Saturday, 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (83-90)


83: ராஜீவுக்கு நேர்ந்த நெருக்கடி!
உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, நெல்லியடி பகுதிகள் ராணுவமயமானது. "48 மணிநேரத்தில் யாழ்ப்பாணம் ராணுவம் வசமாகும்' என்று பிபிசி வானொலியின் செய்தியில் நிருபர் மார்க்துலி தெரிவித்தார்.

இச்சூழல் குறித்து விடுதலைப் புலிகள் 1987-இல் வெளியிட்ட "இந்தியாவும் ஈழத்தமிழர் பிரச்னையும்' என்ற வெளியீட்டில் கூறியிருப்பதாவது:
"ஜனவரியில் சிங்கள இனவாத அரசு யாழ்குடா நாட்டில் பொருளாதார முற்றுகையை ஏற்படுத்தியதுடன் வடக்கிலும் கிழக்கிலும் பெரிய அளவிலான ராணுவப் படையெடுப்பையும் மேற்கொண்டது. வடக்கில் மட்டும் இருபதினாயிரம் துருப்புகள் வரை யுத்தத்தில் குதித்தன. எமது கொரில்லா அணிகள் பல்வேறு அரங்குகளில் சிங்கள ஆயுதப்படையினரை எதிர்கொண்டு வீராவேசத்துடன் போர்புரிந்து வந்தன.
ஆயுதங்கள், வெடிமருந்துகள் பற்றாக்குறையுடன் நாம் எதிரியைச் சமாளித்துக் கொண்டிருந்தோம். எதிரியின் ஆகாயக் குண்டு வீச்சுகள், பீரங்கி மோட்டார் செல் தாக்குதல்களிலும் ராணுவ வெறியாட்டத்திலும் பல நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மடிந்தவண்ணம் இருந்தனர். இந்த இக்கட்டான யுத்தச் சூழ்நிலையில் நாம் இந்திய அரசிடம் ஆயுத உதவியை நாடினோம்.
எமது மக்கள் இனப்படுகொலைக்கு இலக்காகி வருகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, எமது மக்களைப் பாதுகாப்பதற்கு உதவி செய்யுமாறு நாம் பாரதத்திடம் பல தடவைகள் கோரிக்கைகளை விடுத்தோம். எமது கோரிக்கைகளைப் பரிசீலனை செய்வதாகக் கூறிக்கொண்ட பாரதம் மெüனமாக இருந்தது.
நாம் கோரிய ஆயுதப்படையின் விவரங்கள், எமது வெடிமருந்துப் பற்றாக்குறைகள் போன்ற முக்கிய ராணுவத் தகவல்களைச் சேகரித்து "ரா' அதிகாரி உண்ணிக்கிருஷ்ணன் இலங்கை அரசிற்குச் சமர்ப்பித்தார். பின்னர் உண்ணிக்கிருஷ்ணன் சி.ஐ.ஏ. ஏஜெண்ட் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தில்லி சிறையில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் சிங்கள ராணுவம் தனது போர் உபாயங்களை வகுத்து, ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தீவிரப்படுத்தியது' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியா எந்த வகையிலும் இனி போராளிகளுக்கு உதவாது என்ற நம்பிக்கையில் இருந்த சிங்கள அரசு, மக்கள்மீது கணக்கில்லாக் கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இதனால் மக்கள் உண்ண உணவும், உயிருக்குப் பாதுகாப்புமின்றி துன்பத்துக்கு ஆளாகி மேலும் அகதிகளானார்கள்.
தமிழ்நாட்டில் அனைத்துக்கட்சியினரும் சேர்ந்து, இலங்கையின் தற்போதைய கொடுமைகளைக் கண்டித்தும், யாழ்ப்பாணம் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்குமாறும், மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளவாறு பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்டவற்றை "ஒரு தடை ஆயுதமாகப்' பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்திக் கூறியும் மாபெரும் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரதத்தில் இலங்கைத் தமிழர் கட்சிகளும், போராளி இயக்கங்களும் கலந்துகொண்டன.
ஐ.நா. மன்றத்தில் இப்பிரச்னை எழுப்பப்பட்டபோது, இது ஒரு பிரச்னை என்று பேசப்பட்டதேயொழிய, பொருளாதாரத் தடையை நீக்குவதற்காக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதைப் பலரும் கண்டித்தனர்.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் யாழ்ப்பாணம் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும் என்றும், தகவல் தொடர்பை உடனே வழங்க வேண்டும் என்றும், "டிசம்பர் 19-ஆம் தேதிய முன்மொழிவுப்படி' உடனே பேச்சுவார்த்தையைத் தொடங்க வகைசெய்ய வேண்டும் என்றும் செய்தி அனுப்பினார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங் பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பேசுகையில் "எரிபொருள் தடையை நீக்கும்படி' வேண்டுகோள் விடுத்தார்.
இவ்வளவு கோரிக்கைகளுக்கும் எந்தப் பலனும் இல்லை; ஜெயவர்த்தனா கேளாக்காதினராக, தான் விரும்பியதை நிறைவேற்றிக்கொண்டிருந்தார்.
கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தில் வெடித்த குண்டு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியது. அப்போது ஜெயவர்த்தனா, "அரசோ, போராளிகளோ யாரோ ஒருவர் வெற்றி பெறும்வரை யுத்தம் தொடரும்' என்று பிரகடனம் செய்தார்.
அவரின் அறிவிப்பை உலக நாடுகள் பலவும் கண்டித்தன. தனது சொந்த நாட்டில் தனது சொந்தப் பிரஜைகளின் மீதே தொடுக்கின்ற யுத்தம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் விமரிசிக்கப்பட்டது.
ஐந்து மாதத் தடை காரணமாக யாழ் பகுதிக்கு எந்த மருத்துவப் பொருள்களும் செல்லவில்லை. உயிர்காக்கும் ஆக்ஸிஜன்கூடக் கிடைக்கவில்லை. இதனாலும் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் மக்கள் குண்டுகளுக்கு அஞ்சி கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலைக்கும் சிலர் கொழும்புக்கும் சென்றனர்.
இதில் கொழும்பு தவிர மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் ராணுவம் குண்டுவீசித் தாக்கியது. "ஆபரேஷன் லிபரேஷன்' என்ற இத்தாக்குதலில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் கோயில்கள்கூடத் தப்பவில்லை. எங்கு சென்றால் குண்டுவீச்சிலிருந்து காப்பாற்றப்படுவோம் என்று நம்பி மக்கள் கூட்டம் சென்றதோ அங்கே எல்லாம் குண்டுவீச்சு நடைபெற்றது.
சிங்களக் கட்சிகள் பலவும் மெüனமாக இருக்க, ஸ்ரீலங்கா மகாஜனக்கட்சி முதன் முதலில் எதிர்ப்புக்குரல் கொடுத்தது. இதன் தலைவர் விஜய குமாரணதுங்கா இந்தியா சென்று தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயன்றார். இதனைத் தொடர்ந்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். தொண்டமான் "நடுவர் பாத்திரம் என்ற நிலையிலிருந்து இந்தியா விடுபட்டு, நீதி வழங்கும் தீர்வொன்றை உடனே அளித்து, தமிழ்மக்களைக் காக்கவேண்டும்' என்று அறிக்கை விட்டார்.
ஈழமே தீர்வென்று கூறிவந்த உலகத் தமிழ் இளைஞர் மன்றத் தலைவர் இரா. ஜனார்த்தனம், இலங்கை மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், லோக்தள் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரிவுத் தலைவர், இலங்கையின் மீது ராணுவ வளையம் அமைக்கவேண்டும் என்றும் திராவிடக் கழகச் செயலாளர் கி.வீரமணியும் தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் தலைவர் பழ.நெடுமாறனும் இந்திய அரசாங்கம் தேவையான, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
இலங்கைப் படுகொலைகள் குறித்துக் கண்டனம் தெரிவிக்கும் கூட்டம் ஒன்றில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்,"தனது பிரஜைகளைக் கொன்றுகுவிக்கும் நாட்டுக்கு உதவிசெய்வது ஐ.நா. சபையின் மனித உரிமை சாசனத்தை அவமதிக்கும் செயலாகும். இலங்கைக்கு உதவி புரியும் நாடுகள் தங்களது உதவிகளை உடனடியாக நிறுத்தவேண்டும்!' என்றும் வலியுறுத்தினார்.
இந்தியாவுக்கு ஆயுதங்கள் வாங்கியதில் பெரும் தவறுகள் நேர்ந்துள்ளதாக தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகள் பெரும் யுத்தம் ஒன்றை ராஜீவ் காந்தியின் பேரில் நடத்தி வந்தன. இதன் பாதிப்பில் ராஜீவ் காந்தி உழன்று கொண்டிருக்கையில் இலங்கை அரசின் "ஆபரேஷன் லிபரேஷன்' என்கிற யாழ்ப்பாணம் மீட்பு நடவடிக்கை ஏற்படுத்திய விளைவுகளும் சேர்ந்து, அவருக்கும் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியது.
84 : ஆபரேஷன் பூமாலை!
இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம், அரசியல் கட்சித் தலைவரின் நடவடிக்கைகள், தமிழக அரசின் நெருக்குதல் ஆகிய எல்லாவற்றுக்கும் பதிலளிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை ராஜீவ் காந்தி அரசு மேற்கொண்டது.
