Sunday, 14 June 2020

ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி’ என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம்!


 ஒரு கூர்வாளின் நிழலில்: புலிகளின் மகளிரணித் தலைவியின் வரலாறு - 4

1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் சத்ஜெயசமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும்  தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது.
எமது கல்விக்குழு அணி தாக்குதல் அணியுடன் இணைக்கப்பட்டிருந்தது. முப்பது போராளிகளைக் கொண்ட ஒரு அணிக்கு நான் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தேன்.
உருத்திரபுரம் இந்துக் கல்லூரியை அண்டிய பகுதியில் எமது அணிகளுக்கான தாக்குதல் பயிற்சிகள் தரப்பட்டன. அப்பாடசாலையின்  சூழல் எனது பள்ளிப் பருவத்தின் பல நினைவுகளைக் கிளறச் செய்தது.

பல போட்டி நிகழ்வுகளுக்காக எனது பாடசாலையிலிருந்து இந்துக் கல்லூரிக்குப் போயிருக்கிறேன். அந்த விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டிகளில் கலந்துகொண்டிருக்கிறேன்.
பெரிய மண்டபத்துடன் கூடிய அந்த மேடையில் பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள், மேடைநாடக நிகழ்வுகள் எனக் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றிருக்கிறேன்.
1990 அல்லது 1991 ஆக இருக்க வேண்டும். உயர்தர மாணவன் ஒருவன் அந்தப் பாடசாலையின் பின்புற மைதானத்தில் நடத்தப்பட்டிருந்த விமானக் குண்டு வீச்சில் சிக்கித் தனது உயிரை இழந்திருந்தான்.
சத்தியசீலன் என்ற அம்மாணவன் மாலை நேரக் கல்வி நிலையத்தில் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவன்.
அன்றிருந்த சூழ்நிலையில் அவனுடைய மரணம் பெரும் உணர்ச்சிப் பெருக்கினை மாணவர்களாகிய எமக்குள்ளே ஏற்படுத்தியிருந்தது.
 1997இல் எனது பிறந்த ஊரான பரந்தன் பயங்கர யுத்தப் பிரதேசமாக மாறியிருந்தது.
எனது குடும்பத்தவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதைக்கூட என்னால் அறிய முடியாதிருந்தது. ஸ்கந்தபுரத்திற்கோ  தருமபுரத்திற்கோ போயிருக்கலாம் என நினைத்துக்கொண்டேன்.
 
விவசாயத்தையே நம்பி வாழ்ந்த எனது குடும்பம் இடம்பெயர்ந்து சென்று உணவுக்குக்கூட வழியில்லாது மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே மிகவும் வேதனையாயிருந்தது.
மாணவர்களில்லாத பாடசாலைகளும் மனித நடமாட்டங்களற்ற வீதிகளும், புற்பற்றைகள் அடர்ந்திருந்த வயல்வெளிகளும் விரக்தியான மனநிலையை எனக்குள் ஏற்படுத்தின.
மக்கள் மீண்டும் இந்த இடங்களுக்கு வந்து நிம்மதியாக வாழவேண்டுமானால் நாங்கள் யுத்தம் செய்தே ஆகவேண்டும் என உறுதியாக நம்பினேன்.
எனது பிறந்த ஊரிலே போராடி மரணிக்கும் சந்தர்ப்பம் அமைந்தால் அதுவே பெரும்பேறு என அத்தருணத்தில் நினைத்துக்கொண்டேன்.


