போராட்ட அமைப்பு என்கிற தன்மையை இழந்து ஓர் அரச
இயந்திரம்போலத் தன்னை விசாலித்துக் கொண்டதனால் இயக்கத்தின் கூடுதலான மூளைப் பலம்
நிர்வாகச் சிக்கல்களில் வீணே சிதறடிக்கப்பட்டது.
பல
திறமையான போராளிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகச் சிக்கல்களில்
தமது நேரத்தையும் திறமையையும் வீணடித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் அது இயக்கத்தின் வளர்ச்சியாகவும் பெருமையாகவுமே கருதப்பட்டது.
ஆனால் அது இயக்கத்தின் வளர்ச்சியாகவும் பெருமையாகவுமே கருதப்பட்டது.
சமாதான
காலத்தில் புலத்திலிருந்து வந்த பலரும்கூட ஓமந்தைக்கு அப்பால் வடக்கே இன்னொரு
தேசத்தை தாம் காண்பதாகப் புளகாங்கிதப்பட்டதை நானறிவேன்.
தளபதி விதுஷா, நான் இயக்கத்தில் இணைந்த காலத்திலிருந்தே மனம் விட்டுப் பேசக்கூடிய ஒரு நண்பியைப்போல என்னுடன் பழகினார். அவர் இயக்கத்தில் மூத்தவராகவும் பொறுப்பு கூடியவராகவும் இருந்தாலும்கூட, என்னைப் போன்ற பல மகளிர் பொறுப்பாளர்களுக்குப் புரிந்துணர்வு மிக்க ஒரு தளபதியாகவும் இருந்தார்.
வடமராட்சியிலுள்ள
கப்பூது கிராமம் அவருடைய பிறப்பிடமாய் இருந்தது. ஆசாரமான இந்துப் பிராமணக்குடும்பத்தின் மூத்த மகளான அவர் ‘குமுதினிப் படகு படுகொலை’ சம்பவத்தால் ஏற்பட்ட
மனப் பாதிப்பு காரணமாகவே இயக்கத்தில் இணைந்ததாகக் கூறுவார்.
தனது
ஆரம்பச் செயற்பாடுகளைச் சுதந்திரப் பறவைகள் அமைப்பின் மூலம் தொடங்கிய அவர், கிளாலிப் பகுதியில்
அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் இரண்டாவது பயிற்சி முகாமில் தனது ஆயுதப்
பயிற்சியைப் பெற்றிருந்தார். தனக்குக்
கொடுக்கப்படும் வேலையை மிகவும் நேர்த்தியாகச் செய்து முடிக்க வேண்டும் என்ற
மனப்பாங்கு கொண்டவர்.
இந்திய
இராணுவ காலத்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மணலாற்றுக் காட்டுக்குள்
மறைந்திருந்தபோது, களஞ்சியப்
பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
அதன்
பின்னர் யாழ்ப்பாணக் கோட்டைத் தாக்குதல் தொடங்கி இறுதியில் 2009
புதுக்குடியிருப்பு
ஆனந்தபுரத்தில் இவர் உயிரிழக்கும் வரையிலும் மகளிர் படையணி பங்குகொண்ட அனைத்துத்
தாக்குதல்களிலும் முக்கியப் பங்கினை வகித்திருந்தார்.
ஆரம்பத்தில்
மகளிர் படையணியின் சிறிய தாக்குதல் அணிகளுக்குப் பொறுப்பாகச் செயற்பட்டவர்
படிப்படியாக வளர்ந்து இயக்கத்தின் முதன்மையான கட்டளைத் தளபதிகளில் ஒருவராக
உருவானார்.
1993இல் மகளிர் படையணியின் இரண்டாம் நிலைத் தளபதியாக
இருந்தவர், 1995இன் பின்னர் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியாக
நியமிக்கப்பட்டு இறுதிவரையிலும் செயற்பட்டு வந்தார்.
இவரது
உடன்பிறந்த தம்பியான விதுஷன் 1999இல் வவுனியா விளக்குவைத்தகுளம்
பகுதியில் இராணுவத்துடனான சண்டையில் வீர மரணமடைந்தார்.
நேரடித்
தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கு பெற்றும் சந்தர்ப்பங்கள் எனக்கு அதிகமாகக்
கிடைக்காவிட்டாலும், போர்க்களத்தில்
செயற்பட்டுக்கொண்டிருக்கும் தளபதி விதுஷாவின் கட்டளை மையத்திற்குச் சென்று அவருடன்
போர்க்கள நிலவரங்களைப் பற்றி அவ்வப்போது கலந்துரையாடுவேன்.
