Sunday, 31 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 170 - 174


170: "நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்!'
பிரபாகரன் பேட்டி தொடர்கிறது...
""சமாதானப் பேச்சுக்கு அமெரிக்கா இடையூறு செய்கிறதா?''
""நான் அப்படி நினைக்கவில்லை''
""மேற்குலக நாடுகள் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்ததால் ஆயுதங்கள் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டு சமாதானத்துக்கு வந்ததாகக் கருதலாமா?''
""ராணுவத்தினருடன் நடத்தும் மோதல் மற்றும் போர்களில் இருந்தே எமக்கு ஆயுதங்கள் கிடைக்கின்றன. ஆனையிறவுத் தாக்குதலிலும், முல்லைத்தீவு தாக்குதல்களிலும் சிறியரக ஆயுதங்களில் இருந்து கனரக ஆயுதங்கள் வரை பெற்றிருக்கிறோம்''

(ராணுவத்தினரிடமிருந்தே ஆயுதங்களைப் புலிகள் பறித்தனர் என்பது புரிந்து, பத்திரிகையாளர்களிடையே சிரிப்பலை எழுந்தது).
""இந்தியா உங்கள் மீது விதித்துள்ள தடை குறித்து?''
""எங்கள் மீதான தடையை இந்திய அரசு நீக்கவேண்டும். இதை சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாங்கள் வற்புறுத்துவோம். இந்தியாவுடன் நல்லுறவையே விரும்புகிறோம். நாங்கள் இந்தியாவைப் புறக்கணிக்கவில்லை. சமாதானப் பேச்சுகளில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க முன்வரவேண்டும் என்றே விரும்புகிறோம். இந்திய அமைதிப்படை எங்கள் மக்களுக்கு வேதனைதரும் நினைவுகளை அளித்தபோதிலும் எங்கள் மக்கள் இப்போதும் இந்தியாவை நேசிக்கிறார்கள். இந்தியத் துணைக்கண்டத்தில் பிராந்திய வல்லரசாக இருந்துவரும் இந்தியாவுடன் எங்களது உறவு கலாசார ரீதியானது''
""மலையகத் தமிழர்கள் பற்றி?''
""இந்திய வம்சாவளித் தமிழருடனான உறவையும் வளர்த்துக் கொள்ளவே விரும்புகிறோம். எங்களைச் சந்தித்துப் பேச அழைப்பு விடுத்துள்ளோம்''
""உங்களைச் சந்திக்க வரும் மலையகப் பிரதிநிதிகள் உண்மையான பிரதிநிதிகள் அல்லவே!''
""மலையகத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேசாமல் வேறு யாருடன் பேசுவது?''
""இடைக்கால நிர்வாக அரசு கோரிக்கை ஏன்?''
""இன்றைய சூழ்நிலையில் ரணில் அரசால் நிரந்தரத்தீர்வை நோக்கிச் செல்லமுடியாது. அவர் பிரதமர் என்றாலும்; அதிபர் அல்ல. அதிபரிடம் அதிகாரம் புதைந்துள்ளது. எனவேதான், இடைக்கால நிர்வாக அரசு என்ற திட்டத்தை வலியுறுத்துகிறோம்''
""வடபகுதியில் இருந்து முஸ்லிம்கள் காலி செய்யவேண்டும் என்று கூறப்பட்டதே?''
""வடபகுதியில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியேற்றப்பட்டதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். இஸ்லாமியர், மலையகத் தமிழர் பிரச்னைகளுக்கான தீர்வு குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தப்படும்''
""முஸ்லிம்களில் யாரும் பிணைக்கைதிகளாக உள்ளார்களா?''
""அப்படி யாரும் இல்லை. ஆதாரம் இருந்தால், பெயர் விவரங்கள் இருந்தால் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப. தமிழ்ச்செல்வனிடம் கொடுக்கலாம்''
""முஸ்லிம்கள் வடபகுதியில் எப்போது அனுமதிக்கப்படுவார்கள்?''
""யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இஸ்லாமியர்கள் மீண்டும் திரும்பி வருவதற்கான புறச்சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டபின் அவர்கள் திருப்பி அழைக்கப்பட்டு தமிழர்களுடன் இணைந்து வாழ அனுமதிக்கப்படுவார்கள் என உறுதியளிக்கிறோம்''
""அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் குறித்து?''
""செப்டம்பர் 11-இல் அமெரிக்கா மீதான தாக்குதலை நாங்கள் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளோம். அமைதியை விரும்பும் மதத்தின் பேரால் மனித உயிர்கள் கொல்லப்படுவதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். நாமும் இப்போது சமாதான முயற்சியில் வெளிநாட்டு அரசின் உதவியுடன் ஈடுபட்டுள்ளோம். இது போன்ற தற்கொலைத் தாக்குதல்கள் பற்றிப் பேச விரும்பவில்லை''
""தற்போதைய முயற்சிகள் குறித்து...''
""தற்போதைய சமாதான முயற்சிகளில் திருப்தியடைகிறேன். ஸ்ரீலங்கா பிரதமரும் உறுதியான முடிவுகளை எடுக்கிறார். அதன்மூலம் சமாதான முயற்சிகள் வெற்றிகரமாக நகரும் என்று நம்புகிறேன்''
""சுயாட்சி வழங்கப்படாது என்றால்?''
""சுயாட்சி, சுயநிர்வாகம் போன்ற எங்கள் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே சுயநிர்ணய உரிமையை நாங்கள் வலியுறுத்தினோம். அதாவது தமிழர்களுக்கான சுயாட்சி அல்லது பிரிவினை என்பதே இதன் சாராம்சம். அரசு சுயநிர்வாகத்தைத் தொடர்ந்து மறுத்தால் பிரிவினைதான் வழி''
""அப்படியென்றால் சமாதானத்தை எதிர்க்கிறீர்களா?''
""பொதுவாக எங்களது போராட்டம் சமாதானத்தில்தான் ஆரம்பித்தது. எங்களுடைய முந்தைய தலைவர்கள்கூட சமாதான வழியில் போராடி எங்களுடைய உரிமைகளை வென்றெடுக்கலாம் என்று முயற்சி செய்துள்ளார்கள். ஆனால் தொடர்ந்தும் அவர்களுடைய அந்த சமாதான முயற்சிகள் மறுக்கப்பட்டு இனவாதம் எங்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டதால் நாங்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சமாதான முயற்சிகளைத் தவிர்த்ததில்லை''
""பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்?''
""தோல்வியடைந்தாலும் தொடர்ந்து சமாதான முயற்சிகளை மேற்கொள்வோம்''
""உங்களது சமாதானப்பேச்சு ஆர்வம், அமெரிக்க இரட்டைக்கோபுரம் தகர்ப்பையொட்டி அமைந்ததா?''