ஏக காலத்தில் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதையொட்டி, அந்தப் பகுதியில் இந்திய கடற்படையின் ரோந்துப் படகுகள் சுற்றிவர ஆரம்பித்தன.
அதுமட்டுமின்றி, ராமேஸ்வரத்தின் பயன்பாடற்ற விமானதளம் மீண்டும் செப்பனிடப்பட்டு, அங்கு ஹெலிகாப்டர்கள் வந்து செல்ல ஆரம்பித்தன. இது குறித்து இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் கே.சி.பந்த் கூறுகையில், ""அண்டை நாடுகள் பிறநாடுகளில் பெற்றுள்ள அதிநவீன உளவுத் தகவல்கள், அந்நாடுகள் பெற்றுள்ள நவீன ஆயுதங்கள் -தளவாடங்களுக்கேற்ப இந்தியாவும் தனது எல்லைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது'' என்று குறிப்பிட்டார்.
உடனே ஜெயவர்த்தனா, யாழ்ப்பாண "ஆபரேஷன் லிபரேஷன்' நடவடிக்கையினால் பெருமளவில் குண்டுகள் வீசப்படவில்லை என்றும், அங்கு மக்கள் அதிகம் பாதிக்கவில்லை என்றும், இது உண்மை என்பதை நிரூபிக்க வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், தூதர்களை விமானத்தில் ஏற்றி, அந்தப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று காட்டுவதாகவும் தெரிவித்தார்.
இதற்கு உடன்பட்ட பத்திரிகையாளர்கள் விமானத்தில் ஏறி யாழ்ப்பாணப் பகுதியைப் பார்வையிடச் சென்றார்கள். அவர்கள் பார்வைக்கு படும்படியான தூரத்தில் விமானம் பறக்கவில்லை. விமானிகளுக்கு மூவாயிரம் அடிக்கு மேலாக பறக்க வேண்டும் என்றுதான் உத்தரவிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு இலவச விமானப் பயணம் பொழுதுபோக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சி அமைந்தது.
இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுத் தூதரும் இந்தப் பயண ஏற்பாட்டில் பங்குபெற விரும்பவில்லை.
இந்தச் சமயத்தில் அமைதியை விரும்பும் சிங்களக்குழு ஒன்றின் தமிழ்நாட்டு வருகையையொட்டி, கூட்டம் ஒன்றுக்கு, சென்னை கிறிஸ்தவ மகளிர் அணியின் சென்னை அலுவலகத்தில் அதன் செயலாளர் சாரா சந்தா எற்பாடு செய்திருந்தார்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு சந்திரஹாசன், ஈழவேந்தன், மறவன்புலவு க.சச்சிதானந்தன் ஆகிய மூவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சாரா சந்தாவும் மறவன்புலவு க.சச்சிதானந்தமும் பழம்பெரும் அரசியல்வாதியும் மாநில-மத்திய அமைச்சரவையில் பல்வேறு இலாகாக்களின் அமைச்சராகவும் ஆளுநராகவும் இருந்த சி.சுப்ரமணியத்தைச் சந்தித்தனர். அப்போது, அவருடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ரெசிடண்ட் எடிட்டராக பொறுப்பிலிருந்த ராஜ்மோகன் காந்தியும் உடனிருந்தார். இலங்கையின் பொருளாதாரத் தடையை நீக்க வகை செய்ய சாராவும் சச்சிதானந்தமும் வலியுறுத்தினர்.
அப்போது சி.சுப்பிரமணியம், ""நானும் ராஜ்மோகன் காந்தியும் இதுபற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்'' என்றார். அப்போது சச்சிதானந்தன், ""நாங்கள் உணவு-மருந்து பொருள்களைத் திரட்டித் தருகிறோம். நீங்கள் இந்திய கப்பற்படைப் பாதுகாப்புடன், காங்கேசன்துறை துறைமுகம் வரை கொண்டுசெல்ல கப்பல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தால், அது பல பிரச்னையைத் தீர்க்கும்'' என்றார்.
உடனே, சி.சுப்பிரமணியம், ராஜீவ் காந்தியைப் போனில் தொடர்புகொண்டு, ""யாழ்ப்பாணத்தில் பொருளாதாரத் தடையை நீக்க வழிகாண வேண்டும். பல வழிகள் அதற்கு இருக்கின்றன. என்னைப் பார்க்க வந்துள்ளவர்கள், உணவுப்பொருள்களை ஏற்றிக்கொண்டு காங்கேசன்துறை செல்ல ஒரு கப்பலும் அதற்குப் பாதுகாப்பும் கேட்கிறார்கள்'' என்றார்.
தொடர்ந்து இருநாள்கள் கழித்து சாரா சந்தாவுக்கு ஏதேனும் நல்லது நடக்க, வாய்ப்பிருக்கிறதா பார்ப்போம் என்று சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
எனவே, இந்திய அரசின் அனுசரணையில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நடவடிக்கை என்ற பெயரில் 38 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்களுடன் 19 மீன்பிடிப் படகுகள் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கையை நோக்கிப் புறப்பட்டனர். இந்த மீன்பிடிப் படகுகள் அனைத்தும் இலங்கையின் வட எல்லை கடற்பிராந்தியத்திலேயே, கடற்படையால் மடக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன.
இந்த நடவடிக்கையால் கோபமடைந்த இந்திய அரசு, அடுத்த கட்ட நடவடிக்கையாக பெங்களூர் விமான தளத்திலிருந்து ஐந்து விமானங்களில் உணவுப் பொட்டலங்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு மிராஜ் -2000 என்ற நான்கு போர் விமானங்களில் பாதுகாப்புடன் இலங்கையின் வான்வெளியில் நுழைந்து, உணவுப் பொட்டலங்கள் பாராசூட் மூலம் யாழ்ப்பாணப் பகுதியில் இறக்கியது. கூடவே இந்திய மற்றும் வெளிநாட்டு நிருபர்கள் 35 பேரும் இவ்விமானத்தில் பயணம் செய்தனர். 1987 ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற இந்த நடவடிக்கை "ஆபரேஷன் பூமாலை' என்று பெயரிடப்பட்டிருந்தது.
"ஆபரேஷன் லிபரேஷன்' செய்கையால் உரம் பெற்றிருந்த ஜெயவர்த்தனா, "ஆபரேஷன் பூமாலை' நடவடிக்கையால் கலங்கிப் போனார். இந்தியாவின் இந்த மனிதாபிமான நடவடிக்கையைப் பாராட்டி விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்தார்.
இதன்மூலம் தெற்காசியாவில் இந்தியாவின் மேலாட்சியையும் தான் ஒரு வல்லரசு என்பதையும் இந்தியா நிரூபித்ததாக இலங்கைப் பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்தன.
""இலங்கை வான் எல்லையில் இந்தியா அத்துமீறி நுழைந்தது. முற்று முழுதாக இது அத்துமீறல் என்றும், இன்று உணவுப் பொட்டலம், நாளை குண்டு வீச்சா'' என்று கூக்குரலிட்டன.
ஜெயவர்த்தனாவும் தான் கருத்து சொல்ல விரும்பாமல், தனக்கு ஆதரவுப் பத்திரிகைகள், புத்தபிக்குகளை விட்டு பெருமளவில் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மீண்டும் முடுக்கிவிட்டார்.
அடுத்த நாள் இந்தியக் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில்சிங் (இந்தியா செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர்), "இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு பக்கமே இந்தியா இருக்கிறது' என்றும் "அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடும் இந்தியாவுக்கு இருக்கிறது' என்றும் தெரிவித்தார்.
இலங்கை அதிகாரிகள் ஐ.நா. சபையின் பாதுகாப்புச் சபையில் உள்ள ஐந்து உறுப்பினர் நாடுகளின் ஒன்றைக்கூட தனக்குச் சாதகமாக்கி, இப்பிரச்னையை உலக அளவில் எழுப்ப முடியவில்லை.
ஐரோப்பிய நாடுகளை இலங்கை அணுகியபோது, ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரக் குழுமம் (உன்ழ்ர்ல்ங்ஹய் உஸ்ரீர்ய்ர்ம்ண்ஸ்ரீ இர்ம்ம்ன்ய்ண்ற்ஹ் உஉஇ) இனப் பிரச்சினையை சுமுகமான முறையில் பேசித் தீர்க்க வழிகாணுமாறு அறிவுறுத்தியது. ஜெயவர்த்தனா இதற்கு மேலும் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு ஆளானார்.
85: நெல்லியடித் தாக்குதல்!
காரணம், இந்தியா எந்த நிலையிலாவது இலங்கை மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்ற தனது ஐயப்பாட்டை போக்கிக் கொள்வதற்கு பிப்ரவரியில் கொழும்பு தொழிலதிபர் சி.டி.ஏ. ஷாப்டர், பத்திரிகையாளர் என்.ராம் மற்றும் என்.கே.பி. சால்வே ஆகியோருடன் அமைச்சர் காமினி திஸ்ஸநாயக்கா ஆலோசனை நடத்தியிருந்தார்.
