Saturday, 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு (67-75)


67: அணுகுமுறை மாறுகிறது!
ராஜீவ் காந்தி ஜெயவர்த்தன ரொமேஷ் பண்டாரி இலங்கைத் தமிழர் பிரச்னையில், இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு பதவிக்கு வந்த ராஜீவ் காந்தியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றம் காணப்பட்டது. இந்திரா காந்தியின் பழுத்த அரசியல் அனுபவத்தின் காரணமாக அவர் என்ன விரும்புவாரோ அதே திசையில் சிந்தித்த அதிகார வர்க்கத்தினர், ராஜீவ் காந்தி காலத்தில் தங்களது - விருப்பு வெறுப்புக்கேற்ப அவரை மாற்றுவதற்கு முற்பட்டனர்.

இந்திரா மறைவினால் புது தில்லியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் பாதிப்புகளால் ராஜீவ் காந்திக்கு இலங்கை இனப் பிரச்னை என்பது இரண்டாம் பட்சமாகவே அமைந்தது. இச் சூழல் புது தில்லியின் அதிகார வர்க்கத்துக்கு ஏற்றதாயிற்று. இலங்கை இனப் பிரச்னையில் "தமிழர் நலன்' என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு "இந்திய நலன்' என்கிற புதிய வார்த்தைப் பிரயோகம் முன்வைக்கப்பட்டது.
"இலங்கை சிங்கள அரசின் மீது ஒரு நெகிழ்வுத் தன்மையும், தமிழ்ப் போராளி இயக்கங்கள் மீது கண்டிப்பான அணுகுமுறையும் கடைபிடிக்கப்பட்டது. ஆட்கள் மற்றும் ஆயுதங்கள் போக்குவரத்துக்கு பாக் ஜலசந்தியை போராளிக் குழுக்கள் பயன்படுத்துவதை இலங்கை-இந்திய கடற்படை மற்றும் வான் படைகள் கண்காணிக்க ஆரம்பித்தன. இவ்வாறு ஒரு புதிய நிலை உருவாகும் என போராளிக் குழுக்கள் முன்பே கணித்திருந்த காரணத்தால் அவர்கள் எதற்கும் தயாரான நிலையிலேயே இருந்தார்கள் என்பது வேறு விஷயம்.
ஜெயவர்த்தனவும் வாங்கிக் குவித்திருந்த ஆயுதங்களை நாசகார வழிகளில் தமிழர்கள் மீது பிரயோகித்தும், தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றத் திட்டத்தை தீவிரமாக நிறைவேற்றுவதிலும் குறியாக இருந்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்குதல் என்பது தீவிரமானதும் மிகப்பெரும் அளவில் தமிழ் மக்கள் அகதிகளாக இந்தியாவில் வந்து குவிந்தனர்.
சிங்களவர் குடியேற்றத்தைத் தகர்க்க எண்ணிய போராளிகள், அசோகர் காலத்திய புனித போதிமரம் உள்ள, பழமையும் பெருமையும் கொண்ட முந்தைய தலைநகரமான அநுராதபுரத்தில் நுழைந்து சுமார் 150 பேரைத் தாக்கி அழித்தது, ஜெயவர்த்தனவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சிவிலியன்களைத் தாக்குவதில்லை என்ற கொள்கையுடைய விடுதலைப் புலிகள் முதல் தடவையாக இச் செயலைச் செய்து உலகை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தினர். இத்தகைய அணுகுமுறையைக் கையாள்வதற்கு ஒரு காரணம் இருந்தது.
வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவக் குடியேற்றத் திட்டத்தை செயல்படுத்தப் போவதான அறிவிப்புகளை அப்போதுதான் ஜெயவர்த்தன செய்திருந்தார். சிங்களவரின் பகுதியில், சிங்களவரின் உயிருக்குப் பாதுகாப்பு வழங்க முடியாத ஜெயவர்த்தன எப்படி தமிழர் பகுதிகளில் சிங்களவர் குடியேற்றத்தை நிகழ்த்தி, அவர்களைப் பாதுகாப்பார் என்ற கேள்வி அம் மக்களிடையே பரவலாக எழுந்தது. இப்படி ஒரு தயக்கத்தை சிங்களவர் மத்தியில் எழுப்பினால் மட்டுமே, குடியேற்றம் தடுக்கப்பட முடியும் என்று விடுதலைப் புலிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் பலனளித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஜெயவர்த்தன கையாண்ட நாடகம்தான் போராளிகளுடன் பேச்சுவார்த்தை என்பது. அரசியலுக்குப் புதியவரான ராஜீவ் காந்தியை தான் விரும்பியபடி ஆட்டி வைக்கலாம் என்பதும் அவரது உள்ளக்கிடக்கையாக இருந்தது. இக் கருத்து நிறைவேற அவர் வீசிய இன்னோர் அஸ்திரம் ஜி.பார்த்தசாரதியின் வெளியேற்றத்தில் முடிந்தது.
ஜி.பார்த்தசாரதி ஒரு பிராமணத் தமிழர் என்பதால் இலங்கை இனப் பிரச்னையில் அவர் இந்திய நலனை விடுத்து, தமிழர் நலனை நாடுவதால், இரு நாடுகளிடையே உள்ள உறவு சிக்கலாகிறது என்று ஜெயவர்த்தன தரப்பிலிருந்து திரும்பத் திரும்ப பிரதமர் ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. ஜி.பார்த்தசாரதியால் நடுநிலையாக நடந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்தார். உண்மையில், ஜி.பார்த்தசாரதி இந்திரா காந்தியின் கருத்துக்களையே பிரதிபலித்தார். ஜி.பார்த்தசாரதிக்கு இலங்கைப் பிரச்னையின் அத்தனை பரிமாணங்களும் அத்துபடி. அவர் இந்திய நலன் மற்றும் தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தார் என்பதும் உண்மை.
இந்தியாவின் மத்தியஸ்தர் முயற்சியில் நடுவராக இருந்து செயல்பட்ட ஜி.பார்த்தசாரதிக்குப் பதில் ரொமேஷ் பண்டாரி என்கிற அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் பணியில் அமர்ந்ததும் உடனடியாக கொழும்புப் பயணத்தை மேற்கொண்டார்.
கொழும்பில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர், ஜெயவர்த்தனவைச் சந்தித்தார். அவரோ, "இலங்கை இனப் பிரச்னை தீராததற்கு இந்தியாதான் காரணம். ஈழப் போராளிகளுக்குப் பயிற்சியும் அவர்களுக்குத் தேவையான ஆயுதங்களும் இந்தியா வழங்கியதால் இந்தப் பிரச்னை நீண்டுகொண்டிருக்கிறது. இந்தியா போராளிகளுக்கு உதவுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்படிச் செய்தால் பேச்சுவார்த்தைக்குத் தயார்' என்று தெரிவித்தார். கூடவே, ரொமேஷ் பண்டாரிக்கு மதிப்பு மிகுந்த, உயர்வகை அன்பளிப்பும் வழங்கப்பட்டதாகவும், அதை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அப்போது போராளிக் குழுக்கள் குற்றம் சாட்டின.
இதனைத் தொடர்ந்து, ஜெயவர்த்தனவின் வெளியுறவு ஆலோசகர் எட்மண்ட் விக்கிரமசிங்கா புது தில்லி வந்து பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். ரொமேஷ் பண்டாரி திரும்பவும் கொழும்பு சென்றார். இந்தச் சந்திப்புகளின் விளைவாக ஜெயவர்த்தன - பிரதமர் ராஜீவ் காந்தி சந்திப்பு புது தில்லியில் நிகழ்ந்தது.
கொழும்பு திரும்பிய ஜெயவர்த்தன இரண்டே வார காலத்தில், தன்னிச்சையாக போர் நிறுத்தம் அறிவித்தார். இந்தப் போர் நிறுத்தம் உணர்த்தும் உண்மை "இலங்கை நிதியுதவி கூட்டிணைப்பின்' (அண்க் ஸ்ரீர்ய்ள்ர்ழ்ற்ண்ன்ம் ஸ்ரீப்ன்க்ஷ) கூட்டம் அண்மையில் நடைபெற உள்ளது என்பதாகும்.
இந்த நிதியுதவி அமைப்புக் கூட்டம் நடைபெற இருக்கும் காலத்தில், திடீரென இலங்கையில் ஓர் அமைதிச்சூழலைத் தோற்றுவிப்பதை ஜெயவர்த்தன வாடிக்கையாகக் கொண்டிருந்தார். போர்ச்சூழலில், அதன் பாதிப்புகளைக் காரணம் காட்டி, நிதியுதவியைக் குறைத்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயத்திலேயே அவர் - போர் நிறுத்தம் செய்து, அமைதிச் சூழலை "பொய்யாக' ஏற்படுத்த விரும்பினார்.
அதே உத்தியைப் பின்பற்றித் தற்போதும் போர் நிறுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், ராஜீவ் காந்தியைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியவுடன் இவ்வறிப்பு வெளியானதால், ராஜீவ் விருப்பப்படி வெளியிடப்பட்டதாக அவரையும் நம்ப வைத்தார் ஜெயவர்த்தன.
மேலும், இலங்கை இனப் பிரச்சினை தமிழர்கள் சார்ந்த பிரச்னை என்பதால், இந்த சமரசப் பேச்சுவார்த்தை இந்தியாவில் நடைபெறக்கூடாது என்கிற நிபந்தனையையும் ஜெயவர்த்தன முன்வைத்தார். எனவே, இந்தியாவின் நட்பு நாடான பூட்டான் தேர்வு செய்யப்பட்டு, அந் நாட்டின் தலைநகர் "திம்பு' பேச்சுவார்த்தை நடைபெறும் இடமாக அறிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஓர் இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டது. இதன்படி பேச்சுவார்த்தைக்கு வசதியாக நான்கு கட்டமாக சில நடைமுறைகளை இலங்கை அரசும், போராளிகளும் கடைபிடிக்க வேண்டும் என்று முடிவாயிற்று.
இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்:
(அ) வீதிகள், வாகனங்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை நிறுத்தி, அத்துமீறப்படாத பகுதிகள் என்கிற அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்றும் (ஆ) தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தி வைப்பது என்றும், (இ) நீதித் துறையினர் முன்பாகவே பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையைச் செய்வது என்றும் (ஈ) ரோந்துக்குரிய நடவடிக்கைகளுக்காக வாகனங்களை தருவித்தல், காவல் நிலையங்களுக்கு கருவிகள் அனுப்பி வைப்பது கூடாது என்றும் முடிவாயின.
