Saturday, 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (96-99)


96: எம்.ஜி.ஆருடனான கடைசி சந்திப்பு
உங்களுடைய ஒத்துழைப்போ, ஆதரவோ இல்லாவிட்டாலும் ஒப்பந்தம் கையெழுத்தாவது உறுதி என்கிற வெளியுறவுச் செயலர் தீட்சித்தின் பேச்சிலேயே வெறுப்படைந்து விட்டிருந்த பிரபாகரன், அந்தமானில் சிறை வைக்கப்படுவீர்கள் என்று அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தார்.

பொறுமை இழந்த நிலையில் பிரபாகரன், "அப்படியென்றால் நீங்கள் இந்தப் பாதுகாவலை நீண்டநாள்கள் மேற்கொள்ளவேண்டியிருக்கும்; ஆண்டுகள் கூட ஆகலாம். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க இயலாது - அதுவும் ஆயுதத்தை ஒப்படைப்பது என்பதை ஏற்கவே முடியாது' என்று ஆத்திரத்துடன் கூறினார்.
"நீங்கள் ஆயுதத்தை ஒப்படைக்காவிட்டால் நாங்கள் பறிமுதல் செய்வோம். எங்கள் ராணுவத்தினை ஈடுபடுத்தி அதைச் செய்வோம். எங்கள் ராணுவத்தின் முன் நீங்கள் ஒரு தூசு. எனது பைப்பில் உள்ள புகையிலைத் தூளைப் புகைத்து முடிப்பதற்குள் - ராணுவம் அந்த வேலையைச் செய்து முடித்துவிடும்' என்று அவர் குரலை உயர்த்தினார்.
பிரபாகரன், "உங்கள் விருப்பப்படி எது வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் நாங்கள் இந்த ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம். எங்களுக்கு எது நடைபெற்றாலும் சரி' என்றார்.
தீட்சித் கோபத்தின் உச்சத்துக்குச் சென்று, "பிரபாகரன் - இதுவரை நான்கு தடவை இந்தியாவை ஏமாற்றி விட்டீர்கள்' என்றார்.
"அப்படியா, நல்லது. எங்கள் மக்களுக்கு நான்கு தடவை நல்லது செய்திருக்கிறேன் என்று அதற்குப் பொருள்.'
உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த உயர் அதிகாரியான தீட்சித், அந்த அறையில் இருந்து வெளியேறினார்.
கடுமையான முறை பயன்தராததைக் கண்ட அதிகார அமைப்பு, இலகுத் தன்மையுடன் கூடிய அணுகுமுறையைக் கையாளும் எண்ணத்துடன் மீண்டும் பிரபாகரனிடம் வந்தனர். இம்முறை அதிகாரிகள் குழுவில் இந்திய உளவு அமைப்பு இயக்குநர் எம்.கே.நாராயணன் (தற்போது பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசகர்), வெளிநாட்டு உறவு இணைச் செயலாளர் சகாதேவ், வெளிவிவகார அமைச்சகத்தைச் சேர்ந்த நிகல் சேத், கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தைச் சேர்ந்த ஹர்தீப் பூரி ஆகியோர் தொடர்ச்சியாகத் தனித்தனி சந்திப்புகளை மேற்கொண்டு, சம்மதிக்க வைக்க முயன்றனர். ஆனாலும் பிரபாகரனும் மற்றவர்களும் ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதே நேரம், பழ.நெடுமாறன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இருந்தார். அங்குள்ள பத்திரிகைகள் "பிரபாகரனுக்கு ராஜீவ் திடீர் அழைப்பு' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு, அதன் விவரத்தையும் பிரசுரித்திருந்தன. இந்த ஒப்பந்தத்தைப் படித்ததும், நெடுமாறன், சென்னையிலுள்ள திராவிடர் கழகச் செயலாளர் கி.வீரமணியைத் தொடர்பு கொண்டார்.
""ஆமாம், பிரபாகரனை தில்லிக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒப்பந்தத்தை ஏற்கும்படி வற்புறுத்தப்படுகிறார் என்று தெரிய வருகிறது'' என்றார் வீரமணி. "பிரபாகரன் எங்கிருக்கிறார்' என்று பழ.நெடுமாறன் கேட்கவும், அசோகா ஓட்டலில் இருப்பதாக கி.வீரமணி தெரிவித்தார். நெடுமாறன் அசோகா ஹோட்டலுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து, பிரபாகரனுக்கு போன் என்றதும், விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை அறியாத டெலிபோன் ஆபரேட்டர், பிரபாகரன் அறைக்கு இணைப்பை அளித்தார். இதுகுறித்து பழ.நெடுமாறன் கூறியதாவது:
""நான் போன் போட்டதும், மறுமுனையில் தம்பி பிரபாகரனே எடுத்தார். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தம்பி - நான் கேள்விப்படுகிற செய்தி உண்மையா?'' என்றேன். அவர், "ஆமாம் அண்ணா! எங்களைச் சிறைவைப்பது போன்று அடைத்து வைத்திருக்கிறார்கள். யாரையும் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. வை.கோபால்சாமி உள்ளே வந்தபோது அவரையும் சந்திக்கவிடவில்லை. உடன்பாட்டை ஏற்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள். தீட்சித் மிரட்டுகிறார். இந்திய ராணுவத்தின் மூலம் ஆயுதங்களை எங்களிடமிருந்து பறிப்போம் என்கிறார். நான் எல்லாவற்றுக்கும் மறுத்து வருகிறேன்' என்றார்.
