Thursday, 21 May 2020

கந்தன் கருணை படுகொலை


இந்தப் படுகொலை இடம்பெற்று முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்தப் படுகொலை இடம்பெற்றது. அரை மணித்தியாலத்திற்குள் அதாவது 30 நிமிடங்களுக்குள் 63 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இரண்டே இரண்டு தமிழ் இளைஞர்கள் இந்த 63 பேரையும் சுட்டுக் கொன்றனர். 

ஒருவரின் பெயர் அருணா இவன் தன்னந்தனியனாக 50ற்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றான். சூடுபட்டு உயிர் இழக்காமல் முனகிக்கொண்டிருந்தவர்களை சந்தியா என்பவன் சுட்டுக் கொன்றான். அருணா, சந்தியா என்பது அவர்களுடைய இயக்கப் பெயர்கள். யாழ்ப்பாணம் நகருக்கு அண்மையிலுள்ள கல்லூரி வீதியில் இந்தக் கொடூரம் இடம்பெற்றது.


யாழ் இந்துக் கல்லூரிக்கும் இந்து மகளீர் கல்லூரிக்கும் இடையிலே இருந்த வீடொன்றிலேயே இக் கொலைகள் இடம்பெற்றன. அந்த வீட்டு உரிமையாளரின் பெயர் நடராஜா. அவர் யுத்தச் சூழல் காரணமாக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துவிட்டார். இவ்வாறு யுத்தச் சூழலிருந்து பாதுகாப்புத் தேடி வடக்கு கிழக்கிலிருந்து கணிசமான தமிழ் மக்கள் குடும்பத்துடன் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடம்பெயர்ந்திருக்கின்றனர்.

கொலைகள் இடம்பெற்ற கல்லூரி வீதி வீட்டிற்கு கந்தன் கருணை என்ற பெயர் இல்லை. ஆனால் இந்தப் படுகொலை 'கந்தன் கருணைப் படுகொலை" என்ற பெயராலேயே அழைக்கப்படுவதற்குக் காரணம் உண்டு. கைவிடப்பட்ட வசதியான விசாலமான வீடுகளை புலி இயக்கத்தினர் கைப்பற்றி தமது முகாமாகப் பயன்படுத்தி வந்தனர். சில முகாம்கள் சித்திரவதைக் கூடமாகத் திகழ்ந்தன. அப்படியான ஒன்று யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு அண்மையில் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்தது. இந்த வீடு அரஸ்கோ முதலாளிக்கு சொந்தமானது. அரசரட்ணம் என்பது அந்த முதலாளியின் பெயர். நல்லூர், கோவில் வீதியிலும் கந்தன் கருணை என்ற பெயரில் ஒரு மாடி வீடு இருந்தது. இந்த இரண்டு வீடுகளும்கூட புலிகளின் முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டன

இந்த கந்தன் கருணை வீட்டிலிருந்து இடமாற்றப்பட்டு கல்லூரி வீதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளின் கைதிகளே சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால்தான் கந்தன் கருணை படுகொலை என இது அழைக்கப்படுகின்றது. இந்தப் படுகொலைகள் நடைபெற்ற காலப்பகுதியில் புலிகளின் யாழ் மாவட்ட தளபதியாக விளங்கியவர் கிட்டு. இவரின் இயற்பெயர்சதாசிவம் கிருஸ்ணகுமார். அப்போது கிட்டுவுக்கு யாழ் இரண்டாம் குறுக்குத் தெருவில் சிந்தியா என்ற மாணவியுடன் காதல் தொடர்பு இருந்தது. சிந்தியா யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட இரண்டாம் வருட மாணவியாக அப்போது கல்வி கற்று வந்தார். சிந்தியாவின் தந்தை யாழ் பிரதான தபாலகத்தில் கடமையாற்றி வந்தார். கிட்டு ஆயுதம் தரித்த மெய்ப்பாதுகாவலர் சகிதம் நாளாந்தம் மாலை வேளைகளில் சிந்தியாவின் இரண்டாம் குறுக்குத்தெரு வீட்டிற்கு செல்வது வழக்கம். அன்று அதாவது 1987ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி மாலை சிந்தியாவை சந்திக்கச் சென்ற கிட்டுவின் வாகனத்தின் மீது கிரனைட் வீசப்பட்டது. கிட்டுவின் மெய்ப்பாதுகாவலர் 3 - 4 பேரும் ஆயுதங்கள் சகிதம் வாகனத்தில் சென்றுள்ளனர். மெய்ப்பாதுகாவலர் மூவர் கொல்லப்பட்டனர். மயக்கமுற்ற நிலையில் கிட்டு யாழ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். கிட்டு உயிர் பிழைத்துக் கொண்டாலும் அவரது ஒரு கால் துண்டிக்கப்பட்டது.

அப்போது புலிகள் இயக்கத்தின் முக்கிய பொறுப்பு ஒன்றில் இருந்தவனே அருணா. கல்லூரி வீதி புலி முகாமுக்கு பொறுப்பாக இநருந்தவனே சந்தியா. 1986ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரெலோ இயக்கத்தையும் டிசம்பர் மாதம் ஈபிஆர்எல்எப் இயக்கத்தையும் புலிகள் தடை செய்திருந்தனர். அத்துடன் ரெலோ, ஈபிஆர்எல்எப் இயக்க முகாம்கள் மீது தாக்குதல்களையும் நடத்தினர். பல நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கானவர்களை புலிகள் கைது செய்து தடுத்து வைத்திருந்தனர். இவர்களில் ஒரு தொகுதியினரே கந்தன் கருணை முகாமிலிருந்து கல்லூரி வீதி முகாமுக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

கிட்டு மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் அருணா குதித்தெழுந்தார். ஈபிஆர்எல்எப் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே கிட்டு மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என்று சந்தேகித்தார். எனவேதான் மாற்று இயக்கத்தவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த கல்லூரி வீதி முகாமுக்கு சென்று அருணா வேட்டுகளைத் தீர்த்தார். ஆனால் கிட்டு மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு புலித் தலைமையில் அப்போது நிலவிய உள்முரண்பாடுகளே காரணம் என்பது பின்னர்தான் தெரியவந்தது.

