ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 143 149
143: இந்தியாவில் அரசியல் மாற்றம்!
அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற
நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில், அவ்வாறு நடந்து கொண்டிருக்கவும்,
அமைதிப்படையால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தினருடன் ஏற்படப் போகும் மோதலைத் தவிர்க்க
பிரபாகரன் விரும்பினார். எனவே,
அவர் இருவகையான யோசனைகளை வெளியிட்டார்.
ஒன்று,
தமிழ் தேசிய ராணுவத்தினர், அவ்வமைப்பில் இருந்து
தானாக வெளியேறுவது, இரண்டாவதாக இந்த அழைப்புக்குப் பலன் ஏற்படாத நிலையில், ஏற்படப்போகும்
மோதலில் சிங்களப் படையினர் கலந்துகொள்ளாது ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதாகும்.
எனவே,
இரண்டாவது கோரிக்கையை பாலசிங்கம் மூலமாக
இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்குத் தெரியப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்
தேசிய ராணுவத்தினருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார்.
அவ்வேண்டுகோளில், ""பலாத்காரமாக
சேர்க்கப்பட்ட இளைஞர்களாலும்
நிர்ப்பந்தத்தின் பேரில் சேர்ந்துகொண்ட
இளைஞர்களாலும் தொடங்கப்பட்ட தமிழ்
தேசிய ராணுவம், இன்று ஓர் இக்கட்டான
நிலையில் உள்ளது.
அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து
அமைதிப்படை வெளியேறியதைத் தொடர்ந்து
நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் அப்
படைப்பிரிவிலிருந்து வெளியேறி எம்மிடம்
சேர்ந்துள்ளார்கள். தற்போது
மட்டக்களப்பிலிருந்தும் அமைதிப்படை
வெளியேறுகிற நிலையில், தமிழ் தேசிய
ராணுவத்தினரைக் குற்றவாளிகளைப் போல
லாரிகளில் ஏற்றி திருகோணமலைக்குக்
கொண்டு செல்லப்படுகிறது. நாளை
திருகோணமலையிலிருந்தும் அமைதிப்படை
வெளியேறும். அப்போது தமிழ் தேசிய
ராணுவத்தினரை இந்தியாவுக்குக் கொண்டு
செல்லப்போவதில்லை. மாறாக அவர்களை
விடுதலைப் புலிகளுடன் போரிடுமாறு
உத்தரவிடப் போகிறது.
அப்படியொரு யுத்தம் நேரிட்டால் வீணாகச்
செத்துமடியப் போகிறீர்கள். எனவே, தமிழ் தேசிய ராணுவத்தில் அங்கம் வகிக்கும் இளைஞர்களே, இன்னும் சில நாள்களில் அமைதிப்படையால் பூரணமாகக் கைவிடப்படப்போகும் நீங்கள்
தொடர்ந்து அவர்களுடன் சேர்ந்து குற்றச் செயல்களைப் புரிந்துகொண்டு
இருக்காது, உடனடியாக ஆயுதங்களுடன் வந்து சரணடையுங்கள். அதன் மூலம்
தமிழீழப் போராட்டத்தில் நீங்களும் பங்காளிகளாக மாற முடியும்'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது (விடுதலைப் புலிகள் அறிக்கை: 30-11-1989).
விடுதலைப் புலிகளின் வேண்டுகோளை அடுத்து, ஏராளமான தமிழ் தேசிய ராணுவத்தினர் மட்டக்களப்புப் பகுதியில் சந்திரவெளி, முனைக்காடு, அம்பலாந்துறை, வண்டாருமுனை, மணல்பட்டி, வாழைச்சோனையிலும், திருகோணமலையில் கின்னியா, தம்பலகாமம் எனும் இடத்திலும்,
கிளிநொச்சியில் கல்முனை, உண்ணிச்சை பழுகாமம், மண்டூர், தம்பிலிவில் மற்றும் வவுனியாவில் குழுமாட்டுச் சந்திப்பிலுமாக ஈபிஆர்எல்எஃப்,
ஈஎன்டிஎல்எஃப் அணியைச் சேர்ந்தோர் சரணடைந்தனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் கிடைத்தன.
மீதமிருந்த தமிழ் தேசிய ராணுவத்தினர்
மீது முதலில் அம்பாறையிலும் பின்னர்
மட்டக்களப்பிலும் புலிகள் இயக்கம்
தாக்குதலைத் தொடுத்தது. இத் தாக்குதலின்
காரணமாக பல ராணுவத் தளங்கள் விடுதலைப்
புலிகள் வசமாயின. ஏராளமான இளைஞர்கள்
சரணடைந்தார்கள்.
இறுதியில், ஈபிஆர்எல்எஃப்பின்
தீவிர உறுப்பினர்கள் மட்டுமே புலிகளை
எதிர்த்தனர். சரணடைந்த தமிழ் தேசிய
ராணுவத்தினரை கிழக்கு மாவட்டத்தில் உள்ள
பெற்றோர்களை அழைத்து அவர்கள் வசம், அவர்களது பிள்ளைகளை
ஒப்படைத்தனர்.
கிழக்கு மாகாணத்தில் அமைதிப்படை
வெளியேறிய இடங்களில் எல்லாம், புலிகள்
ஆயுத பலத்தால் தங்களின்வசம்
கொண்டுவருவதை கிழக்கு மாகாண சபையின்
முதலமைச்சர் வரதராஜ பெருமாள்
எதிர்த்தார்.
இதுகுறித்து ராஜீவ் காந்தியிடமும்
பிரேமதாசாவிடமும் மனுப் போட்டு
முறையிட்டார். வரதராஜ பெருமாளின்
மனுமீது எந்த நடவடிக்கையும் எடுக்க
விருப்பமில்லாத நிலையில் பிரேமதாசா
இருந்தார். நடவடிக்கை எடுக்க ராஜீவ்
காந்தி விரும்பினாலும் வரப்போகும்
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஆயுதம்
வாங்கிய விவகாரத்தில் எழுந்த கடுமையான
பிரசாரம் போன்ற காரணங்களினால், இந்தப் பிரச்னையில் தீவிரக் கவனம் செலுத்த முடியாதவராக ஆனார்.
இந்திய அரசியலிலும் மாற்றம்
நிகழவிருந்தது. நாடாளுமன்றத்துக்கு டிசம்பரில் தேர்தல்
நடக்கவிருந்தது. காங்கிரûஸ வீழ்த்த கூட்டணியால்தான் முடியும் என்று, அதே 1977-வது
ஆண்டு சூத்திரப்படி, முன்னாள் காங்கிரஸ்காரரான வி.பி.சிங் தலைமையில்
தேசிய முன்னணி என்ற பெயரில் களம் அமைத்தனர். திமுக,
தெலுங்குதேசம், அகாலிதளம், பாஜக உள்ளிட்ட
கட்சிகள் தேசிய முன்னணி என்ற
அமைப்பில் சேர்ந்து, ஒரே குடையின் கீழ்
தேர்தலைச் சந்தித்தனர். தேர்தல்
முடிவில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
தேசிய முன்னணி சார்பில் வி.பி.சிங்
பிரதமரானார் (டிசம்பர் 2, 1989).
வி.பி.சிங் ஆட்சிப் பொறுப்பேற்றதும், இலங்கைத் தமிழர்களின்
பிரச்னையில், அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. "ராஜீவ் காந்தி
ஸ்ரீலங்காவில் தலையிட்டமை
ஒரு பெரிய ராஜதந்திரத் தவறுதலாக' வி.பி.சிங் அரசு
கருதியது என அடேல் பாலசிங்கம் தனது நூலில் குறிப்பிடுகிறார்.
அவர் மேலும் இதுகுறித்து
குறிப்பிடுகையில், "ராஜீவ் காந்தி புரிந்த தவறு நீடித்துச்
செல்லக்கூடாது என்பதில் வி.பி.சிங்,
உறுதியாக இருந்தார். 1990 மார்ச்
31-க்குள் இந்திய அமைதிப்படையின் கடைசிச் சிப்பாய் இந்தியா திரும்புவார்' எனவும் தேதி நிர்ணயமானதாகவும் தெரிவித்திருக்கிறார்.
