விடுதலைப்
புலிகளின், வடக்கிலங்கை
மக்களின் பேரழிவுக்கான விதை தேர்தல் புறக்கணிப்பில்தான் தொடங்கியது. அது அவர்களே
விதைத்த விதை. தொடர்ந்து புலிகள் புரிந்த பல வரலாற்றுத் தவறுகளே அவர்களுக்கான
கல்லறையைக் கட்டியது"
AD Bala
உள்நாட்டுப்
போரால் சிதைந்து போயிருந்த இலங்கையில் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை
மீட்டெடுப்பதாக உறுதி அளித்து 2001 நாடாளுமன்றத் தேர்தலை
சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றது. ரணில் விக்கிரமசிங்கே பிரதமரானார்.
ஓரிரு
மாதங்களில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அமைதி வழித் தீர்வு என்பதில் நம்பிக்கை கொண்டு, பொறுமையான ராஜீய
முறையிலான பேச்சுவார்த்தையை முன்னெடுத்தது ரணில் அரசு. ஆனால், ஒரு கட்டத்தில்
பேச்சுவார்த்தை முறிந்து போகிறது. ஆனால், போர் நிறுத்தம்
நீடித்தது. இந்நிலையில், இடைக்கால
சுயாட்சி ஆணையம் (Interim Self Governing Authority - ISGA) ஒன்றை அமைக்க
ஒப்புக்கொண்டால் தனி ஈழக் கோரிக்கையை கைவிடுவதாக புலிகள் தெரிவிக்கின்றனர்.
2003-ம் அக்டோபரில் தாங்கள் கோரும் இடைக்கால சுயாட்சி ஆணையம்
குறித்த விரிவான முன்மொழிவை அரசுக்கு சமர்ப்பித்தது விடுதலைப் புலிகள் அமைப்பு.
தமிழர் பகுதிக்கு மிக அதிகபட்ச சுயாட்சிக்கு வழிவகை செய்யும் ஷரத்துகள் அதில் இடம்
பெற்றிருந்தன. எதிர்க்கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சி, சிங்கள இனவெறிக்
கட்சிகளான ஜனதா விமுக்தி பெரமுன, ஜாதிக ஹேள உருமய ஆகியவை
இந்த முன்மொழிவைக் கடுமையாக எதிர்த்தன.
விக்கிரமசிங்கே
தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி நிதானமான அணுகுமுறையைக் கடைபிடித்தது. இந்தப்
பரிந்துரைகளை அது முற்றாக நிராகரிக்கவில்லை. பதிலாக, தங்கள்
முன்மொழிவுக்கும் புலிகளின் முன்மொழிவுக்கும் இடையில் பெரும் இடைவெளி இருப்பதாகத்
தெரிவித்தது.
பேச்சுவார்த்தையின்
மூலம் இந்த வேறுபாடுகளை குறைக்க முடியும் என்று அது நம்பிக்கை தெரிவித்தது.
ஒவ்வொருவரும் தத்தம் தரப்பில் அதீத கோரிக்கைகளை முன் வைப்பதும், பேச்சுவார்த்தையில் சிலவற்றை விட்டுக்கொடுத்தும், சிலவற்றைப் பெற்றும் ஓர் இடைநிலைத் தீர்வை எட்டுவதும் ராஜீய உறவுகளில் இயற்கை. இரு தரப்புக்கும் இப்புரிதல் இருந்தது போலவே தெரிந்தது. அமைதிப் பேச்சுக்கு உதவிய நார்வேவும், பிற ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் இந்த முன்மொழிவை நேர்மறையாகவே அணுகின.
அரசின்
இந்த அணுகுமுறை எதிர்க்கட்சிகளுக்கும், இன வெறியர்களுக்கும்
எரிச்சலைத் தந்தது. ஜனாதிபதி பதவியில் இருந்த சுதந்திரக் கட்சியின் சந்திரிகா
குமாரதுங்க 2004 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிகாரத்தைத் தம்
கையில் எடுத்துக்கொண்டு அமைதிப் பேச்சையும், இடைக்கால சுயாட்சி ஆணைய
முன்மொழிவின் மீது பேச்சு நடத்துவதற்கான வாய்ப்பையும் மோதித் தகர்த்தார்.
