தமிழீழத்தின் பெயரில்
நடந்தேறிய வலதுசாரிய பாசிசப் படுகொலைகளை, சாதியப் படுகொலையாக திரித்து சித்தரிக்கும் ஒரு அரசியல் நாவல் தான்
'மறைவில் ஐந்து முகங்கள்". தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள்
உயர்சாதியினர் மீது நடத்துகின்ற சாதிப் படுகொலைகளே
தமிழீழத்தில் நடப்பதாக திரிக்கும் உயர்சாதிய வெறியர்கள், மனுதர்ம அடிப்படையில் நீதியைக் கோருகின்றனர்.
ஒரு வரலாற்று திரிபு, ஒரு அரசியல் திரிபாக இங்கு புகுத்தப்படுகின்றது. தமிழ் தேசிய
வலதுசாரிய பிற்போக்கு அரசியலை ஆராய, விமர்சிக்க மறுக்கின்ற போது அது சாதியமாக திரிபுறுகின்றது. ஏன்
இந்த கொலைகளை தமிழீழத்தின் பெயரில் செய்கின்றனர் என்பதையும், இதன் பின்னுள்ள வர்க்க அரசியலைக் கூட இந்த நாவல் திரித்து
மூடிமறைக்க முனைகின்றது. உண்மையில் தமிழ்தேசியம் தமிழீழப் பாசிசமாக உருவானபோது, வலதுசாரி அரசியல் தொடர்ச்சியாக நெருக்கடிக்குள்ளாகின்றது. தனது
சொந்த வலதுசாரிய பிற்போக்கு அரசியலை பாதுகாக்க, கொலைகார அரசியல் வரலாற்றையே இந்த நாவல் தனக்கு ஏற்ப திரிக்கின்றது.
தனது உயர்சாதிய மனுதர்மத்தை முன்னிலைப்படுத்தி, நடப்பது உயர் சாதியப் படுகொலைகளே என்று இந்த நாவல் தர்க்கித்து
சித்தரிக்க முனைகின்றது.
உண்மையில் 'மறைவில் ஜந்து முகங்கள்" என்ற
நாவலின் அரசியலே, சாதியம் தான். ஆனால் இயக்க
படுகொலைகளைப் பற்றி இந்த நாவல் பேசுவதால், இந்த நாவல் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அண்ணளவாக
தமிழீழத்தின் பெயரில் 10000 பேரை படுகொலை
செய்த தமிழ் தேசிய வலதுசாரிய பாசிச அரசியலையே, சில வலதுசாரிகள் சாதியமாக திரித்துக் காட்டி விடுவது இன்று
எதார்த்தமாகியுள்ளது. அரசியல் படுகொலைக்கான அரசியல் காரணத்தை, இந்த நாவல் முற்றாக சாதியமாகவே காட்டுகின்றது. இதன் மூலம்
வலதுசாரிய கும்பல்களினதும், தமிழர் விடுதலைக் கூட்டணியின்
அரசியலையும், அதன் கையாலாகாத அரசியல் வங்குரோத்தையும்
நியாயப்படுத்த முனைகின்றது. அத்துடன் நாவல் ஏகாதிபத்தியத்தின் ஜனநாயகம்
அப்பழுக்கற்றதும் நேர்மையானதும் என்று கூறுவதுடன், ஐக்கிய நாட்டுச் சபை இலங்கையில் தலையிட வேண்டும் என்கின்றது.
சர்வதேச நீதி மன்றங்களில் குற்றவாளிகளை விசாரிக்கவேண்டும் என்றும், ஆனால் புலிகளையல்ல என்கின்றது இந்த நாவல். மாறாக புலியில் உள்ள
தாழ்ந்த சாதி நபர்களையும், மற்றைய இயக்கங்களையும் மட்டும்
தண்டிக்க வேண்டும். அதாவது பார்ப்பனிய இந்து மனுதர்மத்துக்கு உட்பட்ட சாதிய நீதியை, அடிப்படையாக கொண்ட ஒரு நீதி விசாரணையை முன்வைக்கின்றது இந்த நாவல்.
இதன் எதார்த்தம், அது சார்ந்த
நடைமுறையும், உயர் சாதிய யாழ்ப்பாணிய தேசியத்தில்
சாத்தியமானதே. நாளை மனித அவலங்களுக்கு காரணம் 'இழிசார்" சாதி மக்களே என்று புலித்தலைமையே கூறுவது நிகழத்தான்
செய்யும். இது ஒன்றும் கற்பனையல்ல. பொதுவாக தலைவருக்கும், ஏன் புலித் தலைமைக்கும் தெரியாமல் அடிநிலையில் உள்ளவர்கள் தான், அத்துமீறுகின்றனர் என்ற நம்புகின்ற நம்பவைக்கின்ற, தமிழ் தேசிய சாதிய பிதாமகன்கள் வாழ்கின்ற உலகில் நாம்
வாழ்கின்றோம். படித்த வலதுசாரிய சாதிய மேதைகள், ஆய்வாளர்கள் இப்படி கூறுவதும் ஆங்காங்கே தர்க்கிப்பதும் தற்போதும்
நிகழத்தான் செய்கின்றது. முன்பு புலிகள் அல்லாத இயக்கங்கள் தான், இது போன்ற இழிசெயல்களை செய்ததாக, இதே யாழ் மேலாதிக்க சாதிய சமூகம் கூறி எகிறியது. கோயில்களை கொள்ளை
அடித்தவர்கள் புலிகள் அல்ல என்று, யாழ்
மேட்டுக்குடி தனது சொந்த சாதிய வக்கிரத்தில் சாதியாக வாழ்ந்தபடி வம்பளக்க, அவ்வியக்கங்கள் தண்டிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. தற்போது இழிவான
செயல்களை புலிகளில் உள்ள 'இழிசார்" மக்கள் செய்வதாக, வலதுசாரிய சாதிப் பிரிவினர் விறுவிறுப்பாக கூற முனைகின்றனர். இந்து
மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நாவல், அதையே தெளிவாக தர்க்கித்து சொல்லுகின்றது. நாவல் விமர்சனத்துக்குள்
செல்ல முன், ஒரு சில குறிப்புகளை சொல்லிவிட்டுச்
செல்வது அவசியம்.
அண்மையில் நான் கனடா சென்ற போது, எதிர்பாராத விதமாக முன்னாள் யூனியன் கல்லூரி அதிபரான கதிர்
பாலசுந்தரத்தை சந்திக்க நோந்த போதே, அவரினால் எழுதப்பட்ட இந்த நாவல் எனக்கு கிடைக்கப்பெற்றது. அவர்
முன்னாள் அதிபர் மட்டுமின்றி, அவர் எனது
ஆசிரியரும் கூட. அவர் பாடசாலையில் தயாரித்த ஒரு நாடகம் ஒன்றில் முன்பு நடித்ததுடன், எனது ஊர் சார்ந்த திருமண வழிகளில் தூரத்து உறவுமுறையும் உண்டு.
அவர் நான் படித்த பாடசாலை அதிபராக இருந்ததாலும், கொலைகளை விமர்சித்து ஒரு நாவலை எழுதி உள்ளார் என்று அறிந்ததாலும், அவருடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டேன்.
இந்த நாவல் முதலில் படிக்கத் தொடங்கிய போது ஏற்பட்ட ஆர்வம், பின்னால் கோபமாகவும் ஆத்திரமாகவும் மாறியது. ஆயிரக்கணக்கானவர்களின்
படுகொலை வரலாற்றையே, இப்படி சிந்திக்கவும் சிதைக்கவும்
முடிந்தது என்பது, உண்மையில் கொல்லப்பட்டவர்களை
மறுபடியும் படுகொலை செய்யும் ஒரு அரசியல் முயற்சிதான். அதாவது 'கற்பழிக்கப்பட்ட" ஒரு பெண்ணை நீதி கோரி நீதிமன்றம் சென்றால், அந்த நீதிமன்றம் மீண்டும் 'கற்பழிப்பு" காட்சியை நீதிமன்றத்தில் மீள அரங்கேற்றுவது
போன்றதே இதுவும். கொலை செய்தவர்களின் நோக்கத்தை திரித்து, கொல்லப்பட்டவனை வேறுவிதமாக மறுபடியும் கொல்வதாகும். இந்தமாதிரி
செய்துள்ள எனது முன்னாள் ஆசிரியர் மீதான விமர்சனம், கடுமையானதாகவும் தவிர்க்க முடியாததுமாகின்றது.
2000 ஆண்டு வெளியாகிய இந்த நாவல், பொது பாசிச சூழலால் வெளியுலகுக்கு பொதுவாக தெரியவரவில்லை. ஆனால்
வரலாற்று திரிபையொட்டி, காலத்தின் மாற்றத்துடன் இது
வலதுசாரிகளால் முன்னிலைப்படுத்தப்படும். இவர் பல நூல்களை எழுதியுள்ளாh. அதில் ஒன்று 'அமிர்தலிங்கம்
சகாப்த்தம்" மாகும்.
'மறைவில் ஐந்து முகங்கள்" என்ற நாவல் விறுவிறுப்பையும், மர்மத்தையும், சினிமா பாணியிலான
கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு, கற்பனை வடிவங்களை இணைத்துக் கொண்டு சாதியமாக திரிகின்றது. இந்த
நாவலின் வரும் பாத்திரங்களின் இணக்கமின்மை, முரண்தன்மை, முன்னுக்குப் பின்னான
அதிபுத்திசாலித்தனமாகவும் மிக மந்த புத்தியுள்ள செயல்களுமாக நாவலுக்குள்
முரண்படுகின்றது. இக்குறைபாடு என்பது சினிமா பாணிக்கு உட்பட்டே அதிசயங்களையும், கற்பனைகளையும் நியவுலகில் பொருத்த முனைகின்றது. எனது விமர்சனம்
இந்த குறைபாடுகளைப் பற்றியதல்ல. இந்த நூல் பற்றிய எனது விமர்சனம், இந்த நூலின் சாதிய அரசியல் பற்றியதே. விமர்சனம் நீண்டவிடும் என்ற
அஞ்சி, குறிப்பான மையமான பகுதிக்குள்
மட்டும் சுருக்கப்பட்டுள்ளது.
நாவல் ஆசிரியர் யாழ் உயர்சாதிய நபராகவே சிந்தித்து, அப்படியே சமூகம் மீது அதை காறி உமிழ்கின்றார். கற்பிப்பதில் அதிபர்
என்ற தகுதியையே இது கேள்விக்குள்ளாக்குகின்றது. யாழ் மண்ணில் நடந்த சில உண்மைக்
கொலைகளை அடிப்படையாக கொண்டு, இந்த சாதிய நாவல்
புனைந்து திரித்து எழுதப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்களின் உள்ளடகத்தை, கொடூரமான செயல் சார்ந்த உண்மையை அடிப்படையாக கொண்டு, திட்டமிட்டு தாழ்ந்த சாதிக்கு எதிராக உயர்சாதி நோக்குடன்
அனைத்தையும் திரித்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இயக்கங்களை உயர்சாதிய வாழ்வியல் சார்ந்த
யாழ் சாதிய குறியீட்டின் ஊடாகவே இனம்காட்டி, வெள்ளாளச் சாதியாக நின்று மனுதர்மாக உறுமுகின்றது.
யாழ் மேலாதிக்க மேட்டுக்குடி சாதியமாக, ஆணாதிக்கமாக தன்னை வெளிப்படையாகவே வரிந்து கொள்கின்றது. 'தாலி தமிழ் கலாச்சாரத்தின் மூல வேர்" என்றும், 'கணவரின் பெயரை சொல்வது தமிழ் கலாச்சாரத்தை
கொச்சைப்படுத்துவதாகும்" என்றும் யாழ் கலாச்சாரத்தை ஆணாதிக்க நோக்கில்
தெளிவாகவே கூறுகின்றது. 'பள்ளி"யான நதியா தாலியை
கழற்றியது மட்டுமின்றி, தனது கணவன் பெயரை உச்சரித்ததை தமிழ்
கலாச்சார இழிவாக நாவல் சித்தரித்து காட்டுகின்றது. அமிர் என்ற உயர்சாதியை
சேர்ந்தவனை காதலித்த, உயர் சாதியைச் சேர்ந்த புலி ஜீவிதா
புலியாகவே மிஸ்ட்டர் போட்ட போது, அது வெறும்
உறுத்தலாக மட்டும் தான் யாழ் கலாச்சாரத்துக்கு இருக்கின்றது. இங்கு தமிழ்
கலாச்சாரம் புலிக்குள், அது கட்டி பாதுகாக்கும்
சாதியத்துக்குள் குறுகி கூனிப்போகின்றது. இதேபோல் சாதியமே, யாழ்ப்பாணத்தின் கலாச்சாரம் என்பதை இந்த நாவல் ஊடாக
சொல்லிவிடுகின்றது. பள்ளி நதியாவூடாகவே அதை சொல்லவைக்கின்றது. 'வாழையடி வாழையாக நம் மூதாதையோரும் சமய சாத்திரங்களும் வளர்த்து
எடுத்த மனிதத்தை .. விழுமியங்களை எல்லாம், ஒரு வெறிபிடித்த ஓநாய் கூட்டம் குதறிக் கிழிப்பதை.."
சுட்டிக்காட்டி, சாதிய கட்டுமானங்களின் அதிர்வை ஐயோ
கலாச்சாரம் என்கின்றனர். வாழையடி வாழையாக பாதுகாத்த சாதியம், அது கூறிய மனுதர்ம மனிதத்துவம் தான் யாழ் கலாச்சாரமாகும். இது
மனிதத்துவத்தையோ, எந்த சமூக விழுமியங்களையோ கொண்டதல்ல.
மாறாக அனைத்தும் சாதிய அகமண முறைதான் யாழ்ப்பாணியம், அதற்கு அப்பால் சாதிய சீர்திருத்தத்தை சாதியத்தை பாதுகாத்தபடி
தவிர்க்க முடியாமல் ஏற்றுக் கொள்கின்றனர்.
இதில் விசித்திரம் என்னவென்றால், குறித்த நாவல் ஆசிரியர் தனது முன்னுரையில் முறிந்த பனை, சோபாசக்தியின் கொரிலா, புதியதோர் உலகம், பெடியளில்
இருந்து கெரில்லா வரையிலான.. நூல்களின் வரவை குறிப்பிட்டுள்ளார். இவற்றை அவர்
படித்துள்ளதையே இது காட்டுகின்றது. ஆனால் அதற்கு எதிரிடையாகவே தனது சாதிய மேல்
மக்கள் நூலைக் கொண்டு வந்துள்ளார்.
பொதுவாக நாவல்களில் அரசியல் கிடையாது என்போரும், அரசியலை முதன்மைப்படுத்தி பேசக்கூடாது என்ற வாதத்துக்கும், இந்த நாவல் சவால் விடுகின்றது. அதுவும் சாதியம் மூலம் விடுகின்றது.
இந்த நாவல் அரசியலை, சாதியத்தை பேசியேயாக வேண்டும்
என்பதை வெளிப்படையாகவே உணர்த்தி நிற்கின்றது.
வெளிப்படையாக இந்த நாவலின் மையக் கருப்பொருள், தமிழ் தேசிய போராட்டத்தில் வன்முறை பற்றியதே. அதற்கான அரசியல்
காரணத்தை ஆராய முற்படுகின்றது. அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க
முனைகின்றது. தொடர்ந்து எப்படி போராடுவது என்று, ஒரு வழியைக் காட்டமுனைகின்றது. இந்த வகையிலும், இதன் அரசியல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிடுகின்றது.
இதைவிட வழமையான இடதுசாரிய போக்கில் இப்பிரச்சனையை அணுகாது, வலதுசாரிய கண்ணோட்டத்தில் இதை முற்றாக அணுகுகின்றது. வலதுசாரி
அரசியல் இதை எப்படி புரிந்து கொள்ள முனைகின்றது என்பதை இந்த நாவல் ஊடாக தெரிந்து
கொள்ளவும் இது உதவுகின்றது.
இந்த வகையில் இந்த நாவல்
1. மண்ணில் நடந்த படுகொலைகளை சாதிய நோக்கில் அணுகுகின்றது. குறைந்த
சாதிகளில் இருந்து இயக்கத்துக்குள் வந்தவர்களால் உயர் சாதிக்காரர் மீதான
பழிவாங்கல் தான் இந்த வன்முறை என்று கூற முற்படுகின்றது. எந்த இயக்கத்திலும் நடந்த
படுகொலையையும், அந்த இயக்கத்தில் உள்ள தாழ்ந்த
சாதிக்காரன் தான் செய்தான் என்று, இந்த நாவல்
சொல்லுகின்றது. இதில் இயக்கங்களை சாதி இயக்கமாகவும் கூட காட்டப்படுகின்றது.
2. மிக நுட்பமாக தாம் சாதி பார்ப்பதில்லை என்று, நிகழ்ச்சிகள் மூலம் கூற முற்படுகின்றது. சாதியத்தை பாதுகாக்க சாதி
பார்ப்பதில்லை என்ற எதிரிடையான உத்தி இந்த நாவலில் கையாளப்படுகின்றது. அந்த
வகையில் பாத்திரங்கள், சம்பவங்கள் உருவாக்கப்பட்டுள்ளது
3. புலிகளின் படுகொலையில் இருந்து தொடங்கிய போதும், மற்றைய இயக்கங்களை கடுமையாக அரசியல் உள்நோக்குடன் அணுகுகின்றது.
புலியை பற்றிய மிதமான அணுகுமுறையுடன் கூடிய ஒரு புதிரை சூக்குமமாக ஆதரிப்பதன் ஊடாக
விட்டுச் செல்லுகின்றது.
4. தண்டனைகள் மனுதர்ம அடிப்படையில் அணுகி, அடிநிலைச் சாதிகளை தண்டிப்பதை முதன்மைப்படுத்துகின்றது.
உயர்சாதியினர் குற்றவாளிகளாக இருக்கமுடியாது என்கின்றது. அப்படி இருந்தாலும்
குற்றத்தை அவர்கள் விரும்பிச் செய்திருக்க மாட்டார்கள் என்பதுடன், தண்டிக்க கூடாது அல்லது மிதமாக தண்டிக்க கோருகின்றது. இயக்க
படுகொலைகளை ஒருபக்கமாக முன்னிலைப்படுத்தி, சாதிய அடிப்படையில் சிதைத்து திரிக்கின்றது.
இப்படி நாவலின் சாதிய அரசியல் சிக்கலுக்குரியதாகவும், விமர்சனம் நுட்பமானதாகவும் அணுக வேண்டியளவுக்கு, சூழ்ச்சிமிக்கதாக அமைந்துள்ளது. குறித்த பாத்திரங்களை சாதியாகவே
அணுகுவதால், நாமும் பாத்திரத்தை நேரடியாக
சாதியாக சாதியூடாக அணுகுவது அவசியமாகின்றது. முதலில் பாத்திரங்களின் சாதிகள்
கறுப்பு நரிகள் - புலிகள், மரநாய் - ஈ.பி.டி.பி, கழுதைப்புலிகள் - ஈ.பி.ஆர்.எல்.எப், கோட்டான் இயக்கம் - புளாட்.
ஊத்தைவாளி குகன் - கரையான், கில்லாடி (ஈ.பி.ஆர்.டில்.எப்) - பள்ளன், சால்வை மூத்தான் (புலி) - வண்ணான், நதியா - பள்ளி, நர்த்தனா -
கரையாடிச்சி, அமிர் - வெள்ளாளன், ஜீவிதா - வெள்ளாடிச்சி, பூமா - வெள்ளாடிச்சி .... இப்படிப் பல சாதியப் பாத்திரங்கள்.
பிரதானமான பாத்திரமான யாழ பல்கலைக்கழக மாணவன் அமிர், ஒரு சாதிய வெள்ளாளனாக வருகின்றான். அவரின் பல்கலைக்கழக
ஆய்வுக்கட்டுரை 'பெரும்பான்மை ஆட்சியும்
பயங்கரவாதமும்" மாகும். இவர் வெள்ளாள கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியைச்
சேர்ந்தவர். புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு மேயரின் மகன் தான் இவர். இந்த
மேயர் புலிகளுடன் கொண்டிருந்த அரசியல் நெருக்கமே அரசியல் உறவாக, வீட்டில் விருந்தாக நடக்கின்றது. 'பெரும்பான்மை ஆட்சியும் பயங்கரவாதமும்" பற்றி அரசியல் பற்றி
கதைத்தபடி கோழிக்கறி விருந்தை வயிறுபுடைக்க உண்ட புலிகள், அதே மேசையில் வைத்து சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியுடன் நாவல்
தொடங்குகின்றது. இப்படி பல சம்பவங்கள், புலிகளால் செய்யப்பட்டது என்பதை இது மறுதலித்துவிடவில்லை.