என்.கே.பி. சால்வே அப்போது இந்திய கிரிக்கெட்டில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அதுபோலவே இலங்கை அமைச்சர் காமினி திஸ்ஸநாயக்கா அந்நாட்டின் கிரிக்கெட் போர்டு தலைவராக இருந்ததால் சால்வேயை அணுகுவது சுலபமாக இருந்தது. ஒரு பயம் காரணமாக இந்த ஆலோசனை நடைபெற்றிருக்கையில் இந்தியாவின் மனிதாபிமான உதவியை ஏற்பது ராஜதந்திரமானது என்ற முடிவுக்கு வந்தார் ஜெயவர்த்தனா. (ஐய்க்ண்ஹள் நழ்ண் கஹய்ந்ஹ ஊண்ஹள்ஸ்ரீர் க்ஷஹ் தஹத்ங்ள்ட் ஓஹக்ண்ஹய் -ல்ஹஞ்ங் 10-11)
உணவுப் பொருள்கள் மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்க, போர் நிறுத்தம் செய்வது அவசியமாயிற்று. இந்த உணவுப் பொருட்களை வழங்குவதில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரை அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியது. ஜெயவர்த்தனா வேறு வழியின்றி அவர்களுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினரும் இணைந்து செயல்படுவார்கள் என்றார்.
"ஆபரேஷன் லிபரேஷன்' நடவடிக்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகள், சேதங்கள் முதலியவற்றை விடுதலைப்புலிகள் விவரித்தவாறு அகில இந்திய வானொலி அப்படியே ஒலிபரப்பியது. இதன்படி இந்தப் போர் நடவடிக்கையால் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 2000 பேர் என்று அறிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு, "ஸ்ரீவத்ஸவா' என்கிற இந்தியக் கப்பல் ஜூன் 25-ஆம் தேதி காங்கேசன் துறைமுகத்தில் வந்து நின்றது. அந்தப் பொருள்களை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லுகையில், வாகன அணிவகுப்பின் முன்னதாக இந்தியத் தூதரக அதிகாரி ஹர்தீப் பூரியும், காப்டன் குப்தாவும், இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரும் வந்தனர். அப்போது சாலையின் இருபுறமும் இலங்கைத் தமிழர்கள் வரிசையாக நின்று வரவேற்றனர். அதேநேரம் அவர்கள் கையில், "எங்களுக்கு ஆயுதம் வேண்டும்' என்றும், "இந்தியா எங்களைப் பாதுகாக்க வேண்டும்' என்றும் இருவகையானப் பதாகைகள் இருந்தன.
இந்நிலையில், விடுதலைப்புலிகள் இயக்கம் நெல்லியடி மத்திய கல்லூரியில் முகாமிட்டிருந்த ராணுவ முகாம் மீது தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை விடுதலைப்புலிகள் இயக்கத்தின், புதிய தற்கொலைப் படையான கரும்புலிகள் உறுப்பினர் மில்லர் நடத்தினார். அவர் வெடிகுண்டுகள் நிரம்பிய வேனை, அப்பாடசாலையின் நுழைவு வாயில் வழியாக ஓட்டிக்கொண்டு முகப்புக் கட்டடத்துக்குள் புகுந்தார்.
இந்தத் தாக்குதலை அடுத்து ராணுவம் குண்டுகளை வீசியது. மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடினர். பலர் கொல்லப்பட்டனர். இப்படியொரு தாக்குதல் நடக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கவில்லை. நிவாரணப் பொருள்களை விநியோகித்த இந்திய அதிகாரிகளும், செஞ்சிலுவைச் சங்கத்தினரும் வடமராச்சியில் அகப்பட்டுக் கொண்டனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் படைத் தாக்குதல் நெல்லியடித் தாக்குதல்தான். இதில் பலியான முதல் போராளி மில்லர். பின்னாளில் இந்தப் பிரிவு மில்லர் பிரிவு என்றே அழைக்கப்பட்டது.
86: பிரபாகரன் போராளியானது ஏன்?
ஈழத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிக்குழுக்கள் ஆயுதமேந்தி, ஈழத்தை அடைவதற்காகப் போராடினர் என்பதும், அதில் தமிழீழ விடுதலைப் புலிகள், (LTTE) தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம், (PLOTE) தமிழீழ விடுதலை இயக்கம், (TELO) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, (EPRLF) ஈழப்புரட்சிகர இயக்கத்தினர் (EROS) என ஐந்து அமைப்புகள் முன்னணியில் இருந்தனவென்பதும், கொள்கை, கோட்பாடுகள் குறித்தும், இவ்வியக்கங்கள் அரசின் மீது தொடுத்தத் தாக்குதல் குறித்தும் அவர்களது வெளியீடுகள் மூலம் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றன என்றும் முந்தைய பல பகுதிகளில் பார்த்தோம்.
இவ்வியக்கங்களின் தோற்றுவாய் என்பது தமிழ் மாணவர் பேரவை, பின்னர் தமிழ் இளைஞர் பேரவை ஆகியன. இக்குழுக்களில் 30 ஆண்டுகளாக களத்தில் நின்று போராடிய, பலம் பொருந்திய அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்தான் என்ற நிலையில், பெங்களூரில் நடைபெற்ற தெற்காசிய மாநாட்டின்போதும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் ஒரு முடிவுக்கு வர இவ்வியக்கமே நெருக்குதலுக்கு ஆள்பட்டது என்கிற அளவிலும் அவ்வியக்கம் குறித்து இங்கே விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.
இலங்கையின் வடக்கு மாநிலத்தின் பருத்தித் துறைப் பகுதியில் வல்வெட்டித்துறை திருவேங்கடம் வேலுப்பிள்ளை - பார்வதி தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். இரு ஆண்கள்; இரு பெண்கள். இதில் பிரபாகரன் கடைக்குட்டி ஆவார். மனோகரன் மூத்தவர், இரு சகோதரிகள் ஜெகதீஸ்வரி, விநோதினி. தந்தை வேலுப்பிள்ளை அரசு காணி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
பிரபாகரன் பத்தாம் வகுப்பு வரை படித்தார். சிறு வயது முதலே வெடி மருந்து, வெங்காய வெடி செய்வதில் நாட்டம் கொண்டிருந்தார். கப்பல் பணிக்கு இவரது நண்பர்கள் மனு போட்டு வேலையில் சேர்ந்திருந்தார்கள். அவர்களைப் போன்று கப்பல் பணி ஊழியராகச் சேர ஆசைப்பட்டது -வெடிபொருள்கள், துப்பாக்கி வாங்கலாம் என்ற ஆசையில்தான். ஆனால் தந்தை அனுமதிக்கவில்லை.
இலங்கையில் தமிழ்த் தலைவர்களின் ஜனநாயக வழியிலான போராட்டங்கள் அசட்டை செய்யப்பட்டன. இலங்கையின் ஆட்சிப் பொறுப்பில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று ஒதுக்கியே வைத்திருந்தனர்.
இடதுசாரிகளோ, பிரச்னைகளுக்கு வன்முறை மூலமே தீர்வுகாண வேண்டும் என்பதைச் சொன்னார்கள். அதைப் பலமுறையில் செய்தும் காட்டினார்கள், சீனச் சார்பு கம்யூனிஸ்ட்டுகள். அவர்களே தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வன்முறையை அறிமுகம் செய்தவர்களும் ஆவர் (புஷ்பராஜா பக். 44).
இவர்களும் சிங்கள பேரினவாதத்துக்கு அடிமையாகி, முதலாளித்துவக் கட்சிகள் என்று யாரை விமரிசனம் செய்தார்களோ அவர்களுடனே கூட்டு சேர்ந்து, மற்றவர்களைக் காட்டிலும் தமிழர்களுக்கு அதிக துரோகம் செய்தார்கள். எனவே, சிங்கள அரசின் அடக்குமுறைகளைக் கண்டு கொதித்தெழுந்த தமிழ் மாணவர்கள் 1970-களில் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் தோற்றுவித்தனர் என்பதை முன்பே பார்த்தோம்.
சிங்கள அரசின் மீது கோபம் கொண்டிருந்த இளைஞர்கள் மாணவர் பேரவையை நாடிச் சென்று இணைந்து கொண்டனர்.அதே வகையைப் பின்பற்றி சத்தியசீலன் தொடங்கிய தமிழ் மாணவர் பேரவையில் (நவம்பர் 1970) பிரபாகரனும் இணைந்து கொண்டார்.
இப்பேரவையில் தீவிரவாதக் குழு ஒன்றும் இருந்தது. அக் குழுவில் தங்கதுரை, சின்ன ஜோதி போன்றோர் இருந்தார்கள். அவர்கள் பிரபாகரனைக் காட்டிலும் வயதில் பெரியவர்கள். தங்கதுரையும் பிரபாகரனும் ஒரே ஊரானதால் இருவருக்கிடையே நெருக்கம் ஏற்பட்டது. பிரபாகரனுக்குத் துப்பாக்கிச் சுடவும், தொடர்ந்து கைக்குண்டுகள் செய்யவும் பயிற்சி அளித்தார்கள். அவர்களாக சொல்லிக் கொடுத்தது பாதி என்றால், இவராக அறிந்து கொண்டதே அதிகம்.