""அமெரிக்கா மீதான செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பே சமாதானத்துக்கான நல்லெண்ண முயற்சிகளாக ஒருதலைப்பட்ச யுத்த நிறுத்தத்தை நாங்கள் அறிவித்துவிட்டோம்''
""வடக்கு-கிழக்கு நிர்வாகம் யார் பொறுப்பில் இருக்கும்?''
""பேச்சுவார்த்தைக்கான ஆரம்ப நிலையே தற்போது உள்ளது. நிர்வாகம் பற்றிப் பேச இயலாது''
""இடைக்கால அரசு குறித்து?''
""அதுகுறித்து தாய்லாந்தில் பேச உள்ளோம்''
""ராஜீவ் காந்தி கொலை குறித்து...''
""ராஜீவ் காந்தி கொலை, 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வேதனை தரும் துன்பியல் சம்பவம் ஆகும்''
""ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உங்களைப் பிடிக்க, சர்வதேச போலீஸ் உதவி நாடப்பட்டுள்ளதே?''
""ராஜீவ் காந்தி கொலை வழக்கு இருக்கும்வரை இதுகுறித்து கருத்து கூறமுடியாது''
""முந்தைய பேச்சுவார்த்தைகளுக்கும் இந்தப் பேச்சுவார்த்தைக்கும் என்ன வித்தியாசம்?''
""இது முந்தைய பேச்சுவார்த்தைகளைவிட வித்தியாசமான அணுகுமுறையாக இருக்கும். ஏனெனில் இந்தப் பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பாக நார்வே நாடு தொடர்பாளராகப் பங்கேற்றுள்ளது. இம்முறை பேச்சுவார்த்தை ஓரளவு சுமுகமாக இருக்கும் என்றே நம்புகிறோம்''
""பேச்சுவார்த்தையில் அதிபர் சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நினைக்கிறீர்களா?''
""சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நாங்கள் நினைக்கவில்லை. அவர் அப்படி ஏதும் செய்தால் அதைப் பார்த்துக்கொள்வது ரணிலின் பொறுப்பு''
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு குறித்து சிங்களப் பத்திரிகையாளர் ரஞ்சன் பெரேரா கூறுகையில், "பிரபாகரனின் செய்தியாளர் மாநாடு வரலாறு காணாத நிகழ்ச்சியாகும். 300-க்கும் மேற்பட்ட உள்நாட்டு-வெளிநாட்டு செய்தியாளர்கள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்து, மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாடு மூலம் உலகில் விடுதலைப் புலிகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை உணரமுடிந்தது. பிரபாகரனைப் பற்றி எவ்வளவோ கதைகளும், கற்பனைகளும் பரவியிருந்த வேளையில் செய்தியாளர்கள் மாநாட்டில் மிகச் சாதாரணமாகக் காட்சியளித்தார். அவரது ஒவ்வொரு சொல்லும் அவரைப் பற்றிய தவறான கருத்துகளைப் போக்கின என்றே சொல்ல வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார் (நன்றி: தென்செய்தி).
171: தாய்லாந்தில் முதல்கட்டப் பேச்சுவார்த்தை!
போர் நிறுத்த ஒப்பந்தமும், பிரபாகரனின் பத்திரிகையாளர் சந்திப்பும் முடிந்த நிலையில், பாலசிங்கம் தனது சிகிச்சையைத் தொடர லண்டன் செல்லவேண்டியிருந்தது. வன்னிப் பகுதிக்கு அவர்கள் வந்திறங்கியபோது உண்டான இயல்பு சூழல் திரும்பும்போது இல்லாமல் போனது. இலங்கை கடற்படையினரின் தொல்லை காரணமாக சில இழுத்தடிப்புகளுக்குப் பின்னர் பாலசிங்கமும், அடேலும், நார்வே நாட்டு வெளியுறவுத்துறை அலுவலர் செல்வி.ஜெர்ஸ்தி ட்ரோம்ஸ்டலுடன் கடல் விமானத்தில் ஏறி மாலத்தீவு சென்றனர். அங்கே ஒருநாள் தங்கி, மறுநாள் லண்டன் சென்றனர்.
அதிபர் சந்திரிகாவின் பொறுப்பின்கீழ் இருந்த ராணுவத் தளபதிகள் ஒப்பந்தப்படி நடக்க மறுத்தார்கள். சில பொது இடங்களில் இருந்து வெளியேற மறுத்தனர். கடலில் மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதியளிக்க கடற்படை மறுத்தது. புலிகளின் மீதான தடையும் விலக்கப்படவில்லை. இந்த நிலையில், ஜூனில், தாய்லாந்தில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள பிரபாகரன் விரும்பாததால், இந்தப் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நார்வே தூதுக்குழுவினர், தாய்லாந்து பேச்சுவார்த்தை குறித்து விவாதிப்பதற்காக லண்டனில் பாலசிங்கத்தைச் சந்தித்தனர். அவர்களிடம், ஒப்பந்தத்தின் நிலை குறித்தும், ஒப்பந்தம் சரிவர நிறைவேற்றப்படாதது குறித்தும் பாலசிங்கம் கவலை தெரிவித்தார்.
இதனையொட்டி இலங்கையின் அரசுப் பிரதிநிதியான அமைச்சர் மிலிண்டா மோரகோடா நார்வே குழுவினருடன் வந்து பாலசிங்கத்தைச் சந்தித்தார். இதன் தொடர் நிகழ்வாக நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் இருதரப்புப் பிரதிநிதிகளும் சமாதானக் குழுவினர் முன்னிலையில் தாய்லாந்துப் பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்துப் பேசினர்.
இதற்கிடையே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது உள்ளிட்டவற்றை உடனடியாகத் தீர்ப்பது என்றும் முடிவானது. அதன்படி 2002, செப்டம்பர் 6-ஆம் தேதியன்று புலிகள் மீதான தடையை நீக்கி பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரபோனே அரசிதழில் வெளியிட்டார்.
உடனடியாக, நார்வே சமாதானக்குழுவின் சார்பில் செப்டம்பர் 16-18 தேதிகளில் புலிகள்-அரசுத்தரப்புப் பேச்சை தாய்லாந்தில் நடத்த இரு தரப்பும் ஏற்றுக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து, நார்வே போன்ற நாடுகளைப் போலவே, முடியாட்சியும் நாடாளுமன்ற ஆட்சிமுறையும் தாய்லாந்திலும் நடைபெற்றதே இந்த ஏற்பாட்டுக்குக் காரணம். தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கிலிருந்து 50 கி.மீ. தொலைவிலுள்ள "ஜோம் தாய்' என்ற பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலான "அம்பாசடர் சிட்டி'யில் நடைபெற்றது.
இலங்கை அரசின் சார்பில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், மிலிண்டா மோரகோடா மற்றும் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டனர். புலிகள் சார்பில் பாலசிங்கம் தம்பதியினர் கலந்துகொண்டனர். தாய்லாந்து நாட்டின் நிரந்தர வெளியுறவு அமைச்சர் தேஜ் பன்னாக் தொடக்க உரையாற்றுகையில், "இலங்கையில் அமைதியும் சமாதானமும் நிகழ, எங்களின் பங்களிப்பாக இந்தப் பேச்சுவார்த்தை இங்கே ஆரம்பமாகிறது. இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய வேண்டும்' என்றார்.