இதேபோன்று போராளிகள் தரப்பில், (அ) தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆயுதங்கள், பொருட்கள் எடுத்துச் செல்வதையும் (ஆ) வடக்கு-கிழக்கில் மக்களைத் தாக்குவதை நிறுத்துவது (இ) அதேபோன்று அரசு அலுவலகங்கள், தனியார் சொத்துக்கள் மீதான தாக்குதலை நிறுத்துவது, (ஈ) வெளியிலிருந்து ஆட்களையும், பொருட்களையும் தருவிப்பது கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இவையனைத்தும் மூன்று வாரங்கள் கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டன.
இரண்டாம் கட்டமாக, இலங்கை ராணுவனத்தினருக்கும் மூன்று வாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பேச்சுவார்த்தைக்கு ஊறுவிளைவிக்காமல் இருக்க தாக்குதலைத் தொடரக் கூடாது என்றும், ஊரடங்குச் சட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்துவது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதேபோன்று போராளிகள் குழுவினர் பாதுகாப்புப் படையினர் செல்லும்போது தாக்குவது கூடாது என்றும், பொது நிறுவனங்களைத் தாக்குவதும் குண்டு வைத்துத் தகர்ப்பதுமான செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் குண்டுகளைப் புதைப்பது ஆயுதங்களை எடுத்துச் செல்வது கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.
மூன்றாம் கட்டமாக, போர் நிறுத்தத்தை இருவரும் கடைப்பிடித்தல். போலீஸôர் துணையுடன் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டல், தடுப்புக் காவல் கைதிகளாக சிறையில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குதல் போன்றவற்றை அரசுத் தரப்பில் செய்வது என்றும்,
நான்காம் கட்டமாக பேச்சுவார்த்தைகளின்போது எழுப்பப்படும் விவாதங்கள் முடிவு எட்டப்படும் வரையில் அப்பேச்சு விவரத்தை பகிரங்கப்படுத்தாமல் இருதரப்பிலும் ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பதுமான கட்டுப்பாடுகளைக் கொண்ட அட்டவணை தயாரிக்கப்பட்டன.
இவை யாவும் இந்திய அரசுத் தரப்பு அதாவது ரொமேஷ் பண்டாரி எடுத்துக் கொண்ட முயற்சியினால் உருவானவை ஆகும். இந்த அட்டவணை ராஜீவ் - ஜெயவர்த்தன சந்திப்பின்போது உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்தத் திட்ட நகல் போராளிக் குழுவின் ஒன்றிணைப்புக்கு (உசகஊ)அனுப்பி வைக்கப்பட்டது.
68: திம்பு பேச்சு வார்த்தை!
திம்பு பேச்சுவார்த்தை ஈழ தேசிய விடுதலை முன்னணியில் அங்கம் பெற்ற விடுதலைப் புலிகள், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் உள்ளிட்ட போராளிக் குழுக்களின் சார்பில் இந்திய அரசாங்கத்தின் சமரசத் திட்ட அட்டவணை மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
""இலங்கை ராணுவத்தினருக்கும் எமது விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளுக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இந்திய அரசாங்கம் சமர்ப்பித்த யோசனைகளை கவனமாகப் பரிசீலனை செய்துள்ளோம். இந்திய அரசாங்கத்தின் மத்தியஸ்தம் வகிக்கும் நிலையையும், நல்லுறவையும் ஏற்படுத்தும் பணியையும் மதிப்பதோடு, எமக்களித்த வாக்குகளையும் உறுதிகளையும் ஏற்பதோடும், தமிழர் தேசிய பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்குரிய திட்டவட்டமான யோசனைகளை இலங்கை அரசாங்கம் முன்வைப்பதற்கு வேண்டி அதற்கு உகந்த சூழலையும், அமைதியை நிலைநாட்டுவதற்குரிய நிபந்தனைகளையும் உருவாக்குவதற்கு உதவ, குறித்த காலம் வரை போர் நிறுத்தம் செய்வதாக இங்கு கைச்சாத்திடும் விடுதலை இயக்கங்களைச் சேர்ந்த நாம் கூட்டாக தீர்மானித்துக் கொண்டோம்.
குறித்த காலம் வரை போர் நிறுத்தம் செய்வதாக சம்மதிக்கும் அதேவேளையில், முன்வைக்கப்பட்டுள்ள போர் நிறுத்தத் திட்ட அமைப்பினுள் அடங்கும் ஒழுங்குகளும் நிபந்தனைகளும் எம்மை சமநிலை அற்றவர்களாக்குகின்றது. சிந்திப்பதற்குரியவை எமது மாற்று யோசனைகள் என்று குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு யோசனைகள் கூறப்பட்டிருந்தன.
(அ) (1) போர் நிறுத்தத்திற்குச் சம்மதம் அளிக்கிறோம்.
(2) புதிய சிங்கள குடியேற்றங்களைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு பதிலாக, வடக்கு-கிழக்குப் பகுதிகளில் தாக்குதல் நிறுத்துவதற்கு வலியுறுத்துவது வேடிக்கையானது. இந்தப் பகுதிகளில் ராணுவத்தாலும் சிங்கள ஆயுதந்தாங்கிய குடியேற்ற வாசிகளாலும் தமிழ் மக்கள் தாக்குதலுக்கு ஆளானால் என்ன செய்வது? இவ்வகை அரச அடக்குமுறைகளை உடனடியாக நிறுத்த இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும்.
(3) முதல் கட்ட அட்டவணை, காலத்தில் அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலைகள் தொடருமானால் அவை ஒப்பந்த மீறலாக கருத வேண்டும்.
(ஆ) அரச பயங்கரவாத - அவசர காலச் சட்டங்கள் அமலில் உள்ள நிலையில் மூன்றாவது சட்டம் 2-வது பிரிவில் உள்ளபடி சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட போலீஸôரிடம் ஒப்படைப்பது சரியல்ல.
(இ) (1) போர் நிறுத்தம் செய்யப்பட்ட ஓரிரு தினங்களுக்குள் அதாவது இப் பேச்சுவார்த்தை (ஜூலை 8, 1985-இல்) தொடங்கும் நாளில் இருந்து மூன்று நாட்களுக்குள் அரசியல் தீர்வுக்கான "செயல் திட்டத்தை முழுமையாக அளிக்க', இலங்கை அரசு முன்வர வேண்டும்.
(2) இப்பேச்சுவார்த்தைக்கு "செயல்திட்ட வரைவை' ஏற்றுக்கொள்வதையே நாங்கள் நிபந்தனையாக வைக்க விரும்புகிறோம். தமிழர்களின் இனப் பிரச்னைக்கு உரிய தீர்வுக்கு இடமளிக்காமல், அவர்களை ஏமாற்றி பேச்சுவார்த்தை நாடகம் என நடத்தி, இறுதி முடிவு எட்டப்பட்டாலும் அவற்றைக் குப்பையில் போடுகிற சிங்கள அரசுகளின் செயல்களால் பெற்ற அனுபங்களே இவ்வாறு நிபந்தனை வைக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.
நான்காவது கட்டத்துக்குண்டான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதில் நல்ல யோசனைகளை எமது பார்வைக்கு வைக்க வேண்டுகிறோம்.
(அ) போர் நிறுத்த கால எல்லை நீட்டிப்புக்குச் சம்மதிக்க முடியாது.
(ஆ) போராளிக் குழுக்களைத் தீவிரவாதிகள் (Militant) என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணியை "தமிழரது அரசியல் தலைமை' என்றும் குறிப்பிடப்படுவதையும் நாங்கள் மறுக்கிறோம்.
இந்த யோசனைகள் இந்திய அரசாங்கத்தால் ஏற்கப்பட்டு, இவற்றை இலங்கை அரசுக்கு அறிவித்து அவர்களும் ஏற்றால், அவற்றை எங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டது.
திம்பு பேச்சுவார்த்தை 1985-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி தொடங்கி, 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கால அட்டவணையைக் கொண்டிருந்தது.
இப் பேச்சுவார்த்தைக்கு முன்பாக பூட்டான் மன்னர் அனைவரையும் வரவேற்று தேநீர் விருந்து அளித்தார். போராளிக் குழுக்களின் அங்கத்தவர்களும் நீண்ட நெடுநாளைக்குப் பின்னர் ஒருவரையொருவர் அப்போதுதான் சந்தித்ததால், ஓர் இளகிய சூழல் நிலவியது.
பின்னர், பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்துக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினர் (PLOT) சேர்ந்து ஒரு குழுவாகவும் விடுதலைப் புலிகள் இயக்கம் (LTTE) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) ஈழப் புரட்சி அமைப்பு ((EROS) அடங்கிய ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENLF)-யினர் ஒரு குழுவாகவும் வந்திருந்தனர்.
இதில் ஒவ்வொரு அமைப்பும் தலா இருவர் வீதமும் சிங்கள அரசின் சார்பில் ஜெயவர்த்தனவின் தம்பி ஹெக்டர் ஜெயவார்த்தன தலைமையில் ஒரு குழுவும் பங்கேற்றது.
அ.அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், சம்பந்தம், வரதராஜ பெருமாள், சத்யேந்திரா, ராபர்ட், ரத்தினசபாபதி, ராஜிவ்சங்கர், சித்தார்த்தன், வாசுதேவா, திலகர், யோகி உள்ளிட்ட 13 பேர் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சு என்பது ஆக்கப்பூர்வமாக இல்லை. தமிழர்கள் பயனடையக் கூடாத பேச்சுக்களையே சிங்கள அரசுத் தரப்பில் பேசினர்.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து மறைந்த புஷ்பராஜா எழுதியிருப்பதாவது:
"எப்பவுமே சிங்கள அரசாங்கத்தின் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பிரச்னையைத் தீர்க்கும் விஷயத்தில் நேர்மையாக நடந்து கொண்டதில்லை. பிரச்னையைத் தீர்க்கப்போவது போன்று ஒரு மாயை ஏற்படுத்தி, காலத்தைக் கடத்துவது அவர்களது அரசியல் சூத்திரமாகும். இந்த நடவடிக்கையில் இலங்கை பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா தொடங்கி இதுவரை அதுதான் நடந்து வருகிறது. இனியும் அதே சூத்திரமே கையாளப்படும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை'. (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் பக்.417).
இந்த இழுத்தடிப்புப் பேச்சு 1984-ஆம் ஆண்டில் இந்திரா காந்தியின் ஒப்புதல் பெறப்பட்டு பின்னர் திடீரென மாற்றப்பட்ட தமிழர்களின் விருப்பங்களுக்கெதிரான பழைய 14 அம்சத் திட்டத்தையொட்டியே அமைந்தது. இது போராளிக் குழுக்களுக்கு வெறுப்பைத் தந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அ.அமிர்தலிங்கமும் வெறுப்படைந்தார். காரணம் வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்று அம்மாநாடு "திடீர்' என ரத்தான சம்பவத்தில் அவரும் ஒரு பங்கேற்பாளர்.