இந்த நேரத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவர் "தரப்படுத்துதல்' என்கிற சட்டத்தைக் கொண்டுவந்து மாணவர்களை கோபத்தின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.
இந்தத் தரப்படுத்துதல் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய, கல்வி அமைச்சரும் தமிழருமான பதியுத்தீன் முகமதுவையே அவர் பயன்படுத்தினார். நாடாளுமன்றத்தில் மசோதாவைத் தாக்கல் செய்யும்போது பதியுத்தீன் முகமது, "மருத்துவம் பொறியியல் துறையில் மாணவர்கள் பயிலும்போது, தமிழ் மாணவர்களே அதிக எண்ணிக்கையில் இடம்பிடிக்கின்றனர். சிங்கள மாணவர்கள் அவர்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். இதற்கு - தமிழ் மாணவர்களுக்கு, தமிழ் ஆசிரியர்கள் அதிக மதிப்பெண் அளிப்பதே காரணம்' என்று உண்மைக்கு மாறான தகவல் ஒன்றை கூறி அவையில் பதிவு செய்தார்.
இதன் முதற்கட்டமாக செய்முறைத் தேர்வுகள் ரத்தானது. இதனால் கோபமுற்ற மாணவர்கள் தமிழ்த் தலைவர்களை நெருக்கினர். தமிழ்த் தலைவர்கள் ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவைச் சந்தித்து முறையிட்டபோது, "நீங்கள் கல்வி அமைச்சரிடம் முறையிட வேண்டிய விஷயம்' என்றார். கல்வி அமைச்சரான பதியுத்தீன் முகமது, "இது அமைச்சரவை முடிவு; இதில் நான் வெறும் கருவி மட்டுமே; எனக்கு பணிக்கப்பட்டதைச் செய்தேன்; இதில் மாற்றம் செய்யும் அதிகாரம் எதுவும் எனக்கு இல்லை' என்றார்.
இவையெல்லாம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக வந்ததும், மாணவர் பேரவையினர் இதற்குத் தக்க எதிர்ப்பைக் காட்ட விழைந்தனர். அரசுப் பேருந்து ஒன்றை கொளுத்துவது என்று முடிவானது. இதில் பங்கு பெறப் பலரும் போட்டியிட்டனர். கிட்டத்தட்ட இருபது பேர். அதில் நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டனர். அதில் பிரபாகரனும் ஒருவர். மற்றவர்களைவிடப் பிரபாகரன் வயதில் சிறியவர் என்றாலும், அப்படியொருவர் தேவை என்று அவரைத் தேர்வு செய்தார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நால்வரில் மூவர் குறிப்பிட்ட நேரம் நெருங்க நெருங்க பயந்து ஓடிவிட்டனர். நான்காவது நபரான பிரபாகரன் எப்படியும் பேருந்தைக் கொளுத்தியே தீர்வது என்று, அன்று இரவு பணி முடிந்து, பணிமனையில் வண்டியை விட்டுவிட்டுப் போகும் வரைக் காத்திருந்து, பேருந்தை எண்ணெய் ஊற்றி கொளுத்தினார். பேரவையினர் பிரபாகரனின் வீரச்செயலைப் பாராட்டி, அணைத்துக் கொண்டனர்.
சுதந்திர ஈழம் என்பது அவரது தாகம் ஆயிற்று. அநீதியை எதிர்த்துப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சாக்ரட்டீஸ் போன்றோரின் வாழ்க்கை அவருக்குப் பிடித்தது.
"இதற்கெல்லாம் காரணம் 1958-இல் நடைபெற்ற பயங்கரப் படுகொலைகள்தான். இதன் உச்சம் தெற்கே பாணந்துறை சிவன் கோயிலில் உறங்கிக்கொண்டிருந்த பூசாரியை எழுப்பி, அவர்மீது எண்ணெய் ஊற்றி சிங்களவர்கள் எரித்துக் கொன்ற சம்பவம். வடக்கு மாநிலமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தது. இதே கலவரத்தில் சின்னஞ்சிறு சிசுவை, கொதிக்கும் தாரில் போட்டுக் கொன்ற சம்பவம் இளைஞர்களை உசுப்பேற்றியது. அப்பாவிகளை சிங்களவர்கள் கொல்கிறார்கள். நாங்கள் ஏன் இவர்களைத் திருப்பித் தாக்கக்கூடாது என்ற எண்ணம் இளைஞர்களாகிய எங்களுக்கு ஏற்பட்டது. கர்ணன், வீமன், விவேகானந்தர் ஆகியோரை எங்களுக்குப் பிடித்தது. "இளைஞர் அணி' ஒன்றை உருவாக்கினோம். எங்களது வரலாற்றுப் பின்னணியே எங்களை ஆயுதம் தரிக்கச் சொல்லிற்று. அப்போது எனக்கு வயது பதினாலுதான்' என்று ஒரு பேட்டியில் சிறுவயதைப் பற்றி பிரபாகரன் குறிப்பிட்டிருக்கிறார்.
பின்னர் ஒரு நாள் அதிகாலை பிரபாகரனைத் தேடி போலீஸ் வந்தது. கதவைத் திறந்தால் பெருமளவில் போலீஸ். வீட்டைச் சோதனையிட்டும் பிரபாகரன் கிடைக்கவில்லை. அப்போதுதான் பெற்றோருக்கு பிரபாகரனுக்குத் தீவிரவாத நண்பர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது.
பிரபாகரன் வீட்டுக்கு வருவதை நிறுத்திக்கொண்டார். ஆனாலும் பிரபாகரன் வீட்டைச் சோதனையிட போலீசார் அடிக்கடி வந்தனர். பிரபாகரன் என நினைத்து அவரது அண்ணன் மனோகரனை அழைத்துச் சென்ற சம்பவமும் நடந்தது. நீண்டநாள்கள் பிரபாகரன் வீட்டுக்கு வராததால் கவலையுற்ற தந்தை வேலுப்பிள்ளை, பிரபாகரன் தங்கியிருந்த தீவிரவாதக் குழுவினரைக் கண்டுபிடித்து அவரை அழைத்து வந்தார். போலீஸ் நடவடிக்கை தொடரவும் பிரபாகரன் அங்கிருந்து கிளம்பினார்.
மாணவர் பேரவையின் தீவிரவாத செயல்களை ஒடுக்க உடனடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வலைவீச்சில் பேரவைத் தலைவரான சத்தியசீலன் சிக்கினார். கடும் சித்திரவதைகளுக்கு ஆளான அவரைத் தொடர்ந்து ஸ்ரீ சபாரத்தினம் கைதானார். பிரபாகரனைத் தேடுவதில் போலீஸôர் தீவிரமாக இருந்தனர்.
86: முதலாவது கொரில்லாத் தாக்குதல்!
தங்கதுரை, குட்டிமணி, சின்னஜோதி உள்ளிட்டவர்களுடன் பிரபாகரனும் இந்தியா தப்பி வந்தார். ஆரம்பத்தில் பிரபாகரன் வேதாரண்யத்தில் தங்கினார். யாருடனும் அதிகம் பழக்கமில்லை. செலவுக்குக்கூட பணம் இல்லை. பின்னர் சென்னைக்கு வந்து கோடம்பாக்கம் பகுதியில் தங்கியிருந்த தங்கதுரை உள்ளிட்டோருடன் தங்கினார். அப்போது ஜோதி இந்தக் குழுவிலிருந்து விலகிவிட்டார்.
பிரபாகரனுக்கு சென்னையில் இருப்புக் கொள்ளவில்லை. அவர் இலங்கை செல்ல விரும்பினார். தங்கதுரை உள்ளிட்டோர், "இலங்கைக்கு இப்போது செல்வதோ - குழுவாக வேலை செய்வதோ தற்சமயம் சாத்தியமில்லை. அதற்கான நேரம் வரவில்லை' என்று தடுத்தனர்.
குட்டிமணியைத் தஞ்சவூரில் கைது செய்து (1973 நவம்பர் 18) இலங்கை அரசிடம் தமிழக அதிகாரிகள் ஒப்படைத்த பிறகும் தலைமறைவு வாழ்க்கையை இந்தியாவில் தொடர்வது சாத்தியமில்லை என உணர்ந்த பிரபாகரன் சென்னையிலிருந்து கிளம்ப முடிவு செய்தார். அவருக்கு இன்னொரு குழுவைச் சேர்ந்த தனபாலசிங்கம் என்கிற செட்டியைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது.
அவர் பிரபாகரனைத் தனது குழுவில் சேர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். இதுகுறித்து தங்கதுரையிடம் தெரிவித்ததும், "செட்டி நல்லவர் அல்ல. அவருக்கு விடுதலைப் போராட்டம் மட்டுமே நோக்கம் அல்ல; அவரை நம்பிப் போக வேண்டாம்' என்று அவர் தடுத்தார்.
இயங்க வேண்டும் என்ற வெறி, பிரபாகரனை "செட்டியை'த் தொடர வைத்தது.
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டைச் சேர்ந்த செட்டி என்கிற தனபாலசிங்கத்துடன் சேர்ந்துகொண்டார். இந்தக் குழுவின் ஆரம்பகால நோக்கம் அரசு ஆதரவாளர்களையும், போலீசுக்குத் தகவல் கொடுப்பவர்களையும் தண்டிப்பதுதான்.
