Sunday, 31 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 175 - 177

175: புலிகளைத் தாக்கிய ஆழிப்பேரலைகள்!
விடுதலைப் புலிகள் அமைப்பின் கட்டுக்கோப்பு என்பது கருணாவின் நடவடிக்கையால் குலைந்தது. கிழக்கு புறக்கணிக்கப்படுகிறது என்ற புகாரைக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்தார்.

விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து விலகிய கருணா, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டிஎம்விபி) என்ற கட்சியைத் தொடங்கினார். 20 ஆண்டுகளாகப் புலிகள் இயக்கத்தில் மட்டக்களப்பு-அம்பாறை பகுதிகளின் பொறுப்பாளராக இருந்ததால், அவரின் கீழ் சுமார் ஏழாயிரம் போராளிகள் இருந்தனர். அவர்களில் 1400 பேர் மட்டும் அவருடன் இணைந்தனர். 

கிழக்குப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, புலிகள் வடக்கிலிருந்து புறப்படும் முன்பாகவே, கருணாவின் ஆட்கள் ராணுவ முகாமில் சரணடைந்து, கருணா படையணியாக உருவாக்கப்பட்டு, 20 ஆண்டுகால புலிகளின் யுத்த தந்திரங்கள் ராணுவத்துக்குப் போய்ச் சேர்ந்தன.
அவரைக் கட்டுப்படுத்த, போர் நிறுத்த ஒப்பந்தத்தை சேதப்படுத்தாத வகையில் அவரது குழுவினர் மீதான நடவடிக்கைகளை புலிகள் இயக்கம் மேற்கொண்டது. ஆனாலும் அவரின் வெளியேற்றப் பின்னணியில் ரணிலின் கட்சி இருக்கிறது என்பது புலிகளின் குற்றச்சாட்டாக இருந்தது. (இதைப் பின்னாளில் காமினி திஸ்ஸநாயக்காவின் மகன் நவீன் திஸ்ஸநாயக்கா, "புலிகள் இயக்கத்திடமிருந்து கருணாவை நாங்கள்தான் பிரித்தெடுத்தோம்' என்று நுவரேலியா தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது வெளிப்படுத்தினார். அக்கூற்றை ரணில் உள்ளிட்டவர்கள் மறுக்கவில்லை.)
தென் இலங்கை சக்திகளாலும், ராணுவத்தாலும் கருணா ஒரு விலைமதிப்பற்ற சொத்து எனக் கருதப்பட்டு, அவருக்கு ஊட்டம் அளிக்கும் வேலைகளில் மும்முரம் காட்டப்பட்டது.

("இலங்கையில் சமாதானம் பேசுதல்'-குமார் ரூபசிங்க-அடையாளம் வெளியீடு).
அடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உருமய ஆகிய சிங்களவெறிக் கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கப்பட்டதால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெற்றி பெற்று, பிரதமராக மகிந்த ராஜபட்ச தேர்வு ஆனார் (4.4.2004).
இதே தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப்., டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகள் கூடி, தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டு, 2001-ஆம் தேர்தலில் பங்கேற்றது போலவே இப்போதும் தேர்தலில் நின்றனர். 

இக்கால கட்டத்தில் புலிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று ஏற்பட்டிருந்தது. கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் "புலிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்' என வலியுறுத்தப்பட்டிருந்தது. தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இத் தேர்தலில், 22 இடங்கள் கிடைத்தன. நாடாளுமன்றத்தில் இவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் முன்னணியாகச் செயல்பட்டனர்.
தேர்தலுக்கு முன்பு சந்திரிகாவின் விமர்சனம் என்பது வேறு; தேர்தல் முடிந்ததும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்க அவரே ஆர்வம் காட்டி, நார்வே குழுவினரிடம் பேசினார். புலிகளிடமும், இடைக்கால தன்னாட்சி நிர்வாக சபை குறித்தும், நிரந்தரத் தீர்வு குறித்தும் ஒரே நேரத்தில் பேசலாம் என்றார்.
அது தவிர சந்திரிகா காலத்தில், 2000-ஆம் ஆண்டில் அவரது தயாரிப்பான தீர்வுத் திட்டத்தையும் கூடப் பரிசீலிக்கலாம் என்றும் விருப்பப்பட்டார். அந்த 2000-வது திட்டமும் இடைக்கால நிர்வாகம் சார்ந்ததுதான். 

அதே நேரத்தில் அதிபர் முறையை ஒழித்து, வெஸ்ட்மினிஸ்டர் பாணியிலான நாடாளுமன்ற அரசை நிறுவவும் முயன்றார். இலங்கை அரசியல் அமைப்புப்படி ஒருவர் இரண்டு தடவைகள் மட்டுமே அதிபராக இருக்க முடியும். வெஸ்ட்மினிஸ்டர் முறையிலான நாடாளுமன்ற அரசமைப்புக்குத் தாவினால் மீண்டும் ஒருமுறை பிரதமராகும் வாய்ப்பு அவருக்கும் கிடைக்கும் என்பது மறைமுகத் திட்டமாகும்.
2004-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி என்னும் ஆழிப் பேரலை ஏற்படுத்திய இழப்புகள் என்பது கொஞ்ச நஞ்சமல்ல. அந்த சுனாமியும் கூட ஏற்கெனவே போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில்தான் முகாமிட்டது. இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தி, மிகப் பெருந்தொகையான கட்டுமானங்களையும் அடியோடு பெயர்த்தெடுத்துக் கொண்டு போன நிலையில், புலிகளுக்கே அதிக அளவில் இழப்பு ஏற்படுத்தியிருந்தது.

புலிப் போராளிகளில் 1500 பேருக்கு மேல் பேரலைக்குப் பலியானார்கள். அவர்களின் கடற்படைத் தளமும், ஏராளமான ஆயுதங்களும், கப்பல்களும் கடலலைகளால் மூழ்கடிக்கப்பட்டன.
திகைத்து நின்று வேடிக்கை பார்க்காமல் இலங்கை அரசு செயல்படுவதற்கு முன்பாகவே, புலிகள் களத்தில் இறங்கி, மீட்பு மற்றும் புனரமைப்புப் பணிகளில் தீவிரம் காட்டினர். இந்த சுனாமிக்குப் பிரபாகரனும் பலியானதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. அரசு கெஜட்டும் அவ்வாறே செய்தி வெளியிட்டது. தமிழ்நாட்டின் மிகப் பெரிய பத்திரிகை ஒன்று "பிரபாகரன் மறைவு' என்றே செய்தி வெளியிட்டது. இதுபோன்ற செய்தியை அப் பத்திரிகை, இதற்கு முன்பும் ஒருமுறை வெளியிட்டது.