தம்பி கூறியதைக் கேட்டதும் எனக்குப் பதைபதைப்பு அதிகமானது. ""அப்படியானால் எனது சுற்றுப்பயணத்தை ரத்துசெய்துவிட்டு உடனடியாகத் திரும்புகிறேன்'' என்றேன். அவர் ""ஆமாம் அண்ணா! உடனடியாகத் திரும்பினால் நல்லது'' என்றார். எனது பயண ஏற்பாடுகளை ஆஸ்திரேலியாவில் செய்த சோமசுந்தரமும் தம்பியுடன் அப்போது பேசினார். உடனடியாகத் தாயகம் திரும்பினேன். (நேர்காணல் - பழ.நெடுமாறன் - 29-8-2009)
இதனிடையே பிற இயக்கங்கள் அனைத்தின் பிரதிநிதிகளும் தில்லிக்கு அழைக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டது. இவர்கள் அனைவரும் தங்களது சொந்தச் செலவில் சென்னையிலிருந்து தில்லிக்கு ரயிலில் வந்து தங்கிச் சென்றனர்.
"விடுதலைப்புலிகள் விஷயம் என்னவாயிற்று' என்று ராஜீவ் கேட்டதும் "பிரபாகரன் ஏற்க மறுக்கிறார்' என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவரின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக முதலமைச்சருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிறப்பு விமானம் மூலம், அவர் தில்லி வரவழைக்கப்பட்டார்.
தமிழக முதலமைச்சர் தில்லி வந்ததும், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். அன்றைய இரவே, அசோகா ஹோட்டலில் இருந்த பிரபாகரன் குழுவினரைத் தமிழ்நாடு இல்லத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இது தொடர்பான விவரங்களை அன்டன் பாலசிங்கம் தான் எழுதிய "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பகுதி வருமாறு:
""தலைவர் பிரபாகரனும் நானும் யோகி என்கிற யோகரத்தினமும் எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் செல்லப்பட்டோம். முதலமைச்சருடன் தீட்சித்தும் இருந்தார். இந்திய - இலங்கை ஒப்பந்தம் பற்றியும் அதில் பரிந்துரைக்கப்பட்ட மாகாண சபைத் திட்டம் பற்றியும் இம் மாகாண சபைத்திட்டம் மூலம் ஈழத் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டுள்ளது என்றும் தீட்சித் சொன்னதை நாடியில் கையூன்றியவாறு பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர்.''
""தமிழர் விடுதலைக் கூட்டணியும் சகல போராளிக் குழுக்களும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்கின்றன. ஆனால் இவர்கள் மட்டும் இதனை எதிர்க்கிறார்கள். தமிழீழத் தனியரசைத் தவிர இவர்கள் எதையுமே ஏற்க மாட்டார்கள் போலத் தெரிகிறது. ஆனால் இந்திய அரசு தனியரசு அமைவதை ஒருபொழுதும் அனுமதிக்கப் போவதில்லை. இவர்கள் இந்தியாவை விரோதித்தால், பாதகமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என்றார் இந்தியத் தூதுவர்.
""இந்த மாகாண சபைத் திட்டத்தில் உருப்படியாக ஒன்றுமில்லை. தமிழ் மக்களின் அபிலாஷையை இது பூர்த்தி செய்யவில்லை. அப்படியிருக்க, இத்திட்டத்தை நாம் எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும்?'' என்றார் யோகி என்கிற யோகரத்தினம். இதைத் தொடர்ந்து யோகிக்கும் தீட்சித்துக்கும் கடும் வாக்குவாதம் மூண்டது.
""சென்றவாரம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பூரி இந்த ஒப்பந்தம் பற்றியும் மாகாணசபைத் திட்டம் பற்றியும் உமக்கு விவரமாக விளக்கினாராம். அப்போது அதற்கு ஆதரவு தெரிவித்த நீங்கள் இப்போது எதற்காக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்?'' என்று தீட்சித் கேட்க, ""யாழ்ப்பாணத்தில் இந்த ஒப்பந்தம் பற்றி எதுவுமே பேசப்படவில்லை'' என்றார் யோகி.
""என்னை ஒரு பொய்யன் என்று சொல்கின்றீர்களா?'' என்று கேட்டார் தீட்சித். ""நீங்கள் உண்மை பேசவில்லை'' என்றார் யோகி.
வாக்குவாதம் சூடுபிடித்தது. முதலமைச்சரைப் பார்த்து, ""பாருங்க சார், என்னைப் பொய்யன் என்று சொல்கிறார்'' என்றார் தீட்சித்.
