Saturday, 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (1-10) - பாவை சந்திரன்

இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு.

அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து.
இனி, பாவை சந்திரன் தொடர்கிறார்.
-
ஆசிரியர்
ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர்களும் உலக அளவில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், யாங்கூன் என்கிற பர்மா, தாய்லாந்து, மோரிஷஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஒன்றல்ல என்ற உண்மைகூட நம்மில் பலர் புரியாமல் விவாதம் செய்து வருகின்றனர். மேலே குறிப்பிட்டவர்களைப் போலக் கடந்த இரண்டு நூற்றாண்டு காலத்தில் வேலைக்காகவும் வயிற்றுப் பிழைப்புக்காகவும் இலங்கைக்குப் போய் அங்கே குடியேறியவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள்.
அவர்கள் அந்தத் தீவின் பூர்வ குடியினர். மண்ணின் மைந்தர்கள். இந்நிலையில் இலங்கைத் தமிழர் என்பவர் அந்நாட்டையே பூர்வீகமாக கொண்டவர் என்ற உண்மையை எடுத்துரைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா - இல்லையா என்ற விவாதம் நடந்து கொண்டிருக்கிற நிலையில் அவர் இல்லாத ஈழமும், ஈழமக்களும் இனி பெறப்போவது என்ன என்பதைவிட, அவர்கள் எதையெல்லாம் இழந்தார்கள் என்று அறிவது அவசியம்.
விடுதலைப்புலிகளாகட்டும் இன்னபிற அமைப்புகளாகட்டும் ஆயுதம் ஏந்தவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் அறிய வேண்டியது அவசியமாகிறது.
அதேபோன்று இந்தியாவின் பார்வை மற்றும் பங்களிப்பு, தமிழகத் தலைவர்களின் பார்வை மற்றும் பங்களிப்பு, உலக நாடுகளின் பார்வை மற்றும் அதன் பங்களிப்பு குறித்தும், இலங்கைக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அளித்த உதவிகள் குறித்தும் அலசவேண்டியதும் அவசியமாகிறது.
இன்று, இலங்கை வரலாற்று ஏடுகளைப் புரட்டுபவர்கள் யாராக இருந்தாலும், உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கருதுவார்களேயானால், அவர்கள், இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலங்கை வரலாற்றை ஒதுக்கிவிட்டு, புதிய உண்மைகளின் அடிப்படையில், புதிய பார்வையுடன் இலங்கை வரலாற்றை அணுகவேண்டியது அவசியமாகும்.
இதுவரை சொல்லப்பட்ட இலங்கைத் தீவின் வரலாறு, கற்பனையின் அடித்தளம் மீது கட்டப்பட்ட இலக்கிய ஆதாரங்களைக் கொண்டு எழுதப்பட்ட மாய வரலாறு என்பதற்கான ஆதாரங்கள் நிறையவே கிடைத்துள்ளன. இன்று பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கடுமையான உழைப்பின் மூலம் உண்மைகள் வெளிவரத் தலைப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இன்னும் அதிகமான புதிய உண்மைகள் கிடைக்கலாம்.
மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் மட்டுமே துணையாகக் கொண்டு இந்தியாவின் வரலாற்றைக் கூறுவது எப்படி உண்மைக்குப் புறம்பாக இருக்குமோ, அதுபோலத்தான் சிங்களவரின் இதிகாசமான மகா வம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு இலங்கை வரலாற்றை எழுதுவது என்பது!
அப்படியென்றால் உண்மையான வரலாற்றை எந்த அடிப்படையில் எழுதுவது அல்லது பார்ப்பது என்ற நியாயமான கேள்வி எழுகிறது. உண்மையான வரலாறு என்பது ஆதாரபூர்வமான உண்மைகளையும், விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுகளையும் கொண்டு முடிவுக்கு வரவேண்டிய ஒன்றாகும்.
இலங்கை இன்றிருக்கும் ரணகள சூழலில், இனவெறித் தாக்குதல்கள் அத்துமீறி நடக்கும் அந்த குட்டித்தீவின் வரலாற்றுப் பின்னணியை அறிவது, இலங்கைத் தமிழர்களுக்காக மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்காகக் கண்ணீர் சிந்தும் ஜனநாயக உணர்வுகொண்ட ஒவ்வொருவரின் கடமையாகிறது.
அந்தக் கடமையுணர்வின்பேரில் நிகழ்ந்த தேடல்களின் விளைவே இத்தொடர். இஃது இலங்கையின் வரலாற்று நூல் மட்டுமல்ல; மாறாகத் தமிழர்களின் போராட்ட வரலாறு, தமிழர்களின் போராட்ட வரலாறோ இலங்கையின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
எனவேதான், சிங்களவரைவிடத் தமிழர்களுக்கு இலங்கையில் எந்தவிதமான ஆதிபத்திய உரிமைகள் உண்டு, அவர்களது தொன்மையான வரலாறுதான் என்னவென்று அறிந்தோமானால் அரையும் குறையுமான விமர்சனத்திற்கு ஆளாக வழியிருக்காது.
இலங்கையில் இப்படியொரு நிலைமை எதனால் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டது? இலங்கையில் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் பின்னுமாக இருந்த நிலைமை என்ன? இனரீதியாகவும், மதரீதியாகவும் சட்டவடிவிலும் தமிழர்கள் எப்படியெல்லாம் நசுக்கப்பட்டார்கள்? என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டு அதற்கான விடையைத் தேட...
பல நூல்களை ஆராய முயன்றபோது, எளிதாகக் கிடைத்த Story of Ceylon, Ancient Ceylon போன்ற நூல்களிலும் மற்றும் சிங்களவர் பற்றிய பல நூல்களிலும் சிங்கள புத்தபிக்குகளின் ஒருதலைப்பட்சமான கருத்துக்களே மிகுதியாக இடம் பெற்றிருக்கின்ற என்பதை அறிய முடிகிறது. அந்த நூல்களின் ஆசிரியர்கள் மிகுந்த சிரத்தையுடன் சிங்கள மத குருமார்களுக்கே நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
சிங்களவ புத்த குருமார்களும் வரலாற்றில் தங்கள் மதமும், இனமும், கலாசாரமும் பழுதுபடாமல் இருக்க வேண்டும்; தமிழனும், அவனது கலாசாரமும் வீழ்த்தப்பட வேண்டும் - என்ற நோக்கத்திலேயே தகவல் அளித்திருக்கின்றனர் என்பதும் புலனாகிறது.
இலங்கையில் நடைபெறும் இனமோதல்கள் பற்றி உலகப் பத்திரிகைகளில் மாறுபட்ட செய்திகள் வெளியானதால் உலக கிறிஸ்தவ ஆலயங்கள் கழகம் (Council of Churches) சார்பில் அதன் ஆசியக் கிளையின் பிரதிநிதிகள் இலங்கை சென்று அங்கு நடைபெறும் கொடுமைகளை நேரடியாகப் பார்த்து மிக விரிவான அறிக்கையொன்றை (1985-ல்) வெளியிட்டனர். அவ்வறிக்கை இத்தொடருக்குப் பேருதவியாக அமைந்தது. அது போன்றே "இண்டர்நேஷனல் கமிஷன் ஆஃப் ஜூரிஸ்ட்' அமைப்பு வெளியிட்ட "எத்னிக் கான்ஃபிளிக்ட் அன்ட் வயலன்ஸ் இன் ஸ்ரீலங்கா' அறிக்கையிலிருந்தும் உண்மைக்கு நெருக்கமான சில செய்திகளைக் கையாண்டிருக்கிறேன்.
நடுநிலை நோக்கோடு, சிங்கள அறிஞர்களே ஒத்துக்கொண்ட தகவல்களை ஆதாரமாகக் கொண்டே இத்தொடர் தொடுக்கப்பட்டுள்ளது.
நண்பர் ஓவியர் சந்தானம் ஒருமுறை சொன்னார்: "சாலையில் போய்க் கொண்டிருக்கிறோம். வயதான மூதாட்டி வாகனம் ஒன்றில் அடிபட்டு வீழ்ந்து விடுகிறார். கூட்டத்தை விலக்கிக்கொண்டு மூதாட்டியைப் பார்க்கிறோம். அவளைக் கண்டு பரிதாபப்பட்டு நம்மால் முடிந்த உதவியைச் செய்கிறோம்.
இது மனித சுபாவம். ஆனால் அடிபட்டு விழுந்த மூதாட்டி நமது தாயாக இருக்கும் பட்சத்தில் நம் உடம்பே ஆடிப்போய்விடும்; ஐயோ அம்மா உனக்கா இப்படி என்று சுற்றுப்புறச் சூழல் மறந்து வீரிடுவோம்'. இது மனித சுபாவம். அதுபோன்று ஈழமக்கள் படும் துயரைக் கருதவேண்டும்.
உலகின் ஏதோவொரு மூலையில் பெரும்பான்மை இனமக்கள், சிறுபான்மையோர் பேரில் நடத்தும் கொடுமைகளைக் கேட்டு வேதனையுறுகிறோம். நம்மால் முடிந்தவரை விமர்சித்துத் தீர்க்கிறோம். மனிதாபிமான உணர்வுள்ளவர்கள் செய்கிற வேலை இது.
ஆனால் நமது நாட்டுக்கு அண்மையில் சற்று ஏறக்குறைய இருபதாவது மைலில் இலங்கையைப் பூர்வீக நாடாகக் கொண்ட நம் சகோதரத் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். பெண்கள் கற்பழிக்கப்படுகிறார்கள். சிறார்கள் தரையில் வீசிக் கொல்லப்படுகிறார்கள். அவர்களின் உடைமைகள் சூறையாடப்பட்டுத் தீக்கிரையாகின்றன. பிள்ளைத்தாச்சியானால் அவளது வயிற்றைக் கிழித்து "தமிழ்ச் சிசுவா தரையிலடி!' என்று சிசுவதை செய்யப்படுகிறது.
இதையெல்லாம் பத்திரிகைகளில் படித்தும், வானொலியில் கேட்டும் மானமுள்ள தமிழனால் எப்படிச் சும்மா இருக்க முடியும்? அதுவும் படைப்புத் துறை சம்பந்தப்பட்ட பத்திரிகையாளன், எங்கோ எதுவோ நடக்கிறது என்று வாளாவிருந்துவிட முடியுமா?
இந்தப் பிரச்னையை எல்லாரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு உண்மை என்னவென்று விளக்கப்படவில்லையா? ஆம் என்றால் இஃது ஆராய்ச்சிக்குரிய விஷயம்தானோ! ஆகவேதான் "ஈழத்தமிழர் போராட்ட வரலாறு' என்ற இத்தொடர் தொகுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையின் முழுமையான வரலாறாக முதன்முதலாகத் தமிழில் நானறிந்தவரை தொகுக்கப்பட்ட தகவல்களில் தவறு ஏதுமிருக்க வாய்ப்பில்லை. மேலும் இத் தொடரின் சில தலைப்புகளில் வெளியாகும் விஷயங்களில் "கூறியது கூறல்' இருக்கலாம். ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பக் கூறினால் மனதில் பதியும்தானே?
2. சிங்களவர் யார்?
இலங்கைத்தீவு, இந்தியாவுக்குத் தென்கிழக்கில் பூமத்திய ரேகைக்கு ஐந்தாவது, ஒன்பதாவது அட்சக்கோடுகள் வரையிலும், சுமார் 79 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலிருந்து 82 டிகிரி கிழக்குத் தீர்க்க ரேகை வரையிலும் பரவியுள்ளது. இத்தீவின் தென், வட பகுதி தாழ்ந்தும், மத்தியப்பகுதி எட்டாயிரம் அடி வரையில் உயர்ந்த மலைகளைக் கொண்டும் அமைந்திருக்கிறது. 

இலங்கைக்கும் இந்தியாவுக்குமுள்ள தூரம், உறுதிமிக்க மன இயல்பு கொண்டவர்களால் நீந்தியும், நடந்தும் கடக்கக் கூடியதாக இருக்கிறது.
இத்தீவில் தற்போது சிங்களமொழி பேசும் புத்தர்கள், கிறிஸ்தவர்கள், பெரும்பான்மையாகவும், தமிழ்மொழி பேசும் சைவ இந்துக்கள், முஸ்ஸிம்கள், கிறிஸ்தவர்கள் முதலியோர் சிறுபான்மையாகவும் வசிக்கிறார்கள். மொத்தத்தில் இருவேறு கலாசார மரபுகொண்ட இனங்களாகச் சிங்கள இனமும், தமிழ் இனமும் இருக்கிறது. பெரும்பான்மை இனம் என்கிற காரணத்தினால் நாட்டை ஆளும் பொறுப்பை சிங்களவர் எடுத்துக் கொண்டனர்.
பெரும்பான்மை இனமாகக் கருதப்படுகிற சிங்களவரின் வரலாறு என்பது மகாவம்சம் என்னும் புத்த காப்பியத்தை அடிப்படையாக வைத்துப் பேசப்பட்டும், எழுதப்பட்டும் இன்றுவரை இருந்து வருகிறது.
இந்த மகாவம்சம், செவிவழிவந்த நாட்டுப்புறப் பாடல்கள், கர்ண பரம்பரைக் கதைகள் முதலியவற்றால் ஒழுங்குபடுத்தப்பட்டது. சிங்களவர்களின் பெருமையை மிகவும் உயர்த்திக்காட்டவென்றே எழுதப்பட்ட நூல் இது.  

இந்த மகாவம்சத்தை எழுதியவர் மகாநாம தேரர் என்னும் புத்தபிக்கு ஆவார். ஐந்தாம் நூற்றாண்டில் சிங்கள அரசனாக வாழ்ந்த தாதுசேனின் (கி.பி.463-479) மாமன் இவர். பாலி மொழியில், தமிழின் சில சொற்களைத் துணைக்கொண்டு கவிதை வடிவில் எழுதியுள்ளார். 