புலி சுட்டுக் கொன்ற தந்தையின் இறுதிக்கிரியையில், எல்லோரும் மௌனமாகி கொலையை கண்டிக்காத நிலையில் தான், அமிரின் உரையை இந்த நாவல் முதன்மை கொடுத்து தொடங்குகின்றது. 'வீரமறவர்கள் தாம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள்
கறுப்புநரி விடுதலைப் போராளிகள். அவர்கள் துப்பாக்கிகளைக் துணைக்கு வைத்துக்
கொண்டு, வெறும் கையோடு நிற்கும் தம்
தொப்புள்கொடி உறவுகளிடம் வீரம் பேசுகிறார்கள். கோழைகள் போலப் பிஸ்டலை மறைத்துக்
மறைத்துக் காவி வந்து நிராயுதபாணியான அப்பாவிகளைச் சுட்டுக் கொல்கின்றார்கள்.
தங்கள் செயலைப் புகழ்ந்து தாமே பரணிவேறு பாடிப் புறநாநூற்றையே கொச்சைப்
படுத்துகின்றார்கள். கறுப்புநரியிடம் துப்பாக்கி இல்லாவிட்டால், அதன் எட்டு வீடு எப்பவோ முடிந்து, அந்தச் சாம்பல் மேட்டில் நாகதாளி முளைத்திருக்கும்"
என்கின்றார்.
ஆரம்பம் இப்படி தெளிவாக தொடங்கி, சாதியமாக திரிந்து இறுதியில் முந்தையதுக்கு முரணாகவே
சொல்லுகின்றது. 'போர்க்களத்தில் போராடுகிற, முன்னர் போராடிய போராளிகளை நாம் என்றும் கொச்சைப் படுத்தியதில்லை, ஐPவிதா. நாம் கொச்சைப்படுத்தப்
போவதில்லை. அவாகள் புறநானூற்றின் வீர வாரிசுகள். அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தின்
புனித வீரச் சொத்துக்கள்" என்கின்றார். இப்படி ஒரு முரண்நிலை வலதுசாரிய பாசிச
அரசியல், சாதியம் சார்ந்து கொப்பளிக்கின்றது.
இதை தமிழ் கலாச்சாரத்தின் புனித வீரச் சொத்துகள் என்கின்ற போது, தமிழ் கலாச்சாரம் என்பது ஆணாதிக்கமும் சாதியமும் .... அல்லாத வேறு
எதுவுமல்ல.
இப்படி முரணாகவே சாதியம் முன்னிலைப்பட்ட நிலையில், புலியைப் போற்றுவதை வலிந்து கோருகின்றது. மரணவீட்டில் புலிகளின்
சொந்தப் பாத்திரத்தை வருணித்தமைக்காக, புலிகள் அவரை சும்மாவிடவில்லை. 'கால்களைக் கயிற்றால் கட்டிக் காவுதடியில் தலைகீழாக தொங்கவிட்டுக்
காவிச் சென்ற காட்சி, இரும்புச் சங்கிலியில் பிணைத்துப்
பங்கரில் வைத்து ஏழு மாதகாலம் சித்திரவதை செய்த காட்சிகள் - ஒன்றன் பின்
ஓன்றாகத்.." தெரிவதை நாவல் கூறுகின்றது. இப்படி புலிகள் அவரை பலத்த
சித்திரவதை செய்த பின்பு, பல மாதமாக வதை முகாமில் இருந்த பின்
லண்டன் வருகின்றார். ஏன் வருகின்றார் என்றால் 'மனித குலத்தின் கவனிக்கப்படாத கடமை ஒன்று தன்னை அழைப்பதாக அவன்
எண்ணினான்." அதனால் வந்தவர் தனது கடமையாக, இயக்கத்தைச் சேர்ந்த சாதிகுறைந்த இயக்க கொலையாளிகளுக்கு மனுதர்ம
அடிப்படையில் தண்டனை பெற்றுக்கொடுக்கின்றார். அதேநேரம் அகதி அந்தஸ்து எழுதிக்
கொடுத்து மோசடி செய்தவரையும், பூமாவை 'கற்பழித்த" முன்னைய இயக்கக்காரனையும்
தண்டைக்குள்ளாக்குகின்றார். பின் கடமை முடிந்து, புலி வெள்ளாடிச்சியான கொலைகாரி காதலி ஜீவிதாவை திருமணம் செய்து
நாடு திரும்ப உள்ளதாக கூறுகின்றார். என்ன கடமை, என்ன பழிவாங்கல். பழிவாங்கல் முழுக்க சாதிகள் பற்றியும், சாதி பழிவாங்கல் பற்றியும் பேசுகின்றது. நாவலில் சாதியம்
வெளிப்படையாக உறவாடுகின்றது.
அகதி அந்தஸ்து விண்ணப்பம் எழுதச் சென்ற அன்றே, வெள்ளாடிச்சி ஐPவிதாவை
வெள்ளாடிச்சியாகவே சந்திக்கின்றனர். அவளுக்கு அவன் வெள்ளாளன் என்பதால் காதல்
வருகின்றது. இவருக்கு அவள் வெள்ளாடிச்சி என்பதால் காதல் வருகின்றது. இது தான் யாழ்
(தமிழ்) கலாச்சாரக் காதல். அதை அவள் '... யாழ் மேயரின் மகன் என்றதும் அவளுக்கு இனித்தது. அவளுக்கு யாழ்
மேயர் தன்னை ஓத்த வேளாளச்சாதி என்பதை அறிந்தமையே அதற்கு காரணம்." எப்படி
இருக்கின்றது இந்தக் தமிழ்க் காதல், தமிழ் கலாச்சாரம். இப்படித்தான் காதல் செய்கின்றது. தமிழ் காதல்
சாதிய அகமண முறைக்குள் இப்படி வரையறைக்குள்ளாகின்றது. இதுவா புறநானூறு தமிழ்க்
காதல்?
இப்படி சாதி அடையாளம், கவர்ச்சியாகி காதலாக மாறுகின்றது. வாழ்வுபற்றி எந்த அடிப்படையுமற்ற
நிலையில், கவர்ச்சி அந்தஸ்து இனம் காணப்பட்டு
சாதி முதன்மைக் கூறாக அதுவே காதலாகின்றது. இந்த ஐPவிதா புலிகளின் கொலைகார உளவாளி என்பது, இறுதியில் காட்டப்படுகின்றது. சாதிக் காதல் அதைத் தடுக்கவில்லை.
இங்கு மிக நுட்பமாகவே அமிரின் கடந்த காலத்தை புரிந்துகொண்ட அவள், தனது எதிரியாக அந்த புலி உளவாளி அமிரைப் பார்க்கவில்லை. ஏனென்றால்
அவன் உயர் அந்தஸ்த்து கொண்ட ஒரு வெள்ளாளன். தம்மால் சுட்டுக் கொல்லப்பட்ட ஒருவரின்
மகன் என்பது கூட, அவளுக்கு சாதி சார்ந்ததால்
உறுத்தவில்லை. வெள்ளாளன் வெள்ளாத்தி உறவில், தமது வலதுசாரிய அரசியல் கருத்து தமது காதலுக்கு எதிரானதல்ல என்பதே
இதன் சராமாகும். அமிருடான ஜீவிதாவின் முரண்பாடுகள், சாதியுடன் இணங்கிப் போகின்ற அமிரின் பிழைப்புவாத நோக்கில்
காலத்திற்கு ஏற்ப சாதிக்கு வழங்கும், சலுகை அரசியலுடன் தான் முரண்படுகின்றது. மிக நுட்பமாகவே இந்த சாதி
அரசியல் வெளிப்படுகின்றது.
அரசியல் ரீதியாக அமிரைக் கொல்ல, புலியில் இருந்த மற்றொருவரின் கட்டளைக்குட்பட்டே அவள்
முயல்கின்றாள். இந்த வெள்ளாளனுக்கு அந்த வெள்ளாச்சி ஜீவிதாவை குற்றவாளியாக
காணமுடியவில்லை. தலைமையின் உத்தரவுக்கு அமையாத, நடக்காத ஒரு கொலை முயற்சியாக இதைக் காட்டியது மட்டுமின்றி, கொலை முயற்சி தோற்றமையால் கொலையைச் செய்ய தூண்டிய மற்றொருவன்
தற்கொலை செய்ததாக காட்டிவிடுவது நிகழ்கின்றது. அரசியல் பேசுவதை தவிர்க்க, ஐPவிதாவை தப்பவைக்க செய்ய வெள்ளாளச்
சூழ்ச்சி இது. இங்கு மற்றைய சாதிகளுடன், இதில் சம்பந்தப்பட்டவரை விசாரணைக்கு கொண்டு வருவதை தவிர்க்கவும், ஜீவிதாவை தப்பிக்க வைக்கவும் தற்கொலை வசதியாகின்றது. இப்படி
உண்மையில் உயர் சாதியம் நரித்தனமானது. தனது சாதிய இருப்பை தக்கவைக்க தற்கொலைகளை
மட்டுமின்றி அவர்களை கொன்று விடுவது யாழப்பாணக் கலாச்சாரமாகும். இது சாதி வழக்கு
மட்டுமின்றி வழமையும் கூட.
அமிர் தான் சாதி பார்ப்பதில்லை என்று காலத்துக்கு ஏற்ப நிறுவ, முன்னாள் காதலியான கரையாடிச்சி நர்த்தனாவை காட்டி, பின் அவளைக் கொன்று விடுதவதன் மூலம் திருமண வாழ்வில்
வெள்ளாடிச்சியை அகமணமுறைக்குள் கைப்பிடிக்க முடிகின்றது. உயர்சாதியம் தனது சாதிய
முகத்தை மூடிமறைக்க எப்போதும் முனைப்பு கொள்கின்றது. ஐPவிதா 'நீங்கள் தாழ்த்தப்பட்ட சனத்துக்கு
எதிரானவர் போல்" என்று கேட்க அமிர் 'அப்படியில்லை மிஸ் எனது அத்தியந்த சினேகிதி நர்த்தனா கூட என்னை
ஓத்த உயர் சாதியில்லை." என்கின்றான். இப்படி கூறும் அமிர் தான், யாழ் தர்மத்தை தாழ்ந்த சாதியைச் சேர்ந்த நதியாவூடாக
கூறிவைக்கின்றான். 'வாழையடி வாழையாக நம் மூதாதையோரும்
சமய சாத்திரங்களும் வளர்த்து எடுத்த மனிதத்தை .. விழுமியங்களை எல்லாம், ஒரு வெறிபிடித்த ஓநாய் கூட்டம் குதறிக் கிழிப்பதை.." பற்றி
பேசமுடிகின்றது. வாழையடி வாழையாக இருப்பதில் சாதியம் ஒன்று.
காதலியாக, வைப்பாட்டியாக சாதி குறைந்தவளை
வைத்திருப்பது, ஆணாதிக்க யாழ் சாதி பண்பாட்டு
மரபாகும். இது சாதிய வழக்கு கூட. ஆனால் அவர்களை குடும்பத்தில் அகமண முறைக்குளல்ல.
இதை இந்த நாவல் தெளிவாக துல்லியமாக தமது சாதிய கலாச்சார மரபுடன், அதை பாதுகாத்து பேணுகின்றது. இதில் வெள்ளாடிச்சி ஐPவிதா தலைமையிடம்
இந்த கொலை நான் செய்வதா இல்லையா என்பதை பேசத் தவறியதன் மூலமும், எல்லாவற்றுக்கும் உடன்படும் பலவீனமே, தனது காதலனையே கொலை செய்ய முயன்றதாக சுட்டிக்காட்டி, தமிழ் சமூகத்தின் முன்னிலையில் குற்றத்தில் இருந்து தப்பிக்க
வைக்கப்படுகின்றது. புலித் தலைமையிடம் இதை பற்றி விவாதிக்கலாம் என்ற பாசிச மாயை
புகுத்தப்படுகின்றது.
இதன் ஊடாக சொல்லவருவது புலிகள் இயக்கம் ஏதோ ஒருவகையில் அல்லது
பகுதியளவில் சரியானது என்பதே. அநேகமானவை தலைமைக்கு தெரியாமல் நடக்கின்றது. குறைந்த
சாதியைச் சேர்ந்தவர்களே சுட்டுக்கொள்கின்றனர், அல்லது தவறாக வழிநடத்துகின்றனர். இது இந்த நாவலின் மையக் கருத்தில்
ஒன்று. இதற்கு வெளியில் புலியின் கொலைகளுக்கு எந்த விளக்கமும் தரப்படவேயில்லை.
இந்த நாவலில் வரும் சால்வை மூத்தான் என்ற கொலைகாரப் புலி கூட, ஒரு சாதி குறைந்த வண்ணானாகவே இருக்கின்றான். இவன் மூன்று பேரைக்
கொல்கின்றான். அவர்கள் அனைவரும் உயர் சாதிக்காரர்கள் என்று, அவன் வாயாலேயே கூற வைக்கப்படுகின்றது. சாதி குறைந்தவர்களைக் கொண்டு, சாதியின் அவசியத்தை இந்த நாவல் சொல்ல வைக்கின்றது. இது கூட சாதிய
வெள்ளாளத் தனம் தான். 'மூன்று பேர். எல்லாம் உயர்சாதிக்காரன்கள்
நான் அழுக்குத் தோய்க்கிற சாதிதான். இந்த அழுக்கிப்போக்கி எத்தனை
உயர்சாதிக்காரரைக் கொன்றவன் தெரியுமே? தம்பி டே அமிர் தலை உயர்த்துற பெரிய சாதியில் மண்டையில்
போடவேணும்" என்று ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிராக இவை
கட்டமைக்கப்படுகின்றது. உண்மையில் இப்படி நடவாத ஒன்றை, நடந்தாக காட்டும் இந்த உயர்சாதிய வக்கிரத்தையே கொப்பளிக்கின்றது.
இந்த சாதிகுறைந்த சால்வை மூத்தானை வருணிக்கும் போது தலையின் 'கீழ்பகுதியை ஓட்ட வழித்திருந்தான். போதாததற்கு இடது காதில்
பூட்டியிருந்த தொங்கிட்டான் வேறு." ஒரு வெள்ளாடிச்சியின் குருட்டு சாதிக்
கலாச்சாரம் இப்படி பேசுவைக்கின்றது. தலையை ஒட்ட வழித்து, தொங்கிட்டான் போட்டால் என்னவாம். யாழ் வெள்ளாளர்கள் குடுமி கட்டி
தொங்கிட்டான் போட்ட கடந்த கால வீரவரலாறு எங்கே! வெள்ளைக்காரனுக்கு ரை கட்டி வேலை
செய்ய, பண்பாட்டை அழித்த வெள்ளாளனின் சாதி
வரலாறு எங்கே?. இன்று ஒவ்வொரு
தமிழ்வீட்டிலும் இப்படித் தானே இளைஞர்கள் உள்ளனரே. தமிழ் பண்பாடு ஏன் குமுறி
எழவில்லை. ஆனால் சாதிகுறைந்த சால்வை மூத்தானை இழிவாடுவது, உயர்சாதி திமிரில் இருந்தே உருவாகின்றது. அந்த கலாச்சார சாதி
வெள்ளாடிச்சி 'தலைக்குள் ஒன்றுமில்லாத மண்டு. உதுகள்
எல்லாம் எப்படி லண்டனுக்கு வந்ததுகளோ" என்று தனது சாதிப் புத்தியை, மண்டையில் எதுவுமில்லாத யாழ்ப்பாணியமாக வெளிப்படுத்துகின்றது.
இலண்டன் வருவதற்கு தலைக்குள் எதும் தேவையோ? என்ன 'உதுகள்" என்றால் சாதி
குறைந்ததுகள் என்ற இழிவாடும், வெள்ளாளர்
நகையாடல். இலண்டன் வர 'உதுக"ளுக்கு தகுதி கிடையாது
என்று, இந்த வெள்ளாடிச்சி கூறுகின்றா!
இலண்டனுக்கு நக்கி பிழைக்க வந்த வெள்ளாடிச்சி குமுறுவது, சாதிகுறைந்ததுகள் இலண்டனுக்குள்ளும் தீட்டை ஏற்படுத்தி விட்டுதுகள்
என்ற அங்கலாய்ப்புத்தான்.
மீண்டும் மற்றொரு வெள்ளாளன் சால்வை மூத்தானை 'என்ன மச்சான் ஊத்தைவாளி வலைவீசிறியோ?." கேட்டது 'கிறாடிட் காட் தொழிலையும்
சாதியையும் குத்திகாட்டியது" இப்படி சாதிய திமிர் நாவல் முழுக்க
கொப்பளிக்கின்றது. அதற்கு சால்வை மூத்தான் பதிலளிப்பதாக '.. பறை வேசை மோனே. கொம்மாவுக்கு ஆள் தேடுறியோடா? நாற்றம் வீசுகின்ற கோவணக் குண்டிக் கமக்காரனின் தட்டுவச் சோறு
தின்னி." என்று குறைந்த சாதி இயக்க பாத்திரத்தை உருவாக்கி, அவனைக் கொண்டு வெள்ளாள இழிவாடலை புனைவதன் மூலம் சாதியத்தை உசுப்பி
கொலுவேற்றுகின்றது. 1960 களில் நடந்த
சாதிய போராட்டங்களின் போது, அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில்
ஆற்றிய உரையில், கோவிய சாதிதான் சாதி வன்முறையில்
ஈடுபடுகின்றதே ஒழிய நாங்கள், அதாவது வெள்ளாளப்
பெருங்குடிகளல்ல என்றார். சாதிய போராட்டத்தை எதிர்த்தபடி, இப்படி வெள்ளாள தமிழ் அரசியல் கட்சிகள் இழிவாடின. உயர்சாதியம் தனக்கு
எதிரான சாதிகளை ஒடுக்க, இடைநிலைச்சாதியை பயன்படுத்துவது
தான் சாதியத்தின் வன்முறை சார்ந்த உள்ளடக்கமாகும். இந்த வகையில் தான், சால்வை மூத்தானைக் கொண்டு பறையரை, பெண்ணை 'பறை வேசை மோனே" என்று
இழிவாடுகின்றது.
வெள்ளாளர் கோவிய சமூகத்தையே, தமது சாதிய எடுபிடிகளாகவே பயன்படுத்தியவர்கள். அன்று வெள்ளாளன்
பிணத்தை தூக்குவதற்கு கூட நாலு கோவியர் இருந்தது போல், ஒரு வெள்ளாடிச்சிக்கான சீதனத்தில் ஒரு கோவியனும் ஒரு பள்ளியும்
சீதனமாக கொடுக்கப்பட்டனர். வெள்ளாடிச்சியின் திருமணமே சாதி கலாச்சாரத்துடன் தான், வாழையடி வாழையாக தொடரப்பட்டது. சாதி ஒடுக்குமுறை சார்ந்த மரபே, வழமையே யாழ்ப்பாணியம். இந்த மரபு சார்ந்து யாழ் சாதியம் விரிவானது
நீண்டது. (நான் எழுதிவரும் இலங்கையில் சாதியமும், சாதியப் போராட்டமும் பற்றிய எனது நூலில், இதை விரிவாக விரைவில் பார்க்கமுடியும்) இந்த சாதிய யாழ் கலாச்சாரம்
சார்ந்த சாதி மரபுகளில், கோவியனுக்கும் வெள்ளாளனுக்குமான
உறவுக்கு இடையில், எடுபிடி சாதிய உறவுண்டு. அன்று
தமிழரசுக்கட்சி சார்பாக அமர்தலிங்கம் பாராளுமன்றத்தில் பேசியது என்பது, தம்மை தாம் ஜனநாயக சாதிகளாகவும் நியாயவாதிகளாகவும் காட்டிக்
கொள்ளும் சுத்த சாதிய மோசடிதான். இங்கும் இந்த நாவலில் வரும் கூட்டணியைச் சேர்ந்த
மேயரின் மகன் அமிரும், அதே சாதிய மோசடிப் பேர்வழிதான்.