அந்தப் பகுதியில் இருந்த தூதரகங்கள் (இத்தாலி) தங்களால் முடிந்த நிதியை புலிகளிடம் அளித்தனர். இதனால் சந்திரிகா வெகுண்டெழுந்து, புலிகளுக்கு யாரும் நிதியளிக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். தூதரகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். வரும் நிதிகளையெல்லாம் வாங்கிக் குவித்தார். இதனால் எழுந்த புலிகளின் எதிர்ப்பைச் சமாளிக்க "சுனாமி புனரமைப்பு ஒப்பந்தம் போடலாம்' என்று சமாளித்தார்.
சுனாமி பாதிப்புகளைப் பார்வையிட, ஐ.நா. சபை பொதுச் செயலாளர் கோபி அன்னான் இலங்கைக்கு வருகை தந்தார். அவரது கண்களில் புலிகளின் செயல்பாடுகள் படாமல் அதிபர் சந்திரிகா பார்த்துக் கொண்டார்.
சுனாமிக்குப் பின்னர், வெளிநாட்டு உதவிகளை வடக்கு-கிழக்குப் பகுதிகளில் மீட்பு, மறுகட்டுமானம், புனர்வாழ்வுப் பணிகளுக்காக தொழிற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பு (டர்ள்ற் பன்ள்ய்ஹம்ண் ஞல்ங்ழ்ஹற்ண்ர்ய்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் நற்ழ்ன்ஸ்ரீற்ன்ழ்ங் -டபஞஙந)ஒன்று புலிகள்-சந்திரிகா அரசிடையே உருவானது (ஜூன் 2005).
இதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள கரையோர மக்களுக்கு விரைவாக நிவாரணம் அளிக்க உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. வடக்கு-கிழக்கில் மன்னார், வவுனியா மாவட்டங்கள் இதில் உட்படாத மாவட்டங்களாகும். ஆனாலும் போரில் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் இவை. எனவே மறுவாழ்வுப் பணிகளில் இந்த மாவட்டங்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
இந்தத் திட்டத்தின்படி நிதியளிப்பு கிடைக்கும் சூழ்நிலையில், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சந்திரிகாவின் அணியிலிருந்த ஜே.வி.பி. கட்சி வழக்குத் தொடர்ந்தது. இலங்கை உயர்நீதிமன்றம் இவ் வழக்கினை ஏற்று ஒப்பந்தத்திற்குத் தடைவிதித்தது. புலிகள் மற்றும் அரசுத்தரப்பிடையே (சந்திரிகா) மீண்டும் நெருக்கம் ஏற்படும் என்று நம்பிய நேரத்தில் நீதிமன்றத் தடை மூலம் இடையூறு நேர்ந்தது. எனவே வடக்கு-கிழக்கில் மேற்கொள்ளும் புனர்வாழ்வுப் பணிகளுக்கான நிதி யாவும் சிங்களப் பகுதிகளுக்கே சென்றது.
அதிபர் சந்திரிகாவின் பதவிக்காலம் நவம்பர் 2005-இல் முடிவுற இருந்தது. தந்தை பண்டாரநாயகா, தாயார் ஸ்ரீமாவோ பண்டாரநாயகா என்கிற சங்கிலித்தொடர் ஆட்சியதிகாரம் தன்னுடன் முடிவு பெறுவதை சந்திரிகா விரும்பவில்லை. எனவே, தனக்குப் பிறகு தனது தம்பி அநுரா பண்டாரநாயகாவை அதிபர் பதவிக்கு நிறுத்தப் பெரும் முயற்சியெடுத்தார்.
காலந்தாழ்ந்த இந்த முடிவினை மகிந்த ராஜபட்சவும், அவரது ஆதரவாளர்களும் முறியடித்தனர். சந்திரிகாவின் சொந்தக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் மகிந்தாவின் ஆதரவாளர்களே பல்வேறு பொறுப்புகளில் நிலைபெற்றிருந்ததால் சந்திரிகாவின் முயற்சி பலனளிக்காது போயிற்று. மகிந்த ராஜபட்சவை, அதிபர் வேட்பாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்தது.
சமாதான முயற்சியில் ரணில் பெற்றிருந்த நல்ல பெயர், அதிபர் தேர்தலில் அவருக்கு வெற்றியைத் தந்துவிடக்கூடாது என்பதற்காக சிங்களத் தீவிரவாதிகள் பெயரால், நார்வே நாட்டுத் தூதுவரகம் முன்பாக சவப்பெட்டிகள் ஊர்வலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நார்வே நாட்டின் தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டம் நடத்துவது, பெüத்த இளம்பிக்குகளைக் கூட்டி வந்து ஆர்ப்பாட்டம் செய்வது உள்ளிட்ட செயல்களின் பின்னணியில் மகிந்த ராஜபட்ச இருந்தார் என "இலங்கையில் சமாதானம் பேசுதல்' (அடையாளம் வெளியீடு) என்னும் நூலில், அதன் ஆசிரியர் குமார் ரூபசிங்க தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது அன்றைய தேர்தல் காலச் சூழ்நிலையை விளக்கும்.
வாஷிங்டன் ஆலோசனைக் கூட்டத்தில் புலிகள் ஒதுக்கப்பட்டமை, அதுகுறித்துப் புலிகளுடன் ஆலோசனை நடத்தாதது, தொடர்ந்து அக்கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்பு துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் கூறிய புலிகள் குறித்து வெளியிட்ட கருத்துகளும், "புலிகள் பேச்சுவார்த்தையை முறித்தால், கஷ்டப்படப்போவது அவர்கள்தான். நான் சர்வதேச சமுதாயத்துடனேயே சொல்வேன். புலிகள் அளிக்கும் வாக்குறுதிகளில் அவர்கள் உறுதியாக இருக்கவேண்டும்' என்று ரணில் விக்கிரமசிங்கே கூறியது, அதற்கு பாலசிங்கம் அளித்த விளக்கத்துக்கு இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் அளித்த விமர்சனம், அமெரிக்காவின் கரையோரக் காவல் கப்பல் ஒன்றை பால்டிமோரில் நடைபெற்ற நிகழ்வில் மிலிண்டா மோரகொடா பெற்றது, கருணா பிரச்னையில், "சமாதான நடைமுறையின் ஓர் உற்பத்தி கருணா. யுத்தச் சூழ்நிலையில் அவரால் தற்போதைய முடிவை எடுத்திருக்கமுடியாது. துப்பாக்கிகளை அமைதிப்படுத்தியதன் மூலமும், நெடுஞ்சாலைகளைத் திறந்தவிட்டதன் மூலமும் விடுதலைப் புலிகளுக்கு மாற்று வழிகளை வழங்கும் சூழ்நிலையை நாம் உருவாக்கினோம்' என மிலிண்டா மோரகொடா கருத்து தெரிவித்ததன் மூலமும் (ஆதாரம்: மேலது நூல்), போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்தகட்ட செயல்பாடுகளில் ரணில் அரசு அக்கறை காட்டாதது, குறிப்பாக மீள்குடியேற்றம், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலிருந்து ராணுவம் வெளியேறாமை, கடலில் மீன்பிடி உரிமை மறுக்கப்பட்டது உள்ளிட்ட காரணங்களால், தமிழர்கள் தேர்தலில் பங்கேற்க தயக்கம் காட்டினர். முடிவில் மகிந்த ராஜபட்ச குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபரானார் (19-11-2005).