மகாநாமதேரரின் காலத்தில் வாழ்ந்த, அநுராதபுரத்திலிருந்த புத்தமடத்தின் உயர்குருவான உத்தரபிரவீணா இக்காப்பியம் சிறப்புற அமைய உரிய ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார்.
மகாநாமா தொடங்கி வைத்த இந்த மகாவம்சத்தில் சிங்கள அரசர்களின் பெருமைகளை 13, 14, 18-ஆம் நூற்றாண்டுகளில் அவ்வப்போது வாழ்ந்த கவிஞர்களைக் கொண்டு சேர்த்திருக்கிறார்கள். பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த சிங்கள மன்னர்களின் வரலாறு இணைக்கப்பட்ட போதிலும் மூலநூலுக்கு ஏற்ற மொழி லாகவத்துடன் பிசிறு இல்லாது ஒரே நபரால் எழுதப் பட்டதற்கான தோற்றத்தை இந்நூல் பெறுகிறது.
சிங்களவர் வரலாறு என மகாவம்சம் கூறுவது என்ன?
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் வங்க மக்களுக்குச் சொந்தமான நாட்டில் ஓர் அரசன் இருந்தான். இவன் கலிங்க நாட்டு அரசனின் மகளை மணந்தான். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு உரிய வயது வந்ததும் பூப்பெய்தினாள்.
இளவரசி பருவமுற்றதும் சோதிடர்கள் கொண்டு அந்நாளைக் கணக்கிட்டு அவளுக்கு எந்த நாட்டு இளவரசன் கணவனாக அமைவான்; கல்வி, கேள்விகளில், வீரத்தில் அவனது தேர்ச்சி என்னவாக இருக்கும் என்று கணிக்க முற்பட்டனர். யாருக்கும் ஒழுங்கான விடை கிடைக்கவில்லை. எல்லாருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில்- "இளவரசி மிகுந்த காமவெறி கொண்டவளாயிருப்பாள். மிருகராஜனைக் கூடுவாள்' என்று தலைமைச் சோதிடர் கூறினார். இது ஒழுக்கக் குறைவானதாக, அவமானமடையத்தக்கதாக இருந்தபோதிலும் மன்னனிடம் உண்மையைச் சொல்வதே முறை என்று அவன்முன் தங்களது கணிப்பை எடுத்து வைத்தார்கள்.
"இளவரசி காம இச்சை மிகுந்து சிங்கத்துடன் உறவு கொள்வாள்' என்ற செய்தி கேட்ட வங்க மன்னன் அதிர்ச்சிக்காளானான். இதனால் வெறுப்பும் அவமானமும் அடைந்த மன்னன் தன் மகள் எப்படியோ போகட்டும் என்று விதிப்படி விட்டுவிட்டு அமைதியானான்.
இளவரசியின் நலனில் ஆர்வமற்றவனாக அவளது திருமண ஏற்பாடுகளில் கவனம் செலுத்தாதவனாக இருந்தான். அதுமட்டுமன்றி, அவளின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்காது அவள் போக்கில் விட்டுவிட்டான். சுதந்திர வாழ்வின் சுகத்தை விரும்பியவளாக தன்னந்தனியே அரண்மனையை விட்டுப் புறப்பட்டாள் இளவரசி. மகதநாட்டுக்குச் சென்று கொண்டிருந்த நாடோடிக் கும்பலுடன் அவர்கள் அறியாத விதத்தில் சேர்ந்து கொண்டாள்.
அடர்ந்த கானகத்தை நாடோடிக் கும்பல் கடந்து கொண்டிருந்தது. பயங்கரமான சிங்கம் ஒன்று எதிர்ப்பட்டு நாடோடிக் கும்பலைத் தாக்கியது. சிங்கத்திற்குப் பயந்து அனைவரும் நாலாபக்கமும் சிதறி ஓடினர். இளவரசி மட்டும் சிங்கம் சென்ற பாதையில் சென்றாள்.
தனது எதிர்காலம் பற்றிச் சோதிடர்கள் கூறியது இப்போது அவள் காதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது. அவர்களின் கூற்றுக்கு ஏற்பவே தான் வந்த நாடோடிக் கும்பலைச் சிங்கம் தாக்கியதை உணர்ந்தாள். தான் கூட வேண்டிய சிங்கம் இதுவே என்றும் நினைத்தாள். இந்த உறுதியுடன்தான் சிங்கத்தின் பாதச்சுவட்டைப் பின்பற்றி அதன் குகையை நோக்கி நடக்கலானாள்.
வழியில் சிங்கமோ உண்ட மயக்கத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. இளவரசி சிங்கத்தின் எதிரே வந்ததும் அது காமம் மிகக்கொண்டு வாலை ஆட்டியது. இளவரசி சிறிதும் பயப்படாமல் அதன் அருகே சென்று உடலைத் தட்டிக் கொடுத்தாள். தன்னை உடன் அழைத்துத் செல்லுமாறும் வேண்டினாள்.
ஏற்கெனவே இளவரசியைப் பார்த்த மாத்திரத்திலேயே காமம் மிகுந்திருந்த சிங்கம், அவளைத் தன் முதுகுமீது அமர்த்திக் கொண்டு தனது குகையை நோக்கிச் சென்றது.
குகையை வந்தடைந்ததும் இரவு பகல் பாராது சிங்கமும் இளவரசியும் கூடி மகிழ்ந்தார்கள். சிங்கத்தினது கூடலின் விளைவாக இளவரசி கருவுற்றாள். ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகளைப் பெற்றாள். ஆண் குழந்தைக்கு சிங்கபாகு என்றும், பெண் குழந்தைக்கு சிங்கவல்லி என்றும் பெயரிட்டாள். மகன் சிங்கபாகுவின் கைகளும் பாதங்களும் சிங்கத்தினுடையதைப் போல் அமைந்திருந்தன.
சிங்கபாகுவிற்கு பதினாறு வயதானபோது தன் மனதிலெழுந்த சந்தேகம் பற்றித் தாயிடம் கேட்டான். அவன் கேட்டது இதுதான்:
""அம்மா, நீயும் அப்பாவும் பெருத்த வித்தியாசத்துடன் இருக்கிறீர்களே. இது எப்படி நிகழ்ந்தது?''
இளவரசி அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னாள். சிங்கபாகு, ""நாம் இந்தக் குகையை விட்டு ஏன் போய்விடக் கூடாது?'' என்றான்.
""போய்விடலாம். எனக்கும் அந்த எண்ணம் உண்டு. ஆனால் இந்தக் குகையின் வாயிலை உன் தந்தை பலமான பாறையினால் மூடி இருக்கிறாரே!'' என்றாள்.
இது கேட்டதும் சிங்கபாகு தன் பலம் முழுவதும் செலுத்தி, குகையின் வாயிலை அடைத்துக் கொண்டிருக்கும் கல்லை நகர்த்தி, அதைத் தன் முதுகில் ஐம்பது யோசனை தூரம் சென்று எறிந்துவிட்டு வந்தான். பிறகு தன் தாயை ஒரு தோளிலும், தங்கையை மற்றொரு தோளிலுமாகச் சுமந்தவாறு வெளியே வந்தான்.
இளவரசியின் யோசனைப்படி இலைத்தழைகளை ஆடையாகத் தரித்துக்கொண்டு காட்டை விட்டு வெளியே வந்தனர். ஒரு மரத்தினடியில் படைவீரன் ஒருவன் இளைப்பாறிக்கொண்டிருந்தான். அவன் இளவரசியின் மாமன் மகனும், வங்க அரசனின் படையில் ஒரு தலைவனாகவும் விளங்குபவன் என்பதை இளவரசி கண்டுகொண்டாள்.
சத்தம் கேட்டு கண்விழித்த படைத்தலைவன் இவர்களைப் பார்த்து யாரென்று விசாரித்தான். இளவரசி தனது வரலாற்றை அவனிடம் கூறினாள். படைத்தலைவன் மிகுந்த மகிழ்ச்சியுற்று இளவரசியையும் அவளது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு சென்றான். பறையறிவித்து அவளை தனது மனைவியாக்கிக் கொண்டதாகவும் அறிவித்தான்.
இளவரசியும் தனது முன்னாள் கணவனான சிங்கத்தை மறந்து தனது புதிய கணவனுடன் வாழ்ந்து வந்தாள்.
காட்டில் இரை தேடப் போயிருந்த சிங்கம் குகைக்கு வந்ததும் தனது பிள்ளைகளையும் மனைவியையும் காணாமல் எல்லையோரக் கிராமங்களுக்குச் சென்று கோபத்தில் போவோர் வருவோர் எல்லாரையும் தாக்கியது.
""சிங்கம் எங்களைத் தாக்குகிறது; எங்களை அதனிடமிருந்து காக்க வேண்டும்'' என்று குடிமக்கள் மன்னனிடம் முறையிட்டனர்.
தன்னிடமுள்ளவர்களில் சிங்கத்தின் கொட்டத்தை அடக்கும் நபர் யார் என்று கண்டுபிடிக்க முடியாத நிலை. பரிசுத் தொகையை யானை முதுகில் வைத்து, ""சிங்கத்தைப் பிடித்து, சிங்கத்தைக் கொல்பவர்கள் இந்தத் தொகையை அடையலாம்'' என்று முரசு கொட்ட வைத்தான் அரசன்.
படை வீரர்களிலும் பொதுமக்களிலும் யாரும் முன் வராத நிலையில், பரிசுத் தொகையைப் பன்மடங்கு கூட்டினான். இந்த நிலையில் சிங்கபாகு தானே சிங்கத்தின் கொட்டத்தை அடக்குவதாக அறிவித்தான். அத்துடன் தாய் தடுத்தும் கேளாது யானை முதுகின் மேலுள்ள பரிசுத்தொகையை எடுத்துக் கொண்டான். பொதுமக்கள் சிங்கபாகுவை அரசன் முன்னிலையில் கொண்டு போய் நிறுத்தினர்.
அரசனோ, ""சிங்கத்தைக் கொன்றால் என் ராஜ்ஜியத்தையே தரச் சித்தமாயிருக்கிறேன்'' என்றான்.
சிங்கபாகு சிங்கத்தைத் தன் தந்தையென்றும் பாராமல் அதனை வீழ்த்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றான். தூரத்தில் சிங்கபாகுவைக் கண்டதுமே தனது மைந்தன் வந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் நெருங்கி வந்தது. சிங்கபாகுவோ தான் எடுத்துக்கொண்ட காரியத்தை நிறைவேற்றும் எண்ணத்தில் அம்பு எய்து சிங்கத்தைக் கொல்ல முயன்றான். இரண்டு முறை முயன்றும் அம்பு சரியாகச் சிங்கம் மீது தைக்கவில்லை. மூன்றாவது முறையாக சிங்கபாகு எய்த அம்பு சிங்கத்தை வீழ்த்தியது.
கொய்த தலையுடன் சிங்கபாகு அரண்மனையை நோக்கி வந்தான். பொதுமக்கள் அவனது தீரத்தைப் பாராட்டிப் புகழ்ந்தார்கள். ராஜ்ஜியத்தைத் தருவேன் என்று கூறிய மன்னன் உயிருடன் இல்லை. இருப்பினும் இளவரசி மூலம் சிங்கபாகு மன்னனின் பேரன்தான் என்பதைப் பொதுமக்களும், மந்திரிமார்களும் அறிந்த காரணத்தால் சிங்கபாகுவை அரசனாக்க முயன்றார்கள். எல்லாருடைய விருப்பத்திற்கிணங்க அரசனாகப் பதவி ஏற்றுக்கொண்டு, பின் தனது தாயாரையும் அவளது புதிய கணவனையும் அழைத்து ராஜ்யத்தை அவர்கள் வசம் ஒப்படைத்தான்.
தனது தங்கையை அழைத்துக்கொண்டு தான் வாழ்ந்த காட்டுப் பகுதிக்குச் சென்றான். அங்கே தனக்கென ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான். தங்கையை (சிங்கவல்லியை) தனது மனைவி ஆக்கிக் கொண்டான். இவர்களுக்குப் பதினாறு முறை இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
இந்த முப்பத்திரண்டு குழந்தைகளில் மூத்தவனுக்கு விஜயன் என்றும், இரண்டாமவனுக்கு சுமிதன் என்றும் பெயர்களிட்டார்கள். உரிய வயது வந்ததும் விஜயனுக்கு இளவரசுப் பட்டமும் சூட்டினார்கள்.
விஜயனின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெறுப்பைத் தந்தன. பொறுத்துப் பார்த்த மக்கள் நேரிடையாக மன்னனிடம் சென்று, ""உங்கள் மகனைக் கொன்று விடுங்கள்; இல்லையெனில் அவனையும் அவனது தோழர்களையும் நாடு கடத்துங்கள்'' என்று முறையிட்டனர்.
சிங்கபாகு தனது மந்திரிகளைக் கூப்பிட்டு ஆலோசனை கலந்தான். அவர்களும் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்பவே முடிவு சொன்னார்கள்.
வேறுவழியின்றி மன்னன் சிங்கபாகு, விஜயன் உட்பட அவனது எழுநூறு தோழர்களையும் பிடித்து வந்து தலையில் பாதி முடியை சிரைத்து, சுக்கான் இல்லாத கப்பலில் ஏற்றி அனுப்பி வைத்தான். விஜயனும் அவனது நண்பர்களும் இலங்கையில் தாமிரபரணி என்னும் பகுதியில் கரையேறினார்கள்.
அனைவரும் கரையேறியதும் விஜயனின் ஆட்களில் ஒருவன் தூரத்தில் பெண்ணொருத்தியைக் காண்கிறான். அவள் அத்தீவில் வசிக்கும் இயக்க குல ராணியான குவேனி என்பவள்.
குவேனி அவர்களது பசியைப் போக்க விருந்து படைத்தாள். தன்னைப் பதினாறு வயதுப் பருவப் பெண்ணாக மாற்றிக் கொண்டாள். நானாவித ஆடையாபரணங்களைத் தன்மேல் அலங்கரிக்குமாறு மந்திர சக்தியால் செய்து கொண்டாள்.
ஒரு மரத்தடியில் அழகிய வெண்கொற்றக் குறையுடன் கூடிய சிறந்த மஞ்சத்தைச் சிருஷ்டித்துக் கொண்டாள். சுற்றிலும் பாதுகாப்புக்கெனக் கூடாரம் ஒன்றையும் எழுப்பிக் கொண்டாள். விஜயனும் குவேனியின் அழகில் மயங்கி அவளை ஏற்றுக் கொண்டான். இன்பமாகப் பொழுதைக் கழித்தான்.
குவேனியின் புத்திமதிப்படியே விஜயன் இயக்கராஜனுடைய உடைகளை அணிந்து கொண்டான். தாமிரபரணி என்னும் நகரத்தை ஏற்படுத்திக் கொண்டான். குவேனியையும் முறைப்படி மனைவியாக்கிக் கொண்டான்.
ஆனாலும் அவன் தன்னை அரசனாக முடிசூட்டிக் கொள்ளவில்லை. உயர்குலப் பெண்ணொருத்தியை மணந்து அவளைப் பட்டமகிஷியாக்கிக் கொண்ட பிறகே தான் அரசனாக முடியும் என்று கருத்துக் கொண்டிருந்தான். அதனால் விஜயனின் மந்திரிமார்களில் சிலர் பாண்டிய நாடு சென்று அந்த மன்னனிடம் பெண் கேட்டார்கள்.
பாண்டிய மன்னனும் தனது மகளை விஜயனுக்குத் தரச் சம்மதித்து, விஜயனின் நண்பர்களை மணந்து கொள்ளவும், தனது மகளுக்குத் துணையாக இருக்கவும் என்று நூறு பாண்டிய நாட்டுப் பெண்களையும் அனுப்பி வைத்தான்.
ஒரு குறிப்பிட்ட தினத்தில் பாண்டிய நாட்டு இளவரசியை மணந்து கொண்டான் விஜயன். பின் குவேனியை தனது நாட்டை விட்டே துரத்துகிறான். குவேனியின் மூலம் பிறந்த ஒரு மகன், ஒரு மகளையும் கானகத்துக்குத் துரத்தியடிக்கிறான் விஜயன். இந்த விஜயனே முதல் சிங்கள மன்னன் என்று மகாவம்சம் நூல் கூறுகிறது. இவனது வாரிசுகளே இன்றைய சிங்களவர்கள்!
3. இலங்கையின் பூர்வ குடிகள் யார்
மகாவம்ச வரலாறு மூலம், விஜயன் வருவதற்கு முன்பு இலங்கைப் பகுதியில் மக்கள் வசித்திருக்கிறார்கள்; அவர்கள் இயக்கர்கள் என்றும், நாகர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்; அவர்களுக்கென்று ஓர் அரசு இருந்திருக்கிறது என்பது புலனாகும்.
மகாவம்சம், சிங்களவர்களின் பெருமை பேசவென்று எழுதப்பட்ட நூலானதால் குவேனியையும் அவளது சுற்றத்தாரையும் அமானுஷ்ய சக்தி கொண்ட, மனிதர்களைப் பிடித்துத் தின்னும் நாகரிகமற்றவர்களாகக் காட்டுகிறார்கள். உண்மையில் இவர்களே இலங்கைத் தீவின் பூர்வகுடிகளாவர். அழியாத குமரிக்கண்டத்தின் வரலாற்றுப்படி ஒப்பு நோக்கினால், அவர்கள் அசல் திராவிடர்கள் என்பதும் புலனாகும்.
புத்த மதம் வந்தபோது இருந்த மன்னன் யார்?
மகாவம்சக் கூற்றுப்படி இலங்கைக்குப் புத்த மதம் வந்தபோது அரசனாக இருந்தவன் யார் என்பது ஒரு பெரிய சந்தேகம். புத்த மதம் இலங்கைத் தீவுக்குள் நுழைந்தபோது இலங்கையை ஆண்ட மன்னன் மூத்தசிவனின் (மூத்த+சிவம்) மகன் தேவனாம்பிய தீசன். இவன்தான் மகிந்ததேரரை (அசோகனின் மகன் மகேந்திரன்-மகாவம்ச கூற்றுப்படி) வரவேற்றது. இவன் ஒரு தமிழ் மன்னன். இங்கு கூறப்படும் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் வேறு; அசோக மன்னனின் அடைமொழியைத் தன் பெயராக வைத்துக்கொண்ட தேவனாம்பிரிய தீசன் வேறு!
தேவனாம்பிரிய~என்றால் தேவனுக்குப் பிரியமான என்பதைக் குறிக்கும். இங்கு தேவன் என்பது புத்தரைக் குறிக்கிறது. தீசன் என்பது மோகாலி என்பவருடைய மகன் ஆகிறது. இந்த மோகாலி, அசோக மன்னனின் காலத்தில் இருந்த புத்தமகாசபையின் தலைவர் ஆவார்.
இக்குறிப்புகள் மூலம் சிங்கள வரலாற்று அறிஞர்கள் அசோகனின் மகனான மகிந்ததேரரை வரவேற்றது தமிழ் மன்னன் மூத்தசிவனின் மகனான தேவனாம்பிய தீசன் என்பதைத் திரித்து புத்த மகாசபையின் தலைவர் மோகாலியின் மகனான தேவனாம்பிரியதீசன் என்று உண்மைக்கு மாறாக வரலாற்றை உலகிற்குக் கூறுகின்றனர்.
இந்த திரித்தல் வேலை ஏன் நடைபெற வேண்டும்? விடை சுலபமானது. இந்த திரித்தல் மூலம் மகிந்ததேரரை வரவேற்றது தேவனாம்பிரியதீசன் என்று குறிப்பிட்டுவிட்டால் தமிழர்களுக்கு முன்பாகவே புத்தர்கள் இலங்கையில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று வலியுறுத்த முடியும். அதற்காகவே தேவனாம்பியதீசன்~தேவனாம்பிரிய தீசன் ஆகிய இருபெயர்களிலும் இருக்கும் ஓர் எழுத்து (ரி) வித்தியாசத்தை மூடி மறைத்து தேவனாம்பிய தீசனுக்குப் பதில் தேவனாம்பிரிய தீசனை நுழைக்கிறார்கள். இப்படி நுழைப்பதன் மூலம் புத்தமத வாதத்திற்கு மேலும் வலுவிருக்கும் என்று நம்புகின்றனர் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாகும்.
மேற்கண்ட தகவல்களுக்கு மகாவம்சக் கூற்றே மகா முரணாக இருக்கிறது. அது~
""இரண்டு சாம்ராஜ்யாதிபதிகளும், அதாவது தேவனாம்பிரியதீசனும் தம்மசோகாவும் ஏற்கெனவே ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டதில்லை. இருப்பினும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நட்புக் கொண்டிருந்தார்கள்'' (மகாவம்சம் 11:19) என்பதாகும்.
இதிலிருந்து தேவனாம்பிரிய தீசனும் தம்மசோகாவும் (தர்ம அசோகர்) வேறுவேறு மன்னர்கள் என்பதும் அவர்கள் நட்புரிமையுடன் பழகி வந்தார்கள் எனவும் தெரிகிறது. சிங்கள அறிஞர்களின் கூற்றுப்படி மோகாலியின் மகன்தான் அசோகனின் மகனை வரவேற்றது என்பது உண்மையானால், அசோக மன்னனை அவன் சந்திக்காது இருந்திருக்க முடியுமா என்பது வரலாற்று அறிஞர்களின் கேள்வியாக இருக்கிறது.
சிங்கள வரலாற்று அறிஞர்கள் இத்துடன் நின்று விடவில்லை. சிங்கள இனத்தை ஆரிய இனமாகக் காட்ட வேண்டும் என்பதற்காக மேலும் பல திரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். தென்னிந்தியாவில் மதுரையையும் அதை ஆண்ட பாண்டியர்களையும் பற்றிய குறிப்புகளை (மகாவம்சத்தில் வரும்போது) யமுனை நதிக்கரையில் வாழ்ந்த பாண்டுவுடனும், முத்ராவுடனும் முடிச்சுப்போட்டு திரிக்கின்றனர்.
அதுமட்டுமல்ல; மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் இலங்கைக்கு, இந்தியாவுடனான தெற்கத்திய தொடர்புகளைப் பற்றி ஏனைய அறிஞர்கள் ஏற்றுக் கொண்டாலும், சிங்களவர்கள் மட்டும் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராய் இல்லை, என்றும் பொருளாகிறது.
இப்படி யமுனை நதிக்கரைப் பாண்டுவோடும், முத்ராவோடும் விஜயனைத் தொடர்புப்படுத்தித் திரித்துக் கூறுவதன் மூலம் மகாவம்சத்தின் ஆசிரியர் மகாநாமதேரரைக் கேலிக்குரியவராக்குகிறார்கள் என்பதே பொருள்.
வேதகாலத்திற்குப் பின் குருவம்சம் மிகச் சிறப்பான ஒரு பழங்குடி வம்சம் என்று இந்திய வரலாறு (பக். 46-இல்) எழுதிய சின்ஹா~பானர்ஜி தெரிவிக்கிறார்கள். மிகச் சிறப்பான வம்சம் என்று கருதப்படும் குருவம்சத்துடன் விஜயன் தொடர்பு வைத்துக்கொள்ளாமல் கீழான நாகரிகம் கொண்ட யமுனை நதிக்கரைப் பாண்டுவுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக மூல நூலான மகாவம்சம் கூறியிருக்க முடியுமா? (1) இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களே என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
மேலைநாட்டு அறிஞர் கால்டுவெல் கருத்துப்படி முதல்சங்க, இடைச்சங்க காலத்தில் நிகழ்ந்த கடல் கொந்தளிப்பின் விளைவாக லெமூரியாக் கண்டத்திலிருந்து பிரிந்த நிலத்திட்டுத்தான் இலங்கை ஆகும். இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உள்ள புராதனத் தொடர்பை அறிய முடியும். மேலும், சின்ஹா~பானர்ஜி தமது இந்திய வரலாற்றில் குறிப்பிடுகையில் வரலாற்றுக்கு முந்தைய திராவிடர்கள் கடற்பயணம் மேற்கொண்டு அதன் மூலம் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள்; சிறந்த பயன் அடைந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அதுபோலவே, ஆங்கில வரலாற்று ஆசிரியர் டியோலி கிழக்கத்திய மற்றும் தூரக்கிழக்கு நாடுகளோடு மிக நீண்ட காலமாகவே வணிகத் தொடர்பினைத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்.
ஆனால், வட இந்திய ஆரியர்கள் கடல் போக்குவரத்துப் பற்றிய தெளிவான அறிவினை கொண்டிருந்தார்கள் என்று நம்புவதற்குப் போதிய ஆதாரம் இல்லை. 

கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடர்களுக்கும் இலங்கைக்கும் உள்ள தொடர்பு, சமீபத்தில் அங்கு நடந்த அகழ்வாய்வுச் சான்றுகளின் மூலம் அறியப்படுகிறது.  அச்சான்றுகளை மூன்று பிரிவாக வகைப்படுத்தலாம்.
1. சிர்கா (Circa-Wintle and Oakley-1972)
குகை ஓவியம்
2. அநுராதபுரத்தைச் சேர்ந்த ""கிடுக்கி'' பகுதி அகழ்வாய்வுகள் ((Gadige-S. Deraniyagala-1972; S.Deraniyagala-1971))
3. பொன்பரப்பி (Ponbarippu) குருகல் கின்னா (Gurugal hinna) கதிரவெளி (Katiraveli) போடியகம்பளை (Podiya Gampala).
இப்பகுதியில் கிடைத்த சான்றுகள் தென்னிந்தியத் தொடர்போடு இலங்கைக்கிருக்கும் நெருக்கத்தை சுட்டிக் காட்டுகின்றன. (2)
முதல் பிரிவான சிர்கா மற்றும் குகை ஓவியச் சான்றுகளின்படி அவை சுமார் கி.மு. 4500-க்கு முந்தைய காலத்தைச் சார்ந்தன என அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர். இவைகளின் காலத்தை வரையறுக்கும்போது இச்சான்றுகள் ஸ்ட்ராட்டம்-1 ((Stratum-1) காலம் என மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் வரையறுக்கின்றனர்.
மனித சமூகம் காட்டுமிராண்டிக் கால நிலையிலிருந்து வேட்டையாடுவதை விட்டுவிட்டு, நாகரிகமடைந்து, ஓரிடத்தில் நிலையாகத் தங்கி விவசாயம் செய்யும் தொழிலில் இறங்கியது வரையிலான வளர்ச்சிக் காலத்தை, மானுடவியலாளர் ""ஸ்ட்ராட்டம்'' என்று குறிப்பிட்டு, அதன் வளர்நிலையைக் கணிக்கின்றனர். அதன்படி ""சிர்கா'' பகுதியின் காலம் முதல் பிரிவைச் சார்ந்ததாகிறது. மனித சமூகம் கல் ஆயுதத்தைப் பயன்படுத்திய காலம். இந்தப் பகுதியில் கல் ஆயுதங்கள் மற்றும் அக்கால மனித சமூகம் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தன.
அதேபோன்று இரண்டாவது பிரிவான அநுராதபுரத்தின் கிடுக்கிப் பகுதியில் நடந்த அகழ்வாய்வுகளில் கிடைத்த ஆயுதங்கள், நாணயங்கள், ஓடுகள் ஆகிய சான்றுகளின் மூலம் இவைகளின் காலம் ஸ்ட்ராட்டம் ஐஐ-ன் காலம் என அறிஞர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் கிடைத்த நாணயங்களை மதிப்பீடு செய்த அறிஞர் மறைதிரு டாக்டர் எஸ். தனிநாயகம், ""குறைந்தபட்சம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மொகஞ்சதாரோ, ஹரப்பாவின் காலத்தை ஒட்டிய சிந்துவெளி நாகரிக வரலாற்றைச் சேர்ந்தவை'' என்கின்றார். அவை ஆரியருக்கு முந்தைய திராவிடர் நாகரிகத்தை ஒட்டியதாகும் எனவும் வரலாற்று அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
மூன்றாவது பிரிவைச் சார்ந்த பொன்பரப்பி, குருகல்கின்னா, கதிரவெளி, போடிய கம்பளை, யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளின் அகழ்வாய்வுகளில் இரும்பாலான ஆயுதங்களும், அக் காலத்தைச் சேர்ந்த பொருட்களும் கிடைத்தன. இவை தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்ட ஆதித்தநல்லூரில் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியை ஒத்தும் தமிழ் எழுத்துக்களுடன் காணப்படுகின்றன (படம் காண்க). ஆகையால் அப்பகுதி மக்கள் இரும்புக் காலத்தைச் ((Megalithic Age) சேர்ந்தவர்கள் என கணிக்கப்படுகின்றனர். இந்தச் சமூக மக்கள் இரும்பைப் பயன்படுத்த தெரிந்துகொண்டு, அலைந்து திரியும் நாடோடிக் கூட்டமாக இல்லாது ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ்ந்தனர். விவசாயத்தை அறிந்து இருந்தனர்.  