இந்தியத் தூதுவர் தீட்சித் உணர்ச்சிவசப்படுகிறார் என்பதை உணர்ந்த எம்.ஜி.ஆர்., ""நீங்கள் சிறிது நேரம் வெளியே இருக்கிறீர்களா? நான் இவர்களுடன் பேச வேண்டும்'' என தீட்சித்தை வேண்டிக்கொண்டார். சிறிது தயக்கத்துடன் அங்கிருந்து வெளியேறினார் இந்தியத் தூதுவர்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகள் பற்றியும் அதனை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்பதன் காரணங்கள் பற்றியும் எம்.ஜி.ஆர். எம்மிடம் வினவினார். ஒப்பந்தத்திலுள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எமது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்கினோம். ஈழத்து அரசியல் கட்சிகளும், ஆயுதக் குழுக்களும் இந்திய அரசின் நெருக்குதலுக்கும், மிரட்டலுக்கும் பணிந்துவிட்டார்கள் என்றும், இந்திய அச்சுறுத்தல்களுக்குப் பணிந்து நாம் எமது மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை என்றும் சொன்னோம்.
தமிழரின் இனப் பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணாத நிலையில், சிங்கள ஆயுதப் படைகள் தமிழர் மண்ணை ஆக்கிரமித்து நிற்கும் சூழ்நிலையில், எமது ஆயுதங்களைக் கையளித்து, எமது போராளிகளைச் சரணடையுமாறு கேட்பது நியாயமற்றது என்பதையும் எடுத்து விளக்கினோம்.
எமது விளக்கங்களை முதலமைச்சர் பொறுமையுடன் செவிமடுத்தார். எமது நிலைப்பாட்டின் நியாயப்பாடுகளையும் அவர் புரிந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்தமானது இந்தியாவின் கேந்திர - புவியியல் நலனைப் பேணுவதற்காகவே செய்து கொள்ளப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டார். இந்திய - இலங்கை ஒப்பந்த விவகாரத்தில் பிரபாகரன் என்ன முடிவு எடுக்கின்றாரோ, அதற்குத் தனது முழு ஆதரவும் இருக்கும் என்றார் எம்.ஜி.ஆர். அழுத்தங்களுக்கு விட்டுக் கொடுக்காது, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பது குறித்து பிரபாகரனை அவர் பாராட்டவும் தவறவில்லை. முதலமைச்சருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம். முதலமைச்சரின் சந்திப்பு அறைக்கு வெளியே தீட்சித்தும் ஓர் இந்தியப் புலனாய்வு அதிகாரியும் நின்று கொண்டிருந்தனர். எம்மை வழிமறித்த இந்தியத் தூதுவர், ""ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும்படி முதலமைச்சர் வற்புறுத்தினார் அல்லவா?'' என்று கேட்டார். நாம் பதிலளிக்காது மௌனமாக நின்றோம். ""முதலமைச்சர் சொன்னபடியே செய்யுங்கள்'' என்றார். ""அப்படியே செய்வோம்'' என்று கூறிவிட்டுச் சென்றோம்.
முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுடனான விடுதலைப் புலிகளின் கடைசிச் சந்திப்பு அதுதான்.
97: ராஜீவ்-பிரபாகரன் சந்திப்பு!
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு சம்மதிக்க வைக்கும் முயற்சியில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரை ஈடுபடுத்தியும், அவர் விடுதலைப்புலிகள் பக்கம் சார்ந்து கருத்து தெரிவித்ததும், பிரதமர் ராஜீவ் காந்தி தானே நேரடியாக முயற்சி செய்வது என்று முடிவெடுத்தார்.
ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முந்தின நாள், அதாவது ஜூலை 28-ஆம் தேதி, நள்ளிரவு அசோகா ஹோட்டலில் தங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் தூங்கிக்கொண்டிருந்த பிரபாகரனையும் பாலசிங்கத்தையும் இந்தியப் புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் எழுப்பினர்.
அவர்களிடம், "பிரதமர் உங்களைச் சந்திக்க விரும்புகிறார். உடனே புறப்படுங்கள்' என்று கூறினர்.
இதன் நோக்கம் அறிய பல கேள்விகளை எழுப்பியும், "பிரதமர் உங்களிடம் ஒப்பந்தம் குறித்தக் கருத்துகளை விவாதிக்க விரும்புகிறார்' என்பதைத்தவிர வேறு எந்த விவரத்தையும் அவர்கள் சொல்ல விரும்பவில்லை.
கருப்புப்பூனை அதிரடிப்படையினர் பாதுகாப்புடன் பிரபாகரனும் பாலசிங்கமும் பிரதமர் இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இல்லத்தின் வாயிலருகே நின்று, பிரதமரும் புலனாய்வுத்துறை இயக்குநர் எம்.கே.நாராயணனும் இவர்களை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
பிரபாகரனைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்பதாகவும், நேரில் சந்திப்பதில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறி, அவரது கைகளைப் பற்றி குலுக்கிய ராஜீவ் காந்தி, ஒப்பந்தம் குறித்து அவர்களுக்கு இருந்த மாற்றுக்கருத்துகளை விவரிக்கும்படி கேட்டார்.