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என்ற பெயரில், வலதுசாரிய தேசியம் மல்லாக்க பிணமாக வீழ்ந்து கிடப்பது
வலதுசாரிகளுக்கு புதிராகின்றது. வலதுசாரி மிதவாத அரசியலுக்கு, தனது சொந்த வலது வன்முறையை புரிந்துகொள்ள முடியாத பரிதாபத்தின்
விளைவே சாதியமாக புகைகின்றது. புலியெதிர்ப்பு ரீ.பீ.சீ ஜெயதேவனின் அண்ணன் பயல் கூட, புலிகளின் வன்முறையை விளக்க சாதியத்தைத்தான் தேர்ந்தெடுத்தான்.
தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் தான், மக்கள் விரோத வன்முறைக்கு காரணம் என்கின்றார்கள். ஆனால்
இராணுவத்துக்கு எதிரான வன்முறையை உயர்சாதியினரின் வீரவரலாறாக, புறநானூறின் தொடர்ச்சியாக சித்தரிப்பதே இன்றைய வலதுசாரிய திரிபு
அரசியலாகின்றது.
இதே நிலையில் தான் இந்த நாவலும் அதற்குள் தான் சாதியமாக
வினையாற்றுகின்றது. இன்று வலதுசாரிய மிதவாதிகள், வலதுசாரிய ஜனநாயகவாதிகள் இப்படித் தான், தமது உயர்சாதிய உள்ளடகத்தில் விளக்கமளிக்கின்றனர். வலதுசாரிய
அரசியல் வன்முறையைக் கையில் எடுக்கும் போது, அது பாசிசமாக தெளிவாக பிரதிபலிக்கத் தொடங்குகின்றது. வலதுசாரிய
பிரிவினால், தமது சொந்த பாசிசத்தின் கூறுகளை
அரசியல் ரீதியாக புரிந்துகொள்ள முடியாத விளைவே சாதியமாக மாறுகின்றது. கிட்லரின்
தலைமையிலான ஜெர்மனிய பாசிசத்தை, வலதுசாரிகள்
எப்படி இன்றும் கூட புரிந்து விளக்க முடியாதுள்ளதோ அப்படித்தான் இதுவும். இன்று
இந்த புலிப் பாசிசத்தை சுய விசாரணையின்றி கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பதும் அதை
நம்புவதும், சாதிய ஒடுக்குமுறை மரபின் ஒரு
நீட்சிதான். இதனால் தான் இலங்கையிலேயே அதிகம் கல்வியறிவு பெற்ற யாழ்ப்பாணியம், உண்மையை கண்டுகொள்ள எதையும் படிப்பதில்லை, எதையும் சுய விசாரணை செய்வதில்லை. சாதிய மரபு, சாதிய நம்பிக்கையின் தொடர்ச்சியில் வந்த யாழ்ப்பாணியம், புலிப்பாசிசத்தை அதன் சாதிய எல்லைக்குள் பாதுகாக்கின்றது.
சாதாரண உண்மைகளையே திரித்து விடுவது நிகழ்கின்றது. நிலைமையை சாதி
அரசியலாக விளக்குவது நிகழ்கின்றது. இயக்கத்தில் ஏற்பட்ட சாதிக்கலப்புத் தான், வன்முறைக்கெல்லாம் அதாவது அனைத்து தவறுக்கும் காரணம் என்று கூறுவதே
வலதுசாரியத்தின் ஆய்வாகின்றது. இயக்கத்தில் தலைமையை குறைந்த சாதிகள் கைப்பற்ற
முனைவது, மற்றொரு காரணம் என்கின்றனர். இந்த
நாவலும் இதைத் தான் சொல்லுகின்றது.
புலிகள் பற்றி வலதுசாரிய இந்த நாவலில் 'எங்களுடைய கறுப்புநரித் தலைவர் (பிரபாகரன்) கோட்ட அதிகாரியாக ஒரு
வெள்ளாளனைக் கூட யாழ்ப்பாணத்திலே நியமிக்கவில்லை. யாழ்ப்பாணத்து முப்பதேழு
கறுப்புநரி கோட்ட அதிகாரிகளிலே, ஒருத்தன் கூட
பூனா வெள்ளாளன் இல்லை. ஒரு மெத்தப் படித்தவனைக் கூடக் கோட்ட அதிகாரியாக
நியமிக்கவில்லை." இந்த தகவல் சரியானதா என்பதை, என்னால் உறுதி செய்ய முடியவில்லை. யாழ் மையவாதம் கிழக்கை
புறக்கணித்தது ஒடுக்கியது போன்றதல்ல இது. யாழ் மையவாதம் வெள்ளாளர் தமிழரசுக்
கட்சியாக இருந்த காலத்திலேயே இருந்து தொடருகின்றது. புலிகளின் தலைமை பெருமளவுக்கு
வெள்ளாளர் அல்லாத சாதி குறைந்தவர்களால் நிரப்பப்பட்டிருந்தாலும் கூட அல்லது
வெள்ளாளன் புறக்கணிப்பட்டிருந்தாலும் கூட, நடப்பது உயர்சாதிய வெள்ளாள ஆதிக்க அரசியல் தான். அன்று வெள்ளாளன்
கோவியனை வன்முறையின் கருவியாக பயன்படுத்தி எப்படி சாதி ஆதிக்கத்தை தக்கவைக்க
முடிந்ததோ, அதே நிலைதான் இன்றும் காணப்படுகின்றது.
இந்த நிலையில் வலதுசாரிய அரசியல் தான் தப்பிப்பிழைக்க, அதை விளக்க இயக்கத்தில் படித்தவன் இல்லாமையும், தாழ்ந்த சாதிக்காரனின் ஆதிக்கமும் தான் இந்த நிலமைக்கு காரணம்
என்கின்றது. இது திட்டமிட்டு சாதி குறைந்தவனையும், படியாதவனையும் தலைமைக்கு நியமித்ததாக கூறுவது, உயர்சாதிய சாதிய நோக்கில் உயரத்தில் நின்று யாழ் உயர்வர்க்கம்
கூறுவதாகும்.
இந்த நாவலில் வரும் புலியைச் சேர்ந்த அழுக்குத் துணி துவைக்கும்
வண்ணானான சால்வை மூத்தான்னை இழிவுபடுத்த, அவன் படித்ததே மூன்றாம் வகுப்பு தான் என்கின்றது. உண்மையில்
படிக்காதவர்களினால் தான் இந்த விளைவு, என்று மற்றொரு வலதுசாரிய பாசிச குண்டை சமூகத்தின் மேல் தூக்கிப்
போடுகின்றது. இவர்கள் 'எட்டு இலட்சம் பத்து இலட்சம் கட்டி
எப்படி வரமுடிந்தது" என்று கேட்டு அவதூற்றை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றியமாதிரி
புகுத்துகின்றது. அதை அவர்கள் வாயால் கூறவைக்கின்றது. 'டே தம்பி அமிர், உந்த எழிய பெரிய
சாதியின் காசிலேதான் நான் இலண்டனுக்கு வந்தனான்." இப்படி கூறவைக்கும்
வெள்ளாளன் மட்டும், எப்படி வரமுடிந்தது. 'கோவணக் குண்டியோடு திரும்பத் திரும்பக்" கிண்டிய வெள்ளாளன்
வரமுடியும் என்றால், ஏன் வண்ணான் முதல் பள்ளுப் பறைகள்
வரமுடியாது. மற்றொரு வலதுசாரிய அவதூறில் புலம்பெயர் நாடுகளில் தூள் வர்த்தகம், சுத்துமாத்து, கிறடிற்காட்
மோசடி, வன்முறைகள் போன்றவற்றில்
ஈடுபடுவதும் தாழ்ந்த சாதிகளே என்றும், உயர்சாதி படித்த மேல்மட்ட யாழப்பாணத்தான் இழிவுபடுத்த
முனைகின்றான்.
இப்படி தமது சொந்த அழுக்குகளை சாதியால் மூடிமறைத்து நடிக்கின்றனர்.
சமூக சிதைவுகளையும், கிறிமினல் குற்றங்களையும் சாதியாக
காட்டி, வலதுசாரிய பாசிச சாதிவெறி ஊடாக
மிதிக்கின்றனர். ஊரையும் உலகத்தையும் ஏய்க்கின்றனர். சொந்த நடைமுறையில் நேர்மையை, கதையாகக் கூட கூறமுடிவதில்லை. அகிம்சைவாதியான கூட்டணி அமிர் என்ற
வெள்ளாளனுக்கும், வன்முறையையே அரசியல் நாதமாக கொண்ட
புலி வெள்ளாடிச்சிக்கும் வெள்ளாளக் காதல் வந்தவுடன், தாம் சாதி பார்ப்பதில்லை என்று வெள்ளாளன் தொடர்ந்தும் வலிந்து கூற
முனைகின்றான். ஒரு கூட்டணியின் பிழைப்புவாத அரசியல்வாதிக்கே உரிய சுத்துமாத்தில், வெள்ளாளனும் வெள்ளாடிச்சியும் பரஸ்பரம் சாதி பற்றி முரண்பாடுடன்
உரையாடுகின்றனர். இந்த முரண்பாடு சாதியத்தை பாதுகாக்கும் எதிர்நிலை தளத்தில்
கையாளப்படுகின்றது.
புலி வெள்ளாடிச்சி ஜீவிதா கூறுகின்றாள் 'நலிந்த தமிழ் மக்களின் இட்டு இடைசல்களுக்கெல்லாம் உயர்சாதி
வெள்ளாளர்தான் காரணமாம். தங்களைச் சுரண்டி அடிமைகளாக நடத்தினவர்களாம். அதற்குப்
பழிவாங்குகிறானாம்." இதைக் கேட்டு அமிர் ஓவென்று சிரிக்கின்றான். சிரிப்பில்
உள்ள சாதிய அர்த்தம் தான் என்ன? தாங்கள் காரணமல்ல
என்கின்றார்களா? அப்படியாயின் கோவியரோ? அல்லது கடவுளின் விதியோ? அது என்ன நலிந்த மக்கள்? என்னத்தில் உங்களைவிட அவர்கள் நலிந்துள்ளார்கள்? வெள்ளாள சாதிப்புத்தி இப்படி குதர்க்கம் செய்கின்றது. தாங்கள் அந்த
மக்களைச் சுரண்டவில்லையாம். எப்படி ஐயா நீங்கள் மட்டும் கல்வீடு கட்டமுடிந்தது.
நிலங்களையும், பணத்தையும், தங்கத்தையும், சாதிக்காரரையும்
சீதனமாக கொடுக்க முடிந்தது? யார் உழைத்த பணம்? சீதனமாக சாதி குறைந்தவர்களையே எப்படி கொடுக்க முடிந்தது. உங்கடை
செத்த வீட்டுக்கு மாரடிக்க, பறையடிக்க, பிணத்தைச் சவரம் செய்ய, தொட்டாட்டு வேலை செய்ய, மரண செய்தி அறிவிக்க, பிணம் காவ, பிணம் எரிக்க என்று ஒரு சங்கிலித்
தொடரான யாழ் சாதியக் கலாச்சாரம் எப்படி கட்டிப் பாதுகாக்க முடிகின்றது. இன்றுவரை
இந்த சாதிக் கூறுகள் பல யாழ்கலாச்சாரமாகவே நீடிக்கின்றதே எப்படி?.
இதில் வெள்ளாடிச்சி ஐPவிதா கொலைகார புலிகள் இயக்கத்தின் ஒரு உறுப்பினர். அவள் இப்படி 'நலிந்த தமிழ் மக்களின் இட்டு இடைசல்களுக்கெல்லாம் உயர்சாதி
வெள்ளாளர்தான் காரணமாம். தங்களைச் சுரண்டி அடிமைகளாக நடத்தினவர்களாம். அதற்குப்
பழிவாங்குகிறானாம்." என்றால், புலிகள் செய்த 8000 கொலைகளை எந்த வரையறைக்குள் இது வகைப்படுத்துகின்றது? புலியைப் பாதுகாக்க திரிபு நுட்பமாக புகுத்தப்படுகின்றது. புலிகள்
கொலையே செய்யவில்லையா? ஆச்சரியமான ஆனால் சாதிய
குதர்க்கத்துடன் கூடிய தர்க்க விவாதம்.
ஓவென்று சிரித்த வெள்ளாளன் அமிர் 'யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களைப் பிரெஞ்சு நாட்டு நிலப்பிரபுக்களோடு
ஒப்பிட்டு பார்க்கிறார்கள். எல்லாம் மார்க்சியவாதிகளின் முடுக்கல் செய்கிறவேலை.
...மழையிலும் வெய்யிலிலும் கோவணக் குண்டியோடு திரும்பத் திரும்பக் கிண்டித்தான்
உயிர் வாழ்கின்றான். ... அந்த வெங்காய நாற்றமடிக்கும், மண்குளிக்கும் வெள்ளாளன் எப்படி இவர்களைச் சுரண்ட முடியும்.? அல்லது இவர்களைச் சுரண்டி இராசபோகம் அனுபவித்தானா? ... எவனும் நலிந்தவர்களைச் சுரண்டி ஆளாகவில்லை" 'ஒரு வெள்ளாளனுக்கு வருடத்தில் எட்டு ஒன்பது நாட்கள் தான் அவர்களின்
உழைப்பு தேவைப்பட்டது... 1949 இல் 30 சதத்தில் ஆரம்பித்த கூலி 200 ரூபாவுக்கு மேல் வளர்ந்துள்ளது. காலத்துக்கு காலம் சம்பளத்தைக்
கூட்ட அடம்பிடித்தவர்கள். அவர்கள் யாரும் இலசவசமாக வேலை செய்யவில்லை. அவர்களை
யாரும் அடித்துத் துன்புறுத்தி வேலைவாங்கவில்லை. போகட்டும். அந்தப் பத்துப்
பதினைஞ்சு தினவேலையோடு எப்படி அவர்கள் வருடம் முழுவதும் சுரண்ட முடியும்? அந்த வேலையையும் வழங்கியிருக்கவிட்டால் அவர்கள் காற்றுக்குடிக்க
நேர்ந்திருக்கும். குடியிருக்க நிலமும் கொடுத்துத் தொழிலும் கொடுத்துச் சிலவேளை
பசியாறவைத்து அவர்களின் உயிரைப் பிடித்து வைத்திருந்தவர்கள் கமக்காரர்கள்."
இப்படி வெள்ளாள சாதியபுத்தி வக்கிரமாகி தன்னைத் தான்
நியாயப்படுத்துகின்றது. புலியும் இந்த சாதிய உத்தியைத்தான், தேசியத்தின் மேலும் செய்கின்றனர். வெங்காய நாற்றமடிக்கும், கோவணக் குண்டியோடு திரும்பத் திரும்பக் கிண்டி வெள்ளாளன், பத்து லட்சம் கொடுத்து எப்படி லண்டன் வரமுடிகின்றது? நாற் சதுர சாதிய கல்வீடுவாசல்கள், தீண்டாதவருடன் தொடர்பு கொள்ள சங்கடப் படலையுடன் கூடிய படலைத்
தலைவாசல், சாதிகுறைஞ்சவர்களுடன் பேச
சவுக்கண்டியும், நிலபுலங்கள்.. எல்லாம் எப்படி
வெள்ளாளனிடம் மட்டும் காணப்பட்டது, காணப்படுகின்றது. அந்த மக்களுக்கு அவை ஏன் கிடைக்கவில்லை. கேள்வி
எதிரிடையில் எழும்புகின்றது? சாதி வழக்குகள், சாதிய கடமைகள் எப்படி இன்றுவரை நீடிக்கமுடிகின்றது. இலவசமாக கூலி
இன்றி சாதியக் கடமைகள், யாழ் உயர்சாதிய வாழ்வில்
பெறப்பட்டது, பெறப்படுகின்றது. சாதிய கடமைகளும், சாதிய வழக்குகளும், சாதிய வரலாறு இதைத் தெளிவாக கூறுகின்றது. 'அவர்கள் யாரும் இலசவசமாக வேலை செய்யவில்லை." என்ற கூற்று, அது முன்பு வழக்கத்தில் இருந்தை அடிப்படையாக கொண்டு
கூறப்படுகின்றது.
'அந்த வேலையையும் வழங்கியிருக்காவிட்டால் அவர்கள் காற்றுக்குடிக்க
நேர்ந்திருக்கும்." என்று குறிப்பிடும் போதே, சாதியம் எகிறுகின்றது. தமது தயவு இன்றி தாழ்ந்த சாதிகள் உயிர்
வாழமுடியாது என்பதை, இது தெளிவாக எடுத்துரைக்கின்றது.
கோமணக் குண்டி வெள்ளாளனின் திமிர் 'ஒரு வெள்ளாளனுக்கு வருடத்தில் எட்டு ஒன்பது நாட்கள் தான் அவர்களின்
உழைப்பு தேவைப்பட்டது..." என்கின்றது. அப்பட்டமான சாதியமாக நீத்துப் போன
பொய். நீங்கள் சொல்வது படிதான் நடந்தது என்றால், எட்டு ஒன்பது நாள் உழைப்பு, எப்படி அவர்களின் வருட முழுமைக்குமான தேவையை ப+ர்த்தி செய்தது.
சாதிய நகைச் சுவைதான் இது. இதுவும் இல்லையென்றால் காத்துத் தான் குடித்திருக்க
வேண்டும் என்கின்றது. வெள்ளாளனை மீறி காத்துக் கூட குடிக்க முடியாது என்பதையே, இது உரத்து கூறமுனைகின்றது. சரி நீங்கள் 1949 இல் வழங்கிய கூலி நாளுக்கு 30 சதம் என்றால், வருடம்
உங்களுக்கு தேவைப்பட்ட 15 வேலை நாட்களுக்கு
நீங்கள் வழங்கிய 4ரூபா50 காசில் தான் அவர்கள் வாழ்ந்தார்கள் என்று கூறுவது, சாதியை சாதியாக நியாயப்படுத்தும் வக்கிரம் தான். 1945 இல் பாடசாலையில் கல்விகற்ற மாணவர்களின மாதக்கட்டணம் 3 ரூபா 25 காசு.
தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பலத்த எதிர்ப்பையும் மீறி, ஒரு சிலர் இப்படி கட்டி படித்துள்ளனர். இதைச் சாதிய வரலாறு பதிவு
செய்துள்ளது. உங்கள் சாதிக் கூலியின் அளவையே இது கேலிசெய்கின்றது. இந்த நாவல் வெளியாகிய
2000 இல் 200 ரூபா கூலி
என்றால், வருடம் நீங்கள் காற்றுக் குடிக்க
கொடுத்தது, 3000 ரூபா தான். இதைக்
கொண்டு யாழ் மண்ணில் வெள்ளாளன் தயவில் வாழமுடியுமா? யாருக்கு கதை சொல்லுகின்றீர்கள்.
சாதியம் பற்றியும், சாதிய சுரண்டல் பற்றிய உண்மையை, அதன் உண்மைத் தன்மையையே இது மறுதலிக்கின்றது. மார்க்சியம் என்ன
முடுக்கினார்கள் என்பதற்கு அப்பால், சாதிய எதார்த்தம் வேறொன்றானது. வெள்ளாளன் அமிர் ஓவென்று
சிரிக்கின்றான் என்றால், அவன் தான் உண்மையான மக்கள் விரோதி.
மற்றவர்களை சமூக விரோத கிரிமினலாக காட்டியபடி, உண்மையான கிரிமினல்கள் சாதியின் பின்னால், யாழ் சமூகத்தின் முன்னால் ஒழித்துக்கொள்கின்றான். இன்று புலிகள்
என்ற மக்கள் விரோதிகள் சமூக விரோதியாக இருந்தபடி, மற்றவர்களை சமூக விரோதிகளாக யாழ் சமூகத்தின் முன்னால் காட்ட
முடிகின்றது. அதே போல் தான் சாதிய அரசியல் உள்ளடக்கம் தான், இங்கு இந்த சாதி நாவலாக தன்னை நியாயப்படுத்துகின்றது.
தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக அவலத்துக்கான சமூகக் காரணம் என்ன? இதில் வெள்ளாளரின் சமூகப் பங்கு என்ன? தமிழ் அரசியல் கட்சிகளின் பங்கு என்ன? சாதிய உயர்வின் மேட்டிமைதான் என்ன? சாதிய அகமணமுறையின் இருப்புக்கான சமூக நியாயத்த்தன்மை என்ன? பார்ப்பானிய சாதிய இந்துமதம், சாதியத்தை எப்படி விளக்கமளித்து பாதுகாக்கின்றது? நீதி, நியாயம், ஜனநாயக தன்மை எவையும், இங்கு ஏன் இதன் மீது முரணற்றவகையில் யாழ் சாதிய கலாச்சாரம்
கையாள்வதில்லை? யாழ் சாதியம் வன்முறையற்ற தளத்திலா
இயங்கியது? யாழ் சாதிய வெள்ளாளனாகவே வாழ்ந்த
தமிழன் சேர்.பொன்.இராமநாதன், தாழ்த்தப்பட்ட
மக்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்றானே ஏன்? இப்படி பல நூறு கேள்வி உண்டு.