மூன்றாவது பிரிவைச் சார்ந்த அகழ்வாய்வுச் சான்றுகளின்படி இரும்பாயுதக் காலத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள். இக்காலமே ஸ்ட்ராட்டம்-IIIA ஆகும். இந்த ஆய்வுகளின்படி கிடைத்த தகவல்களிலிருந்து பார்க்கையில் இவை தென்னிந்திய இரும்புக் காலத்தை (கி.மு. 800-100) ஒத்து உள்ளன. மேலும், இப்பகுதி வாழ் மக்கள், குடியிருப்பு விவசாயத்தை மேற்கொண்டிருந்தனர் என வரலாற்று அறிஞர்கள் மதிப்பீடு செய்கின்றனர்.
இப்பகுதி மக்களின் காலமான ஸ்ட்ராட்டம்-ஐஐஐஅக்குப் பின்னரே வட இந்திய மெüரிய சாம்ராஜ்யம் வருகிறது என வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். ஆக மேற்கண்ட அகழ்வாய்வுகளின் மூலம் இலங்கை வாழ் பூர்வகுடிகள் அம்மண்ணில் குளங்களின் மூலம் பாசனம் செய்து விவசாயத்தை மேற்கொண்டதாக அறிய முடிகிறது. உதாரணமாக அநுராதபுரத்தில் கிடைத்த சான்றின்படி அப்பகுதியில் இருக்கும் குளமானது ஐம்பத்து நான்கு மைல் நீளமான கால்வாயுடன் இணைக்கப்பட்டு விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சான்றுகளின்படி நான்கு விஷயங்கள் தெளிவாக உணரப்படுகின்றன. அவை:
(1)‘‘The Kurus were one of the most prominent tribes of the later Vedic period, but it is curious that Pandus are mentioned for the first time in Buddhist literature, when they are described as a hill tribe’’
-Sinha & Banerjee in History of India (1952) page 46.
‘‘A.L.Basham was inclined to think that this claim of the arrival of Vijaya and his followers was only a personification of the first Aryan contact. However, G.S.Mendis had rejected their Vijayan episode as a mere legend. There is no authentic record about the arrival of Vijaya except scanty references in the Chronicles especially the Mahavamsa...
The Mahavamsa is a puranic work heavily laden with legends and politico-religious fervour...’’
-Poson : It has historical significance too ..
By A.Thevarajan.
‘‘However, despite the weight of popular and semi scholarly acceptance of the Vijaya story itself is purely legendary, a myth of origin synthesized from various early Indian legends and to be understood in terms of the histographical objectives of the chroniclers rather than as actual historical records. The same historians however premise of the Vijaya story that civilization in Srilanka had its origins in the settlement and expansion of migrant colonists from the Indian mainland.’’
‘‘Ethnicity and Social Change’’
Dr. SenakeBandaranayake.
(2) (i) ‘‘To many the history of our country begins with the legend of Vijaya and Kuveni, itself a parallel, according to John Still, to the tale of Ulysses and Circe. Some declare there can be no Tamil homelands since the ruins of Buddhist Shrines have been unearthed in areas considered to be Tamil and because some Tamil places have Sinhala origins. But the burial mounds of ‘‘Anaikoddai’’ and the megalithic artifacts of ‘‘Ponbarippu’’ and other places in the North-western sector may well tell a different story.
It is reasonable to assume that some of the earliest settlers in the North Ceylon came from the South-Eastern part of the adjoining subcontinent.’’
- by S.K.Gnanamuttu.
‘‘Noses & Dravidian Kissingers’’, Saturday Review, 4th Aug, 1984
(ii) The physical basis for early Srilanka culture was in the village tanks associated with this South Indian megalithic culture.
- Dr.Susantha Gunathilake
‘‘Formation of Srilankan Culture’’
(iii) ‘‘Artifacts and remains of stone tool using man have been found in several sites of Srilanka with the site at Bellan-Bandi Pelassa being dated by thermoluminiscent testing of associated artifacts as circa 4500 BC (Wintle and Oakley 1972). Excavations at a carefully stratified basis at the Gedige area of Anurathapura (S.Deraniyagala 1972) has also brought out artifacts associated with this culture was wide spread in the country. But it is not with stone age man or his cultural products to whom one could possibly assign cave paintings (S.Deraniyagala 1971-page 38) that we are interested in, it is with the culture associated with settled agriculture.
However there is considerable evidence both direct and indirect that settled irrigated agriculture arose before independent of the coming of the North Indian language speakers.’’
- Dr.Susantha Gunathilake
4. இலங்கை கொண்ட சோழன்
வட இந்தியர் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே அம்மண்ணில் மனித சமூகம் வாழ்ந்துள்ளது. அவர்கள் இயல்பாகப் படிப்படியாக நாகரிகமடைந்துள்ளனர். அவர்கள் (பூர்வகுடிகள்) திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இத் திராவிடர்களின் காலமும், தென்னிந்தியத் தமிழர்களின் காலமும் ஒரே காலத்தைச் சேர்ந்தவை. தென்னகத்திலும் இலங்கையிலும் கிடைத்த சான்றுகளின்படி இரு பகுதிகளினது சமூக நாகரிகமும் ஒத்தே உள்ளன. அப்பகுதி வாழ் மக்கள் குளங்களின் மூலம் விவசாயம் செய்யும்-குடியிருப்பு விவசாயம் மேற்கொண்ட நாகரிகச் சமூகமாகும்.
ஆக, இலங்கைக்கு ஆரியர்கள் (விஜயன்) வருவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் விவசாயத்தை அறிந்து இருந்தனர் என்பது தெளிவாகும். ஆனால் சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் இந்தோ ஆரியர்கள்தான் இலங்கைத் தீவிற்கு வந்து விவசாயத்தை அறிமுகம் செய்தார்கள் என்று கூறுகின்றனர். மேற்காணும் சான்றுகளின் மூலம் அந்த வாதம் வரலாற்றைத் திரித்துக் கூறும் மிகப்பெரிய பொய் என்பது தெளிவாகும்.
இதைப்பற்றி இலங்கையின் தொல்பொருள் ஆராய்ச்சி இயக்குநர் ஒருவர், "ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட எல்லாள மன்னன், கடவுளாக மதிக்கப்பட்டு வணங்கப்படுகிறான் என்றால், அவனது செல்வாக்கு அசாத்தியமானது' என்கிறார்.
 
மகாவம்சம் குறிப்பிடும் தமிழ் மன்னனின் புகழ்ச்சியைப் பொறுத்துக் கொள்ளாத சிங்கள வரலாற்று ஆய்வாளர்கள், தமிழ் மன்னனின் செல்வாக்கு, வீரம் ஆகியவற்றை மறைத்து, துட்டகாமினியின் செயலைப் புகழ்ந்து புத்தமத கலாசாரத்தின் சிறப்பம்சமாக, அதன் மேன்மையை வெளிப்படுத்துவதாக இந்நிகழ்ச்சிக்கும் புதிய விளக்கம் அளிக்கின்றனர்.
 
சிங்களவரின் வரலாறாகக் கருதப்படும் மகாவம்சம், எல்லாளன் என்ற தமிழ் மன்னனுக்கும் துட்டகாமினி என்ற சிங்கள மன்னனுக்கும் நடந்த போரைக் குறிப்பிடுகிறது. * (1) இந்தப் போர் கி.மு. 161-இல் நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. மன்னர்கள் சார்பில் படைவீரர்கள் மோதுவது உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தும். ஆகவே, இதைத் தவிர்க்கும் பொருட்டு இரு மன்னர்களும் யானை மீது அமர்ந்து மோதினர். எல்லாளன் யானை துட்டகாமினியின் யானையான கந்துலனைவிட உருவத்தில் சிறியது. உயரத்தில் பெரிய யானையான கந்துலன் மீது அமர்ந்து துட்டகாமினி வீசிய வேலால் தாக்குண்டு எல்லாளன் இறந்தான். எல்லாளன் எதிரி என்றும் கருதாமல், அவனது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு, அவனை அடக்கம் செய்த இடத்தில் நினைவுச் சின்னம் ஒன்றும் எழுப்புகிறான் துட்டகாமினி.
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மகாவம்சம் மேலும் அதைப் பற்றிக் குறிப்பிடுவது என்னவென்றால், ""இளவரசர்கள் அனைவரும் அந்த நினைவுச் சின்னத்திற்குச் சென்று இன்றும் கூட அஞ்சலி செலுத்துகிறார்கள்'' என்பதாகும். இதன் மூலம் தெரிவது இரு சமூகக் குழுக்களும் ஆரம்ப நாட்களிலிருந்தே பகைமை கொண்ட சமூக குழுக்களா என்றால், இல்லை. இரு மன்னர்கள் தங்கள் தங்கள் ஆட்சியை நிலைநாட்ட எடுத்துக்கொண்ட யுத்தங்கள்தான் அவை. இரண்டு இனங்களிலும் அக்கம் பக்கமிருந்து சட்டம், சாதிமுறை, சமூக அமைப்பு முதலியவற்றில் ஒரே சீரான நடைமுறைதான் தொடர்ந்து பேணப்பட்டு வந்திருக்கிறது என்பது புலனாகும்.
அடுத்து, வரலாற்றுக் காலத்தை எடுத்துக் கொண்டால் ஏழாம் நூற்றாண்டில் நரசிம்ம பல்லவன் புலிகேசியுடன் போர் புரிந்தபோது இலங்கை அரசன் மானவர்மன் படைத் தலைவனாகச் சென்றதாக சரித்திரக் குறிப்பு ஒன்று கூறுகிறது.
 
இதற்குப் பிரதியுபகாரமாக நரசிம்ம பல்லவன் இலங்கை மன்னனான மானவர்மனுக்கு உதவியாக பெரும் படையொன்றை அனுப்பி, அவன் இழந்த நாட்டை மீட்டுத் தந்ததாக காசுக்குடிப் பட்டயம் கூறுகிறது.
சோழ அரசன் முதலாம் பராந்தகனுக்கும் பாண்டிய மன்னன் இராசசிம்மனுக்கும் நடந்த போரில் பாண்டியன் தோற்கிறான். அவன் தனது அரச முடியையும், அரசியின் முடியையும், இந்திர ஹாரத்தையும் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தனிடம் அளித்துவிட்டு சேரநாடு ஓடுகிறான்.
பாண்டியனின் குலச்சொத்தை கைப்பற்றச் சோழ அரசர்கள் பலமுறை படையெடுப்பை நடத்துகிறார்கள். பராந்தக சோழனின் மகன் சுந்தரசோழன் ஆட்சியிலும், அவனது மகன் இராஜராஜசோழன் ஆட்சியிலும் கூட படையெடுப்பு நிகழ்கிறது. முடிவில் இராஜராஜ சோழனின் மகன் இராஜேந்திர சோழன் சிங்களவரைக் கொன்றதோடு "முன்னவர் பக்கல் தென்னவன் வைத்த சுந்திரமுடியும், இந்திரஹாரமும் அங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்' திரும்பப் பெற்றதாக ஒரு கல்வெட்டு மூலம் பெருமை கொள்கிறான்.
சோழர்கள் இலங்கை கொண்ட சோழராக மாறி அந்நாட்டை ஒரே மண்டலமாக்கி அநுராதபுரத்தை தலைநகராக மாற்றி ஆட்சி புரிகின்றனர்.
மேலும் இலங்கையின் வரலாற்றுச் சான்றுகளை வைத்து மதிப்பீடு செய்த அறிஞர்,
"நேரிடையாகவும் மறைமுகமாகவும் கிடைக்கும் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது, இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சிறந்த நாகரிகம் உடையவர்களாகவும் குடியிருப்புப் பாசன விவசாயத்தை மேற்கொண்டவர்களாகவும் இருந்தனர். இச்சமூக மக்கள் வட இந்திய மொழி பேசும் மக்களுக்கு முந்தைய காலகட்டத்து மக்கள் சமூகமாகும்' (டாக்டர் சுசந்தா குணதிலகா~"சாட்டர்டே ரிவ்யூ'~30, டிசம்பர் 1983) என்கிறார்.
இதன் மூலம் சிங்கள அறிஞர்கள் கூறும் ஆரியர்கள் குளநீர்ப் பாசன விவசாயத்தை இலங்கைத் தீவில் அறிமுகம் செய்தனர் என்பது தவறான கூற்றாகும் என்பது தெளிவு.
5. சிங்களமொழி உருவானது எப்படி?
மொழியியல் ஆராய்ச்சியின்படி சிங்களம் திராவிட இனமொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்கிறார் மொழி இயலாளர் எச்.எஸ். டேவிட் (டேவிட் 1981-இல் யாழ்ப்பாண நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட செய்தி கேட்டு மாரடைப்பால் மரணமுற்றவர்).
 
(1)* ""சிங்களம் இலங்கைத் தீவில் பேசப்பட்டதை கி.மு. 2000-த்துடன் இணைக்கலாம். அப்போது அம்மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை; பேச்சு வழக்கில் மட்டுமே அம்மொழி இருந்தது. அந்தப் பேச்சு வழக்கோ ஆதிகால திராவிட இன மொழிக் குடும்பத்தில் பிறந்தது. அப்படிப் பிறந்தனவே தமிழ், சிங்கள மொழிகள்'' என்கிறார். மொழியியல் அறிஞர் ஆக்ஸிமோரன் 
(2)* பழந்தமிழர் இலக்கியங்களில் இலங்கை "ஈழம்' என்றே குறிப்பிடப்படுகிறது. ஈழு என்ற திராவிட மொழியிலிருந்து ஈழம் பிறந்தது. இம்மொழியே இப்பொழுது "எலு' என்ற மொழி. தமிழுக்கும் முந்தைய திராவிட மொழியாகும்; இது திருந்தாத பேச்சு வழக்கு மட்டுமே உள்ள மொழியாகும். இதற்கு இலக்கியமோ, இலக்கணமோ கிடையாது.
இப்படிப் பழந்தமிழ் வடிவம் இங்கு வழக்கில் இருந்தபோதுதான் புத்தமதம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையில் நுழைகிறது. அப்போதுதான் பாலி மொழி இலங்கைக்குள் அடியெடுத்து வைக்கிறது. பேச்சு வடிவத்தில் இருந்த ஈழமொழியின் மீது பாலியும் சம்ஸ்கிருதமும் ஆதிக்கம் செலுத்த, இந்த ஆதிக்கத்தின் விளைவால் உருவான கலப்பு இன மொழியே சிங்கள மொழியாகும். அதனாலேயே தமிழ்மொழியில் உள்ள அநேக சொற்கள் சிங்களத்திலும் கலந்து இன்று வரை பேசப்பட்டு வருகின்றன.
தமிழ்தேவி, சோழமக்கள், அன்னியக்கரை, மறுகரை போன்றவை மகாவம்சத்தில் காணப்படும் தமிழ்ச் சொற்களாகும்.
 
(3)* கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் சோழப் பேரரசின் ஆதிக்கத்தில் இலங்கை வந்த பிறகே சிங்களமொழிக்கென எழுத்து வடிவம் கிடைத்தது என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.
தமிழர்கள் புத்த மதத்துக்கு தீராத விரோதிகளாக என்றும் இருந்ததில்லை. அவரவர் தத்தமது மதக் கொள்கையை கடைப்பிடித்து வந்தனர் என்பதற்கும் சான்றுகள் இலங்கையில் மட்டுமல்ல; தென்னிந்தியாவிலும் உண்டு. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் மணிமேகலையும், சீவகசிந்தாமணியும் புத்தமத்தை உயர்த்திப் பிடித்திருக்கின்றன. இலங்கையிலோ தமிழர்களும் புத்த மதப்பீடத்தில் தலைமைக் குருமார்களாக பொறுப்பு வகித்து சிறப்பித்திருக்கிறார்கள். புத்த மடாலயத் தலைவர்களாக இருந்த தமிழர்கள்:
சங்கமிதா - 4-ஆம் நூற்றாண்டு
புத்தமித்ரா - 5-ஆம் நூற்றாண்டு
வஜ்ரபோதி - 7-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியும் 9-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும்.
அனுராதா - 12-ஆம் நூற்றாண்டு,br> தர்மகீர்த்தி - 12-ஆம் நூற்றாண்டு
மற்றும் குபலன்கா - 13-ஆம் நூற்றாண்டு.
மேலும் திக்கநாகர், (வட இந்திய நாளந்தா பல்கலைக்கழகத்தில்) தர்மபாலா போன்ற தமிழர்கள் புத்த பீடத்திற்குத் தலைவர்களாகத் தங்களது பங்கினை விரும்பி அளித்திருக்கிறார்கள்.
போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்தபோது இருந்த கோட்டை மன்னனின் ஆட்சிப் பகுதியில் தமிழர்கள் நிறையப் பேர் வசித்ததாகவும், மேற்கு, வடமேற்கு ஆட்சிப் பகுதியில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களைக் கண்டதாகவும், நிர்வாகத்தில் கூட அவர்கள் பங்கேற்றிருந்ததாகவும் போர்த்துக்கீசியக் குறிப்புகள் கூறுகின்றன.
இன்றைய சிங்கள வரலாற்று ஆசிரியர்களோ இலங்கையின் வரலாற்றை, தமிழர்-சிங்களவர் ஆகியோரின் பகைமையை அவ்விரு இனங்களும் போரிட்டுக் கொண்டே இருந்த வரலாறாகவே உள்ளது என்று திரித்து எழுதுகின்றனர். மேலும் வரலாற்றில் தமிழர்களின், தமிழ் மக்களின் கலாசாரப் பங்களிப்பை அதன்மூலம் கிடைத்த மேன்மையை இழிவுபடுத்தி, குறைத்து மதிப்பிட்டு அல்லது மறைத்துவிடும் முயற்சியில் இலங்கையின் வரலாற்றை அவர்கள் சித்திரிக்கின்றனர்.
இது மன்னராட்சிக் காலத்தில் தங்களது மதமான புத்த மதத்தின் மேலாண்மை வீழ்ந்தது என்ற கருத்துக் கொண்டு மதவாதிகளின் உள்ளங்களில் ஏற்பட்ட கருத்துக் குழப்பமாகும்.
 