பிரேமதாசாவுடன் நடைபெற்ற
பேச்சுவார்த்தைக்கிடையே பிரபாகரனின்
குடும்பத்தினர் கொழும்பு விமான
நிலையத்தில் வந்து இறங்கினர். இதற்கு
முன்பு,
1987 அக்டோபரில் அமைதிப்படை தொடுத்த
யுத்தத்தின்போது, யாழ் மக்களோடு மக்களாக நல்லூர் கந்தசாமி கோயிலில் தங்கியிருந்த
பிறகு, மதிவதனியும் குழந்தைகளும் எங்கு சென்றார்கள் என்று குறிப்பு
எதுவும் இல்லை. தற்போது, இவர்கள் பிரபாகரனுடன் சேர்ந்து வாழ, அடேல் பாலசிங்கம் வழியமைத்துக் கொடுத்தார். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள்
நடந்து, பாஸ்போர்ட் ஒழுங்குகள் செய்யப்பட்ட பின்னர், இவர்கள் கொழும்பு
வந்து சேர்ந்தனர்.
இவர்களைக் கொழும்பு
விமானநிலையத்திலிருந்து வன்னியிலுள்ள அலம்பில் பகுதிக்கு அழைத்துச்
செல்ல ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலும், அமைதிப்படையினருடன்
மோதலில் ஈடுபட்டதாக விடுதலைப்
புலிகளின் 22-1-1990 தேதியிட்ட
செய்திக் குறிப்பு கூறுகிறது. இந்த
அறிக்கையில் துரோகச் செயலில் ஈடுபட்ட
ஈஎன்டிஎல்எஃப் கும்பல், விடுதலைப்
புலிகளுடன் தாக்குதலில் ஈடுபட்டபோது, இவர்களுக்கு உதவ
நாவற்குழி முகாமில் இருந்து வெளியேற முயன்ற அமைதிப் படையினரை, வெளியே வர வேண்டாமென
விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் இந்த வேண்டுகோளையும் மீறி ஜீப்
வண்டி சகிதமாக வந்த இந்திய
ராணுவத்தினர் மீது தாக்குதல்
நடத்தியதில், வண்டி எரிந்து சேதமானதுடன்,
அதில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, அரியாலை
முகாமிலிருந்தும் அமைதிப்படையினர்
வெளியே வந்தபோது, அவர்களையும் வெளியேற
வேண்டாம் என புலிகள் வேண்டுகோள்
விடுத்தும், வெளியேறியவர்கள் மீது
தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அந்த
அறிக்கை கூறுகிறது.
இந்தப் போக்கு எதனால் ஏற்படுகிறது
என்பது குறித்து பழ.நெடுமாறன் எழுதிய
"இந்தியப் படையே வெளியேறு' நூலில் ஒரு கருத்தினை
வெளியிட்டுள்ளார். "சில
இந்தியத் தளபதிகள் இவ்வளவு காலம் போராடி
ஆயிரக்கணக்கான வீரர்களைப்
பலிகொடுத்த பிறகும், மூவாயிரம் கோடி
ரூபாய்க்கு மேல் செலவிட்டபிறகும்
எதையும் சாதிக்காமல் திரும்புவது
தலைகுனிவானது என நினைக்கிறார்கள். எனவே,
அவர்கள் போரைத் தொடர்ந்து
நடத்தவேண்டுமென வற்புறுத்துகிறார்கள்.
இந்தத் தளபதிகளில் பெரும்பாலானோர்
மேற்கு மற்றும் மத்திய இந்தியாவைச்
சேர்ந்தவர்கள். இதுவரை இந்திய
ராணுவத்திலுள்ள அதிகாரிகள் தமிழர்களை வீரப்
பரம்பரை என்று ஏற்றுக்கொண்டதே இல்லை.
எனவே இப்போதும் அதை ஒப்புக்கொள்ள
மறுக்கிறார்கள்' என்று பழ.நெடுமாறன்
குறிப்பிட்டுள்ளதை இங்கு பதிவு செய்வது
தேவையாகிறது.
144: சுய நிர்ணய ஆட்சி அல்லது சுதந்திரத் தமிழ் ஈழம்
மார்ச் 31-க்குள் இந்தியப்படை திரும்பும் என்று பிரதமர் வி.பி.சிங் அறிவித்தபிறகு,
வடக்கு - கிழக்கு மாகாண
கவுன்சிலின் முதலமைச்சர் சென்னைக்கும் தில்லிக்கும் பயணம் மேற்கொண்டார். இந்திய
அமைதிப்படை திரும்புவதற்கு முன்பாக வடக்கு - கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு
உரிய அதிகாரங்களைப் பெற்றுத்தரவும்,
மக்களின் பாதுகாப்புக்குரிய
ஏற்பாடுகளைச் செய்து தரவும் வேண்டும் என வலியுறுத்தினார்.
தில்லியில் அவரது கோரிக்கை ஏற்கப்படாத
நிலையில், சென்னை வந்து தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதியை மீண்டும்
சந்தித்தார்.
ஈழத் தமிழர்கள் மீது அமைதிப்படை இழைத்த
கொடுமைகளைப் பொறுத்துக் கொள்ளமுடியாது என்று தெரிவித்த முதலமைச்சர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளுடன் இணக்கமாகி,
வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தைப்
புலிகளிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தினார் (சுதந்திர வேட்கை-அடேல்
பாலசிங்கம் பக்-334).
இதன் பின்னர், ஈபிஆர்எல்எஃப்
இயக்கத் தலைவர் பத்மநாபா கையெழுத்திட்ட 25
பிப்ரவரி 1990 தேதியிட்ட
மனு ஒன்றை அவர், தமிழக முதலமைச்சர்
மு.கருணாநிதியிடம் அளித்ததோடு, பத்திரிகைகளுக்கும்
விநியோகித்தார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி அமைந்த
வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தை நிலை
நிறுத்த இதுவரை 600 பேரைப் பலி
கொடுத்திருப்பதாகவும், இந்த ஆட்சியின் மூலம்
மக்களுக்கு நன்மை செய்வதில் விடுதலைப்
புலிகள் மற்றும் ஈரோஸ் அமைப்பின்
தாக்குதல் மற்றும் பிரசாரங்களை
எதிர்கொண்டுள்ளதாகவும் இந்திய-இலங்கை
நாடுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை
மதிக்கவும் செயல்படுத்தவும் இலங்கை
தயாராக இல்லாத நிலையில், இதனைச் செயல்படுத்தவே
இம் மனு அளிக்கப்படுவதாகவும்
குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை அரசு ஒரு காலமும் தமிழரின்
உரிமைகளை ஏற்றுக்கொள்ளாது என உறுதியாகத்
தாம் நம்புவதாக அம்மனுவில்
ஈபிஆர்எல்எஃப்-வினர் தெரிவித்தனர்.
அம் மனுவில் பிரேமதாசா அரசின் அணுகுமுறை
குறித்தும் விவரிக்கப்பட்டிருந்தது. பிரேமதாசா மிகவும் தந்திரமாக, தமிழர் குழுக்களுக்கிடையே ஒற்றுமை இல்லாத நிலையில், மாகாண அரசைக்
கலைத்துவிட்டு, திரும்பவும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுவதின் நோக்கம் வெளிப்படையானது. இந்த வடக்கு-கிழக்கு மாகாண அரசைக் கலைப்பது
மற்றும் தேர்தல் நடத்துவதன் மூலம் அவர் லாபமடையப் பார்க்கிறார்.
பிரேமதாசாவின் கட்சிக்கு தற்போதைய மாகாண கவுன்சில் நிர்வாகத்தில் ஒரேவொரு
இடம் மட்டுமே கிடைத்திருக்கிறது. தேர்தல் என்று வந்தால் இந்த எண்ணிக்கை
உயர்ந்து 15-லிருந்து 16 இடங்கள் வரை கிடைக்கும் என அவர் எதிர்பார்க்கிறார்.
தற்போதுள்ள மாகாண கவுன்சிலில் தமிழ்க்
கட்சிகள் 55 இடங்களைப்
பெற்றிருக்கின்றன. தேர்தல் என்று
வந்தால் இந்த எண்ணிக்கை 48-க்கும் கீழ்
செல்லும் என்றும் அவர் நம்புகிறார்.