அடுத்து பேசிய இலங்கை அமைச்சர் பீரிஸ், "இலங்கையில் 50 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இனப் பிரச்னைக்குத் தீர்வு காண, சர்வதேச அரங்கில் பேச்சுவார்த்தையாக வெளிப்பட்டிருக்கிறது. யுத்தத்தால் இப்பிரச்னை தீராது என்பது எங்களது முடிவு. அதில் உறுதியாக இருப்பதன் காரணமாகவே நார்வேயின் இந்த முயற்சியை ஏற்றோம் என்று தெரிவித்தார்.
பாலசிங்கம் பேசுகையில், "புதிய அரசு பொறுப்பேற்றதும் நார்வே தரப்பு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு அளித்தது. போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அதனை நார்வே தலைமையில் அமையப்பெற்றுள்ள கண்காணிப்புக்குழு கண்காணிக்க ஏற்பாடாகியுள்ளது. இந்த முயற்சியானது இலங்கையில் தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அனைத்துப் பிரிவினரும் அமைதியான முறையில், அனைத்துவிதமான சலுகைகளையும் பெற்று சுகவாழ்வு பெற வகை செய்துள்ளது. நல்லெண்ண அடிப்படையில் இந்த ஒப்பந்தத்தின் கூறுகள் அமையப் பெற்றுள்ளன. எங்களது மக்களின் ஒட்டுமொத்த விருப்பமாக அமைதி முயற்சி இருக்கிறது. அவர்கள் நிரந்தர அமைதியையும், சுதந்திரத்தையும், நிலைத்த நீதியையும் விரும்புகிறார்கள்' என்றார்.
முதற்கட்ட பேச்சுவார்த்தை சத்தாஹிப் என்னுமிடத்தில் உள்ள கடற்படைதளத்தில் அமைந்த வளாகத்தில் நடைபெற்றது. இந்த இடம் அனைத்துவகையிலும் பாதுகாப்பான பகுதியாகும்.
புலிகள் தரப்பில், ஒப்பந்த அடிப்படையில், இலங்கை ராணுவத்தினர் இன்னும் பொதுவான இடங்களில் இருந்து வெளியேறாதது குறித்துப் பல சம்பவங்கள் பட்டியலிடப்பட்டன. இதற்கு மிலிண்டா மோராகோடா, "இதனை இருதரப்பினரும் இணைந்த குழு அமைத்து விரைவாக நடைமுறைப்படுத்தலாம்' என்றார்.
தொடர்ந்து பாலசிங்கம் பேசுகையில், "நிர்வாகம் செம்மைப்படுத்தப்படவும், போர்க்காரணங்களினால் வெளியேறிய மக்களை மீண்டும் குடியமர்த்தவும், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு போன்றவைகளைக் கவனிக்கவும், அன்றாடப் பணிகளை நிறைவேற்றவும் இடைக்கால நிர்வாக அமைப்பு ஒன்றினை ஏற்படுத்துவது அவசியம்' என்றும் வலியுறுத்தினார்.
இந்த யோசனைக்கு அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், "இது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணானதாகக் கருதப்படும். இத்திட்டத்தை அதிபரோ, உயர்நீதிபதியோ ஏற்கமாட்டார்கள். இப்படியொரு நிலை வந்தால் அதிபர் இந்தப் பிரச்னையில் குறுக்கிட ஆரம்பித்துவிடுவார்' என்றார்.
நார்வே குழுவினர் அரசுத் தரப்புக்கு சிறிதுகால அவகாசம் அளிக்கவேண்டும் என புலிகள் தரப்பினரிடம் கேட்டுகொண்டனர்.
பாலசிங்கம், "இதுபோன்ற நடவடிக்கைகளால் பிரபாகரன் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்' என்று கூறியதற்குப் பதிலாக பீரிஸ், "இது வேண்டும் என்று ஏற்படுத்தப்படுகிற தாமதம் அல்ல' என்றார்.
பேச்சுவார்த்தையின் இறுதியில், புலிகள்-அரசுத்தரப்பு இணைந்து செயல்படுவது (ஜாயிண்ட் டாஸ்க் ஃபோர்ஸ்) என்பதே முக்கிய முடிவாக அமைந்தது. இது தவிர, இடைக்கால அரசு அல்லது நிர்வாகம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக இருப்பது அரசமைப்பு என்பதும் அதிபர் என்பதும் தெளிவாயிற்று. இதனை மீறி ரணில் விக்ரமசிங்கேவினால் எதுவும் செய்யமுடியாது என்பதும் புரிந்துபோனது.
முதல்கட்ட பேச்சுவார்த்தை விவரங்களை அக்டோபர் இரண்டாவது வாரத்தில் வன்னி வந்த பாலசிங்கம், புலிகள் தலைவர் பிரபாகரனிடம் விளக்கினார்.
பிரபாகரனும், "ரணில் விக்ரமசிங்கேவினால் அதிபரை எதிர்க்கமுடியாது, அவ்வளவுதானே!' என்றார். "ஆமாம்!' என்ற பாலசிங்கம், "உலக அளவில் நாம் சமாதானப்பேச்சின் பக்கம் உறுதியாக நிற்கிறோம் என்பது பதிவாகியிருப்பது ஒரு சாதகமான அம்சம்' என்றார்.
அரசுத் தரப்பிலோ வேறுவகையான கண்ணோட்டம் இருந்தது.
"போர்நிறுத்தத்தால் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் ஏற்றுமதித்துறையான ஆடைத் தயாரிப்பு, அமெரிக்காவுடனான தேயிலை வர்த்தகம் மற்றும் முதலீடு உடன்படிக்கை வரைவு மற்றும் முழு வடிவிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்துவதற்கு வழியமைத்த ராபர்ட், செலிக் அதிகாரிகளின் வாக்குறுதி மற்றும் பிரசல்ஸில் கிடைத்த சலுகைகள் இவையெல்லாம் சாத்தியமாயின.
அதற்கு முன்னர் இருந்த இறுக்கமான சூழ்நிலையையும், தடைகளையும் இல்லாமல் செய்தது' என்கிறார் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசின் சார்பில் பங்கேற்ற அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (இலங்கையில் சமாதானம் பேசுதல்-கலாநிதி குமார் ரூபசிங்க, பக்.184, பாகம்-2).
172: சுயநிர்ணய உரிமை!
இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்து தலைநகர் பாங்காக் அருகேயுள்ள ரோஸ் கார்டன் ரிசார்ட்டில் நடைபெற்றது (3-11-2002). புலிகள் சார்பில் சுப.தமிழ்ச்செல்வனும் கருணாவும் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். இது தவிர, ஜெய் மகேஸ்வரன், விஸ்வநாத ருத்ரகுமாரன் கள ஆய்வில் உள்ளவர்கள் என்ற முறையில் இணைக்கப்பட்டனர்.
