Wednesday 20 May 2020

புலிகளின் போர் குற்றம் -ஐ நா

இலங்கை போரின் இறுதி நிகழ்வுகள் குறித்து ஐநாவின் செயலருக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழு தனது அறிக்கையில் விடுதலைப் புலிகள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
ஆறு முக்கியமான வகைகளில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


பிரதான குற்றச்சாட்டுக்கள்

பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை கொலை செய்தது.

பொதுமக்கள் தங்கியிருந்த இடங்களில் இராணுவ ஆயுதங்களை வைத்திருந்து பயன்படுத்தியது.
சிறார்களை பலவந்தமாக தமது போர்ப்படைக்குச் சேர்த்தமை, ஆட்களை கட்டாயமாக வேலைவாங்கியது

தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களைக் கொன்றது

மோதல் பகுதியில் பெரும் ஆபத்து நிலவிய போதிலும், அங்கிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு அனுமதி வழங்காத விடுதலைப்புலிகள், அவர்களை முன்னேறி வந்த இலங்கை இராணுவத்துக்கு எதிராக மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதாக ஐநா குழுவின் அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

போர்க்காலம் முழுவதும் கட்டாயமாக ஆட்களை படைக்குச் சேர்ப்பதை விடுதலைப்புலிகள் ஒரு கொள்கையாக கடைப்பிடித்து வந்ததாக கூறியுள்ள அந்த அறிக்கை இறுதிக்கட்டத்தின் போது 14 வயதான சிறார் உட்பட அனைத்து வயதினைரையும் படைக்கு அவர்கள் கட்டாயமாகச் சேர்த்ததாக கூறியுள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு தேவையான பதுங்கு குழிகளைத் தோண்டுதல் உட்பட கடுமையான வேலைகளுக்கு பொதுமக்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதால், புலிகளுக்கும், பொதுமக்களுக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு நிலை உருவானதாகவும், அது பொதுமக்களுக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மோதல் பகுதியில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது விடுதலைப்புலிகள் நெருக்கமான தூரத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை கொன்றதாகவும், இதனால், இறந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.

பெருமளவில் இடம்பெயர்ந்த பொதுமக்கள் தங்கியிருந்த இடங்களில் இருந்து விடுதலைப்புலிகள் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாகவும், அவர்கள் இருந்த இடங்களுக்கு மிக அருகில் ஆயுதக்கிடங்குகளை வைத்திருந்ததாகவும் அது கூறுகின்றது. விடுதலைப்புலிகளின் ஆயுதக்கிடங்குகளும், இராணுவ நிலைகளும் மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் இருக்குமிடங்களுக்கு மிக அருகில் வைக்கப்பட்டிருந்தன.

இறுதிக்கட்ட போர் வேலையில், மோதல் பகுதிகளுக்கு வெளியே விடுதலைப்புலிகள் தொடர்ச்சியாக பொதுமக்கள் இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் அந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றதது.

 https://www.bbc.com/tamil/news/story/2011/04/110426_lttewarcrime.shtml

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.