மேலும்,
தேர்தல் வந்தால் இதன்மூலம் அதிகாரப்
பரிமாற்றம் குறித்துள்ள பிரச்னையும், சிங்களக் குடியேற்றப் பிரச்னையும் தமிழர் பகுதிக்கு போலீஸ் படைப் பிரச்னையும் மூழ்கடிக்கப்பட்டுவிடும் என்றும் அவர்
நம்புகிறார்.
தேர்தல் மூலம் ஸ்ரீலங்காவின் முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த
முடியும் என்றும் பிரேமதாசா
நினைக்கிறார். தற்போது முஸ்லிம் காங்கிரஸ்
கட்சிக்கு 17 இடங்கள் இருக்கின்றன.
புதிதாகத் தேர்தல் வந்தால் எட்டு அல்லது
பத்து இடங்கள்தான் முஸ்லிம் காங்கிரஸ்
கட்சிக்குக் கிடைக்கும் என்றும்
அவர் கணக்குப் போட்டுள்ளார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தல் வந்தால்
தமிழ்க் குழுக்களிடையே மோதல்
ஏற்பட்டு,
ரத்த ஆறு ஓடட்டும் என்றும்
விரும்புகிறார். இதன் மூலம் சிங்களப்
பேரினத்தின் மீதான தமிழர்களின்
தாக்குதல் பலவீனமடையும் என்றும் நம்புகிறார் என்றும்
விவரிக்கப்பட்டிருந்தது.
முதலமைச்சர் கருணாநிதிக்கு
ஈபிஆர்எல்எஃப் தந்த அம் மனுவில் சில
விருப்பங்களும் பட்டியலிடப்பட்டிருந்தன.
(அ) வடக்கு-கிழக்கு மாகாண
கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள்
வழங்குவதுடன், மக்களின் பாதுகாப்புக்கும் உறுதி செய்ய அனைத்துத்
தமிழர் கட்சிகளும் பாடுபடுவது; இதற்கான முயற்சியை
தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி
மேற்கொள்வது; (ஆ) மேற்கண்டவற்றைச் செய்ய இலங்கை அரசுக்குக்
காலக்கெடு விதிப்பது; (இ) இதற்கென ஒரு குழு அமைப்பதுடன் அதை மத்திய அரசு
(இந்தியா) கண்காணிக்க வகை செய்வது;
(ஈ) இவ்வகையான முயற்சிகள் எதுவும்
வெற்றிபெறாத நிலையில், "சுதந்திரத் தமிழீழம்'
என்கிற ஜனநாயக வழியிலான
நாட்டை இந்திய அரசு அங்கீகரிப்பதுடன் இதற்கான அனைத்து ஒத்துழைப்பு மற்றும்
உதவி அளிப்பது ஆகியவற்றைத் தெரிவித்திருந்தது.
இதுதவிர,
ஒற்றையாட்சி முறையில் உண்மையான
வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில்
அமையும்போது அதிகாரப் பரிமாற்றம், நிதிவசதி, குடியேற்றம், தமிழ் மாகாண எல்லை வரைவு, காவல் பணி, வடக்கு-கிழக்கில் தங்கியிருப்போருக்கான திட்டமிட்ட வாக்குரிமை, நிதியாதாரம் பெருக்குவதற்குண்டான அதிகாரம், வெளிநாட்டு ஏஜென்சிகள் வெளியேறுவது உள்ளிட்ட 19 அம்சங்கள் கொண்ட
யோசனைகளும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
மேலும்,
இடைக்கால அரசு குறித்த யோசனை ஒன்றும்
அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போதுள்ள மாகாண கவுன்சில் அரசை
அதன் போக்கில் அனுமதித்து, 1991 மார்ச்சில் தேர்தலை நடத்துவது என்றும் இவ்வாறான நிலையில் யாரும் ஆயுதங்களைக் கையாளக்கூடாது என்றும், அல்லது தற்போதுள்ள வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் நிர்வாகத்தில் அனைத்து
தமிழ்க்குழுக்களும் பங்குகொண்டு 55 இடங்களைப் பகிர்ந்து கொள்வது என்றும் இந்த இடங்களைப் பகிர்வு செய்வதில் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி முடிவுப்படி
செயல்படுவது என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. அல்லது, விடுதலைப் புலிகள் தனித்து ஆட்சி புரிய விரும்பினால் தங்களது 38 இடங்களையும்
அளித்துவிட்டு நிர்வாகத்திலிருந்து,
விலகிக் கொள்ளவும் தயாராக இருப்பதாக அம்
மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இறுதி வாசகமாக, "ஒற்றையாட்சி
அடிப்படையில் என்றால் தமிழர்களே ஆளும் சுய
நிர்ணய ஆட்சி; இல்லையென்றால், சுதந்திரத் தமிழீழம்' என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
145: புலிகளின் இரண்டு கோரிக்கைகள்
இப்படிப்பட்ட சூழலில் தமிழக முதலமைச்சர்
மு.கருணாநிதியிடமிருந்து பாலசிங்கத்துக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. எவ்வளவு விரைவில்
சென்னை வரமுடியுமோ, அவ்வளவு விரைவில் வரும்படிச் சொன்னதும், இந்தத் தகவலை பிரபாகரனிடமும் பிரேமதாசாவிடமும் பாலசிங்கம் தெரிவித்தார்.
அந்தத் தொலைபேசி அழைப்பு வந்த இருநாள்கள் கழித்து, பாலசிங்கம், அடேல் பாலசிங்கம், யோகி உள்ளிட்டோர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.
இவர்களது வருகையும் தங்குமிடமும்
ஆரம்பத்தில் ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. பின்னர் இவர்கள் தங்கியிருந்த துறைமுக
விருந்தினர் இல்லத்தில் ஏற்பட்ட பரபரப்பு மற்றும் முதலமைச்சர் வருகை
முதலியவற்றால் வெளியுலகுக்குத் தெரியவந்தது.
இவர்களின் சந்திப்பில், முதலமைச்சருடன்
முரசொலி மாறனும் உடனிருந்தார்.
இவ்வகையாக அடுத்தடுத்து மூன்று நாள்கள்
இவர்களது சந்திப்பு நிகழ்ந்தது.
இந்தச் சந்திப்பில் ஈபிஆர்எல்எஃப்
தெரிவித்தக் கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. பாலசிங்கமோ, புலிகள் புதிய தேர்தலைச்
சந்திக்க விரும்புவதாகக் கூறியதுடன்,
தற்போதுள்ள வடக்கு-கிழக்கு மாகாணசபை, தவறான வழிமுறைகளால் தேர்தல் நடத்தப்பட்டு உருவானதாகும் என்றும்
விளக்கினார்.
இவர்கள் ஆட்சி நடத்திய முறைகளால் மக்கள்
வெறுப்புற்று இருக்கிறார்கள்
என்றும்,
புதிதாகத் தேர்தல் நடந்தால், தாங்கள் மிகப்பெரிய
அளவிலான வெற்றியைப் பெற முடியும் என்றும் விளக்கினார்.
இது குறித்து, அடேல் பாலசிங்கம்
தனது நூலில், "இறுதியில் புலிகளின்
நிலைப்பாட்டைக் கருணாநிதி
அங்கீகரித்தார். நிர்வாகத்தில் பங்கேற்பது
குறித்து வலியுறுத்துவதைத் தவிர்த்தார்' எனக் குறிப்பிட்டுள்ளார் (பக்.335).
இறுதியில் பாலசிங்கம் குழுவினர், வைகோ, கி.வீரமணி மற்றும்
தங்கள் ஆதரவாளர்களைச் சந்தித்தபின்,
கொழும்பு திரும்புவதற்கு முன்பாக பத்திரிகையாளர்களையும் சந்தித்தனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில், பிரேமதாசா-புலிகள்
சந்திப்பு மற்றும் பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்து விளக்கினார்கள்.