இந்தச் சமயத்தில் தமிழ் தேசிய அரசியல் பார்வைக்கு இவர்களை முழுமையாகத் திருப்பியவர் தமிழரசுக் கட்சியிலிருந்த ஏ.இராஜரத்தினம்தான். அவரால் உற்சாகப்படுத்தப்பட்டு (1972) ஏற்பட்ட இயக்கத்துக்கு "தமிழ்ப் புதுப்புலிகள்' (பஹம்ண்ப் சங்ஜ் பண்ஞ்ங்ழ்ள்-பசப) என்று பெயர் வைத்துத் தொடங்கினர். செட்டி அவ்வப்போது கைது செய்யப்படுவதும் விடுதலையாவதுமாக இருந்தார்.
"செட்டி'யை நம்பிப் போக வேண்டாம் என்று சொன்ன தங்கதுரையிடம், "என்னை அவர் வழிக்குக் கொண்டு செல்ல முடியாது - முடிந்தால் அவரைத் திருத்துவேன்' என்று சொன்ன பிரபாகரனால் அவரைத் திருத்த முடியவில்லை என்பது உண்மையாகிப் போனது. இயக்க முடிவுகளுக்கு ஏற்ப அவரைத் தண்டிக்க வேண்டியதாயிற்று.
பின்னர், பிரபாகரன் குழுவினர் குட்டிமணி, தங்கதுரையுடன் மீண்டும் இணைந்தனர்.
அதுவும் சிறிது காலம்தான். அதன்பின்னர் தமிழ்ப் புதுப்புலிகள் இயக்கத்துக்கு பிரபாகரன் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
இதுகுறித்து பிரபாகரன் தெரிவித்ததாவது:
""பின் 1976-ஆம் ஆண்டு மே மாதம் 5-ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று இயக்கம் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டது. இவ்வியக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும்-அர்ப்பணிப்பும்-பேரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக்கொண்டது. நகர்ப்புற கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டது. தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற லட்சியத்தில் தோய்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர ஆயுதப்போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை வரித்துக்கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப்படையாக தன்னை நிறுவிக்கொண்டது'' என்பதாகும். (1985-ஆம் ஆண்டின் வெளியீடான "விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு').
அதே வெளியீடு தங்களின் போர்முறையையும் தெளிவாகக் கூறுகிறது: ""ஆயுதப் போராட்டமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கொரில்லாப் போர்முறையானது நமக்கு மிகவும் பொருத்தமான போர் வடிவமாகும். நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசின் பெரிய ராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கொரில்லா யுத்தப் பாதையே பொருத்தமானது என்பதால், இந்த யுத்தியைக் கையாண்டோம்'' என்றும் கூறுகிறது.
தொடர்ந்து அவர்களின் தாக்குதல் குறித்து அவ்வெளியீடு கூறுகையில், ""அரசின் ஆயுதப்படைகளைக் கிலி கொள்ளச் செய்து அவர்களது மன உறுதியையும் கட்டுப்பாட்டையும் குலைத்துவிட்ட எமது கொரில்லாப் போர் முறையானது. ஸ்ரீலங்கா அரசு அமைப்பையே ஆட்டங்காணச் செய்திருப்பதுடன் தமிழர் பிரச்னையை சர்வதேசப்படுத்தவும் உதவியுள்ளது'' என்று தெரிவிக்கிறது.
இவ்வியக்கத்தின் நோக்கம் என்னவென்பது குறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் விவரிக்கையில், ""கொரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து, அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையைப் பெரும்பாலான மக்கள் போராக விரிவாக்குவதே எமது நோக்கமாகும்'' என்றும் தெளிவுபடுத்துகிறது.
அவ்வெளியீட்டில் அதன் ஆரம்பகால நடவடிக்கைகள் குறித்தும், அதன் போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால், ""எமது இயக்கத்தின் ஆரம்பாகால நடவடிக்கைகள் போலீஸ் உளவுப்படையைச் சிதைப்பதை மையமாகக் கொண்டிருந்தது. போலீஸ் உளவுப்படையில் போலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல; எமது இயக்க நடவடிக்கைகளைப் பற்றி தகவல்கள் வழங்குவோரும் துரோகிகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் எம்மைப் பற்றி அளிக்கும் தகவல்களுக்கு ஈடாக, சன்மானமாக பெருந்தொகையை ரகசியமாகப் பெற்று வந்தனர். இந்த உளவு அமைப்பானது, அப்போதுதான் உருவாகிக்கொண்டிருந்த விடுதலை அமைப்புக்கு, பொதுவாக தமிழர்களின் தேசியப் போராட்டத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆகவே அவ்வகை போலீஸ் அமைப்பைச் சிதைப்பதையே நோக்கமாகவும் செயலாகவும் கொண்டிருந்தது.
இரண்டாவது நடவடிக்கை, தமிழ் ஈழத்தில் போலீஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்வதை மையமாகக் கொண்டிருந்தது.
மூன்றாவதாக, எமது கொரில்லாப் போராளிகள் ராணுவப்படைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர்'' என்று தங்களது கொள்கைத் திட்டத்தை அவ்வெளியீட்டில் குறிப்பிட்டிருந்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரால் தமிழர் துரோகி எனக் குற்றஞ்சாட்டப்பட்ட, யாழ்ப்பாண நகர மேயர் துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து, விடுதலைப்புலிகள் அமைப்பு பிரபலமடைந்ததுடன் பிரபாகரனும் பிரபலமடைந்தார்.
துரையப்பாவின் மரணத்தைத் தொடர்ந்து உரும்பராயில் அரசு உருவாக்கிய புதிய உளவுப்படைப் பிரிவு அமைக்கப்பட்டது. அந்தப் பிரிவு முழுவதுமாக விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டது.
உளவாளிகள் ஒழிப்பு மாவிட்டபுரத்திலும், இனுவிலிலும் தொடர்ந்து நடத்தப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி எம்.பி.எம்.கனகரட்னம் யு.என்.பி.க்குத் தாவினார். இவரின் செயல் துரோகச் செயலாகக் கருதப்பட்டதையொட்டி, கொழும்புவிலுள்ள கொள்ளுப்பட்டியில் உள்ள இல்லத்தில் சுடப்பட்டு, தப்பினாலும் பின்னர் அவர் மரணம் நேர்ந்தது.
இந்தச் சம்பவத்தையொட்டி யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளைத் தேடித்தேடி வேட்டையாடினார்கள். இதிலும் சித்திரவதைப் புகழ் பஸ்தியாம்பிள்ளை குழுவினர் ஈடுபட்டதையொட்டி அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்து விடுதலைப் புலிகளால் நேர்ந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அவ்வியக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டு மே மாதம் "விடுதலைப் புலிகள் மற்றும் இதுபோன்ற இயக்கங்களைத் தடை செய்தல் சட்டம்' பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் பாதுகாப்புப்படையினருக்கு சகலவிதமான அதிகாரங்களையும் வழங்கியது. விடுதலைப் புலிகள் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகச் சந்தேகப்படும் எந்த நபரின் சொத்துகளும் பறிமுதல் செய்யவும் சட்டம் வகை செய்தது.
"ஆனால், அரசு நினைத்ததற்கு மாறாக, இச்சட்டமானது எமது இயக்கத்தைப் பிரபலப்படுத்தியதுடன், எமது இயக்கத்துடன் தொடர்பு கொள்வது ஆபத்தானது என்று தெரிந்தும், தமிழ்மக்கள் தங்களது ஆதரவை வழங்கியதாக' இவர்களின் வெளியீடு கூறுகிறது.
1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-இல் ஜெயவர்த்தனாவுக்கு சர்வ அதிகாரங்களையும் வழங்கும் அரசியல் சட்டம் நிறைவேறியது. இதன் மூலம் அரசின் தலைவர், முப்படைகளின் தளபதி, அமைச்சர்களை நியமிக்க, விலக்க, நாடாளுமன்றத்தைக் கலைக்க அதிகாரம் வழங்கப்பட்டது. சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அதே நாளில், விடுதலைப் புலிகள் "ஆவ்ரோ' விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து வெளிப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக 1979, ஜூலை 20-இல் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தது. 18 மாத காலம் ஒரு நபரைத் தனிமைச் சிறையில் வைக்கலாம். அதுமட்டுமல்லாமல், யாழ்ப்பாணத்தில் அவசரச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டது. முன்பே விவரித்திருந்தது போல பிரிகேடியர் வீரதுங்கா பயங்கர அடக்குமுறைகளைக் கையாண்டார்.
இதன் காரணமாக 1979 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தாற்காலிகமாகத் தள்ளிப்போட்டு, இயக்கத்தை பலப்படுத்துவதில் விடுதலைப்புலிகள் ஈடுபட்டனர். 1980-இன் முற்பகுதியில் தங்கதுரை, குட்டிமணி தலைமையில் இயங்கிய தமிழீழ விடுதலை இயக்கத்துடன் கூட்டாகச் சேர்ந்து சில நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவெடுத்தது. நீர்வேலி வங்கிக் கொள்ளையை அடுத்து, தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து இவ்வியக்கத்துடனான உறவு முடிவுற்றது.