வட்ட மேஜை மாநாட்டிலேயே உரிய அதிகாரம் கொண்ட தமிழ் மாநில அமைப்பு என்கிற ஏற்பாடு இல்லை. அரைகுறையான அதிகார ஒப்படைப்புத் திட்டத்தையும் ஸ்ரீமாவோ, புத்த பிக்குகள் சங்கத்தினர், ஜே.வி.பி. போன்ற சிங்களப் பேரினவாதிகள் எதிர்த்த காரணத்தால் பின்வாங்கியதாக ஜெயவர்த்தன நாடகமாடினார். அதே திட்ட அடிப்படையில் இப்பொழுதும் பேசுவது சரியல்ல என்று தமிழர் அமைப்புகள் ஒட்டுமொத்தமாக முடிவுக்கு வந்தனர்.
69: திம்பு பேச்சுவார்த்தையும் போராளிகளின் நிலைப்பாடும்!
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF), தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), தமிழீழ விடுதலை அமைப்பு (EPRLF) ஈழப் புரட்சி அமைப்பு (EROS)மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOT) ஆகியவற்றின் அங்கத்தவர்கள் ஒருங்கிணைந்து ஓர் அறிக்கையினை (திம்பு பிரகடனம்: 1985 ஜூலை 13), பேச்சுவார்த்தைக்குப் பொறுப்பான இந்திய அதிகாரிகளிடம் அளித்தனர். பின்னர் இந்த அறிக்கை பத்திரிகைகளுக்கும் விநியோகிக்கப்பட்டது.
அவ்வறிக்கை வருமாறு:
தமிழ் தேசிய பிரச்னைக்கான பயனுள்ள தீர்வு எதுவாக இருந்தாலும் பின்வரும் நான்கு முக்கிய கோட்பாடுகளை அடிப்டையாகக் கொண்டிருக்க வேண்டும்.
(1) இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.
(2) இலங்கையில் தமிழர்களுக்கென்று இனங் காணப்பட்ட ஒரு தாயகம் உள்ளது என்பதை அங்கீகரித்தல்.
(3) தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.
(4) இலங்கைத் தீவைத் தமது நாடாகக் கருதுகின்ற எல்லாத் தமிழர்களினதும் பிரஜாவுரிமையையும் அடிப்படை உரிமைகளையும் அங்கீகரித்தல்.
இக் கோட்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு நாடுகள், பல்வேறு அரசாங்க முறைகளை வகுத்துள்ளன. எமது மக்களுக்கு இந்த அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதனால் எழுந்துள்ள இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, நாம் சுதந்திரமான அரசொன்றைக் கோரியுள்ளதுடன், அதற்காகப் போராடியும் வந்துள்ளோம்.
இப்பிரச்னைகளுக்குத் தீர்வாக, இலங்கை அரசாங்கம் அளித்துள்ள ஆலோசனைகள் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியாதவை. எனவே 1985 ஜூலை 12-ஆம் தேதி எமது அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, நாம் அவற்றை நிராகரித்துள்ளோம்.
எனவே, சமாதானத்துக்கான எமது உளப்பூர்வமான விருப்பத்தின் காரணமாக, மேற்குறிப்பிட்ட எமது கோட்பாடுகளுக்கிணங்க முன்வைக்கும் ஆலோசனைகளை நாங்கள் பரிசீலனை செய்வோம் - என்று கூறி அனைத்து அமைப்பின் அங்கத்தவர்களும் கையொப்பமிட்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் இலங்கை அரசு இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு சரியான திட்டங்களுடன் வரவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதன் மூலம் ஈழமே தீர்வு என்கிற நிலையிலிருந்து கீழிறங்கியதுடன், இதன்மீது முடிவெடுக்கும் நெருக்கடிக்கு இலங்கை அரசையும் உட்படுத்தினர்.
காரணம் போராளிகள் எப்போதும் சமரசத் தீர்வுக்கு உடன்படமாட்டார்கள் என்று இலங்கை அரசுகள் அது எந்த அரசாக இருந்தாலும் கூறி, அவை ஒவ்வொன்றும், இந்தியாவையும் பிற உலக நாடுகளை நம்ப வைத்திருந்தன. இதன் காரணமாகவே, இப்போது முடிவெடுக்கும் நிலைக்கு இலங்கை அரசைத் தள்ளினர்.
இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை 1985 ஆண்டில், ஆகஸ்டு 12-ஆம் தேதி தொடங்கி 17-ஆம் தேதி முடிவடையும் காலக் கெடுவைக் கொண்டிருந்தது. இப் பேச்சுவார்த்தை தொடங்கியதுமே அரசுத் தரப்பு நான்கு முக்கிய கோட்பாடுகளை முற்றிலுமாக எதிர்த்தது. இந்த எதிர்ப்பே திம்பு பேச்சுவார்த்தை முடிவுறும் நிலைக்கு வந்துவிட்டது என்பதை உணர்த்தியது.
இதனால் எரிச்சல் அடைந்தது இலங்கைத் தரப்பு அல்ல; மாறாக - தமிழ்ப் போராளிகள் மீது இந்திய அரசு அதிகாரிகள் கடும் கோபம் கொண்டனர்.
இதே நேரத்தில் அதாவது திம்பு பேச்சு முடிவடையும் நாளுக்கு முந்தின நாள் (16-ஆம் தேதி) வவுனியா ராணுவ முகாம் அருகே உள்ள மதகொன்றின் கீழ் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தினர் வவுனியா நூல்நிலையத்தை முற்றுகையிட்டனர். அந்த நூல்நிலையத்தினுள் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, தீயும் வைக்கப்பட்டது.
நூலகத்தில் இருந்த ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். பல நூறு பேர் தீக்காயத்துக்கு ஆளாயினர். கடைகள், கட்டடங்கள், வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த வெறியாட்டத்தில் இரண்டாயிரம் பேர் அகதிகளாயினர்.
இந்நடவடிக்கையினால் கோபமுற்ற போராளிக் குழுக்கள் போர் நிறுத்த காலத்தில் சிங்கள ராணுவத்தினரின் செயல் ஓர் ஒப்பந்த மீறல் என்று வாதிட்டனர். இதனை ஏற்க இலங்கை அரசுத் தரப்பு மறுத்தது.
இந்திய அதிகாரிகள் போராளிக் குழுவினருக்கு நெருக்குதல் கொடுத்தனர். தொடர்ந்து, போராளிக் குழுக்களின் அங்கத்தவர்கள் உடனடியாக தங்களது நிலையை விளக்கி அறிக்கை ஒன்றை இந்திய மத்தியஸ்த பார்வையாளர்களிடம் அளித்தனர்.
அந்த அறிக்கையில், "இலங்கைத் தரப்பில் அளிக்கப்பட்ட யோசனைகளில் மாவட்ட சபைக்கு அதிகாரம் என்று கூறப்படுகிறது. உண்மையில் மாவட்ட சபைகளுக்கு நிர்வாகப் பொறுப்புகளே இல்லை. கீழ்மட்ட சட்டங்களைத் தயாரிக்கும் மட்டுப்படுத்தப்பட்ட சட்ட நிர்ணய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுவும் கூட ஜனாதிபதியின் அதிகார வரம்புக்குட்பட்டதுடன் அவரது அங்கீகாரத்தையும் பெற்றாக வேண்டும்.
அதுதவிர, மாவட்ட சபைகளுக்கு உரிய நிதி கிடையாது. ஜனாதிபதி நியமிக்கும் கமிஷன் ஒன்று மாவட்ட சபைகளுக்குத் தேவையான நிதியை சிபாரிசு செய்து, அதையும் ஜனாதிபதி அங்கீகரிக்க வேண்டும்.
இலங்கை அரசாங்கம் வைத்துள்ள யோசனைகள் மத்திய இலங்கை அரசை வலுப்படுத்துபவையாகவே உள்ளன. மாவட்ட சபை நிர்வாக அமைப்பிலும் தமிழ் மக்களை அடக்கும் நோக்கமே அதிகம்' - என்று கூறப்பட்டிருந்தது.
மேலும் அந்த அறிக்கையில், "தமிழர் தேசிய இனத்துக்குரியவர் அல்ல - அவர்களுக்குத் தாயக உரிமையும் இல்லை - சுயநிர்ணய உரிமையும் கிடையாது - மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் உரிமையும் கிடையாது என்று இலங்கை அரசு மறுக்கிறது. பொதுவான சர்வதேச சட்டத்தின் மறுக்க முடியாத அம்சங்களில் சுயநிர்ணய உரிமையும் ஒன்று - அது மறுக்கப்படுகிறது. பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் "பயனுள்ள கருத்துப் பறிமாறல்' நடைபெறும் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டதைச் சுட்டிக்காட்டியும் பயன் இல்லை' என்றும் அறிக்கை கூறியது.
அறிக்கையின் இறுதி அம்சமாக கூறப்பட்டது என்னவென்றால், "நாம் முன்வைத்த நான்கு முக்கிய கோட்பாடுகள் - தமிழ் மக்களது அடிப்படையானதும் - அத்தியாவசியமான உரிமைகளுக்குப் போராடும் உணர்வுகளைப் பிரதிபலிப்பவையும் ஆகும். 1950-ஆம் ஆண்டில் சமஷ்டியாட்சி கோரியதால் அடக்குமுறையும் பாகுபாடும் தலைதூக்க, தவிர்க்க முடியாத நிலையில் ஈழமெனும் சுதந்திரத் தமிழ்நாடு கோரிக்கை உருவானது. ஆயிரக்கணக்கான தமிழர் மாண்டு, பல்லாயிரக்கணக்கானோர் சொத்துக்களை இழந்து, உழைப்பு, வசதிகள் இழந்து, அழிந்து, இன்னல்கள் அனுபவித்தது அனைத்தும் தமிழ் மக்கள் சம உரிமையோடும் - சுதந்திரமாகவும் இருப்பதற்காகவே.
""ஆகவே குரோதமின்றி பொறுமையோடு இன்று நாம் திம்புவிலிருந்து பிரகடனப்படுத்துவது, தமிழ் தேசிய இனம் சார்பில் அல்லாது பேச்சுவார்த்தைகள் திம்புவிலோ அல்லது வேறு எங்குமோ நடைபெறுவது இயலாது. பேச்சுவார்த்தையின்போது நாம் வெளிப்படுத்திய மூலக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு நியாயமான பேச்சு நடத்த இலங்கை அரசு தயாரா என்பதைத் திட்டவட்டமாக கூறும்படியும் கேட்கிறோம்.