இறுதிப்போர்க்
காலகட்டத்தில் தளபதி விதுஷா மிகுந்த மனக்குழப்பத்திற்கு உள்ளாகியிருந்ததை என்னால்
உணர முடிந்தது. 2007 காலப்பகுதியில் அவருடைய மாலதி படையணி மன்னார் முன்னணிக்
களமுனையில் நிலைகொண்டிருந்தது.
மன்னார்
பிரதேசத்தில் வேலைசெய்துகொண்டிருந்த அரசியல் போராளிகளைச் சந்திப்பதற்குச்
செல்லும் ஒவ்வொரு தடவையும் அவரது கட்டளை மையத்திற்கும் சென்று வருவேன்.
போர்க்கள
விடயங்கள் பற்றியும் மற்றும் மாலதி படையணியின் செயற்பாடுகள் தொடர்பாகவும்
இயக்கத்தின் தலைவருடன் நேரடியாகப் பேசுகின்ற வாய்ப்பு அவருக்கிருந்தது.
‘யுத்தக்
களமுனையின் உண்மையான நிலவரங்களை, நடைமுறைப்
பிரச்சனைகளைத் தலைவருக்கு ஒருவரும் முழுமையாகத் தெரியப்படுத்துவதில்லை‘ என்ற மனக்குறை
அவரிடமிருந்தது.
தலைவருக்கு
உண்மையான விடயங்களை, கள
நிலவரங்களைத் தெரியப்படுத்த வேண்டும் என்ற மனப்பாங்கு கொண்டவரான தளபதி விதுஷா, தலைவரைச் சந்திக்கும்
சந்தர்ப்பங்களில் களமுனையில் காணப்படும் பிரச்சனைகளை, போராளிகள்
எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அவரிடம் தெரியப்படுத்திவிடுவார்.
அதன்
பின்னர் தலைவர் ஆண் கட்டளைத் தளபதிகளிடம் அந்தப் பிரச்சனைகள் பற்றிய விளக்கங்களைக்
கேட்கும்போது, பல
மூத்த தளபதிகளுக்கு அது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்துவது வழக்கம்.
“களமுனைகளில்
ஏற்படும் பிரச்சனைகளை நாங்கள்தான் பார்த்துச் சரிப்படுத்த வேணும். விதுஷா, எல்லாப்
பிரச்சனைகளையும் அண்ணைக்கு கொண்டு போய்ச் சொல்லி, ஏற்கனவே நிறைய
பிரச்சனைகளோடு இருக்கிற அண்ணையை மேலும் டென்சன் படுத்தக் கூடாது” என ஆலோசனை சொல்லுகிற
தோரணையில் குத்திக் காட்டிப் பேசுவார்கள்.
இப்படியான
நிகழ்வுகளால் விதுஷா மிகுந்த மன உளைச்சலை அனுபவித்தார்.
பதினெட்டு
வயதில் தனது ஆயுதப் போராட்ட வாழ்வைத் தொடங்கியவரான விதுஷா, இறுதிப்போரின் ஆரம்ப
காலத்தில் நாற்பது வயதை நெருங்கியிருந்தார்.
பல
யுத்த களங்களில், உடலிலே
பல காயங்களைத் தாங்கிய அவருக்குத் தொடர்ச்சியான நீண்ட நெருக்கடி மிக்க போர்க்கள
வாழ்வும் தினசரி சந்திக்கும் உயிரிழப்புகளும் முடிவில்லாது தொடரப்படும் யுத்தமும்
நீண்டகாலப் போராளிகள் பலரைப் போலவே உள்ளூர ஒரு சலிப்புத் தன்மையை
ஏற்படுத்தியிருந்தது.
சில
சந்தர்ப்பங்களில் தளபதி விதுஷா மிகவும் விரக்தியான மனநிலையுடன் மனம் திறந்து
பேசுவார். மன்னார் ஆண்டான்குளப் பகுதியில் அமைந்திருந்த அவருடைய தலைமையகத்தில் ஒருநாள்
இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது, “இந்தச் சண்டையில
நாங்கள் வெல்லுவம் எண்டு நீ நினைக்கிறியா?” எனக் கேட்டார். நான்
சற்று நேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“எங்களுக்கு
மட்டும் ஏனடியப்பா இப்பிடி ஒரு வாழ்க்கை? உலகம் எங்கேயோ
போயிட்டுது, நாங்கள்
மட்டும் காட்டுக்குள்ளேயும் சேத்துக்குள்ளேயும் செத்துக் கொண்டிருக்கிறம்”.