பிரபாகரன், பாலசிங்கத்திடம் அவருக்கு ஆங்கிலத்தில் எடுத்துக்கூறும்படி சொன்னதும் அவர் சுருக்கமாகவும் கூறவேண்டியவற்றை விட்டுவிடாமலும் விவரித்தார்.
""வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் ஆதிபத்திய உரிமை கொண்ட பூமி. அங்கு தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் பகுதியைத் துண்டாடுவதற்கு ஒருபோதும் ஒப்பமாட்டார்கள்.
இந்தப் பகுதியின் ஒருமைப்பாட்டை வாக்கெடுப்பு மூலம் அறிவது ஏற்கத்தக்கதல்ல.
மாகாணசபைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இறுதி அதிகாரம் ஜெயவர்த்தனாவிடமே இருக்கும். அவரை நம்பமுடியாது. காரணம் அவர் சிங்கள வெறியர். தமிழர் நலன் பெறும் எந்தத் திட்டத்துக்கும் அவர் உடன்பட மாட்டார்.
ஆயுதக் கையளிப்பு என்பது 72 மணி நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதை ஏற்கமுடியாது. இந்த ஆயுதங்கள் பல ஆண்டுகள் ரத்தம் சிந்தி பெற்ற ஆயுதங்கள். தமிழர்களின் பிரச்னைக்குரிய இறுதித்தீர்வு எட்டப்படாத நிலையில் ஆயுதங்களை ஒப்படைக்க வற்புறுத்துவது நியாயமாகாது'' என்று ஒவ்வொரு பிரச்னையாக ராஜீவிடம் விளக்கியதாகவும், ராஜீவ் அனைத்து அம்சங்கள் குறித்தும், தனது குறிப்பேட்டில் குறித்துக்கொண்டதாக, பாலசிங்கம் "விடுதலை' நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றைக் குறித்துக்கொண்ட ராஜீவ் காந்தி, அவர்களிடம் தொடர்ந்து பேசும்போது, ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும், ஒரு நீதியான தீர்வு காணவேண்டும் என்பதிலும், குறைபாடுகளைப் பின்னர் ஜெயவர்த்தனாவிடம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றும் கருத்து வாக்கெடுப்பு நடத்தாமல் ஒத்திவைத்து விடலாமென்றும் தெரிவித்ததுடன், இதனை ஜெயவர்த்தனாவிடம் சொல்லுவேன் என்றும் இந்திய அரசை நம்பவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழர்களின் பாதுகாப்பை ஒப்பந்தம் உறுதிப்படுத்தும் என்றும் எடுத்துச் சொன்னார்.
ராஜீவ் காந்தி சொன்னதை பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழில் விளக்கினார். ஆனாலும் பிரபாகரன் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
ராஜீவ் காந்தி, அவர்களிடம் மேலும் பேசுகையில், விடுதலைப் புலிகளின் எந்த முடிவுகளையும் கொள்கைகளையும் மாற்றிக்கொள்ளச் சொல்லவில்லை என்றும், இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தால் போதும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உடனிருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், "பிரதமரே உங்களது வழிக்கு வந்துவிட்டார். இந்தச் சிறிய ஒத்துழைப்பையாவது இந்திய அரசுக்குச் செய்யக்கூடாதா?' என்று வலியுறுத்த ஆரம்பித்துவிட்டார்.
இது குறித்து "விடுதலை' நூலில் பாலசிங்கம் குறிப்பிட்டிருப்பது வருமாறு:
"ஒரு விஷயத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அதனை நாம் எதிர்ப்பதாகத்தானே அர்த்தம்' என்று எனது காதோடு கிசுகிசுத்தார் பிரபாகரன்'
தொடர்ந்து ராஜீவ், "உங்களது இயக்கத்துக்கும் பொதுவாக தமிழ் மக்களுக்கும் ஜெயவர்த்தனாவின் பேரில் நம்பிக்கையில்லை என்பது எனக்குத் தெரியும். எனக்கும் கூட அவர்மீது நம்பிக்கையில்லைதான். என்றாலும் அவர்மீது கடும் அழுத்தம் கொடுத்து, இந்த ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறோம். மாகாணசபைத் திட்டத்தை உடனடியாக
நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை. அதற்குக் காலம் பிடிக்கும். அதற்கு முன்னதாக, வடகிழக்கில் ஓர் இடைக்கால அரசை நிறுவி, அதில் உங்களது அமைப்புக்குப் பிரதான பங்கு வழங்கலாம். இந்த இடைக்கால அரசு சம்பந்தமாக நான் உங்களுடன் ஒரு ரகசிய உடன்பாடு செய்துகொள்ளவும் ஆயத்தமாக இருக்கிறேன்' என்றார்.