நாம் பேச்சுவார்த்தை நடத்தி வரும்பொழுதே எமது இனத்தை பூண்டோடு அழிக்கும் இலங்கை அரசின் நோக்கம் வெளிப்படுகிறது. கடந்த சில நாட்களாக இலங்கை ராணுவத்தினரால் வவுனியாவிலும் இதரப் பகுதிகளிலும் அப்பாவி மக்கள் 200 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். நம் தாயகத்தில் தமிழ் மக்கள் சமாதானத்துடன், பாதுகாப்பாக வாழ முடியாத வேளையில் சமாதானப் பேச்சுக்கள் நடத்திக் கொண்டிருப்பது கேலிக்கூத்தாகும். சமாதானப் பேச்சை நாம் நிறுத்திக் கொள்ள முயலவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அடிப்படை நிபந்தனையான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறிவிட்டதனால் பேச்சுவார்த்தைகளே நடைபெற முடியாதிருக்கிறது''-என அவ்வறிக்கை கூறியது.
இந்த அறிக்கையை இந்திய அரசுத் தரப்புக்கு அளித்து பத்திரிகைகளுக்கும் கொடுக்கப்பட்ட நிலையில் பிரதமர் ராஜீவ் காந்தி, போராளிக் குழுவினரைச் சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் போராளிக் குழுவினர் இந்தச் சந்திப்புக்குத் தயங்கினர். இந்திய அதிகாரிகள் நெருக்குதலை அதிகரிக்க அதிகரிக்க அவை வாக்குவாதத்தில் முடிந்தது.
70: ஒரே கல்லில் பல மாங்காய்!
பேச்சுவார்த்தை தடைபடக் காரணமானவர்கள் என்ற நினைப்பில் விடுதலைப் புலிகளின் ஆலோசகர் பாலசிங்கம், டெலோ இயக்கத்தவர்களான சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகியவர்களை இந்தியா நாடு கடத்தி, ஜெயவர்த்தனவுக்கு தீவிர நண்பனாயிற்று.
இந்தச் செயல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தி.மு.க., திராவிடர் கழகம், தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ் (பழ.நெடுமாறன்) மற்றும் டெலோ அமைப்பில் உள்ளவர்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பலர் கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
"தமிழர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டிய நிலையில் உள்ள இந்தியா, சிங்களவருக்குத் துணை போவது ஏன்?' - என்று தமிழகமெங்கும் கண்டனக் குரல் எழுந்தது. இந்த ஒட்டுமொத்த எதிர்ப்பு காரணமாகவும் வெளியேற்றப்பட்ட பாலசிங்கம், சந்திரகாசன், சத்யேந்திரா மூவரையும் அமெரிக்கா கொண்டு சென்ற நிலையில், அங்கு தரையிறங்க அனுமதிக்கப்படாத நிலையிலும் இந்தியாவுக்குள் வர அனுமதிக்கப்பட்டார்கள். இச்செயலைக் கிண்டல் செய்து "அமெரிக்காவுக்கு ஓர் இலவசப் பயணம் - இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும்' என்று ஆர்.கே. லட்சுமணன் வரைந்த கேலிச்சித்திரம் பலரையும் பேச வைத்தது.
திம்பு பேச்சின் பலன் என்று எதுவும் இருக்குமானால் அந்தப் பலன் யாவும் ஜெயவர்த்தனாவையே அடைந்தது. போராளிக் குழுக்களை இந்திரா வளர்த்தார்; ஜெயவர்த்தனவோடு சாமர்த்தியமாக ராஜீவ் காந்திக்கு அவர்களுடன் பிணக்கு ஏற்பட வைத்து விட்டார். மாறுபட்ட கருத்துகளைக் கூறி, அபிப்பிராய பேதம் ஏற்பட வைத்து, போராளிக் குழுக்களின் புதிய அமைப்பான உசகஊ - க்கும் சோதனை ஏற்படுத்திவிட்டார்.
அதுமட்டுமன்றி தமிழர் விடுதலைக் கூட்டணியைத் தனிமைப்படுத்தி, அவ்வமைப்பை ராஜீவை மேலும் நெருங்க வைத்துவிட்டார். ஸ்ரீமாவோ-சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் தமிழர்-மலையகத் தமிழர்களிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியதுடன், நேரு காலத்தில் இருந்த கொள்கையை மாற்றி மலையகத் தமிழரில் பெரும்பாலோரை இந்தியாவுக்கு அனுப்ப வகை செய்ததன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய் அடித்தவர் என்று முன்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவைச் சொல்வார்கள். இப்போது ஜெயவர்த்தன அதே அணுகுமுறையை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.
திம்பு பேச்சுவார்த்தைக்கிடையே போர் கூடாது என்று ஒப்பந்தம் போட்டு போராளிக் குழுக்களும், ராணுவத்தினரும் தங்கள் நிலையில் இருந்து வெளிவரக் கூடாது என்று சொல்லப்பட்டது. ஆனால் வவுனியா சம்பவம் உணர்த்துவதென்ன? ராணுவ முகாம் அருகே உள்ள மதகடிக்குக் கீழே குண்டு வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டதைக் காரணம் காட்டி வவுனியா நூல் நிலையம் எரிக்கப்பட்டதில் 200 பேருக்கு மேல் சாவு. இதன் பின்னணி பற்றி இந்திய தரப்பு ஆராயவே இல்லை; பிரதமர் ராஜீவ் காந்தி உள்பட!
சுதந்திர தமிழ் அரசுக்காக போராடுகின்ற போதிலும் வெவ்வேறு அரசாங்க முறைமையான வடிவமைத்துக் கொள்ள இலங்கை அரசு வைக்கின்ற தீர்வுத் திட்டத்தை பரிசீலனைக்கு ஏற்கத் தயார் என்று போராளிக் குழுக்கள் அறிவித்துவிட்டன. இதற்குரிய விடையை அளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்த ஜெயவர்த்தன அரசு அதற்குத் தீர்வுத் திட்டம் அளிக்க தயாராக இல்லாத நிலையில் - வவுனியா பகுதியில், ராணுவ முகாம் அருகே உள்ள மதகடியில் வெடிகுண்டு வைத்து, வெடிக்கச் செய்து நூல்நிலையம் எரிப்பும் நடத்தியாயிற்று. போர்நிறுத்த ஒப்பந்த மீறல் என போராளிகள் கோபப்பட்டு பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறுவார்கள் என்று திட்டமிட்டே, ராணுவமும் ஜெயவர்த்தன அரசும் செய்த சதிவேலை அது என்பதை "இந்திய மத்தியஸ்த தரப்பு' கவனத்தில் கொள்ளவே இல்லை.
மாறாக, தீர்வுக்கு ஒத்துவராதவர்கள் என்று கூறி, போராளிக் குழுவினர் மீது கோபம் கொண்டனர்.
போராளிக்குழுக்களின் தயவின்றி, அவர்களை முன்னிலைப் படுத்தாமலே இலங்கை அரசுடன் தீர்வுத் திட்டம் ஒன்றுக்கு பிரதமர் ராஜீவ் காந்தி தீவிரம் காட்டினார். ஜெயவர்த்தனவின் சகோதரர் எச்.டபிள்யூ. ஜெயவர்த்தன - ராஜீவ் காந்தி ஆகிய இருவர் மட்டுமே முன்னின்று தயாரித்த திட்ட அடிப்படையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் 31 ஆகஸ்ட் 1985 அன்று வெளியிட்ட குறிப்பில், "எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி, வரைவுத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தரப்புகள் இதன் அடிப்படையில் ஓர் ஒப்பந்தத்துக்கான பேச்சு நடத்தலாம்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதில் ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரேயொரு அம்சம் இலங்கை அரசு முதன்முதலாக "அதிகாரப் பகிர்வின் ஓர் அளவாக மாகாணம் என்பதை ஏற்றுக்கொண்டது' என்பதுதான்.
71 - தோல்வியில் முடிந்த திம்பு பேச்சுவார்த்தை!
ஆனாலும், திம்பு பேச்சின்போது அளிக்கப்பட்ட நான்கு அடிப்படைக் கோட்பாடுகளின் பிரகாரம் இல்லை என்று தமிழர்கள் இவ்வரைவை ஏற்கவில்லை. இந்நிலையில், இந்திய அரசின் முயற்சியை முற்றிலுமாக நிராகரிக்க மனமில்லாத தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றவர்களுடன் பேசி 1985-ஆம் ஆண்டு செப்டம்பர் 9-ஆம் நாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதத்தை அனுப்பியது.
அக்கடிதத்தில் (அ) தமிழர் பிராந்தியங்களின் ஒருங்கிணைப்பு (ஆ) காணி பங்கீட்டதிகாரம் (இ) சட்டம் ஒழுங்கு பற்றிய அதிகாரம்-ஆகிய மூன்று அம்சங்களையும் விட்டுக்கொடுக்க தமிழர் அமைப்புகள் விரும்பவில்லை என்று தெரியப்படுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழர் குழுக்களை அழைத்து ராஜீவ் காந்தி பேசிப்பார்த்தார். முடிவுகள் எதுவும் ஏற்படவில்லை. சலிப்படைந்த ராஜீவ் "தமிழர்கள் பக்கம் தீர்வு குறிப்புள்ளது; அவர்கள்தான் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும்' என்று கருத்துத் தெரிவித்தார்.
இந்தத் தேக்க நிலையைப் போக்க தமிழர் விடுதலைக் கூட்டணி, பிரதமர் இந்திரா காந்தியின் பெருமுயற்சியால் கூட்டப்பட்ட வட்ட மேஜை மாநாட்டில் பேச உருவாக்கப்பட்ட "இணைப்பு - இ' திட்ட அடிப்படையில், இந்தியாவின் முயற்சி வீண் ஆகக்கூடாது - என்கிற எண்ணத்தில் இத்திட்டத்தை இந்திய அரசுக்கு சமர்ப்பிக்கின்றோம் (தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியீடு - 1988) என்று கூறி 1 டிசம்பர் 1985 அன்று அளிக்கப்ப்பட்ட திட்டத்தில் திம்பு பேச்சில் கூறப்பட்ட நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை.