(4)* மகாவம்சத்தையும் புத்தமத தத்துவத்தையும் விவாதிக்கையில் மூன்று நம்பிக்கைகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
 
(1) ஆரிய இனம் என்ற நம்பிக்கை; சிங்கள மொழி பேசும் மக்கள் இனரீதியாக ஆரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற நம்பிக்கை.
(2) சிங்கதீவு~விஜயன் என்ற மன்னன் இலங்கைத் தீவில் அடியெடுத்து வைத்து ஆட்சியை நிலைநாட்டுவதற்கு காரணமானவன் என்ற மூட நம்பிக்கை.
(3) தர்மதீவு~புத்தரின் இலங்கையோடு உள்ள அவரது சிறப்பான உறவு பற்றிய மூட நம்பிக்கை.
 
(5)* இவை யாவும் தவறான தத்துவங்களின் மேல் எழுந்த நம்பிக்கைகள் ஆகும். இவை ஏன் எழுப்பப்பட்டன? கி.பி. ஆறாம் நூற்றாண்டில் இலங்கையில் வடபகுதியைத் தமிழர்கள் கைப்பற்றி ஆண்டபோது வெறுப்புற்ற புத்த மதவாதிகளால் தோற்றுவிக்கப்பட்ட பொய்யான கருத்துக்களே இவை.
அப்போது உறுதியான தேசியத் தத்துவம் எதையும் புத்தர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களின் தனித் தன்மைக்கு ஒரு தத்துவத்தைத் தேடிக் கொண்டிருக்கையில் இது பிறந்தது.
 
(6)* இதன் மூலம் "இன மேலாண்மை, நாகரிகப் புகழ்பாடுதல், ஆரிய இனத்துடன் சிங்கள இனத்தை இணைத்த கடந்த காலத்துதி, புத்த கலாசார நம்பிக்கை முதலியவற்றை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்' என்று வரலாற்று ஆய்வாளர் டாக்டர் குமாரி. ஜெயவர்த்தனே குறிப்பிடுகிறார்.
சுருக்கமாகச் சொன்னால், வரலாற்றைப் பொய்யாக்கி, தொன்று தொட்டு வாழ்ந்தவரைத் தாழ்ந்தவராக்கி, பெரும்பான்மைத் திமிராலும், அதிகார சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஆணவத்தாலும் தமிழர்கள் உரிமைக்கு உலைவைத்து, உயிருக்கு விலைவைத்து, உடமைக்குத் தீவைத்து, தமிழ் இனத்தையே பூண்டோடு அழித்து வரும் கொடுமையான நிலைமை திடீரென்று குதித்து விடவில்லை. படிப்படியாக, திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டம் பெரும் அளவிற்கு வெற்றியும் பெற்றிருக்கிறது. ஆனால், வரலாற்றில் இந்த ஒழிப்பு முறைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட தமிழ் இனம் தொடர்ந்து போராடி வந்திருக்கிறது. அந்தப் போராட்டம் இறுதி வெற்றி வரை தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை.
தமிழன் இலங்கை மண்ணுக்குச் சொந்தக்காரன்~முதல் பங்குதாரன் என்ற உண்மையை கடந்த இரண்டாயிரம் ஆண்டு கால வரலாறு, நமக்குப் புலப்படுத்துகிறது.
6. ஐரோப்பியர் வருகையும் அவர்களது ஆட்சியும்
சிக்கலான கால கட்டங்களிலெல்லாம் சிங்களவர்கள் அந்நியரிடமே தஞ்சம் புகுந்தனர். இதற்கு சரியான எடுத்துக்காட்டுதான் ஐரோப்பியர் வருகை.
17-வது நூற்றாண்டிலும் அதற்குப் பின்னரும் ஐரோப்பா தொழிலில் செழித்திருக்கவில்லை. அங்கு இயந்திரமயமான புரட்சி ஏற்பட்டது வெகுகாலத்திற்குப் பின்னர்தான்.
ஆதலால் பொருள்களை உற்பத்தி செய்வதிலும் ஏற்றுமதி செய்வதிலும் அக்காலத்தில் முன்னணியில் இருந்த ஆசிய நாடுகளுக்கு வியாபார நிமித்தம் செல்ல ஆரம்பித்தார்கள். ஐரோப்பிய வியாபாரிகள் தங்களது பொருள்களைக் கொடுத்து ஆசியப் பொருள்களை வாங்கினார்கள்.
இவர்களில் முன்னணியில் நின்று வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தியவர்கள் போர்த்துக்கீசியர்களே. இதனால் இவர்களிடம் பெருத்த செல்வம் சேர்ந்தது.
இவர்களது செல்வப் பெருக்கைக் கண்ட பொறாமையின் விளைவே ஆங்கிலேய, ஒல்லாந்த (டச்சு) கம்பெனிகள் ஆசிய நாடுகளை நோக்கித் தங்களது வியாபாரப் பயணத்தைத் தொடர்ந்தன என்கிறார் ஜவாஹர்லால் நேரு தனது "உலக சரித்திரம்' எனும் நூலில். வியாபாரத்தில் தனக்கென இடம் பிடித்துக் கொண்டதும் ஆங்காங்குள்ள அரசுகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு முதலில் அவர்களின் நண்பர்களாகவும், நாளடைவில் அந்தந்தப் பகுதிகளின் சிற்றரசுகளைப் பிடித்துக் கொண்டு ஆட்சியும் புரியலாயினர். சிற்றரசுகள் பணிந்தால் மட்டும் போதுமானது அல்ல; பெரும்பாலான சிற்றரசுகளின் மீது ஆதிக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கத் தொடங்கினர்.
இந்தியாவில் போர்த்துக்கீசியரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் தங்களது வியாபாரங்களைப் பெருக்கிக் கொண்டு பின் உள்நாட்டுச் சிற்றரசுகளை மோதவிட்டு நாட்டையும் பிடித்தனர் என்பதே நம் கடந்த கால வரலாறு.
போர்த்துக்கீசியர் 1505-இல் கும்பலாக வியாபாரம் செய்யும் நோக்கில் இலங்கை வருகிறார்கள். போர்த்துக்கீசியர்கள் அடியெடுத்து வைத்தபோது இலங்கையில் மூன்று தனித்தனி நாடுகள், தனித்தனி மன்னர்களின் கீழ் அரசாட்சி நடந்தன.
நல்லூரைத் தலைமையகமாகக் கொண்ட தமிழர் ஆட்சி
கண்டியைத் தலைமையகமாகக் கொண்ட கண்டி மன்னனின் ஆட்சி
கோட்டையைத் தலைமையகமாகக் கொண்ட கோட்டை மன்னனின் ஆட்சி
என்பதே அந்த மூன்று அரசுகளாகும்.
 

இதில் கண்டியும், கோட்டையும் சிங்களவர் வாழ்ந்த பகுதியாகும். இந்த மூன்று அரசுகளில் போர்த்துக்கீசியரை அன்புடன் வரவேற்றும், மரியாதை வழங்கியதும் கோட்டை அரசுதான்.
இருபாலரும் தங்களது அன்பையும் நேயத்தையும் வெளிப்படையாகவே காட்டிக் கொண்டார்கள். கோட்டை மன்னனுக்கு வாரிசு என்று யாரும் இல்லாததைக் கண்ட போர்த்துக்கீசியர் தங்களின் பிடியை மேலும் வலுப்படுத்திக் கொண்டனர். கோட்டை அரசுக்கு வாரிசாகப் பலர் போட்டியிட்டதால், யார் சரியான வாரிசு என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பைப் போர்த்துக்கீசியரிடமே கோட்டை மன்னன் அளித்தான்.
இதன் மூலம் 1597-இல் கோட்டை மன்னனின் ஆட்சிப் பகுதிகள் யாவும் போர்த்துக்கீசியர் வசமாயின.
போர்த்துக்கீசியர் 1505-இல் இலங்கையில் அடியெடுத்து வைத்த போதிலும் தமிழர் பகுதியை ஆளும் வாய்ப்பு அவர்களுக்கு 1619-இல் தான் கிடைத்தது. அந்த ஆண்டில் சங்கிலி மன்னன் போர்த்துக்கீசியரால் சிறைபிடிக்கப்பட்டு இந்தியாவில் உள்ள கோவாவில் தூக்கிலிடப்பட்டான்.
ஆளும் தலைமை ஒன்றாக இருந்த போதிலும் தமிழர் பகுதி நிர்வாகம் 1658 வரை தனியாகவே இருந்தது. இருப்பினும் குடா நாட்டுக்குத் தெற்கேயுள்ள வன்னிப்பகுதிகள் போர்த்துக்கீசியரின் மேலாணையை ஏற்றுக்கொள்ளவில்லை. கண்டி அரசுக்கும் திறை செலுத்தவில்லை. எந்தவொரு அரசின் பாதுகாப்பையும் நாடாது தன்னாட்சியை அமல்படுத்தி நடத்தி வந்தன. 

கிழக்குக் கரையோரத்தில் உள்ள கொட்டியாற்றுப்பற்று வன்னிமை, பழுகாம வன்னிமை, பாணமை வன்னிமை ஆகிய மூன்றும் கண்டி அரசின் மேலாணையையும், பாதுகாப்பையும் நாடியிருந்தன. ஆனாலும் அவை தன்னாட்சியுள்ள தமிழ்ப் பகுதிகளாகவே இருந்தன. 

பல்வேறு ஆட்சிகளின் கீழ் ஆளப்பட்டிருந்த போதிலும் தமிழ் ஈழ நிலப் பகுதிகளின் தமிழ்த் தன்மை மாறாதிருந்தது என்று கூறுகிறார்கள். (தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள்~ நூலில் ஜே.ஆர். சின்னதம்பி மற்றும் க. சச்சிதானந்தன்.
போர்த்துக்கீசியருக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பைக் கண்டு ஒல்லாந்தருக்கும், இங்கு வியாபாரம் செய்யவும் ஆட்சிபுரியவுமான ஆசை எழுந்தது.
ஒல்லாந்தர்கள் இலங்கையை நோக்கித் தங்களது பயணத்தை மேற்கொண்டனர். 1638-இல் மட்டக்களப்புத் துறையைக் கைப்பற்றி தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அங்குதான் முதன்முதலில் கோட்டையொன்றை அவர்கள் அமைத்தனர். கொழும்பைத் தாக்கி 1656-இல் வெற்றி பெற்றனர். அது போலவே யாழ்ப்பாணத்தையும் 1658-இல் தாக்கி வெற்றி கண்டனர்.
கோட்டைப் பகுதியைச் சேர்ந்த சிங்களவர்களோ, போர்த்துக்கீசியரை வீழ்த்த வேண்டும் அல்லது அவர்களது பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். ஒல்லாந்தர்கள் பக்கம் சாய்ந்தால் அவர்கள் உதவமாட்டார்களா என்ற கருத்தில், போர்த்துக்கீசியர்மீது ஒல்லாந்தர் தொடுத்த போருக்கு கோட்டை அரசு உறுதுணையாக இருந்தது. இதனால் போர்த்துக்கீசியர் தங்களது ஆட்சியை இழக்க வேண்டியதாயிற்று.

ஒல்லாந்தர்கள் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆறு மாவட்டங்களாப் பிரித்து ஆட்சி செய்தனர். புத்தளத்துக்கு வடக்கே மோதரகம் ஆறு முதலாக பொத்துவிலுக்குத் தெற்கே கும்புக்கன் ஆறுவரை தமிழர் பகுதி எனப் பிரிக்கப்பட்டது. இந்த ஆட்சி 1795 வரை தொடர்ந்தது. தமிழர்கள் வாழ்ந்த பகுதி யாழ்ப்பாணம் மாவட்டம் என அப்போது அழைக்கப்பட்டது.
போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் இலங்கையின் மீது கவனம் செலுத்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தைச் சேர்ந்த வியாபாரிகள் மட்டும் சும்மா இருப்பார்களா? அவர்களும் இலங்கையை நோக்கி தங்களது கப்பல்களைத் திருப்பினர்.
கி.பி. 1660-இல் ராபர்ட் நாக்ஸ் எனும் ஆங்கிலேயர் திருகோணமலைத் துறைமுகத்தில் வந்து இறங்கியதும் கண்டி அரசால் கைது செய்யப்பட்டார். 1679-இல் கண்டி அரசனின் சிறையிலிருந்து தப்பினார். தான் தப்பிய விதத்தைப் பின்னாளில் ஒரு நூலாக எழுதினார். இதில் தமிழ், தமிழர்களின் நாகரிகம் பற்றி உயர்வான கருத்துத் தெரிவித்திருக்கிறார். அப்பொழுது இலங்கையின் வரைபடம் ஒன்றை, தான் எழுதிய நூலில் சேர்த்திருக்கிறார். கயிலாய வன்னியனின் ஆட்சிப் பகுதியையும் அதில் குறிப்பிட்டுள்ளார். அருவியாற்றின் கீழிருந்து தொடங்கும் எல்லை வடக்கில் வன்னியப் பகுதியையும், கிழக்கில் கொட்டியாறு பழுகாமம், பாணமை வன்னிமைகளை அடங்கியிருக்கிறது. (தமிழ் ஈழம் நாட்டு எல்லைகள் பக்.17).
1782-இல் வந்த ஆங்கிலேயர் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு 1795-இல் தமிழர் வாழ்ந்த பிரதேசமான திருகோணமலையைக் கைப்பற்றினர். ஆங்கிலேயர் ஆட்சியமைக்க அடித்தளமிட்டவர்கள் யார்? சிங்களவர்கள்தான்!
முன்பு போர்த்துக்கீசியரிடமிருந்து தப்பிக்க ஒல்லாந்தர்களிடம் எப்படிப் போனார்களோ, அதுபோலவே இப்போது ஒல்லாந்தப் பிடியிலிருந்து விடுபட ஆங்கிலேயருக்கு ஒத்துழைப்புக் கொடுத்தனர். முடிவு 1815-இல் இலங்கைத் தீவு ஆங்கிலேயர் வசமாயிற்று.
7. பண்டாரவன்னியனின் கொரில்லாப் போர்!
அடங்காப்பற்று என்னும் வன்னிப் பகுதி கருநாவற்பற்று, கருக்கட்டுமூலை, முள்ளியவளை, மேல்பற்று என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி அதிகாரத்தில் செயல்பட்டன. 1790-இல் நல்லமாப்பாணான் என்ற வன்னியன் தலைவனாக விளங்கினான். இவன் பேரில் குற்றம் சுமத்தி நீக்கினர்.
பின்னர் வன்னியரசுகளின் கடைசி சிற்றரசனாக "குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன்' விளங்கினான். வன்னிப் பகுதியின் சுதந்திரத்திற்காக இறுதி வரை போராடி உயிர் துறந்தவன் என்ற பெயர் இவனுக்கு உண்டு.
 