"தமிழர் தாயகத்தில் புலிகளின் நிர்வாக ஆட்சியை நிறுவுவதற்கு இது அருமையான சந்தர்ப்பம். இந்தியப் பிரதமருடன் ஒரு ரகசிய உடன்பாடு. இந்த யோசனையை நிராகரிக்கவேண்டாம். இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டாம். அதற்கு முன்னதாக ராஜீவ்-பிரபா ஒப்பந்தம் வரப்போகிறது. இதனைப் பகிரங்கப்படுத்தத் தேவையில்லை. ரகசியமாகவே வைத்துக்கொள்ளலாம்' என்றார் பண்ருட்டி ராமச்சந்திரன்.
இதெல்லாம் முன்கூட்டியே ஒத்திகை பார்க்கப்பட்ட நாடகம் போல எனக்குத் தோன்றியது. பிரபாகரனுக்கு எதிலுமே நம்பிக்கையில்லை. எதிலும் ஆர்வமும் காட்டவில்லை. ஆனால் பண்ருட்டி ராமச்சந்திரன் மிகவும் ஆர்வத்துடன், ராஜீவ்-பிரபா ஒப்பந்தத்திற்கு ஒரு வடிவம் கொடுக்க முயன்று கொண்டிருந்தார்'.
இவ்வாறு குறிப்பிட்டுள்ள பாலசிங்கம், சந்திப்பு விடியற்காலை மூணரை மணியளவில் முடிவுற்றதாகவும் நூலில் தெரிவித்திருக்கிறார்.
98:ஒப்பந்தம் கையெழுத்தானது!
ஒப்பந்தங்கள் போடுவது என்பது ஒரு நாட்டினது இயல்பு. இந்த ஒப்பந்தங்கள் மக்கள் நலன், நாட்டின் நலன் சார்ந்ததாக இருக்கும். மக்கள் நலன் சார்ந்த ஒப்பந்தங்கள் பிற இன குழுக்களின் மேலாதிக்கத்தால் முறியடிக்கப்படவும், நாட்டின் நலன் சார்ந்ததென்றால், ஏதேனும் ஒரு விதியைக் காரணம் காட்டி, அந்நாட்டின் ஆன்ம பலம் சிதறடிக்கப்படவுமான முயற்சிகளை இன்றுவரை உலகம் கண்டு வருகிறது.
இலங்கையில் 1915, 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981-ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது கட்டற்ற வன்முறைகள் ஏவிவிடப்பட்டதற்கு சிங்கள மேலாதிக்கமே காரணம். இதன் உச்சம் 1983-இல் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள். இதனை உலகமே கண்டித்தது. இலங்கையில் சிறுபான்மையினராக, பல்வேறு காலகட்டங்களில் ஆட்சி செலுத்தியவராக, பிறிதொரு காலங்களில் சிங்கள ஆட்சிகளில் தலைமை நிர்வாகிகளாக இருந்தவர் தமிழர்கள் என்பதாலும்,
இலங்கையின் அண்டை நாடான இந்தியாவில் ஒரு மாநிலம் தமிழகம் என்பதாலும், இலங்கையில் தமிழர்கள் இன்னலுக்கு ஆளாகும்போது அதன் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலித்தது. இதனைக் காரணமாகக் கொண்டு இந்தியா இவ்வினப் பிரச்னையில் தலையிட வேண்டியிருந்தது.
1983-இல் இந்திய வெளியுறவு அமைச்சராக இருந்த பி.வி.நரசிம்மராவ் இலங்கை வந்தார்; பேசினார். பின்னர் அரசியல் ஆலோசகரான ஜி.பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் இலங்கையுடன் பேசினர். பேச்சுவார்த்தைகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. இலங்கையின் ஆளும் வர்க்கம் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும்போது நாளையே பிரச்னைகள் தீர்ந்துவிடும் என்பது போலத் தோற்றம் காட்டி, பின்னர் அதை நிராகரித்துவிடும். ஏமாற்றப்பட்டவர்களாக எப்போதும் தமிழர்களே இருந்தனர். வெளிச்சமும் இருட்டும் அவர்களது வாழ்வில் தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இருந்தன.
இலங்கையிலும் ஒப்பந்தங்கள் என்பது புதிதல்ல. பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஒப்பந்தம் (1957), டட்லி-செல்வநாயகம் ஒப்பந்தம் (1965) ஆகியவை ஏராளமான விளம்பர வெளிச்சங்களுடன் போடப்பட்டு பின்னர் அவை பொசுங்கிவிட்டன. ஒப்பந்தத்தில் ஈடுபடுகிற அரசாங்கங்கள் அதனை நடைமுறைக்குக் கொண்டுவராதபடி காரியமாற்றும். இதற்குப் பேச்சுகளும், வன்முறைகளும், குடியேற்றங்களும், சட்டவடிவுகளும், சட்டங்கள் இயற்றுவதும் காரணமாக அமைந்துவிடும். தமிழர்களைக் கீழ்மைப்படுத்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் காலாகாலமாகத் தொடர்ந்துகொண்டே வருகின்றன.