பிரிகேடியர் வீரதுங்கா, மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்று ராணுவத் தளபதியானார். யாழ் படுகொலையைக் கெüரவிக்கவே இந்த உயர்வு வழங்கப்பட்டதால், அதைக் கண்டிக்கும் வகையில், காங்கேயன்துறை வீதியில் ராணுவ ஜீப் ஒன்றை விடுதலைப் புலிகள் தாக்கியதில் இருவர் பலியானார்கள். விடுதலைப் புலிகள் வரலாற்றில் ராணுவத்தின் மீதான முதலாவது கொரில்லாத் தாக்குதல் இதுவே ஆகும். இந்தத் தாக்குதலை சார்லஸ் ஆன்டனி (சீலன்) நடத்தினார். பெருமளவில் ஆயுதங்களும் இந்தத் தாக்குதலில் கைப்பற்றப்பட்டன.
இதே போன்று நெல்லியடி போலீஸ் நிலையம் மீது தாக்குதல், கடற்படையினர் மீது தாக்குதல், சாவகச்சேரி போலீஸ் நிலையம் மீது தாக்குதல் எனப் பல முயற்சிகள் இவ்வியக்கத்தால் நடத்தப்பட்டன.
இவ்வகையான தாக்குதல்கள் யாவும் இந்திய அரசு அளித்த பயிற்சிகளுக்கு முன்பே நடந்தவை என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டும்.
போராளிகள் வெளிநாடுகளில் பயிற்சி பெறுவது என்பது ஈரோஸிலிருந்து தொடங்கியது. பிரிட்டனில் பி.எல்.ஓ. பிரதிநிதியுடன் ஈரோஸ் பிரதிநிதிகள் தொடர்புகொண்டு பயிற்சி பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. இதன்படி லண்டனில் வாழ்ந்த ஈரோஸின் செயலாளர் ஈ.இரத்தினசபாபதி, பெய்ரூட் சென்று, அல் ஜிகாத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். இதன் காரணமாக ஈரோஸ் அமைப்பின் முதல் குழு பயிற்சி பெற்றுத் திரும்பியது. அடுத்த குழுவில் விடுதலைப் புலிகளிள் சிலரையும் ஈரோஸ் அமைப்பு சேர்த்துக்கொண்டது. இவ்வாறு பயிற்சி பெற்ற போராளிகள், யாழ்ப்பாணம் பகுதியில் குழு, குழுவாகப் பயிற்சி அளித்தனர்.
88: விடுதலைப் புலிகளின் முதல் களப்பலி!
தேர்ந்தெடுக்கப்படும் போராளிகளுக்குப் பயிற்சியளிக்க வவுனியா காட்டுப்பகுதியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்துக்குப் "பூந்தோட்டம்' என்று பெயர் வைக்கப்பட்டது. குடும்பத்தைத் துறத்தல், புகை மற்றும் மதுவைத் தொடாதிருத்தல், ரகசியம் காத்தல் உள்ளிட்ட விதிகளுக்குட்பட்ட போராளிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
பல்வேறு வகையான துப்பாக்கிகள், ஏ.கே.47 வகைத் துப்பாக்கிகள், சிறு -குறு துப்பாக்கிகள் போன்றவற்றை இயக்குவது, ராக்கெட் மூலம் குண்டு செலுத்துவது, நிலக்கண்ணி வெடிகளை வைப்பது, வெடிக்கச் செய்வது, எறிகுண்டுகளை வீசுவது உள்ளிட்ட பயிற்சிகள் இங்கு அளிக்கப்பட்டன.
"புலிகளின் பயிற்சி முகாம்களில் போர்க்குரல், கைத்துப்பாக்கியால் சுடுவது எப்படி, உயிர் பாதுகாப்பு, நீர் அடியில் நீச்சல், குண்டுவீச்சிலிருந்து தப்புவது எப்படி?, போரில் கையாளப்படவேண்டிய முறைகள் மற்றும் ஒழுக்க விதிகள் எனப் பல்வேறு தலைப்புகளில் நூல்களைப் பார்த்தேன். போர் முறைகள் பற்றி ஆங்கிலத்தில்தான் நூல்கள் உண்டு. ஆனால் தமிழில் முதன்முதலாக புலிகளின் முகாமில்தான் இதுபோன்ற நூல்களைப் பார்த்தேன்' என்று பழ.நெடுமாறன் தான் எழுதியுள்ள "ஈழப் போர்முனையில் புலிகளுடன்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அந் நூலில் அவர் மேலும், "போராட்ட வரலாறு சம்பந்தப்பட்ட நூல்களையும் அங்கு பார்த்தேன். அதில் ஒன்று, "தன்பிரீன் தொடரும் பயணம்' என்ற நூல் ஆகும். அந்த நூலை எழுதியவர் எழுத்தாளர் கல்கியின் நண்பர் ப.ராமஸ்வாமி. அவர் 1932-34-இல் சிறையில் இருந்தபோது அயர்லாந்து போராட்ட வரலாற்றைத் தமிழில் எழுதினார். அரை நூற்றாண்டுக்குப் பிறகு தமிழீழத்தில் போராளிகளுக்கு இந்நூல் உத்வேகம் ஊட்டுகிறது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வகையான முதல் படையணியில் கிட்டு, சங்கர், பண்டிதர், செல்லக்கிளி, சுப்பையா, பொன்னம்மான் உள்ளிட்டோரும், இரண்டாவது அணியில் சீலன், புலேந்திரன், சந்தோஷம், ரஞ்சன் ஆகியோரும் மூன்றாவது அணியில் பொட்டு, விக்டர், பஷீர்காக்கா, லிங்கம், கணேஷ், அருணா ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
புலிகள் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களைத் தாக்குதல் மூலமே பெற்றனர். இயக்கத்தில் ஏராளமான பேர் சேரவும் ஆயுதத் தேவையும் அதிகரித்தது. அந்தச் சமயத்தில் ஆயுதங்கள் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்டன. இதற்கான நிதி வசதியை மக்களே அளித்தனர்.
தமிழர் பகுதிகளில் உள்ள குடும்பத்தினர், ஒரு குடும்பத்துக்கு ஒரு பவுன் தங்கம் வீதம் வழங்கினர். இதுபற்றி அறிந்த சிங்கள அரசு, அடகுக்கடை மற்றும் வங்கிகளில் அவசரத்தேவைக்காக வைத்த நகைகள் அனைத்தையும் கொழும்பில் மத்திய கிளைக்கு எடுத்துச் சென்றது. நகையை மீட்கச் சென்றபோதுதான் இந்த உண்மை மக்களுக்குத் தெரியவந்தது.
இதன் காரணமாக மக்கள் அடகுக்கடை மற்றும் வங்கிகள் முன்பாக பெரும் போராட்டங்களை நடத்தினர். இவ்வகையான 300 கோடி மதிப்பிலான தங்கநகைகள், கொழும்பில் முடங்கியிருந்தது. அதில் பெரும்பாலான நகைகள், சம்பந்தப்பட்டவர்கள் அகதிகளாக நாட்டை விட்டுச்சென்றுவிட்டதால் இலங்கை அரசின் கஜானாவில் சேர்க்கப்பட்டுவிட்டது.
ஆயுதம் மற்றும் பயிற்சி செலவுகளுக்காக, தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். பெருமளவு நிதியளித்ததாக ஆன்டன் பாலசிங்கம் தனது "விடுதலை' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களில் ஒருவரான பேபி சுப்ரமணியம் (இளங்குமரன்), வீரச்சாவு எய்திய கர்னல் சங்கர், "விடுதலைப்புலிகள்' என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணிபுரிந்த மு.நித்தியானந்தன் ஆகியோருடன் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை அவரின் ராமாவரம் தோட்டத்தில் சந்தித்தபோது ஆயிரம் போராளிகளுக்கு பயிற்சியளிக்க ஒரு கோடியும், அந்த ஆயிரம் பேருக்கு ஆயுதம் தரிக்க இன்னொரு கோடியுமாக இரண்டு கோடி தேவைப்படும் என நிதியுதவி கேட்டதாகவும், அவரும் மறுநாள் வரும்படி கூறியதாகவும் அந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பாலசிங்கம் அந்நூலில் குறிப்பிட்டுள்ளதாவது: "நள்ளிரவில் கோடிக்கான பணத்துடன் திருவான்மியூரில் உள்ள அலுவலகத்துக்குச் செல்வதில் சிக்கல்கள் எழலாம். காவல்துறையினர் மடக்கினால் பிரச்னைகள் வரலாம். எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினோம். பாதுகாப்புக்கு ஒழுங்கு செய்வதாகக் கூறி, யாரிடமோ தொலைபேசியில் பேசினார். இரு ஜீப் வண்டிகளில் ஆயுதம் தரித்த காவல்துறையினர் அங்கு வந்தனர். எமது வாகனத்துக்கு முன்னும் பின்னுமாக ஆயுதம் தரித்த காவல்துறையினர் வர திருவான்மியூரை அடைந்தோம். எமது வீட்டில் தலைவர் பிரபாகரன், தமிழேந்தி, கர்னல் சங்கர் மற்றும் போராளிகள் காத்திருந்தனர். நூறு ரூபாய் நோட்டுகளை எண்ணி முடிக்க விடிந்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் பணத்தைக்கொண்டு ஆயிரம் போராளிகளுக்குப் பயிற்சியளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலில் களப்பலியானவர் சங்கர். 1982-ஆம் ஆண்டு ஜூலை 2-ஆம் தேதி யாழ்ப்பாணத்திலிருந்து பதினாறு கல் தொலைவில் உள்ள நெல்லியடியில் ரோந்து சென்று கொண்டிருந்த போலீஸ் படையின் மீது கொரில்லாப் படைகள் தாக்குதல் மேற்கொண்டனர். இந்தத் தாக்குதலில் நான்கு போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டதுடன், மூன்று போலீசார் படுகாயமுற்றனர். போலீஸ் படையினரிடமிருந்து பெருமளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தத் தாக்குதலை அடுத்து சங்கரை வேட்டையாடியது ராணுவம். அவர் பதுங்கியிருந்த வீட்டை ராணுவம் சுற்றிவளைத்துத் தாக்கியது. நேருக்கு நேராக நடந்த துப்பாக்கிச் சண்டையில் சங்கரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. ரத்தம் பீறிட்ட நிலையிலும் மூன்று கிலோமீட்டர் தூரம் ஓடித் தன் நண்பர்களிடம் துப்பாக்கியை ஒப்படைத்துவிட்டு மயங்கி விழுந்தார்.