176: ராஜபட்சவின் அதிரடிகள்!
ராஜபட்ச ஆட்சிக்கு வந்ததும் ராணுவ நிலைகளான ஆயுதக்கிடங்குகள், முகாம்கள், கட்டடங்கள் ஆகியவை புலிகளால் குறிவைத்துத் தகர்க்கப்பட்டன. இத்தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்.
இதனையொட்டி, ராணுவத்தின் அத்துமீறல் உச்சகட்டத்தை அடைந்ததும், சர்வதேச நாடுகள் போர் நிறுத்த மீறல்களை உடனே நிறுத்தும்படி வலியுறுத்தியதன்பேரில் ராஜபட்ச பேச்சுவார்த்தைக்குப் போகலாம் என்றார்.
ஜெனிவாவில் பிப்ரவரி 19 முதல் 22-ஆம் தேதி வரை நடந்த முதல்கட்டப் பேச்சுவார்த்தையில், ஒப்பந்த நடவடிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருணா, பெருமாள் உள்ளிட்ட பிரிவினர் ஆயுதங்களைக் கீழே போட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புலிகள் தரப்பில் பேசிய பாலசிங்கம் வலியுறுத்தினார். அரசுப் பிரதிநிதிகள் இக் கோரிக்கையை ஏற்றபோதிலும் அதனை நடைமுறைப்படுத்தாது கிடப்பில் போட்டனர்.
வடக்கு-கிழக்கில் கடும் ராணுவத் தாக்குதலை நடத்திக்கொண்டே பேச்சுவார்த்தை என்ற இரண்டாவது குதிரையிலும் ராஜபட்ச சவாரி செய்தார். சிங்களப் பகுதிகளில் ராஜபட்சவின் ஆட்கள், புலிகளை சமாதானப் பேச்சில் ஈடுபடுவதற்குண்டான நெருக்குதல் கொடுக்கவே தாக்குதல் நடத்தப்படுகிறது என்று பிரசாரம் செய்தனர். அதே பிரசாரத்தை உலகின் முன்னும் ராஜபட்ச வைத்தார். இதே வேளையில், கருணாவின் குழுவினரும் ராணுவத்துடன் சேர்ந்துகொண்டு கிழக்கில் தாக்கினர்.
நார்வே சமாதானக் குழுவிடம், இருதரப்பும் புகார்களை அளித்துக் கொண்டே தாக்குதல்களையும் நடத்திக்கொண்டிருந்ததால், சமாதானக்குழுவினர் திணறினர். இந்நிலையில், ராணுவத் தாக்குதலுக்கு ராஜபட்சவின் தம்பி கோத்தபய ஆலோசனை வழங்குபவராக மாறினார். அவரே பாதுகாப்புச் செயலாளராகவும் இருந்ததால், இது சுலபமாகியது. சரத் ஃபென்சேகாவும் இத் தாக்குதலுக்கு ஆலோசனை வழங்குபவராக இருந்தார்.
இரண்டாம் கட்ட ஜெனிவா பேச்சில் (ஏப்ரல் 2006) ராஜபட்ச பதவிக்கு வந்ததும் மூடப்பட்ட ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பதே புலிகளின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. அரசு, தனது போர் ஆயுதங்களில் ஒன்றாக உணவு, மருந்துப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்களின் போக்குவரத்தைத் தடுப்பதைப் புலிகள் கடுமையாக விமர்சித்தனர். இந்தப் புகாரை அரசு பிடிவாதமாக மறுத்தது. சிங்களத் தீவிரவாத இயக்கங்களைப் போலவே, புலிகளுக்கு எதிரான தமிழ்க் குழுக்களும் அரசு சார்பில் சேர்ந்து கொண்டன.
திருகோணமலை சந்தையைச் சேர்ந்த ஓரிடத்தில் வெடித்த குண்டில் 5 பேர் உயிரிழந்ததையொட்டி, இதற்குப் பதில் தாக்குதல் என்று இலங்கை ராணுவத்தைச் சேர்ந்த கடற்பிரிவினர், சிங்கள வன்முறையாளர் துணையுடன் தமிழர்களது வர்த்தக நிறுவனங்கள், அலுவலகங்களைத் தேர்ந்தெடுத்து பொருள்களைக் கொள்ளையடித்து, தீவைத்துக் கொளுத்தினர். இந்த வன்முறையில் திருகோணமலை நகரத்தில் தமிழர்கள் வசித்த இடங்கள் முழுவதுமே தீக்கிரையானது. இதில் 20 அப்பாவிகள் உயிர் துறந்தனர்.
சந்தைப் பகுதியில் குண்டு வைத்தது புலிகள் என்று சொல்லப்பட்டாலும், இதனைப் புலிகள் இயக்கம் மறுத்தது. 1983-ஆம் ஆண்டுக் கலவரத்தைப் போன்ற இக் கலவரத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தடுக்கவேண்டும் என்று, தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் ஏப்ரல் 25, 2006 அன்று இலங்கையின் ராணுவத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிர் இழந்ததுடன், ராணுவ உயர் அதிகாரியான சரத் ஃபொன்சேகா படுகாயமுற்று, இலங்கையில் வைத்தியம் செய்ய முடியாமல் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். இதற்கான பதில் தாக்குதலாக கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் விமானத் தாக்குதலை ராணுவம் நடத்தியது.
மே மாதத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்த கப்பல்படைத்தளத்தில், புலிகள் குண்டுவீசித் தாக்கியதில் பல கப்பல்கள் நாசமாயின. இலங்கை அரசு தீவிரமாக முயன்று, அமெரிக்கா, கனடாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய யூனியனையும் வற்புறுத்தி, புலிகள் இயக்கத்தை தடை செய்ய வைத்தது (மே-19).
