கடந்த
50 ஆண்டுகளில் உலகில் எத்தனையோ தேசிய விடுதலைப்
போராட்டங்கள் வெற்றிவாகை சூடியிருக்கின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்டுத்
துப்பாக்கிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட வியட்நாம் மக்களின் விடுதலைப் போராட்டம், உலகின் மிகவும்
சக்திவாய்ந்த அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களை,
20 ஆண்டுகளில்
தோற்கடித்தது. அதேபோல வெள்ளை நிறவெறிக்கெதிரான தென் ஆபிரிக்க, சிம்பாப்வே, அங்கோலா, மொசாம்பிக் மக்களின்
ஆயதம் தாங்கிய போராட்ங்களும் வெற்றி பெற்றன.
இந்தோனேசிய
ஆக்கிரமிப்புக்கு எதிரான கிழக்கு திமோர் மக்களின் போராட்டமும், எத்தியோப்பிய
ஆக்கிரமிப்புக்கு எதிரான எரித்திரிய மக்களின் போராட்டங்களும் கூட, வெற்றி பெற்றன. இவர்கள்
எவரிடமும் புலிகளிடமிருந்தது போல, நவீன ஆயுதங்களோ, கோடிக்கணக்கான பணமோ, விமாப்படை, கடற்படை என்பனவோ இருக்கவில்லை.
ஆனால் அவர்களது போராட்டங்கள் வெற்றி பெற, புலிகளால் நடாத்தப்பட்ட
‘தமிழீழப்
போராட்டம்’ மட்டும்
முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.
இதற்குக்
காரணம் என்ன? முதலாவதாக, புலிகளுக்கும் உலகின்
ஏனைய விடுதலை இயக்கங்களுக்கும் உள்ள மிக அடிப்படையான வித்தியாசம், புலிகள் ஏகாதிபத்திய
சக்திகளைச் சார்ந்திருந்ததும், ஏனைய இயக்கங்கள் தமது
போராட்டத்தின் அடிப்படையாக ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டிருந்ததுமாகும். இன்றைய
உலகில் அந்நிய ஆக்கிரமிப்புகளும், இன ஒடுக்குமுறைகளும்
ஏகாதிபத்தியவாதிகளாலும், காலனித்துவவாதிகளாலும்
உருவாக்கப்பட்டவையாகும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையும் பிரித்தானிய
ஏகாதிபத்தியவாதிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். எனவே அதை
தீர்ப்பதற்கான போராட்டம் என்பது, ஏகாதிபத்திய
எதிர்ப்புப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். ஆனால் புலிகள் தமது
போராட்டத்தின் போது, மக்களை
நம்புவதை விட ஏகாதிபத்தியவாதிகளின் ஆலோசனைகள், ஆயுதங்கள், நிதி என்பனவற்றிலேயே
பெரிதும் தங்கி இருந்தனர். அவர்களுக்கு சாதாரண சிங்கள – முஸ்லீம் மக்கள்
விரோதிகளாகவும், ஏகாதிபத்தியவாதிகள்
நண்பர்களாகவும் காட்சியளித்தனர்.
இரண்டாவதாக, புலிகள் மக்களை நம்புவதற்கும், நேசிப்பதற்கும் பதிலாக, ஆயுதங்களை
வழிபடுவதிலேயே அதிக அக்கறை செலுத்தினர். அதன் காரணமாக மக்களின் ஜனநாயக உரிமைகளை
ஆயுத முனையில் அடக்கி ஒடுக்கினர். அதன் உச்ச கட்டமாக மக்களின் பிரதான எதிரி அரசும்
அதன் இராணுவமும் என்ற நிலைமாறி, புலிகளே அவர்களின்
பிரதான எதிரி என்ற நிலை இறுதியில் தோன்றியது. அதன் காரணமாகவே வன்னி இறுதிக்கட்டப்
போரின் போது, மக்கள்
புலிகளின் பிடியிலிருந்து தப்பி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வர முயன்ற
செயலாகும். அப்படித் தப்ப முயன்ற பொதுமக்களைப் புலிகள் கொன்று குவித்தனர். இலங்கை
அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து குரல் எழுப்பும் மேற்கத்திய ஏகாதிபத்திய
நாடுகளும், அவர்களது
மனித உரிமை அமைப்புகளும் புலிகள் கடந்த முப்பது வருடங்களாக மேற்கொண்டு வந்த மனித
குலத்துக்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து வாய் திறப்பதே இல்லை.