(1)* ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதியில் அவர்களோடு மோதி பதவியிறக்கம் பெற்று ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கத்தில் மீண்டும் மன்னனாகி, பின் அவர்களுடன் மோதினவன் என்ற பெயரும் பண்டாரவன்னியனுக்கு உண்டு.
ஒல்லாந்தருக்கும்-ஆங்கிலேயருக்கும் வரிகட்ட மறுத்த காரணத்தினால் பல யுத்த களங்களைக் கண்டான். அடுத்து சாயவேர் தர மறுத்த குற்றம்-அக்காலத்தில் வன்னிப் பகுதியில் கிடைக்கும் சாயவேர்கள் ஒல்லாந்தரால் ஏற்றுமதி செய்யப்பட்டு, நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து அங்கு சாயம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது.
ஒல்லாந்தரிடமிருந்து ஆங்கிலேயரிடம் வன்னிப்பகுதி நிர்வாகம் மாற்றம் பெற்றதும் ஒல்லாந்தரான கேப்டன் வான்டெரிபேக் ஆங்கிலேயப் படையில் சேர்ந்து கொண்டான். 1803-இல் கண்டி மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும் பெரும் யுத்தம் ஏற்பட்டது. இந்தப் போரைப் பயன்படுத்திக் கொண்டு பண்டாரவன்னியன் ஆங்கிலேயர் வசமிருந்த ஆனையிறவுக் கோட்டை, இயக்கச்சி பைல் கோட்டை, வெற்றிலைக்கேணி பெஸ்சூட்டர் (ஆங்ள்ஸ்ரீட்ன்ற்ங்ழ்) கோட்டை ஆகியவற்றை மூன்று தனித் தனி படைப் பிரிவுகளை அனுப்பி தாக்கினான்.
*(2) முள்ளிவளையிலிருந்து சுண்டிக்குளம் வழியாகச் சென்ற ஒரு படைப்பிரிவு பெஸ்சூட்டக் கோட்டையைக் கைப்பற்றியது. கண்டா என்னும் ஊரின் வழியாக இயக்கச்சிக்குச் சென்ற படைப்பிரிவு குமாரசிங்க முதலியார் தலைமையில் "பைல்' கோட்டையைத் தாக்கி கைப்பற்றினர். இங்கிருந்த வீரர்களில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணத்துக்கு தப்பி ஓடினர்.
தாங்கள் கைப்பற்றிய கோட்டைகளைத் தகர்த்துவிடுமாறு பண்டாரவன்னியன் உத்தரவிட்டிருந்தமையால், படைப் பிரிவினர் அக்கோட்டைகளின் ஒரு பகுதிகளைத் தகர்த்து விட்டனர்.
அதே போன்று ஆனையிறவுக் கோட்டையை தகர்க்கும் முயற்சியில் அதன் நான்கு கொத்தளங்கள் சிதைக்கப்பட்ட நிலையில் பெரும் திரளாக வந்த ஆங்கிலேயப் படைப்பிரிவினரிடமிருந்து தப்பிக்க வன்னியன் படைகள் பின்வாங்கி கற்சிலை மடுவுக்கு திரும்பினர்.
அதே ஆண்டில் கேப்டன் வான்டெரிபேக் முல்லைத்தீவில் கட்டிய கோட்டையை பண்டாரவன்னியன் தகர்த்தான். இந்த முயற்சியில் கண்டி மன்னன் படைப்பிரிவும், நுவரகலாவியா திசாவையின் படைப்பிரிவும் சேர்ந்து கொண்டன. இந்தப் போரில் வான்டெரிபேக் தோல்வியுற்று யாழ்ப்பாணம் நோக்கி, படகில் தப்பினான். ஆனாலும் திரிகோணமலையில் இருந்து வந்த ஆங்கிலேயப் படை 19-வது கர்னல் எட்வர்ட் மெட்ஜின் தலைமையில் முல்லைத் தீவைக் காத்து, கைப்பற்றிக் கொண்டது.
பின்னாளில் பண்டாரவன்னியனுக்கு உதவி புரிந்த குற்றத்தை குமாரசேகர முதலியார் மீது பழி சுமத்தி அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் தூக்கிலிடப்பட்டனர். இவர்களைக் காப்பாற்ற தனது காதலி குருவிச்சிநாச்சி தலைமையில் குழு அனுப்பி வைத்தும் பண்டாரவன்னியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
குமாரசேகர முதலியாரையும் அவரது நண்பர் குழாத்தையும் காப்பாற்ற முடியாமல் போன பண்டாரவன்னியன் பெரும் வருத்தமுற்று, இதற்குப் பழிக்குப் பழி வாங்க ஆனையிறவுக்கோட்டை, இயக்கச்சிக்கோட்டை முதலியவற்றை கடுமையாகத் தாக்கினான். 1803 அக்டோபரில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஜான் ஜ்வல் தலைமையிலும், மன்னாரிலிருந்து கேப்டன் வான்டெரிபேக் தலைமையிலும் வன்னிப் பகுதியை நோக்கி விரைந்தன. கற்சிலைமடுவில் கேப்டன் வான்டெரிபேக் படைகள் காட்டுப் பகுதியில் வந்தபோது கடும் தாக்குதலுக்கு ஆளாயின. எங்கிருந்தோ கற்கள் பெருமளவில் பறந்து வந்து தாக்கின. பண்டாரவன்னியன் படைப்பிரிவு முந்தைய நாளில், அங்கிருந்த மூங்கில் மரக் காடுகளில் புகுந்து, ஒவ்வொரு மரத்தின் நுனியிலும் கருங்கற்களைக் கட்டி, அதன் நுனியை பின்புறமாகக் கயிறு மூலம் இழுத்து வேறொரு மரத்தில் கட்டியிருந்தனர். ஆங்கிலேயப் படை வரும் நேரமாகப் பார்த்து கட்டியிருந்த கயிறை அவிழ்த்துவிட மூங்கில் மரங்கள் நிமிர்ந்து கற்கள் எகிறி விழுந்தன.
 
(3)* இந்தச் செயலே கொரில்லாப் போரின் முதல் யுக்தியாக இன்றும் கருதப்படுகிறது. பண்டாரவன்னியன் இப்போரில் தோற்றபோதிலும். அந்தப் பகுதியில் இருந்து தப்பினான்.
உயிருடனோ, கொன்றோ பண்டாரவன்னியனைப் பிடிக்க விரும்பிய வான்டெரிபேக் அவமானமுற்றான். இருப்பினும் கற்சிலை மடுவில் நடுகல் ஒன்றை நட்டு, 1803 அக்டோபர் 31-இல் கேப்டன் வான்டெரிபேக் பண்டாரவன்னியனைத் தோற்கடித்தான் எனப் பொறித்தான்.
கண்டி மன்னன் உதவியுடன் 1811-ஆம் ஆண்டு உடையாவூரில் பண்டாரவன்னியன் ஆங்கிலேயரை மீண்டும் தாக்கினான். இந்தத் தாக்குதல் நடைபெறப் போகிறது என்பதை ஒற்றன் மூலம் அறிந்த ஆங்கிலேயர்கள், திரிகோணமலையிலிருந்தும்-யாழ்ப்பாணத்திலிருந்தும் பெரும் படையுடன் வந்து காத்திருந்தனர். இத்தாக்குதலில் பண்டாரவன்னியன் தரப்பில் பேரழிவு ஏற்பட்டதுடன் அவனுக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. தளபதிகள் பண்டாரவன்னியனை பனங்காமத்துக்கு எடுத்துச் சென்று சிகிச்சையளித்தும் பலனளிக்கவில்லை; பண்டாரவன்னியன் மறைந்தான்.
* (1,3) When the English took possession of the country in 1795 it enjoyed tranquillity for some years, until in 1803, when Pandara Wanniya, said to have been one of the original Wanniyas deposed by the dutch, raised a formidables insurrection against the British Government, and being assisted by Kandians with whom we were then at war, soon overran all the Northern Districts and had the boldness to penetrate as far as Elephant’s Pass into the peninsula of Jaffna. His object was to restore the independence of the Wanni, and render himself head of all its principalaties, but though daring and active, the force under his command was unable to cope with regular troops, and was only fitted for guerilla warfore. After several unsuccessful attempts to discover his retreats, made from the different posts, he was finally surprised, his troops killed or dispersed, the country was cleared of the rebels, and tranquillity was restored.‘‘. An Historical, Political and Statistical Account of Ceylon and its Dependencies -by Charles Pridham -1849 -Vol II. Page 522.
* (2) "அடங்காபற்று(வன்னி) பாகம்-2 பண்டாரவன்னியன்'-அருணா செல்லதுரை மற்றும் "ஈவத்தவர் வரலாறு'-கலாநிதி ஆ.குணராசா.
8. ஐக்கிய இலங்கை எனும் அரசியல் தவறு!
வன்னியில் பண்டார வன்னியன் ஆட்சி தொடர்ந்தது போல தமிழர் பகுதிகள் ஆங்கிலேயர் வசமான போதிலும் அவற்றைத் தனித்தனி நிர்வாகத்திலேயே வைத்திருக்கின்றனர். அக்காலத்தில் ஆங்கிலேயரின் மிகப் பெரிய காலனியாக சென்னை மாகாணம் இருந்தமையால், ஆரம்ப காலத்தில் இலங்கையின் மூன்று பகுதிகளையும் சென்னையோடு இணைத்தே ஆட்சி புரிந்து வந்தனர். அப்போது ஆங்கிலேயரிடம் இருந்த இலங்கையின் வரைபடம்தான் (ஆரோஸ்மித் தயாரித்தது, படங்கள் பகுதியில் காண்க) இன்றும் புழக்கத்தில் இருக்கிறது.
1797-இல் இலங்கையின் தமிழர் பகுதியில் கலகம் ஒன்று நிகழ்கிறது. இதை அடக்க அல்லது மாற்று ஏற்பாடுக்கு உத்தரவிட யாழ்ப்பாணத்திலிருந்த அதிகாரி சென்னை மாகாணத்தின் அதிகாரியை நாடவேண்டியிருந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதம் கலகத்தை ஊக்குவிப்பதாக அமைந்தது.
எனவே, சென்னை மாகாணத்தில் ஒரு காலும் யாழ்ப்பாணத்தில் ஒரு காலுமாக வைத்துக்கொண்டு நீதி~ நிர்வாகம் செய்வதன் சாதக பாதகங்களை உத்தேசித்து, இலங்கையின் பகுதிகளை~இலங்கை மண்ணிலிருந்தே நிர்வகிப்பது என முடிவெடுக்கப்படுகிறது.
இந்தக் காலகட்டத்தில் இலங்கை, இங்கிலாந்தின் காலனி நாடுகளில் ஒன்று என்ற அந்தஸ்தினைப் பெறுகிறது. முதல் ஆளுநராக 1798-இல் ஃப்ரெடரிக் நார்த் என்பவர் நியமிக்கப்படுகிறார்.
ஃபிரெடரிக் நார்த் ஆளுநராக வரும் வரையிலும், வந்த பின்னும் சில ஆண்டுகள் வரை யாழ்ப்பாணம், கோட்டை, கண்டி ராஜ்ஜியங்கள் தனித்தனியாகவே ஆளப்பட்டு வந்தன. இப்படித் தனித்தனியான நீதி நிர்வாகத்தை ஒன்றாக்கினால் செலவு குறையும் என்ற கருத்துப் பரவலாக எழுகிறது. வெவ்வேறான கலாசாரங்களைக் கொண்ட இலங்கையர்களை, செலவைப் பாராது, தனித்தனியாக ஆட்சி புரிவதே நல்லது என்ற எதிர்க் கருத்து ஒன்றும் அதே நேரத்தில் வலியுறுத்தப்படுகிறது.
இதைத் தீர்மானிக்க, ஆணையம் ஒன்று (1931-இல்) அமைக்கப்படுகிறது. இந்த ஆணையத்துக்கு கோல்புரூக் தலைவராக அமைகிறார். இவர் தெரிவித்த கருத்துகள்:
1. மூன்று வெவ்வேறு ஆட்சிக்குப்பட்ட பகுதிகளின் நில வருமானத்தைப் பாதிக்காத வகையில் சில சீர்திருத்தங்கள் காண்பது.
2. இந்தச் சீர்திருத்தங்கள் வெவ்வேறு கலாசாரங்களைக் கடைப்பிடிக்கும் மக்களின் தனித் தன்மையைப் பாதிக்காத அளவில் அமைய வேண்டும்.
-என்று குறிப்பிட்ட கோல்புரூக், ஆங்கிலேய அரசுக்கு ஓர் எச்சரிக்கையையும் வைக்கிறார். சிங்களவர்~ தமிழர் இருவரிடையே நிறைய வித்தியாசமிருக்கிறது; இருவரது கலாசாரமும் வெவ்வேறானவை. காலம் காலமாகப் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்களை, புதிய சட்ட திட்டங்களின் மூலம் சீர்திருத்துவது என்பது ஒழுக்கமற்ற செயலாகவே இருக்கும். இதன் மூலம் உருவாகும் பின்விளைவுகள் மோசமானதாக இருக்கும் என்றும் அவர் அடித்துக் கூறுகிறார். இலங்கை வரைபடம் ஒன்றையும் அத்துடன் இணைக்கிறார் (பட உதவி: தமிழ் ஈழ நாட்டு எல்லைகள்-காந்தளகம்).
கோல்புரூக்கின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது அவரால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாகச் சிக்கனத்திற்கான விஷயங்களை மட்டும் லண்டனில் உள்ள அரசுச் செயலாளர் எடுத்துக் கொள்கின்றார். 