அத்திட்ட வடிவு வருமாறு:
1. இலங்கையானது மாநிலங்களின் கூட்டரசாக அமையவும்,
2. வடக்கு-கிழக்கு மாநிலங்களில் மொழிவாரி அரசாக அமையவும்,
3. மாநிலங்களின் எல்லை, அம்மாநிலத்தின் ஒப்புதல் இன்றி மாற்றாமல் இருக்கவும்,
4. நாடாளுமன்றத்தில் அங்கத்தவம் மொழி, இன மக்களின் விகிதாச்சார அடிப்படையில் அமையவும்,
5. முஸ்லிம்கள், இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வகை செய்யவும்,
6. எந்தவொரு குறிப்பிட்ட இனத்தையும் பாதிக்கும் சட்டம் இயற்றும்போது, நாடாளுமன்றத்தில் அந்த இன பெருவாரி உறுப்பினர்கள் சம்மதம் பெற வழி செய்யவும்,
7. அரசமைப்புச் சட்டங்களில் - அது குடியுரிமைச் சட்டமாக இருந்தாலும் அதனை ஒதுக்கி வைத்து 1981-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இலங்கையில் வசித்தவர் அனைவருக்கும் குடியுரிமை வாய்ப்பு வழங்கவும்,
8. தமிழ் ஆட்சிமொழியாகவும்,
9. ராணுவம், அரசு சேவை மற்றும் வேலைவாய்ப்பில் இனவாரி மக்கள்தொகை அடிப்படையில் அதன் விகிதாச்சாரத்தை ஒட்டி அரசமைப்பில் ஏற்பாடு செய்யவும்,
10. இந்தியாவில் ஒரு மாநிலத்துக்குண்டான அரசமைப்புப்படி ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், நிதி அதிகாரம், ஆணைக்குழு அமைத்தல், நீதிமன்றப் பணிகள், சேவை அமைப்புகளுக்கு உட்பிரிவுடன் சட்டவடிவம் அமைக்கவும்,
11. மொழிவாரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க தொகுதிகள் பங்கீடு செய்யவும்,
12. மலையகத் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு, அவர்கள் வாழும் பகுதிகளை இணைத்து கிராமச் சேவைப் பிரிவு, அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்டங்கள் அமைக்கவும்,
13. மொழிவாரி மாநிலங்கள் அமையும் போது, அம்மாநிலத்துக்கு வெளியே வசிக்கும் தமிழ்த் தொழிலாளர்கள் தாம் வாழும் பகுதிகளைத் தவிர்த்து, வேறு மாநிலங்களில் வேலை நிமித்தம் வசித்தால் அவர்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் சகல உரிமைகளும் கிடைக்க வகை செய்யவும்,
14. மேற்கண்ட அனைத்துக்கும் உரிய சட்டங்களை இயற்றி அங்கீகரித்தலும் - தேவையான அளவில் அரசமைப்புச் சட்டத்திலும் மாற்றம்-திருத்தம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் வேண்டும். இதுதவிர,
15. தமிழ் மாநிலம் அமைவதற்குண்டான பல்வேறு காரணங்களை விளக்கியும், சிங்களவக் குடியேற்றங்களினால் ஏற்படும் மனித இழப்புகளைப் போக்கவும், மாநிலத்துக்குத் தேவையான அதிகாரங்கள் பற்றியும் உரிய தனித்தனி அட்டவணைகள் உடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தத் திட்டவரைவுக்கு இலங்கை அரசு மிக நீண்ட பதிலொன்றை ஏராளமான கேள்விகளுடன் எழுப்பி இந்திய அரசுக்கு அனுப்பியது. அதில் குறிப்பிடத்தக்க ஆட்சேபணைகள் என்ன?
(1) இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் "சமஷ்டி அரசு' - என்பது நடைமுறையில் இருக்கும் "ஒற்றையாட்சி' அரசுமுறைக்கு நேர் எதிரானது.
(2) மொழிவாரி மாநிலம் அமைப்பதானால் இதில் இரண்டு பகுதிகள் போக, மற்ற ஏழு மாகாணங்களை என்ன செய்வது? அவைகளும் நாளடைவில் பிரிக்கப்பட வேண்டுமா?
(3) இந்தத் திட்டத்தை இலங்கை அரசு ஏற்றால் "ஈழம்' என்கிற சொல்லைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் அளித்ததாக ஆகிவிடும்.
(4) இத்திட்ட வரைவு இலங்கை பல துண்டுகளாகப் பிரிபடும் என்பதை உணர்த்துகிறது. ஆகவே, தமிழர் விடுதலைக் கூட்டணி அளித்த திட்ட ஆலோசனைகள் ஏற்கத்தக்கதல்ல என்று இலங்கை ஒதுக்கித் தள்ளியது. திம்பு பேச்சுவார்த்தைத் தோல்வியில் முடிந்தது என்பதை இந்த அறிக்கைகள் வெளிச்சம் போட்டுக் காட்டின!
72. துயர்தீர்க்கத் தலைப்பட்ட எம்.ஜி.ஆர்!
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் இலங்கை அரசைக் கண்டித்து உண்ணாநோன்பு இருந்த எம்.ஜி.ஆர் (24-3-1985) ஒன்றிணைந்த போராளிகள் குழுவினர் (ENLF) அளித்த திட்டத்தையும், தமிழர் விடுதலைக் கூட்டணி அளித்த திட்டத்தையும் ஏற்க மறுத்த இலங்கை மீது இந்தியாவுக்கு உடனடியாக கோபம் வராததற்குக் காரணம், அன்றைய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த ரொமேஷ் பண்டாரிதான். அவரின் தவறான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களால் இந்தியத் தலைமை மெüனமாயிற்று. இதன்மூலம் இந்தியா, இலங்கைக்குச் சாதகமாக நிலை எடுத்தது என்பது வெளிப்படையாயிற்று.
அதுமட்டுமன்றி,
(அ) பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா - மூவரையும் நாடு கடத்தியது,
(ஆ) இந்திரா காந்தியின் அரசியல் ஆலோசகராக இருந்த ஜி.பார்த்தசாரதி அளித்த வரைவுத் திட்டத்தை கிடப்பில் போட்டது,
(இ) தமிழர் தேசிய இனமல்லவென்றும், அதனால் - அவர்களுக்கென தனிநாடு இல்லை என்ற இலங்கையின் கருத்தை போராளிகள் ஏற்க கட்டாயப்படுத்தியது-
(ஈ) சிங்கள அரசின் (நிறைவேற்ற விரும்பாத) மாகாண அரசுக்கு ஆதரவு தெரிவித்தது.
பண்டாரியை, இலங்கையின் விருப்பத்திற்கேற்ப இயங்குபவர் என்று போராளிகள் குற்றம்சாட்டினர். பண்டாரியைக் குற்றம் சாட்டியதற்குக் காரணம் இந்தியத் தலைமையை நேரடியாகக் குற்றம்சாட்ட விரும்பாததே என்றும் கொள்ளலாம். இது வேறு யாருக்குப் புரியாவிட்டாலும், ராஜீவ் காந்திக்குப் புரிந்தது.
இந்தச் சமயத்தில், பிரதமரின் கொள்கை வகுப்பாளர்கள் "இலங்கை விடுதலை இயக்கங்கள் ஒன்றிணைவது இந்திய நலனுக்கு ஏற்றதல்ல' என்று அளித்த ரகசியக் குறிப்பு அவருக்கு உவப்பாக இருந்தது - என்று தமிழீழ ஆதரவாளர்கள் அப்போது குற்றம்சாட்டினர்.
அன்டன் பாலசிங்கம், சந்திரகாசன், சத்தியேந்திரா ஆகிய மூவரும் நாடு கடத்தப்பட்ட சமயத்தில், தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். உடல்நிலை குன்றிய நிலையில் அமெரிக்கா புளோரிடா மாநிலத்தில் மருத்துவப் பராமரிப்பில் இருந்தார். உடன் பண்ருட்டி ராமச்சந்திரனும் சென்றிருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
"நானும் முதல்வர் எம்.ஜி.ஆரும் புளோரிடாவில் இருந்தோம். எங்களுக்குத் தகவல் கொடுத்தார்கள். எங்கள் நிகழ்ச்சிகளை ரத்து செய்து, தமிழகம் திரும்பினோம். வந்த உடன் மத்திய அரசைத் தொடர்புகொண்டு, எங்களிடம் அந்தப் பிரச்னையை விட்டு விடுங்கள், நீங்கள் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, நாடு கடத்தப்பட்டவர்களைத் திரும்ப அழைக்க வழிவகை செய்தார், எம்.ஜி.ஆர். அப்போது வெளியுறவுச் செயலாளராக ரொமேஷ் பண்டாரிதான் இருந்தார். ரொமேஷ் பண்டாரி ஒன்று கிடக்க வேறொன்று செய்பவர். அப்பவே நம்ம ஆட்கள் (போராளிகள்) ஜெயவர்த்தனாவிடம் வைர அட்டிகை வாங்கிட்டார்னு சொல்லிக்கிட்டிருப்பாங்க... அவரை நம்ப முடியாது!'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் குறிப்பிட்டார்' (எம்.ஜி.ஆரும் ஈழத் தமிழரும் - வே.தங்கநேயன்) என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் தொடர்ந்து மேலும் கூறுவதாவது,
"ஜெயவர்த்தனாவின் ஒரே நோக்கம் ராணுவத் தீர்வுதான்; இதில் மாற்றமே இல்லை - என்று உறுதியாயிற்று. இனிப் பேச்சுவார்த்தைகள் பயன் அளிக்காது என்று எம்.ஜி.ஆர். முடிவுக்கு வந்தார். இதைத் தான் வெளியிட்ட அறிக்கை மூலமும் எம்.ஜி.ஆர். தெளிவுபடுத்தியதாவது-
"இலங்கையில் தமிழர்கள் மீது ராணுவத்தின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தையும் வீணாக்கும் வகையில், இலங்கை அரசும், ராணுவமும் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர நடவடிக்கை மூலமாகவும் இலங்கை அரசை ஒரு கெüரவமான வழிக்குத் திருப்ப நாம் எடுக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை என்பது வருந்தத்தக்கதாகும்' என்று குறிப்பிட்டார்.
இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்க எம்.ஜி.ஆர். முதல் தவணையாக, உடனடி உதவியாக ரூபாய் இருபது லட்சத்தை நன்கொடையாக அளித்தார். அதுதவிர, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் பதினைந்து லட்சமும், அஇஅதிமுக சார்பில் மூன்று லட்சமும், தனது சொந்தப் பணத்திலிருந்து இரண்டு லட்சமும் கொடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அரசு ஊழியர்களிடையே நிதியும் திரட்டினார். சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தங்களது பங்களிப்பாக அளித்த ரூபாய் இரண்டு லட்சத்துக்கான காசோலையை மாநகராட்சி ஆணையர் சாந்தஷீலா, முதல்வர் எம்.ஜி.ஆரிடம் வழங்கினார். காவல் துறை சார்பாக ரூபாய் ஒரு லட்சத்து 28 ஆயிரத்துக்கான காசோலையை காவல் துறை தலைமை இயக்குநர் வி.ஆர்.லட்சுமிநாராயணன் வழங்கினார் (17-10-1985).