புலி இயக்கத்தின் தலைமைப்பொறுப்பிலிருந்த கிட்டுவுக்கும் மாத்தையாவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியின் விளைவே இந்தத் தாக்குதல். மாத்தையாவின் கையாட்களே இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று பின்னர் சந்தேகம் பரவலாக வெளிப்பட்டது. இச் சம்பவத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் புலிகள் இயக்கத்தின் முழுப் பொறுப்பும் மாத்தையாவின் கைகளுக்கு மாற்றப்பட்டது.

பிற்காலத்தில் மாத்தையாவை கைது செய்து நிலத்திற்குக் கீழான சிறையில் அடைத்து சித்திரவதை செய்து பிரபாகரன் சுட்டுக் கொன்ற சம்பவம், இந்த சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. இந்திய உளவுப் படையான றோவின் உளவாளி என்று குற்றம்சாட்டியே புலி இயக்கத் தலைவர் பிரபாகரன் மாத்தையாவைக் கைது செய்திருந்தார். வன்னியில் மாத்தையா சிறை வைக்கப்பட்டிருந்தபோது நாயிலும் பார்க்க மிகக் கேவலமாக நடத்தப்பட்டார் என்று வன்னிக்கு விஜயம் செய்த இந்தியப் பெண் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் குறிப்பிட்டிருந்தார். பிரபாகரனை பேட்டி கண்டவர் அனிதா பிரதாப். அத்துடன் சிறை வைக்கப்பட்டிருந்த மாத்தையாவை பிரபாகரனின் அனுமதியுடன் பார்வையிட்டதாகவும் அனிதா பிரதாப் குறிப்பிட்டிருந்தார். இந்த விபரங்களை (இரத்தத் தீவு என்ற தனது ஆங்கில நூலில் அனிதா பிரதாப் விபரமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கந்தன் கருணை படுகொலைகளின் பிரதான சூத்திரதாரியான அருணா இலங்கை இராணுவத்தினரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர். இவரைப் படையினரது பிடியிலிருந்து விடுவிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தவர் கிட்டு. 1986ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் திகதி இரு சிப்பாய்களை விடுவிப்பதற்காக இரு புலி இயக்க முக்கியஸ்தர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் அருணா. மற்றைய புலி இயக்க உறுப்பினரது இயக்கப் பெயர் காமினி. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் கணவ்ர். விஜயகுமாரதுங்கவின் முன் முயற்சியின் பேரிலேயே இந்தக் கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றது.

கந்தன் கருணைப் படுகொலை இடம்பெற்று சரியாக 4 மாதங்களின் பின்னர் இந்தியப் படை இலங்கையின் வடக்குக் கிழக்கில் நிலை கொண்டது. ஜூலை மாத இறுதியில் இந்தியப் படை நிலை கொண்டது. அக்டோபர் மாதம் 10ஆம் திகதி இந்தியப் படைக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்தியப் படையினருடன் இடம்பெற்ற மோதல் ஒன்றின்போது அருணா சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றைய கொலையாளியாகிய சந்தியா, முன்னாள் ரெலி என்ற தமிழ் ஆயுதக் குழுவிலிருந்து செயலாற்றியவன். அந்த இயக்கம் புலிகளால் தடை செய்யப்பட்டதையடுத்து சந்தியா தமிழகத்திற்கு சென்றிருந்தான். தமிழகத்தில் இருந்தபோது புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். இலங்கை திரும்பியதும் யாழ்ப்பாணத்தில் புலிகளின் உளவுப் பிரிவில் இணைந்து செயலாற்றினான். கந்தன் கருணைப் படுகொலையின்போது கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் எரிக்கப்பட்டனவா அல்லது புதைக்கப்பட்டனவா என்பது இன்றுவரை சரிவரத் தெரியாது. ஆனால் யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளியில் சடலங்கள் எரிக்கப்பட்டதாக அப்போது தகவல்கள் வெளிவந்தன. இப்படுகொலைகள் இடம்பெற்று பல வருடங்களுக்குப் பின்னர் கல்லுண்டாய் வெளியில் மனித மண்டையோடுகளும் எலும்புக்கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தப் படுகொலைகள் குறித்து சுமார் ஒரு வார காலம் வரை புலிகள் மௌனம் சாதித்தனர். ஆனால் மெல்ல மெல்ல தகவல் கசியத் தொடங்கியதும் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி அறிக்கை ஒன்றை விடுத்தனர். இச்சம்பவத்தை தமிழீழ துரோகிகளின் சதி என்று புலிகளின் அறிக்கை கூறியது. 'விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் அவர்களுக்கு காவலுக்கு நின்றவர்களின் துப்பாக்கிகளைப் பறித்துக்கொண்டு தப்பியோட முற்பட்டனர். அப்போது ஏற்பட்ட மோதலின்போது 18 கைதிகளும் 2 புலி இயக்க உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர்." இவ்வாறு புலிகள் விடுத்த அறிக்கையின் சாராம்சம் இருந்தது. இப்படித்தான் தாம் அரங்கேற்றிய கொடூரங்களுக்கு அவர்கள் கதையளந்திருந்தனர்.

நன்றி. பனங்கூடல் மாசி 2014