அமைதிப்படை வெளியேற்றம்-அதன் பின்னர் வரப்போகும் நிகழ்வுகள் குறித்து
விளக்குகையில், அமைதிப்படையுடன் கைகோர்த்தவர்களின் ஆட்சி தானே போய்விடும்
என்று நம்புவதாகவும்,
அந்த ஆட்சி என்பது மாபெரும் மோசடித்
தேர்தல் மூலம் அமைக்கப்பட்டது என்றும்,
அந்த ஆட்சி என்பது தமிழீழ மக்களின்
விருப்பங்களைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை என்றும்
பாலசிங்கம் தெரிவித்தார்.
இலங்கையில் அமைதி திரும்பிய சூழ்நிலை
நிலவியது. தெற்கில் ஜே.வி.பி.யினரை
பிரேமதாசா கட்டுப்படுத்தியிருந்தார்.
சிங்களப் படைகளுக்கும் புலிகளுக்கும்
மோதல் எதுவும் நிகழாத நிலையில், அமைதிப்படையும் நாடு
திரும்புவதற்குண்டான முயற்சிகளில் தீவிரம் காட்டியதால், வடக்கிலும் மோதல்
இல்லை. அமைதிப்படை வெளியேறிய பிறகு அந்த நிலைகளை,
புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
பேச்சுவார்த்தை என்பது தற்சமயம் இலங்கை
அதிபருக்கும் புலிகளுக்குமான
பேச்சுவார்த்தையாக நடந்து
கொண்டிருந்தது. அதிபரின் சார்பாக அமைச்சர் ஹமீது அவ்வப்போது
பாலசிங்கம் குழுவினரைச் சந்தித்து நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தார்.
புலிகள் அப்போது இரு கோரிக்கைகளை
வலியுறுத்தினர். ஒன்று, ஈபிஆர்எல்எஃப்
தலைமையிலான வடக்கு-கிழக்கு மாகாண
கவுன்சிலைக் கலைக்கவேண்டும் என்பதாகும்.
அடுத்து,
வரப்போகும் மாகாண கவுன்சிலில் புலிகள்
பங்கேற்க வகை செய்யும் விதமாக இலங்கை அரசமைப்பின் 6-வது சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறுவது.
6-வது சட்டத் திருத்தம் என்பது,
இலங்கையில் 1978-ஆம்
ஆண்டில், ஜெயவர்த்தனா அரசால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத்
திருத்தமாகும். அதன்மூலம் ஒற்றையாட்சி வலியுறுத்தப்பட்டதுடன், நாட்டைத் துண்டாடும் போக்கும் தடுக்கப்பட்டது.
அத்துடன்,
பிரிவினை கோருபவர்களின் அமைப்பு தடை
செய்யப்படும் என்றும் அவ்வமைப்பில் அங்கம் வகிப்போரின் அடிப்படை உரிமைகளான
குடியுரிமை, வாக்களிக்கும் உரிமை மற்றும் பேச்சு, எழுத்துச் சுதந்திரம்
யாவும் ரத்து செய்யப்பட்டது. மேலும் அந்த நபரின் சொத்துகளைப் பறிமுதல்
செய்யவும் இந்தத் திருத்தம் வகை செய்தது.
அது மட்டுமன்றி, இலங்கை அரசால் நடத்தப்படும்
தேர்தலில் பங்குபெறுவதற்கு
முன்பாக ஒற்றையாட்சி அரசுக்கு விசுவாசப்
பிரமாணம் மேற்கொள்ளவேண்டும் என்ற
விதியும் இதில்
சேர்த்துக்கொள்ளப்பட்டது.
இவ்விதியே தற்போது விடுதலைப்
புலிகளுக்கு இடைஞ்சலாக அமைந்தது.
ஒற்றையாட்சி அரசுக்கு விசுவாசம்
தெரிவித்து, பிரமாணம் ஏற்க விடுதலைப் புலிகள் தயாராக
இல்லையென ஹமீதிடம் தெரிவித்தனர்.
சுயநிர்ணய உரிமைக்குப் போராடும்
புலிகளுக்கு இந்த விதி அவமானகரமானதாகும்
என்றும்,
சகல உரிமைகளையும் பறிக்கும் இந்த 6-வது சட்டத்திருத்தம்
வாபஸ் பெறப்பட்டால்தான்,
தேர்தலில் தங்களால் பங்கேற்க முடியும்
என்றும், புலிகள்
தரப்பில் வாதிடப்பட்டது.
தங்களைத் தாங்களே
தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை, அடிப்படையான
உரிமையென்றும், இதை உலகெங்கிலும்
உள்ள நாடுகளில் காணமுடியும் என்றும்
இப்படி வலியுறுத்துவது பிரிவினை ஆகாது
என்றும், புலிகள் விளக்கினர்.
"ஒருவர் தனது அரசியல் எதிர்காலத்தைத் தேர்வு செய்யும் உரிமையைத்
தடை செய்யும் 6-வது சட்டத்திருத்தம் ஒழிக்கப்படாவிட்டால், விடுதலைப் புலிகள் மக்களாட்சி அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள்
என்றும் தேர்தலில் பங்கெடுக்கமாட்டார்கள்' என்றும்
பிரேமதாசாவிடம் புலிகள் தெரிவித்தனர் (ஆதாரம்: சுதந்திர வேட்கை.அடேல் பாலசிங்கம், பக்.336-337).
பிரேமதாசாவைப் பொறுத்துவரையில், விடுதலைப் புலிகளின்
கோரிக்கைகளில் வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சில் நிர்வாகத்தைக் கலைப்பது என்பது நடக்கக்கூடியதுதான். ஆனாலும்,
அதற்குத் தகுந்த காரணம் வேண்டும். ஒரு
மாகாண அரசைக் காரணமின்றி கலைக்க,
13-வது திருத்தச் சட்டம் தடுக்கும். எனவே, அமைதிப்படை
வெளியேற்றத்துக்குப் பிறகு அந்த நிர்வாகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி தானாக
ஏற்படுவதையே பிரேமதாசா விரும்பினார். அதனால்,
பிரேமதாசா அந்த விஷயத்தில் ஆர்வமற்றவராக
இருந்தார்.
6-வது சட்டத்திருத்தத்தை வாபஸ் பெறுவது என்பதோ அவரால் நினைத்துப் பார்க்கவும், கோரிக்கையை நிறைவேற்றவும் முடியாதவராக இருந்தார். காரணம் இந்தச் சட்டத்திருத்தம் என்பது சிங்களத் தீவிரவாதிகளைச் சமாதானப்படுத்தவென்றே ஜெயவர்த்தனாவால் உருவாக்கப்பட்டதாகும்.
அந்தச் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற்றால்,
சிங்களப் பேரினவாதிகளால் ஏற்படப்போகும் எதிர்ப்பை சமாளிப்பது எப்படி என்பதே அவரது சிந்தனையாக
இருந்தது.
மேலும். பிரேமதாசா அடிப்படையில்
ஒற்றையாட்சி என்பதில் நம்பிக்கை கொண்ட
சிங்கள தேசியவாதியாவார். அதுமட்டுமன்றி, சட்டத் திருத்தத்தை
வாபஸ் பெறக்கூடிய அளவுக்கு நாடாளுமன்ற அவையில் அவருக்குப்
பெரும்பான்மையுமில்லை. எனவே, மற்ற கட்சிகளின் தயவை நாடுவதில் உள்ள சிரமமும் அவரை
நோகவைத்தது.
இக் காரணங்களால் விடுதலைப் புலிகளின் 6-வது சட்டத் திருத்தம்
வாபஸ் என்ற கோரிக்கை அவருக்கு வெறுப்பூட்டியது. எப்பாடுபட்டாவது விடுதலைப்
புலிகளை ஜனநாயக வழிக்குத் திருப்புவது என்ற அவரின் விருப்பம், நிறைவேறாமல் போய்விடுமோ என்ற பதைப்பும் அவரிடம் இருந்ததால், தனது கோபத்தை வெளிக்காட்டாதிருந்தார்.
ஆகவே,
இந்தப் பிரச்னை பேச்சுவார்த்தைக்கு ஒரு
முட்டுக்கட்டையாக இருந்ததால், மேற்கொண்டு எந்தப் பேச்சும் நிகழாதவாறு அது தடுத்தது.
146: ஈழ மக்களாட்சி குடியரசு!
விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி
கட்சி தொடங்கப்பட்டதும் ஒவ்வொரு
மாவட்டத்திலும் அதன் விரிவாக்கம்
தொடங்கிற்று. இதனை மக்களிடையே கொண்டு
செல்ல ஒரு மாநாடு அந்த அமைப்புக்குத்
தேவைப்பட்டது. இந்த மாநாட்டை
மட்டக்களப்பு மாவட்டத்தில்
நடத்துவதென்றும், அதற்கான இடமாக "வாகரை'
என்கிற கடற்கரையோரம் அமைந்த
சிற்றூர் தெரிவு செய்யப்பட்டது.
இவ்வாறாக மக்கள் முன்னணியின் முதல்
மாநாடு வாகரையில் பிப்ரவரி 24-இல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கலந்துகொள்ள வடக்கு-கிழக்கில் உள்ள பல்வேறு ஊர்களில் இருந்தும் பிரதிநிதிகள் வாகரையில் வந்து
குழுமினர்.
கொழும்பு ஹில்டன் ஓட்டலில் தங்கியிருந்த
பேச்சுவார்த்தைக் குழுவினரான
பாலசிங்கம் உள்ளிட்டவர்கள் ஹெலிகாப்டர்
மூலம் மட்டக்களப்பு வந்து சேர்ந்து,
அங்கிருந்து வாகனங்களில் வாகரை வந்து
சேர்ந்தனர்.
அம்பாறை,
மட்டக்களப்பிலிருந்து அமைதிப் படை
வெளியேறியதைப் போன்றே முல்லைத் தீவு,
வவுனியா,
மன்னார்,
கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில்
இருந்தும் அமைதிப் படை வெளியேறியிருந்தது. யாழ் மற்றும் திருகோணமலையில்
மட்டும்தான அமைதிப் படை வெளியேற வேண்டியிருந்தது.
இவ்வாறாக அமைதிப் படை வெளியேற்றம், தமிழ் தேசிய
ராணுவத்தைக் கட்டுப்படுத்தியது உள்ளிட்ட நிகழ்வுகளால் மக்கள் முன்னணி
உறுப்பினர்களிடையே மகிழ்ச்சிப் பெருக்கு நிலவியது. மாநாட்டு நிகழ்வுகள் ஒருவாரம்
வரை தொடர்ந்தது. மாநாட்டில்,
தேசிய,
சமூகம் குறித்த பல தீர்மானங்கள்
ரகசியமாக விவாதிக்கப்பட்டன.
வெளியே தெரிய வந்த தீர்மானங்களில், (அ) சாதியக் கொடுமைகளை
வேரறுத்து, சமூகநீதி காக்க உழைப்பது மற்றும் அதில் முழு ஈடுபாட்டுடன்
போராடுவது (ஆ) பெண் விடுதலை- மக்கள் முன்னணியின் வேலைத் திட்டத்தில்
ஒன்றாக்கப்படுவது (இ) பெண்களின் திருமணத்தில் சீதனமுறையால் ஏற்படும் அவலங்களையும்
அதனால் ஏற்படும் சுரண்டல் மற்றும் துன்புறுத்தப்படுதலையும் ஒழிக்கப்
பாடுபடுவது (ஈ) வடக்கு-கிழக்குப் பகுதிகளில் மக்கள் முன்னணியை நிறுவி
மக்களை அதில் ஈடுபடுத்தச் செய்து,
அவர்களை அதன் நிர்வாகத்தில்
பங்கெடுக்கச் செய்வது போன்றவை முக்கியமானவையாகும். பெண்கள் குறித்த தீர்மானங்களை
மகளிர் நிர்வாகிகளே கொண்டுவந்தனர்.
முக்கியத் தலைவர்கள் கூடியிருந்த
நேரத்தில் எந்தவிதமான அசம்பாவித
சம்பவங்களும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற
எச்சரிக்கை உணர்வு, மாநாட்டு
ஏற்பாட்டாளர்களுக்கு இருந்தது. அதன்
காரணமாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
கண்ணுக்குப் புலப்படாத வகையில்
செய்யப்பட்டிருந்தன.
வடக்கு-கிழக்கு இடைக்கால அரசு
குறித்தும், தற்போதுள்ள மாகாண அரசு
நிர்வாகத்தில் புலிகள் பங்கெடுப்பது
குறித்தும் யோசனைகளைத் தமிழக
முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் அளித்து
இலங்கை திரும்பினார் வரதராஜ
பெருமாள்.
இந்திய அமைதிப் படை, தனது இறுதிக்கட்ட பயண
ஏற்பாடுகளை திருகோணமலையில்
நடத்திக் கொண்டிருந்தது. பிப்ரவரி 25-ஆம் நாளில் கட்சியின்
செயலாளர் பத்மநாபா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் ஒரு மனு அளித்திருந்தார். ஆனால்,
ஒரே வாரத்துக்குள் எதிர்பாராதவிதமாக, அதாவது மார்ச் முதல் தேதி அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
தற்போதுள்ள மாகாண கவுன்சிலில்
இடம்பெற்றுள்ள அங்கத்தினர்களைக் கொண்ட
குழு,
"அரசியல் நிர்ணய சபை'யாக மாறுகிறது
என்றும், "சுதந்திரத் தமிழ்
அரசு'க்கான அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பை மாகாண
கவுன்சிலில் இடம்பெற்றவர்கள் உருவாக்குவார்கள் என்றும் அறிவித்தார்.
அவ்வறிப்பில், இந்த அரசியல்
சட்டத்தின்படி அமையும் அரசுக்கு "ஈழ
மக்களாட்சிக் குடியரசு' என அழைக்கப்படும்
என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு வெளியான உடன் இலங்கை
அரசு அதிர்ச்சியடைந்தது. இது
கிட்டத்தட்ட "சுதந்திரப் பிரகடனம்' என்றே அரசு கருதியது.
இந்த தன்னிச்சையான அறிவிப்பு பிரேமதாசாவை கடுமையாகப் பாதித்தது.
கடும்கோபத்தில் இருந்த அவர், பதிலுக்கு எந்த
நடவடிக்கையும் எடுக்காமல்
மெüனமாக இருந்தார். இந்திய அமைதிப் படையின் வெளியேற்றம் என்பது
தீவிரமாக நடந்துகொண்டிருந்த நேரம். இறுதிக்கட்ட நடவடிக்கையாக, திருகோணமலைத் துருப்புகள் வெளியேற வேண்டியதுதான் பாக்கி. இந்த நேரத்தில்
எந்த ராணுவ நடவடிக்கையையும் மேற்கொள்ள பிரேமதாசா விரும்பவில்லை என்பதாக
இலங்கைப் பத்திரிகைகளில் செய்தி வெளியாயிற்று.
இந்திய அமைதிப் படையினர் முழுவதுமாக
இலங்கையைவிட்டு வெளியேற அவர் காத்திருப்பதாக,
கொழும்பு ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.
உடனடியாக நடவடிக்கை எடுக்க அவரது
அமைச்சர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்க,
சிங்கள ராணுவத் தலைமையும்
தாக்குதலுக்குத் தயாரானது. இவையெல்லாவற்றுக்கும் பிரேமதாசாவின் மெüனமே
முட்டுக்கட்டையானது.
147: அமைதிப்படை தாயகம் திரும்பியது!
‘The Soldier, above all other
people, prays for peace, for he must suffer and bear the deepest wounds and
scars of war’- General Douglas MacArthur.
என்கிற வாசகங்கள், சென்னைக்
கோட்டையிலிருந்த அமைதிப்படைத் தலைமையகத்தில்,
லெப்டினன்ட் ஜெனரல் எ.எஸ். கல்கத்
இருக்கையின் பின்னே தொங்கும் அட்டையில்
இடம்பெற்றிருந்தது. இவ்வாசகம் ராணுவ
வீரர்களிடையே பிரபலமான வாசகமாகும். அது
எந்த நாட்டு ராணுவமாக இருந்தாலும்
பொருந்தும்.