இதனால் ஐரோப்பிய கூட்டமைப்பில் அடங்கியிருந்த 27 நாடுகளில், விடுதலைப் புலிகளின் சார்பில் வெளிப்படையாக இயங்கமுடியாத நிலையும், வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதும் நேர்ந்தது. இதனையொட்டி நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையும் நின்றுபோனது.
சரத் ஃபொன்சேகாவுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் குலதுங்க. இவர் தற்காலிகத் தளபதியானார். இவரும் மோட்டார் சைக்கிள் மோதலில் குண்டு தாக்கி உயிரிழந்தார்.
ஜூலை மாத இறுதியில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள மாவிலாறு பகுதியில் இருந்த தமிழர்கள், மாவிலாறு நீர்த் தேக்கத்தைக் கைப்பற்றி, சிங்களர் பகுதிக்குச் செல்லும் மதகின் கதவை மூடினார்கள். தமிழர் பகுதிகளுக்குச் சீரான நீர் வினியோகம் செய்யாததே இச் செயலுக்குக் காரணமாகக் கூறப்பட்டது.
இதில் தமிழர்கள் பக்கம் விடுதலைப் புலிகள் நின்றனர். சிங்களவர் தரப்பில் ராணுவம் இறங்கியது. இரு தரப்புக்கும் நேரடி மோதல் ஏற்பட்டது. அணையைத் திறந்துவிட்ட நிலையிலும் தாக்குதல் நீடித்தது.
ஆனாலும் தொடர் தாக்குதல் மூதூரில் மையம் கொண்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 17 சமூகத் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் படுகொலைச் சம்பவத்தை திசை திருப்ப முயன்று ராணுவம் தோற்றது. போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இந்தப் படுகொலைகளைச் செய்தது ராணுவத்தினரே என்று வெளிப்படையாகக் கூறியதுடன் கண்டிக்கவும் செய்தது.
இதனைத் தொடர்ந்து சர்வதேச நெருக்கடி காரணமாக வெளிநாட்டுப் பிரதிநிதி ஒருவர் இந்தச் சம்பவத்தை ஆராய வேண்டும் என்று சர்வதேச சமூகம் அறிவித்தது. முடிவில் இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற நீதிபதி பகவதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. வேறுவழியின்றி இதனை ஏற்ற ராஜபட்ச, நீதிபதி பகவதிக்கு போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட எந்தவித உதவியும் செய்ய மறுத்தார். அதாவது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தார்.
மாவிலாறு அணை விடுவிப்பு என்கிற ராணுவத் தாக்குதல், கிழக்கு மாவட்டத்தை முழுவதுமாகக் கைப்பற்றுவது என்று தீவிரமானது. திருகோணமலை கப்பல்படைத் தளம் மற்றும் துறைமுகம் ஆகியவை சம்பூர் பகுதியில் இருந்து தாக்கப்படலாம் என்ற யோசனையில் சம்பூர் மிகப் பெரிய தாக்குதலுக்கு ஆளானது. அதனையடுத்து வாகரை குறிவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பகுதிகளில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது ராணுவம். புலிகள் எதிர்த்தாக்குதல் தொடுத்தனர். இருதரப்பிலும் கணிசமான உயிர் இழப்புகள் ஏற்பட்டன. வாகரையில் கடும் யுத்தம் நடைபெற்றது. 60 ஆயிரம் பேர் உணவுக்கும், மருந்துக்கும் ஆலாய்ப் பறந்தனர். இந்தப் பகுதியில் உணவு விநியோகத்தை முற்றிலுமாக நிறுத்த ராஜபட்ச உத்தரவிட்டார். இவ்வகையாக மக்களுக்குத் கூட்டுத் தண்டனை வழங்கப்பட்டது.
ஆகஸ்டு 16-ஆம் தேதியன்று, இலங்கையின் போர் விமானங்கள் "செஞ்சோலை' என்னும் ஆதரவற்ற சிறுமிகள் புகலிடம் (1991-இல், போரில் தாய் தந்தையரை, உறவினர்களை இழந்தவர்களுக்காக பிரபாகரனால் உருவாக்கப்பட்டது) மீது பறந்து குண்டுகளை வீசியது. இதில் நூற்றுக்கணக்கான சிறுமிகள் படுகாயமுற்ற நிலையில், 61 சிறுமிகள் இறந்துபோனார்கள். இதேபோன்று, சிறுவர்களுக்கான ஆதரவற்றோர் இல்லமான "காந்தரூபன் அறிவுச்சோலை' மீதும் குண்டுகள் வீசப்பட்டன.
இவ்விரு படுகொலைகளுக்கும் உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இவ்வாறு கண்டனம் எழுந்ததும், குழந்தைப் போராளிகள் மீதுதான் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் அறிவித்தது.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் யூனிசெஃப் மற்றும் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு ஆகியவை சம்பவம் நடந்த இரு இடங்களையும் பார்வையிட்டு, அங்கிருந்தவர்கள் போராளிகள் அல்ல; குழந்தைகளே என்று இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கையிட்டன.
ராஜீவ் காந்தியின் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மூலம் இணைந்த பகுதியாக 18 மாதம் ஆட்சியதிகாரம் செய்யப்பட்ட மாகாணங்களை ஒன்றிணைத்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என என்.டபிள்யூ.எம். விஜயசேகரா (காந்தளாய்), எல்.பி. வசந்த பியதிச (உசுணை), எ.எல். முகமது புகாரி (சம்மாந்துறை) ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் மனுச் செய்தவர்கள், வாதம் புரிந்தவர்கள், எதிர்வாதம் புரிந்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அனைவருமே சிங்களவர்கள்.
இதுபோன்ற இனங்கள் சார்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வில் பெரும்பான்மை இனத்திலான நீதிபதிகளுடன் சிறுபான்மையோராகிய தமிழ் மற்றும் முஸ்லிம் நீதிபதிகள் கட்டாயம் இணைக்கப்படவேண்டும் என்பது திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டது.
இந்த வழக்கு, பல மாதங்களையும், ஆண்டுகளையும் தாண்டி நடந்துவந்த நிலையில் 27-10-2006 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 1989-இல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் விளைவாக எழுந்த 13-வது அரசியல் சாசனத் திருத்தம் சொல்கிற வடக்கு-கிழக்கு இணைந்த மாநிலமாக ஏற்பு என்கிற ஒன்று, அவசரச் சட்டத்தின் காலத்தின் நிறைவேற்றப்பட்டதால், மாகாணச் சபைச் சட்டத்தின் 42-ஆம் பிரிவின் 37 (1) (4) உட்பிரிவாக அதிபரால் வடக்கு-கிழக்கு இணைக்கப்பட்டமை செல்லாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 5 பேரும் தீர்ப்பளித்தனர்.