பரந்தன் முல்லைத்தீவு வீதியில் இரண்டாம் கட்டையடி எனக் குறிக்கப்படும் இடத்தில் எமது அணிக்கான நிலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மறைப்புகளற்ற வெட்டவெளியான வயல் பிரதேசமாக இருந்த காரணத்தால் எமது சிறு அசைவுகளையும் இராணுவத்தினரால் அவதானிக்க முடியுமாயிருந்தது.
அடிக்கடி வந்துவிழும் குறுந்தூர மோட்டார் எறிகணைகளின் தாக்குதலில் நாளாந்தம் பல போராளிகள் காயப்படுவதும் உயிரிழப்பதுமாக நிலைமை மாறியிருந்தது.
இதனால் நீளமான நகர்வு அகழிகளை அமைக்கும்படி எமக்குப் பணிக்கப்பட்டிருந்தது. இரவு நேரங்களில் காவல் கடமையும் பகல்பொழுதுகளில் யுத்தத்திற் கான பயிற்சிகளும், வயல்வெளிகளில் தொடர் காப்பகழிகளை அமைப்பதுமாகக் கடினமான வேலைகளில் ஈடுபட்டிருந்தோம்.
இராணுவத்தினரின் யுத்த டாங்கிகள் எந்த நேரத்திலும் உரத்த சத்தமெழுப்பியபடி அச்சுறுத்திக் கொண்டிருந்தன.
வயல்வெளி களையும் மண்பாதைகளையும் கடந்து யுத்த டாங்கிகள் முன்னே வர அதன் பின்னால் படையினர் நகர்ந்து வரும் தாக்குதல் உத்திகளையே இராணுவத்தினர் சத்ஜெயசமரில் கையாண்டிருந் தனர்.
இராணுவத்தினரின் டாங்கிகள்மீது தாக்குதல் நடத்தி அவற்றின்  நகர்வுகளைத் தடுத்து  நிறுத்துவதற்காக ஆர்.பி.ஜீ கனரக ஆயுதப் பிரிவு பெண் போராளிகளும் எமது பகுதியில் நிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இரவு நேரங்களில் எமது முன்னணி காவரலண்களையும் கடந்து ஒரு சிறிய அணியாக முன்னேறிச் சென்று இராணுவத் தினரின் காவலரண்களுக்கு அண்மையாக நிலையெடுத்து இராணுவத்தினருடைய இரவு நகர்வுகளை அவதானிக்க வேண்டும்.
இரவு நேரத்தில் இராணுவத்தினர் முன்னேறி வருவதை அவதானிக்க முடிந்தால் உடனடியாகவே எதிர்த் தாக்குதலை ஆரம்பிக்க வேண்டும்.
எமது முன்னணிக் காவலரண்கள் துரிதமாகத் தயாராகி இராணுவத்தினரின் மீதான முறியடிப்புத் தாக்குதலை ஆரம்பிப்பார்கள்.
இதற்கிடையில் அந்தச் சிறிய அணியினர் வேகமாக ஓடிவந்து எமது நிலைகளுடன் இணைந்து கொள்ள வேண்டும். இதில் ஏதாவது தாக்குதல் எல்லைக்குள் அகப்பட்டு உயிரிழக்க வேண்டியும் நேரிடலாம்.
இந்த அவதானிப்புப் பணிக்காக எனது அணியும் அடிக்கடி அனுப்பப்பட்டது.

ஒருநாள் நள்ளிரவு நேரம். முரசுமோட்டை வீதியில் அமைந்துள்ள வை.எம்.சீ.ஏ கட்டடத்தை அண்மித்த சிறிய மண் ஒழுங்கையில் பூவரசு மரங்களால் அமைந்த வேலியின் மறைப்பில் எனது சிறிய அணி நிலையெடுத்திருந்தோம்.

இராணுவத்தினரின் பரா விளக்கு வெளிச்சங்கள் பகலைப் போல ஒளி சிந்திக்கொண்டிருந்தன. எமது தலையைத் தூக்க முடியாதபடி நிலத்தோடு அழுந்திக் கிடந்தோம்.
எம்மைச் சுற்றிலும் பற்றைகள், செடி கொடிகள் கோடை வெப்பத்தில் காய்ந்து போய்க் கிடந்தன. திடீரென இராணுவத்தினர் வீசிய எறிகுண்டுகளால் அப்பற்றைகள் சடசடவென்ற சத்தத்துடன் மூண்டெரியத் தொடங்கின.
என்ன செய்வது எனப் புரியாத நிலையில் ஒரு பூவரசு மரத்தினை அண்டியிருந்தபடி அதன் பசுமையான இலைக் கொப்புகளைப் பிடுங்கியெடுத்தோம்.
சற்றுக் குறைவாக நெருப்புப் பற்றி எரிந்துகொண்டிருந்த பகுதிக்கூடாக நகர்ந்து அந்த நெருப்பு வலையத்திற்குள்ளிருந்து வெளியேறி ஓடத் தொடங்கினோம்.
இராணுவத்தினருக்கு   வித்தியாசமான சத்தங்கள் கேட்டிருக்க வேண்டும். சற்றுநேரம்  ஒரு கனரக ஆயுதம் சரமாரியாகச் சூடுகளை வழங்கியதுடன் இரண்டு மூன்று மோட்டார் எறிகணைகளையும் செலுத்தி ஓய்ந்தனர்.
என்னுடன் வந்திருந்த ஒரு போராளிக்குக் கையில் மாத்திரம் நெருப்புக் காயம் ஏற்பட்டிருந்தது. எமது காவலரணில் நின்றிருந்த போராளிகள் முன்னணியில் ஜெகஜோதியாக மூண்டெரிந்த நெருப்பைக் கண்டு நாம் இனி உயிருடன் திரும்ப மாட்டோம் என்ற முடிவுக்கே வந்துவிட்டதாகப் பின்னர் கூறினார்கள்.
இன்னொரு நாள் நன்றாக இருள் கவிழ்ந்த பின்னர் எமது அணிகளைச் சற்று நகர்த்தி நிலைப்படுத்துமாறு அவசரமாக அறிவிக்கப்பட்டது.
மறுநாள் அதிகாலையில் இராணுவத்தினரின் முன்னேற்றம் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்புடன் தயார் நிலைஅறிவிக்கப்பட்டிருந்தது.

