Saturday, 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (131-136)


131: ஆட்சிகள் மாறின; காட்சிகளும்!
தனது ஆட்சிக்காலத்தில் எந்த அளவுக்கு, தமிழர்களின் உரிமைகளை ஒடுக்க முடியுமோ, ராணுவம் மற்றும் காவல்துறைகளைப் பயன்படுத்தி எவ்வளவு கொடுமைகளை இழைக்க முடியுமோ, அந்தளவுக்கு செயலாற்றிய இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். (டிசம்பர் 1988)

உடனடியாக நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணசிங்க பிரேமதாசா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, 1989, ஜனவரி 2-ஆம் தேதி இலங்கையின் அதிபரானார். தனது பதவி ஏற்பை புராதன நகரமான கண்டியில், புத்தரின் பல் இருப்பதாகக் கருதப்படும் "புனிதப் பற்கோயில்' அமைந்துள்ள, தலதா மாளிகையில் நடத்தினார். இதன்மூலம் பெüத்தத்தில் தமக்கிருந்த ஆழ்ந்த பற்றை, சிங்கள தேசியவாதிகளுக்கு உணர்த்தினார்.
அதே வேளையில் விடுதலைப் புலிகள் அமைப்பு, ஜனவரி 1-ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையில், "இந்தியாவும் ஸ்ரீலங்காவும் ஜனநாயகம் என்கிற பெயரில், தமது நலன்களைப் பாதுகாக்க என்னென்ன செய்யும் என்பதற்கு தமிழீழத்தில் நடத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தலும், அதிபர் தேர்தலும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இரண்டு தேர்தல்களிலும் தமிழீழ மக்கள் ஆயுதமுனையில் பலவந்தமாக வாக்களிக்க அழைத்துச் செல்லப்பட்டார்கள். பல இடங்களில் மக்கள் இல்லாமலே வாக்குகள் போடப்பட்டன. அதேபோன்று, ஜனாதிபதி தேர்தலை நடத்த வந்த சிங்கள அதிகாரிகள் நீங்கள் போடாவிட்டால் பரவாயில்லை, நாங்கள் போடுவோம் என்று கூறியுள்ளார்கள். இந்த வகையில் நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றியென்றும் புகழப்படுகிறது. நாம் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்பதை எம்மால் சர்வதேச பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நிரூபிக்க முடியும்.
இன்று தமிழ்மொழி அரச கரும மொழியாக்கப்பட்டுள்ளது; மலையக மக்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தமே இதைச் சாதித்தது என்கிறது இந்திய அரசு. அரசோடு ஒத்துழைத்தோம் குடியுரிமை பெற்றோம் என்கிறது இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ். அப்படியென்றால் 1948-1988 வரை அரசாங்கத்தோடு ஒத்துழைத்தும் மலையக மக்கள் குடியுரிமை பெற 40 ஆண்டுகள் பிடித்தது ஏன்?
மலையக மக்களை அவர்கள் நம்பிய தலைமை, புரட்சிப்பாதையில் வழி நடத்தியிருந்தால் குடியுரிமை பறிக்கப்பட்ட ஒருசில ஆண்டுகளுக்குள்ளேயே, அவர்களது குடியுரிமையை மீளப் பெற்றிருக்க முடியும். அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியிருக்க முடியும்.
இன்று எமது ஆயுதப் போராட்டமும் அதன்மூலம் மலையகத் தமிழர்களிடையே தோன்றியுள்ள விழிப்புணர்வும், புரட்சித் தன்மையுமே மலையகத் தமிழ் மக்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஒப்பந்தமோ, பிரார்த்தனைகளோ இவற்றைப் பெற்றுத்தரவில்லை என்பதை தமிழ்மக்கள் நன்கு அறிவார்கள்.
இன்று தமிழ் மக்களுக்குத் தரப்பட்டதாகக் கூறப்பட்டவை நடைமுறைப்படுத்தப்படுமா? நிலைக்குமா? ஸ்ரீலங்கா அரசு நினைத்தால் ஒரே நாளில் இவற்றை இல்லாமல் செய்துவிட முடியுமோ?.
இந்தியாவுக்கு நாம் எப்போதும் நேச சக்தியாகவே இருந்திருக்கிறோம். ஆனால் இந்திய அரசு, தாம் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ஆயுதமுனையில் நிர்பந்திக்கும்போது நாம் நமது உரிமைக்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழீழ மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை தமிழீழ மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அறிக்கையின் இறுதியில், "நாம் அடிமைகளாக வாழக்கூடாது என்றால் (1) ஆயுதங்களைக் கீழே போடக்கூடாது (2) உண்மையான ஜனநாயகம் மலரவேண்டுமென்றால் ஆயுதங்களைக் கீழே போடக்கூடாது (3) சுதந்திர சோசலிச தமிழீழத்தில்தான் உண்மையான ஜனநாயகம் மலரும் (4) இன்று ஜனநாயகத்தின் பெயரால் ஆயுதங்களைக் கையளியுங்கள் என்பவர்கள் தமிழீழப் போராட்டத்திற்கு எதிரானவர்கள் மட்டுமல்ல; துரோகத்தையும் இழைக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேமதாசா தான் அதிபராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதும், இந்திய அமைதிப்படையைக் கடுமையாக எதிர்த்த இரு அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அறிவித்தார். அவர் குறிவைத்த அமைப்புகளில் முதலாவது விடுதலைப் புலிகள் இயக்கம், இரண்டாவதாக ஜனதா விமுக்தி பெரமுன என்னும் சிங்களத் தீவிரவாத இயக்கமாகும்.
பிரேமதாசா தான் பிரதமராக இருந்தபோது, இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தவர். அந்த ஒப்பந்தம் கையொப்பமாகும்போது நாட்டிலேயே இருக்கமாட்டேன் என்று கூறி வெளிநாடு சென்றவர். ஜே.வி.பி. இயக்கம் அமைதிப் படையைக் கடுமையாக எதிர்த்தது. அதேபோன்றுதான் விடுதலைப் புலிகளும். எனவேதான் பிரேமதாசா, பேச்சுவார்த்தை என்கிற சொற்பிரயோகத்தை வெளிப்படுத்தி, இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து பிரேமதாசா நாடாளுமன்றத் தேர்தலில் தீவிரம் காட்டினார். தனது கட்சி வெற்றிபெற வேண்டும் என்பது அவருக்கு அவசியமாயிற்று. எனவே கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப் படைக்கும் இடையே மோதல் நீடித்த நிலையில், இலங்கையில் கடந்த ஆண்டு ஜூன் முதல், தேர்தல்கள் அடுத்தடுத்து நடந்தபடியே இருந்தன. இது விசித்திரம் மட்டுமல்ல; ஆச்சரியமும்கூட.
முதலில் வடக்கு-கிழக்கு தவிர்த்து இதரப் பகுதிகளில் மாகாணசபைத் தேர்தல், அடுத்து வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல், அதனையடுத்து மூன்றாவதாக அதிபர் தேர்தல் என்று நடந்த முடிந்த நிலையில் தற்போது பிப்ரவரியில் நாடாளுமன்றத் தேர்தல், அதுவும் நீண்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற இருக்கிற தேர்தல் என்பதால் பல்வேறு கட்சிகளும் முனைப்பு காட்டின. தமிழர் பகுதிகளிலும் ஈபிஆர்எல்எஃப் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் மேலும் சில கட்சிகளுக்கும் இந்தத் தேர்தலில் ஈடுபட ஆர்வம் ஏற்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்போ இத் தேர்தலை முற்றிலுமாகப் புறக்கணித்தது. இதுகுறித்து அவ்வியக்கம் 10.1.1988 அன்று வெளியிட்ட அறிக்கையில், "எதிர்வரும் மாசி 15-இல் (பிப்ரவரி 15) நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களும் அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்துக்குத் துரோகம் செய்கிறார்கள்.
இனப் படுகொலைகளுக்கு மறைமுகமாகவும், நேரிடையாகவும் ஆதரவு தந்தவர்கள் இன்று எமது பிரதிநிதிகளாக எமக்காகக் குரலெழுப்புவதற்கான அங்கீகாரம் கேட்கிறார்கள்.
நாடாளுமன்றத்தையும் மாகாணசபையையும் எமது போராட்டத்தை முன்னெடுக்க ஓர் இடைக்காலத் தீர்வாக ஏற்கிறோம் என தமிழ், முஸ்லிம் மக்களை ஏமாற்றுவதற்காக இவர்கள் கூறிவருகிறார்கள். இவர்கள் இடைக்காலத் தீர்வுகளை ஏற்பது போராட்டத்தை முன்னெடுக்க அல்ல.