இதுகுறித்து, "இலங்கை தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும்' என்கிற நூலின் ஆசிரியர் கலாநதி ஆ.க.மனோகரன் கூறுகையில், "இனவாத சிங்கள சட்டத்தரணிகள், முழுமையான சிங்கள நீதிபதிகளைக் கொண்ட அமர்வு, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மீண்டும் பிரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலான தீர்ப்பு போன்றவற்றைப் பார்க்கும் எந்தத் தமிழ்மக்களும் உச்சநீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்' என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
177: நான்காம் கட்ட ஈழப் போர்!
வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பு செல்லாது என்ற தீர்ப்பின் மூலம் வீழ்த்தப்பட்டது புலிகள் அல்ல; ஈழத்தந்தை செல்வநாயகத்தின் கனவுதான் தகர்க்கப்பட்டது. தமிழ் மக்களின் தனித்தேசியம்-மொழி-காப்பாற்றப்பட வேண்டுமானால், பாரம்பரிய மண் காப்பாற்றப்பட வேண்டும் என்ற எண்ணத்தையும் இந்தத் தீர்ப்பு தகர்த்தது. அதுமட்டுமல்ல, இத் தீர்ப்பு அதிபர்களாக இருந்த ஜெயவர்த்தனா, பிரேமதாசா, விஜயதுங்க, சந்திரிகா ஆகியோரையும் முட்டாள்களாக்கிவிட்டது. ஆனால் மகிந்த ராஜபட்ச இத்தீர்ப்பு குறித்து மகிழ்ந்தார்.
அதேபோன்று, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு ஜே.வி.பி. பாராட்டுவிழா நடத்தி, "தமிழர்களுக்கு வரலாற்றில் மிகப் பெரிய தோல்வியைத் தந்துவிட்டோம்' என்று கூறியது. வழக்கைத் தொடுத்தவர்களுக்கு "ஜனபிரணாபிமானி' என விருதும் வழங்கப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அதிபர் மகிந்த ராஜபட்சவுக்கு எழுதிய கடிதத்தில், "வடக்கு-கிழக்கைப் பிரிப்பது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட உரிமையை மறுப்பதாகும். வடக்கு-கிழக்கை, தனித்தனியாகப் பிரித்ததன் மூலம் அங்கு வாழும் மக்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது மட்டுமன்றி 18 ஆண்டுகளுக்கு முன்பு இணைக்கப்பட்ட இவ்விரு மாகாணங்களையும் ராஜபட்ச அதிரபராக வந்தபின்பே பிரிக்கப்பட்டுள்ளது (தினக்குரல்-24-11-2006)' என்று குறிப்பிட்டு, உடனடி மாற்று நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தினார்.
இந்தியத் தரப்பில், 1987-ஆம் ஆண்டு ஜூலை மாதம் செய்துகொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு மதிப்பளித்து, இலங்கை அரசு செயல்படவேண்டும், அதன்படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொள்வதாக, வெளியுறவு அமைச்சகச் செயலாளர் சிவசங்கர் மேனன் வேண்டுகோள் விடுத்தார் (27-11-2006).
கியூபாவில் 10-12-2006 அன்று நடைபெற்ற அணிசேரா நாடுகள் மாநாட்டில் ராஜபட்சவைச் சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், "வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பை' வலியுறுத்தினார் என்று தினசரிகளில் (11-12-2006) செய்திகள் வெளியாயின. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா, சுரேந்திரகுமார் உள்ளிட்டோர் தில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து இணைப்பு குறித்து வலியுறுத்தியபோது, அதை அவர் ஏற்றார் என்ற செய்தியும் 11-1-2007 தேதியிட்ட நாளிதழ்களில் காணக் கிடைத்தது.
ஆனால் இலங்கையின் அதிபர் மகிந்த ராஜபட்ச, "கிழக்கு மாகாணத்தின் தலைவிதியை அம்மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் வடக்குடன் இணைந்திருப்பதா அல்லது தனியாக இருப்பதா என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர, நாடாளுமன்றமோ, அதிபரோ, நீதிமன்றமோ அல்ல' என்று கூறினார்.
தமிழர்களின் கேள்வியோ, அத்தீர்வை கிழக்கில் உள்ள சிங்களவர்கள் ஏன் தீர்மானிக்க வேண்டும் என்பதாக இருந்தது.
விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் ஓயாத போராட்டத்துக்கிடையே, சிறுநீரகப் பாதிப்பால், அந்நோய் கொடுமையின் உச்சத்தை அடைந்த நிலையில் லண்டனில் உயிரிழந்தார் (டிசம்பர் 14, 2006).
'எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் ராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயல்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு...
...தீவிரம் பெற்றுள்ள எமது விடுதலைப் போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது...
...பாலாண்ணையை நான் ஆழமாக நேசித்தேன். விடுதலை இயக்கம் என்ற மாபெரும் குடும்பத்தில் ஒரு மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்கள் வாழ்ந்தவர் அவர். நானும் அவரை அப்படித்தான் நோக்கினேன்...
...ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராக எல்லாவற்றுக்கும் மேலாக எனது உற்ற நண்பனாக இருந்து எனக்கு ஊக்கமும் உத்வேகமும் அளித்தவர். ஆலோசனையும் ஆறுதலும் தந்தவர்...
...எமது அரசியல் ராஜதந்திர முன்னெடுப்புகளுக்கு மூலாதாரமாக முன்னால் நின்று செயல்பட்டவர்...
...பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து "தேசத்தின் குரல்' என்ற மாபெரும் கெüரவப்பட்டத்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.'' எனறு பிரபாகரன் தமது அஞ்சலியில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் 2007-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், தங்களின் முதல் வான்படைத் தாக்குதலைக் கட்டுநாயக்கா விமானப்படை விமானதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானங்கள் மீது நிகழ்த்தினர். அதிர்ச்சியிலிருந்து மீண்டு, தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க ராணுவமும் அரசும் தீவிரமாக முயன்ற நிலையில், ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது முறையாகவும் வான்படைத் தாக்குதல் நடைபெற்றது.