அரசுப் பிரதிநிதிகளாக பாதுகாப்புச் செயலாளர் ஆஸ்டின் ஃபெர்ணான்டோ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அஜீஸ் ஆகியோரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
பேச்சுவார்த்தையின்போது அமைச்சர் பீரிஸ், கிழக்குப் பகுதியில் முஸ்லிம்-புலிகள் மோதல் நடைபெறுவதாகக் குறிப்பிட்டார். மேலும் அவர், இந்த மோதல் நிலத் தகராறு காரணமாக எழுகின்றது என்றும் தெரிவித்தார்.
உடனே பாலசிங்கம், "இது தொடர்பான நடவடிக்கைகளை புலிகள் தலைமை எடுத்து வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து, பிரபாகரன்-ஹக்கீம் இடையே ஏப்ரலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகியுள்ளது. புலிகளின் பாதுகாப்புப் பிரிவினர் மோதல் நடைபெறாமல் ரோந்து சுற்றிவருகின்றனர். இது குறித்த உளவுத் தகவல் அடிப்படையில் மோதலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன' என்றார்.
பேச்சுவார்த்தை முடிவில், கண்காணிப்புக் குழுவின் அலுவலகக் கிளை ஒன்று மட்டக்களப்பு-அம்பாறை பகுயில் அமைக்கவும் முஸ்லிம்கள் மீதான தாக்குதலை, அதன் தலைவர்கள், புலிகளின் தலைமையிடம் உடனுக்குடன் தெரிவிக்கவும் வலியுறுத்தப்பட்டது.
இது தவிர, மறுவாழ்வுப் பணிகள் (சிரான்), இயல்பு வாழ்க்கை (எஸ்.டி.என்.), அரசியல் நிலவரம் (எஸ்.பி.எம்.) ஆகிய துணைக் குழுக்களும் அமைக்கப்பட்டன.
தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவரங்கள் மற்றும் முடிவுகள் தனக்குத் தெரிவிக்கப்படுவதில்லை என்று சந்திரிகா (2-10-2002) தெரிவித்ததையொட்டி, இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவுகளை சந்திரிகாவிடம் பிரதமர் தெரிவித்தார்.
இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக லட்சுமண் கதிர்காமர், "நார்வே உண்மையான நடுநிலை நாடல்ல' என்று கருத்து தெரிவித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அப்படி ஒரு கருத்தை அவர் வேண்டுமென்றே தெரிவித்தாரா, அதிபர் சந்திரிகாவுக்குத் தெரிந்துதான் வெளியிட்டாரா என்கிற சர்ச்சை தொடர்ந்தது. அந்தப் புதிர் இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை (இலங்கையில் சமாதானம் பேசுதல்-அடையாளம் வெளியீடு).
போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் வெற்றியானது சர்வதேச நாடுகளின் உதவிகளில் தங்கியுள்ளது என கண்டுகொள்ளப்பட்டது. போர் நடைபெற்ற காலங்களில் மறைமுக உதவிகள் தவிர, வெளிப்படையான வேறு எந்த உதவிகளும் இலங்கை அரசுக்கு வந்து சேரவில்லை. புலிகளின் விமானப்படை விமானத்தளம் மற்றும் சர்வதேச விமானநிலையம் தாக்குதலுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலுமாக தடைப்பட்டது. எனவே இலங்கைக்கு நிதி அளிப்போர் மாநாடு ஒன்றைக் கூட்டுவது அவசியமாயிற்று. போர்நிறுத்தத்தின் பலன் சாதாரண மக்களின் வாழ்வில் முன்னேற்றமும், வளமும், வசதியும் சேர்ப்பதில் தங்கியிருந்தபடியால், இந்த நிதியளிப்போர் மாநாட்டைக் கூட்ட புலிகளும் உறுதுணையாக இருந்தனர்.
இதன்படி இந்த மாநாடு, நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள ஹோல்மெங்கொலன் பார்க் ஓட்டலில், 2002-ஆம் ஆண்டு நவம்பர் 25-இல் கூடியது. 37 நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர். ஆசியா-பசிபிக் நாடுகள், வடஅமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஆகியவை இம்மாநாட்டில் பங்கேற்றன.
இந்த மாநாட்டில் நார்வே நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் பீட்டர்சன் பேசுகையில், "போர்நிறுத்தத்தின் வெற்றி, மக்களின் ஆதரவில் உள்ளது. இந்த ஆதரவு நீடிக்க வேண்டுமானால், அவர்களது வாழ்க்கையில் போர்க்காலச் சூழலைவிட நிம்மதியான, வசதியான, அத்தியாவசியப் பொருள்கள் உடனடியாக கிடைக்கிற சூழல் நிலவவேண்டும். இதற்கு மற்ற நாடுகளின் நிதியுதவி தேவைப்படுவதாக உள்ளது' என்று குறிப்பிட்டார்.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, "இந்தப் போர்நிறுத்தம், 18 ஆண்டுகளின் போரால் ஏற்பட்ட பாதிப்புகளின் பின் உருவாகியுள்ளது. மக்களின் வாழ்க்கையை போர் புரட்டிப் போட்டுவிட்டது. அவர்களது வாழ்க்கையில் புத்தொளியும், புதுவாழ்வும் தென்பட வேண்டுமானால் சர்வதேச சமூகம் தங்களது நிதியளிப்பு மற்றும் முதலீடுகள் மூலம் ஆதரவளிக்க வேண்டும். இந்த இடைக்காலப் போர்நிறுத்தமானது நிரந்தரப் போர்நிறுத்தமாக மாற நீங்கள் உதவவேண்டும்' என்றும் தனது பேச்சில் வலியுறுத்தினார்.
அடுத்துப் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் வன்முறை குறித்தும், புலிகளின் செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்தார். புலிகள் ஆயுதங்களைக் கீழே போடுவதுடன், தனிநாடு கோரிக்கையையும் கைவிட வேண்டும் என்றார்.
இந்தக் கருத்து, விடுதலைப் புலிகளைப் பற்றிய இலங்கை அரசுகளின் விமர்சனத்தினால் எழுந்தது ஆகும். இதனை உடனடியாக மறுக்க பாலசிங்கம் விரும்பினாலும், தனக்கு வழங்கப்படும் நேரத்துக்காகக் அவர் காத்திருந்தார். அவருக்குப் பேசுவதற்கான நேரம் வழங்கப்பட்டபோது, மிக மென்மையான மொழியில், இலங்கை இனப் பிரச்னை குறித்தும் அந்தப் பிரச்னையில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்தும் தமிழர்கள் மெல்ல மெல்ல ஆயுதம் தாங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது குறித்தும் விளக்கினார்:
"ஜனநாயக வழிமுறைகளில் போராடிய எங்கள் தலைவர்களைப் பேரினவாதிகள் தங்களது சட்டங்களின் மூலம் ஒடுக்கியதும், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டதும், அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டதும், மொழி குறித்த சட்டங்களாலும், அரச வன்முறைகளாலும் நடைபெற்றன. வடக்கு-கிழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக போர்ச் சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் வழிவகை காண அரசியல் விவகாரக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அக்குழு பேசி நல்ல முடிவெடுத்தால், யாரும் ஆயுதமேந்தமாட்டார்கள்.