தமிழீழப் போராட்டத்தை விலைபேசி விற்கும் இத் துரோகிகள் கூட்டம், இடைக்காலத் தீர்வு என்ற பெயரிலும் ஜனநாயகம் என்ற பெயரிலும் தேர்தலில் பங்குபற்றுவது தமது கோழைத்தனத்தையும் இயலாமையையும் மறைத்து அற்ப பதவிகளையும் அற்ப சுகங்களையும் அனுபவிப்பதற்கே என்பதை நாம் அறிவோம்...
"தமிழீழத்தில் சுமுகநிலை இன்னும் வரவில்லை. குடிபெயர்ந்தவர்கள் இன்னும் அவர்களது இடத்தில் குடியமர்த்தப்படவில்லை. இந் நிலையில் தேர்தலா?' என்று கேள்வி எழுப்பியவர்கள்கூட, இப்போது தேர்தலில் போட்டியிட முன்வந்து விட்டார்கள்.
இதில் இன்னொரு முரண், வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமா என்று மக்கள் கருத்தை அறிய ஜூலை 25-ம் தேதி சர்வஜன வாக்கெடுப்பு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருப்பதையும்கூட ஏற்கிறார்கள்.
நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலே ஒரு மோசடி. அதேபோன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பெரும் அளவில் மோசடிகளை நடத்த இருக்கிறார்கள். இவர்கள் நாடாளுமன்றம் சென்று சாதிக்கப் போவதென்ன?
30 ஆண்டுகால நாடாளுமன்ற அரசியல் போராட்டகாலத்தில்தான் மலையக மக்களின் குடியுரிமை மறுக்கப்பட்டது. தமிழ்ப் பிரதேசம் சிங்களக் குடியேற்றத்தால் பறிபோயிற்று. தமிழ்மொழி தன் உரிமையை இழந்து, தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசாரம் சீரழிக்கப்பட்டது' என்று அடுக்கடுக்காகப் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
தேர்தலில், பிரேமதாசாவின் ஐக்கிய தேசியக் கட்சியே (யுஎன்பி) வென்றது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர்களான அமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் தோற்றனர். இவர்களின் சேவையை அங்கீகரிக்க, ஈபிஆர்எல்எஃப் அணியினர் இவர்களை நியமன உறுப்பினர்களாக்க முனைந்தனர்.
இதே நேரத்தில், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஓராண்டு ஆளுநர் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில், அதுவரை ஆட்சிபுரிந்து வந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜானகி அணி என்றும், ஜெயலலிதா அணி என்றும் பிளவுபட்டு தனித்தனியே நின்றன. காங்கிரஸ் கட்சி, பிளவுபட்ட எம்.ஜி.ஆரின் கட்சியுடன் உறவு இல்லாமல் தனித்து நின்றது. நான்கு முனைப் போட்டியாக நடைபெற்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. அதன் தலைவர் மு.கருணாநிதி மூன்றாவது முறையாக முதல்வரானார் (1989, ஜனவரி 27). எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பதவி ஜெ.ஜெயலலிதாவுக்குக் கிடைத்தது.
132: பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைப்பு!
திம்புப் பேச்சுவார்த்தையின்போது அனைத்து தமிழர் குழுக்களும் வலியுறுத்திய நான்கு அடிப்படை அம்சங்களுக்கு எதிரான செயலாக, ஈபிஆர்எல்எஃப் ஆட்சியில், இலங்கை சுதந்திர தினத்தன்று (4-2-1989) சிங்களக் கொடியை ஏற்றிய செயல் தமிழ் மக்களிடையே கடும் விமர்சனத்துக்கு ஆளானது.
இதே திருகோணமலையில் இலங்கை சுதந்திர தினத்தன்று, இலங்கை தேசியக் கொடியான சிங்கக்கொடியை இறக்க முயன்ற தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த திருமலை நடராஜன் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நடந்ததுண்டு. இதே திருகோணமலையில்தான் 8-8-1988 அன்று புலிக்கொடியை ஏற்ற முயன்ற தமிழர்களும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இந்த நிலையில் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினரின் சுதந்திரதினக் கொண்டாட்டம் தமிழ்மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்தவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வை.கோபால்சாமி ரகசியமாக இலங்கை சென்றார். தான் வன்னிப்பகுதிக்குச் சென்றபிறகு கட்சித் தலைமையிடம் தெரிவிக்கச் சொல்லி நண்பர் ஒருவரிடம் கடிதம் ஒன்றையும் அவர் கொடுத்துச் சென்றிருந்தார்.
இந்தத் தகவல் பத்திரிகை மூலம் வெளியானதால், வை.கோபால்சாமியின் நடமாட்டம் அமைதிப் படையால் கண்காணிக்கப்பட்டது. இந்நிலையில், அவர் வன்னிப் பகுதியில், விடுதலைப் புலிகளின் முகாம்களில் 24 நாள்கள் தங்கினார். பிப்ரவரி 15-ஆம் நாள், அவர் பிரபாகரனைச் சந்தித்தார்.
இந்த நாள்களைத் தனது வாழ்க்கையின் பொன்னான நாட்கள் என்று பின்னர் வை.கோபால்சாமி குறிப்பிட்டார். அவர் இலங்கைக்கு எவ்வாறு ரகசியமாகச் சென்றாரோ, அதேபோன்று ரகசியமாக அவர் இந்தியா திரும்பி, தனது பயணம் குறித்து விளக்குவதற்காக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது வை.கோபால்சாமி விசா இல்லாமல் இலங்கை சென்றது குறித்த கேள்விக்கு "எதுவும் சொல்ல விரும்பவில்லை' என்றார்.
இதுகுறித்து அவர் மேலும் விளக்குகையில், "உயிரே பிரச்னையல்ல என்றுதான் இந்தப் பயணத்தை (பிப்ரவரி 7-இல்) எனது சொந்தப் பொறுப்பில் மேற்கொண்டேன். பயணம் எப்படி நடந்தது. யாரால் சென்றேன்-திரும்பினேன் என்பது பற்றியும் எதுவும் கூற விரும்பவில்லை. முதலமைச்சர் எதுவும் கூறிவிடுவாரோ என்றுதான் அதிகம் பயந்தேன். நல்லவேளை! அப்படி எதுவும் நடக்கவில்லை. இதுபோல "ரிஸ்க்' எடுத்துச் செல்லக்கூடாது. இலங்கைத் தமழர் பிரச்னையில் ஆர்வம் இருக்கலாம். வெறியாகிவிடக்கூடாது என்று முதல்வர் சொன்னதாக' அவர் தெரிவித்தார்.
இன்னொரு கேள்விக்குப் பதிலளிக்கையில், "முதல்வருக்குத் தெரிவிக்காமல், அவரிடம் அனுமதியும் பெறாமல்தான் நான் ஈழத்துக்குச் சென்றேன். எனது இந்தப் பயணம் தவறானதல்ல. ஆனால் தி.மு.கழகத்தின் செயல்முறைகளுக்கு இந்தப் பயணம் ஏற்றதல்ல; அந்த வகையில் எனது பயணம் தவறுதான்' என்றார். இலங்கைப் பிரச்னையில் பிரதமருக்கும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கும் பேச்சு நடந்து கொண்டிருப்பது தனக்குத் தெரியாது என்றார். (நாளிதழ்களில் வந்தவாறு 6-3-1989).