"இலங்கையில் உள்ள தமிழர்கள் அபாயத்தில் சிக்கிக்
கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காக்க நாம் செல்கிறோம் என்று எங்கள் வீரர்களுக்கு
நாங்கள் சொன்னோம். ஆனால்,
திடீரென்று யாருக்காக நாங்கள் போராடப்
போனோமோ, அவர்களுடனேயே நாங்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது' (அர்ஜுன் கத்தோஜ்.எக்கானமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி கட்டுரையில்) என்று
இந்திய ராணுவத்தின் அதிரடிப் படைக்குத் தளபதியாக இருந்தவர்
கூறியிருக்கிறார்.
ஆனால்,
அமைதிப் படையினர், இலங்கையின் தமிழர்
பகுதிகளில் தரையிறங்கியதும்
குடிமைப் பொருள்களை வழங்கும் வேலையிலும், அடிப்படை வசதிகளான
குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதி சீரமைப்பிலும் ஈடுபட்ட நிலையிலும், அவர்களிடம் எந்திரத் துப்பாக்கிகள் இருந்தன. டாங்கிகள் போன்ற தளவாடங்களும், ராக்கெட்டுகளும் அதை
இயக்குகிற லாஞ்சர்களும்கூட முகாமில் இருந்தன. கூடவே ஒலி, ஒளிபரப்பு
சாதனங்களும் முகாம்களில் பொருத்தப்பட்டிருந்தன. இவ்வகையில் பார்க்கும்போது
அவ்வீரர்களுக்குப் போரிடவும் நேரும் என்ற உண்மை தெரிந்துதான்
இருக்கும். போர் என்றால், அதில் ஈடுபடுகிற வீரனுக்கு ஜெனரல் டக்ளஸ் மெக்ஆர்தர்
குறிப்பிட்டவாறு,
"போர்வீரன், மற்றவர்களைவிட மேலானவனாக இருந்தபோதிலும், அமைதியை விரும்பியபோதிலும்,
அமைதியை நிலைநாட்ட என்று சொல்லப்பட்ட
யுத்தங்களின்போது அவன் துன்பங்களும் துயரங்களும்,
ஏன் ஆழமான காயங்களும் பெறுவதில்
இருந்துத் தப்பிக்க முடியாது'
என்பது உண்மையாகத்தான் இருக்கும்.
இந்திய அமைதிப்படையின் வீரர்களுக்கும் அதுவே நேர்ந்தது.
அமெரிக்கர்களுக்கு ஒரு வியட்நாம், ரஷியர்களுக்கு ஓர்
ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு ஓர் இலங்கை என்ற உதாரணம் நின்று
நிலைத்துவிடும்படியாகக் கிட்டத்தட்ட 31 மாதங்கள் இலங்கையின் வடக்கு-கிழக்கில் நிலைகொண்டிருந்தது இந்திய அமைதிப்படை. தமிழர் பகுதிகளில் அறிவிக்கப்படாத
யுத்தத்தைத் தொடர்ந்ததன் மூலம் 1115
பேரை இழந்து, ஆயிரக்கணக்கான
வீரர்கள் படுகாயமுற்று, நான்கு பிராந்தியங்களில் முகாமிட்டிருந்த 48 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பியிருக்கிறார்கள்.
இந்திய-இலங்கைப் பிரச்னையில் இந்திய
ராணுவம் சிக்கிக்கொண்டதை வெளிப்படையாக ராணுவத்தில் உள்ளவர்கள் பேச முடியாது. பேசினால்
விசாரணை வரும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது ("சண்டே' வார இதழ்:14-20 மே 1990).
ஆனால்,
உளவுப் பிரிவுத் தகவல் சிலவற்றை அதே
சண்டே இதழ் வெளியிட்டிருக்கிறது. உளவுப் பிரிவுத் தகவல்படி, "5,000 பேராக
இருந்த விடுதலைப் புலிகளை 1,500
ஆகக் குறைத்துவிட்டது என்றும், இதில் 850 பேர் வவுனியாக் காட்டில் அடைக்கலம் புகுந்ததாகவும், 170 பேர்
யாழ்குடாவிலும், 100 பேர் கிளிநொச்சியிலும்,
150 பேர் திருகோணமலையிலும், 250 பேர் மட்டக்களப்பிலும் மறைந்து கொரில்லா யுத்தத்தில் ஈடுபட்டதாகவும்' தெரிய வருகிறது.
அதுமட்டுமன்றி, "அமைதிப்படையினர்
1,200 புலிகளைக் கொன்றதாகவும்
காயமுற்றோர் எண்ணிக்கை 850 என்றும், சரணடைந்தவர்கள் 263 பேர் என்றும் அதே உளவுப் பிரிவுத் தகவலில்'
கூறப்பட்டுள்ளதாகவும் சண்டே இதழ் வெளியிட்டுள்ளது.
இதன் பின்னர் புலிகள் புதிய ஆட்களைத்
தேர்வு செய்து, அவர்களுக்குப் பயிற்சி அளித்ததாகவும் அதே உளவுத் தகவலில்
குறிப்பு உள்ளது.
விடுதலைப் புலிகள் குறித்து இந்தியத்
தளபதிகள் கூறுவது என்ன?
*"வவுனியா காட்டில் புலிகளைத் தேடியபோது ஒவ்வொரு அடியையும்
கவனமாக எடுத்துவைக்க வேண்டியிருந்தது. கண்ணி வெடிகள் இருக்கலாம் என்ற
கவனத்தில் நடக்கும்போது மரங்களையும்கூட போராயுதங்களாக, புலிகள்
பயன்படுத்தினர்' என்கிறார் லெப்டினன்ட் கர்னல் பி.சி. காடோச்.
*"வன்னிக் காட்டில் எங்களது முதல் எதிரி புலிகளே அல்ல; அங்கு நிலவிய வெப்பம், வறண்ட காற்றுதான். இதனால் ஏற்பட்ட வறட்சியால் தாகம் எடுத்தது. குடிக்க நீரில்லை,
நீர் நிலைகளும் வறண்டுவிட்டன. வீரர்கள்
தாகத்தால் தவித்தனர்.
*லெப்டினன்ட் ஜெனரல் தீபிந்தர் சிங் தனது அனுபவத்தை எழுதும்போது, "பிரபாகரனை
உயிருடனோ, உயிரற்ற நிலையிலோ பிடிக்காதது ஏன் என்று கேட்கிறார்கள். ஒரு
தனிமனிதரை மட்டும் தனிமைப்படுத்திப் பாதுகாப்பதோ அழிப்பதோ, இதுபோன்ற
சூழ்நிலையில் இயலாத செயலாகும். ஆனால் ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது.
இதில், அப்பட்டமான உண்மை என்னவென்றால்,
விடுதலைப் புலிகள் இயக்கத்தில்
இளையதலைமுறைத் தலைமை சிறப்பாக உருவாகியுள்ளது என்பதுதான்.
பிரபாகரனே இல்லாவிட்டாலும் இளைய தலவைர்கள் வரிசையாக முன்வந்து, போரைத் தீவிரமாக
நடத்துவார்கள். புலிகள் இயக்கம் ஒருபோதும் கலைந்து விடாது' என்று தனது நூலில்
குறிப்பிட்டுள்ளார் (தமிழீழம்
சிவக்கிறது-பழ.நெடுமாறன்).
*மட்டக்களப்பில் பணியாற்றிய பிரிகேடியர் சிவாஜி பட்டேல், "பிரபாகரன்
ஒரு மாவீரர். அவரின் ராணுவத் தந்திரங்கள் திகைக்க வைக்கின்றன. அவர்
தனது போராளிகளுக்கு இத்தகைய பயிற்சியை எப்படி அளித்தார் என்பது
புரியாத புதிராக இருக்கிறது' என்று கூறியுள்ளார்.
*யாழ்ப்பாணத்தில் அதிரடிப்படைத் தளபதியாக இருந்த அர்ஜுன்
காத்தோஜ், "மக்களின் முழுமையான ஆதரவைப் பெற்றிருக்கும் விடுதலைப் புலிகள்
போன்ற கட்டுக்கோப்பான இயக்கங்களை எந்த ராணுவமும் எளிதில் வெற்றிகொள்ள
முடியாது. கல்வியில் நூறு சதம் பெற்ற யாழ்ப்பாண இளைஞர்களை மூளைச் சலவை
செய்து புலிகளின் இயக்கத்தில் சேர்க்க முடியாது. இளைஞர்கள் விரும்பியே அவ்வியக்கத்தில் சேர்ந்திருக்கிறார்கள். யாழ் பல்கலை
அவர்களுக்கு நாற்றங்கால் மாதிரி. அங்கு படித்து, புலிகள் இயக்கத்தில்
சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள்,
கண்ணிவெடிகள் தயாரிப்பில் மிகுந்த
தேர்ச்சி பெற்றவர்களாகத் திகழ்கிறார்கள்'
என்று கூறியுள்ளார்.