இந்நிலையில், இலங்கையின் இனப்பிரச்னை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களையோ, அவர்களின் பிரதிநிதிகளையோ சம்பந்தப்படுத்தாமல், அவர்களின் விருப்பங்களையும் உரிமைகளையும் கண்டுகொள்ளாமல், போடப்படுகிற ஒப்பந்தமாக (ரோஹனா குணவர்த்தனா - இண்டியன் இண்டர்வென்ஷன் இன் ஸ்ரீலங்கா - நூலில் கூறியவாறு) இந்திய-இலங்கை ஒப்பந்தம்-1987, அமைந்தது.
ஜூலை 29-ஆம் நாள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆரும் வரவேண்டும் என்று ராஜீவ் காந்தி விரும்பினார். வற்புறுத்தவும் செய்தார். ஆனால் எம்.ஜி.ஆரோ தனது உடல்நிலையைக் காரணம் காட்டித் தவிர்த்து விட்டார். ராஜீவ் காந்தியின் கட்டாயத்தின்பேரில் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது என்று முடிவாயிற்று.
இதே நேரம், கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கொதிப்பின் உச்சத்தில் இருந்தார். புத்தபிக்குகளின் கூட்டத்தைக் கூட்டி, அவர்களை உசுப்பிவிட்டார். அவர்களும் தங்களது முழு எதிர்ப்பையும் காட்டுவது என்று தீர்மானித்தார்கள். மற்ற எதிர்க்கட்சிகள் இந்தப் போக்கை உற்று கவனித்துக்கொண்டிருந்தன.
நகரெங்கும் வன்முறை தலைவிரித்தாடியது. உச்சகட்ட வன்முறை ஜூலை 27-ஆம் தேதியன்று தலைதூக்கியது. வன்முறையைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளில் 19 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் காரணமாக கொழும்பில் சில பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், நகர் முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமலானது. இதற்கிடையே, தீட்சித் பறந்து வந்து, ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான இறுதிக்கட்ட வேலைகளைப் பார்வையிட்டார்.
ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்வரை பிரபாகரன் உள்ளிட்டோர் அசோகா ஹோட்டலில் சிறைவைக்கப்பட்ட நிலையில், பிரதமர் ராஜீவ் காந்தி ஜூலை 29-ஆம் தேதி அதிகாலை கொழும்பு புறப்பட்டார்.
கொழும்பு விமானநிலையத்தில் அவருக்கு, அளிக்கப்பட்ட வரவேற்பு சம்பிரதாய ரீதியில் அமையவில்லை. குண்டு துளைக்காத காரில் அவரும் சோனியாவும் ஏறி வெளியே வந்தபோது, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தபிக்குகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். ஊரடங்கு அமலில் இருக்கும்போது, பெருமளவில் மக்கள் கூடினால், அது பெரும் வன்முறையில் முடியும் என அரசுகளும் நடவடிக்கை எடுக்கும். எனவே, இந்த எதிர்ப்பைத் தெரிவிக்க புத்தபிக்குகளைத் தயார்படுத்தி அனுப்பியிருந்தார் ஸ்ரீமாவோ. புத்தபிக்குகள் மீது நடவடிக்கை எடுத்தால் அது மதப் பிரச்னை ஆகிவிடும் என்று கருதப்பட்டு, அவர்களது ஆர்ப்பாட்டம் கலைக்கப்படவில்லை.
பிரதமர் ராஜீவ் காந்தி ஆளரவமற்ற சாலையில் பயணித்து, நிகழ்ச்சி நடைபெற இருந்த பதினேழாம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட அதிபர் மாளிகையைச் சென்றடைந்தார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சியை ஜெயவர்த்தனாவின் சொந்தக் கட்சியினரே புறக்கணித்தனர். பிரதமர் ஆர்.பிரேமதாசா, பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி, விவசாய அமைச்சர் காமினி ஜெயசூரியா, விமல கன்னங்கர முதலியோர் அங்கு தலைகாட்டவே இல்லை.
முரண்பாடுகள் நிறைந்த, பிரச்னைகளின் வடிவிலான இந்திய-இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்ட ஒப்பந்தப் பிரதிகளை பரஸ்பரம் மாற்றிக்கொண்டனர்.
99: இந்திய - இலங்கை ஒப்பந்தம்!
இந்தியக் குடியரசின் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் 1987-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் தேதி கொழும்பு நகரில் சந்தித்துக்கொண்டனர். இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நிலவிவரும் தொன்றுதொட்ட நட்புறவைப் பலப்படுத்தவும், அதனை வளர்த்து, பராமரிக்கும் உயர்மிகு முக்கியத்துவத்தை இணைத்து, இலங்கையின் இனப்பிரச்னையைத் தீர்க்கும் உடனடித் தேவைக்கு ஏற்ப, இலங்கையில் வசிக்கும் அனைத்து இன மக்களின் பாதுகாப்பு வளமை, மேம்பாடு ஆகியவற்றுக்காகவும், வன்முறையைத் தவிர்ப்பதற்காகவும். இந்த இலக்கினை நிறைவேற்றும் வகையில் கீழ்க்கண்ட ஒப்பந்தம் இந்த நாளில் கையெழுத்திடப்படுகிறது. இதன் தொடர்பாக,
1.1) இலங்கையின் ஒற்றுமை, இறையாண்மை, பிரதேச ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பராமரிப்பதில் ஆர்வம் கொண்டு,
1.2) இலங்கை பல இன, பல மொழி பேசும் மக்களை அதாவது சிங்களர், தமிழர், முஸ்லீம்கள் (மூர்ஸ்), பறங்கிகள் ஆகியோரைக் கொண்டது என்பதையும் அங்கீகரிக்கிறது.