நாலைந்து பேர் அமர்ந்து பயணம் செய்யக்கூடிய இலகுரக விமானம் புலிகளுக்கு எப்படிக் கிடைத்தது என்ற ஆராய்ச்சியில் இலங்கை அரசு ஈடுபட்டது. செக் குடியரசில் இருந்து விமானம் வாங்கப்பட்டு, அதைப் பிரித்து, இலங்கை கொண்டுவந்து திரும்ப விமானமாகச் சேர்த்திருக்கிறார்கள் என்றது உளவுத்துறை. அப்படியென்றால் இதில் உள்ள விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தில் புலிகள் தேர்ந்தது எவ்வாறு என்று எதிர்க்கட்சிகள் ராஜபட்சவைக் குடைந்து எடுத்தன.
இந்த விமானத் தாக்குதல் சாதாரணமானதல்ல; இனி இந்தியாவுக்கும் ஆபத்து என்று புலிகளின் எதிர்ப்பாளர்கள், குரல் கொடுத்தார்கள்.
கிழக்கு மாவட்டத்தில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளை இலங்கை ராணுவம் "அரசின் உயர்பாதுகாப்பு வலையம்' என அறிவித்தது. ராணுவத்தின் கோரப்பிடியில் சிக்க விரும்பாத அப்பகுதி மக்கள், இறுதியாக இரண்டரை லட்சம் பேர் அகதிகளாக அவ்விடங்களைவிட்டு அகன்றனர் (15-1-2007).
கிழக்குப் பகுதி முழுவதையும் கைப்பற்றிவிட்டோம் (2-6-2007) என்று ராணுவம் அறிவித்த அடுத்த மாதத்தில் புலிகள் வசமிருந்த கடைசி நகரான தொப்பிக்கல்லை 11-7-2007 அன்று பிடித்து, கிழக்குப் பகுதியை முழுவதுமாகப் பிடித்ததாகவும் ராணுவம் அறிவித்தது.
புலிகளின் வான்படை அக்டோபர் 22, 2007 அன்று அனுராதபுரம் தளத்தில் குண்டுவீச்சை நடத்தியது. 5 பேர் பலியானார்கள். பலருக்குக் காயம் ஏற்பட்டது. இரண்டு எம்.ஐ. ரக ஹெலிகாப்டர்கள் சுக்குநூறாகச் சிதைந்ததாகப் பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. தொடர்ந்து இலங்கையில் மீண்டும் அவசரநிலைப் பிரகடனம் அறிவிக்கப்பட்டது.
ஆதரவற்ற சிறுமிகளின் இல்லமான செஞ்சோலைக்கு சுப.தமிழ்ச்செல்வன் சென்ற சமயம், புலிகளின் தலைவர் பிரபாகரன் அங்கிருக்கிறார் என்ற உளவுத் தகவலையடுத்து, இலங்கையின் விமானப்படை விமானங்கள் அங்கு பறந்து சென்று வானத்தை வட்டமிட்டன. தொடர்ந்து நடத்திய குண்டுவீச்சில் சுப.தமிழ்ச்செல்வன் உயிரிழந்தார் (நவம்பர் 27, 2007). அவருடன் இருந்த 5 போராளிகளும் குண்டுவீச்சுக்குப் பலியானார்கள். இந்தத் தாக்குதலில் பிரபாகரனும் உயிரிழந்திருக்கலாம் என்ற ஊகச் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாயின.
இவ்வகைத் தாக்குதல்கள் அனைத்தும் யுத்தமீறல்கள் கணக்கில்தான் வருகின்றன.
உலகின் ஆதிக்கச் சக்திகளான அமெரிக்கா, இங்கிலாந்து ஆயுத உதவி வழங்க,
உலகம் முழுவதும் இருக்க இடமின்றி ஓட, ஓட விரட்டப்பட்டு முகாம்களில் வாழ்க்கையைத் தொலைத்து, முகாம்களிலேயே தங்களது சுதந்திரப் போராட்டத்தைத் தொடர்ந்து, தங்களுக்கென ஒரு நாடு கண்ட இஸ்ரேலும்,
இந்திய விடுதலைப் போராட்டத்தில் தங்களது இனத்துக்கென ஒரு பிரிவினையாகத் தனிநாடு கண்ட பாகிஸ்தானும்,
மாசேதுங்கின் நீண்ட பயணத்தின் மூலம் புரட்சி நடத்தி "செஞ்சீனம்' என மக்கள் அரசைக் கண்ட சீனாவும்,
27 நாடுகள் மூலம் இணைந்து தங்களது இருப்பைக் காட்டும் வகையாக அமைந்த, ஐரோப்பிய யூனியனும் ஆதரவளிக்க,
காந்தியின் அகிம்சைக் கொள்கைகளால் சுதந்திரம் கண்ட இந்தியாவினது ராணுவப் பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் செயற்கைக்கோள் தகவல் உதவியுடன் ராணுவ ஆலோசனையும் வழங்கப்பட்டு,
சில தமிழ்க் குழுக்களின் அனுசரணையுடனும் சிலரின் கண்டும் காணாத போக்கினாலும் துணிவு கொண்ட மகிந்த ராஜபட்ச,
தாய் மண்ணுக்காக, தமிழினத்துக்கான வாழ்வுரிமையை நிலைநாட்ட விரும்பும் விடுதலைப் புலிகளுடனான நான்காம் கட்ட ஈழப் போரை,
2008-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாளுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை முறித்துக்கொள்ளும் என்ற செய்தியுடன் ராஜபட்ச தொடங்கினார்.
தமிழினத்தை அழித்து ஒழிக்கும் ராஜபட்சவுடன் மேற்கண்ட நாடுகள் கைகோர்த்தது எதற்காக? ஏன்? என்ற கேள்விகளும் தொடர்வது போன்றே, நான்காம் கட்ட ஈழப் போரும் தொடர்கிறது...
வேலுப்பிள்ளை பிரபாகரன் 2006-ஆம் ஆண்டு நிகழ்த்திய மாவீரர் தின உரை!
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று மாவீரர் நாள். இந்நாளை எமது மாவீரர்களின் பெருநாளாக, எமது தியாகிகளின் திருநாளாக, எமது தேசத்தின் தேசிய நாளாக, எமது இனம் சுதந்திரம் வேண்டி உறுதிபூணும் புரட்சிநாளாக நாம் கொண்டாடுகிறோம்.
எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.
எமது மாவீரர்கள் மகத்தான லட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கிற உயரிய லட்சியத்திற்காக வாழ்ந்து, அந்த லட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள்.
எமது வீர விடுதலை வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையில் நாம் இன்று நிற்கிறோம். மிகவும் நீண்ட, கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத சவால்களை, எதிர்பாராத திருப்பங்களை எதிர்கொண்டு நிற்கிறோம்.