இந்தக் குறிப்புகள் மேலும் நீளும்.
இவ்வாறெல்லாம் கூறிய அமைதிப்படை
வீரர்களும், உயர் அதிகாரிகளும்
இலங்கையை விட்டு 1990-ஆம் ஆண்டு மார்ச்
24-ஆம் தேதி கிளம்பினர்.
148: பிரேமதாசாவின் நயவஞ்சகம்!
அமைதிப்படை சென்னைத் துறைமுக வளாகத்தில்
வந்திறங்கியபோது, வரவேற்புக்கு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்பிரதாயமான இந்த வரவேற்பைத் தமிழக
முதலமைச்சர் மு.கருணாநிதி
புறக்கணித்தார். இதற்காக அவர் சொன்ன கருத்துகள் சர்ச்சைக்குள்ளானது.
பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் இதுகுறித்து விமர்சிக்கப்பட்டது.
இந்த சர்ச்சை, வடக்கு-கிழக்கு மாகாண
கவுன்சில் முதலமைச்சர் வரதராஜ
பெருமாள் திருகோணமலையில் இருந்து
வெளியேறிய விஷயத்தால் அமுங்கிப்போனது.
வரதராஜ பெருமாள் என்ன ஆனார் என்ற செய்தி
பரபரப்புக்கிடையே அமைதிப்படையுடன்
அவரும்,
அவருடன் அங்கம் வகித்தவர்களும்
புறப்பட்டு சென்னை வந்ததாகச்
செய்திகள் வெளியாயிற்று.
அவரைத் தமிழகத்தில் வைப்பது சரியானதாக
இருக்காது என்று கருதி, ஒரிசா
மாநிலத்தில் சில நாள்களும், பின்னர் பெயர்
தெரிவிக்கப்படாத வடமாநிலம்
ஒன்றிலும் குடியமர்த்தினார்கள். அவர்
எங்கிருக்கிறார் என்பது மைய அரசுக்கு
மட்டுமே தெரிந்த ரகசியமாயிற்று.
அமைதிப்படை வெளியேறிய அனைத்து
இடங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றி
அந்த இடங்களில் தங்களின் பாசறைகளை
அமைத்தனர். கிட்டத்தட்ட சிவில் நிர்வாகம்
உள்பட அனைத்தையும் புலிகளே
மேற்கொண்டனர். வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை உடனடியாகப் புலிகள்
தொடங்கினர். போராளிகளுக்கு பாலசிங்கமும்,
காசி ஆனந்தனும் அரசியல்
வகுப்புகள் நடத்தினர். இந்த நிர்வாக அமைப்புக்கு,
சட்டரீதியான அங்கீகாரம் பெற, பாலசிங்கம் உள்ளிட்ட
குழுவினர் ஹமீது மற்றும் பிரேமதாசாவிடம் பேசினர்.
வரதராஜ பெருமாள் அரசின் முடிவு தானே
முடிவுற்ற நிலையைச் சுட்டிக்காட்டி,
ஒரு திருத்தச் சட்டம் கொண்டுவருவதன்
மூலம் மாகாணக் கவுன்சிலைக்
கலைத்துவிட்டு, புதிதாகத் தேர்தலை
நடத்த உத்தரவிடுமாறு பிரேமதாசாவிடம்
பாலசிங்கம் வலியுறுத்தினார்.
ஆனால்,
பிரேமதாசா, அதைச் செய்வதற்கு
உடன்படவில்லை. இந்த ஒரு விஷயமே இனி
வரப்போகிற காலங்களிலும் அவர் எப்படி
நடந்துகொள்வார் என்பதற்குச்
சான்றாயிற்று. மாகாணக் கவுன்சில்
கலைக்கப்பட்டு, புதிய தேர்தலும் வந்தால்,
அந்தத் தேர்தலில் புலிகள் பெருவாரியான
வெற்றியை ஈட்டிவிடுவார்கள் என்பதால்,
அவர் தயக்கம் காட்டினார்.
அது மட்டுமன்றி, புலிகள்
சட்டத்துக்குட்பட்ட ஆட்சியை அமைத்துவிட்டால் அதன் பின்னர் ஏற்படும் இதர
விளைவுகளுக்கும் அஞ்சினார். அடுத்தகட்ட முயற்சியாக சுயாட்சிக்கு சமமான
அதிகாரங்களைப் பெறுவதில் முடிந்துவிடுமோ என்பதும் அவரது கவலையாக இருந்தது.
புலிகளைப் பொறுத்தவரை, சிங்களவர்களுடன்
அரசியல் சட்டத்துக்குட்பட்டு
அவர்களுடன் சேர்ந்து வாழமுடியுமா என்பதை
முயன்று பார்க்கும் வாய்ப்பாகக்
கருதினார்கள். இந்த முயற்சி வெற்றி
பெறாது போனால், சுயநிர்ணய உரிமை
அடிப்படையில் சுதந்திரத் தமிழீழம்
அமைப்பது என்றும் அவர்களால்
தீர்மானிக்கப்பட்டிருந்தது.
பிரேமதாசாவோ ஒரே தேசம், ஒரே மக்கள் என்ற
கோட்பாட்டில் இந்த முயற்சிகளை
முடிந்தவரை தள்ளிப்போட முயன்றார்.
தொடர்ந்து அமைச்சர் ஹமீது வந்து, ஆயுதம்
களைவது தொடர்பாக பேசத் தொடங்கினார்.
இதுவரை ஆயுதம் களைவது குறித்த எந்தப்
பேச்சும் அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்படாத நிலையில், புதிதாக ஆயுதம்
துறப்பது குறித்துப் பேசியதன் மூலம், பிரேமதாசாவின்
திட்டம் வெளிப்பட்டது. பாலசிங்கம் குழுவினர் இது குறித்து கடும் விவாதத்தில்
ஈடுபட்டனர். ஹமீது இந்தக் கருத்து தன்னுடையதல்ல என்றும் அதிபரின் கருத்தையே தான்
இங்கு தெரிவித்ததாகவும் கூறினார்.
அமைச்சர் ஹமீது மேலும் விளக்குகையில், தேர்தலின்போது வன்முறை தலைதூக்கக்கூடாது என்று பிரேமதாசா விரும்புகிறார். இந்தத்
தேர்தலில் ஈபிஆர்எல்எஃப் உள்ளிட்ட பிற கட்சிகளும் இடம்பெறுவதும் அவரது
விருப்பமாக உள்ளது. இந்த நிலையில் புலிகள் ஆயுதங்களுடன் நடமாடுவது அச்ச
உணர்வை மட்டுமல்ல; ஒரு மேலாண்மைப் போக்கை நிலைநாட்டுவதாக அது அமைந்துவிடும் என்றும் அவர் கருதுவதாகத் தெரிவித்தார்.
பாலசிங்கம் குழுவினர் இந்தக் கருத்தைக்
கேட்டதும், இதுதான் உண்மையென்றால்
அதிபர் தங்களை நேரில் சந்தித்தபோது இது
குறித்து தெரிவிக்காமல் இப்போது
தெரிவிப்பது ஏன் என்று வாதிட்டதுடன், அமைதிப்படை
இலங்கையைவிட்டு வெளியேறிய
பின்னர் புலிகளுக்கு எதிரான
அமைப்புகளுடன் பிரேமதாசா ரகசியப்
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதும்
தங்களுக்குத் தெரியும் என்றும்
குறிப்பிட்டனர்.
விடுதலைப் புலிகளின் வாதம் என்னவென்றால், தாங்கள் ஆயுதம்
வைத்திருப்பது தமிழீழப் பகுதியின் பாதுகாப்புக்கு என்றும், சட்டம் ஒழுங்குக்கு
அவர்களே பொறுப்பாக இருப்பார்கள் என்றும்,
அதனைக் கையாளும் தகுதி புலிகளுக்கே
உண்டு என்றும், பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்புப்படை, புலிகள் வசம்
இருப்பது அவசியம் என்றும் தெரிவித்தனர்.