எங்கள் மீது திணிக்கப்பட்ட போரினால், உடைமைகளையும் உயிர்களையும் இழந்தது தமிழர்கள்தான். 60 ஆயிரம் பேர் இறந்தனர். ஒரு லட்சம் பேர் படுகாயமுற்று ஊனமுற்றவர்களாகவும் ஆனார்கள். லட்சக்கணக்கான மக்கள் உங்களது நாடுகளில் மட்டுமல்ல, இதர நாடுகளிலும் அகதிகளாக வாழ்கிறார்கள். எங்களது பகுதிகளில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. ராணுவத்தினருக்கு சகல அதிகாரங்களும் சட்டங்கள் மூலம் வழங்கப்பட்டுவிட்டன.
அவர்கள் விரும்பினால் எந்தத் தமிழனையும் பிடித்துச் செல்லலாம்; விசாரிக்கலாம்; கொல்லலாம். அவர்களது உடலைப் பெற்றோரிடம் உறவினரிடம் தரவேண்டியதில்லை. எரிக்கவும், புதைக்கவும் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது. இவ்வாறு ஆயிரக்கணக்கானோர் மறைந்து போயிருக்கிறார்கள். இவையெல்லாவற்றுக்கும் ஒரு முடிவு ஏற்பட்டது. அதுதான் தமிழர்களின் ஆயுதப் போராட்டம். நாங்கள் இதனை விரும்பவில்லை. எங்களது உரிமைகள் மீண்டும் எங்களுக்கு வழங்கப்பட்டால் இந்த ஆயுதமே எங்களுக்குத் தேவையில்லை.
ஏ-9 என்பது தேசிய நெடுஞ்சாலை. யாழ்ப்பாணம்-கண்டி செல்லும் சாலை. வவுனியா வழியாகச் செல்கிறது. இந்தச் சாலையில் நீங்கள் பயணம் செய்து பாருங்கள். இரண்டாம் உலகப் போரின் அழிவுகள், பேய்கள் வாழும் ஊரை நினைவுபடுத்தியதாக வரலாறுகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதேவகையான காட்சிகளை நீங்கள் இந்த ஏ-9 சாலையில் காணமுடியும்.
வறுமையும் இயலாமையும் எங்களுக்கு விதிக்கப்பட்டுவிட்டன. இதிலிருந்து விடுபட எங்கள் மக்கள் விரும்புகிறார்கள்; நாங்கள் விரும்புகிறோம்' என்று பாலசிங்கம் குறிப்பிட்டதும் அங்கு நிசப்தம் பேசியது. சற்று நேரம் அமைதி நிலவியது. கூடியிருந்தவர்களின் உள்ளங்களில் கண்ணீர் துளிர்விட்டது.
இதனைத் தொடர்ந்து 70 லட்சம் டாலர் நிதியை மனிதநேய நிதியாக அளிப்பது என்று கூட்டத்தில் முடிவாயிற்று. மாநாட்டின் இறுதித் தீர்மானத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெற வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
புலிகள் சார்பில் ஜெய் மகேஸ்வரன், ரெக்கி, சுதாகரன் நடராஜா, அடேல் உள்ளிட்டோரும் பாலசிங்கத்துடன் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜப்பானியப் பிரதிநிதியான ஆகாஸி, இதேபோன்ற நிதியளிப்பு கூட்டம் ஒன்றை 2007-ஆம் ஆண்டு மே மாதத்தில் கூட்ட தங்கள் அரசு முடிவு செய்திருப்பதாக, பாலசிங்கம், ரணில் விக்ரமசிங்கே இருவரிடமும் தெரிவித்தார்.
27-11-2002 அன்று, பிரபாகரனின் மாவீரர் தின உரையில், "திம்பு மாநாட்டின்போது எங்களது விருப்பம் என்னவென்பதை தெளிவுபடுத்திவிட்டோம். எங்களது மூன்று அடிப்படைக் கோட்பாடுகளான தமிழர் தாயகம், தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை ஆகியவை ஏற்கப்பட்டு அதனடிப்படையிலான அரசியல் தீர்வை மக்கள் தீர்மானிப்பர் என்று அப்போது கூறினோம். தாய்லாந்தில் பேச்சுவார்த்தை நடக்கிற இப்போதும் இதையே வலியுறுத்த விரும்புகிறோம்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்த எமது மக்களுக்கு பூரண உரிமையுண்டு. தமிழர்கள் தங்களது மண்ணில் மரியாதையுடன் கூடிய சுயநிர்ணய ஆட்சியில் வாழ விரும்புகிறார்கள். அவர்கள் மொழி மற்றும் தேசியம் குறித்த தங்களது அடையாளத்தை என்றுமே இழக்க விரும்பமாட்டார்கள். தனித்துவமான இனம் என்ற அடிப்படையில், அவர்கள், சுயநிர்ணய உரிமை உடையவர்களாவர்.
இவ்வுரிமை உள்ளக மற்றும் வெளியக சுயநிர்ணய உரிமை என்ற இரண்டு அம்சங்களைக் கொண்டதாகும். உள்ளக சுயநிர்ணய உரிமை என்பது பிராந்திய சுயாட்சியை வழங்குகிறது. வெளியக சுயநிர்ணய உரிமை என்பது ஐ.நா. வரையறுத்த அம்சங்களைக் கொண்டதாகும். இதனைத் தவிர்த்த எந்த முடிவும் எங்களது மக்களுக்கு ஏற்றதாகாது. சுய ஆட்சி, சுய நிர்வாகம் போன்ற எங்களது கோரிக்கைகளை ஏற்காத நிலையில்தான் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகிறோம். இதனை மறுத்தால் சுதந்திர அரசு என்பதே எங்களது வழி' என்று தெளிவுபடுத்தினார்.
173: பேச்சுவார்த்தை முறிந்தது!
பு லிகளின் சுயநிர்ணயப் பிரகடனமே நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவிலுள்ள ரேடிசன் ஹோட்டலில் நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருந்தது. டிசம்பர் 2,3,4,5 தேதிகளில் அடுத்தடுத்து நடந்த அமர்வுகளில் சுயாட்சிக்கான அதிகாரப் பகிர்வுக்கு அரசுத் தரப்பு ஒத்துக்கொண்டது.
நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை தாய்லாந்து நாட்டின் நாக்கோன் பத்தோம் என்னும் நகரில் 2003-ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 9-ஆம் தேதிவரை நடைபெற்றது. பேச்சுவார்த்தைகளின் இறுதியில் உலக நாடுகளிடமிருந்து வடக்கு-கிழக்குப் பகுதிகளின் புனரமைப்பு மற்றும் மறுவாழ்வுக்காகப் பெறப்படும் நிதியினை யார் பெறுவது, எவர் பொறுப்பில் வைத்துக் கையாளுவது என்பதும், பாதுகாப்புவளையப் பகுதிகளில் தமிழர்கள் குடியேற்றம், குறித்தும் அவ்வாறு குடியேறும் மக்களில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் இருந்தால், அவர்கள் ஆயுதங்களைக் களையவேண்டும் என, ஏற்கெனவே ஜெனரல் சரத் ஃபொன்சேகா துணைக்குழு கூட்டத்தில் (டிசம்பர் 14, 2002) கூறியது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. விவாதத்தின்போது, போர்நிறுத்தம் நடைபெறுவதைச் சீர்குலைக்கவே ராணுவத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என புலிகள் சுட்டிக்காட்டினர்.
இறுதித் தீர்மானமாக, உலக நிதியளிப்போரிடமிருந்து பெறப்படும் நிதியைக் காப்பது உலக வங்கியின் பொறுப்பில் விடுவது என்றும் முடிவானது.
ஐந்தாவது சுற்றுப் பேச்சுவார்த்தை, பாலசிங்கத்தின் உடல்நிலை மோசமானதன் காரணமாக, அவரால் அதிகதூரம் பயணம் செய்யமுடியாத நிலையில், ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள நார்வே தூதரக வளாகத்தில் நடைபெற்றது (7-8, பிப்ரவரி 2003). இந்தப் பேச்சுவார்த்தைத் தொடங்க இருந்த சிறிது நேரத்துக்கு முன்பாக கடற்படையானது, புலிகளின் படகொன்றை வழிமறித்தது என்றும், அதிலிருந்த 3 கடற்புலிகள் சயனைட் அருந்தத் தயாராக இருப்பதாகவும் கடற்பிரிவுத் தலைவர் சூசை, பாலசிங்கத்திடம் தெரிவித்தார்.
அங்கிருந்த அமைச்சர் மிலிண்டா மோரகோடாவிடம், விளைவுகள் மோசமாவதைத் தடுக்கவேண்டும் என்று பாலசிங்கம் கேட்டுக்கொண்டார். இந்தச் செய்திப் பரிமாற்றத்துக்கிடையே 3 கடற்புலிகளிடமிருந்தும், தகவல் தொடர்பு இல்லை என்று மீண்டும் சூசையைத் தொடர்புகொண்டு, தெரிவித்தார்.
போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் ஜெனரல் ஃபுருகோவ்ட், அந்த மூன்று கடற்புலிகளும் சயனைட் அருந்திய நிலையில் படகு தகர்க்கப்பட்டது என்றும் தகவல் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம், இந்தப் பேச்சுவார்த்தையைக் குலைப்பதற்காக நடத்தப்பட்ட ஒன்று என்று பாலசிங்கம் குற்றம் சாட்டினார். கடற்புலிகளின் அத்தியாவசியத் தேவைகளை இவ்வாறு தடுப்பது தவறு என்றும் கூறினார். இதற்கான வழிமுறைகள் உடனடியாக வகுக்கப்படும் என்று மிலிண்டா கூறினார்.
உலக நாடுகளிலிருந்து பெறப்படும் நிதியிலிருந்து வடக்கு-கிழக்குப் பகுதிகளின் புனரமைப்புக்கு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என வலியுறுத்திய பின்னர், அவ்வாறு ஒதுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
பெர்லின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு பாலசிங்கத்தை வன்னிப் பகுதிக்கு பிரபாகரன் அழைத்தார். அவரும் மார்ச் 2-ஆம் தேதி பிரபாகரனைச் சந்தித்த அடுத்தநாள் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஜெனரல் ஃபுருகோவ்டுக்குப் பதிலாக நியமிக்கப்பட்ட ஜெனரல் ட்ரைகாஃப் டெலிப்சன் பிரபாகரனையும் மற்றவர்களையும் சந்தித்தார். அப்போது பிரபாகரன் கடலில் எங்களது நடமாட்டத்தைத் தடுக்கும் ராணுவம், போர்நிறுத்தக் காலத்திலும் ஏராளமான நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிக்கிறது; மாறாக எங்களை ஒடுக்குகிறது என்றும் முறையிட்டார்.
இந்த நேரத்தில் புலிகளின் கப்பல் என்று கருதி, வணிகக் கப்பல் ஒன்றை கடற்படை தாக்கி, மூழ்கடித்தது. அந்தக் கப்பலில் இருந்த 11 கடற்புலிகள் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையில் ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறவேண்டும் என நார்வே சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவினர் வற்புறுத்தினர்.
ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஜப்பான் நாட்டின் ஹக்கோனே என்னும் இடத்தில் நடைபெற்றது (18-21, மார்ச் 2003). இந்தப் பேச்சுவார்த்தையின் தொடக்கமே சூடாக இருந்தது. கடற்படைத் தாக்குதல் மற்றும் 3 கடற்புலிகள் மரணம் நேர்ந்தது குறித்தும், வணிகக்கப்பல் தாக்கப்பட்டது குறித்தும், போர்நிறுத்தத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஏராளமான அளவில் ஆயுதங்களை ராணுவத்துக்காக வாங்கியது குறித்தும், மறுவாழ்வுத் திட்டங்களுக்குப் போதிய நிதியளிக்காமை, இடம்பெயர்ந்த தமிழர்களின் இடங்களில் குடியமர்த்த ராணுவம் விதிக்கும் தடைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.
அமைச்சர் பீரிஸ், ஆயுதம் வாங்கிக் குவிக்கப்படுவதை மறுத்தார். மற்ற புகார்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 29-லிருந்து மே 2-ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெறும் என்று உறுதி செய்யப்பட்டது.
இதுவரை நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் புலிகளுக்கு சாதகம் என்று பார்த்தால் அந்த அம்சம் குறைவு என்றும், பாதகமான அம்சங்களே அதிகம் என்றும் புலிகள் இயக்கத்தால் மதிப்பிடப்பட்டது. அரசுத் தரப்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை; வடக்கு-கிழக்கு புனரமைப்புப் பணிகளுக்கும் போதிய நிதியாதாரம் வழங்கப்படவில்லை; மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லமுடியவில்லை; போரில் இடப்பெயர்வு ஆனவர்களை மீண்டும் அவர்களது இடத்தில் குடியமர்த்த முடியவில்லை; பாதுகாப்புக் காரணங்கள் என்று ராணுவம் மறுக்கிறது என்றும் புலிகளால் புகார் கூறப்பட்டது.