விசா இல்லாமல் வை.கோபால்சாமி இலங்கைக்குச் செல்லலாமா? அவரைக் கைது செய்யவேண்டும் என்ற சர்ச்சை பெரிய அளவில் நடந்து கொண்டிருந்தது. பத்திரிகைகளிலும் விவாதங்கள் நடந்து கொண்டிருந்த நிலையில் "தினசரி' பத்திரிகையில் 9-3-1989 அன்று, க.சச்சிதானந்தன் எழுதிய கட்டுரை இந்த விசாப் பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் "விசா' நடைமுறை என்பது 1948-லிருந்துதான் வந்தது என்றும், 1983-இல் இலங்கைப் படுகொலையையொட்டி ஏராளமான பேர் அகதிகளாக வந்து இந்தியாவில் குடியேறியபோது, "விசா' முறை பின்பற்றப்படவில்லை என்றும், 1987-இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின்போது, ஹெலிகாப்டரிலும், மிராஜ் விமானங்களிலும், தமிழகத்திலிருந்து பத்திரிகையாளர்கள் பலரும் "விசா' நடைமுறை இல்லாமல்தான் செல்கிறார்கள் என்றும், எனவே, விசா இன்றி, வை.கோபால்சாமி போகலாமா என்ற வினாவுக்கே இடமில்லை என்றும் ஈழத் தமிழர் நன்மை பேணப்பட வேண்டுமென்றால் அரசியல்வாதிகட்கும், அரசுப் பணியாளர்களுக்கும் அது பொருந்தாது என்றும் இப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
வை.கோபால்சாமி இந்தியா திரும்பியது குறித்து விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் பின்னாளில் கூறியது வருமாறு:
""வை.கோபால்சாமியைப் பத்திரமாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கும்படி தலைவர் என்னிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு இடமாகத் தப்பி வந்தோம். மணலாற்றில் வை.கோபால்சாமி இருப்பதாக அறிந்த அமைதிப் படை அவரை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்கப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. அலம்பில் பகுதியில் அவரைப் படகேற்றும்வரை அவரது பயணம் பாதுகாப்பாகவே இருந்தது. ஆனாலும், அங்கிருந்து படகில் அவர், நல்லதண்ணி தொடுவாயைச் சென்றடைந்திருந்தபோது, அங்கு ராணுவத்தினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வை.கோபால்சாமி காப்பாற்றப்பட்டார். ஆனால் அப்போது நடந்த மோதலில் லெப்டினன்ட் சரத் என்ற போராளி உயிரிழந்தார் (ஈழமுரசு கட்டுரை).''
இந்திய அமைதிப் படையின் சோதனைச் சாவடிகளில் ஒரு சுவரொட்டி ஒட்டியிருக்கும். அந்தச் சுவரொட்டியில் "அப்பாவிக் குடிமக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் இங்கு தங்கியிருக்கிறோம்' என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருக்கும். இத்தகைய சுவரொட்டிகளால், இந்திய அமைதிப் படை மிக நீண்டகாலம் வடக்கு-கிழக்குப் பகுதியில் நின்று நிலைத்து விடுமோ என்ற அச்ச உணர்வு, பிரேமதாசா உள்ளிட்டவர்களுக்கும், ஜேவிபி போன்ற இனத்தீவிரவாத கட்சிகளுக்கும் எழுந்தது.
தீவிரத் தமிழர் எதிர்ப்பு - தீவிர சிங்களவர் எதிர்ப்பு இரண்டையும் அரவணைத்துச் செல்லும் ஒரு வழிமுறையைக் கண்டாக வேண்டிய நெருக்கடிக்கு பிரேமதாசா தள்ளப்பட்டார். அதுவே, தமிழர்களைக் காத்தருள வந்ததாகக் கூறும், இந்திய அமைதிப் படையை இலங்கைத் தீவினில் இருந்து வெளியேற்ற உதவும் என்றும் அவர் கண்டார். சிவில் அமைப்புகளில் இந்தியாவின் ஈடுபாட்டை மிகக் குறைந்த அளவிலேனும் கட்டுப்படுத்த வேண்டுமானால், விடுதலைப் புலிகளுடன் சமரசம் என்பது அவரின் முடிவாயிற்று.
கிழக்குப் பகுதியில் - கடற்கரையோரமாக ரயில் பாதையை அமைக்கவும் வடக்கிலும் கிழக்கிலும் சில முதலீட்டுத் திட்டங்களை மேற்கொள்ளப் போவதாகவும் இந்தியா அறிவித்ததன் தொடர்ச்சியாக இந்தப் பயம் ஆளும் தரப்புக்கு அதிகம் எழுந்தது.
"இன்றுள்ள நிலைமையில் "ஈபிஆர்எல்எஃப் மற்றும் ஈரோஸ் போன்ற இயக்கங்களின் தலைமையில் சில சீர்திருத்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கூடிய அறிகுறிகள் இவர்களிடம் தென்பட்டதாயினும் இந்தியாவிற்குக் கீழ்ப்படிந்து செல்லும் இவர்களின் செயல் இப்போதில்லாவிடினும் பின்னர் இந்திய மேலாதிக்கம் தொடர்பான தீவிரமான பிரச்னைகளில் சமரசம் செய்துகொண்டு போகும் நிலைமைக்கே இட்டுச் செல்லும். அப்பாவிப் பொதுமக்களின் மீது அமைதிப் படை நடத்திய அட்டூழியங்களை இதுகாலம் வரை இவர்கள் எதிர்க்க முன்வராததிலிருந்து இதனைக் கண்டு கொள்ளலாம். எனவே சாத்தியமான மாற்றுத் தீர்வினை இவர்கள் வழங்கப் போவதில்லை' என்று "முறிந்தபனை' நூலில் குறிப்பிட்டவாறே, இலங்கையின் ஆளும் வர்க்கத்தின் சிந்தனைப் போக்கும் அமைந்து அவர்களை விடுதலைப் புலிகளின் பக்கம் நெருங்கத் தூண்டிற்று.
பதவி ஏற்ற நாளில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரேமதாசா, ஜேவிபி மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் பேசத் தயார் என்றார். இலங்கைத் தீவின் ஒரு பிடி மண்ணையும் இன்னொரு நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தமாட்டோம் என்றார். எமது நாட்டின் உள் விவகாரங்களைப் பேசித் தீர்ப்போம் என்றார். எல்லாமே மயக்கம் தரும் வார்த்தைகளாக இருந்தன.
அந்த அளவுக்கு ஜேவிபி தென் இலங்கையில் சிங்கள மாவட்டங்களின் கிராமப்புறங்களைத் தனது அதீதமான வன்முறைக் கோட்பாட்டின் மூலம் வளைத்துப் பிடித்து அரசு நிர்வாகத்தைச் சீர்குலைத்திருந்தது.
எங்கு நோக்கினும் ரத்தவெள்ளம்-பிணவாடை. ராணுவம், காவல்துறை முற்றிலுமாக செயலிழந்துபோன நிலை. கல்விக்கூடங்கள் மூடப்பட்டன. போக்குவரத்தும் சீர்குலைந்திருந்தது. இத்தனைக்கும் காரணம் என்ன? இந்திய அமைதிப் படை வருகைதான். "சிங்கள பூமியில் இந்தியப் படைகளா? கொண்டுவந்தவர்களை விரட்டுவோம்' என்ற ஒற்றைக் கோஷத்துடன் ஜேவிபி தனது "செம்படை'யுடன் கொழும்பை நோக்கி முன்னேறிற்று.
இதனைத் தடுத்து நிறுத்த, ஜேவிபியின் ஆயுள்கைதிகள் 1800 பேரை பிரேமதாசா விடுதலை செய்தார். பதிலுக்கு ஜேவிபி இரண்டு மாதங்கள் தங்களது கிளர்ச்சிகளை ஒத்திப் போட்டது.
விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொள்ள, முயன்ற பிரேமதாசா, ஈரோஸ் பாலகுமார், ராஜசிங்கம் முதலானவர்களைத் தொடர்பு கொண்டார். அவர்கள் பாலசிங்கத்தின் தொலைபேசி எண்ணைத் தந்தார்கள்.
133: பிரேமதாசாவுடன் சந்திப்பு!
பாலசிங்கத்துடன் பேசிய பிரேமதாசா, பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தமது விருப்பத்தை வெளியிட்டார். வன்னியில் உள்ள பிரபாகரனுடன் தொடர்புகொண்டு அவரது விருப்பம் அறிந்ததும் பேசலாம் என பாலசிங்கம் பதிலளித்தார். அப்போது பாலசிங்கம் அமைதிப்படையை விலக்கிக்கொள்ளவேண்டும் என்று பிரேமதாசா வெளிப்படையாக அறிவிப்பது பலன் தரும் என்றும் யோசனை கூறினார்.
அதன்படியே, பிரேமதாசாவும் தமிழ்-சிங்களப் புத்தாண்டு தினமான 1989 ஏப்ரல் 12-ஆம் நாள், விடுதலைப் புலிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்து, போர்நிறுத்தம் அறிவித்தார். இந்திய அமைதிப்படையும் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பிரேமதாசாவின் அறிவிப்பையொட்டி, இலங்கை அதிபருக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டது. அக் கடிதத்தில், "இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகளை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், அவ்வமைதிப்படை இம்மண்ணை விட்டு அகலும் வரை போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று அரசு அழைப்பை உடனடியாக நிராகரித்தார்கள். பிரேமதாசா நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது இந்திய அமைதிப்படை இலங்கையைவிட்டு வெளியேறுவதற்கான ஏற்பாட்டைச் செய்வதாகக் கூறியிருந்ததையும் அக்கடிதத்தில் நினைவுபடுத்தியிருந்தார்கள் (சுதந்திர வேட்கை: அடேல் பாலசிங்கம்-பக்.281).