உலகின் மிக வலிமைவாய்ந்த ஒர் இயக்கமாக, ஒரு பெரும்
பிரதேசத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து, அங்கு தனது படை
பட்டாளங்களையும், நீதி
நிர்வாகக் கட்டமைப்புகளையும் நிறுவி, ஒரு போட்டி
அரசாங்கத்தையே நடாத்தி வந்த புலிகளை, இலங்கை அரசு எவ்வாறு
முற்றுமுழுதாக அழிக்க முடிந்தது? இந்த இடத்தில் தான்
நாம் முக்கியமான ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும்.
புலிகளும், ஏனைய தமிழ்த்
தேசியவாதிகளும், இலங்கையில்
நடைபெற்றது தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் என, ஆயிரம் தடவைகள்
திரும்பத் திரும்ப சொன்னாலும், உண்மையில் அது ஒரு
தேசிய விடுதலைப் போராட்டம் அல்ல. உண்மையான தேசிய விடுதலைப் போராட்டம் என்பது
ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தனது அடி நாதமாகக் கொண்டிருக்கும். அது தனது மக்கள்
அனைவரையும் ஐக்கியப்படுத்தும் முகமாக, எல்லா இயக்கங்களையும்
ஓரணியில் திரட்டி, ஒரு
ஐக்கிய முன்னணியாகச் செயற்பட்டிருக்கும். உண்மையான தேசிய விடுதலை இயக்கத்துக்கு
தன்னை ஒடுக்குபவன் தான் எதிரியே அன்றி, அவனது இனத்து சாதாரண
மக்கள் ஒருபோதும் எதிரியாக இருக்க முடியாது. அதேபோல தன்னைவிட சிறியதும், ஒடுக்குமுறைக்குள்ளாவதுமான
இன்னொரு இனமொன்றும் (எமது நாட்டு முஸ்லீம் மக்கள் போல) எதிரியாக இருக்க முடியாது.ஆனால்
இலங்கையில் புலிகளுக்கு மட்டுமின்றி, தமிழ் தேசியக்
கூட்டமைப்பு உட்பட வேறு பல இயக்கங்களுக்கும் எல்லாமே தலைகீழாகவே இருந்து
வந்துள்ளன.
உண்மையில், இலங்கையில் நடைபெற்றது, தமிழ் தேசிய விடுதலைப்
போராட்டம் அல்ல. அது முழுக்க முழுக்க தமிழ் பிற்போக்கு சக்திகளின் இனவாதப்
போராட்டமாகும். இன்னும் சொல்லப் போனால், உலகில் மக்கள் விரோதப்
போக்குகளாகத் தோற்றம் பெற்ற, ஜேர்மன் நாசிசம், இஸ்ரேலிய சியோனிசம், தமிழ் நாட்டின்
பார்ப்பணியம் போன்று, ஒப்பிடப்படக்
கூடிய, ‘யாழ்ப்பாணியம்’ என்று சொல்லப்படக்
கூடிய, யாழ்
உயர்சாதி மேட்டுக்குடி குழாமினரின் அதிகாரத்துக்கான ஒரு போராட்டமே, புலிகளால் தலைமையேற்று
நடாத்தப்பட்ட இந்தப் போராட்டமாகும்.