ஆனால் ஜெயவர்த்தன, சமாதானப் பேச்சு என்ற போக்குக் காட்டிக்கொண்டே தான் சேர்த்து வைத்திருந்த ஆயுதங்களைப் பெருமளவில் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிவைத்தார். இந்த ஆயுதங்கள் முதன்முதலாக வான்வழித் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டன. இதன்காரணமாக முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிக அளவிலான மக்கள், அகதிகளாக சொந்த நாட்டிலேயே முகாம்களில் தங்கினர். அங்கும் பாதுகாப்பில்லை. பெருவாரியான மக்கள் உயிருக்கு அஞ்சி அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறினர்.
73: சாகும்வரை உண்ணாவிரதம்!
ஜெயவர்த்தன அரசில் கப்பல் போக்குவரத்து, வர்த்தகத் துறை அமைச்சராக இருந்த லலித் அதுலத் முதலி பாதுகாப்பு அமைச்சராக மாற்றப்பட்டு, பொறுப்பேற்றுக்கொண்டதும், போராளிகள் மீது தாக்குதல் தொடுப்பதாகக் கூறி, அப்பாவி மக்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் தொடுப்பது அதிகரித்தது. இதுகுறித்து ஜெயவர்த்தன கூறுகையில், "போராளிகள் ஈழமே தீர்வு என்கின்றனர். இந்த நிலையில் ராணுவத் தீர்வையே சரியென்று நினைத்து அதுலத் முதலி செயல்படுகிறார்' என்று வாதிட்டார்.
பருத்தித் துறை, தீக்கம் பகுதியில் வைக்கப்பட்ட கண்ணிவெடியில் ஆறு போலீஸ் கமாண்டோ படையினர் கொல்லப்பட்டதையொட்டி, அரசுப் படையினர் வீதிக்கு வந்து கண்ணில் கண்ட மக்கள் மீது தாக்குதல் தொடுத்ததுடன் வல்வெட்டித் துறையும் சுற்றிவளைக்கப்பட்டது.
வடமராட்சி ஹாட்லி கல்லூரியின் லேபரட்டரியையும், நூலகத்தையும் கொளுத்தி அழித்தனர். இந்த எரிப்பில் 7,000 நூல்கள் எரிந்து சாம்பலாயின. அப்பாவிகள் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஒதியமலையில் (வவுனியா) 20 பேருக்கு மேற்பட்டோரும், ராணுவ முகாமில் இருந்து தப்பித்து ஓடியவர்கள் என்று காரணம் கூறி என்கவுண்ட்டர் முறையில் 115 பேரும் கொல்லப்பட்டனர் (1984 நவம்பர், டிசம்பரில்).
தொடர்ந்து வடமராட்சியில் ராணுவ மேஜரும் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாகக் கூறி, 50 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். இளைஞர்களாகப் பார்த்து 25 பேரைப் பிடித்து சமூகக் கூடம் ஒன்றில் அடைத்து, குண்டு வைத்து கொலை செய்தனர். மேலும் 12 பேரைப் பிடித்து வரிசையாக நிறுத்தி சுட்டுக்கொன்றனர்.
உச்சகட்ட சம்பவமாக குறிகாட்டுவான் கடற்பகுதியில் பயணிகளுடன் வந்த "குமுதினி படகை' வழிமறித்து அதிலிருந்த பயணிகள் அனைவரையும் குழந்தைகள் என்றுகூட பார்க்காமல் சுட்டுக் கொன்று குவித்தது கடற்படை. இந்தத் தாக்குதலில் இறந்தவர் எண்ணிக்கை 34 பேர். படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆகும் (1985 மே 18).
29 ஏப்ரல் 1985 நாவற்குழி ராணுவ முகாமிலிருந்து வெளியேறிய வீரர்கள், அருகில் உள்ள அரியாலை கிராமத்தில் நுழைந்து, அக்கிராமத்தை துவம்சம் செய்தனர். அங்கு வசித்த குழந்தைகள், முதியோர் என்ற வித்தியாசமின்றி கொன்று குவித்தனர். இதில் திருமணமாகி இரண்டு நாள்களான தம்பதியும் அடங்குவர்.
மகிந்தபுர, தெஹிவத்த பகுதியில் போராளிகளால் 5 சிங்களவர்கள் கொல்லப்பட்டதையொட்டி, திருகோணமலை அல்லை குடியேற்றப் பகுதிகள் 50 அப்பாவி தமிழர்களை பாதுகாப்புப் படை கொன்றழித்தது (1985 மே 31-இல்). மண்டைத் தீவு கடற்பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட 37 மீனவர்களும் தாக்குதலில் பலியாயினர் (ஆதாரம்: ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், புஷ்பராஜா).
அதே நூலில் கூறப்பட்டுள்ள இன்னொரு தகவல் அதிர்ச்சியளிக்கும். கைது மற்றும் இந்த வகைச் சம்பவங்களில் சிக்கியவர்கள் 1,12,246 பேர் என்றும் கொலைச் சம்பவங்களில் இறந்தோர் 54,053 பேர் என்றும் காணாமல் போனவர் 25,266 பேர் என்றும், பாலியல் வன்முறைக்கு பலியானவர் 12,437 பேர் என்றும் இடம்பெயர்ந்தோர் 23,90,809 பேர் என்றும் காயப்பட்டோர் 61,132 பேர் என்றும் "பிரான்சிலிருந்து தமிழர் மனித உரிமைகள் மையம்' என்னும் அமைப்பின் ஆய்வு மூலம் (1956-2004 காலங்களில்) புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தகவல் எரிமலை இதழ் மே 2005-இல் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
1986-ன் தொடக்கத்தில் எஸ்.தொண்டைமான் (இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்) சமாதானத்துக்குரிய ஆண்டாக 1986-ஐ அறிவித்து, பிரஜா உரிமைக் கோரியும் சமாதானம் வேண்டியும் பிரார்த்தனை இயக்கம் என்ற பெயரில் தொடர் இயக்கம் நடத்தப் போவதாக அறிவித்தார். ஜனவரி இரண்டாவது வாரத்தில் இந்தப் பிரார்த்தனை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு, மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
இதை முறியடிக்கும் விதத்தில் ஜெயவர்த்தன, 95 ஆயிரம் நாடற்றவர்களுக்கு பிரஜா உரிமை வழங்கப்படும் என்று அறிவித்து, அதை சட்டமாக்கவும் முயன்றார்.
இலங்கையின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் இதனைக் கண்டித்த அதே வேளையில் சட்டம் நிறைவேறியது. இதனால் தொண்டைமான் கட்சிக்கு கூடுதலாக பாராளுமன்றத்தில் 15 இடங்கள் கிடைத்து விடும் என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்தன.
இதன் எதிரொலியாக சிங்களவர்கள் தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கத் தொடங்கினர். ராணுவம் பெருமளவில் குவிக்கப்பட்டும் கலவரம் அடங்கவில்லை. ஏற்றுமதியாக இருக்கும் தேயிலைப் பொதிகளில் பயங்கரவாதிகள் நஞ்சு கலந்துவிட்டனர் என்று வதந்தி கிளப்பப்பட்டதால், வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதன் விளைவாக தேயிலை ஏற்றுமதி முடங்கும், அந்நியச் செலாவணி கையிருப்புக் குறையும் என்பதையும் சிங்கள பேரினவாதிகள் கவனத்தில் கொள்ளவே இல்லை.
சிங்களவர் பகுதியிலும் வன்முறை வெடித்தது. ஆங்காங்கு குண்டுகள் வெடித்தன. எண்ணெய்க் கிடங்குகள் வியாபார நிறுவனங்கள் தீக்கிரையாயின. முதன்முறையாக சிங்களவர் மீது பயங்கரவாத தடைச் சட்டம் பிரயோகிக்கப்பட்டு ஏராளமான பேர் கைது செய்யப்பட்டனர். வடக்கிலும் வன்முறை பரவியது.
தொடர் நிகழ்வாக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நின்றிருந்த, த்ரீ ஸ்டார் விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமுற்றனர். இந்த விமானம் மறுநாள் காலை 128 பேரை ஏற்றிக் கொண்டு "மாலத் தீவு' செல்லவிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய தந்தி நிலையம் தாக்கப்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். கொழும்பில் நடந்த இந்தத் தாக்குதல்களால், அங்கு வசித்த தமிழர்கள் அனைவரும் சந்தேக வலையில் சிக்கினர். பெரும்பாலான நிறுவனங்கள் இயங்கவில்லை; மூடப்பட்டன. அரசு நிறுவனங்களும் மூடப்பட்டன.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் லங்க சமசமாஜக் கட்சியும், இலங்கை மக்கள் கட்சியும் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கைகளால், நாட்டில் அதிகாரத்தைச் செலுத்த முடியாமல் முடங்கிவிட்டது என்று குரல் எழுப்பின.
இலங்கைக்கு ஏற்றவாறு நிலைப்பாடு எடுத்தும் ஜெயவர்த்தன இலங்கைத் தமிழர்கள் பிரச்னையில் எவ்வித அதிகாரப் பகிர்வுக்கும் உடன்படாமல் தமிழர்கள் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியதும், ராஜீவ் காந்தியை சிந்திக்கத் தூண்டின.
இந்த சிந்தனைப் போக்குக்கு தமிழகத்தில் நிலவிய எதிர்ப்பும், அவரது ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட ஒப்பந்தம் சார்ந்த விமர்சனமும் முக்கிய காரணிகளாக அமைந்தன. இதனைச் சமாளிக்க, தனது அன்னை இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாட்டுக்குத் திரும்பி, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தி, அம்மக்கள் விரும்பும் தீர்வினை நிறைவேற்றும் வகையில் உருப்படியான ஒரு திட்டத்துடன் வரும்படி ஜெயவர்த்தனாவை நெருக்கத் தலைப்பட்டார்.
1986 ஜூன் 25-இல் நடைபெற்ற அரசியல் கட்சி மாநாட்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன அளித்த வரைவுத் திட்டத்தை வாபஸ் வாங்கும் வரை - சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மகா சங்கத்தைச் சேர்ந்த புத்தபிக்குகள் மிரட்டினர். மிகவும் குழப்பமான ஒரு சூழ்நிலையில் இலங்கை தத்தளித்தது!
74: மாகாண சபை மசோதா!
இந்த நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரம் பரவலாக்கல் குறித்த வரைவுத் தீர்மானத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் மாநாட்டைக் கூட்டினார் ஜே.ஆர். ஜெயவர்த்தன. இந்த மாநாடு 25-6-1986 அன்று கொழும்பில் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை ஆதரிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும் நவசமாஜக் கட்சியும், தமிழர்களின் விருப்பங்களில் சிலவற்றில் மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தனர். ஆயினும், தமிழர்களுக்கென சில உரிமைகளை வழங்கலாம் என்ற கருத்துகள் கொண்டிருந்ததால், அனைவரும் ஏற்கத்தக்க தீர்வு ஒன்றை எட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாநாட்டைக் கூட்ட வேண்டும் என்று அந்த இரண்டு கட்சிகளும் அதிபரை நெருக்கின.