இதன் பின்னர் அடுத்த நாளிலேயே, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிரேமதாசா, "அமைதிப்படையை இன்னும் 3 மாதத்திற்குள் இந்தியா திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும்' என்று அறிவித்தார். அதே நாளில் வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னா அமைதிப் பேச்சுக்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, லண்டனில் இருந்த பாலசிங்கம், பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் தயார் என்றும் அதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறும் பிரேமதாசாவுக்குக் கடிதம் எழுதினார். பாலசிங்கம் விடுதலைப் புலிகள் சார்பாகப் பேசுவார் என்பது உறுதியானது. அவரும் அடேலும் கொழும்பு (ஏப்ரல்-26) வந்தனர். இவர்களுக்கென ஹில்டன் ஓட்டலில் அறை எடுக்கப்பட்டிருந்தது. அங்கு பிரேமதாசாவின் செயலர் விஜயதாசா, பாதுகாப்புத்துறைச் செயலாளர் சேப்பால அட்டிகல, வெளியுறவுத்துறை அமைச்சகச் செயலாளர் ஃபீலிக்ஸ் டயஸ் அபேசிங்கா ஆகியோர் வந்து பாலசிங்கத்தையும் அடேலையும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தனர்.
மறுநாள் சேப்பால அட்டிகல மற்றும் ராணுவத் தளபதி ரணதுங்கா இருவரும் வந்து, விடுதலைப் புலிகளின் இதரப் பிரதிநிதிகளை வன்னியிலிருந்து அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர். 1989 மே 3-இல் பயணம் என்றும், உடன் பத்திரிகையாளர்களும் வன்னிப் பகுதிக்கு இன்னொரு ஹெலிகாப்டரில் வருவார்கள் என்றும் முடிவாகியது.
கொழும்பிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வன்னிப் பகுதிக்கு பாலசிங்கம் மற்றும் அடேல் பாலசிங்கம் கிளம்பினார்கள். விடுதலைப் புலிகளின் சார்பில் பாலசிங்கத்துடன் பங்கேற்க இருக்கும் தளபதிகளை அழைக்கவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது குறித்து பொதுவாக வரவேற்றது இந்தியா.
இந்த நிலையில் வன்னிப் பகுதி நோக்கிச் சென்ற இலங்கைப் படையின் ஹெலிகாப்டர்களை, அமைதிப் படையின் எம்124 ரக ஹெலிகாப்டர்கள் இரண்டு வழிமறித்து, பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து பறந்து வந்தன. அமைதிப் படை பராமரிப்புப் பகுதியில் உள்ள வன்னிப் பகுதிக்கு சிங்கள ஹெலிகாப்டர்கள் செல்ல இருக்கின்றன என்ற தகவலைக் கூட அவர்களிடம் தெரிவிக்காமல்தான் புறப்பட்டு இருந்தன. இலங்கையின் வான் எல்லையில், இலங்கை விமானப் படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் பறக்க அனுமதி கோருவதை, தவிர்க்கவே இவ்வாறு எதுவும் சொல்லாமல் புறப்பட்டனர்.
இதனை அறிவுறுத்தும் நோக்கத்துடன்தான், இந்திய அமைதிப் படையின் ஹெலிகாப்டர்கள் பின்தொடர்ந்து வந்து, பிறகு தங்கள் வழியே சென்றன.
நெடுங்கேணிக் காட்டில் குறிப்பிட்ட அடையாளத்தைப் பார்த்து ஹெலிகாப்டர்களை இறக்க விமானிகள் மிகுந்த சிரமப்பட்டனர். இவர்கள் தேடிய இலக்கு விமானிகளுக்குத் தெரியவில்லை. பிறகு சிலுவை குறியிடப்பட்ட அந்த அடையாளத்தைக் கண்டு ஹெலிகாப்டர் தரையிறங்கியது.
எல்லாம் சரியாக நடைபெறுகிறது என்று உறுதிப்படுத்திய பின்னர்தான் காட்டின் மறைவிலிருந்து, பாதுகாப்புக்கு நின்ற போராளிகள் புடைசூழ யோகரத்தினம் யோகியும், பரமு மூர்த்தியும் இவர்களது மெய்க்காவலர் ஜுட்டும் வெளிவந்தனர்.
ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், விமானிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு அந்தக் காட்டிலும் பிஸ்கட், கேக், தேநீர் வழங்கப்பட்டது. சிறிது நேர பேச்சுக்குப் பிறகு இவர்களை அழைத்துக் கொண்டு ஹெலிகாப்டர் கொழும்பு சென்றது. விமானப் படை விமானதளத்தில் இறங்கிய விடுதலைப் புலி தளபதிகள் கொழும்பு ஹில்டன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதே ஹெலிகாப்டர்கள், முன்பு தமிழர் பகுதியில் குண்டுகளையும், ராக்கெட்டுகளையும் ஏவியதுண்டு. விடுதலைப் புலிகள், இந்த ஹெலிகாப்டர்களைக் கண்டால் சுடவும் முயற்சி எடுத்ததுண்டு. ஆனால் இன்று தலைகீழ்த் திருப்பமாக, அதே ஹெலிகாப்டரில் பயணம்; நட்சத்திர ஓட்டலில் தங்க ஏற்பாடு. "இது ஒரு புதிய அத்தியாயம்' என்கிறார் அடேல் பாலசிங்கம் தனது "சுதந்திர வேட்கை' நூலில்.
பிரேமதாசாவைச் சந்திக்கும் முன்பாக அவரைப் பற்றிய குறிப்புகளைத் தனது அணியினருக்கு பாலசிங்கம் விளக்கினார். இளவயதில் தான் பத்திரிகையாளராக இருந்த போது பிரேமதாசாவை நன்கு அறிந்தவர் அவர். "பிரேமதாசா தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். எளிமையானவர் -எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பவர். கடும் உழைப்பாளி. கவிஞர். நாவலாசிரியர். பிரதமராக இருந்த காலத்தில் சமூக நீதிக்காகப் பாடுபட்டவர். ஒரே தேசிய இனம் -ஒரே தாயகம் -ஒரே மக்கள் என்ற லட்சியத்தில் பிடிப்பு கொண்டவர். இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை ஆரம்ப முதலே எதிர்த்தவர். இன்றும் எதிர்க்கிறார். நமது நோக்கமும் அதுதான். இந்தப் பின்னணியில் நமது பேச்சு செயல் எல்லாமே இருக்கும்; இருக்க வேண்டும் -முரண்பாடுகள் ஏற்பட இடம் கொடுக்கக்கூடாது' என்றும் வலியுறுத்தினார் பாலசிங்கம். (சுதந்திர வேட்கை -அடேல் பாலசிங்கம் -பக். 283-284).
பிரேமதாசா விடுதலைப் புலிகளைச் சந்திக்க மே 4-ஆம் தேதி மாலை 5 மணியளவில் நேரம் ஒதுக்கி இருந்தார். இலங்கை அதிபர் வசிக்கும் மாளிகையான சுக்சித்ராவில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. பேச்சுவார்த்தைக்கு ஒத்துக்கொண்டமைக்கு பரஸ்பரம் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர். தாம் தமிழர்களின் நண்பன் என்றும், அவர்களின் துன்பங்களையும் போராட்டத்தையும் புரிந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். "இனப் பிரச்னை என்பது அண்ணன் -தம்பிக்கு இடையே ஏற்பட்டுள்ள பிரச்னை. நமக்குள் தீர்க்க வேண்டிய இந்தப் பிரச்னையில் இந்தியாவைக் கொண்டு வந்துவிட்டது ஜே.ஆர். செய்த தவறு' என்று ஜெயவர்த்தனாவைக் குற்றம் சுமத்தினார்.
"இதனாலேயே நாடு பூராவும் வன்செயல் இடம்பெற்று ரத்த ஆறும் கிளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதாகவும்' கூறினார்.
பாலசிங்கம் இந்திய அமைதிப் படை, புலிகளின் தற்காப்புப் போர், மக்கள் படும் இன்னல்கள் ஆகியவற்றின் பக்கம் பேச்சைத் திருப்பினார்.
"அமைதிப் படையை எதிர்த்து தெற்கில் போராட்டம் என்ற பெயரில் மக்களைக் கொல்கிறார்கள். விடுதலைப் புலிகளோ அமைதிப் படையை எதிர்த்து அவர்களுடன் போரிடுகிறார்கள். உண்மையில் அவர்களே தேசியவாதிகள்' என்று பாலசிங்கம் சொன்னதை பிரேமதாசா ஏற்றுக்கொண்டு பிரபாகரனையும் அவரது வீரத்தையும் பாராட்டினார். ஜேவிபியினரைக் கோழைகள் என்றும் அமைதிப் படையினரைப் பார்த்து அவர்கள் ஒரு கல்லைக் கூட வீசவில்லை என்றும் கூறினார் பிரேமதாசா.