எமது அணிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையேயான தூரம் மிகவும் குறுகியதாக இருந்தது.
ஒரு மின்மினிப் பூச்சியின் வெளிச்சம் தென்பட்டாலே உடனடியாக அந்த இடத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அந்தக் கும்மிருட்டுக்குள் ஒருவரையொருவர் தொட்டுக்கொண்டவாறு நகர்ந்து குறிப்பிடப்பட்ட அடையாளத்தைக் கண்டுபிடித்து எமது அணிகளை நிலைப்படுத்தினோம்.
ஒரு சிறிய வாய்க்கால் பகுதியில் எனது நிலை அமைந்திருந்தது. காவல் நிலைகளை ஒழுங்குபடுத்திவிட்டு ஒரு உரப் பையினை விரித்துச் சற்று நேரம் உறங்குவதற்கு முனைந்தேன்.
படுத்த உடனேயே முதுகுப் பகுதியில் ஏதோ நொளுக் மொளுக்கென நெளிவதை உணர்ந்தேன். சலசலப்பை ஏற்படுத்தாதபடி எனது அருகில் படுத்திருந்த அறச்செல்வி என்ற ஒரு போராளியை மெதுவாகச் சுரண்டினேன்.
நான் மெதுவாக எழும்புறன். நீ எவ்வளவு முடியுமோ அவ்வளவு பதிச்சு துணியால மூடிக்கொண்டு டோச்லைட்டை எனது முதுக்கு கீழே நிலத்திலடிச்சு  என்ன கிடக்குது  எண்டுபார்எனக்கூறிவிட்டு மெதுவாக  எழும்பினேன்.
பளபளவென வெள்ளியாக மினுங்கியபடி சுருண்டு கிடந்தபடி பெரிய பாம்பு ஒன்று நெளிந்துகொண்டிருந்தது. பாம்பென்றால் படையே நடுங்கும்என்பார்கள்.

இதில் நான் எம்மாத்திரம்? எனது மயிர்க்கால்கள் சிலிர்த்துத் தலை சுற்றுவது போலிருந்தது. உடனே சுதாகரித்துக்கொண்டு என்ன செய்வது என யோசித்தோம் இப்போது இந்தப் பாம்பை அடித்துக் கொல்ல முடியாது.
அது அனைவருக்கும் ஆபத்தாக முடியும். எனவே அங்கிருந்த பதுங்குக்குழி ஒன்றினுள் அதனைத் தள்ளி வெளியேற முடியாதபடி பாதுகாப்பாக மூடி வைத்துவிட்டுக் காலையில் அதனை விடுவித்தோம்.

களமுனைச் செயற்பாடுகளுடன் மும்முரமாக ஈடுபட்டிருந்த என்னைப் பின்னணிக்கு வரும்படி அறிவித்தல் வந்திருப்பதாகவும், இயக்கம் சொல்கிற நேரத்தில் சொல்கிற வேலையை நாம் செய்ய வேண்டுமெனவும் கூறிய எமது தாக்குதலணிக்குப் பொறுப்பாக இருந்த லெப். கேணல் தணிகைச்செல்வி என்னைப் பின்னணிக்கு அனுப்பி வைத்தார்.

இயக்கத்தின் எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு அரசியல் பிரிவிற்குப் பெண் போராளிகளையும் இணைக்க வேண்டியுள்ளதாகவும் அப்பணியைப் பொறுப்பேற்று வழி நடத்தும்படியும் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் என்னிடம் தெரிவித்தார்.
அதற்கமைவாக அடிப்படை ஆங்கில அறிவுள்ள பிள்ளைகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மேலதிக ஆங்கிலவகுப்புகளும் அரசியல் வகுப்புகளும் கணினி வகுப்புகளும் ஒழுங்குபடுத்தப் பட்டன.
கல்விக் குழு வேலைகளுடன் சேர்த்து அவர்களுக்கான நிர்வாக வேலைகளையும் கவனிக்கும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டிருந்தது.