சேர்.பொன்.இராமநாதன் 'பஞ்சமச் சாதியிடம் வாக்குக் கேட்டு சாதிமான்கள் போவரோ?"
என்று லண்டன் சென்று, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாக்குரிமை வழங்கக் கூடாது என்றானே, இவன் தான் தமிழ் மக்களின் தலைவன். இதுதான் இவர்கள் கோரிய
சுதந்திரம். இந்த நாவலில் 'சேர் பொன்னம்பலம் இராமநாதன் காலம்
தொடக்கம் தமிழர் தலைவர் பெருமகன் அமர்தலிங்கம் வரை யாழ்ப்பாணத்தில் பேணப்பட்ட வந்த
அரசியல் தூய்மை, புனிதம் என்பன ஆயுதம் ஏந்திய
கொலைகார காமவெறி பிடித்த மரநாய் இயக்கத்தவர்களின் பாராளுமன்றப் பிரவேசத்தால்
அசிங்கம் ஆக்கப்பட்டுள்ளது" என்கின்றனர். தூய்மை, புனிதம் என்பன தாழ்ந்த சாதிக்கு எதிராக சேர்.பொன்.இராமநாதன்
தொடங்கி அமிர்தலிங்கம் பிரபாகரன் வரை தொடருகின்றது. பாராளுமன்றம் ஈ.பி.டி.பி என்ற
இயக்கத்தினால் தீட்டுப்பட்டுவிட்டதாக காட்டப்படுகின்றது. ஈ.பி.டி.பி யில்
பள்ளுப்பறைகள் இருந்தலோ இந்த தீட்டு. அவர்கள் காமவெறியர்கள் என்கின்றது. உங்களை
விடவா? வெள்ளாள சாதிய ஒடுக்குமுறை ஊடாக
தாழ்ந்த சாதிப் பெண்களை மான பங்கப்படுத்தியதை விடவா, அவர்கள் அதிகம் செய்துவிட்டனர்? வெள்ளாள சாதிப் படுகொலையை விடவா, அவர்கள் அதிகம் செய்துவிட்டனர்? சாதிய வரலாறு அதை தெளிவாகச் சொல்லுகின்றது. இப்படி சாதி பற்றி
கேள்விகள் பல நூறு உண்டு? (சமூகத்தில்
இருந்து ஆக்கமும் ஊக்கமும் தராதபோதும், உதவிகளும் ஒத்துழைப்புமற்ற போதும் கூட, விரைவில் இவைகளை எனது நூலில் நீங்கள் விரிவாக காணமுடியும்.)
சரி அகிம்சை பேசும் சாதியவாதிகளே, நீங்கள் கட்டிப் பாதுகாத்த யாழ் பண்பாட்டு கலாச்சார சமூக அமைப்பில்
இவை எப்படி நீடித்தது, நீடிக்கின்றது என்று பார்ப்போம்
1.தாழ்த்தப்பட்ட மக்கள் சிரட்டையிலும், போத்தலிலும் மட்டும் தான் குடிப்பதற்குரிய பொருட்களை உயர்சாதியினர்
வழங்குகின்றனரே ஏன்?
2.தாழ்ந்த சாதி மாணவர்களை பாடசாலைகளின் கற்க அனுமதிக்காமை, கற்க முனைந்த போது தாக்கியமை, ஏன் அவர்களுக்கு என்று தனிப்பாடசாலைகள் உருவான போது எரித்தவை
எல்லாம் ஏன்? உயர்சாதிய பாடசாலைகளுக்கு பலத்த
போராட்டத்தின் பின் வந்த போது, அவர்களை
நிலத்தில் இருத்திவைத்து படிப்பிப்பதாக நடித்தது ஏன்? பாடசாலையில் சாதியைப் பாராட்டியது ஏன்? உதாரணங்கள், சாதிய பழமொழிகள், நளினங்கள், இழிவாடல்கள், மறைமுக குத்தல்கள் மூலம் சாதியத்தை கிண்டல் செய்து இழிவாடிய, உயர்சாதிய வெள்ளாள ஆசிரியர்களின் சமூகத்தன்மை எப்படிப்பட்டது?
3.கிணற்றில் குடிக்க தண்ணீரை எடுக்கவும், குளத்தில் குளிக்கவும் தாழ்ந்த சாதியை தடை செய்த வெள்ளாளனின் நீதி
நியாயம் எப்படிப்பட்டது? இதை மீறிய போது அவற்றுக்கு
நஞ்சிட்டதும், தலைமயிரைப் போட்டது, அழுகிய இறந்த உடல்களைப் போட்ட யாழ் சமூக கலாச்சாரம், அதைப் பெருமையாகக் கொண்டாடவில்லையா? இன்று அந்த சாதிய யாழ் சமூகம் தான், புலியின் கோரக் கொலைகளைக் கூட பெருமையாக கொண்டாடுகின்றது. எப்படி?
நாவல் ஆசிரியர் ஆசிரியராகவும், பின்னால் அதிபராக இருந்த யூனியன் கல்லூரியில் இருந்த கிணற்றில்
தாழ்ந்தசாதி மாணவர்கள் குடிக்க குடிநீர் அள்ளுவதற்கு, நான் கல்வி கற்ற காலத்தில் அனுமதி கிடையாது இருந்தது. தண்ணீர்
கேட்டு அந்த மாணவர்களுக்கு நான் நீர் அள்ளியூற்றியதும், பின்னால் அவர்களை அள்ளச் சொன்ன சிறுவயது நினைவுகள், சாதி கோலோச்சிய யாழ் சமூகத்தில் இன்றுவரை எதார்த்தமானவை தான்.
4.அகமண முறைக்குள்ளான சாதிய திருமணங்கள் நடத்தும் யாழ் கலாச்சார
சாதிய பெருமை எப்படிப்பட்டது? இது எப்படி
ஜனநாயகபூர்வமானது. இதைக் கடந்த திருமணங்கள் தடுக்கப்பட்டதும், வன்முறையை ஏவிய கலாச்சாரம் யாருடையது? அடிநிலைச் சாதியில் கூட கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில், உயர்சாதிய அக்கறையும் வன்முறையும் எப்படிப்பட்டது? நீங்கள் எல்லாம் அகிம்சாவாதிகள்! நல்ல நகைச்சுவை தான்.
5.கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிக்க மறுத்த, மறுத்துக் கொண்டிருக்கின்ற 'பெருமைமிக்க" யாழ் கலாச்சாரத்தின் சாதியம் மனிதவிரோதத் தன்மை
கொண்டவை.
1884 இல் எனது சொந்த ஊரான வறுத்தலைவிளானுக்கு அருகில் புலிகள்
ஆரியப்பெருமாள் மீது நடத்திய கண்ணிவெடித் தாக்குதலின் போது எமது முழு ஊரும்
அகதியானது. அகதிகளில் வறுத்தலை வெள்ளாளரும் பள்ளரும் அடங்குவர். ஆனால் வறுத்தலை
அம்மன் கோயிலில் ஒன்றாக இருக்க, அவர்களை
உயர்சாதியம் அனுமதிக்கவில்லை. நான் கடுமையாக போராடிய போது, மற்றைய இயக்கங்கள் அதைத் தடுத்தன. வெள்ளாள நரித்தனத்துடன் அவர்களை
இரண்டாக பிரித்து தனித்தனியாக வெளியேற்றியது. இதுதான் யாழ் கலாச்சாரம்.
அகதிளுக்கான உணவைக் கூட பிரித்து, மரவள்ளிக்
கிழங்கு பள்ளருக்கும், இடியப்பமும் பிட்டும்
வெள்ளாளருக்குமென கொடுத்த பெருமை யாழ்ப்பாணிய சாதியத்துக்குத் தான் சேரும். இதை
நான் கடுமையாக எதிர்த்து, உணவை இடையில் இடம்மாற்றி
வழங்கியதெல்லாம் உண்டு.
1985 இல் இதே வறுத்தலைவிளானில் பிள்ளையார் கோயில் சித்திரை கஞ்சி அன்று, பள்ளரை கோயிலின் உள்ளே அனுமதிக்க கோரியும், சம ஆசனம் சம போசனத்தை அமர்த்தக் கோரியும், எனது உறவினரை எதிர்த்து நாம் போராடினோம். யாழ் கலாச்சார சாதியம்
சும்மா இருக்கவில்லை, இதற்கு எதிராக கட்டுவன் சாதிய
வன்முறையாளர்களை கொண்டு வந்து இறக்கியது. நாங்கள் துப்பாக்கி எடுத்து வந்ததன்
மூலம் அவர்களை பின்வாங்க வைத்தோம்.
சம ஆசனம், சம போசனம் செய்ய முடியாது என்றனர்.
அந்தளவுக்கு சாதியக் கலாச்சாரம் புரையோடிக் காணப்பட்டது. அரசியல் செய்ய சமபந்தி
இருந்த கூட்டணியின் சுத்துமாத்துகள் பின்னும் இதுதான் நிலைமை. 1930 களில் பாடசாலைகளில் சம ஆசனம் சம போசனம் கோரி தாழ்த்தப்பட்ட மக்கள்
போராடிய போது, அதை எதிர்த்தவர்கள் தமிழ் தலைவர்கள்
தான். அன்று அப்படி நடத்திய 12 பாடசாலைகள்
எரியூட்டப்பட்டன. கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் இதை கோரியபோது, சில காலம் அது மூடப்பட்டது. இப்படி சாதி தலைவிரித்தாடிய நிலையில், தமிழரசுக்கட்சி சாதிப் போராட்டத்தை மழுங்கடிக்க அதை திரித்து
தமக்கு இசைவாக்கி அரசியல் நடத்தினர். வர்க்க ரீதியாக முன்னேறிய தாழ்ந்த சாதி
வீட்டில், உயர் சாதியினர் சமபோசனம் நடத்தினர்.
உயர்சாதி வீட்டில் தாழ்ந்த சாதிக்கு சமபந்தியை ஒருநாளும் நடத்துவதில்லை. இது கூட்டணியின்
சமபோசன சாதிய சதி அரசியல் வரலாறாகும்.
6.சாதியத் தீட்டு, அதாவது தீட்டுக்
கலாச்சாரம் தமிழ் கலாச்சாரமாகி சமூகம் முழுக்க மூழ்கிக்கிடக்கின்றதே ஏன்? சாதியமே இந்து மதமாக மாறியதும், அது இன்றுவரை யாழ் கலாச்சாரமாக ஆதிக்கத்தில் உள்ளதே ஏன்?
7.தாழ்ந்த சாதிப் பெண்கள் மீது, உயர் சாதி ஆண்கள் சாதி ஒடுக்குமுறையைப் பயன்படுத்தி பாலியல்
ரீதியாக வன்முறை ரீதியாக ஆதிக்கம் செலுத்தியது எப்படிச் சாத்தியமானது.? எரிக்கப்பட்ட வீடுகள் எத்தனை? கொல்லப்பட்டவர் எண்ணிக்கை எத்தனை? தாக்கப்பட்டவர் எண்ணிக்கை எத்தனை?
இப்படி சாதியம் பலவழிமுறைகளில் உயிருடன் இருக்க, எங்கே நாங்கள் ஒடுக்கினோம் என்று கேட்பது, வெள்ளாளச் சாதி அதிகாரத்தின் திமிராகும். இந்த திமிர் தான்
சம்பளத்தை உயர்த்திக் கேட்பதாகவும், 1949துடன் ஓப்பிட்டு பல மடங்காக்கியதாக கூறி, தமது சொந்த உயர்தர சுரண்டல் வாழ்க்கையை மூடிமறைக்க முனைகின்றனர்.
வெள்ளாளன் சுற்றிச்சுற்றி வெங்காய நாற்றத்துடன் கோமணத்தைக் கிண்டுகின்றானாம்.
எப்படி இருக்கின்றது இந்த சாதியப் புளுடா!
அவர்கள் 200 ரூபா கூலி
பெறுவதாக 1949 துடன் ஓப்பிட்டு
பெரிப்பித்து காட்டப்படுகின்றது. வெள்ளாளக் கனவான்களே, நீங்கள் வாங்கும் கூலி எத்தனை மடங்காக பெருகியுள்ளது. அதைச்
சொல்லுங்கள் முதலில். உங்கள் கூலியுடன் ஒப்பிடும் போது, அவர்கள் பெறும் கூலி எந்தனை பங்கு சிறியது? உங்களிடம் உள்ளதைப் போன்ற கல்வீடுகளை, நீங்கள் வழங்கும் அற்ப கூலியில் அவர்கள் கட்டவாமுடியும்? உங்களைப் போல் இலட்சக்கணக்கில் சீதனம் கொடுக்க முடியுமா? உங்களிடம் உள்ள நிலம், எப்படி அவர்களிடம் இல்லாமல் போனது? உங்கள் கல்வியை, அவர்கள் ஏன் பெற
முடியவில்லை? யார் எல்லாம் இதற்கு தடையாக
இருந்தனர், இருக்கின்றனர்? உங்களுடைய கமக்காரச் சாதி வாழ்க்கையை, அவர்கள் பெறமுடியாமைக்கு காரணம் என்ன?
அடித்துத் துன்புறுத்தி வேலைவாங்கவில்லை என்பதும், கூலியின்றி அவர்கள் வேலை செய்யவில்லை என்ற வாதங்கள்
நகைப்புக்குரியது. உண்மையில் இவை அங்கு காணப்பட்டவை தான். பல தொடர்ச்சியான
போராட்டங்களின் பின்னாக, காலத்தின் நிமித்தம், அடிமைக் குடிமைகள் என்ற சாதிய அடக்குமுறைகள் கணிசமாக தகர்ந்து
போனது. இருந்தபோதும் சாதியம், காலாகாலமாக
நியாயமான கூலியை வழங்கவில்லை. ஏன் அவர்கள் சுயமாக இருக்கவும் அனுமதிக்கவில்லை.
இன்னவேலைகள், இப்படித்தான், இந்த சாதிய நிபந்தனைக்குள் தான், தமக்கு சேவை செய்யும் வகையில், தமக்கு கட்டாயம் செய்யவேண்டும் என்ற சாதி நியதிகளுக்கு
நியமங்களுக்கும் உட்பட்ட ஒரு சாதிய சமூகமாக இருந்தது, இருக்கின்றது. இதை மீறிய போது அடிக்கப்பட்டனர், கொல்லப்பட்டனர். பெண்கள் 'கற்ப"ழிககப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. தாழ்ந்த
சாதிக்காக போராடிய வெள்ளாளரை விதிவிலக்க விடப்படவில்லை.
இது தான் கிடுகுவேலி கட்டி வாழும் யாழ்ப்பாணிய பனங்கொட்டை
சுப்பிகளின் உயர்சாதிக் கலச்சாரமாகும். உங்கள் செத்த வீட்டில் பறை அடித்தே
ஆகவேண்டும் என்பது சாதிய நியதி. தாங்கள் கொடுப்பதை மறுபேச்சின்றி கைகட்டி வாங்கி
செல்லவேணடும் என்பது சாதிய நியதி. இதற்கு பின்னால் சாதிய ஆதிக்கமும், சாதிய வன்முறையும் கொடிகட்டிப் பறந்தது. இது தான் இன்றைய புலிகள்.
யாழ் சாதி மரபுக்கு வெளியில் அதன் பாசிசம் கட்டப்படவில்லை.
1960 களில் எழுந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டங்கள், யாழ் சாதிய கலாச்சாரத்தின் மூலவேரை அசைத்து பலவற்றை உதிரவைத்து.
இதனால் சில சாதிய அடிமை உறவுகள் தகர்ந்தது அல்லது நெகிழ்ச்சி கொள்ளவைத்தது. இந்த
எல்லைக்குள் இணங்கிப் போகும் அரசியல் போக்குகள், தாம் சாதி பார்ப்பதில்லை என்று காட்டிக் கொள்வது சாதியத்தின்
தொடர்ச்சியான அதே வக்கிரம் தான்.
இங்கு யாழ் கலாச்சாரம் வெள்ளாடிச்சி வெள்ளாளனை இனம் கண்டு தேடிக்
காதலிக்க முடிகின்றது. இது புறநானூறு கண்ட காதலோ! சாதியம் பார்ப்பதில்லை என்று
தம்மைத்தாம் விளம்பரம் செய்பவர்கள், அகமண முறைக்குள் திருமணத்தையும் அதன் நீட்சியையும் தக்கவைக்க
முடிகின்றது. இதை தமிழ் கலாச்சாரமாக உயர்த்திப் பீற்றிக் காட்ட முடிகின்றது. இந்த
நாவலில் வரும் அமிர் முதலில் காதலித்த பெண் சாதி குறைந்தவள் என்பதால், மற்றொரு சாதி குறைந்த ஒருவனால் கொல்லப்பட்டு விடுகின்றாள். இது
யாழ் சாதிய வழக்குக்கு உட்பட்டதே. இது யாழப்பாண சாதிக் கலாச்சாரத்தின்
அகமணமுறையில் சர்வசாதாரணமானவை. வேறுசாதியை காதலிக்கலாம், வைப்பாட்டியாக வைத்திருக்கலாம், ஆனால் குடும்பமாக அகமணமுறைக்குள் வைத்திருக்க முடியாது.
இந்த முன்னாள் காதலி கரையாடிச்சி நர்த்தனா பற்றி வெள்ளாளன் அமிர் 'நான் உயர் சாதி. அவள் பெற்றோர் கடற்றொழிலாளர். அவர்கள் அதை
விரும்பவில்லை." என்கின்றான். வெள்ளாடிச்சி காதலி ஜீவிதா கேட்கின்றாள்
அப்படியாயின் 'உங்கள் பெற்றோர் குறைந்த குலப்
பெண்ணை விரும்பமாட்டார்கள் என்ற காரணத்துக்காகவா?" என்று கேட்க 'ஆம்"
என்கின்றான் வெள்ளாளன் அமிர் அதே உணர்வுடன். இங்கு அவளைக் கொன்றதன் மூலம், அமிருக்கும் பெற்றோருக்குமிடையிலான சாதிய போராட்டம் பேசப்படாது
தவிர்க்கப்படுகின்றது. இங்கு அவளைக் கொன்றதைப்பற்றி நாவல் எதைச் சொன்னாலும், உயர் சாதிய அகமண முறைதான் அவளைக் கொல்கின்றது. இதன் மூலம்
கூட்டணியின் அகிம்சை அரசியல், சாதி
பார்ப்பதில்லை என்ற அரசியல் எல்லாம் பாதுகாக்கப்படுகின்றது. பெற்றோருடனான சாதிய
வாதம், அமிரின் மறுவாதம் இங்கு சாதிபற்றி
இடம்பெறவேயில்லை. கோமணக் குண்டி வெள்ளாளன் பற்றி பேசும் அமிரின் சாதியம், அதைப் பேசி அம்பலமாவதை தடுக்கின்றது. புலிகள் தாம் மட்டும், தாம் விரும்பியவாறு தேசியம் பேசுவது போல், அமிர் தான் வரையறுத்த எல்லைக்குள் சாதியம் பற்றி கதைக்க முடிகின்றது. அமிரின் தந்தை தமிழரின் அரசியல்
ஆதிக்கம் பெற்ற கூட்டணியின் சார்பான யாழ் மேயர். இவர் சாதிய அகமணத்தை தாண்டி
திருமணத்தை ஏற்கவில்லை என்ற சூக்குமம் தெளிவாக உணர்த்தப்படுகின்றது. அதனால்
நர்த்தனா கொல்லப்பட, வெள்ளாடிச்சி ஜீவிதா
காதலியாகின்றாள். இதைக் கூட்டணியைச் சேர்ந்தவரான தாழ்ந்த சாதியைச் சேர்ந்த செல்லன்
கந்தையா யாழ் மேயராக முனைந்த போது, அண்மையில் நடந்த உண்மைக் கதையும் எம் எதார்த்ததில் உள்ளது.