“ஆண்ட பரம்பரை
மீண்டுமொரு முறை ஆள நினைப்பதில் தவறென்ன?” என்ற கோசத்துடன்
ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம், சாதாரண தமிழ் மக்களின்
ஆளுகை பற்றி எதுவும் பேசவில்லை, முன்பு ஆண்ட பரம்பரை
பற்றியே பேசியது. உண்மையில் அது, இலங்கை சுதந்திரம்
பெறுவதற்கு முன்னர், தனது
இன விகிதாசாரத்தை மீறி, வெள்ளைக்காரனிடமிருந்து
பெற்றுக் கொண்ட அபரிமிதமான அதிகாரங்களையும், வளங்களையும், சலுகைகளையும் மீண்டும்
பெறுவதற்காகவே தொடங்கப்பட்ட ஒன்று. அது ஏகாதிபத்தியத்துடனும், சிங்கள மேட்டுக்குடி
அதிகார வர்க்கத்துடனும் கூட்டுச் சேர்ந்த அதேவேளையில், சாதாரண சிங்கள – தமிழ் - முஸ்லீம்
மக்களைக் கொன்று குவித்ததிலிருந்து இதை விளங்கிக கொள்ளலாம்.
இன்று
புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விட்ட நிலையில், ஒரு பக்கத்தில் தமிழ்
மக்களுக்கு தலைமைதாங்குவது யார் என்ற போட்டி ஆரம்பித்துள்ளது. அதேவேளையில் இன்னொரு
பக்கத்தில் தமிழ் கட்சிகளின் ஒற்றுமை பற்றியும் பெரிதாகப் பேசப்படுகிறது. தமிழ்
கட்சிகள் ஒற்றுமைப்பட்டுச் செயல்படுவதும், அதன் மூலம் தமிழ்
மக்களை ஒற்றுமைப்படுத்தி, அவர்களுக்கு
நம்பிக்கையூட்டி, அதைப்
பலமாகக் கொண்டு, அரசாங்கத்துடனும், தென்னிலங்கை அரசியல்
கட்சிகளுடனும் பேசி, தமிழ்
மக்களின் நியாயபூர்வமான உரிமைகளை வென்றெடுப்பதும் அவசியம் தான். ஆனால் பூனைக்கு
மணி கட்டுவது யார் என்பது போல, இந்த ஒற்றுமைக்கு
முன்னின்று செயல்படுவது எந்தக்கட்சி என்பதும், இந்த ஒற்றுமை என்ன
அடிப்படையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதும், முக்கியமான கேள்விகளாக
இருக்கின்றன.
ஏனென்றால், போராட்டத்தின் போது
மரணித்த போராளிகளுக்கு நினைவு தினங்கள் நடாத்துவதிலேயே எமக்குள் இன்னமும் ஒற்றுமை
ஏற்படவில்லை. பல்வேறு இயக்கங்களும் தமது இயக்க போராளிகளுக்காக, தனித்தனியான நினைவு
தினக் கூட்டங்களை நடாத்தி வருகின்றன. இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
வருங்காலத்திலாவது மரணித்த அனைத்துப் போராளிகளுக்கும், பொதுமக்களுக்காகவும்
பொதுவான ஒரு தினத்தைத் தெரிவு செய்து, அத்தினத்தில் நிகழ்வுகளை
ஒழுங்கு செய்வது அவசியம்.
தமிழ்
கட்சிகளின் ஒற்றுமை பற்றிப் பேசும் போது, முதலில் அவர்களது
நிலைப்பாடுகள் பற்றி தெளிவுபடுத்துவது அவசியம். புலிகளின் அழிவுக்கு முன்னரும், பின்னரும் பல
கட்சிகளும், இயக்கங்களும், ‘ஐக்கிய இலங்கைக்குள்
தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது” தான் தமது கொள்கை என்று
சொல்லி வருகின்றன. அவர்கள் அப்படிச் சொன்னாலும், 1976ல் வட்டுக்கோட்டையில்
மாநாடு கூடி தமிழீழத் தீர்மானத்தை எடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணியோ, அதன் பின்னர் உருவான
தமிழ் தேசியக் கூட்டமைப்போ, ஏனைய
கட்சிகளோ தாம் தழிழீழக் கொள்கையைக் கைவிட்டுவிட்டதாக இதுவரை உத்தியோகபூர்வமாக
அறிவிக்கவில்லை. அதுமாத்திரமின்றி அவற்றில் பல இன்னமும் தமது கட்சிகளின்
பெயர்களுக்கு முன்னால், ‘தமிழ் ஈழம்’, ‘ஈழம்’ என்ற பதங்களை
வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள். இது சிங்கள – முஸ்லீம் மக்களின்
நம்பிக்கையை வென்றெடுக்கவோ, இனப்பிரச்சினைக்கு
ஒரு தீர்வு காணவோ உதவப் போவதில்லை.