பாலசிங்கம் பேசுகையில், மக்கள் தொண்டர் படை என்கிற பெயரில் ஒரு படைப் பிரிவு உருவாக்கி, அதில் மாணவர்களைச் சேர்த்து, அந்தப் படையை தமிழ்த் தேசிய ராணுவமாக, தனியார் படையாக, ஈபிஆர்எல்எஃப் கையில் வழங்க இருப்பதாகவும் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கென ஒரு நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படும் என்று பாலசிங்கத்தின் கேள்விக்குப் பதிலளித்தார். முதலில் அரசின் பிரதிநிதிகள் குழு, பின்னர் அதிகாரிகள் குழு, அமைச்சர்கள் குழு எனப் பேசப்பட்டு இறுதியில் அதிபருடன் பேச்சு என பட்டியல் தயாரானது.
134: புலிகளுடன் பேச்சுவார்த்தை!
மே 5, 11 என்று தொடங்கி மே 30-ஆம் தேதி வரை எல்லாமாகச் சேர்த்து, 9 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஒவ்வொரு சந்திப்பின்போதும் கூட்டறிக்கை ஒன்றும் தயாராகி வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையைத் தயாரிக்கும்போது மிக மென்மையாக இந்தியா விமர்சிக்கப்பட வேண்டும் என்ற அக்கறையுடன் செயல்பட்டார் அமைச்சர் எ.சி.எஸ். ஹமீது. இவர் உயர்கல்வி, அறிவியல் தொழில்நுட்பத் துறைக்கு அமைச்சர் ஆவார்.
பேச்சுவார்த்தைக்கு இறுதியில் வெளியிடப்படும் அறிக்கைகள் உலகெங்கும் எதிரொலித்த காரணத்தால், அமைதிப்படையின் பங்கு, பணி குறித்த பிம்பம் சிறிது சிறிதாகச் சேதமுற்றது.
இலங்கை அரசின் பிரதிநிதிகளுடன் பல்வேறு அமர்வுகளிலும் விடுதலைப் புலிகள் தரப்பில், பாலசிங்கம் வழியாக, எடுத்து வைத்த வாதங்களில் குறிப்பிடத்தகுந்தது என அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிட்டுள்ளது வருமாறு:
""அமைதி காக்கும் நடவடிக்கை என்றால் என்னவென்று, தெளிவான ஐ.நா. கருத்துருவாக்கம் ஒன்று உள்ளது. முரண்பாட்டு மோதல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், அமைதியை முன்னெடுப்பது தொடர்பாகவும், அனைத்துலக மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களும் தரங்களும் உள்ளன. அமைதி காக்கும் ராணுவமானது, முரண்பாடு மோதலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு அல்லது கூடுதலான பிரிவுகளுக்கிடையே, பக்கம் சாராது நிற்பது முக்கியமானது. அமைதி காக்கும் நடவடிக்கையின் முக்கிய பணி என்னவென்றால், மோதல் இடம்பெறும் பகுதிகளில் அமைதியைப் பேண அல்லது மீண்டும் நிறுவ உதவுவது. அமைதி காக்கும் நடவடிக்கை என்பது மோதலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடாகும்.
ஐ.நா. மரபிலே பார்த்தால், அமைதிப்படையானது மோதல் நிலை விரிவடையாது தடுத்து, அமைதிக்கான சுமூகச் சூழலை ஏற்படுத்த ஆணைபெற்று இயங்குவது. அமைதி நடவடிக்கையிலே ஈடுபடும் ராணுவ உறுப்பினர்களுக்கு வலிந்து திணிக்கும் அதிகாரம் எதுவும் வழங்கப்படுவதில்லை. தற்காப்பு தவிர்த்த வேறு எதற்கும் ராணுவ உறுப்பினர்கள் ஆயுத பலத்தைப் பயன்படுத்த அதிகாரம் வழங்கப்படுவதில்லை. அத்துடன் இலகுவான பாதுகாப்பு ஆயுதங்களை மட்டுமே அவர்கள் தரித்திருப்பார்கள்.
போராட்டத்தில் சம்பந்தப்படுத்தப்பட்ட தரப்பினரின் ராணுவச் சமநிலை, பாதிக்கப்படும் வகையில் அமைதிப்படை நடந்து கொள்ளக் கூடாது. இவையே அமைதி காப்புச் செயற்பாட்டை வழிநடத்தும் அடிப்படை வழிமுறைகளும் கோட்பாடுகளுமாகும். அனைத்துலக மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் இவை.
இந்த வழிமுறைகளுக்கும் நியமங்களுக்கும் அமைவாக இந்திய அமைதிப்படை இல்லை. தொடக்கத்தில், இந்திய - இலங்கை ஒப்பந்த நிபந்தனைகளுக்கு அமைவாகவே, இந்திய ராணுவப் பிரிவு ஒன்று இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீலங்கா அரசுப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நடக்கும் போர் முடிவுக்கு கொண்டு வரப்படுவதை மேற்பார்வை செய்வதும், அமைதியைப் பேணுவதுமே அதன் பணியாக இருந்தது.
ஆனால், விரைவிலேயே அமைதிப்படை முற்றிலும் வேறுபாடான நிலையில் பங்காற்றத் தொடங்கியது; போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு பிரிவினருடன், அதாவது விடுதலைப் புலிகளுடன் ஆயுதபாணியாக விரைவிலேயே மோதத் தொடங்கியது.
ஆயுத மோதல், ஆயுதங்களைக் களையும் முயற்சியாகவே முதலில் கருதப்பட்ட போதிலும், விரைவில் இந்தியப் படைகளுக்கும் புலிகளின் கெரில்லாப் படையினருக்கும் இடையே முழுமையானப் போராக வடிவெடுத்தது.
கடந்த 20 மாதங்களாக போர் நடந்து கொண்டிருப்பதோடு, போரில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்தியப் படையினரும் விடுதலைப் புலிகளுமே.
நடுநிலை நின்று அமைதி காக்க, மத்தியஸ்தம் செய்ய வேண்டியவர்கள் தாமே நேரடியாக ராணுவ மோதலில் ஈடுபட்டிருந்ததால், அமைதி காக்கும் முயற்சியின் தன்மையே கேள்விக்கு உரியதாகிவிட்டது.
தமிழ்ப் பகுதிகளில் செயலாற்றிக் கொண்டிருக்கும் அமைதிப்படையை இனிமேலும் நடுநிலைப்படை என்று கொள்ள முடியாது. அது போரைக் கட்டுப்படுத்தவும் இல்லை; அமைதியைப் பேணவும் இல்லை. போராட்டம் தீவிரமடைவதைத் தடுப்பதற்குப் பதிலாக, வன்செயலையும் போரையும் தீவிரப்படுத்தியிருக்கின்றது. அமைதிப்படை ஆட்சி அதிகாரங்களைச் சுவீகரித்துக் கொண்டு, இந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டிருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரசன்னமாகி இருக்கும் அமைதி காக்கும் படை, ஓர் ஆக்கிரமிப்பு என்பது விடுதலைப் புலிகளின் தீர்க்கமான முடிவாகும்'' (சுதந்திர வேட்கை -பக். 291-292).
இது போன்ற கருத்துகள் வெளிவரவும் ராஜீவ் காந்தி - பிரேமதாசா இடையே மோதல் போக்கு தலைதூக்கிற்று. தம்மை விமர்சிக்க விடுதலைப் புலிகளுக்கு வாய்ப்பளித்து அதைப் பெரிய அளவில் விளம்பரப்படுத்த முனைவதாகவும் ராஜீவ் கண்டார். இந்திய வெளியுறவு அமைச்சகம் இச் செயலுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.