மகனின் இந்த நிலையை ஏற்க மறுக்கின்ற யாழ்ப்பாணத்து சாதி அரசியலே
இது. யாழ்ப்பாணத்து சாதிய அகமணமுறை கலாச்சாரத்துக்கு விலக்காக வரும் காதல், சினிமா பாணியில் அவளை கொன்றுவிடுவதன் மூலம், சாதி அரசியல் அத்துடன் முடிந்து விடுகின்றது. இதன் மூலம் தான்
சாதிபார்ப்பதில்லை என்ற, சாதி அரசியலைச் செய்ய முடிகின்றது.
வெள்ளாளனின் கோமணத்தைப் பற்றி அரசியல் பேசி சாதியைப் பாதுகாக்க முடிகின்றது. புலி
வெள்ளாடிச்சியான ஜீவிதாவின் சாதியம், சாதியமாகவே இருப்பதை இந்த வாதம் தெளிவாக உறுதிசெய்கின்றது. 'உங்கள் பெற்றோர் குறைந்த குலப் பெண்ணை விரும்பமாட்டார்கள் என்ற
காரணத்துக்காகவா?" என வினவியதற்கு 'ஆம்" என்றதன் ஊடாக, என்னை உங்கள் குடும்பமும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை அவள் தெளிவாக
உணர்த்திவிடுகின்றாள். இங்கு அமிர் அவளின் சாதியையும் சேர்த்தே காதலிக்கின்றான்.
இந்த சாதிய அரசியல், இதற்கு மேல் சாதியம் தகர முடியாது
என்பதை தெளிவாக சொல்லுகின்றது.
அமிர் காதலியான வெள்ளாடிச்சி ஐPவிதா பள்ளி நதியா பற்றி 'புருசன் இருக்க கள்ளப் புருசன் பிடிக்கப் பார்க்கிறாள் தேவடியாள்.
சமூகவிரோத சின்னம். தந்திக் கம்பத்தில் கட்டிச் சுடவேண்டியவள்." இங்கு ஐPவிதா ஒரு புலியாக, கொலைகாரியாக, யாழ்ப்பாணியமாக, சாதியமாக எல்லாம்
வெளிப்படையாகவே உறுமுகின்றது. வெள்ளாடிச்சியான ஆவரங்கால் அன்ரி 'அந்த பெட்டை நாய்க்கு அழகான பெரியசாதி மாப்பிள்ளை
தேவைப்படுகின்றது" என்கின்றாள். இந்தளவுக்கும் நதியா அமிருடன் கதைப்பதால்
ஏற்படும் சாதிய எரிச்சலே இப்படி வெளிப்படுத்துகின்றது. வெள்ளாடிச்சியான ஆவரங்கால்
அன்ரி 'தம்பி அமிர், வாவன் தம்பி உண்டியல் குலுக்குவம். பாவம் கறுப்புநரிப் பெடியள்
சிங்கள ஆமியோடு அடிப்பட்டுச் சாகுதுகள். இப்படிச் சேர்த்து அனுப்பினால்தானே.
பெடியள் விட்டுக்கொடுக்கமால் போர்புரியுங்கள்" என்ற போது மௌனமாக அதை
அங்கீகரிக்கின்ற அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. இப்படி வெள்ளாளத்தனம், தனது சொந்த சாதிப்புத்தியைக் காட்டுகின்றது.
இந்த பொறாமை வெள்ளாடிச்சி ஐPவிதாவை உளறவைக்கின்றது. 'நீங்கள் அந்த எழிய சாதி பக்கந்தான். சொந்த பந்தங்கள் அறிந்தால்
காறித் துப்பும்" என்கின்றாள். யாழ் கலாச்சாரமே அப்பத்தமாகிவிடும் என்ற சாதிய
அச்சம், இப்படி கூச்சலிடவைக்கின்றது. இதற்கு
துணையாக மற்றொரு வெள்ளாடிச்சி பூமா '.. அவள் சின்ன பெட்டை. பிறகு உங்களுக்கு மட்டுமில்லை எங்கள் சாதிசனம்
எல்லாத்துக்கும் கெட்டபெயர்தான் வரும். நீங்கள் இனிமேலும் கில்லாடி வீட்டில்
வசிப்பதை நான் விரும்பவில்லை." எப்படி இருக்கின்றது இந்த சாதிய வக்கிரம்.
இவர்கள் தான் நீதி கோரி போராடுகின்றார்கள். எந்த நீதிக்காக? இதை ஏற்றுக்கொண்டு அமிர் வீடு மாறுகின்றான். இவர் தான் சாதி
பார்ப்பதில்லை என்கின்றான். சாதிய சுத்துமாத்தைத் தவிர இது வேறு எதுவுமல்ல.
இங்கு ஜீவிதா கடைசியில் புலியைவிட்டு வெளிவந்த போதும் கூட தான்
வெள்ளாடிச்சி என்ற அடையாளத்தை அவள் மாற்றிவிடவில்லை. வெள்ளாளர் சமூக இருப்பு
சரியானது என்பதால், வெள்ளாளர் அகமணமுறையில் அவர்கள்
இணைகின்றனர். இந்த சாதிய அகிம்சைவாதிகள், இவர்கள் தங்கி வாழ்ந்த வெள்ளாடிச்சியான ஆவரங்கால அன்ரியுடனும்
சாதிபற்றி உரையாடுகின்றனர். ஆவரங்கால் அன்ரி 'தம்பி அமிர், உம்மைப் பற்றி
எனக்கு நல்லாகத் தெரியும். நல்ல குலம் கோத்திரத்திலே வந்தனீர்." என்கின்றார்.
இந்த சாதிய பெருமையும் அது சார்ந்த யாழ்ப்பாணிய சாதிய வறட்டு வக்கிரம் சார்ந்து
வெளிப்படும் வெள்ளாள மதிப்பீடு பற்றி 'அமிருக்கு அன்ரியின் வார்த்தைகள் சுவைத்தன" எப்படி
இருக்கின்றது. இவர் வெள்ளாளனின் கோமணக் குண்டி பற்றி கதை சொல்லுகின்றார். இப்படி
வெள்ளாளனாகவே வாழும் இந்த கதாநாயகன் மூலமாக, சாதி இருப்பை தக்கவைக்கும் அரசியல் உள்ளடக்கம் நுணுக்கமானது, நுட்பமானது.
அமிரின் மதிப்புக்குரிய காதலியாகிய வெள்ளாடிச்சி ஜீவிதாவிடம் அமிர்
'ஜீவிதா உயர்சாதி என்றால் கொம்பா? லண்டனிலே வெள்ளைக்காரன் எங்கள் ஆட்களுக்குத் துப்புகிறது
தெரியுமெல்லே. உயர்சாதி தாழ்ந்த சாதி என்றா பார்த்துத் துப்புகிறான்?"
என்று வாதிடும் அமிரின் சாதி
அரசியல், மிகமிக நுட்பமானது. சாதியை ஒழித்துக்கட்ட
விரும்பாத, காலத்துக்கு ஏற்ப நெகிழ்சிப் போக்கை
அடிப்படையாக கொண்டே இங்கு சாதி பாதுகாக்கப்படுகின்றது. முன்னம் நாம் பார்த்ததுபோல், வெள்ளாளனின் கோவணத்தை பேசி சாதியை பாதுகாத்ததைப் பார்த்தோம்.
இந்த வாதத்துக்கு பதிலளித்த ஜீவிதா 'தமிழ் கட்சி கோமான் வன்னியசிங்கம் தான் முதலில் சமபந்தி போசனம்
வைத்து, அந்தச் சாதிக்கு பரிந்து பேசியவர்.
நீங்களும் அவர்கள் கொடியில் வந்த அரசியல் சாதிதானே? அந்த எழியவளோடு சிநேகிதம் வைக்கிறதென்றால் நான் பிரிந்து
போகிறதைவிட வேறுவழி எனக்கு இல்லை" இந்த வாதத்தின் எல்லைக்குள் தான் அமிரின்
சாதியம் எல்லைப்படுகின்றது. அவள் தான் தனது சாதிய அடையாளத்துடன் அமிரை திருமணம்
செய்கின்றாள். அகமணமுறைக்குள் வெள்ளாளராகவே அவர்கள் வாழ்வை அமைத்துக்
கொள்கின்றனர். இவர்கள் தான் நீதிக்காக போராட வந்ததாக கூறுகின்றனர். மீண்டும்
யாழ்ப்பாணம் செல்லுகின்றனர். எதற்காக?
சமபந்தி போசனம் என்ற கோரிக்கை கூட்டணியால் முதலில் வைக்கப்பட்டது
என்பதே அப்பட்டமான அரசியல் பொய். சமபந்திபோசனம், சம ஆசனத்துக்கான போராட்டம் 1930 இல் தமிழ் அரசியல் கட்சிகளை எதிர்த்து இதே யாழ் மண்ணில்
நடைபெற்றது. இதை நாம் மேலே பார்த்தோம். சமபந்தி போசனம் என்ற எல்லைக்குள் சாதியத்தை
எப்படிக் கையாண்டனரோ, அந்த எல்லைக்குள் சாதியம்
மட்டுப்படுத்தப்படுகின்றது. இதுவும் சாதிய ஜீவிதாவுக்கு உடன்பாடானதல்ல. 1960 களில் நடந்த சாதியப் போராட்டம் தமிழரசுக் கட்சியியினாலும், தமிழ் காங்கிரஸ்சாலும் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இதை சீர்செய்யவும், சாதிய போராட்டத்தைப் பிளக்கவும் மட்டுப்படுத்தப்பட்ட எல்லைக்குள்
காலத்துக்கு ஏற்ற சாதி சீர்திருத்தத்தை ஏற்படுத்தினர். இந்த எல்லைக்குள் சாதிய
அரசியல் பாதுகாக்கப்படுகின்றது. தமிழ்தேசிய வலதுசாரிய அரசியல் வக்கிரமான
வன்முறையூடாக கையாளும் கொலை வெறியாட்டத்தை, அதன் சீரழிந்த பக்கத்தை தாழ்ந்த சாதியமாக காட்டுவது சுத்துமாத்து
அரசியலாகும்.
இங்கு ஒடுக்கப்பட்ட சாதிகள் இணக்கமாக இணங்கிப் போகும் போக்கையும், அடங்கிப் போகும் பண்பாட்டையே 'யாழ்ப்பாண தர்மத்தின் நாதம்" என்கின்றான் வெள்ளாள அமிர்.
அமிர் முதலில் தங்கி வாழ்ந்த வீட்டுக்காரனின் மனைவியான பள்ளி நதியா, யாழ் வெள்ளாளன் அமிருக்கு உதவுவதையே 'யாழ்ப்பாண தர்மத்தின் நாதம்" என்கின்றான். இதை அமிர் 'உங்கள் இருவரிலும் நதியா வயதில் குறைந்தவள். படிப்பில் குறைந்தவள்
அனுபவத்தில் குறைந்தவள். ஏன் சாதியில் கூடக் குறைந்தவள். ஆனால் உலகத்தை
உணர்ந்தவள். நியாய அநியாயம் புரிந்தவள். கலாச்சாரத்தின் குறியீடூ அவள்.
வாழ்க்கையின் பெருமை சிறுமைகளைத் தெரிந்தவள். ஆபத்தில் உதவத் தெரிந்தவள்.
யாழ்ப்பாண தர்மத்தின் நாதம் அவள்." யாழ்ப்பாண கலாச்சார குறியீடு தான் என்ன? யாழ்ப்பாண தர்மம் தான் என்ன? சாதிய அவலத்தால் கையேந்தி வாழ்வதை தானாக அதை சாகா நடைமுறையாக
ஏற்றுக் கொள்வது தான் அவள் யாழ்ப்பாண தர்மத்தின் நாமமாகின்றாள். வெள்ளாளனுக்கு இது
ரசனைக்குரிய ஓன்றாகவுள்ளது.
யாழ்ப்பாண தர்மத்தின் நாதமாக உள்ள நதியா, தான் இந்தியா தப்பிச் செல்ல உதவியை அமிரிடம் கோரிய போது 'மன்னித்துக்கொள் நதியா. கில்லாடி மட்டுமல்ல எங்கள் சாதி சனம்கூட
என்மீது வசைபாடும்." எப்படி இருக்கின்றது. சாதிக்குள் வாழும் வெள்ளாள நரிகள்
தான், தர்மம் பற்றி பேசுகின்றனர். நீதி
பற்றி புலம்புகின்றனர்.
யாழ் கலாச்சாரம் என்பது, தர்மம் என்பது சாதியம் தான். இதற்கு வெளியில் ஆதிக்கம் பெற்ற
மாற்றுக் கலாச்சாரம், தர்மம் கிடையாது. இந்த
கலாச்சாரத்தின் பெருமைகளை அங்கீகரித்து, தனது சிறுமைகளுக்குள் ஒடுங்கி ஒதுங்கி வாழ்வதைத்தான் யாழ்ப்பாணத்து
தர்மம் என்கின்றனர். வெள்ளாளர் சாதிய மேன்மையை ஏற்றுக்கொண்டு வாழ்வதைத்தான், அமிர் தனது சாதியக் கண்ணோட்டத்தில் நியாய அநியாயம் தெரிந்த பெருமை
சிறுமைகளைத் தெரிந்தவள் என்கின்றான். ஆபத்தில் உதவத் தெரிந்தவள் என்பதன் ஊடாக, சாதி உயர் அதிகாரத்தில் இருப்பவனுக்கு, கீழ் சாதிகள் உதவுவதன் அவசியத்தை மனுதர்மப்படி விளக்கிவிடுகின்றது.
இதில் வேடிக்கை என்னவென்றால் தனது சொந்த காதலியை விடவும், மற்றொரு வெள்ளாடிச்சியான நீதிக்கும் நியாயத்துக்குமாக போராட லண்டன்
வந்த பூமாவை விடவும், அதிலும் ஒரு இளம் அழகான பெண்ணை
உயர்த்திக் காட்டுவது இங்கே நிகழ்கின்றது. எங்கே என்றால் சாதிய அமைப்புக்கு அவள்
கட்டுப்பட்ட ஒரு நிலையில் உயர்த்தப்படுகின்றாள். அந்தப் பள்ளியின் சாதிய அவலத்தை
எங்குமே அமிர் பேச முற்படவேயில்லை. நதியா என்ற பள்ளி யாழ்ப்பாணிய வெள்ளாளரின்
கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வதால் தான், அந்த பெண்ணை தனது சாதிப் பெண்ணை விட புகழ்கின்றான்.
இந்த வெள்ளாளக் கோமாளிகள் அடிக்கும் கூத்துக்கு அளவேயில்லை. நதியா
தனது சொந்த ஊரில் சாதிய அடிமைத்தனத்தில் சிக்கிக் கிடந்த வாழ்வைப்பற்றி
குறிப்பிடும் போது 'அது வீடில்லை, அது ஒரு ஒற்றை அறை ஒலைக் குடிசை. படுக்கை, படிப்பு, சமையல், ஓய்வு எல்லாம் அந்த ஓரே அறையில்தான். அந்தக் குடிசை அமைந்திருந்த
நிலங்கூட ஒரு கமக்காரனுக்குத்தான் சொந்தம். அரசினால் கைவிடப்பட்ட சாதி நாங்கள்.
அது தெரியுமோ உங்களுக்கு" என்று நதியா கேட்க அமிர் 'அதைவிடு நதியா.." என்கின்றான். இது தான் வெள்ளாள அரசியல்.
சாதி பார்ப்பதில்லை என்பதும், ஏதோ தமிழ்
மக்களுக்கு கிழிப்பதாக புடுங்குவதும், நீதி நியாயத்துக்காக புலம்புவதும், உண்மையில் ஊரையும் உலகத்தையும் நடிப்பதற்கும் ஏமாற்றவதற்கும்
வெளியில் எதுவுமல்ல. இதில் ஒரு சூக்குமத்தை வெள்ளாளர் புகுத்திவிடுகின்றனர்.
அரசினால் கைவிடப்பட்ட சாதி நாங்கள்" நல்ல நகைச் சுவை தான். ஏதோ சிங்கள
அரசுதான் சாதியை பாதுகாப்பதாக வெள்ளாளன் வலிந்து கூறமுனையும் கோமளித்தனம்
நிகழ்கின்றது. அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சில அடிப்படைகளை ஏற்படுத்த முனைந்த
போதும் சரி, அந்த மக்கள் போராடிய போதும் சரி, அதை முன்னிலையில் நின்று எதிர்த்தவர்கள் தமிழ் தலைவர்கள் தான்.
வரலாற்றை இருட்டில் யாரும் மறைக்கமுடியாது.
அடிநிலைச் சாதிகள் இருப்பதை உயர்சாதியிடம் கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் உயர்சாதிகள் அதை எடுத்துக்கொள்ளலாம். இது இந்து மனுதர்ம விதி. பள்ளி
நதியா வெள்ளாளனின் சமூக இருப்பை ஏற்று, அந்தக் கலாச்சாரத்தை பேணிவாழ்வதால் தன்னிடம் இருப்பதை இல்லாத உயர்சாதி
வெள்ளாளன் அமிருக்கு கொடுக்க வேண்டும். அதை அவளே சாதி கலாச்சார அடிப்படையில்
விரும்பிச் செய்ய வேண்டும். அதை அவள் செய்கின்றாள். அதை அவளைக் கொண்டு விளக்க
வைக்கப்படுகின்றது 'இல்லாத போது கை ஏந்திப் பழகிய நான், இருக்கும் போது கொடுப்பது தான் முறைமை" இது தான் மனுதர்மம்.
இதுவல்லவோ யாழ்ப்பாண சாதிய தர்மம். கையேந்தி வாழ்ந்த நாம், சொத்து சேர்க்கக் கூடாது. இது வெள்ளாளன் விதித்த சாதிய விதி கூட.
அப்படி உள்ள நிலையில் இருப்பதை, இல்லாத
வெள்ளாளனுக்கு கொடுத்துவிட வேண்டும். சொந்த சாதி சனத்துக்கு கூட கொடுக்கக்கூடாது. 'கை ஏந்திப் பழகிய" என்கின்றாளே, அப்படியென்றால் அவர்கள் உழைக்கவில்லையா? உழைப்புக்கு ஏற்ற கூலி ஏன் கிடைக்கவில்லையா? வெள்ளாளன் தானதர்மம் செய்ய, வானத்தில் இருந்து செல்வம் வீழ்ந்ததா? இல்லை சாதியைச் சுரண்டி வாழ்ந்தவன் வெள்ளாளன். அதனால் அவர்களிடம்
அவர்கள் கையேந்தினர், கையேந்துகின்றனர்.
இந்த பள்ளி நதியா மூலம் தமது சாதிய பெருமையை சொல்ல வைக்கும்
வெள்ளாளப் புத்தி சும்மா சூம்பிக் கிடக்கவில்லை. 'அமிர் எங்களின் இழிய யாழ்ப்பாணத்துப் பெடியள் மாதிரியில்லை.
கெட்டபழக்கம் எதுவுமில்லை. வீட்டிலே இருந்தால் ஏதோ வாசித்தபடி இருப்பார் அல்லது
ஆங்கிலச் செய்தி கேட்பார். வீட்டை விட்டு வெளியேறினால் நூல்நிலயத்துக்கு மட்டும்
போவார். அவருக்கு என்னுடைய சமையலிலே நல்ல விருப்பம். என்னிலையும்
அப்படித்தான்" என்கின்றாள். 'எங்களின் இழிய யாழ்ப்பாணத்துப் பெடியள்" மாதிரி இல்லை, அது என்ன? இது யாழ்ப்பாணத்து படித்த
உயர்மேட்டுக் குடிகளின் சாதிய சமூகப் பார்வை. நல்ல பெடியன், கூடாத பெடியன் பற்றி அருவருக்கத்தக்க சாதிய மதிப்பீடு. இங்கு இழிய
என்பது, தாழ்ந்த சாதியைக் குறித்து
மையப்படுகின்றது. அந்த வகையில் வெள்ளாளப் பெடியள் உயர்வானவர்கள், தாழ்ந்த சாதிப் பெடியள் இழிவானவர்கள் என்ற அடிப்படை இதற்கு
மறைமுகமாகவும் குத்தலாகவும் சொல்லப்படுகின்றது.
நதியாவை பார்க்கிலும் இரண்டு மடங்கு மூத்த ஒருவனான கில்லாடி, அவளை ஏமாற்றி திருமணம் செய்கின்றான். அவன் முன்னாள்
ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் ஒரு பிரதேசப் பொறுப்பாளன். இப்படி அசிங்கப்படுத்திய
பின், அந்த கில்லாடி லண்டனில் வசித்த
வீட்டு முகவரியை, புரட்சி வீதியாக காட்டி
இழிவுபடுத்தப்படுகின்றது. அந்தளவுக்கு வலதுசாரிய வக்கிரம், சாதியமாகவே தொங்குகின்றது. மார்க்சியம் முடுக்கியது என்கின்றனர்.