இலங்கையின் சீரழிந்த பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையில் அமைதியின்மை ஆகியவற்றைப் போக்க தமிழ்ப் போராளிக் குழுக்களிடம் பேசுவதற்காகத் தான் தமிழ்நாட்டுக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்தார் குமாரணதுங்கா. அவரின் தமிழ்நாட்டுப் பயணத்தைத் தொடர்ந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவருக்கு மட்டும் அரசியல் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்தது.
இந்த மாநாட்டின் நோக்கம் மாகாண சபை உருவாக்கத்தில் - சிங்களக் கட்சிகளிடையே ஒத்த கருத்தை உருவாக்குவது ஆகும். இம்மாநாட்டில் திம்பு பேச்சில் கலந்துகொண்ட ஏனைய குழுக்கள் கலந்து கொள்ள வாய்ப்புத் தரப்படவில்லை. மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகள் தொடரும்வரை பேச்சுகளில் பங்கெடுப்பது சாத்தியமில்லை என்பதால் அ.அமிர்தலிங்கம் மாநாட்டில் பங்கேற்க மறுத்தார்.
மாநாட்டில் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, சம சமாஜக் கட்சி, நவசமாஜக் கட்சி, இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை கலந்து கொண்டன. சுதந்திரக் கட்சியும், ஐக்கிய முன்னணியும் புறக்கணித்தன. தீர்வுத் திட்டம் தயாரிப்பதில் போராளிகள் குழுவினர் பங்கேற்காவிட்டால் அது தீர்வினை எட்டாது என குமார் பொன்னம்பலம் (தமிழ் காங்கிரஸ்) கூறி ஒதுங்கிக் கொண்டார்.
ஜெயவர்த்தனாவின் வரைவுத் திட்டம் இலங்கை அரசு கெஜட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம் மாநாட்டில் ஜே.ஆர். ஜெயவர்த்தனா முடிவுரையாக குறிப்பிட்ட விஷயங்கள்தான் இவ்வரைவுத் திட்டத்துக்கான முன்னுரையாகும்.
அந்த முடிவுரையில் "மாகாண சபை' என்கிற அம்சத்தை இதற்கு முன்பு இருந்த இலங்கை அதிபர்கள் எந்தெந்தக் காலத்தில் எல்லாம் முன்வைத்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சோல்பரி - டொனமூர் ஆணைக் குழுக்களும், 14 ஜூலை 1926-இல் நடைபெற்ற மாணவர் காங்கிரஸில் எஸ்.ஆர்.டி.பண்டார நாயக்கா உரையாற்றியபோதும் இதுபற்றிக் குறிப்பிட்டதாகத் தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி, ஒரு சமஷ்டி அரசு பற்றி கண்டி பிரதானிகள் சங்கம் 1927-இல் டொனமூர் ஆணைக் குழுவிடம் யோசனை கூறியதாகவும், அதனை ஒரு மாகாணத்தில் பரீட்சித்து பார்க்க வேண்டும் என்று தங்களது 1928-ஆம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்டதாகவும், அதன்படி வடக்கு-கிழக்கு மாகாணங்கள், கண்டிப் பிரதேசம், தெற்கு-மேற்கு மாகாணங்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டது என்றும் தெரிவித்தார்.
மேலும், பண்டாரநாயக்கா உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது 1948-இல் மாகாணசபை மசோதாவை தாக்கல் செய்ய இருப்பதாகவும், அவர் பிரதமரான சமயத்தில் (1957) பிரதேச சபை மசோதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென்றும் (1957 மே 17-இல் வரைவு கெஜட்டில் பதிவாயிற்று) பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இதுபற்றி பேசப்பட்டதாகவும், உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஜெயவர்த்தன அதில் குறிப்பிட்டிருந்தார்.
அவர், வரைவுத் திட்ட முடிவுரையில் மேலும் விவரிக்கையில், டட்லி-செல்வா ஒப்பந்தத்தில் கூறப்பட்டு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது என்றும், ஆனால் நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றும்,
பின்னர் 1977-இல் தேர்தல் அறிக்கையில் யுஎன்பி மாவட்ட சபைகள் மசோதா தாக்கலாகி, நிறைவேறியது என்றும், அதே தொழிற்பாட்டையில், "மாகாண சபை' அம்சம் தற்போதும் தொடர்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதா இலங்கை அரசுக்கும் காலஞ்சென்ற இந்திரா காந்தியின் இந்தியப் பிரதிநிதியான ஜி. பார்த்தசாரதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களின் அடிப்படையில், 1984-இல் நடைபெற்ற அனைத்துக் கட்சி வட்ட மேஜை மாநாட்டிலும், திம்புப் பேச்சிலும், தில்லியின் இணக்கத்திலிருந்து உருவானவை ஆகும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வரைவுத் திட்டத்திலும் "தனி ஈழம்' தவிர்க்கப்பட்டதுடன் ஒற்றையாட்சியை வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு மாகாண சபை அமையவும், நகர்ப்புறத்தில் நகரசபைகளும், ஒவ்வோர் அரசாங்க முகவர் (ஏஜிஏ) பிரிவிலும் கிராமிய மட்டத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட பிரதேசசபை அமையவும் சட்ட வடிவு வகை செய்கிறது.
மாகாண ஆளுநர், முதலமைச்சர், அமைச்சர்கள் அவர்களின் தகுதி, நியமனம், நீதிமன்றம், காவல்துறைத் தலைவர், சட்டம், நிதி அதிகாரம், தேர்தல் குறித்து 18 அம்சங்களை உள்ளடக்கி, அதன் உள்பிரிவுகளையும் விளக்குகிறது.
பாதுகாப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு, வெளிவிவகாரம் உள்ளிட்ட 27 வகை அதிகாரங்கள் மத்திய அரசைச் சார்ந்தது என்றும், சட்டம்-ஒழுங்கைப் பொறுத்தவரை சில அதிகாரங்கள் மாகாண சபைக்கும், மாவட்ட சபைக்கும் பரவலாக்கப்படும் என்றும், காவல்துறை தேசியப் பிரிவு, மாகாணப் பிரிவு என இரு அடுக்குகள் கொண்டதாக இருக்கும் என்றும் வரைவு கூறியது.
இந்த வரைவில் காணி உடைமை மாற்றங்கள் தெளிவற்றதாக இருக்கவே தமிழர் விடுதலைக் கூட்டணி பல திருத்தங்களைக் கூறியது. அவையும் உள்படுத்தப்பட்டு அரசியலமைப்பில் திருத்தம் (1985 செப்டம்பர்) கொண்டு வரப்பட்டது.
அதன் பின்னரும் தமிழர் விடுதலைக் கூட்டணி சில ஐயப்பாடுகளைத் தெரிவித்து, அனைத்து முடிவுகள், செயல்களில் "தேசியக் கொள்கை' என்பதும் மாகாணத்தில் மத்திய அரசு தற்போது பயன்படுத்தும் நிலங்கள் தவிர, இதர நிலங்களை மாகாணத்தின் பொறுப்பில் விட வேண்டும் என்றும், மாகாணத்தின் பொறுப்பில் காணி உடைமை மாற்றத்தை விட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தது.
இந்தச் சூழ்நிலையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்திலும் பதவி மாற்றம் நிகழ்ந்தது. பிரச்னைக்குரிய ரொமேஷ் பண்டாரி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஏ.பி.வெங்கடேஸ்வரன் என்கிற தமிழ் அதிகாரி வெளியுறவுச் செயலாளரானார். பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் ராஜாங்க அமைச்சராக இருந்த ப. சிதம்பரம் தலைமையில் ஒரு குழு, கொழும்பு சென்றது. இலங்கைக்குழுவில் சிதம்பரம் தவிர்த்து ஏ.பி.வெங்கடேஸ்வரன், ரொமேஷ் பண்டாரி, அரசியல் சட்ட நிபுணர் எஸ். பாலகிருஷ்ணன், வெளிவிவகார அமைச்சகச் செயலாளர் ரஞ்சன் மாத்தையா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவ்வருகையால் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு ஏற்பட்டது.
75: மதுரையில் டெசோ மாநாடு!
தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (பஹம்ண்ப் உங்ப்ஹம் நன்ல்ல்ர்ழ்ற்ங்ழ்ள் ஞழ்ஞ்ஹய்ண்ள்ஹற்ண்ர்ய்) உருவாக்கப்பட்டு, அதன் தலைவராக திமுக தலைவர் மு.கருணாநிதி தேர்வு செய்யப்பட்டார். இவ்வமைப்பின் முக்கிய குறிக்கோள்கள்:
* இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு,
* இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவது,
* போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவறாமல் இருப்பது,
* தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தவித தியாகத்துக்கும் தயாராக இருப்பது,
* இந்தக் கடமைகளைச் செய்யும்போது மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துடன் ஏற்பது - ஆகியனவாகும்.
இந்த 5 உறுதிமொழிகளை "டெசோ' அமைப்பு சார்பில் நடத்தப்படும் பேரணி - பொதுக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.கருணாநிதி படித்து, மக்கள் ஏற்பதை நடைமுறைப்படுத்தியிருந்தனர்.
இந்த அமைப்பில் தி.மு.க., தி.க., தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் ஆகியவை அங்கம் வகித்தன. இக்கட்சிகள் தனித்தனியே ஈழப் பிரச்னைக்காக ஆதரவு தெரிவித்தாலும், உலக அரங்கில் கொண்டு செல்லவேண்டும் என்ற நோக்கில் இவ்வமைப்பு தனது பணிகளை மேற்கொண்டிருந்தது.
மதுரையில் 4-5-1986 அன்று கூட்டப்பட்ட மாநாட்டில் தமிழகத் தலைவர்கள் மட்டுமன்றி, இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலர் பங்கேற்றனர். வாஜ்பாய் (பாஜக), என்.டி. ராமராவ், பி.உபேந்திரா (தெலுங்கு தேசம்), எச்.என்.பகுகுணா (லோக்தள்) பல்வந்த் சிங் ராமுவாலியா எம்.பி.(அகாலிதளம்), பி.உன்னிகிருஷ்ணன் எம்.பி. (காங்கிரஸ்-எஸ்), ராச்சையா (ஜனதாக்கட்சி), அப்துல் ரஷீத் எம்.பி.(காஷ்மீர் மாநில தேசிய மாநாட்டுக் கட்சி), ஜஸ்வந்த் சிங் எம்.பி., இந்துஸ்தான் முன்னணி சார்பாக சுப்பிரமணிய சாமி எம்.பி., அஸ்ஸôம் கணபரிஷத்தைச் சேர்ந்த தினேஷ்கோஸ்வாமி எம்.பி., க.அன்பழகன், கி.வீரமணி, ப.நெடுமாறன், அய்யணன் அம்பலம், தேவசகாயம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகவும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
தவிர, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, விடுதலைப் புலிகள், ஈரோஸ், ஈபிஆர்எல்எஃப், பிளாட், புரோடெக் ஆகிய இலங்கைத் தமிழர் அமைப்பு பிரநிதிகளும் கலந்துகொண்டனர்.