கொழும்பிலுள்ள இந்தியாவுக்கான தூதுவர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ""ஸ்ரீலங்காவில் உள்ள அமைதிப்படையின் பங்கும் பணியும் பற்றி, பேச்சுவார்த்தையில் ஈடுபடும் ஓர் அணியின் கருத்தை ஸ்ரீலங்கா அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்தியிருப்பதை இந்தியத் தூதுவரகம் கருத்தில் கொண்டுள்ளது. அமைதிப்படை இந்த நாட்டுக்கு வந்த சூழ்நிலை பற்றியோ, இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா அரசுகளினால் அதனிடம் கூட்டாக ஒப்படைக்கப்பட்ட கடமைகள் பற்றியோ, அதன் பணியில் உள்ள இடையூறுகள் பற்றியோ, ஸ்ரீலங்காவின் ஐக்கியம் மற்றும் அதன் இறையாண்மையைப் பாதுகாக்கும் முயற்சியில் புரிந்த தியாகங்கள் பற்றியோ அறிக்கைகள் குறிப்பிடவில்லை. தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையின் நோக்கம் அவதூறுப் பிரசாரமாக இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட அனைவரும் வன்செயலைக் கைவிட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்புவதாக அதன் இலக்கு இருக்க வேண்டும் என்றே இந்தியத் தூதரகம் கருதுகிறது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், அமைச்சர்களது அணியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, விடுதலைப் புலிகள் சார்பில் இந்தியத் தூதுவரக அறிக்கைக்கு பதிலளிக்க விரும்பினர். பலத்த வாக்குவாதங்களுக்குப் பின்னர், ஆயுதங்களை ஒப்படைக்க 72 மணி நேர அவகாசம் வழங்கப்பட்டது. இன்று 20 மாதங்கள் ஆன நிலையிலும் அதே போராட்டம் நடைபெறுகிறது. ஏராளமான தமிழ் மக்கள் உயிர் துறந்ததை ஸ்ரீலங்கா அரசு கவனத்தில் கொள்ளவில்லை. தமிழ் தேசிய ராணுவம் என்ற பெயரில் அமையும் ராணுவப்படை எதற்காக என்றும் புலிகள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
பேச்சுவார்த்தைகளில் அரசின் பிரதிநிதிகளாக அதிபரின் செயலாளர் கே.எச்.ஜே. விஜயதாசா, வெளியுறவுச் செயலாளர் பெர்னார்ட் திலகரட்ன, அதிபரின் ஆலோசகர் பிரட்மன் வீரக்கூன், பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் சிறில் ரணதுங்க, பாதுகாப்புச் செயலாளர் டபிள்யூ.டி. ஜெயசிங்கா, தேர்தல் ஆணையாளர் ஃபீலிக்ஸ் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைச்சர்கள் குழுவில் பிரதான வழிநடத்துனராக எ.சி.எஸ். ஹமீதும், இதில் கலந்துகொள்ளும் அமைச்சர்களாக வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னா, கைத்தொழில் அமைச்சர் ரனில் விக்ரமசிங்கா, வீட்டுவசதித் துறை அமைச்சர் சிறீசேன கூரே, முதலில் சேர்க்கப்பட்டனர்.
பின்னர் மே 18-ஆம் நாள் நடந்த கூட்டத்தில் மேலும் இரு அமைச்சர்களாக யூ.பி. விஜேக்கூன் (பொது நிர்வாகம், மாகாண சபை, உள்நாட்டு அலுவல் துறைகள்) பி.தயாதரன் (நிலம், நீர்ப்பாசனம், மகாவலி அபிவிருத்தி துறைகள்) கலந்துகொண்டனர்.
இதன் பின்னர் மே 23, 27 தேதிகளில் சிங்களக் குடியேற்றம் குறித்து முடிவுக்கு வருவது குறித்துப் பேசப்பட்ட நிலையில், இறுதியில், நிரந்தரப் போர் நிறுத்தம் குறித்துப் பேசுவதற்கு முன்பு புலிகளின் பேச்சாளர்கள் தாங்கள் பிரபாகரனைச் சந்தித்துப் பேசுவதன் அவசியத்தை வலியுறுத்தினர். இதனையொட்டி விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மே 30-ஆம் தேதி, ஹெலிகாப்டரில் வன்னிக் காட்டுப் பகுதிக்குப் புறப்பட்டனர்.
135: பிரபாகரனுடன் சந்திப்பு!
பிரேமதாசாவின் பேச்சுத் தொடர்பாக வே.பிரபாகரனைச் சந்திப்பது என்பது 1987-ஆம் ஆண்டு அமைதிப் படையுடனான போர் ஏற்பட்ட பிறகு ஏற்பட்ட நிலைகளை நேரில் அறிவதே பாலசிங்கம் தம்பதியின் முக்கிய நோக்கமாக இருந்தது. வன்னிப் பகுதி அமைதிப் படையின் முக்கிய இலக்காகும். இந்தக் காட்டுக்குள் இருந்துதான் பிரபாகரன் தனது ஆணைகளைப் பிறப்பித்து வருகிறார். எனவே காட்டுக்குள் இருந்து பிரபாகரனை வெளியே இழுக்கும் நோக்கத்துடன் வான் வழியாக டன் கணக்கில் வெடிமருந்துகள் வீசப்பட்ட பகுதி இது.
சிறப்பு அதிரடிப் படை, காடுகளில் புகுந்து தாக்கும் இன்னொரு சிறப்பு அதிரடிப் படை என காட்டினுள் புகுந்து அமைதிப் படை, தாக்குதலை நடத்தியது. அவர்கள் களைத்துப் போகவும், வானிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தொடர் தாக்குதல் -இவ்வாறாக கிழக்குக் கரையான முல்லைத் தீவிலிருந்து ஒட்டுசுட்டான் வரையிலும், வடகிழக்கில் கிளிநொச்சி வரையிலும் ஆயிரமாயிரம் துருப்புகள் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு மற்றும் தேடல் முயற்சிகள் அமைதிப் படையால் மேற்கொள்ளப்பட்ட பகுதியாகும் இது.
பிரபாகரனைப் பிடிக்கும் இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி கண்டன. அவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் அமைதிப் படை தவித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் பாலசிங்கம் உள்ளிட்ட குழுவினர் ஹெலிகாப்டரில் வன்னிக் காட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்த முறை ஹெலிகாப்டர் முல்லைத் தீவில் உள்ள அலம்பில் காடுகளில் தரையிறங்கியது. இதன் அருகேதான் பிரபாகரன் தங்கியிருந்த 1:4 என்கிற குறியிடப்பட்ட தலைமைப் பாசறை இருந்தது. (சுதந்திர வேட்கை, பக். 302).
அமைதிப் படையின் உளவுப் பிரிவு இந்தப் பகுதியை நோட்டமிட்டுக் கொண்டிருந்ததால் எந்தவகைத் தாக்குதலுக்கும் எதிர்கொள்கிற நிலையில் புலிகள் அங்கு ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தனர். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கிய பேச்சுவார்த்தைக் குழுவினரை மகளிர் பிரிவு தளபதி சோதியா தனது குழுவினருடன் நேரில் வந்து வரவேற்று அழைத்துச் சென்றார்.
இந்தப் பயணம் குறித்து அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிடுகையில் இந்தப் பாதை அவ்வளவு சுலபமாக இல்லையென்றும், தடமில்லா காட்டுப் பகுதி சிற்றாறுகள், முட்செடிகள் நிறைந்திருந்த பகுதி என்றும் எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி நீரிழிவு நோய் காரணமாக பாலசிங்கத்தால் அதிக தூரம் நடக்க முடியவில்லை என்றும், எனவே இரு கழிகளின் இடையே தொட்டில் போல கட்டி, அதில் அவரை அமர வைத்துப் போராளிகள் தோளிலே தூக்கிச் சென்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாலசிங்கம் குழுவினரை அழைத்துச் செல்லும் பொறுப்பு அப்போதைய மூத்த தளபதிகளில் ஒருவரான சங்கருக்கு வழங்கப்பட்டிருந்தது. வழியெங்கும் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்ததால், கவனமாக அவர்கள் நடந்து செல்லவும் பணிக்கப்பட்டிருந்தது.
வழியெங்கும் குண்டுவீச்சுக்கு ஆளான மரங்கள் முறிந்தும், நீர்நிலைகள் கலங்கியும் காட்சியளித்த சூழ்நிலையில், திடீரென விடுதலைப் புலிகள் சீருடையில் காணப்பட்டனர். அருகில்தான் பாசறை என்பது புலப்பட்டது. ஆனால் பாசறை அடையாளமே தெரியவில்லை. ஓரிடத்தில் அவர்கள் நின்றபோது அந்த இடத்தில் எதிரிகள் கண்டுபிடிக்க முடியாத வகையில் உருமறைக்கப்பட்ட வடிவில், பிரபாகரனின் பாசறை அமைந்திருந்தது. சுற்றிலும் புதிய போராளிகளுக்குப் பயிற்சிகள் நடந்து கொண்டிருந்தன. ஒரு பகுதியில் பெண் போராளிகளுக்கு உயர் பயிற்சியும் அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஜெயந்தி அந்தப் பயிற்சியை அளித்தார்.