1.3) ஒவ்வொரு இனமும் கவனமாகப் போற்றப்பட்டவேண்டிய, தனி கலாசார, மொழியை, தனித்துவத்தைக் கொண்டது; அவற்றை வளர்ப்பது அவசியம் என்பதை ஏற்று,
1.4) இலங்கைத் தமிழர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடமாக, வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இருந்து வந்திருக்கின்றன. இங்கு மற்ற இனத்தவருடன் தமிழர்கள் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதையும் அங்கீகரிக்கிறது.
1.5) இலங்கையின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை ஆகியவற்றை பலப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்து, இலங்கையின் பல இன, பல மொழி மதங்கள் கொண்ட சமூகத்தின் தன்மையையும் பாதுகாக்கும் தேவையையும் மனதில் கொண்டு அதன் அனைத்துக் குடிமக்களும் உரிமைகளுடனும், மகிழ்ச்சியோடும் வாழ கீழ்க்கண்டவாறு முடிவு செய்யப்படுகிறது.
2.1) கீழ்க்கண்டவாறு வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைந்த நிர்வாகப் பகுதியாக இணையவும் இதனை வாக்கெடுப்பு மூலம் தனியாகப் பிரிக்கவும், அனுமதிக்க இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.
2.2) மாகாணக் கவுன்சிலுக்கான தேர்தல் தேதி பத்தி 2.8-இல் குறிப்பிட்டுள்ளபடியும் நிர்வாகப் பகுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாணக் கவுன்சிலுடன் இயங்கும். இந்த ஒன்றிணைந்த நிர்வாகப் பகுதிக்கு ஓர் ஆளுநரும், ஒரு முதல்வரும், ஓர் அமைச்சரவையும் இருக்கும்.
2.3) 1988-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியோ அதற்கு முன்னரோ ஒரு பொதுமக்கள் வாக்கெடுப்பு நடைபெறும். இந்த வாக்கெடுப்பு,
அ) வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் ஒரே நிர்வாகப் பகுதியாக இணைந்து இருப்பதா? தொடர்ந்து 2.2-இல் கண்டுள்ளபடி ஆளப்படுவதா அல்லது
ஆ) கிழக்கு மாகாணம் தனி நிர்வாகப் பகுதியாக தனக்கென தனி மாகாணக் கவுன்சில், தனி ஆளுநர், தனி முதல்வர், தனி அமைச்சரவையுடன் இயங்குவதா என்பதைத் தீர்மானிக்கும். இலங்கை ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பை ஒத்தி வைக்கவும் உரிமை உண்டு.
2.4) இன வன்முறை அல்லது மற்ற காரணங்களுக்காக அல்லது வேறு காரணங்களுக்காகவும் இடம் பெயர்ந்தவர்களும் அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பில் வாக்களிக்க உரிமை உண்டு. அவர்கள் எந்த இடத்திலிருந்து வெளியேறினார்களோ அந்த இடங்களுக்குத் திரும்பத் தேவையான சூழ்நிலைகள் உருவாக்கப்படும்.
2.5) அத்தகைய பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது, இலங்கைத் தலைமை நீதிபதி தலைமையில் இலங்கை அரசால் குறிப்பிடப்பட்டு, இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒருவர், கிழக்கு மாகாணத் தமிழர்களின் பிரதிநிதிகளினால் குறிப்பிடப்பட்டு, ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஓர் உறுப்பினர், ஆகியோரைக் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும்.
2.6) பொதுமக்கள் வாக்கெடுப்பு முடிவு சாதாரண பெரும்பான்மை அடிப்படையில் அமையும்.
2.7) பொதுமக்கள் வாக்கெடுப்புக்கு முன்னதாக இலங்கை சட்டங்கள் அனுமதிக்கும் வகையில் பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படும்.
2.8) மாகாண கவுன்சிலர்களுக்கான தேர்தல் அடுத்த 3 மாதங்களுக்குள் 1987 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன்னதாக நடைபெறும். வடக்கு - கிழக்கு மாகாண தேர்தல்களின்போது இந்தியப் பார்வையாளர்கள் அழைக்கப்படுவர்.
2.9) 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வாக்கில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அவசர நிலை நீக்கப்படும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 48 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தம் அமலுக்கு வரும். போராளிகள் தங்களது ஆயுதங்களை இலங்கை அரசு குறிப்பிடும் அதிகாரிகளிடம், ஒத்துக்கொள்ளப்பட்ட நடைமுறைப்படி ஒப்படைப்பார்கள். போர் நிறுத்தம், ஆயுத ஒப்படைப்பு ஆகியவைகளின் விளைவாக இலங்கை ராணுவமும் மற்ற பாதுகாப்புப் படைகளும் 1987-ஆம் ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி நிலைப்படி தங்களது முகாம்களுக்குத் திரும்ப வேண்டும். ஆயுத ஒப்படைப்பு, இலங்கை பாதுகாப்புப் படைகள் முகாம்களுக்குத் திரும்புவது ஆகியவை போர் நிறுத்தம் ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் நடைபெறும்.