இந்த கில்லாடி நாட்டில் வெள்ளாளர்களை தேடித்தேடி கொலை செய்ததாக இழிவுபடுத்தி
காட்டப்படுகின்றது. இந்த பள்ளன் கில்லாடியை பள்ளி நதியா ஏன் வெறுக்கின்றாள்
என்றால், வெள்ளாளரை அவன் கொலை செய்தபடியால்
தான். இப்படி ஒரு சாதி வெள்ளாளன் மட்டும் தான், கற்பனை பண்ணமுடியும். இதனால் தான் வெள்ளாளன் அமிர் 'யாழ்ப்பாண கலாச்சார குறியீடு" இதுவல்லோ என்கின்றான். அவளைப்
புகழ்ந்து 'யாழ்ப்பாண தர்மத்தின் நாதம்"
என்கின்றான்.
இந்தளவுக்கு தனது கணவன் தூள் வியாபாரம் செய்து இலட்சக்கணக்கில்
பணம் வைத்திருந்ததையோ, தூளை வீட்டில் வைத்திருந்ததையோ, அந்த சமூகவிரோதச் செயலையோ நதியா வெறுக்கவில்லை. மாறாக யாழ் சாதியக்
கலாச்சாரத்தை மீறியதால், உயர்சாதிகளை கொன்றதற்காகவே
வெறுக்கின்றாள். சாதி அரசியல் தலைவிரி கோலமாகி, நடுவீட்டில் நின்று ஆடுகின்றது. ஒரு கிரிமினலாக துணை போய் வாழ்வதோ, அவன் மனைவியாக வாழ்வதும் கூட அவளுக்கு பிரச்சனையில்லை. கடந்த
காலத்தில் இயக்க மோதலாக நடந்ததாக கூறும் உயர்சாதிக் கொலைகள் தான், அவளுக்கு பிரச்சனை. அதுவும் உயர்சாதி வெள்ளாளரை கொல்லலாமோ? மனுதர்மம் படி பார்ப்பானைக் கொல்வது பாவம் என்ற விதி
உள்ளடங்கியுள்ளது. இப்படி உயர்சாதியம் புளுத்து, தனது ஒழுக்கத்தை தனது இழிவை பறைசாற்ற முனைகின்றது.
அவள் கில்லாடியை வெறுக்கின்றாள், பிரிகின்றாள். அதை அவள் எப்படி வெளிப்படுத்துகின்றாள் என்பதே, மற்றொரு சாதியம் தான். அவள் தனது கணவனுக்குத் தெரியாமல், வெள்ளாளன் அமிரின் துணையுடன் நாட்டைவிட்டு துறவறம் பூண
இந்தியாவுக்கு ஒடுகின்றாள். அதற்கு உயர்சாதி வெள்ளாளன் தனது அப்பளுக்கற்ற சாதிய
நேர்மையுடன் உதவுகின்றான். இது சாதியத்தின் எல்லைக்குள் உயிர்வாழும், யாழ் சாதிய வழக்காகும். அவள் மறுமணம் செய்வதைப் பற்றியோ, ஒரு மோசமான ஒருவனுடன் வாழ்வதைவிடுத்து மற்றொருவனுடன் வாழ்வதையோ, உயர்சாதிய ஆணாதிக்கவாதம் சார்ந்த யாழ் கலாச்சாரம் அங்கீகரிக்கவில்லை.
மாறாக இப்படிப்பட்ட பெண்களுக்கு துறவறமே மேலானது என்பதே, யாழ் சாதிய ஆணாதிக்க கலாச்சாரத்தின் எல்லைப்பாடாகும். மற்றொரு
திருமணத்தை அதே சாதியில் அல்லது உயர் சாதியிலும் கூட யாழ் கலாச்சாரம்
அனுமதிக்காது. எனவே சாதிய ஆணாதிக்க துறவறம் புகுத்தப்படுகின்றது. துறவறத்தை
இந்தியாவில் உள்ள அன்னை திரேசாவின் மடத்துக்கு அனுப்பிவிடுவதன் மூலம், சாதியமும் அதற்குள் ஒளித்துக் கொள்கின்றது. அன்னை திரேசா மடம் சாதி
பார்க்காத தூயமடமோ! அன்னை திரேசாவின் சேவையும், அவரின் புனிதமும் உண்மையில் போலியானதும் இழிவானவையுமாகும். இந்த
விமர்சனத்தில் அதை விட்டுவிடுவோம்.
நதியாவை துறவறம் செய்வித்ததன் மூலம், அவளை சாதிய அடிப்படை உள்ளடகத்தில் இருந்து புனிதப்படுத்திவிடுவது
நிகழ்கின்றது. மறுமணம் மறுப்பு, சாதிய அகமணம்
என்ற எல்லைக்குள் மனித உணர்வுகள், யாழ் கலாச்சாரமாக
சிதைந்து மலடாகிப் போகின்றது. எதார்த்தம் சார்ந்த இயல்பு வாழ்க்கை என்பது, யாழ் கலாச்சாரத்துக்கு எதிரானதாகவே பார்க்கப்படுகின்றது.
இந்த நதியா பற்றி வெள்ளாடிச்சி ஆவரங்கால அன்ரி 'நாட்டுப் பீத்தல் நாய்க்குக்கூட, நல்ல சாதிச் சடை நாய் தேவைப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் கூலிப்
பிழைப்புச் செய்ததுகள் லண்டன் வந்ததும் அவைக்கு எங்கள் சாதிசனத்தின் நடுப்பந்தி
தேவைப்படுகிறது" என்று வெள்ளாடிச்சி வெகுண்டு எழுந்த போது, வெள்ளாளன் அமிருக்கும் சரி, நீதி நியாயத்துக்காக போராடும் இரண்டு வெள்ளாடிச்சிகளும் மௌனமாக, யாழ் கலாச்சார மரபுக்கு இணங்க அதை இயல்பாக ஏற்றுக் கொள்கின்றனர்.
யாரும் இந்த அநியாயத்தை கண்டு குமுறி வெடிக்கவில்லை. இந்த ஆவரங்கால் அன்ரி அமிரின்
உயர்சாதி மிதப்பை கூறிய போது, அது அமிருக்கு
சுவைத்ததல்லவா. இப்படி சாதியம் ஒன்று கூடி யாழ் கலாச்சாரத்தை பாதுகாக்கின்றது.
இந்த ஆவரங்கால் அன்ரியின் மகனை ஒரு இயக்கம் கழுத்தை வெட்டிப் போட்ட நிகழ்வை கூறிய
அன்ரி, அதைச் செய்தவன் 'லண்டனில்தான் பெரிய வீடு. புதுக் கார். யாழ்ப்பாணத்தில்
கொள்ளையடித்த தங்க நகை அணிய உலாவுகின்றான். கடத்தி வந்த வேறுசாதி வடிவான பொதுநிறப்
பொம்பிளை, பிள்ளைகுட்டி எல்லாத்தோடும் பெரிய
மனிதனாக வாழ்கிறான்." என்ற போது அமிருக்கு கோபம் வருகின்றது. இதே அன்ரி
சாதியை இழுத்து, யாழ் கலாச்சாரத்தின் சின்னமான அமிர்
கருதிய பள்ளி நதியாவை அவமானப்படுத்திய போது வராத கோபம், அன்ரியின் மகனுக்கு நடந்ததையிட்டு வருகின்றது.
அமிர் கூறுகின்றான் 'மண்ணின் மைந்தன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்" என்கின்றான்
... 'நீதி, நியாயங்கள், தர்மங்கள் செத்து மடிந்த
பூமியாக்கப்பட்டுள்ளது. அது கொடியவர்களின் சித்திரவதைக் கூடமாக, கொலைக்கூடமாக, சுடலைமண்ணாக
மாறியுள்ளது." என்கிறார். அன்ரியின் சாதிய இழிவாடல்களுக்கு வராத கோபம், சாதிய கொலையாக காட்டிய போது வருகின்றது. இங்கு அன்ரியின் மகனைக்
கொன்றவன் குறைந்த சாதிக்காரன் என்பதும், அவன் அழகான வேறு சாதிப் பெண்ணை கடத்தி வந்ததாக கூறப்படுகின்றது.
அவர்கள் ஆடம்பரமாக வாழ்வதாக வேறு சாதிய வெப்பாரம் கொட்டி தீர்க்கப்படுகின்றது.
யாழ் கலாச்சாரத்தின் இழிவாடல்கள் எல்லாத் தளத்திலும் பொதுவானவை. பொதுவாக இன்று
நாட்டில் நடக்கும் கொலை கொள்ளை பாலியல் வன்முறையை, புலி அல்லாத மற்றைய இயக்கம் மீது கூறுவதே யாழ் பண்பாடாக
கலாச்சாரமாக அறிவாகவுள்ளது. அதேபோல் குறைந்த சாதிகள் மேல் இழிவாடுவது, குற்றம் சாட்டுவது வெள்ளாள இயல்பாக வழக்காக உள்ளது. புலம்பெயர்ந்த
நாடுகளின் தாழ்ந்தசாதிகள் வாழும் வாழ்வை இழிவுபடுத்துவது இந்த நாவலின் மற்றொரு
நோக்கமாகின்றது. நதியா பள்ளி என்பதால் அவள் பற்றிய அன்ரியின் மதிப்பீடும், அவள் பற்றிய குற்றச்சாட்டுகள் எல்லாம் எப்படி பொய்யானவையோ, அப்படித் தான் மகனின் கொலைக்கு சாதி குறைந்த ஒருவனை
குற்றம்சாட்டுவது யாழ் மரபின் சாதியச் தொடர்ச்சிதான். தாழ்ந்த சாதிகள் உயர்
சாதியைக் கொன்றதாக கற்பிக்கும் அரசியல், யாழ் வெள்ளாள உயர்வர்க்கங்களின் வலதுசாரிய சுத்துமாத்துதான்.
அமிரின் வெள்ளாளக் கோபம் அதை தர்க்கிக்கும் வாழ்வியல் இருப்பிடமே, ஒடுக்கப்படும் சாதிகள் வாழும் இடமாகின்றது. இந்த சுடலைமண்ணில் தான், தாழ்ந்த சாதிகள் வாழ வெள்ளாளர் அனுமதித்துள்ள இடமாகும். வெள்ளாளர்
ஆக்கிரமித்து வைத்துள்ள பூமிகளில் தான், அதுவும் வளமற்ற வறண்ட கல்லு பூமிகளில் தான் ஒடுக்கப்பட்ட சாதிகள்
வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாழ அனுமதித்தமைக்காக, உயர் சாதியினருக்கு இலவசமாக சேவை செய்யவேண்டும். இங்கு சாதிய
ஒடுக்குமுறையாகவே ஒருபுறம் அந்த மக்கள் மேல் ஏறி நின்று கொண்டு, தம் மீதான ஒடுக்குமுறையைக் கண்டு குமுறுகின்றனர். ஆனால் அதை சாதியமாக, சாதியக் கொலையாக திரித்து சிறுமைப்படுத்தி, சாதியத்தை பாதுகாக்கும் போராட்டமாக எதிர்நிலையில் மாற்றுகின்றனர்.
சாதியங்கள் உயிருடன் முரண்பாடின்றி நாவல் முழுக்க தன்னைத்தான் நிலை
நிறுத்துகின்றது. நீதி கோரி லண்டன் வந்த பூமா என்ற வெள்ளாடிச்சியிடம், ஆவரங்கால அன்ரி முறையிடும் போது 'அந்தத் தேவடியாள் நதியாதான். அவளைக் கூட்டிவந்து நடு
வீட்டுக்குள்ளே வைத்து நான் வந்த நேரம் - அவை சினிமா நடத்துகினம். நாங்கள் உந்த
எழிய சாதிகளை வீட்டுத் திண்ணையில் கூட ஏறவிடுவதில்லை. அது உனக்கு தெரியுமில்லே
பூமா" என்கின்றாள். ஆணாதிக்கம், உயர்சாதி ஆதிக்கம் அனைத்தும் எந்த வெட்க நாணமின்றி
கொப்பளிக்கின்றது. இதற்கு பதிலடியாக பதிலளிக்க முற்படும் ப+மா, சாதியத்தையே அவாவுக்கு எதிராக பயன்படுத்துகின்றாள். 'அன்ரி நீங்கள் எழிய சாதி, எழிய சாதி என்று கத்துகிறீர்கள். உங்கள் கூடப்பிறந்த தங்கையின் மகன்
ஒரு தொண்டைமானாறு கரையாரப் பெட்டையைக் கிட்டடியிலே காதல் பண்ணிக் கலியாணம்
பண்ணினவராம். லண்டன் சனம் எல்லோருக்கும் தெரிந்து குசுகுசுத்து காறித்
துப்புகினம். ..." என்ற பதில், மீண்டும் சாதியாகவே கொப்பளிக்கின்றது. இது சாதியத்தை, சாதிய எல்லையைக் கடந்து வெளிவரவில்லை. நீங்கள் என்ன திறமான சாதியா
என்று கேட்கின்ற, சாதியத்தை மேம்படுத்தி காட்டும்
போக்குத் தான் இங்கு வெளிப்படுகின்றது. இது யாழ் கலாச்சார மரபில் இயல்பான ஒன்று.
மற்றவரை மட்டம்தட்ட சாதிய கலப்பை அல்லது சாதியை இழுப்பது யாழ் கலாச்சார உயர்சாதிய
மரபாகும். உங்கடை ஆட்களுக்கை இப்படி அப்படி என்று, இழிவாடிக் சீண்டிக் கதைப்பது சாதாரணமான ஒன்றாகவே உள்ளது. இரண்டு
உயர் சாதி நபர்களுக்கு இடையில் ஏற்படும் முரண்பாட்டில் இது சர்வசாதாரணமானது.
ஒருவர் சார்ந்த பெண்ணை ஆணாதிக்க அடிப்படையில் இழிவாடுவது போல், நீ தாழ்ந்தவன் நான் உயாந்தவன் என்ற சாதிய தர்க்கவாதம், உயர்சாதிய எல்லைக்குள் சர்வ சாதாரணமானது. உயர்சாதி வெட்டிப்
பேச்சிலும், இந்த யாழ் கலாச்சார சாதிய வாதங்கள்
உண்டு. ஏன் இந்த வெள்ளாடிச்சி பூமா அமிரை நதியா வீட்டில் தங்க வைக்காமல் தடுக்க, ஜீவிதாவுடனான உரையாடலில் இந்த சாதியம் சர்வசாதாரணமாக
கொலுவேறுகின்றது. உண்மையில் சாதியம் தொடர்ந்தும், பல சாதிய பாத்திரங்கள் ஊடாக பாதுகாக்கப்படுகின்றது.
எதிர்மறையில் சாதிகுறைந்தவர்களை வருணிக்கும் போது, இந்த சாதிய அடிப்படை அப்பட்டமாக ஆதிக்கம் வகித்து முன்னுக்கு
வருகின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற கழுதைப்புலிகள் இயக்க கொலைகள் பற்றி 'எல்லாம் உயர்சாதி ஆட்களைத் தெரிந்துதான் சுட்டுக் கொன்றவன்"
என்கின்றது. இங்கு தனிநபர் சார்ந்த தனிப்பட்ட பழிவாங்கலாக இது
சித்தரிக்கப்படுகின்றது. 'எல்லாம் உயர் சாதிகாரரையும் தெர்pந்துதான்" என்ற வாதம், தமிழ் பாசிசத்தை பின்பக்கமாக பாதுகாக்கின்றது. இந்த
ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம், புலிகளால் நரை வேட்டையாட முன்னம்
கொலைகளைச் செய்ததா? புலிகள் இந்த இயக்கத்தை தடை செய்து, கொலை செய்ததைப் பற்றி இந்த நாவல் பேச மறுக்கின்றது. ஏன் அனைத்து
இயக்கத்தையும் கொலை செய்த புலிகளையும் அந்த பாசிசத்தையும், இந்த நாவல் ஏன் பேச மறுக்கின்றது? உண்மையில் அழித்தது நியாயம் என்ற உயர்சாதியக் கண்ணோட்டம் இதில்
தொங்கி நிற்கின்றது. ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற இயக்கம் வசதி கருதி ஈ.பி என்று
அழைக்கப்பட்ட போது, அதற்கு உயர்சாதிகள் தமது தேசிய
கலாச்சார கண்ணோட்டத்தில் ஈழத்துப் பள்ளர் என்று விளக்கமளித்து இழிவாடினர். தமிழ்
தேசியக் கலாச்சாரமே சாதியக் கலாச்சாரமாகவே பரிணமித்துக் கிடப்பதையே, இது மறுதலித்துவிடவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் புலிகள் என்ற
யாழ் சாதிய மேலாதிக்க பாசிச புலிகள் இயக்கத்தால் தடைசெய்யப்பட்டு அழிக்கப்பட்ட
போது, உயர்சாதிய வெள்ளாளர்களால்
அங்கீகரிக்கப்பட்டது. அதையே இந்த நாவலும், தாழ்ந்த சாதிகளை மீண்டும் இழிவுபடுத்தி செய்கின்றது.
புலிப்பாசிசத்தை பின்பக்கமாக ஆதரிக்கின்றது.
ரெலோவை அழிக்க அன்று கண்ட இடத்தில் புலிகள் சுட்டுக்கொல்லத்
தொடங்கிய போது, தெல்லிப்பழை சந்தியில் இரண்டு ரெலோ
உறுப்பினரை உயிருடன் புலிகள் எரித்தனர். அப்போது அண்மையில் கொல்லப்பட்டவரும், பிரபாகரன் மாமனித பட்டம் வழங்கிய சிவமகராஜா அதை ஆதரித்தவர். இந்த
கொலை வெறியாட்டத்தை நடத்திய புலிகளுக்கு, உயிருடன் எரிந்து கொண்டிருந்த நெருப்பு வெக்கையை எதிர்கொள்ள
கொக்கோகோலாவை உடைத்து கூலாகக் கொடுத்தவர். பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பணத்தில், அதை முறைகேடாக பயன்படுத்தி இதை பல நூறு தரம் செய்தவர். இவருக்கு
மாமனித பட்டம் வழங்கியதன் மூலம், புலிகள் சமூக
விரோதிகள் என்பதை பிரபாகரன் மறுபடியும் உறுதி செய்கின்றார். மாமனித பரிசு
அதற்குத்தான் உதவுகின்றது. அன்று அந்த நிகழ்ச்சி நடந்த தெல்லிப்பழை சந்தியில், ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் இவை நடந்தது. குறித்த கதை
ஆசிரியரும், அங்கு அந்தச் சூழலுக்கு வெளியில்
வாழ்ந்து இருக்கவில்லை. அன்றும் இன்றும் கூட்டணியின் முக்கிய தூண்கள் இப்படித்தான், வக்கிரமாகவே அரசியல் விபச்சாரம் செய்தனர், செய்கின்றனர். பாசிசத்தின் நெம்புகோலாகவே மாறினர்.
ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கம் புலிகளால் தடை செய்யபட்டு அழிக்கப்பட்ட
பின், இந்தியாவினால் ஒரு
கூலிப்பட்டாளமாகவே மீண்டும் மண்ணில் இறக்கப்பட்டவர்கள். இதன் பின்பான அவர்களின்
கொலைகளை எடுத்தால், அவைகளில் பெரும்பாலானவை இந்திய
கொள்கை வகுப்பாளர்களால் வழிகாட்டப்பட்டு செய்விக்கப்பட்டவை தான். ஈ.பி.ஆர்.எல்.எப்
இந்தியாவின் கூலிக்குழுவாக, அனைத்து சுயஅடையாளத்தையும் இழந்த
நிலையில், இந்தியாவின் விருப்பத்துக்கு ஏற்ப
வெறியாட்டத்தை நடத்தியவர்கள். இருந்தபோதும் புலியுடன் ஒப்பிடும் போது, இதன் அளவும் பண்பும் குறைவானதே. ஆனால் பொதுவான கொலைகள்
எந்தவிதத்திலும், புலிகளின் கொலை வடிவத்தில் இருந்து
பண்பு ரீதியாக வடிவ ரீதியாக வேறுபட்டதல்ல. இங்கு எந்தவிதத்திலும் சாதியம், சாதிய அரசியல் செய்யப்படவில்லை. அதாவது ஒடுக்கப்பட்ட சாதி, ஒடுக்கும் சாதியை எதிர்த்த போராட்டமாக இது நடைபெற்று இருக்கவில்லை.