இலகுவில்
பதில் கண்டுபிடிக்கப்பட முடியாத கேள்விகளுடன், இறுதிப்போரில், புதுக்குடியிருப்பு
ஆனந்தபுரத்தில் விடுதலைப் புலிகள் கடைசியாக மேற்கொண்ட ஊடுருவித் தாக்குதலில்
பங்கேற்று, வீர
மரணமடைந்த அந்த வீரப் பெண் தளபதியின் உடலைக் கவனிக்க யாருமின்றித் தோல்வி
கொத்தித் தின்றுகொண்டிருந்தது.
ஐம்பது
வயதை நெருங்கிக் கொண்டிருந்த பல மூத்த ஆண் தளபதிகளும் மனச்சலிப்படைந்த
நிலைமைகளுக்கே சென்றிருந்தனர்.
போர்க்களங்களில்
ஏற்படும் அதிகமான மன அழுத்தங்களும், அவர்களுடைய சீரற்ற
உணவுப் பழக்கங்களும் தொடர்ச்சியான அலைச்சல்களும் காரணமாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, முள்ளந்தண்டு பாதிப்பு
என்பன போன்ற பல நிரந்தர நோய்களுக்கு உள்ளாகியிருந்தார்கள்.
விடுதலைப்
புலிகள் இயக்கத்தில் பல வெற்றிகரமான தாக்குதல்களை வழிநடத்தியிருந்த முன்னணித்
தளபதி பிரிகேடியர் பால்ராஜ் நீரிழிவு நோயால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட
நிலையில் வேறு பல உடல் உபாதைகளும் சேர்ந்து 2008இல் எதிர்பாராத வகையில்
மரணத்தை தழுவியிருந்தார்.
பிரிகேடியர் பால்ராஜ் |
இயக்கத்தில்
இரண்டாம் நிலைத் தளபதிகளின் வளர்ச்சி மிகவும் குறைவாகவே இருந்தது என்பதைவிட அறவே
இருக்கவில்லை என்பதுதான் உண்மையானது.
மிகவும்
திறமையான ஆண் பெண் போராளிகள் உயர்நிலைகளுக்குத் முன்னேறி வந்தபோதும் அவர்கள்
குறுகிய காலத்திற்குள்ளாகவே போர்க்களத்தில் உயிரிழந்துபோன சம்பவங்களே
அதிகமாயிருந்தன.
தலைவருடைய
சிந்தனைக்கு அமைவாக இயக்கத்தில் பல நிர்வாக அலகுகளும், புதிய புதிய தாக்குதல்
படையணிகளும் உருவாக்கப்பட்டிருந்தன. ஆனால்
அவற்றிற்குரிய ஆளணி பலம் போதிய அளவு இருக்கவில்லை. குறிப்பிட்ட அளவு தளபதிகளும்
போராளிகளுமே பல வேலைகளைத் தமது தலைகளில் சுமந்துகொண்டிருந்தனர்.
இதனால்
போதிய அளவு பயிற்சிகளையோ, மேலதிக
தயார்படுத்தல்களையோ செய்யமுடியாத நிலையில் இயக்கத்தின் ஒட்டுமொத்தமான
செயல்திறனும் குன்றத் தொடங்கியிருந்தது.
உண்மையான
நிலைமை இப்படியிருக்கையில், கடந்த
காலங்களில் புலிகள் ஈட்டிய யுத்த வெற்றிகளை அடிப்படையாகக் கொண்டு புலிகளின்
இராணுவ பலம் பற்றிய பிம்பம் பெரும் பிரம்மாண்டத்துடன் உருவாக்கப்பட்டிருந்தது.
இவ்விடயத்தில்
புலம்பெயர் மக்களின் நம்பிக்கை மிகவும் அதீதமாக இருந்தது. நவீன மின்னியல்
ஊடகங்களின் உதவியுடன் பிரச்சாரப் படுத்தப்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப்
புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக
அமைந்திருந்தபோதிலும், உண்மையான
நிலையில் அது உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது.
தமிழினி
தொடரும்…
நன்றி : இணையதளம்
நன்றி : இணையதளம்