பின்னர் மதுரைக்குக் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். தமிழ்நாட்டில் நடந்த பயிற்சியை ஒழுங்குபடுத்துவதற்காக அப்போது தமிழகத்திலிருந்த பிரபாகரன், உடனே மதுரை விரைந்தார். சங்கரின் கைகளைப் பற்றிக்கொண்டு திகைத்து நின்றார். கடைசி நிமிடம், பிரபாகரன் கைகளைச் சங்கர் என்கிற சத்தியநாதன் பற்றியபடியே இருக்க -அவருடைய உயிர் பிரிந்தது.
தனது இயக்கப் போராளியை, உயிர் நண்பனை இழந்த துக்கத்தில், "என் கைகளில் உயிர் பிரிந்ததை இன்றுதான் காண்கிறேன்' என்று கண்ணீர் சிந்தினார் பிரபாகரன். அந்த சங்கர் உயிர்துறந்த நவம்பர் 27-ஆம் நாள் மாவீரர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. "நடுகல்' வழிபாட்டு முறையும் அப்போதுதான் வந்தது.
89: கரும்புலிகளும், கடற்புலிகளும்!
1982-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி சாவகச்சேரி காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அரசைக் கதிகலங்கச் செய்தது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு வடமாகாணத்தின் பல காவல் நிலையங்கள் மூடப்பட்டன.
1982, அக்டோபர் 27-ஆம் தேதி அதிகாலை யாழ்-கண்டி பிரதான சாலையைத் துண்டித்த அதேசமயம், கடத்தப்பட்ட மினி பஸ்ஸில் வந்த இன்னொரு பிரிவினர் காவல்நிலையத்தைத் தாக்கினர். கைக்குண்டு வீசி ஆயுதக்கூடத்தை உடைத்துத் திறந்து 19 ரிப்பீட்டர் துப்பாக்கிகள், ஒன்பது 303 ரைபிள்கள், இரண்டு எந்திரத் துப்பாக்கிகள், ஒரு சுழல் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களைக் கைப்பற்றினர். இத்தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட காவலர்கள் இறந்தனர். தாக்குதலுக்குத் தலைமை ஏற்ற சீலன் உள்ளிட்ட இரு போராளிகள் அப்போது காயமுற்றனர்.
தனது ஐந்தாண்டுக்கால ஆட்சியில் கொடிய அடக்குமுறைகளையும், இனவெறியையும் கட்டவிழ்த்துவிட்ட ஜெயவர்த்தனா, ஜனாதிபதி தேர்தலில் வாக்குக் கேட்க (1982 செப்டம்பர்) யாழ்ப்பாணம் வந்த அதே நாளில், பொன்னாலை பாலத்துக்கு அருகில் வாகனங்கள் வருகையில் கொரில்லா வீரர்கள் தாக்கினர். பாலமும் நிலக்கண்ணி வெடிமூலம் தகர்க்கப்பட்டது.
கொடுமைகள் இழைப்பதில் பேர்போன பருத்தித்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயவர்த்தனா விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். கிளிநொச்சியருகே, உமையாள்புரத்தில் ராணுவப்படையினருடன் நடந்த நேரடி மோதலில் ராணுவத்தினர் காயத்துடன் தப்பி ஓடினர்.
புலிகளை ஒழிக்க 1983 ஏப்ரலில் யாழ்ப்பாணத்தில், பாதுகாப்பு மாநாடு என்ற பெயரில் நடக்கவிருந்த மாநாட்டுக்கு, யாழ் மாவட்ட அமைச்சர் விஜயக்கோன் தலைமை ஏற்க, முப்படை அதிகாரிகள், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்வதாக இருந்தது. அம்மாநாட்டு மண்டபத்தையும், யாழ் செயலகத்தையும் மாநாடு தொடங்கச் சில மணி நேரம் முன்னதாய் புலிகள் வெடிகுண்டுகளால் (1983 ஏப்ரல்) தகர்த்தனர்.
1983 மே 18-இல் உள்ளூராட்சித் தேர்தலை வடக்குப் பகுதியில் நடத்த இருப்பதான அறிவிப்பை சிங்கள அரசு வெளியிட்டது. இத்தேர்தலை, தமிழர்கள் போட்டியிடாமலும், வாக்களிக்காமலும் புறக்கணிக்க வேண்டும் என்றும், மக்கள் ஸ்ரீலங்காவின் தேர்தல் மாயையிலிருந்து முற்றிலுமாக விடுபடுமாறும் அதன் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் மக்கள் பங்கெடுக்கும் ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகுமாறும் வே.பிரபாகரன் அறிக்கை வெளியிட்டார்.
"தேர்தலில் வெற்றிபெற தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து வெற்றி பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, இதுபோன்ற தேர்தல்களில் மீண்டும் பங்கெடுப்பது, ஸ்ரீலங்கா இனவாத அரசுக்கு முட்டுக்கொடுக்கும் செயலாகும்' என்றும் கடுமையாகக் கண்டித்தார் பிரபாகரன். அவரின் கோரிக்கையை ஏற்காமல் தேர்தலில் போட்டியிட்ட மூவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
தமிழீழ அரசியல் வரலாற்றில் விடுதலைப் புலிகளின் கோரிக்கையை ஏற்று, மக்கள் தேர்தலை முற்றாகப் புறக்கணித்தனர். விடுதலைப்புலிகளின் கோரிக்கையை புறந்தள்ளி தேர்தல் களத்தில் நின்ற தமிழர் விடுதலைக்கூட்டணியினர் பருத்தித்துறையில் 1 சதவீதமும், வல்வெட்டித்துறையில் 2 சதவீதமும், சாவகச்சேரியிலும் யாழ்ப்பாணத்திலும் பத்து சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று மக்களிடையே மதிப்பிழந்தனர்.
இந்நிலையில் இலங்கை அரசியலின் போக்கை மாற்றும்விதத்தில், யாரையும் சுட்டுத்தள்ளவும், அப்படி சுட்டுத்தள்ளுவது விசாரணைக்கு உள்படுத்தப்படாமல் இருக்கவும், இறந்தவர் உடலை ராணுவமே புதைக்கவும், எரிக்கவும் சட்டப் பாதுகாப்பைப் பெற்றது.
இதன் காரணமாக அரசின் பயங்கரவாதம் தலைவிரித்தாடியது. தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் சிங்களவர்களைக் குடியமர்த்தும் போக்கும் தமிழ்ப்பெண்கள் கற்பழிப்பும், கொலைகளும், தமிழ்க் கோயில்கள் தீவைத்து எரிக்கப்படுவதும் அதிகரித்தது.
"தமிழர்களின் உயிரைப் பற்றியோ, தமிழர்கள் எங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றியோ எனக்கு எந்தவிதமான அக்கறையுமில்லை' என லண்டன் நாளிதழுக்கு ஜெயவர்த்தனா பேட்டியளித்து, எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றினார்.
அதே வேளை, 1983 ஜூலை 15-ஆம் தேதி ராணுவக்கூலிகளால் விடுதலைப் புலிகளின் சிறந்த தளபதிகளில் ஒருவரான லூகாஸ் சார்லஸ் ஆண்டனி என்கிற சீலன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்க, திருநெல்வேலி பலாலி வீதியில், புலிகளின் லெப்டினன்ட் செல்லக்கிளி தலைமையில் யுத்தச் சீருடையுடனும் நவீன ரக ஆயுதங்களுடனும் 14 பேர் சென்று மாதகல் முகாமைச் சேர்ந்த ராணுவத்தினர் நள்ளிரவில் ரோந்துபுரியச் சென்றபோது தாக்கி அழித்தனர். தாக்குதலில் ராணுவத்தினர் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் கலந்துகொண்ட 14 போராளிகளுள் ஒருவராக பிரபாகரனும் இருந்தார். தானே தாக்குதலுக்குப் பொறுப்பேற்காமல், தனது தோழர்களும் அந்தப் பயிற்சியைப் பெற வேண்டும் என்று செல்லக்கிளியைத் தலைமை தாங்கச் செய்தார். வெற்றிபெற்ற நிலையில், தாக்குதலின் இறுதியில், செல்லக்கிளி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார்.