புலி மற்றும் புலியாக சந்தேகிப்பவர்களை, புலிகள் பாணியிலேயே கொலை செய்தவர்கள்.
இதற்கு வெளியில் விதிவிலக்காக ஒரு சில கொலைகள் தனிப்பட்ட
பழிவாங்கலாக நடத்தப்பட்டது, நடத்தப்படுகின்றது. இது புலிக்குள்ளும்
உண்டு. இந்த பழிவாங்கல் சாதியைக் கடந்து நடத்தப்பட்டது. பழிவாங்குபவனின் தனிப்பட்ட
உணர்வு, சாதியமாக அமைந்ததல்ல. இதில்
ஆயுதமேந்திய பலம் பொருந்திய அனைத்து இயக்கமும் விதிவிலக்கின்றி செய்தன, செய்கின்றன.
ஈ.பி.ஆர்.எல்.எப் கொலைகள் சாதியக் கொலைகள் என்பது பொய்யானவை. நாவல்
அதை திரிக்கின்றது. 'அவர்களை கறுப்புநரிகளின் ஆட்கள்
என்ற பொய் குற்றம்சாட்டி மரவள்ளிகட்டை இழுத்த போது பிடிபட்ட அடிவாங்கியதுகள்
பழிவாங்குகின்றனர்." என்கின்றது வெள்ளாள வலதுசாரிய பாசிசம். கொலைக்கான காரணம்
மரவெள்ளிக் கட்டை இழுத்த போது, வெள்ளாளன் அடித்ததற்காக
பழிவாங்குகின்றான் என்று, கூட்டணி அரசியல் புலம்புகின்றது.
சாதிய ஒடுக்குமுறையினால் ஏற்பட்ட வறுமை தான், உணவுக்காக ஓரிருவரை மரவெள்ளி கட்டை இழுக்கவைத்தது. அவர்கள் இயல்பாக
வாழ அனுமதி மறுக்கப்பட்ட, அவர்களின் உழைப்புக்கு நியாயமான
கூலி மறுக்கப்பட்டு, மற்றவர்கள் போல் உயிர்வாழ
அனுமதிக்கவில்லை. இதனால் பசியைப் போக்க, தேவைக்கு மரவெள்ளி கட்டை இழுப்பதை தூண்டியது. இது இயல்பாக ஒரு
சிலரை அராஜகத்தில் வாழவைக்கின்றது.
இங்கு 'அடிவாங்கியதுகள்" என்பது
இழிவான வெள்ளாளரின் ஆதிக்க சாதி மொழியாகவே இங்கு கொப்பளித்து நிற்கின்றது.
வெள்ளாளனுக்கு அடிக்கும் உரிமையை யார் கொடுத்தது. நாட்டில் அனைத்து பிரஜைக்கும்
என்று ஒரு சட்டம் ஒழுங்கு உள்ள போது, அடிக்கும் உரிமையும் அதை இயல்பாக நியாயப்படுத்தும் உரிமையை யார்
தந்தது? உண்மையில் சாதியத்தின் இயல்பான
ஆதிக்க ஒடுக்குமுறையில் இருந்து இது வருகின்றது. இந்த அகிம்சைவாதிகளின் சட்டம்
ஒழுங்கு நீதி உயர்சாதி வெள்ளாளருக்கு மட்டும் என்பதைத்தான், இங்கு இந்த நாவல் தெளிவாக பறைசாற்றுகின்றது. அடித்தவர்கள்
தேசியத்தின் பெயரில் ஆயுதம் பெற்ற போது சுட்டுக் கொன்றனர்.
1986 க்கு முன்பு நடந்த பொதுமக்கள் படுகொலைகள் பெரும்பாலானவை, மரவெள்ளிகட்டை இழுத்தவன் கள்ளன் என்ற பெயர்களில் நடந்தது. முன்பு
அடித்தவர்கள், இப்போது சுட்டுக் கொன்றனர்.
கொன்றவர்கள் எந்த நீதி விசாரணைக்கும், அவர்களை உட்படுத்தி தீர்ப்பை எழுதியதில்லை. சாதிய வரையறைக்கு
உட்பட்ட தீர்ப்பின் எல்லையில் இதை நடத்தினர். மாறாக தாம் விரும்பியவாறு, தாம் நிர்ணயித்த யாழ் மரபின் எல்லைக்குள் இதை நடத்தினர். உண்மையில்
ஒரு நேரக் கஞ்சிக்கு கையேந்திய ஏழைகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதை மூடிமறைக்கும்
நாவல், அதை எதிரிடையில்
பயன்படுத்துகின்றது. அரசியல் கொலைகள் பரஸ்பரம் ஒரே வடிவில் செய்யப்பட்டது. இதற்கு
விதிவிலக்கு காட்டுவது, திரிப்பது அர்த்தமற்ற சாதியமாகும்.
சாதிவாதியாகவே பிரச்சனையை அணுகி, பின் அனைத்தையும்
சாதியாக காட்டுவது வலதுசாரி அரசியலுக்கு அவசியமாகிவிடுகின்றது.
ஆசிரியரின் வலதுசாரிய சாதி அரசியல் ஈ.பி.ஆர்.எல்.எப் வை சாதியாக
இழிவுபடுத்துவதாகவே மாறுகின்றது. அதன் அரசியலை விமர்சிக்க முடியாது போகின்றது.
உதாரணமாக அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் அடையாளப்படுத்த உருவகிக்கும் மிருகம்
கழுதைப்புலியாகும். இதை சாதிக் கண்ணோட்டத்தில் வகைப்படுத்துகின்றார். பின் இந்த
நாவல் எப்படி உண்மைத்தன்மையை நேர்மையாக எடுத்துரைக்கும். அது வெள்ளாள உயர்
சாதியார் கொசிப்பாகவே வெளிப்படுகின்றது. இதை நிறுவும் வகையில் 'அருவருப்பூட்டும் விலங்கு... அதைவிட முக்கிய குணம்குறி.
கழுதைப்புலி இயக்கம் என்ற பெயர் வைக்க காரணம். ... மற்ற மிருகங்கள்
எச்சசொச்சமாகவிட்ட எலும்பு, கொம்பு.. விழுங்கிவிடும்.
எதிர்த்துப் போராட வக்கில்லாத..." என்கின்றார். உயர்சாதிய வெள்ளாளரின்
கழிவுகளை உண்டு வாழும் பள்ளுபறைகளின் இயக்கமே ஈ.பி.ஆர்.எல்.எப் என்று
இழிவுபடுத்துகின்றார். மிகவும் ஆபத்தான சாதி கொப்பளிப்பு, இங்கு சாதிய மிடுக்காக தமிழ் சமூகத்தையே பந்தாடுகின்றது. அந்த
மக்களை இயல்பாக வாழ அனுமதி மறுத்து, தம்மைச் சார்ந்து தாம் போடும் பிச்சையில் வாழ நிர்பந்தித்த பின், அவர்களை கழிவைத் தின்பவர்களாக சாதிவெறி வெள்ளாளர்களால் மட்டும்
தான் வருணிக்கமுடியும். இதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மக்கள் விரோத அரசியலை, இந்தியக் கைக் கூலித்தனத்தை பயன்படுத்துவது, பார்ப்பானுக்கு நிகரான வெள்ளாள சாதியச் சதியாகும்.
இதற்கு ஒரு கம்யூனிச மூகமுடியை போட்டு அதை மேலும் இழிவாடுவது, வலதுசாரி அரசியல் உள்ளடக்கமாகின்றது. '..வெளுறிய சிவப்புச் சாரமும் சிவப்புச் சேட்டும்" போட்டுச்
சென்றே கைது செய்தனர் என்று சித்தரிப்பதன் மூலம், சாதியமும் வலதுசாரி வக்கிரமும் உச்சத்தில் கொப்பளிக்கின்றது. இடது
எதிர்ப்பும், சாதிய ஒடுக்குமுறையும் துல்லியமாக
வெளிப்படுகின்றது. நடைபெற்ற கொலைகள் மீதான இந்த நாவல், அந்த வரலாற்றை திரித்து, அந்த வலதுசாரி பாசிச அரசியலை பாதுகாக்கின்றது. நடைபெற்ற கொலைகள்
இடது கொலைகளாக, குறைஞ்ச சாதிகளின் செயலாக காட்டுவது, இங்கு மைய அரசியலாகின்றது. வலதுசாரிய அரசியல் கொலைகளை, இந்த நாவல் மறுபக்கத்துக்கு தலைகுப்புற திரித்து புரட்டிக்
காட்டுகின்றது. தமிழ்தேசியமே வலதுசாரியமாக உதித்தது முதல், தனது எதிரியை கொன்று அழிப்பதற்காக தமிழரசுக் கட்சி வரலாறே இதை
தொடங்கி வைக்கின்றது. 1960 இல் நடந்த சாதிய
போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான எம்.சி.சுப்பிரமணியம் மீது, தமிழரசுக்கட்சி வழிகாட்டலில், தமிழ் தேசிய வீரர்கள் 1972.09.11 இல் குண்டு வீசி படுகொலை செய்ய முயன்றவர்கள். இப்படி சாதி
ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி பலர் மீது தாக்குதலை நடத்தினர், குண்டை வீசினர். 1970 முதல் 1980 வரையிலான பத்து
வருடத்தில், கூட்டணி யாரை எதிரியாக துரோகியாக
காட்டினரோ, அவர்கள் கொல்லப்பட்டனர்.
கொன்றவர்களை இந்த தமிழரசுக் கட்சியும், பின்னால் கூட்டணியும் அவர்களை பாதுகாத்தனர். இன்றைய பிரபாகரன்
அமர்தலிங்கத்தின் கைக்கூலியாக ஒரு கொலைகாரனாகவே பராமரிக்கப்பட்டவர்கள். இப்படிப்
பலர்.
'தமிழ்ஈழ விடுதலைக்குப் புறப்பட்ட சிலர் திசை மாறி, குணம் மாறி, கோலம் மாறி, வாழையடி வாழையாக வந்த கலாச்சார பாரம்பரியங்களைக் கொச்சைப்படுத்தி, உடன் பிறப்புகளின் குருதியிலே வேள்வி செய்வார்கள் என ஐயம்
பட்டிருந்தால், மக்கள் சோற்றுப் பொதியும் பணமும்
பொன்னும் கொடுத்து அவர்களை வளர்த்து இருக்கமாட்டார்கள்." என்கின்றனர். யார்
மக்கள், கூட்டணிதான். கொலைகரார்களை
வளர்த்தவர்கள் இவர்கள் தான். கொலைகள் தான், இவர்களை கூட்டணியின் ஆதரவுடன் அரங்கில் கொண்டுவந்தது. இதன்
நீட்சியில் தான் பிந்தைய கொலைகளும். கொலைக்கான அரசியலும் மாற்றத்துக்கு
உள்ளாகவில்லை. இந்த நாவல் அதை சாதியமாக்கி அதை பாதுகாக்கின்றது. அன்றைய பலத்துக்கு
ஏற்ப, கொலைகளின் அளவு இருந்தது. இதை
அரசியல் ரீதியாக சிவப்பு சட்டை போட்டவர்களின் கொலையாக சித்தரிப்பது, இந்த நாவலின் உள்நோக்கம் கொண்ட ஒரு அரசியல் திரிபாகும். இந்த
அரசியல் வரையறையில், பிழைப்புவாத கூட்டணிக்கும்
இயக்கத்துக்கும் பிளவு ஆழமாகியது. இதை தடுக்கவும், தனக்கொரு கொலைகார இயக்கத்தை அமிர்தலிங்கம் தனது மகன் காண்டீபனைத்
தலைவராக கொண்ட ரெனா (வுநுNயு) என்ற பெயரில் தொடங்கி, ஆயுதப் பயிற்சியை வழங்கியவர்கள் தான் இந்த சாதி அகிம்சைவாதிகள்.
இப்படி இந்த வெள்ளாளச் சாதியம் தனது சாதிய வன்முறை ஓர்மத்தை
வெளிப்படுத்தும் விதமே அருவருக்கத்தக்கது. ஈ.பி.ஆர்.எல்.எப் கழுதைப்புலியின்
கையில் துப்பாக்கி இல்லையென்றால் 'கழுகு முயல் குட்டியை இறாஞ்சுவது போலத் தூக்கி.."
அடித்திருப்போம் என்று உறுமுகின்றனர். வெள்ளாளனாகவே உறுமுவது, எந்தவிதத்திலும் அதன் சாதிய ஆதிக்க தன்மையை குறைத்து மதிப்பிட்டு
விடமுடியாது. இங்கு பதில் படுகொலையை, உயர்சாதிய நோக்கில் தெளிவாக வைக்கப்படுகின்றது. இந்த வன்முறையை
அடிப்படையாகக் கொண்ட வெள்ளாளனின் சாதிய வன்முறைப் பெருமையை பறைசாற்றி 'சப்பாத்துக்கால்களை செம்மண் பூமியில் ஊன்றி அழுத்தினார். திடீரென
துப்பாக்கியைப் பிடுங்கித் திருப்பி நீட்டினர்." என்று கூறுவதன் மூலம், தாழ்ந்த சாதிகளை இழிவானவராக பலமற்றவராக சாதிய பெருமையில்
நகையாடப்படுகின்றது. புறநானூறு வீரம் வெள்ளாளனுக்கு மட்டும் இருப்பதாக
பறைசாற்றுகின்றது வெள்ளாளத்தனம். 'எதிர்த்துப் போராட வக்கில்லாத" அற்பர்கள் என்ற வெள்ளாளனின்
சாதிய ஆதிக்கத்தையே பதிலாக வைக்கின்றனா.
ஈ.பி.ஆர்.எல்.எப் கொலைகளை தாழ்ந்த சாதி மக்கள் கொண்டாடியதாக காட்டி, சாதிப் படைப்பாகவே கொப்பளிக்கின்றது. 'கொலனிக்குள் வசிப்பவர்கள் துப்பாக்கிச் சத்தம் கேட்டு எட்டிப்
பார்த்தனர். அவர்களது முகங்களில் பாரம்பரிய தடிப்பு இறங்குவதைக் கண்ட மகிழ்ச்சிக்
கோடுகள்" என்கின்றார். நுட்பமாக சாதி பிளவை விதைத்து, உயர் சாதியத்தை பாதுகாக்கும் வக்கிரம். வலதுசாரிய அரசியல்
படுகொலைகளை சாதியாக திரித்துப் புரட்டும் நாவல், அதை சாதிய பிளவாக வலதுசாரியமாகவே மீண்டும் விதைக்கின்றது.
உயர்சாதிக்காரர் கொல்லப்பட்ட போது, தாழ்ந்த சாதிகள் மகிழ்ச்சியாக கொண்டாடியதாக கூறுவதன் மூலம், இந்த மாதிரியான கொலைகளை உயர்சாதியினர் வெறுப்பதாக கூறுகின்றது.
இந்த மாதிரி கொலைகள் நடந்ததாக காட்டமுனைகின்றது. சுத்த அபத்தம். இன்று கொலைகளை
ஆதரித்து, அதை தலையில் தூக்கிவைத்து
ஆதரிப்பவாகள் யார்? எந்தச் சாதி? எந்த வர்க்கம்? எந்த அரசியல்? கூட்டணி, புலியின் பின்னால் இன்று செய்வது
என்ன? கொலையை ஆதரித்து விபச்சாரம் செய்வது
தெரியவில்லையா?
புலிகள் தான் மொத்த தமிழ் வரலாற்றையும் திரிக்கின்றார்கள் என்றால், புலியை உருவாக்கிய வலதுசாரிய கூட்டணிப் பிரமுகர்களும் அதையே
செய்கின்றனர். உயர் சாதிக்காரன் கொல்லப்பட்டதால் சாதித்தடிப்பு இறங்கி
மகிழ்ச்சியடைவதாக, கொலனியே அதை கண்டு களித்ததாக
கூறுவது, கடந்த 25 முதல் 35 வருடமாக
தேசியத்தின் பெயரிலான கொலைகளை கொண்டாடி வரும், தமிழ் மேட்டுக்குடிகளின் சொந்த வக்கிரப்புத்தியை மூடிமறைப்பதாகும்.
இந்தக் கும்பல் கொலைகள் மட்டுமின்றி, நித்திரை கூட கொள்ளமுடியாத மனநோயாளியாகி விட்டனர்.
சரி கொலனியே மகிழ்ச்சியாக கொண்டாடியது என்றால், இது எப்படி தனிப்பட்ட பழிவாங்கலாக இருக்கமுடியும். அப்படியாயின்
கொல்லப்பட்டவன் சாதி வெறியனாக, அந்த மக்களை
சாதியின் பெயரால் சாதி வேட்டையாடுபவனாக இருந்து இருக்க வேண்டுமல்லவா!
இந்தக் கொலையைக் கண்டு இதை ஆவணப்படுத்தியவர் யார் என்றால், அவரும் உயர்ந்த சாதிக்காரன் தான். 'எல்லாம் அந்த உயர்ந்த செம்மரி மேய்க்கின்ற மயிலிட்டி மனிதனிடம்
பொறுக்கியதுதான்." என்கின்றார். இங்கு செம்மரி மேய்த்தாலும் உயர்ந்தவராக, அவருடைய சாதி அவரை அங்கீகரிக்கின்றது. அதனால் அவரிடம் இதைப்
பொறுக்கமுடியும். அவர் சாதி அந்தஸ்துடன் இருப்பதால் இதை ஆவணப்படுத்துகின்றார்.
என்ன தர்க்கம்? என்ன சாதிய வக்கிரம்? 'ஐ.பி.கே.எஃப் காலத்திலே உயர்சாதிப் பெடியள் கில்லாடியைக் கண்டால்
ஓடி ஒளிச்சவை." என்று கூறுவதன் மூலம், அக்காலம் உயர்சாதியத்துக்கு பொற்காலமல்ல என்கின்றார். பொற்காலம்
உயர்சாதிய புலிகள் மீண்ட போது உருவானது என்கின்றார். இங்கு சாதிய அரசியல் இயங்கும்
தன்மையை, நிகழ்ச்சிகள் மீது திரித்து
இசைவாக்கின்ற அகிம்சை அரசியல் சாதியமாக புரையோடுகின்றது. இதனால்தான் கூட்டணியின்
ஜனநாயக அகிம்சை வாதிகள் உண்மைப் போராளிகள் புலியின் உள்ளே உள்ளதாக காட்டி, அதன் சாதியக் கூறை ஆதரிக்கின்றனர். போலிப் போராளிகள் செயல்கள்
தலைமைக்கு தெரியாததால் தான், அத்துமீறல்கள்
நடக்கின்றது என்கின்றனர். இந்த அத்துமீறல்கள் குறைந்த சாதிகளின் செயல்கள் தான்
என்கின்றனர். மனித விரோதச் செயல்களை போலி மற்றும் உண்மைகளின் நடத்தையாக காட்டி, அதை ஒரு இயக்கத்துக்குள் கூறு போட்டு காட்டும் சாதியமே, இன்று வலதுசாரிய அரசியலின் ஒரு பகுதியாகின்றது. 'இந்தப் போலிப் போராளிகள், தூயவிடுதலைப் போராளிகளையே கொச்சைப் படுத்துகிறார்கள்" இப்படி
தனது வலதின் ஒரு பகுதியை, சாதிய பிரிவை பாதுகாக்க
முனைகின்றது. போலி, தூயது எது? அதன் அரசியல் அளவுகோல் சாதியம் தான்.
இந்த சாதியம் வலதாகவே குருடாகி குலைக்கின்றது. 'உவை தேடித்தேடி உயர்சாதி ஆட்களைத்தான் சுட்டுக் கொன்றவர்கள்"
என்ற கூறுவதும், தேசியத்தை ஒரு சாதி அரசியலாக
காட்டுவதன் மூலம் சாதிய ஆப்பை சமூகம் மீது வலிந்து இறுக்குகின்றனர். இயக்கங்கள்
சாதிய அடிப்படையில் சிதைந்ததன் விளைவுதான், மனித அவலங்களுக்கு காரணம் என்கின்றது. கூட்டணி அரசியலின்
கையாலாகாத்தனமே இங்கு நிர்வாணமாகின்றது. சாதிய அரசியல் செல்லும் போக்கில், சாதிய ஆப்பை இறுக்கின்றவகையில், இழிந்த குறைந்த சாதியாக காட்டப்பட்டவர்களின் மொழியாடல்களை
எதிர்நிலையில் வெள்ளாளருக்கு எதிராக புகுத்தப்படுகின்றது. 'டே வெள்ளாடு நீ கறுப்புநரி ஆதரவாளனாம் அந்தத் துணிவில் தான் காசு
தரமறுத்தனியோ?" என்று கூறுவதில்
வெள்ளாடு என்பது வெள்ளாளனைக் குறிக்கின்றது. இங்கு போராட்டத்தையும், அதன் அரசியலையும், இதன் மொத்த
விளைவையும் சாதியமாக குறுக்கி, அதற்குள்
அனைத்தையும் காட்டுவது நிகழ்கின்றது. 'டே! வெள்ளாளப் பூனா!" என்று சாதியம் கீழ் இருந்து
எழுப்பப்பட்டு, தாழ்ந்த சாதிக்கு எதிராக உசுப்பப்படுகின்றது.