இதுகுறித்து பாலசிங்கம், "வார் அண்ட் பீஸ்' என்னும் தனது நூலில், ""யுத்தநிலையைக் குறைத்தல், இயல்பு நிலையை ஏற்படுத்துதல் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்ததாகும். இதன்மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை சாத்தியப்படுத்தப்படும். ராணுவ ஆக்கிரமிப்பு மூலம் மக்களின் உடைமைகள் பறிக்கப்பட்டு அவர்களின் அமைதி வாழ்வு பறிபோவதை நியாயப்படுத்தும் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் நிலைப்பாடு, அரசுத்தரப்பால் எடுத்துவைக்கப்படும் அரசியல் தத்துவக் கோட்பாடுகளுக்கு எதிரானது-முரணானது'' என்று போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவருக்கு எழுதிய பதில் கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து புலிகள் தரப்பில் கூறப்பட்டதாவது- போர்நிறுத்த நடவடிக்கைகளுக்கு ராணுவம் இடையூறு செய்கிறது. கடற்புலிகள் கடலில் செல்லத் தடை விதிக்கப்படுகிறது. ராணுவத்துக்கு ஏராளமான ஆயுதங்களை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறார்கள். பேச்சுவார்த்தைகளில்கூட ஒப்பந்த நடவடிக்கைகள் நடைபெறுகின்றனவா என்பதை ஆராய்வதை விட ஒவ்வொரு சுற்றுப் பேச்சுவார்த்தைக்கும் முன்னதாகவும் அரசுத் தரப்பில் ஏதேனும் ஓர் அத்துமீறல் நடத்தப்பட்டு, அதன் காரணமாக எழும், விவாதங்களிலேயே நேரம் வீணாகிறது.
இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் உருவாக்கப்பட்ட வடக்கு-கிழக்கு உடனடி மனிதாபிமானப் புனரமைப்புத் தேவைகள் மீதான குழு, உலக வங்கியின் பார்வைக்குண்டான வடக்கு-கிழக்கு புனரமைப்பு, கட்டமைப்புக்கான நிதிக்குழு போன்றவற்றின் செயல்பாடுகள் சுருக்கப்பட்டுவிட்டன.
மொத்தத்தில், ""விடுதலைப்புலிகள் ஓரங்கட்டப்படுகிறார்கள். ஆகவே, பேச்சுவார்த்தைகளில் இடம்பெறப்போவதில்லை என்று 21 மார்ச் 2003 அன்று அறிவித்தபோதிலும், தொடர்ந்து யுத்தநிறுத்த உடன்படிக்கையை மதித்து நடக்கவும் சமாதானத்திற்காக புலிகள் உழைக்கப் போவதாகவும்'' பாலசிங்கம் கூறினார்.
174: புலிகள் அளித்த தன்னாட்சி நிர்வாகத் திட்டம்!
டோக்கியோவில் நடைபெற இருந்த நிதியளிப்போர் மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில், அமெரிக்காவின் வாஷிங்டனில் ஏப்ரல் 14, 15 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த ஆலோசனைக் கூட்டம் குறித்தோ, போர்நிறுத்த உடன்பாட்டின்படி புலிகள் இயக்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்ற நடைமுறை பற்றியோ அக்கறையில்லாமல் வாஷிங்டன் தேர்வு செய்யப்பட்டது.
புலிகள் இயக்கத்தை தடை செய்த ஒரு நாட்டில் இந்த ஏற்பாடு என்பதே, புலிகள் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் திட்டமிடப்பட்டது.
விடுதலைப் புலிகள் இடம்பெறாத வாஷிங்டன் ஆலோசனைக் கூட்டத்தில் 21 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் மற்றும் 16 சர்வதேச அமைப்புகளும் பங்கேற்றன. ஆஸ்லோவில் நடைபெற்ற கூட்டத்தில் மூன்றாம் நிலை அதிகாரியை அனுப்பிய இந்தியா, வாஷிங்டன் கூட்டத்துக்கு அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரையே அனுப்பி வைத்தது.
அந்தக் கூட்டத்தில் துவக்க உரையாற்றிய அமெரிக்க பாதுகாப்புத் துணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் பேசுகையில், "விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, செயலிலும் அவர்கள் நிரூபிக்கவேண்டும்' என்று குறிப்பிட்டார்.
""போர் நிறுத்தத்தையொட்டிய நடவடிக்கைகளாகத்தான் நிதி கோரும் மாநாடுகள் நடைபெறுகின்றன. போர்நிறுத்தம் என்பது புலிகள்-இலங்கை அரசு இடையே, நார்வேயின் முயற்சியில் நடைபெற்ற ஒன்று என்பதை மறந்து ஆர்மிட்டேஜ் இவ்வாறு பேசியதைப் பிரதமர் ரணில் மறுக்கவுமில்லை; அதற்கான விளக்கமும் அளிக்கவில்லை. ஆனால் இதுகுறித்து எங்களது கருத்தை தெரிவித்தால், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஆஷ்லேவில்ஸ், பேச்சுவார்த்தையிலிருந்து புலிகள் நழுவப் பார்க்கிறார்கள் என்று சொல்கிறார்.
அதுமட்டுமன்றி, புலிகள் ஆயுதங்களைத் தூக்கியது மக்களுக்காக அல்ல-இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வராமல் இழுத்துக்கொண்டே போவதற்குத்தான் என்று அவர், ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளிக்கிறார்,'' என்று ஆண்டன் பாலசிங்கம் பதிவு செய்திருக்கிறார்.
எனவேதான் அவர், தமிழ்நெட் வலைதளத்துக்கு ஏப்ரல் 25 அன்று அளித்த பேட்டியில், "நாங்கள் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறவில்லை. தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம். அதற்கான காரணங்களையும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறோம். ஒப்பந்தப்படி செய்யக்கூடியவற்றைச் செய்யாமல் அரசுதான் இழுத்தடிக்கிறது. இதனைச் சரி செய்ய வேண்டியது அரசுதான்.
நாங்கள் ஆயுதம் ஏந்தியது எங்களது மக்களைக் காக்க-எங்களது தாய் மண்ணை மீட்க. நாங்கள் ஆயுதங்களைக் கீழே போடுவது சுலபம். ஆனால் எங்களது மக்களை சிங்கள ராணுவத்தின் அடக்குமுறையிலிருந்து காப்பது யார்? எந்த முடிவுக்கும் வராமல் எதையும் நடைமுறைப்படுத்தாமல் ஆயுதங்களைக் கீழே போடச் சொல்வது சரியல்ல. ஒப்பந்த காலத்தில் நாங்கள் ஆயுதங்களைத் தொடவில்லை என்பது தூதுவர் வில்ஸýக்கும் ஆர்மிட்டேஜுக்கும் நன்கு தெரியும்' என்று அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.
சந்திரிகா முப்படைகளின் தலைவர் என்ற முறையில் எதற்கும் தயாராக இருக்க உத்தரவிட்டார் (22, ஏப்ரல் 2003).