"பயங்கரவாதத்தை ஒழிப்போம்' என்று முழங்கிய ஜெயவர்த்தனா, தான் அவமானமுற்றதாகக் கருதி, 1983 ஜூலை கலவரம் என்று அழைக்கப்படும் பயங்கர கலவரத்தைத் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் கட்டவிழ்த்துவிட்டார்.
ஜூலைக்குப் பிறகு விடுதலைப்புலிகளின் தேவை தமிழீழத்தில் உணரப்பட்டதால், பல்வேறு சமூகத்தாரும் அதில் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டினர்.
கொரில்லா யுத்தக்குழுவாக இருந்த விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை உயரவும், ராணுவத்துக்குண்டான பலவகைப் பிரிவுகளாக, கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கடற்புலிகள் எனப்படும் கடற்படை, கடற்கரும்புலிகள் என்னும் தற்கொலைப்படை, கிட்டு பீரங்கிப்படை, விக்டர் வாகனப்படை, சோதியா மகளிர் அணி, சார்லஸ் அந்தோனி அதிரடிப்படை எனப் பல பிரிவுகள் தோற்றுவிக்கப்பட்டன.
90: விடுதலைப் புலிகளின் பதிலடி!
யாழ் பகுதிகளில் சிங்கள ராணுவத்தின் கோட்டை போன்று செயல்பட்ட குருநகர் ராணுவ முகாம் (1984 பிப்ரவரி 24) தகர்க்கப்பட்டது. விமானப்படையினர் சுன்னாகத்திலும் தெல்லிப்பளையிலும் அப்பாவி மக்களைச் சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக, அத்துமீறல் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்ட "கஜவாகு ரெஜிமெண்ட்' பிரிவைச் சேர்ந்த 15 பேரை வாகனத்தில் வைத்தே, புலிகள் குண்டுவீசி அழித்தனர்.
"மக்களே மகத்தானவர்கள் - அவர்களுக்காகவே இயக்கங்களும் இயக்க நடவடிக்கைகளும்' என்ற அரசியல் சூத்திரத்தின் அடிப்படையில் சிங்கள ராணுவத்தின் கொடுமைகளுக்குப் பதிலடி கொடுக்க மக்களையே விடுதலைப்புலிகள் தயார் செய்து தாக்குதல் நடத்திய நிகழ்ச்சி யாழ்ப்பகுதியில் முதன்முதலாக நடந்தது.
யாழ் நகரத்தில் நாகதீப-கயிலைத்தீவு யாத்திரீகர்களின் வழிபாட்டுக்கென்று புத்த விகாரையில் வழிபாடு நடத்த, இலங்கையின் தெற்குப்பகுதிகளில் இருந்தே புத்த குருமார்களை அழைத்து வந்தனர். இவர்கள் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் யாழ்ப்பகுதி வந்து, ராணுவ ஜீப்புகளில் ஏறி, புத்தவிகாரைகளுக்கு வந்து வழிபாடு நடத்துவதைப் பார்த்து மக்கள் எரிச்சலுற்றனர்.
ஒரு நாள் யாழ் நகரில் அமைந்த புத்தவிகாரைக்குச் செல்லும் வழியெங்கும் தடைகளை ஏற்படுத்தினர். ஸ்டான்லி வீதியிலிருந்த புத்த விகாரையும் ஆஸ்பத்திரி வீதியிலிருந்த சிங்கள மகா வித்தியாலயத்தையும் மக்களே தகர்த்தனர். இவை இரண்டும் சிங்கள ராணுவத்தின் முகாம்களாகவே செயல்பட்டு வந்தன என்பதாலும், மாதாகோயில் ஒன்று தாக்கப்பட்டதாலும் மக்கள் கூடுதல் ஆத்திரத்துக்கு ஆளானார்கள். மக்கள் கடும் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் கைக்குண்டுகளையும் வீசினர். கைக்குண்டுகளை வீச, புலிகளே மக்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
புலிகளின் வரலாற்றில் கடுமையான காவல்கொண்ட மட்டக்களப்பு சிறைச்சாலையை உடைத்து, அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிர்மலா நித்தியானந்தனை மீட்டது, கடற்படையினரை, பொலிகண்டிப் பகுதியில் மோட்டார் படகில் சென்று தாக்கி ஆறுபேரைக் கொன்றது, வல்வெட்டித்துறைக்கு அருகில் நெடியநாடு என்ற இடத்தில் மூன்று கவச வண்டிகள், ஒரு டிரக், ஒரு ஜீப் சகிதம் சென்று வெறியாட்டம் போட்டுத் திரும்பிக்கொண்டிருந்த 9 கமாண்டோ படையினரைத் தாக்கி அழித்தது, மாங்குளம் அருகே ஒட்டிசுட்டான் காவல் நிலையத்தில் கொரில்லாத் தாக்குதலை அடக்குவதில் சிறப்புப் பயிற்சி பெற்ற கமாண்டோ படையினரைத் தாக்கி, காவல்நிலையத்தின் கருவூலத்திலிருந்த ஆயுதங்களைப் பறித்தெடுத்தது ஆகியவை மிகமிக முக்கியமான சம்பவங்களாகும்.
புலிகளின் ஆயுதத் தேவையை நிறைவேற்றவும், கமாண்டோ படையினரின் கொட்டத்தை அடக்கவும் புலிகளால் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
மன்னார், கரவெட்டி மேற்கு, அச்சுவேலி, திக்கம், முல்லைத்தீவு, களுவாஞ்சிக்குடி, தொண்டமானாறு-பலாலி வீதி, தெல்லிப்பளைப் பகுதிகளில் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தனித்தனி சமரில் 64 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் வடபிராந்திய சிங்கள ராணுவ தளபதி பிரிகேடியர் ஆரியப்பெருமா கொல்லப்பட்டார்.
புலிகள் தரப்பில் களுவாஞ்சிக்குடி தாக்குதலில் லெப்டினன்ட் ஆர்.பாமதேவா, திக்கத்தில காப்டன் ஞானேந்திர மோகன் என்கிற ரஞ்சன்லாலா ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.
மேலே கூறியவையே, விடுதலைப்புலிகளின் வரலாற்றில் 1975-1984-ஆம் ஆண்டுகளுக்குள் நடைபெற்ற சம்பவங்களின் சுருக்கம் ஆகும்.
1984-1987-இல் தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தலைவர்களின் கோரிக்கைகளுக்கேற்ப, ஏராளமான அளவில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த மக்களின் குழந்தைகள் படிப்புக்குத் தகுதி நிர்ணய வழிமுறைகளை எல்லாம் மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஈழத் தமிழர்களுக்கு என்று தனி ஒதுக்கீடு செய்து மாணவர்கள் கல்வி கற்கவும், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர்கல்வி வசதிகள் பெறுவதற்கும் ஆணை பிறப்பித்தார் எம்.ஜி.ஆர். (எம்.ஜி.ஆரும் ஈழத்தமிழரும் - வே.தங்கநேயன்).
பின்னாளில், 27-4-1987-ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற கொடுமையைக் கண்டித்தும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கவேண்டிய வரலாற்று நெருக்கடி குறித்தும் எம்.ஜி.ஆர். சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன் விளக்கிய பின்னர், விடுதலைப்புலிகளுக்கும், ஈரோஸýக்குமாக வழங்கிய நாலு கோடி ரூபாய்க்கான காசோலை குறித்து ஜெயவர்த்தனா அலறினார்.
அவர் பிரதமர் ராஜீவ் காந்தியைத் தொடர்புகொண்டு தெரிவித்த புகாரின் அடிப்படையில் விடுதலைப்புலிகளுக்கும் ஈரோஸýக்கும் அளித்த காசோலையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற்றார். இது குறித்து விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் தனது "விடுதலை' நூலில் எழுதி இருப்பதாவது:
""ஈழத்தமிழர்களுக்குத் திரட்டிய நிதியை அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் விடுதலை இயக்கங்களுக்குக் கொடுப்பதில் என்ன தவறு - இதனைப் பிரதமர் புரிந்துகொள்ளாதது ஏன்?'' என்று எம்.ஜி.ஆர். ஆதங்கப்பட்டார்.
தொடர்ந்து, ""அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லையே'' என்றார்.
""அந்தக் காசோலை என்னிடம்தான் இருக்கிறது'' என்றேன்.
""அதை அமைச்சரிடம் (பண்ருட்டி ராமச்சந்திரனிடம்) கொடுத்துவிடுங்கள், நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள் எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி ரூபாய் தருகிறேன்'' என்றார்.
""எனக்குப் போன உயிர் திரும்பி வந்ததுபோல இருந்தது. மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் வீட்டுக்குச் சென்றோம். சொன்னபடி எங்களுக்கு நாலு கோடி ரூபாய் அளித்தார்'' என்றும் குறிப்பிட்டுள்ளார் பாலசிங்கம்.
""விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் இடையில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது'' என்று குறிப்பிட்டுள்ளார் (தகவல்: விடுதலை நூல்).
மூலம்: பாவை சந்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.