மதியம் நடந்த கூட்ட அரங்கில் இலங்கைத் தமிழர்கள் இலங்கை நிலைமைகளை எடுத்துரைக்க, எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தீர்மான விவரங்களை விவாதித்து முடிவுக்கு வந்தனர். சுமார் நாலரை மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
தீர்மான விவரங்களை திமுக தலைவர் மு.கருணாநிதி வாசித்தார்:
* இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு தனது அலட்சியப் போக்கை கைவிட வேண்டும் என்றும், மத்தியஸ்தர் நிலையிலிருந்து இந்தப் பிரச்னையை அணுகாமல் இலங்கைத் தமிழர்களோடு நேரடியாகவும் நெருக்கமாகவும் தொடர்புள்ள நாடு எனும் அடிப்படையில் அணுகி, இந்தப் பிரச்னையைத் தீர்த்து வைக்க வாய்ப்புள்ள அனைத்து வழிகளிலும் முயலும் வண்ணம் தனது கொள்கையை மறுபரிசீலனை செய்து தமிழ் மக்கள் சமத்துவத்தோடும், பாதுகாப்போடும் கண்ணியத்தோடும் வாழ வழிசெய்ய வேண்டும் என்றும் இந்திய அரசை வலியுறுத்தி இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
* மனித குலத்திற்கு எதிரான இனப் படுகொலைச் செயலில் ஈடுபட்டு தமிழர்களை அழிப்பதற்கு தனக்குக் கிடைக்கும் நிதியுதவிகளை இலங்கை அரசாங்கம் பயன்படுத்தும். ஆதலால் இலங்கைக்கு எத்தகு நிதியுதவிகளையும் அளிக்க வேண்டாம் என்று நிதியுதவி அளிக்கும் நாடுகளையும் சர்வதேச நிதியுதவி நிறுவனங்களையும் இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
* இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் திட்டமிட்ட இனப் படுகொலைச் செயல்கள் அதனுடைய பொய்யான தகவல்களையும் மாறுபாடான செய்திகளையும் மீறி, உலகத்தின் நாகரிக மக்களின் கண்முன்னால் அப்பட்டமாகத் தெரியத் தொடங்கி விட்டன. ஆகவே, இந்தப் பிரச்னையை உலக அமைப்புகளான ஐ.நா. மன்றம், காமன்வெல்த் மாநாடு, அணிசேரா நாடுகள் அமைப்பு ஆகியவனவற்றில் மிகத் தீவிரமாக எழுப்பி, தீர்வு காணுமாறு இந்திய அரசாங்கத்தை இந்த மாநாடு வற்புறுத்துகிறது.
மாநாட்டின் துவக்க உரையில், அந்த நாடுகளிடம் சொல்ல வேண்டும் என்று இந்திய அரசிடம் நாம் கேட்டுக் கொள்ளவில்லை. அந்த நாடுகளிடமே நேரடியாக கேட்கத் தொடங்கி விட்டோம். அந்த நிறுவனங்களையே நேரடியாக கேட்கத் தொடங்கிவிட்டோம்.
அதையும் மீறி இலங்கையிலே படுகொலை தொடர நிதியை வழங்கி, அதைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு, அதன் கொலை வாளுக்கு உடந்தையாக இருக்க முனையுமேயானால், அந்த நாடுகள் எங்கள் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்றும் - இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கின்ற அத்துணை மக்களின் அதிருப்தியையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்-என்றும் மு.கருணாநிதி தெரிவித்தார்.
அவர் தனது வரவேற்புரையில், "தமிழ்நாட்டு அளவிலேதான் இந்தப் பிரச்னை பேசப்படுகிறது என்று சொல்பவர்களின் வாயை அடைப்பதற்காக இந்திய அளவில் இந்தப் பிரச்னை பேசப்படுகிறது என்பதைக் காட்டுவதற்காக - இது மேலும் மேலும் வளரும் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத்தான் இந்த மாநாட்டில் என்.டி. ராமராவ் தமிழில்தான் பேசினார்.
தமிழர்களை மட்டுமே பாதிப்பதால் இப் பிரச்னையில் இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளோர் முக்கியத்துவம் தருவதில்லை - கவனம் செலுத்துவதில்லை என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது... இப்பிரச்னையில் தமிழர்கள் மாத்திரமல்ல, இந்திய நாடே இலங்கைவாழ் தமிழர்களின் கவலையைப் பகிர்ந்து கொள்கிறது. எனவே, நீங்கள் பங்கேற்றுக் கொண்டது தேசிய ஒருமைப்பாட்டினை வலுப்படுத்தவும் பயன்படும் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை.
கடந்த ஆண்டு ஜெனிவாவில் கூடிய ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவில் இப் பிரச்னையை அர்ஜென்டினா எழுப்பிட முனைந்தபோது பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறி இந்தியா அதனைத் தடுத்துவிட்டது. கடைசியாக அரைகுறை மனதுடன் இந்த ஆண்டு (1986) ஜெனிவாவில் இந்தியா பிரச்னையை எழுப்பியதே தவிர, இதுகுறித்து பிறநாடுகளோடு பேசி விளக்கிட எந்த முயற்சியும் எடுக்காததால் உரிய பலன் எதுவும் கிட்டவில்லை...
1983 ஜூலையிலிருந்து இலங்கை காவல் துறையும் ராணுவமும் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ராணுவத் தீர்வு காணப் போவதாக பிப்ரவரி மாதம் ஜெயவர்த்தனா பிரகடனம் செய்தார். அதை நிறைவேற்றும் வகையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகள் மீது விமானத் தாக்குதல்களுக்கு ஆணையிட்டார். "பாதுகாப்புப் பிரதேசங்கள்' என்று வரையறுத்துக் கொண்டு ராணுவம் தமிழர்களை அழிக்கத் தொடங்கியது. ஆகாய மார்க்கத்திலும், கடல் மார்க்கத்திலும், தரை மார்க்கத்திலும் முப்படைகளும் தாக்குதல் நடத்தி தமிழர்களைக் கொன்று - சொத்துக்களைச் சூறையாடியது...
இலங்கைப் பிரச்னை குறித்து இந்திய அரசுக்கு ஒரு திட்டவட்டமான கொள்கை கிடையாது. ஏனோதானோ என்ற இந்தப் போக்கினால் பயங்கரமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜெயவர்த்தனா விரித்த வலையில் இந்தியா விழுந்ததன் விளைவு - அந்நியச் சக்திகளைப் பயன்படுத்த அவருக்கு மேலும் வாய்ப்பு ஏற்பட்டது. தற்போது இலங்கை ராணுவம் பாகிஸ்தானில் பயிற்சி பெற்று வர அனுப்பப்படுகிறது - பாகிஸ்தான் மட்டுமல்ல இஸ்ரேலிய மொசாத்தும், பிரிட்டனின் எஸ்.எ.எஸ். படையினரும் - தென்னாப்பிரிக்கா ஒற்றர் படையினரும் மற்றும் அதிரடி குண்டர் படையினரும் இலங்கை அரசுக்கு துணை நிற்கும் நிலை...
இலங்கை மனப்பூர்வமாகவோ, நேர்மையாகவோ பேச்சுவார்த்தையில் ஈடுபடாத வரையில் எந்த மட்டத்தில் பேச்சுக்கள் நடத்தப்பட்டாலும் அதில் ஒரு பலனும் ஏற்படப் போவதில்லை. ஏமாற்றுக் கலையில் வல்லமை மிக்க ஜெயவர்த்தனா இந்தியத் தூதுக் குழுவை வரவேற்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் "சர்வதேச நிதி உதவி ஸ்தாபனம்' கூட்டம் நடைபெறும் நேரத்தில் தனக்கு நிதியுதவியைப் பெறுவதற்காக இலங்கை இனப் பிரச்னையில் அரசியல் தீர்வு காண தீவிர முயற்சி எடுப்பதாகக் காட்டிக்கொள்ள இலங்கைக்கு ஓர் "அலிபி' தேவை. இந்த ஆண்டு அந்த "அலிபி' நாடகத்தை இந்தியாவே நடத்திவிட்டது. இந்தப் பெரும் உதவி செய்த ராஜீவ் காந்திக்கு ஜெயவர்த்தனா நன்றியுள்ளவராக இருப்பார்... என்றும் மு.கருணாநிதி குறிப்பிட்டார்.
பத்திரிகையாளர்களிடையே அவர் பேசுகையில், இவ்வகையான மாநாடு முதல் தடவையாக நடைபெறுகிறது. தமிழர் பிரச்னைகளை விளக்குவதற்காக இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மாநாடு நடத்தப்படும். அடுத்த மாநாடு ஆந்திரப் பிரதேசத்திலும் - புது தில்லியிலிலும் நடத்தப்படும்! என்றும் மு.கருணாநிதி தெரிவித்தார். மாநாட்டின்போது இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் - டெலோவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கசியவும், ஸ்ரீசபாவுக்கு ஆபத்து எதுவும் வந்துவிடக் கூடாது என்றும், சகோதர யுத்தம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அனைத்துக் குழுக்களும் ஒருங்கிணைந்து தமிழர் பிரச்னையில் செயல்பட வேண்டும் எனவும் என்.டி.ஆர்., வாஜ்பாய் போன்றோர் கேட்டுக்கொண்டதற்கிணங்க டெசோவின் தலைவர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுடன் "தாங்கள் ஒற்றுமையாகச் செயல்படுவதையொட்டி உறுதி அளிக்கவேண்டும்' என்றும் கேட்டதற்கு, தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பாக அ.அமிர்தலிங்கம், எல்டிடிஈ சார்பாக திலகர், டெலோ சார்பாக மதி, புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈரோஸ் சார்பாக இரத்தினசபாபதி, டிஇஎல்எம் சார்பாக ஈழவேந்தன், ஈபிஆர்எல்எப் சார்பாக வரதராஜபெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவா ஆகியோர் "இனி ஒன்றுபட்டு செயல்படுவதாக' உறுதியளித்தார்கள்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.