நாம் அமைதி காத்த இந்த ஆறு ஆண்டுக்காலத்தில் இந்த நீண்ட காலவிரிப்பில் தணியாத நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் தமிழரின் தேசியப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டதா? சிங்கள ஆட்சியாளர்களின் மனவுலகில் மாற்றம் நிகழ்ந்ததா? எம்மக்களுக்கு நிம்மதி கிடைத்ததா?
எத்தனையோ கனவுகளோடு எத்தனையோ கற்பனைகளோடு நீதி கிடைக்குமெனக் காத்திருந்த தமிழருக்குச் சாவும் அழிவுமே பரிசாகக் கிடைத்திருக்கின்றன.
நோயும் பிணியும் பசியும் பட்டினியும் வாட்ட, அகதி முகாம்களில் அல்லற்படுகிறார்கள். எம்மக்களது உயிர்வாழ்விற்கான உணவையும் மருந்தையும் மறுத்து, பாதையைப் பூட்டி, பட்டினி போட்டுப் படுபாதகம் புரியும் சிங்கள அரசு எம்மக்களுக்குக் கருணைகாட்டி, காருண்யம் செய்து, அரசியல் உரிமைகளை வழங்கிவிடும் என யாரும் எதிர்பார்க்கமுடியாது.
பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளால் சிங்கள இனம் வழிதவறிச்சென்று தொடர்ந்தும் பேரினவாதச் சகதிக்குள் வீழ்ந்து கிடக்கிறது. இதனால், சிங்கள, பெüத்தப் பேரினவாதம் இன்றொரு தேசியத் சித்தாந்தமாகச் சிங்கள தேசத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது. இதனால், சிங்களத் தேசம் போர்வெறி பிடித்துச் சன்னதமாடுகிறது. போர்முரசு கொட்டுகிறது.
எமது விடுதலை இயக்கமும் சரி, எமது மக்களும் சரி என்றுமே போரை விரும்பியதில்லை. நாம் சமாதானத்தையே விரும்புகிறோம். இதனால்தான் திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு தடவைகள் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறோம்.
சமாதானத்திற்கான முன்னெடுப்புகளையும் முன்முயற்சிகளையும் நாமே முதலில் மேற்கொண்டோம். முதன்முதலாகப் போர்நிறுத்தத்தை ஒருதலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்தி, பேச்சுகளில் நியாயமற்ற நிபந்தனைகளையோ, நிர்பந்தங்களையோ போடாது வரம்புகளையோ, வரையறைகளையோ விதிக்காது காலக்கட்டுப்பாடுகளைத் திணிக்காது அமைதி முயற்சிகளை முன்னெடுத்தோம். இவற்றை நாம் பலவீனமான நிலையில் நின்று மேற்கொள்ளவில்லை. வன்னிப் பெருநிலப்பரப்பையும் இயக்கச்சிலி ஆனையிறவுக் கூட்டுத்தளத்தையும் மீட்டெடுத்தோம். சிங்கள ராணுவத்தின் அக்கினிகீல முன்னேற்ற நடவடிக்கையை முறியடித்தோம்.
சமாதான முயற்சி ஆரம்பித்ததிலிருந்து இன்று வரையான ஐந்து ஆண்டு காலங்களில் ரணில், சந்திரிகா, மகிந்த என மூன்று அரசுகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கின்றன. ஒவ்வொரு தடவையும் ஆட்சிகள் மாற மாற சமாதான முயற்சிகளும் ஒரு சிறையிலிருந்து மீட்கப்பட்டு இன்னொரு சிறைக்குள் தள்ளப்பட்டன.
முதலில், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு ஆறு மாதங்கள் அமைதிப் பேச்சு நடாத்தினோம். கடந்த அரசுகளைப் போலவே ரணில் அரசும், வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றாது, ஏற்றுக்கொண்ட ஒப்பந்த விதிகளையும் கடப்பாடுகளையும் செயல்படுத்தாது, காலத்தை இழுத்தடித்தது. ஒப்பந்த விதிகளுக்கமைய மக்களது வாழிடங்கள், வழிபாட்டிடங்கள், பாடசாலைகள் மற்றும் மருத்துவமனைகளிலிருந்து தமது படைகளை விலக்கிக்கொள்ளாது, அவற்றை உயர் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தி, மக்கள் தமது வாழிடங்களுக்குத் திரும்புவதற்கு நிரந்தரமாகத் தடைபோட்டது.
எமது மக்களின் மனிதாபிமானப் பிரச்னைகளைத் தீர்த்துவைக்க மறுத்த ரணில் அரசாங்கம் எமது விடுதலை இயக்கத்தை உலக அரங்கிலே ஒதுக்கி, ஓரம்கட்டுகிற வேலையையும் ரகசியமாக மேற்கொண்டது. தமிழர் தாயகத்தில் ஒரு முறையான நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முன்னரே உதவி வழங்கும் நாடுகளின் மாநாடுகளைக் கூட்டி, உதவிப் பணத்தைப் பெற்று, தென்னிலங்கையைக் கட்டியெழுப்பவும் திட்டம்போட்டது.
சில உலக நாடுகளின் உதவியோடு எமக்கு எதிரான பாதுகாப்பு வலையைக் கட்டியெழுப்பி, அதற்குள் எமது சுதந்திர இயக்கத்தைச் சிக்கவைத்து, அழித்தொழிக்கவும் ரணில் அரசாங்கம் சதித்திட்டம் தீட்டிச் செயல்பட்டது.
சந்திரிகா, எமது வரைவின் அடிப்படையில் பேச்சுகளை ஆரம்பிக்க மறுத்ததோடு ஒட்டுக்குழுக்களை அரங்கேற்றி புதிய வடிவில் புலிகளுக்கு எதிரான நிழற்போரை அவர் தீவிரப்படுத்தினார். இந்த ஆயுதக்குழுக்களின் அராஜகத்தால் தமிழர் தாயகம் வன்முறைக் களமாக மாறியது.
இறுதியாக, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கென கைச்சாத்திடப்பட்ட பொதுக்கட்டமைப்பையும் சந்திரிகா அரசு செயல்படுத்தவில்லை. முழுக்க முழுக்க மனிதாபிமான நோக்கங்கொண்ட இந்தப் பொதுக்கட்டமைப்பை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் வரையறைகளைக் காட்டிச் சிங்களப் பேரினவாத நீதிமன்றம் நிராகரித்தது.