1997-98 காலப் பகுதிகளில் ஒவ்வொரு பிரதேசத்திலும் பணியாற்றிய அரசியல்துறைப் பொறுப்பாளர்களால், மக்கள் மத்தியில் மக்கள் கட்டமைப்புக்கள் பல உருவாக்கப்பட்டன.
போரெழுச்சிக்குழுஎன்ற அமைப்பு மூலமாக இயக்கத்தின் பல பணிகள் மக்களின் உற்சாகமான பங்களிப்பின் மூலம் செயற்படுத்தப்பட்டன.

இயக்கத்தின் கூட்டங்களுக்கான அறிவித்தல்களைக் கொடுத்து மக்களை அணி திரட்டுதல், போராளிகளின் வீரச்சாவு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துதல் எனப் படிப்படியாக மக்கள் கட்டமைப்புக்கள் போரின் நெருங்கிய செயற்பாடுகளுடன் இணைக்கப்படத் தொடங்கின.
இதேவேளை அரசியல்துறையின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவினரால் இயக்கத்திற்கான ஆளணி திரட்டும் வேலைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
கிராமிய, பிரதேச மட்டங்களில் சமகால அரசியல்கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடாத்தப்பட்டன. வீதி நாடகங்கள், இசை நிகழ்வுகள் என்பவற்றின் மூலம் அனைவரும் போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற கருத்துருவாக்கம் மிகவும் உணர்வுபூர்வமான முறையில் முன்னெடுக்கப்பட்டன.
இளைஞர் யுவதிகள் ஒன்றுகூடும் இடங்களில் தீவிர பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. அரசியல் துறையின் பேச்சாளர் பட்டியலில் எனது பெயரும் சேர்க்கப்பட்டிருந்ததால் தினசரி பல கூட்டங்களிலில் உரையாற்ற வேண்டியிருந்தது.

ஆதேவேளை களமுனைப் போராளிகளுக்கும், அடிப்படை பயிற்சி முகாம் போராளிகளுக்கும், வகுப்புகள் எடுப்பதற்காகவும் சகல இடங்களுக்கும் செல்ல வேண்டியிருந்தது.
மண்ணெண்ணெயிலும் இயங்கக்கூடிய எம்.டி.90 மோட்டார் சைக்கிள் எனது பாவனைக்காகத் தரப்பட்டிருந்தது.
முன்னர் யாழ் மாவட்டத்திலும் பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்பு வீதிகளிலும் ஓடித் திரிவதிலேயே எனது போராட்ட வாழ்வின் பெரும் பகுதி கழிந்திருந்தது.


1997 மே 13ஆம் திகதி  வன்னிப் பெருநிலப்பரப்பை முழுமையாகக்  கைப்பற்றும் நோக்கத்துடன் இலங்கை இராணுவத்தின ரால் ஜெயசிக்குறுபடை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

மணலாற்றுப் பகுதியிலிருந்து நெடுங்கேணி ஊடாகவும், வவுனியா ஏ9 பகுதியிலிருந்து ஓமந்தை ஊடாகவும் இருமுனைகளில் இந்தப் படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விடுதலைப் புலிகள் இயக்கம் தனது போராடும் முழு வல்லமையையும் திரட்டிசெய் அல்லது செத்துமடிஎன்ற கோஷத்துடன் இந்த நடவடிக்கையை எதிர்கொண்டு நின்றது.
இரண்டரை வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்த இச்சமரில் மகளிர் படையணிகளும் முக்கியப் பங்கெடுத்தன.
போர்க் களங்களில் மிகுந்த அனுபவம்கொண்ட பெண் போராளிகளைக் கொண்டதான மாலதி படையணிஜெயசிக்குறு சமரின் களமுனைகளில் ஒப்பற்ற தீரத்துடன் செயற்பட்டுக்கொண்டிருந்தது.

வன்னியின் அம்பகாமம் காட்டுப் பகுதியில் அமைந்திருந்த மகளிர் அடிப்படைப் பயிற்சி முகாம்களில் பயிற்சி பெற்ற போராளிகளை இணைத்து மேஜர் சோதியாவின் பெயர் கொண்ட புதிய மகளிர் படையணி, தலைவரால் உருவாக்கப்பட்டது.
தமிழினி
தொடரும்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.