எனவே, முதலில் தமிழ் கட்சிகள்
தவறான தமிழீழக் கொள்கையைக் கைவிடுவதாக உத்தியோகபூர்வமாகவும், பகிரங்கமாகவும்
அறிவிக்க வேண்டும். அத்துடன் தமது கட்சிகளின் பெயர்களுக்கு முன்னால் உள்ள
பிரிவினையை அர்த்தப்படுத்தும் பதங்களையும் நீக்குவது அவசியம். அவர்கள்
வேண்டுமானால் இலங்கை என்றோ அல்லது தமிழ் மக்கள் என்றோ பெயர்களைப் பயன்படுத்துவது
ஆரோக்கியமாக இருக்கும்.
அதேவேளையில், கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விடயமும் இருக்கின்றது. தமிழ் கட்சிகள் அனைத்தும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று பொத்தாம் பொதுவாகச் சொன்னாலும், என்ன வகையான தீர்வ என்று, இதுவரை தெளிவாகச் சொன்னது கிடையாது.சிலர் இன்னமும் தனிநாட்டு மாயையில் இருக்கின்றனர். வேறு சிலர் ஒஸ்லோ பிரகடன அடிப்படையில் என்கின்றனர். இன்னும் சிலர் சமஸ்டி என்கின்றனர். ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல.எப்.போன்ற கட்சிகள் 13வது தீருத்தச் சட்ட அடிப்படையை ஏற்றுக் கொள்கின்றனர். தமிழ் பகுதி கம்யூனிஸ்ட்டுகள், தாம் 1954 முதல் வலியுறுத்தி வந்த பிரதேச சுயாட்சியே சிறந்த தீர்வு என்கின்றனர்.
இந்த
சூழ்நிலையில், தமிழ்
மக்களின் நலன்களுக்காக செயல்படும் அத்தனை கட்சிகளும் ஒன்றுகூடிப் பேசி, தமிழ் மக்களின்
பிரச்சினைக்கான தீர்வு ஒன்றைத் தயாரிப்பது அவசியம்.அப்படித் தயாரிக்கப்படும்
திட்டத்தை, முன்வைத்து
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதுடன், தென்னிலங்கையின்
அனைத்துப் பிரதான கட்சிகளுடனும் அதன் அடிப்படையில் பேச வேண்டும். அதன் பின்னர்
அதுபற்றி எமது அயல்நாடான இந்தியாவுடனும், ஏனைய சர்வதேச
சமூகங்களுடனும் பேச வேண்டும். அரசுடனோ, சிங்கள – முஸ்லீம் மக்களுடனோ
பேசாமல், ஏகாதிபத்திய
சக்திகளிடம் ஓடுவதில் எவ்வித பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை. அது தமிழ்
அரசியல்வாதிகள் மீது கடந்த காலங்களைப் போல, சந்தேகங்களை வளர்க்கவே
பயன்படும்.
தமிழ் கட்சிகளின் ஒற்றுமை நடவடிக்கை மேற்கொள்ளும் போது, கடந்த காலங்களில்
பயனுள்ள தீர்வுத் திட்டங்கள் ஒவ்வொன்றையும் குழப்பி, அதன் மூலம் தமது
குறுகிய அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக் கொண்ட, புலிகளின் பினாமி அமைப்பாக
புலிகள் அழியும் தருவாய்வரை செயல்பட்ட, தமிழ் தேசியக்
கூட்டமைப்பு போன்ற பிற்போக்கு சக்திகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
ஏனெனில், அவர்கள்
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இனவாதச் சாயம் பூசி, அதைத் தீர்க்கவிடாமல்
செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர்.தமிழ் மக்கள் வாழ்வில் ஒரு திருப்பத்தை
ஏற்படுத்தும் விதமாக, இனிவரும்
காலத்தில் உண்மையான ஜனநாயக – முற்போக்கு சக்திகள்
தமிழ் மக்களுக்கான தலைமையை வழங்குவதற்கு முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.