மகிந்த ராஜபட்ச, புலிகளை அழிக்கும் இலக்குடன் ஒருபுறம் போரைத் தீவிரமாக முடுக்கிவிட்டு, மறுபுறம் சமாதான வழித் தீர்வு பற்றிப் பேசுகிறார். போரும் சமாதானமும் என்ற இந்த இரட்டை அணுகுமுறை, அடிப்படையிலேயே தவறானது. எந்தப் போராட்டச் சக்தியுடன் பேசிப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டுமோ அந்தப் போராட்டச் சக்தியை அந்நியப்படுத்தி, அழித்துவிட்டு, பிரச்னைக்குத் தீர்வு காணலாம் என்பது என்றுமே நடக்கப்போவதில்லை. மகிந்தவின் அரசு படைபலத்தை அடிப்படையாகக் கொண்டே, தமிழரின் தலைவிதியை நிர்ணயிக்க விரும்புகிறது.
மகிந்தாவின் அரசு தமிழரின் நீதியான போராட்டத்தைத் திரிவுபடுத்தி, இழிவுபடுத்தி உலகெங்கும் பொய்யான விஷமச் பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறது.
அதன் பொய்யான பரப்புரைகளுக்கு மசிந்து ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டன.
அமைதி முயற்சிகளுக்கு உதவுவதாகக் கூறிக்கொள்ளும் சில உலகநாடுகள் சிங்களத்தின் இனஅழிப்புப் போரைக் கண்டிக்காது, ஆயுத, நிதி உதவிகளை வழங்கி, அதன் போர்த்திட்டத்திற்கு முண்டுகொடுத்து நிற்கின்றன. மகிந்த உள்நாட்டில் தமிழின அழிப்புப் போரை நடாத்திக்கொண்டு, உலகநாடுகளுக்குச் சமாதானம் விரும்பும் ஓர் அமைதிப் புறாவாகத் தன்னை இனம்காட்ட முனைகிறார். எந்தவொரு பிரச்னைக்கும் முகங்கொடாது, தட்டிக்கழிக்க விரும்பினால் ஒரு விசாரணைக் கமிஷனையோ, ஒரு பாராளுமன்றத் தெரிவுக்குழுவையோ அமைத்து, சர்வகட்சி மாநாட்டையோ ஒரு வட்டமேஜை மாநாட்டையோ நடத்தி அதனை முடிவில்லாமல் இழுத்தடிப்பது சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் பாரம்பரியம். இதனைத்தான் மகிந்தவும் செய்கிறார். அனைத்துக்கட்சி மாநாட்டிற்குள் மகிந்த பதுங்கிக்கிடக்கிறார்.
தென்னிலங்கையின் அரசியலை ஆட்டிப்படைத்துவரும் இரு பிரதானச் சிங்களக் கட்சிகளும் சாராம்சத்தில் இனவாதக் கட்சிகளே. எதிரும் புதிருமாக நின்று, இனக்கொலை புரிந்த இரு கட்சிகளும் இன்று ஒன்றாகக்கூடி, ஒன்றுக்கொன்று சேவகம் செய்து, அதிகாரக் கூட்டமைத்திருப்பது தமிழரை அழித்தொழிப்பதற்கேயன்றி வேறொன்றிற்குமன்று.
அரசியல் தீர்வை நோக்கி நகரக்கூடிய இடைவெளியைக் காட்டியிருக்கிறோம். நிலவதிர்வுப் பேரலைகள் தாக்கியபோது ஒரு தடவையும் மகிந்த ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது இன்னொரு தடவையுமாக இரண்டு தடவைகள் எமது போர்த்திட்டங்களைத் தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, சமாதானத்திற்கு மீண்டும் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கியிருக்கிறோம். இதனை உலகம் நன்கு அறியும்.
எமது மக்களது அரசியல் அபிலாஷைகளைத் திருப்திசெய்யும் ஒரு நீதியான தீர்வை வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலத்திற்குள் முன்வைக்குமாறு இறுதியாகவும் உறுதியாகவும் ஜனாதிபதி மகிந்தவை நான் கோரியிருந்தேன். அந்த அவசர வேண்டுகோளை நிராகரித்துப் புறமொதுக்கிவிட்டு, கடந்தகாலச் சிங்களத் தலைமைகள் போன்று மகிந்தவும் தமிழின அழிப்புப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கிறார். தமிழர் தேசத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்திருக்கிறார்.
சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்னைக்குச் சமாதான வழியில் ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப் போவதில்லை என்பது இன்று வெட்டவெளிச்சமாகியிருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்துசென்றாலும் எத்தனை யுகங்கள் ஓடி மறைந்தாலும் சிங்களத் தேசத்தில் மனமாற்றம் நிகழப்போவதில்லை என்பதும் தமிழருக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதும் இன்று தெட்டத்தெளிவாகியிருக்கிறது.
சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது. எனவே, இந்த விடுதலைப் பாதையில் சென்று, சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதென இன்றைய நாளில் நாம் தீர்க்கமாக முடிவுசெய்திருக்கிறோம். எமது அரசியல் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம்.
இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மிகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்குத் தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயல்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்.
எமது தேசத்தின் விடுதலைக்காகச் சாவை அரவணைத்து சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய நன்நாளில் எந்த லட்சியத்திற்காக ஆயிரமாயிரம் விடுதலைவீரர்கள் களப்பலியானார்களோ அந்த லட்சியத்தை அடைந்தே தீருவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.
சமகாலப் போர் குறித்த செய்திகள் யாவும் வாசகர்கள் அறிந்ததுதான். என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்பதை, காலம் தெளிவுபடுத்தும்.
இத்தொடர் குறித்த வாசகர் கருத்துகளை pavaichandran@gmail.com என்ற இணையதள முகவரிக்கு எழுதலாம்.
- பாவை சந்திரன்
தமிழீழத்தை அடைவதையே லட்சியமாகக் கொண்டிருந்த ஒரே காரணம்தான் அந்த மக்களை ஒருங்கிணைத்து எத்தனை எத்தனையோ தடைகளையும், அடக்குமுறைகளையும், எதிர்ப்புகளையும் மீறிப் போராட வைத்தது. வெற்றிகளும் தோல்விகளும் மாறிமாறி ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் அவர்களது போராட்ட உணர்வை சற்றும் குறைக்கவோ அகற்றவோ இல்லை. தோல்விகள் தாற்காலிகமானவை; வெற்றி மட்டுமே நிரந்தரம் என்பதும், தமிழீழம் மட்டுமே தங்களது இறுதி லட்சியம் என்பதும் விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ஈழத் தமிழர்களின் உதிரத்திலும் இரண்டறக் கலந்துவிட்ட உணர்வாக இன்றுவரை தொடர்கிறது என்பதுதான் சத்தியம்!
போராட்டம் தொடர்கிறது..... தொடர் நிறைவு பெற்றது!
- ஆசிரியர்
மூலம்: பாவை சந்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.