அமைதிக்கான
விருப்பத்தோடு நடந்துகொண்ட, சுயாட்சி
ஆணைய முன்மொழிவை பேச்சுவார்த்தைக்குரிய ஓர் ஆவணமாக ஏற்றுக்கொண்ட, அதனால் பதவி இழந்த
ரணில் விக்கிரமசிங்கே 2005 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அமைதிப் பேச்சை
சீர்குலைத்து, சுயாட்சி
ஆணைய முன்மொழிவை முற்றிலும் நிராகரித்த சுதந்திரக் கட்சியின் சார்பில் மகிந்த
ராஜபக்ச போட்டியிட்டார்.
ரணிலை
தேச விரோதியாக, சிங்கள
விரோதியாக சித்தரித்தன சுதந்திரக் கட்சியும், சிங்கள வெறிக்
கட்சிகளும். எனவே இயல்பாகவே சிங்களர்கள் மத்தியில் ரணிலின் செல்வாக்கில் சரிவு
இருந்தது. தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு மிக அருகில் வந்த, சிங்களர்கள் மத்தியில்
ஓரளவு செல்வாக்கை இழந்திருந்த ரணிலை, பிரதமரை விட அதிகாரம்
மிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ஆதரிப்பது தமிழர்கள் செய்திருக்கவேண்டிய மிக
முக்கிய வரலாற்றுக் கடமை.
நன்றி
உணர்ச்சி காரணமாக மட்டுமல்ல, தடைபட்ட
அமைதிப்பேச்சுக்களை மீண்டும் முன்னெடுக்கவும் ரணிலில் வெற்றி தமிழர்களுக்கு
மிகவும் அவசிமாக இருந்தது.
ஆனால், விடுதலைப் புலிகள் என்ன
செய்தார்கள்? தேர்தலைப்
புறக்கணித்தார்கள். விளைவு, 50.29 சதவீத வாக்குகளைப் பெற்று ராஜபக்சே வெற்றி பெற்றார். 48.43
சதவீத
வாக்குகளைப் பெற்று ரணில் தோற்றுப் போனார்.
தமிழர்கள்
ரணிலுக்கு வாக்களித்திருந்தால் இந்த மெல்லிய இடைவெளி வேறுவிதமாக மாறி இருக்கும்.
வரலாறு வேறாக இருந்திருக்கும். வரலாறு கையில் தூக்கித் தந்த வாய்ப்பை காலில்
போட்டு மிதித்த ஆணவத்துக்கான விலையை விடுதலைப் புலிகள் மட்டுமல்ல ஈழத் தமிழர்கள்
அனைவருமே தந்தார்கள். ஆம். அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றே ராஜபக்சே இனப்படுகொலை
போரை தீவிரமாக முன்னெடுத்தார்.
விடுதலைப்
புலிகளின், வடக்கிலங்கை
மக்களின் பேரழிவுக்கான விதை தேர்தல் புறக்கணிப்பில்தான் தொடங்கியது. அது அவர்களே
விதைத்த விதை. தொடர்ந்து புலிகள் புரிந்த பல வரலாற்றுத் தவறுகளே அவர்களுக்கான
கல்லறையைக் கட்டியது.
இதில்
இருந்து நம் இளைஞர்கள் இரண்டு பாடங்களைக் கற்கலாம்.
1.இருப்பதில்
மிதமானதையும், மிகப்
பிற்போக்கானதையும் ஒன்றாகப் பாவிப்பது பிற்போக்கானதை ஆதரிப்பதே ஆகும்.
2.இலங்கையில்
நடைபெற்ற அழிவுக்கு இட்டுச் சென்றது புலிகளின் தவறான அரசியல் முடிவே. அதற்குத்
தமிழ்நாட்டுத் தலைவர்கள் காரணமல்ல.