அரசுத் தரப்பு, இடைக்கால அரசுக்குப் பதிலாக ஒரு சபையை புலிகளுக்கு அறிமுகம் செய்தது (4, ஜூன் 2003). அந்தத் திட்டத்தில், நிலம், காவல்துறை, பாதுகாப்பு, வரிவசூல் செய்வது போன்ற எந்த அதிகாரமும் இடம்பெறவில்லை. அவை அனைத்தும் மத்திய அரசிடமே இருக்கும் என்று மறைமுகமாக உணர்த்தப்பட்டது. இந்தத் திட்டத்தை அறிமுக நிலையிலேயே புலிகள் ஏற்க மறுத்தனர்.
இலங்கை அரசு அளித்த நிர்வாக சபைத் திட்டத்தை புலிகள் ஏற்க மறுத்த நிலையில், இந்த முன்மொழிவுகளை ஆய்வு செய்ய, அதிபர் சந்திரிகா குழுவொன்றினை அமைத்தார். அதேவேளையில் புலிகளும் அரசியல் சட்ட வல்லுநர்கள் கொண்ட குழுவினை அமைத்து மாற்று வரைவொன்றை வரைய முடிவு செய்தது.
இக் குழுவில் பேராசிரியர் சொர்ணராஜா (சிங்கப்பூர் பல்கலை-சட்டம்), பேராசிரியர் சிவ. பசுபதி (இலங்கை முன்னாள் அட்டர்னி ஜெனரல்), புலிகளின் சட்ட ஆலோசகர் ருத்ர குமாரன், டாக்டர் மானுவல் பால் டொமினிக் (சிட்னி பல்கலை-சட்டம்), பேராசிரியர் பி. ராமசாமி (மலேசியா-அரசியல்) மற்றும் விஸ்வேந்திரன் (புலிகள் சட்டப்பிரிவு), டாக்டர் ஜெய் மகேஸ்வரன் (பொருளாதாரம்) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இக்குழு பாரிஸில் கூடி வரைவொன்றை அமைத்தது. அவ்வரைவு, 1976-ல் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்து நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்களுக்கு ஒரு சுதந்திர, இறைமையுள்ள, மதச் சார்பற்ற அரசை அமைக்குமாறு, தமிழ் மக்கள், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமது பிரதிநிதிகளுக்கு ஆணை வழங்கியிருந்தமை கவனத்தில் கொண்டும்,
2000-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கிலுள்ள பெரும்பான்மைத் தமிழ் மக்கள் தமது செயல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை தங்களது அதிகாரப்பூர்வமான பிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு வாக்களித்ததை கவனத்தில் கொண்டும்,
இலங்கை அரசாங்கம் (ரணில்) தனது 2000-ம் ஆண்டுத் தேர்தல் அறிக்கையில் ஓர் இடைக்கால அதிகார சபைக்கான தேவையை அங்கீகரித்துள்ளமைக்கு மதிப்பளித்தும்,
போரால் சிதைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் மீள்குடி அமர்வு, மறுவாழ்வு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான உடனடித் தேவைகளை நிறைவேற்றவும், செயல்படவும், அதற்கான வருமானத்தை ஈட்டவுமான இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான- அம்சங்களைக் கொண்டிருந்தது.
அவ்வகையில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபையில், அதன் அமைப்பு, தேர்தல் மனித உரிமைகள், மதச்சார்பின்மை, பாகுபாட்டிற்கு எதிரான, லஞ்சத்தைத் தடுத்தல், சமூகங்களுக்கான அமைப்பு போன்றவை வலியுறுத்தப்பட்டு, அதற்குண்டான விதிகளும் வரையறுக்கப்பட்டிருந்தன.
நிதி, அதிகாரம், வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கான பொதுவான நிதியம், மீள் கூட்டமைப்புக்கான நிதியம், சிறப்பு நிதி, வர்த்தக அதிகாரம் வரிவிதிப்பு, மாவட்டக் குழுக்கள் அதன் நிர்வாகம் நில விவகாரம்- ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் குடியமர்த்தும் பணி, கடல் சார் வளங்கள், இயற்கை வளங்கள், நீர் பயன்பாடு, ஒப்பந்தம், குத்தகை பிரச்னைகளை தீர்க்கும் பகுதி, அமைப்புகள் செயல்படும் காலம் (இலங்கையில் சமாதானம் பேசுதல் பக். 544-556-ன் சுருக்கம்) ஆகியவற்றுக்கான விதிகளும், செயல்பாடுகளும் அதில் விளக்கப்பட்டிருந்தன.
இவ் வரைவை 1-11-2003 அன்று, புலிகள் நார்வே நாட்டு தூதர் மூலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயிடம் ஒப்படைத்தனர். அடுத்த நான்காவது நாளில் (4-11-2003) ரணில் விக்கிரமசிங்கே அமெரிக்காவிலிருந்தபோது, அதிரடியாக, அதிபர் சந்திரிகா, பாதுகாப்பு அமைச்சர் திலக் மாரபோனே, உள்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, தகவல் தொடர்புத் துறை அமைச்சர் இம்தியாஸ் பக்கீர் ஆகிய மூவரையும் பதவி நீக்கம் செய்ததுடன், அவ் விலாகாக்களை தன் வசமே வைத்துக் கொண்டார். அவசர நிலைப் பிரகடனம் அமல்படுத்தப்படுகிறது.
இதன் பின்னர் நார்வேயின் சமாதான முயற்சிகளில் தேக்க நிலை ஏற்பட்டது. சிறிதும் தாமதமின்றி சந்திரிகாவின் அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புலிகள் அளித்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைக்கான முன் வரைவை நிராகரித்தது. அதிபரின் ஆலோசகராக இருந்த லட்சுமணன் கதிர்காமர், இந்த வரைவுத் திட்டம் இலங்கையின் இறையாண்மைக்கு எதிரானது என்றும், நாளைய தனிநாட்டுக்கான சட்ட வரைவு என்றும் விளக்கம் தந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இவ்வாறு கருத்து தெரிவித்த போதிலும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று சந்திரிகா தெரிவித்தார். அதுமட்டுமன்றி சர்வதேச நாடுகளின் குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் நெருக்குதலில் சமாதான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று கூறிய சந்திரிகா ரணில் விக்கிரமசிங்கே இம்முயற்சிகளை மேற்கொள்வார் என்றும் அறிவித்தார் (14.11.2003).
ஆனால் சந்திரிகா எப்படியாவது சமாதான முயற்சிகளை முறியடிப்பது என்பதில் குறியாக இருந்தார். ரணில் பிரதமர் பொறுப்பில் இருப்பது சமாதான முயற்சிகள் நடைபெறுவதை அனுமதிப்பதாக இருக்கும். உலக அளவில் ரணில் பல நெருக்குதலைக் கொடுக்கக் கூடும். எனவே, அவரை வீழ்த்த வேண்டுமானால், நாடாளுமன்றத்தைக் கலைப்பது ஒன்றே வழி. 7.2.2004 அன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.