2.10) வடக்கு-கிழக்கு மாகாணங்களின் சட்ட அமல், பாதுகாப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ளது போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படும்.
2.11) எல்லா அரசியல் கைதிகளுக்கும், பயங்கரவாதச் சட்டம், மற்ற அவசரநிலைச் சட்டங்களின் கீழ் சிறையிலுள்ள, வழக்கு விசாரணையில் உள்ளவர்களுக்கும் மற்றும் போராளிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும். தேசிய வாழ்க்கை நீரோட்டத்திற்கு போராளி இளைஞர்களைக் கொண்டுவர விசேஷ முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொள்ளும். இந்த முயற்சிகளுக்கு இந்திய ஒத்துழைப்பு வழங்கும்.
2.12) மேலே கண்ட ஷரத்துகள் அனைத்தையும் இலங்கை அரசு ஏற்று அமல் செய்யும். மற்றவர்களும் அவ்வாறே செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2.13) இந்தத் தீர்மானங்களுக்கான சட்டவரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டதும் சம்பந்தப்பட்ட முன்மொழிவுகளை இலங்கை அரசு உடனடியாக அமல் செய்யும்.
2.14) இந்தத் தீர்மானங்களுக்கு இந்திய அரசு உத்தரவாதம் அளிக்கும். இந்தத் திட்டங்களை அமல்படுத்துவதில் ஒத்துழைக்கும்.
2.15) இந்தத் திட்டங்கள் 4-5-1986-ஆம் தேதிக்கும் 19-12-1986-ஆம் தேதிக்கும் இடைக்காலத்தில் விவாதிக்கப்பட்ட தீர்வாலோசனைகளை ஏற்பது என்னும் நிபந்தனையையே தீர்வாலோசனைகள் கொண்டுள்ளன. மேற்கண்ட காலத்தில் இறுதியாக்கப்படாத விவரங்கள் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் தேதியிலிருந்து ஆறு வார காலத்திற்குள் இந்திய - இலங்கை அரசுகள் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காணவேண்டும். மேலும் இலங்கை அரசோடு, இந்திய அரசு நேரடியாக இந்தத் திட்டங்களை அமல் செய்ய ஒத்துழைப்பதையும் நிபந்தனைகளாகக் கொண்டுள்ளன.
2.16) மேலும் இந்த ஒப்பந்தத் திட்டங்களை இலங்கையில் செயல்படும் எந்த ஒரு போராளிகளின் குழுவாவது ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் இந்தத் திட்டங்கள் நிபந்தனைகளாகக் கொண்டுள்ளன. இதன்படி,
அ) இலங்கை ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு விரோதமான நடவடிக்கைகளுக்கு இந்தியப் பகுதி பயன்படுத்தப்படாமல் பார்த்துக்கொள்ள இந்தியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆ) தமிழ்ப் போராளிகள் நடவடிக்கைகளைத் தடுக்க இலங்கைக் கடற்படையுடன் இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை ஒத்துழைப்பு தரும்.
இ) இந்தத் திட்டங்களை அமல் செய்ய ராணுவ உதவி வழங்கும்படி இலங்கை அரசு கோரினால், அந்த உதவியை இந்தியா வழங்கும்.
ஈ) இலங்கையில் உள்ள இந்தியக் குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு துரிதப்படுத்தும். அதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள தமிழ் அகதிகள் இலங்கை திரும்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உ) வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும் அனைத்து இனத்தவரின் உயிருக்கும் உடலுக்கும் ஊறு விளை ஏற்படாமல் பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய-இலங்கை அரசுகள் ஒத்துழைக்கும்.
2.17) இந்த ஒப்பந்தத்தில் கண்டுள்ள வடக்கு - கிழக்கு மாகாணத் தேர்தல்களில் அனைத்து இனத்தவரும் சுதந்திரமாக, முழுமையாக, நேர்மையாகப் பங்கு பெறுவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும். 2.18) இலங்கையின் அரசு அலுவல் மொழி சிங்களமாக இருக்கும். தமிழ் மற்றும் ஆங்கிலம் கூட அலுவல் மொழியாக இருக்கும்.
3. இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதும் அமலுக்கு வரும். அதிகாரப்பூர்வமான அசல் நகல் உள்ளிட்ட இரண்டு பிரதானப் பகுதிகளையும் 1987-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ஆம் நாள் அன்று இலங்கை கொழும்புவில் நம் இருவரின் சாட்சிப்படி இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம்.
ஒப்பந்தத்தின் முடிவில் இந்தியக் குடியரசின் பிரதமர் ராஜீவ் காந்தியும், இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் அதிபர் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் கையெழுத்திட்டனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.