நிர்வாகம் ஒருமைப்படுத்தப்பட்டு இருந்த போதிலும் 1833 வரை மேற்கே சிலாபத்தில் இருந்து தென் கிழக்கே வளவை கங்கை வரையுள்ள இலங்கைத் தீவின் வடக்கு, வடமேற்கு, கிழக்கு கரையோரப் பகுதிகள் தமிழரின் வாழ்விடங்களாக அப்போதே ஆங்கிலேயரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.
தமிழ் தேசிய இனத்தையும், சிங்கள தேசிய இனத்தையும் ஓராட்சியின் கீழ் நீதி-நிர்வாகம் செய்வதில் அவ்வப்போது தோன்றும் சில சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை; ஓய்ந்தபாடில்லை. ஆங்கிலேயருக்குத் தீராத தலைவலியாக இந்தச் சிக்கல்கள் அமைந்தது கண்டு 1882-இல் மேலும் ஓர் ஆணைக்குழு அமைக்கப்படுகிறது.
இலங்கையின் வடமேற்குப் பகுதியின் ஆட்சியரான ஜே.எப். டிக்சன் இந்தக் கமிட்டியில் ஓர் உறுப்பினர். இவர் தனது கருத்துகளை ஆணையரிடம் கொடுக்காது, அப்போதைய இலங்கை ஆளுநரான சர். ஜேம்ஸ் ராபர்ட் லாங்டனிடம் 6-ஆம் தேதி செப்டம்பர் 1833-இல் சிறப்பு மனுவாகத் தருகிறார்.
1831-இல் கோல்புரூக் ஆணைக்குழு என்ன கருத்தைச் சொன்னதோ, அதே கருத்தைத்தான் ஜே.எப். டிக்சனும் தெரிவிக்கிறார். மனுவில் டிக்சன் கூறியிருப்பதாவது:
"மூன்று வெவ்வேறான ஆட்சிப் பகுதியிலுள்ள மக்களின் தனித்தன்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இப்படி ஆட்சிபுரிய ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் தனித்தனி ஆட்சிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். ஆட்சிக்குழுக்கள் தனித்தனியாக மூன்று ஆட்சி ஆணையர்களை நியமிக்கலாம்' என்கிறார்.
"மனுவை அதற்கென ஆராயும் ஆணையத்திடம் தராது தனியாய் தருவதின் நோக்கம் என்னவெனில், ஆணையத்திடம், மூன்று ஆட்சிப் பகுதிகளில் உள்ள மக்களின் நலன்களைப் பேணுவதில் அலட்சியப்படுத்தும் போக்குக் காணப்படுகிறது' என்றும் அதில் டிக்சன் தெரிவிக்கிறார். டிக்சன் மேலும் ஒரு தகவலைத் தீர்க்கமாகக் குறிப்பிடுவதாவது:
"அரசு அமைப்பை மாற்றி ஒற்றை ஆட்சி அரசு ஒன்றை அமைப்பது தற்காலத்திற்கும் ஏன் எதிர்காலத்திற்கும் கூட உகந்ததாக இருக்காது. ஏனெனில் மூன்று மக்களும் மதத்தால், கலாசாரத்தால் மிகப்பெரிய வேறுபாட்டைக் கொண்டுள்ளனர். இந்த வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாது ஒற்றை ஆட்சி அரசு அமைத்தால் ஆட்சியாளரின் (ஆங்கிலேயரின்) குணாம்சத்தில் மக்கள் அவநம்பிக்கை கொள்வது நிச்சயம்'~ என்றும் துல்லியமாகத் தெரிவிக்கிறார்.
மனுவைப் படித்துப் பார்த்த ஆளுநர் சர் ஜேம்ஸ் ராபர்ட் லாங்டன், "இந்த மனுவில் குறிப்பிடும் விஷயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை' என்னும் குறிப்புடன் இங்கிலாந்தில் உள்ள காலனியாதிக்கச் செயலாளருக்கு அனுப்பி விடுகிறார்.
ஆளுநர் "கவனத்தில்' கொள்ளப்பட வேண்டிய விஷயம் என்று குறிப்பிட்டார். "கவனம்' காகிதத்தோடு நின்று போனது. டிக்சனின் கருத்துக்கு நேர் எதிரிடையாக தனது சொந்த எண்ணத்தை செயல்படுத்த ஆளுநர் தீவிரமாக முனைந்தார்.
மூன்று வெவ்வேறான ஆட்சிப் பகுதிகளை அரசின் ஒப்புதலோடு ஒன்றாக்கி உருவாக்கினார். இலங்கை முழுதும் ஒரே ஆட்சியின் கீழ் ஏற்கெனவே வந்து விட்டபோதிலும் அதுநாள் வரை தனித்தனியான நீதி நிர்வாகம் நடந்து வந்தது. அதை அவர் ஒழித்தார். இந்தச் செயல் மூலம் போர்த்துக்கீசியரும், ஒல்லாந்தரும் செய்ய முடியாத செயலைச் செய்தவர் என்ற பெருமையினையும் பெற்றார்.
ஆனால் அப்போது இலங்கையில் வசித்த நடுநிலையான ஆங்கிலப் பத்திரிகையாளர்களில், குறிப்பாக ஈ.ஜே. யங் இந்த அணுகுமுறையை "மிகப் பெரிய அரசியல் தவறு' என்று வர்ணித்தார்.
ஆக, நூற்றாண்டு கணக்கில் மூன்று பகுதிகளாகப் பிரித்து நிர்வகிக்கப்பட்ட இலங்கை -ஆங்கிலேயர் ஆட்சியில் நேர்மையாக இருந்த ஒரு சில ஆங்கிலேயராலேயே ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், வலிந்து திணிக்கப்பட்ட ஒரு செயலாக, நிர்பந்தமாக ஒரே இலங்கை என்ற "ஐக்கிய இலங்கை' உருவாக்கப்பட்டது. 

ஒரு டி.வி. பேட்டியில் ஜெயவர்த்தனே ""250 ஆண்டுகளாக இலங்கை ஐக்கியப்பட்டிருந்தது'' எனக் கூறியது உண்மை வரலாற்றைத் திரித்துக் கூறும் எவ்வளவு பெரிய பொய் என்பது மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியலாம்.
9. ஐரோப்பியர் ஏற்படுத்திய விளைவுகள்
போர்த்துக்கீசியரின் வருகையால் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதப்பிரிவுகள் இலங்கையில் தலையெடுத்தது. அடுத்து அவர்களின் மொழியும் நேரிடையாகவும், மறைமுகமாகவும் திணிக்கப்பட்டன. இவர்களின் 150 ஆண்டு ஆட்சிக் காலத்தில்தான் நிலங்களைப் பதிவு செய்யும் முறை அமலாகிறது.
ஒல்லாந்தர்கள் காலத்திலே இலங்கையில் வாழ்வோருக்கு முற்றிலும் புதியதானதொரு நீதித்துறை மாற்றங்கள் சட்டமாகின்றன. மதச் சிறுபான்மை இனமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டங்களும் ஏற்படுத்தப்படுகின்றன. இவர்கள் ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம்கள் குடியேற்றப்பட்டார்கள்.
ஒல்லாந்தர்கள் ஆட்சியைப் பிடிக்கும் முன்னர் வரை இந்து மதத்தவருக்கோ, முஸ்லிம் மதத்தினருக்கோ தனியாகச் சட்டங்கள் எதுவுமில்லை. ஒல்லாந்தர் காலத்தில்தான் இந்துச் சட்டம் என்றும், முஸ்லிம் சட்டமென்றும் புதிய சட்டங்கள் அவர்களது சமூகப் பழக்க வழக்கங்களையொட்டி வரையறுக்கப்படுகின்றன. புதிதாகச் சிங்களப் பகுதிகளில் இஸ்லாமும் அறிமுகப்படுத்தப்படுகின்றது.
ஆங்கிலேயர் காலத்தில் பைபிள் சிங்களத்திலும், தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. கிறிஸ்தவம் வேகமாக வேரூன்றி வருவது கண்டு கொதித்த ஆறுமுகநாவலர் இந்துமதத்தைத் தூக்கிப்பிடிக்கும் வகையில் சைவசமய நூல்களை வெளியிட முனைந்தார். ""கிறிஸ்தவ மதமும் இந்துமதமும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் சேவையில் ஈடுபட மதகுருமாரான அநகாரீக தர்மபாலா புத்த மதத்தை வளர்க்க இயக்கம் நடத்தினார். அதற்கெனச் "சிங்கள பெüத்தயா' என்ற பெயரில் பத்திரிகை ஒன்றை நடத்தினார். முஸ்லிம்களின் கடைகளைப் பகிஷ்கரிக்கும்படி தனது பத்திரிகைகளிலும், வெளியீடுகளிலும் அவர் எழுதினார்.
தர்மபாலாவின் தந்தை டொன் கறோலிஸ் தளவாடக் கடை ஒன்று வைத்திருந்தார். இவருக்குத் தர்மபாலாவைத் தவிர்த்து இரு மகன்கள் உண்டு. சிங்கள வர்த்தகர்களின் பண உதவியால் இயங்கி வந்த புத்த மறுமலர்ச்சி இயக்கம் அவர்களின் வியாபார வேலைகளுக்கு ஆதரவு வழங்கியது. இவர்களை தேசபக்தர்கள் என்றும் நியாயமான வழியில் பணம் சம்பாதிப்போர் என்றும் புகழ்ந்தது. அதே தர்மபாலா இந்தியா போன்ற இடங்களில் இருந்து வந்து இலங்கையில் வியாபாரம் செய்தவர்களை அநியாயமாகப் பணம் சம்பாதிப்போர் என்று சாடினார்.
சிங்கள நாவலின் தந்தை எனக் கூறப்படும் பியதாச சிரிசேன தனது "சிங்கள ஜாதிய' என்ற பத்திரிகையில் மேலைக் கலாசாரத்திற்கு எதிராக எழுதிய அதே வேளையில், சிங்களவர் அல்லாதோரையும் தாக்கியும் எழுதினார்.
இலங்கையின் வரலாற்றிலேயே இரு இலங்கைச் சமூகங்களிடையே ஏற்பட்ட முதலாவது கலவரம் 1915-ஆம் ஆண்டின் சிங்கள-முஸ்லிம் கலவரமாகும். சிங்களவர்கள் அல்லாதவர்கள் என்ற காரணத்தினால் முஸ்லிம்களின் கடைகள் தாக்கப்பட்டன. அவர்களின் சொத்துக்களும் பறிக்கப்பட்டன அல்லது சேதப்படுத்தப்பட்டன. இந்த கலவரங்களின் பின்னால் சிங்கள வியாபாரிகள் பலர் இருந்தனர்.
இந்த கலவரத்தின்போது சிங்களத் தலைவர்களாக மலர்ந்து கொண்டிருந்த எஃப்.ஆர்.சேனாநாயக்க, டி.எஸ்.சேனா நாயக்க போன்றோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை அரசியல் கைதிகளாக்கியது அரசு. அரசுக்கெதிராகச் சதி செய்தனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில் 1915-ஆம் ஆண்டின் கலவரங்கள் சிங்களவர்களின் உள்நாட்டு இனவாதத்தின் ஒரு பயங்கரமான வெளிப்பாடு ஆகும். இதுவே சிங்கள இனவாதத்தின் முதலாவது (ஆங்கில ஆட்சியில்) வெளிப்பாடும் ஆகும்.
கைது செய்யப்பட்ட சிங்களத் தலைவர்களை விடுதலை செய்யக் கோரி குறிப்பிடத்தக்க தமிழர் தலைவரான பொன்னம்பலம் இராமநாதன் பிரிட்டிஷ் அரசிடம் வாதிட்டு வெற்றியும் பெற்றார். அவர் லண்டனிலிருந்து திரும்பியபோது சிங்களவர்கள் சாரட்டு வண்டி ஒன்றில் பொன்னம்பலம் இராமநாதனை அமரவைத்து, வடம்பிடித்து இழுத்து வந்து ஆனந்தக் கூத்தாடினார்கள்'' என்று சமுத்திரன் எழுதிய "இலங்கைத் தேசிய இனப்பிரச்னை' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டொனமூர் கமிஷன் சிபாரிசு செய்த ஷரத்துக்களின்படி பார்த்தால் "டொனமூர் மீன்ஸ் டமிள்ஸ் நோ மோர்' என்று கூறியதுடன் மேற்கண்ட நிகழ்ச்சிக்காக பொன்னம்பலம் இராமநாதன் பின்னாளில் வருத்தமும் பட்டார்.
போர்த்துகீசிய, ஒல்லாந்துச் சட்டங்கள் இப்பொழுதும் நடைமுறையில் உள்ளன. இவர்களின் கலாசாரத் தாக்கத்தைவிட ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் நிகழ்ந்த தாக்கங்களே அதிகம். இலங்கையில் இன்று கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் (7சதவிகிதம்) இருப்பதற்கு காரணம் ஆங்கிலேயரே. தமிழர்-ஆங்கிலேயர், சிங்களர்-ஆங்கிலேயர் கலப்புத் திருமணங்கள் வெகுவாக ஊக்கப்படுத்தப்பட்டன. பிரபல தத்துவ ஞானியான ஆனந்த குமாரசாமியின் தாயார் ஓர் ஆங்கில மாது.
ஆங்கிலேயர்கள் ஆட்சியைப் பிடித்ததும் சர்ச்சுகளும், ஆங்கிலப் பள்ளிகளும் மளமளவென்று எழுந்தன. நிர்வாகத்தில் சீர்திருத்தம் செய்து அலுவலர் பிரிவு என ஒரு புதிய வர்க்கத்தையே ஏற்படுத்தினர்.
ஆங்கிலமொழித் திணிப்பு என்றளவோடு நின்றுவிடாது, அதைப் படித்தால் வேலை, அதற்கேற்ற ஊதியம் என்றும் கவர்ச்சியூட்டினர். இதனால் பெரும்பாலோர் ஆங்கிலம் கற்கவும், புதிய வேலைகள் பெறவும் ஆர்வம் காட்டினர். இதிலும் குறிப்பாகத் தமிழர்களுக்கு ஆங்கிலமொழி சிங்களவரைக் காட்டிலும் சிறப்பாக வந்தது. அதனால் அலுவலகங்களில் தமிழர்களே அதிக இடம் பிடித்தனர்.
ஆங்கிலேயர் செய்த மிகப் பெரிய செயல் இலங்கையின் பொருளாதார அமைப்பையே மாற்றியது. இங்கிலாந்தில் எந்தப் பொருளுக்கு கிராக்கியுண்டோ, எந்தப் பொருளைப் பயிர் செய்ய வாய்ப்பு அதிகமில்லையோ-அந்தப் பொருளை உற்பத்தி செய்யும் வகையில் இந்தப் பொருளாதாரக் கொள்கை அமைந்தது. இதன் மூலம் விவசாயப் பொருளாதாரம் அழிந்து தோட்டப் பயிர் பொருளாதாரம் இலங்கையில் உருவாயிற்று.
இலங்கையின் அன்றாட மக்களின் உணவுக்கு மூலாதாரமான அரிசி, பருப்பு முதலியவைகளை பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யுமளவு நெல் உற்பத்தி குறைந்தது. பணப்பயிர்களான தேயிலை, காபி, ரப்பர் முதலியவற்றை விளைவிக்கும் வகையில் இவர்களது செயல் இருந்தது. 

இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஆங்கிலேயர் புதிதாகச் சில நிலச்சட்டங்களை வகுத்தனர். அதில் ஒன்று மன்னர் நிலச்சட்டம் (1840). இதன் மூலம் விவசாய நிலங்கள், காடு வளர்ச்சி என்ற பெயரில் பிடுங்கப்பட்டது.
இப்படிப் பிடுங்கப்பட்ட நிலங்களில் தோட்டப் பணப் பயிர்களான தேயிலை, ரப்பர், காபி, தென்னை முதலியவற்றைப் பயிர் செய்தார்கள். இச்சட்டத்தின் மூலம் உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் விவசாயத்தை ஆதாரமாகக் கொண்டு வாழ்ந்த சிங்களவர்களும், தமிழர்களுமாவர். இவர்கள் காட்டையும், மலையையும் சார்ந்து வாழ்ந்தவர்கள்.

யாழ்ப்பாணத் தமிழர்கள் இத்திட்டத்தில் பாதிப்பு எதையும் அடையவில்லை. காரணம், அந்தப் பகுதியில் மலைகளோ, காடுகளோ இல்லை. அப்பகுதி அனைத்துமே பாசன வசதி கொண்ட நிலங்கள் ஆகும்.
வியாபாரம், நிதி மூலதனம், மேல்நிலை ஆதிக்கம் யாவுமே ஆங்கிலேயர் வசமிருந்தது. இதனால் சிங்களவர்களாலும், தமிழர்களாலும் பெரிய அளவில் வியாபாரத்துறையில் ஈடுபடவோ, தொழில் துறையைத் துவங்கவோ இயலவில்லை. இதனாலும் சிங்களவர்கள் இந்தக் காடு ஆக்கிரமிப்பை எதிர்த்தனர். தங்களது எதிர்ப்பை தோட்டங்களில் வேலை செய்ய மறுப்பதன் மூலம் வெளிப்படுத்தினர். ஆங்கிலேயர்களோ இதை எப்படியும் சமாளித்தாக வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தார்கள்.
சர்.பொன்னம்பலம் இராமநாதன், இலங்கை முழுவதற்கும் ஒரேயொரு சட்டசபை பிரதிநிதி என்றிருந்தபோது இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரை இருமுறையும் எதிர்த்துப் போட்டியிட்டு தோற்றவர்கள் சிங்களவர்களே! "இந்தியாவில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முன் காற்றின் வீச்சினால் தற்செயலாக இலங்கை வந்தடைந்த சிங்கள மக்கள் எப்படித் தோட்டத் தொழிலாளிகளைப் பார்த்து இந்தியனே வெளியேறு என்று கூறமுடியும். தேளை, பாம்பைக் கொல்லாது துரத்தும் சிங்கள மக்கள் எப்படி மனம் வந்து இம்மலைநாட்டுத் தமிழரை வெளியேறச் சொல்ல முடியும். இது புத்த நெறிக்கோ தருமத்திற்கோ ஒத்துப் போகுமா? இவ்விதம் மலையகத் தமிழ்மக்கள் நலன் கருதி சிங்களச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது இராமநாதனுக்கு வயசு 78. (பக்கம்.1791 சட்டமன்றப்பதிவேடு மூன்று-1928)
10. வகுப்புக் கலவரங்கள்
தோட்டங்களில் வேலைசெய்ய சிங்களவர்கள் மறுத்ததால், ஆங்கிலேயர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். எப்படி அமெரிக்காவில் வேலைசெய்ய ஆப்பிரிக்காவிலிருந்து கறுப்பர்களை அடிமைகளாக அழைத்து வந்தனரோ, அதேபோல தோட்டங்களில் வேலைசெய்ய ஆங்கிலேயருக்குத் தேவையான கூலித் தொழிலாளர்கள் தமிழகத்தில் கிடைத்தனர். ஏககாலத்தில் இந்தியாவிலும் ஆங்கிலேயர் ஆட்சி நடந்ததால் சென்னை மாகாணத்தின் தென் பகுதியிலிருந்து கூலியாட்களைத் தருவிப்பது இவர்களுக்கு மிகச் சுலபமாயிருந்தது. மேலும் சிங்களவர்களை அடக்கவும் இச்செயலால் முடிந்தது. 

1827-இல் மட்டும் இலங்கையில் குடியேறிய இந்தியத் தமிழர்களின் எண்ணிக்கை 10,000. 1877-லோ 1,46,000 ஆக உயர்ந்தது. (ஆதாரம்: இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம், ஈழ ஆய்வு நிறுவனம்).
 
இந்தியத் தமிழர்களை மலையகத் தோட்டங்களில் ஈடுபடுத்தும்போது அடைந்த இன்னல்கள் இருக்கிறதே அது சொல்லுந்தரமன்று (இதன் விவரம் தனிக் கட்டுரையாக பிற்பகுதியில் வருகிறது).
இதனால் சிங்களவர் வாழ்வு கேள்விக்குறியாயிற்று. அவர்களால் சிறு தொழில் துறையிலோ, சிறு வாணிபத்திலோ ஈடுபட முடியவில்லை. இவைகளில் முஸ்லிம்களும், செட்டியார்களும் பெருமளவில் ஈடுபட்டு வந்தனர்.
 
சிங்களவர்களுக்கென ஏதாவது தொழில் அல்லது வியாபாரம் வேண்டும்-அதற்கெனச் சிங்களவர்கள் மது வகைகள், கிராஃபைட், தோட்டங்கள் ஆகியவற்றில் தங்களது கவனத்தைச் செலுத்தலாயினர். இவற்றுக்கான மூலதனத்திற்காக சிங்களவர் தமிழர்களையே அண்டி இருக்க வேண்டியதாயிற்று.
கட்டாயத்தின் மூலம் மதமாற்றம், புத்த மடாலயங்களின் ஆதிக்கங்கள், புதிய வகையான பொருளாதார வளர்ச்சிகள், புதிய நிர்வாக நிறுவன உருவாக்கம் போட்டி முதலாளித்துவம், ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை மற்றும் காலனியச் சுரண்டலின் புதிய வடிவங்கள் ஆகிய அனைத்தும் பழைய சமூக வாழ்வைப் பாதித்தன. இதனால் புதிய சமூக வளர்ச்சிகளும் குழுக்களும் உருவாயின.
சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால் வெறுப்புற்ற படித்த சிங்கள அறிவு ஜீவிகள் தமிழர் எதிர்ப்பு புத்த கலாசாரத்தை தோற்றுவிக்க முனைந்தனர். இதற்குத் தகுந்தாற்போல் சிங்களவர்க்கென ஒரு கல்வித் திட்டத்தை ஆங்கிலேயர் வடிவமைக்கலாயினர். இதனால் சிங்களவர்கள் மத்தியில் படித்தவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
நிலத்தை மிகப் பெரிய சொத்தாகக் கருதிய-சிங்கள சமூகத்தில் இருந்த பழைய மதக் கருத்துகள் அனைத்தும் புத்தமதக் கலாசாரக் கருத்துகள் என வடிவம் கொண்டன. புத்தக் கலாசாரத்தைப் பெரிதும் போற்றிய சிங்களவர் விழிப்புணர்வுக் காலனியாதிக்கத்தின் எதிர்ப்பாகச் செயல்பட்டதா என்றால் இல்லை; அவர்கள் தங்களின் எதிர்ப்பு எல்லையை மிகவும் சுருக்கிக் கொண்டனர். ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் விரிவாக வளரவில்லை. அதே நேரத்தில் புத்தமத மறுமலர்ச்சி குறுகிய வகுப்புவாதமாக மாறியது.
""சிங்களம்-ஆரிய மொழியே'' என்ற கோஷத்தை முன்வைத்து அதன் மூலம் சிங்களவர்கள் ஆரியர்கள் என்ற கருத்தை மறைமுகமாகச் சுட்டிக்காட்டத் தலைப்பட்டனர். இந்தச் சுட்டிக் காட்டுதல் மூலம் தங்களைத் திராவிட இனத்தவர்க்கு மேலான உயர்குடிப் பிறப்பார் என வாதிக்கலாயினர்.
இது ஒரு மோசமான விஷவிதைதான். எனினும் தங்களது அரசியல் வியூகம் இப்படித்தான் வகுக்கப்பட வேண்டும் என்றே அப்போதைய சிங்கள அறிவுஜீவிகள் விரும்பினார்கள். முன்பு பார்த்த புத்தமதத்தின் மூன்று நம்பிக்கைகளை ஆதாரமாக்கிய இந்த ஆரிய இனவாதத்தினால் சிங்களவர்களுக்கும் பிற மதத்தவர்களுக்குமான புதிய இன மோதல்கள் எழுந்தன. இதனால் புத்த மதச் சிங்களவர்களுக்கு முன்னர் முஸ்லிம், கிறிஸ்தவர், தமிழர் (இந்து) முதலானோர் அந்நியர்களாக, தாழ்த்தப்பட்டவர்களாகத் தரம் பிரிக்கப்பட்டனர். இந்த ஆரிய இனவாதத்தினால் விளைந்ததே 1904-1912 காலத்தில் விதைத்த இனமோதல் போக்காகும்.
19-ஆம் நூற்றாண்டின், தொடக்கத்தில் சிங்களவர்கள் திடீரென அந்நிய எதிர்ப்புக் கோஷத்தை முன் வைத்தனர். இந்தக் காலக்கட்டத்தில் தங்களுக்குத் துணையாகத் தமிழர்களையும் உடன் சேர்த்துக் கொண்டனர். இந்த அந்நிய எதிர்ப்பு கோஷமானது கிறிஸ்தவர் எதிர்ப்பாக மாறிக் கலவரத்தை ஏற்படுத்தும் அல்லது தூண்டும் அளவுக்குப் போய்விடுகிறது.
இவ்விதத்தில் 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்த ஆங்கிலேயருக்கு எதிரான தேசபக்த இயக்கம் என்று சொல்லப்பட்டவை அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் வகுப்புவாதமாக மாறியது. அந்த வகுப்புவாதத்தை நியாயப்படுத்த, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் புத்த மதத் தத்துவ முலாம் பூசப்பட்டது. அதற்காகவே தாங்கள் ஆரியர்கள் என்பதற்கானச் சான்றுகளைத் தேடுவதன் மூலம் தங்களுக்கென ஒரு தேசியத் தனித்தன்மையை உருவாக்க முனைந்து செயல்பட்டனர். இப்படி முனைந்து செயல்படுதலின் மூலம் அவர்கள் பின்னால் வரப்போகும் பல கலவரங்களுக்கு அடித்தளம் போட்டுக் கொண்டனர்.  கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மகாவம்சம் எழுதப்பட்டது. அப்போதிலிருந்து சிங்களவரின் கலாசார உயர்வு, இன ஆளுமை வடிவில் நடந்த கலவரங்கள் பல.
கி.பி. 1279-இல் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த தமிழ் மன்னன் விக்கிரமசிங்கன் காலத்தில் ஒரு மதக் கலவரம் எழுந்தது. இந்தக் கலவரத்தில் புத்தர்கள் இரண்டு தமிழர்களைக் கொன்றனர். இதற்காகப் பழிக்குப் பழி முடிக்கவென விக்கிரமசிங்கன் கலகக்காரர்களின் தலைவன் புஞ்சிவண்டா என்பவனையும், எதிர்ப்பட்ட பதினேழு சிங்களவர்களையும் கொன்று முடித்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
1519-இல் ஆண்ட சங்கிலி மன்னன் ஆட்சிக் காலத்தில் சிங்களவர்கள் வகுப்பு மோதல் ஒன்றில் ஈடுபட்டதால் அவர்களைக் கண்டிக்கு அடித்துத் துரத்தினான்.
 
அடுத்துத் தென்னிந்தியாவில் வசித்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் ஈழத்து மன்னார் துறையில் 600 பேரைக் கிறிஸ்தவராக மதமாற்றம் செய்தார். இதில் வெறுப்புற்ற மன்னனுக்குப் புத்த பிட்சுகள் மேலும் தூபம் போட்டதன் விளைவாக அவன் 600 பேரையும் கொன்று விடுகிறான்.
இதைக் கேள்வியுற்ற போர்த்துக்கீசியர் அம்மன்னனுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்தனர். அது மட்டுமில்லாமல், போர்த்துக்கீசியர் நல்லூர் கீரிமலைப் பகுதி தவிர, இதர பகுதிகளிலிருந்த இந்துக் கோயில்கள் அனைத்தையும் இடித்துத் தள்ளினர்.
1863-இல் தொடங்கி 1880 வரை புத்தர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமிடையே கலகங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
புத்த பிட்சுகளும் பல கலகங்களுக்குத் தலைமை தாங்கினர் என்பது எமர்சன் டெனண்ட், ஆளுநர் பெüர்னிங் போன்றோரின் குறிப்புகளின் மூலம் தெரிய வருகிறது.
இதில் மிகெத்துவளை குணனந்தா இககனமா இரத்தினபாலா உனான்சே போன்ற புத்த பிட்சுகள் கலகத்தைத் தூண்டியவர்களாக அறியப்படுகிறது.
இந்த பிட்சுகளோடு அப்போது இருந்த மடுகல்லை, கெப்பிட்டிப்பொலை, பீலிமா தல்வா அநகாரிக தர்ம பாலா, பிரியதாசா, பத்தரமுல்லை ஸ்ரீ சுபத்தி போன்றோர்களும் மதக்கலவரத்தில் ஈடுபட்டதற்காகச் சிலருக்கு மரணதண்டனையும் வேறு சிலருக்கு ஆயுள்தண்டனையும் ஆங்கிலேய அரசால் அளிக்கப்பட்டது.
1880-க்குப் பின் ஏற்பட்ட கலவரங்கள் யாவும் மதச் சிறுபான்மையோர் மீதே நடத்தப்பட்டன. இவற்றுக்கான காரணம் என்னவெனில் சிங்களவரிடையே இருந்த வியாபார ரீதியான பகைமை, பொருளாதார ரீதியாக இருந்த தாழ்வு மனப்பான்மை ஆகியவையாகும். 1903, 1904, 1912 ஆண்டுகளில் நடந்த கலவரங்கள்கூட இவற்றையே காட்டுகின்றன.
புத்தப் பேரினவாத கலாசார உணர்வுகளுக்குத் தூபம் போட்டு வளர்க்கப்பட்ட உணர்வுதான் மண்ணின் மைந்தர் கொள்கை. இதனால் புத்தர்கள் அல்லாதவர்கள் அனைவரையும் இலங்கை மண்ணிலிருந்து விரட்டக் கூடிய நிலைக்கு அவர்கள் வந்தனர். இதில் தமிழர்களும் அடங்குவர். இந்நிலைகளுக்கு ஏற்பத்தான் 1948க்குப் பிறகு ஆட்சிமுறையில் பல புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன.

ஆக்கம்: பாவை சந்திரன்


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.