பாசறையில் கிட்டுவும் இருந்தார். யாழ்ப்பாணத் தடுப்புக் காவலில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டபின் நேரடியாக இங்கு வந்து சேர்ந்து கொண்டதாக அடேல் குறித்துள்ளார். பொட்டு அம்மானும் அப்போது அங்கேதான் இருந்தார். தமது காயங்கள் முற்றாக குணம் அடைந்த நிலையில், யாழ்ப்பாணத்தில் அவர் தளபதியாக இருந்து கொரில்லாப் போரை அமைதிப்படைக்கு எதிராக நடத்தி வந்தார். இந்நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை குறித்து விவாதிக்க அவரும் அழைக்கப்பட்டிருந்தார். கபில் அம்மான் என்கிற மூத்த போராளியும் இந்தச் சந்திப்பின்போது உடன் இருந்தனர்.
கொழும்பில் இதுவரை நடந்த சந்திப்புகளின் விளைவாக உருவான கருத்துகள் குறித்து பாலசிங்கம், பிரபாகரனுக்கு விளக்கினார். இதன் சாதக, பாதகமான அம்சங்களுடன் சேர்த்தே, எதிர்கால நன்மை கருதி பாலசிங்கம் தொடர்ந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த அனுமதிக்கப்பட்டது.
அமைதிப் படையை வெளியேற்றுவது குறித்து இலங்கை, இந்திய அரசுகளுக்கிடைய மேடைப் பேச்சில் வெடித்தது மோதல். பிரேமதாசா, கொழும்பு நகரில் நடைபெற்ற பெüத்த சமய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அமைதிப் படை ஜூலை இறுதிக்குள் இலங்கையை விட்டு வெளியேறுமாறு, இந்தியப் பிரதமரிடம் கேட்க இருப்பதாகவும், நவம்பர் மாதத்தில் இலங்கையில் சார்க் மாநாட்டை நடத்த இருப்பதால், அப்படி மாநாடு நடைபெறும்போது, இந்த நாட்டில் அந்நிய ராணுவம் இருப்பது எந்த வகையிலும் உயர்ந்ததாக இருக்க முடியது என்றும் பேசினார்.
இந்தப் பேச்சு பத்திரிகைகளில் வெளி வந்ததைப் பார்த்து எரிச்சலடைந்தது இந்தியா, இந்தப் பேச்சை வலியுறுத்தி, ஜூன் 2 ஆம் தேதி பிரதமர் ராஜீவ் காந்திக்கு, பிரேமதாசா ஒரு கடிதம் எழுதினார். இந்த கடிதம் ராஜீவ் காந்திக்கு கோபத்தை வரவழைத்தாலும், அவர் இதற்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. மாறாக, வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் "ஆயிரக்கணக்கான வீரர்கள் கொண்ட ஒரு படைப் பிரிவு மற்றும் படைக்கலன்களை இரண்டு மாதத்தில் திரும்பெறுவது இயலாத ஒன்று' என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதேநேரம் பிரதமர் ராஜீவ் காந்தி, பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, "ஈபிஆர்எல்எஃப் அரசுக்கு உரிய அதிகாரங்களை வழங்கி, வடக்கு கிழக்கு மக்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்யப்படும் வரை அமைதிப் படையின் பணி முடிவுற்றதாக ஆகாது' என்றார். மேலும் அவர் இதுகுறித்து கூறுகையில், "படைகள் திரும்பப் பெறுவது குறித்து இரு அரசுகளும் கலந்து பேச வேண்டியதும் இருக்கும்' எனவும் தெரிவித்தார். (ஜூன் 14, 1989)
இந்த நிலையில்தான், விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமான இரண்டாம் கட்ட பேச்சு ஜூன் 16 மற்றும் 19 தேதிகளில் நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தைக்கென பாலசிங்கம் உளளிட்டோர் மீண்டும் கொழும்பு வந்தனர். இம்முறை, இவர்களுடன் மேலும் நான்கு பேர் சேர்க்கப்பட்டனர். அவர்கள் லாரன்ஸ் திலகர், எஸ். கரிகாலன், சமன் ஹசன், அபூபக்கர் இப்ரகீம் ஆகியோர்ஆவர். அதேபோன்று அரசுத் தரப்பிலும் மேலும் இரு அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர்.
முதல் கட்ட பேச்சில், பேச்சு நடத்துபவராக இருந்த அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீது, இலங்கையிலிருந்து அமைதிப் படை வெளியே அனுப்புவதில் அதிபர் உறுதியாக இருப்பதாகவும், இந்த ஒப்பந்தம் என்ன நோக்கத்திற்காகப் போடப்பட்டதோ அது நிறைவேறவில்லை என்றும், வடக்கிலும் தெற்கிலும் அமைதியற்ற சூழல் நிலவுவதாகவும், காலாவதியாகிவிட்ட ஒப்பந்தமாக இருக்கும் நிலையில் அமைதிப் படையும் வெளியேறத்தான் வேண்டும் என்று அதிபர் கருதுவதாகவும் அவர் தனது முன்னுரையில் வெளிப்படுத்தினார். வடக்கு-கிழக்கு மாகாண அரசுக்கென ஒரு படையமைக்க ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் அதிபர் கருதுவதாகக் குறிப்பிட்டார்.
இவையெல்லாவற்றையும் விட இந்திய அமைதிப் படை யாருடன் மோதுகிறதோ அவ்வமைப்பும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைதிப் படை தேவையா என்பது குறித்து அதிபர் வினா எழுப்புகிறார் என்றும் தெரிவித்தார்.
ஹமீது மேலும் பேசுகையில், இந்தியாவின் நிலைமைகள் குறித்து, முந்தின கூட்டத்தில் கலந்துகொண்டபோது பேசியது போலன்றி வெளிப்படையாகத் தெரிவித்தார். இவை யாவும் விமரிசனங்களாகும்.
பேச்சுவார்த்தைகளின் இறுதியில் தமிழ் தேசிய ராணுவம் குறித்து இந்தியாவிடம் பேசும்போது குறிப்பிட வேண்டிய அம்சம் என எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.
பேச்சின் இறுதியில், போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள், அரசு இரண்டும் சேர்ந்தே அதாவது கூட்டாக அறிவிப்பது என முடிவெடுத்தனர்.
136: இந்தியா - இலங்கை மோதல் முற்றுகிறது!
அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது குறித்து பிரேமதாசா எழுதிய கடிதத்துக்கு ஜூன் மத்தியில் பிரதமர் ராஜீவ் காந்தி பதில் எழுதினார். அந்தக் கடிதத்தில், ""இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது, ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவது ஆக இரு விஷயங்கள் குறித்து, இரு தரப்பாரும் பேசி முடிவுக்கு வரவேண்டிய விஷயமாகும். மேலும், ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படுவதும், அமைதிப் படையைத் திரும்பப் பெறுவதும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்'' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலம் பிரேமதாசாவின் விருப்பப்படி, ஜூலை இறுதியில் அமைதிப்படை இந்தியா திரும்ப வாய்ப்பில்லை என்று கண்டதும் அவர் எரிச்சலுற்றார். அதுவும் தவிர, வடக்கு - கிழக்கு மாகாண சபைக்கு பாதுகாப்புக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வலியுறுத்துவதன் மூலம் அதற்கான முயற்சியிலும் இந்தியா தீவிரம் காட்டியது.
இதன் வெளிப்பாடுதான் தமிழ் தேசிய ராணுவத்திற்குக் கட்டாய ஆள் சேர்ப்பு. அதே நேரத்தில், இந்திய அமைதிப் படை இலங்கை மண்ணைவிட்டு அகலக்கூடாது என கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இந்தப் பணியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான குழுக்கள் தீவிரம் காட்டின. இது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்ட (5 ஜூன் 1989) அறிக்கையில், "நாம் முன்பு இந்திய அரசிடம் (அ) தமிழ், முஸ்லிம் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகளே என்றும் (ஆ) இந்திய அமைதிப்படை வெளியேற வேண்டும் என்றும் (இ) சர்வதேச அமைதிப்படை ஒன்று இலங்கை வரவேண்டும் - என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்த கோரிக்கை வைத்தோம். அன்று அதை ஏற்காமல், இன்று கையெழுத்து இயக்கம் நடத்துவது ஏன்? என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதே நிலையில்தான், இலங்கையின் வடக்குப் பகுதி மக்களின் நிலையும் இருந்தது. கட்டாய ஆள்சேர்ப்பு என்பது இளைஞர்களை வீட்டிலேயே முடக்கிப் போட்டது. வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அரசுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும், நிதி அளிக்கப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்ட நிலையில் பிரேமதாசா அரசு இக்கோரிக்கையைக் கண்டுகொள்ளவே இல்லை.
இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணைந்து போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர். இதனையொட்டி, விடுதலைப் புலிகள் இயக்கம் மீது போர் நடவடிக்கைக் கூடாது என்றும், போர் தொடர்ந்தால் அது, தங்களின் சமாதானப் பேச்சுக்கு ஊறு விளைவிப்பதாக அமையும் என்றும் தில்லிக்கு இலங்கை அரசு செய்தி அனுப்பியது.
ஆனால் தில்லியோ, இலங்கைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் அமைதிப்படை வந்த பின்னர் நேரடிப் போர் நடைபெறவில்லை என்றும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் அந்தப் போர், அமைதிப்படை - விடுதலைப் புலிகள் இடையேதான் நடைபெற்று வருவதாகவும் பதில் அளித்தது.
அதுமட்டுமன்றி, "இன்னும் கையளிக்கப்படாத ஆயுதங்களை ஸ்ரீலங்கா அரசிடம் புலிகள் ஒப்படைப்பதுடன், வன்செயல்களை முற்றாகக் கைவிட வேண்டும். அப்படியிருந்தால்தான் போர் நிறுத்தம் அர்த்தமுள்ளதாக இருக்கும்' என்றும் கூறியது.
இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள், அமைச்சர் ஹமீதைத் தொடர்புகொண்டு, "ஆயுதத்தைக் கீழே போடுவது என்ற பிரச்னையைத் தீர்ப்பது ஸ்ரீலங்கா அரசினுடையது என்றும், தமிழ் தேசிய ராணுவம் என்ற பெயரில் வலுவான ராணுவக் கட்டமைப்பை அமைதிப்படை ஏற்படுத்துவதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், புலிகள் ஆயுதக் கையளிப்புக்கு முன்னதாக அமைதிப்படையும், அதன் ஆதரவு பெற்ற குழுக்களும் புலிகளுக்கெதிரான வன்செயலைக் கைவிடுவார்கள் என இந்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பு மூலம் இந்தியாவுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள்.
பிரமேதாசா விடுதலைப் புலிகளின் கருத்துகளை ஏற்று, தனது அடுத்த கடிதத்தில் அவற்றை எதிரொலித்தார். இதற்கு தில்லியில் இருந்து (ஜூலை 11, 1989) வந்த கடிதத்தில், பல்வேறு புகார்களைக் கூறியதுடன் "அமைதிப்படை வெளியேற்றம் குறித்து பேசுவதானால் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஒரு அட்டவணை தயாரிக்கலாம்' என்று தெரிவித்த அக்கடிதம், "அரசுத் தலைவர்களிடையே நம்பிக்கை அடிப்படையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ கடிதங்கள் ஒழுக்க நடைமுறை விதிகளை மீறி அவை பகிரங்கப்படுத்தும் செயலுக்கும்' பிரேமதாசா மீது நேரடிக் கண்டனம் தெரிவித்தது (சுதந்திர வேட்கை: அடேல் பாலசிங்கம்-பக்.321).
இந்தப் பதிலால் கோபமுற்ற பிரேமதாசா, முப்படைகளின் தலைவர் மட்டுமன்றி, இலங்கையில் உள்ள அமைதிப் படைக்கும் தானே தலைவர் என்ற முறையில் இந்திய அமைதிப்படை ஜூலைக்குள் கட்டாயம் வெளியேற வேண்டும் அல்லது படை முகாமுக்குள் முடங்க வேண்டும் என்ற சட்டபூர்வ உத்தரவை அமைதிப்படைத் தளபதி லெப். ஜெனரல் அமர்ஜித் சிங் கல்கத்துக்கு அனுப்பினார்.
அவரோ, "ஸ்ரீலங்காப் படைகள் தங்களது பாசறையை விட்டு வெளியேறினால், அவர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட எங்களை நிர்ப்பந்திப்பவர்கள் ஆவார்கள்' என்று எச்சரித்தார் (மேற்கண்ட மேற்கோள்படி).
அமிர்தலிங்கம் முளாயைச் சேர்ந்த இவர், எளிமையானவர். 21 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஆறு ஆண்டுகள் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
கொழும்பில் அமிர்தலிங்கம், மாவை சேனாதிராஜா, யோகேஸ்வரன், சிவசிதம்பரம் ஆகியோர் ஒரே அடுக்குமாடி வீட்டில் கீழும் மேலுமான குடியிருப்புகளில் வசித்து வந்தனர். யோகேஸ்வரனிடமிருந்து அவரது பணியாள் மூலமாக வந்த துண்டுச் சீட்டைப் பார்த்து மேலே குடியிருந்த யோகேஸ்வரன் வீட்டுக்குப் போனார் அமிர்தலிங்கம். அவர் மேலே சென்ற சிறிது நேரத்தில் வெடிச் சத்தம் கேட்டு அமிர்தலிங்கம் மனைவி மங்கையற்கரசி மேலே சென்று பார்க்க யோகேஸ்வரன் மார்பில் குண்டு துளைத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்தார்; அமிர்தலிங்கம் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே தலையைத் தொங்கவிட்டபடியே சாய்ந்து கிடந்தார். பயந்து போன மங்கையற்கரசி அவரது தலையைத் தூக்கவும் அவர் இறந்ததைக் கண்டார். சுவர் மூலையில் சிவசிதம்பரம் காயங்களுடன் கிடந்தார் (13 ஜூலை 1989) என்று "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூலில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் இறந்த விதம் குறித்து, சி.புஷ்பராஜா குறிப்பிட்டுள்ளார்.
இக்கொலை முயற்சியில் ஈடுபட்ட விசு, அலோசியஸ், சிவகுமார் மூவரும் அந்த வீட்டின் வெவ்வேறு பகுதிகளில் மெய்க்காவலர்களின் தாக்குதலில் இறந்து கிடந்தார்கள்.
இந்த மரணத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் சுட வந்தவர்கள் புலிகள் இயக்கத்தில் முன்னாள் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்திய அரசின் ராஜதந்திரியான முக்த் துபேயை, அமிர்தலிங்கம் இந்தியத் தூதுவரகத்தில் ஜூலை 12-இல் சந்தித்ததாகவும், அடுத்த நாள் பி.ஜி. தேஷ்முக்கை சந்திக்க இருந்ததாகவும் ஒருதலைப்பட்சமான தமிழீழப் பிரகடன அறிவிப்பு பற்றிய வதந்தி நிலவிய நேரம் அது என்றும், தமிழ் மக்களுக்கு விடிவு விடுதலைக் கூட்டணி மூலம் ஏற்படும் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் கூறியதாகவும் மாவை.சேனாதி ராஜாவின் குறிப்பை வைத்தும் ஒரு தகவலை சி.புஷ்பராஜா தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் இன்னொரு வாதத்தையும், அவர் அந்நூலில் பதிவு செய்துள்ளார். அதாவது அதிபர் பிரேமதாசா இலங்கைக்கு இந்தியா மூலமான தீர்வு தேவையில்லை என்று முடிவு எடுத்த நிலையில், தாம் விடுதலைப் புலிகளுடன் நட்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில், இந்தியப் பிரதிநிதிகள் அமிர்தலிங்கத்தை அழைத்துப் பேசியதை விரும்பாமல் அவரே கூட இதுபோன்ற கொலைகளை ஆட்களை ஏவி செய்திருக்கலாமென்றும் கூறியிருக்கிறார்.
இதற்கு மேலும் ஒரு தகவலைக் கூறியுள்ளார் சி.புஷ்பராஜா, "ஒருமுறை அடையாறில் இருந்த புலிகளின் அலுவலகம் சென்று, பிரபாகரனுடன் பேசிவிட்டு தனது காரில் அமிர்தலிங்கம் ஏறும்போது, கார்க் கதவைச் சாத்திவிட்ட பிரபாகரன், ""அண்ணா, நீங்கள் கவனம்; உங்களைக் கொல்ல மற்ற இயக்கத்தவர்கள் முனையலாம்'' என்று எச்சரிக்கை செய்தார் என 1993-ஆம் ஆண்டு என்னுடன் பேசியபோது மங்கையற்கரசி அமிர்தலிங்கம் சொன்னார் என்றும் (பக்.509-510) கூறியிருக்கிறார்.
இவ்வகையான வாதங்களுக்குக் காரணமே எந்த இயக்கமும் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைக்குப் பொறுப்பு ஏற்காததுதான்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.