'ஓ கோட்டான் சூட்டி என்ற பெயரைக் கேட்டால் வவுனியா நடுங்கும்
பெடியா. வெள்ளாள பூனாக்கள் கூட என்னைக் கண்டால் தோளாலே சால்வை எடுத்தவை..."
இப்படி எமது நாட்டில் நடந்ததா? நீங்கள்
அறிந்ததுண்டோ? '.. எழிய பொறுக்கி
வெள்ளாளப் பயல்தான்" 'நதியா அந்த வெள்ளாள நாய்ப் பயலோடு
ஓடிவிட்டாள் என்ற அவமானச் செய்தியை" இப்படி வெள்ளாள சாதியை உசுப்பவே பல
சொற்தொடர்கள் எதிரிடையில் கையாளப்படுகின்றது.
'டே நாயே! எங்களை அடிமையாக நடத்தினனீங்களோ? தட்டுவத்திலே சாப்பாடு தந்தனீங்களோ? சிரட்டையிலே தேத்தண்ணி வார்த்தனீங்களோ? டே வடுவா, இப்ப எங்கடை ஆட்சியெடா. உங்கடை
சாதித் தடிப்புக்கு இது ஒரு பாடமெடா" இப்படி ஆவி எழுப்பும் உயர்சாதியத்தின்
எதிர்நிலைவாதம், உறங்கிக்கிடக்கும் சாதிய வெள்ளாள
வன்முறையை உசுப்பி எழுப்பிவிட கூட்டணியின் வலதுசாரிய அரசியல் முனைகின்றது. சாதியம்
பாதுகாக்கப்படவேண்டும் என்பதை அடித்துக் கூறுகின்றது. 'எங்கடை ஆட்சியெடா" என்று கூறுவதன் மூலம், பல செய்திகளை இதனூடாக கூறிவிட முனைகின்றது. இருந்த உயர்சாதி ஆட்சி, இல்லாமல் போனதாக வேறு கூறுகின்றது. தாழ்ந்த சாதிகளின் ஆட்சி தான், புலிகள் அல்லாத காலத்தின் ஆட்சி என்றும் கூறுகின்றது. இதன் மூலம்
இந்திய ஆக்கிரமிப்பை தாழ்ந்த சாதிகளின் காலகட்டமாக காட்டுவதன் மூலம், அன்றைய காலம் தாழ்ந்த சாதிகளின் அக்கிரமம் நடந்த காலகட்டமென்று
கூட்டணி அரசியல் கூறுகின்றது. சிரட்டையில் தந்ததற்கும், தட்டுவத்தில் தந்ததற்காகத் தான், வெள்ளாளன் பழிவாங்கப்பட்டதாக, கூறுவது திட்டமிட்ட ஒரு வரலாற்றுத் திரிபாகும். அப்படியொரு சம்பவம்
நடந்திருந்தால், அது விதிவிலக்கேயாகும். உண்மையில்
அந்த விதிவிலக்கு நடந்து இருந்தால், உண்மையில் சாதிய கொடூரங்களுக்கு எதிராக பழிவாங்கியிருந்தால், அதை தாற்பாரியத்தை எதிர்நிலையில் நிறுத்தமுடியாது. காலகாலமாக
ஒடுக்கப்பட்ட தனிப்பட்ட நபரின் அத்துமீறலாக, பழிவாங்கலாகவே அது அமையும். சம்பந்தப்பட்ட நபரின் அரசியல் தான்
விமர்சனத்துக்குள்ளாகும்.
'எங்களை அடிமையாக நடத்தினனீங்களோ? தட்டுவத்திலே சாப்பாடு தந்தனீங்களோ? சிரட்டையிலே தேத்தண்ணி வார்த்தனீங்களோ?"
என்று கேட்டு தண்டித்ததாக கூறும்
வெள்ளாள சாதிய வாதம், எதிர்நிலையில் இதை கொடுப்பதை
ஒத்துக் கொண்டு, அதை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதை
கோருகின்றது. இதை தவறு என்று அது கூறவில்லை. தீண்டாமையைக் கடைப்பிடிப்பது சரி
என்கின்றது. உண்மையான படுகொலைகள் பற்றி இந்த நாவல், அதன் சாதியத்தால் அதன் உண்மைத்தன்மை பலதளத்தில்
கேள்விக்குள்ளாக்கின்றது. அத்துடன் உண்மையில் அக்காலகட்டத்தில் நடந்த இந்திய
ஆக்கிரமிப்பை திட்டமிட்டு மூடிமறைப்பதாகும். அத்துடன் அன்று நடந்தது வலதுசாரிய
ஆட்சி தான் என்பதையும் இருட்டடிப்பு செய்வதாகும். இது கூட்டணியின் அரசியலில் இருந்து
எந்த விதத்திலும் வேறுபடவில்லை.
புலிக்குள் கூட இதை அளவுகோலைக் கொண்டுதான் அளக்கப்படுகின்றது.
கறுப்பு நரி (புலி) சால்வை மூத்தான் 'எடியே வெள்ளாடிச்சி கத்தடி நல்லாக் கத்தடி" என்கின்றான்.
சாதியின் பெயரால் இப்படி கொலை செய்ததாக கூறுவது அபர்த்தம். இந்தப் புலி சால்வை
மூத்தான் இழிந்த வண்ணார் சாதியைச் சேர்ந்தவன் என்று காட்டுவதும், அவன் உயர்சாதி பெண்ணை திருமணம் செய்தவர் என்பதன் மூலம், புலிகள் செய்த செய்கின்ற கொலைகளை தாழ்ந்த சாதியைச்
சேர்ந்தவர்கள்தான் உள்ளிருந்து கொல்கின்றனர் என்று வலதுசாரிய அரசியலை
நிறுவுவதறக்காகவே. இது போன்ற கொலைகளை உயர்சாதியைச் சேர்ந்தோர் செய்ய முனைகின்றனர்
என்றால், அதை தலைமை சொன்னதாக கூறியே இடையில்
உள்ளோர் செய்விப்பதாக திரிக்கப்படுகின்றது. இதை அறிவுபூர்வமாக விளக்கி, இந்த மாதிரிச் செய்லகளை தடுக்கமுடியும், எனென்றால் அவர்கள் நீதியான வெள்ளாளர்கள். இவர்கள் மன்னிக்கப்பட
வேண்டியவர்கள். ஆனால் தாழ்ந்த சாதிகள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இந்த
அடிப்படையில் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர்களை இழிவுபடுத்தி, அவர்களை மனித விரோதிகளாக காட்டப்படுகின்றது. இதை இந்த நாவல் ஊடாக
தெளிவாக கொண்டு வந்து, அதை நாவல் நடைமுறைப்படுத்துகின்றது.
தண்டனையும், குற்றம்சாட்டும் உயர் சாதிகளுக்கு
பொருந்தாது. அதாவது இந்துமத மனுதர்ம சாதிய விதிகள், இங்கு சாதிய அடிப்படையில் புகுத்தப்படுகின்றது. அமிரின் வெள்ளாளக்
காதலி ஜீவிதா காதலனையே கொல்ல முயன்ற அந்த புலிப் பாசித்ததை 'அவள் குற்றமா? படைப்பின் குற்றமா? மரபணுக்களின் குற்றமா? ..." என்று வெள்ளாளனின் தராசு நியாய விளக்கத்தை காதலன் அமிர் ஊடாகவே
கேட்கவைக்கின்றது. புலிப் பாசிச குற்றத்தை, கூட்டணி அகிம்சை இப்படி பாதுகாக்கின்றது. குற்றவாளியை தப்பவைக்க, ஐp.ஐp.பொன்னம்பலம் போன்ற, லண்டனில் உள்ள ஒரு வழக்குரைஞரை கூலிக்கு அமர்த்துகின்றனர்.
லண்டனில் வாழவே வழியற்று இந்த வெள்ளாளப் பயல்கள், பள்ளி நதியாவிடம் இருப்பதை சாதியின் பெயரால் சுருட்டியவர்கள், பல லட்சம் செலவழித்து கொலைகார வெள்ளாடிச்சியைக் காப்பாற்ற கூலிக்கு
அமர்த்துகின்றனர். இந்த மாதிரியான வழக்குரையர்கள் ஐp.ஐp.பொன்னம்பலம் போல் கிறிமினல்கள்
தான். குற்றவாளிகளை தப்பவைக்க, சட்டத்தை வளைத்து
தப்ப வைக்கும் பணப் பேய்கள் தான். இவர்களின் மனச்சாட்சிக்கு முன்னால் குற்றவாளி
சுற்றவாளி என்பது, அவர்களுக்கு எவ்வளவு பணம்
வருகின்றது என்பதைப் பொருத்ததே. ஐp.ஐp.பொன்னம்பலத்துக்கு வெள்ளாளச் சாதி
இதனுடன் ஓட்டிக்கொண்டு வெள்ளாளனுக்கு மட்டும் கிரிமினல் தொழில் செய்தவர். சாதித்
தொழில் செய்தவர். தாங்கள் உருவாக்கிய சட்டத்தை, புரட்டி பிரித்து அதன் மூலம் பணம் சம்பாதித்து வாழ்ந்த சமூக
விரோதிகள். குற்றவாளிகளை தப்புவிக்க வைப்பதே இவர்களின் சுத்தமான கிரிமினல் தொழில்.
கொலைகாரி ஜீவிதா புலிகள் இயக்கத்தில் இணைந்தது தவிர்க்க முடியாதது, சரியானது என்று அடுக்கிவைக்கும் கிரிமினல் வாதங்கள் மூலம், அந்த அரசியல் சரியானவை என்று கூற முனைகின்றார். சிறிலங்கா பேரினவாத
அரசின் கொலைகளை பட்டியிட்டும், புலியில்
சேர்ந்தது சரியென்றும் காட்டும் அரசியல் தான், புலி பிரச்சார அரசியல் கூட. ஐPவிதாவை பாதுகாக்க இதை வாதமாக வைத்தவர், புலிகள் செய்த படுகொலைகளை முன்வைக்க அரசு வழக்குரைஞருக்கு
தெரியாமல் போகின்றது. இதுதான் வெள்ளாளத்தனம். நீதி நியாயம் எல்லோருக்கும்
பொதுவானதாக ஏற்றுக் கொள்வதை மறுப்பது தான், வெள்ளாளத்தனம். புலிகளின் அநுராதபுர படுகொலைகள் முதல் மக்கள்
கூட்டம் மீதான நூற்றுக்கணக்கான படுகொலை வரலாறுகள் உண்டு. துரையப்பா படுகொலைக்கு, அகிம்சை ஜனநாயக அரசியலை முன்வைத்த தமிழரசுக் கட்சியே காரணமாக
இருந்தது. இப்படி படுகொலைகள் 10000 தாண்டுகின்றது.
இந்த கொலைகார பாசிசத்தை பாதுகாக்க 'அவள் குற்றமா? படைப்பின்
குற்றமா? மரபணுக்களின் குற்றமா? என்று கேட்டு எழும் வெள்ளாளத்தனம் 'மேலிடத்தின் கட்டளை என்ற தொடர்ந்து வெருட்டி இறுதியில்... இந்த
கொலை முயற்சி நடந்தாக கூறப்படுகின்றது. ஆனால் அது மேலிடவுத்தரவல்ல என்கின்றார்.
புலியை, புலிகள் அன்றாடம் நடத்தும்
தொடர்ச்சியான கொலைகளை இதன் மூலம் நியாயப்படுத்துகின்றனர். ஐPவிதா குற்றவாளியல்ல என்று தீர்ப்பெழுதி, வெள்ளைவேட்டி கட்டி வெள்ளாடிச்சியின் சாதித் திருமணத்துக்காக
காத்திருக்கின்றார்.
ஆனால் மற்றைய இயக்கங்கள், மற்றைய சாதி நபர்கள் அப்படி அல்ல என்பது, அகிம்சை சாதிகளின் சாதி அரசியலாகவுள்ளது. அது மேலிடத்தின்
வழிகாட்டல் அல்லது தனிப்பட்ட நபர்களின் சாதிய பழிவாங்கலாக காட்டப்பட்டு, வெள்ளாளப் புலியின் பெரும் பகுதியை பாதுகாக்கின்றனர். ஆகவே சாதி
குறைந்தவர்களை தண்டிக்க வேண்டும் என்கின்றார். தண்டனை பார்ப்பனியம் வகுத்த
மனுநீதிக்கு ஏற்ப வழங்கப்பட வேண்டும். இப்படி படைப்பு வெள்ளாள சாதியமாகவே
கொப்பளிக்கின்றது. யார் குற்றவாளி, யார் குற்றவாளி அல்ல என்பதை 'போர்க்களத்தில் போராடுகிற, முன்னர் போராடிய போராளிகளை நாம் என்றும் கொச்சைப் படுத்தியதில்லை, ஐPவிதா. நாம் கொச்சைப் படுத்தப்
போவதில்லை. அவர்கள் புறநானூற்றின் வீர வாரிசுகள். அவர்கள் தமிழ்க் கலாச்சாரத்தின்
புனித வீரச் சொத்துக்கள்" என்கின்றார். 'நாம் கொச்சைப் படுத்துவதெல்லாம், ஈழ விடுதலைப் போராளிகள் என்ற போர்வையில் - புத்திஜீவிகள், மிதவாத அரசியல் வாதிகள், செல்வந்தர்கள், உயர் சாதியினர், தனிப்பட்ட விரோதிகள் மீது கொண்ட காழ்ப்புணர்வினால் - சகோதர
அப்பாவிகள் மீது பொய்யான சமூகவிரோத பழிகளைச் சுமத்தி...." யவர்களைத் தான்
என்கின்றார். தாழ்ந்த இழிந்த சாதிகளை கொன்றால், ஏழைகளைக் கொன்றால் பிரச்சனை இல்லை என்கின்றார். தர்க்கத்தின்
முழுச் சாரமும் இதற்குள் தான், ஒரு சாதிய
சுரண்டும் வர்க்க நாவலாக வெளிவருகின்றது. செல்வந்தர்களையும், உயர்சாதியினரையும் கொல்வது தான் பிரச்சனை என்கின்றார். அத்துடன்
புத்திஜீவிகள், மிதவாத அரசியல்வாதிகளை கொல்வதையும்
எதிர்க்கின்றார். இவர்களும் உயர்சாதியினர் தானே, என்ற உண்மையை உணர்த்தி நிற்கின்றது. உண்மையில் உயர்சாதிய
செல்வந்தர்கள் கொல்லப்படுவது தான் பிரச்சனை. மற்றவர்கள் பற்றி அல்ல என்பதே
வலதுசாரிகளின் அரசியல் பிரச்சனை. வலதுசாரிகள் வலதுசாரிகளை கொல்வது நியாயமோ? அதை இனம் காணமுடியாது சாதியமாக காட்டுவதன் மூலம், தமது புத்தீஜிவித்தனத்தின் மூலம் ஒரு சாதிய தர்க்கவிளக்கத்தை
வழங்கிவிட முனைகின்றனர்.
அதுவும் வலதுசாரி மிதவாத அரசியல்வாதிகளை கொல்வதை எப்படி என்று
கேட்கின்றார்கள். '..களை எடுப்பு, களை எடுப்பு என்று எங்களை மட்டும், ஐக்கிய விடுதலைக் கட்சியினரை மட்டும், 'துரோகிகள்" என்று சொல்லிச் சுட்டுக் கொல்லுகின்றீர்கள்"
என்று புலிகளிடம் அப்பாவித்தனமாக கேட்பதன் மூலம், அவர்களை மட்டும் தான் புலிகள் கொல்வதாக ஒரு பொய்யைக் கூறுவதன்
மூலம், அப்பட்டமாக ஒரு கொலைகார அரசியலை
செய்கின்றனர். மற்றவர்களையும், மற்றயை சாதிப்
பிரிவினரையும், மாற்றுக் கருத்துடன் ஆயுதம்
ஏந்தியவர்களையும் கொல்வதில் எமக்கு ஆட்சேபனை கிடையாது என்கின்றனர். 1986 இல் தொடங்கிய இயக்க அழிப்பையிட்டு எந்த ஆட்சேபனையும் கிடையாது. இதை
இந்த நாவல் ஒரு இடத்தில் கூட குறிப்பிடவில்லை. ஆட்சேபனை உங்களை பாசிட்டுகளாக
வலதுசாரிகளாக வளர்த்த, இது போன்ற கொலைகளை செய்ய வழிகாட்டிய
எம்மைக் கொல்வது எப்படி நியாயம் என்கின்றனர்! மிதவாத கூட்டணியை மட்டும் ஏன்
கொல்லுகின்றீர்கள், மிதவாத கூட்டணி அல்லாத மற்றவர்களை
கொல்லுவதில் உள்ள சாதிய அரசியல் உடன்பாட்டை உறுதிசெய்கின்றது.
அன்று ஆலாலும், நவரத்தினமும்
கொல்லப்பட்டது உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் தான் என்கின்றது நாவல். அன்று
துரை மற்றும் இராசு கைது செய்யப்பட்ட போதும், அவர்கள் உயர்சாதி அல்லாத காரணத்தினால் அவர்களை கொல்லவில்லை
என்கின்றது நாவல். ஒரே நாளில் நடந்த இந்த சம்பவத்துக்கு, கூட்டணியின் சாதிய அரசியல் இப்படி இட்டுக்கட்டி திரிக்கின்றது.
உண்மையில் அர்த்தமற்ற ஒரு வரலாற்று திரிபு. என்ன நடந்தது. ரெலோவுக்குள் நடந்த தாஸ்
பொபி (பொபி சிறிசபாரத்தினத்தின் கைக்கூலி) இடையிலான மோதலினால் தான், இந்திய உத்தரவு பகுதியளவில் நடைமுறைப்படுத்தப்படாததால் அவர்கள்
இருவரும் தப்பிப் பிழைத்தனர். தாஸ் பொபி மோதலின் போது, தாஸ் தனிப்பட்ட நிலையில் வடமராச்சி மக்களை சார்ந்து நிற்க வேண்டிய
நிலை உருவானது. தான் ரெலோவில் இருந்து தனித்து பிரிந்து உயிர்வாழ்வதற்கு, மக்களுடானான உறவை முரணற்றவகையில் கையாள்வது தாஸ்சுக்கு
நிபந்தனையாகியது. இந்த செயற்பாடுகள் தான், வடமராட்சியைச் சேர்ந்த அவர்களைக் காப்பாற்றியது. இதன் பின்னால்
எந்த சாதியமும் கிடையாது. ஏன் கடத்த வேண்டும்? ஏன் கொல்ல வேண்டும்? ஓரே உத்தரவு, ஆனால் ஒரு பகுதி
அதைக் கடைப்பிடிக்கவில்லை அவ்வளவு தான்.
இப்படி அனைத்தையும் சாதியமாக திரித்து வரலாற்றை வலதுசாரி
பாசிசத்துக்குள் திரித்து, இட்டுக்கட்டி அதைப் பாதுகாக்க
முனைகின்றது. நீதி நியாயம் என்பது இந்து பார்ப்பானிய மனுதர்ம அடிப்படையில் கோரவும், அதற்குள் இவை நடப்பதாக காட்டவும் முனைகின்றது. இப்படி வலதுசாரி
அரசியல், தனது வரலாற்றை சாதியமாக திரித்து
தப்பிச் செல்ல முனைகின்றது. சாதியை உசுப்பி, கொலைவெறியாட்டத்தை வேறு ஒரு வடிவில், சாதியாக தாழ்ந்த சாதிக்கு எதிராக உசுப்பிவிட முனைகின்றது.
பி.இரயாகரன்
11.09.2006
11.09.2006