தற்போது தொங்கிக்கொண்டிருக்கும்
வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சிலைக்
கலைத்துவிட்டுப் புதிய தேர்தல் நடத்தும்
அறிவிப்பு வெளியிட்ட பின்னர், 6-வது சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறும் தீர்மானம்
நிறைவேற்றப்பட்ட பிறகு ஆயுதக் களைவு குறித்துப் பேசலாம் என்றும் தற்போது பேசுவது
பொருந்தாது என்றும் புலிகள் குறிப்பிட்டனர்.
இறுதியாக புலிகள், மாகாண கவுன்சில்
என்பது புலிகளின் இலக்கு அல்ல என்றும்,
ஒரு திட்ட வரையறையில் புலிகள், சிங்களவருடன்
சேர்ந்து நிர்வாகத்தில் ஈடுபட
முடியுமா என்று பார்ப்பதுதான் தற்போதைய
நிலை என்றும், இதுவே நிரந்தரத்
தீர்வு ஆகிவிடும் என்று புலிகள்
கருதவில்லை என்றும் அமைச்சர் ஹமீதிடம்
உறுதியாகச் சொல்லி, புரியவைத்தார்கள்.
மேலும் அவர்கள் கூறுகையில், ஜனநாயக வழிமுறைக்கு
நாங்கள் எதிரானவர்கள் அல்ல
என்பதை நிலைநாட்டவும், மற்ற கட்சிகளுடன்
தேர்தலில் பங்குபெறவும், சுதந்திரமான, நியாயமானத் தேர்தலை நடத்தவும் அரசுடன் ஒத்துழைப்போம் என்றும் உறுதி கூறினர் (ஆதாரம்: சுதந்திர வேட்கை.அடேல் பாலசிங்கம்).
""மாகாணசபை நிர்வாகக் கட்டுமானத்தின் ஓர் அம்சமாக, மாகாணக் காவல்துறையை அமைத்து, புலிப் போராளிகளை அதிகாரிகள் ஆக்கலாமே'' என்றார் ஹமீது.
""அப்படியென்றால் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் காவல் பணிக்கு 10 ஆயிரம் பேர் தேவைப்படுவர். அதற்கான ஆயுதங்களுக்கும் அரசு செலவு செய்ய வேண்டியிருக்கும்''
என்றார் பாலசிங்கம்.
விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதம்
பறிப்பது என்ற விவாதம்-விடுதலைப்
புலிகளுக்கு ஆயுதம் வழங்கும்
கட்டத்துக்கு வந்தது. அமைச்சர் ஹமீது
பேச்சுவார்த்தை வெற்றி பெறாததால்
தளர்ந்து போயிருந்தார் (ஆதாரம்: மேற்கூறிய
நூல்).
பிரேமதாசா திறந்த மனதுடன் இருந்து, 6-வது சட்டத்
திருத்தத்தை வாபஸ் பெற்று, புலிகளுக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பாரா
அல்லது புலிகளுடன் ராணுவ ரீதியாக மோதுவாரா என்பது குறித்துப்
புலிகளுக்கு அதிகம் யோசிக்கத் தேவையில்லை. அவர் ராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும்
என்று உறுதியாக நம்பியதன் அடிப்படையில்,
பாலசிங்கம் குழுவினரை யாழ்ப்பாணம்
திரும்பும்படி பிரபாகரன் பணித்தார்.
இந்தப் பேச்சுவார்த்தை முறிவுக்குப்
புலிகளைக் காரணமாக்கும் வகையில், 1987-லிருந்து வடக்கு-கிழக்கில் முகாம்களில் முடங்கிக் கிடந்த
சிங்கள ராணுவத்தினரை கட்டுப்பாடற்ற வகையில் நடந்துகொள்ளும்படி
பணிக்கப்பட்டது. இதன் மூலம் புலிகள் வெகுண்டெழுந்து போரிட முயல்வர் என்பது
எளிதான கணக்கு ஆயிற்று. விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்குமாக செய்யப்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை,
அப்பட்டமாக மீறும் வகையில் செயல்கள்
அடுத்தடுத்து நடைபெற்றன.
மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின்
மூத்த போராளி ஒருவரை, ஆயுதத்தைப்
பறித்துவிட்டு, சாலையில், மக்கள் முன்னிலையில்
முட்டிபோட்டு நகரும்படி சிங்கள ராணுவம் உத்தரவிட்ட நிலையில், அவர் அவமானம்
தாங்காமல் "சயனைட்' குப்பியைக் கடித்து உயிர் துறந்தார்.
இன்னும் கொழும்பிலிருந்து கிளம்பாத
நிலையில், பாலசிங்கம் குழுவினர்,
பிரேமதாசாவின் கவனத்திற்கு இந்தச்
சம்பவத்தைக் கொண்டுவந்தனர். பலன் இல்லை.
அமைச்சர் ஹமீதுவிடம் தொடர்பு கொண்டார்
பாலசிங்கம். அவர் தெரிவித்த
செய்திகள் பாலசிங்கத்துக்கு
அதிர்ச்சியூட்டின.
கிழக்குப் பகுதியில் அமைதிப்படைகள்
வெளியேறிய முகாம்களில் சிங்களப்படை
குடியேற வேண்டும் என்றும், இதன்பின்னர்
வடக்கிலும் அதை நிறைவேற்ற ராணுவத்
தலைமைக்கு உத்தரவிட்ட நிலையில், இனி கோரிக்கைகள்
எதுவும் பலிக்காது என்றும்
விளக்கினார்.
கிழக்கில் ராணுவம் பலப்படுத்தப்பட்டது.
காவல் நிலையங்களிலும் புதிய
ஆள்கள் குவிக்கப்பட்டனர். எந்த
நேரத்திலும் இருவருக்கும் மோதல் ஏற்படலாம்
என்ற நிலை எழுந்தது.
பிரேமதாசா தங்களை நயவஞ்சகமாக ஏமாற்ற முயற்சிக்கிறார்
என்கிற பலமான சந்தேகம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டதில் ஆச்சரியம் எதுவும்
இல்லை.
அமைதிப்படையின் உதவியுடன் விடுதலைப்
புலிகளைப் பலவீனப்படுத்திய நிலையில்,
அவர்கள் வெளியேறிய முகாம்களில் சிங்களப்
படைகளைக் குடியேற்றி, தனது மேலாண்மையை நிலைநிறுத்திவிடலாம் என்று பிரேமதாசா
திட்டமிட்டிருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை!
149: பத்மநாபா மீது தாக்குதல்!
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஜக்கிரியா
காலனியில், ஜெர்மனியில் இருந்து
ஈபிஆர்எல்எஃப் இயக்க வேலைகளில் ஈடுபட
வந்த வில்சனுக்காக எடுக்கப்பட்ட
வீட்டில் பத்மநாபா குழுவினர், தங்கினர். இந்த வீடு
அவரின் வசிப்பிடமாகவும், இயக்கத்தின் சென்னை அலுவலகமாகவும், கலந்துரையாடும்
இடமாகவும் பேணப்பட்டு வந்தது.
இந்த வீட்டில் ஈபிஆர்எல்எஃப்
இயக்கத்தினர் பலர் சந்திக்க இருக்கிறார்கள்,
என்கிற தகவலை விடுதலைப் புலி அமைப்பின்
உளவுப் பிரிவைச் சேர்ந்த சாந்தன்
அளித்ததைத் தொடர்ந்து அங்கு புலிகள்
ஆயுதங்களுடன் குவிந்தனர். கதவைத்
தட்டியதும், திறக்கப்பட்ட
வேகத்தில் உள்ளே நுழைந்தவர்கள் அங்கே
குழுமியிருந்த பத்மநாபா உள்ளிட்ட 13 பேரையும் சுட்டுக்
கொன்றுவிட்டு தப்பினர். (6.6.1980)
அந்த நேரத்தில் பத்மநாபாவின் மனைவி
ஆனந்தி, தனது தந்தையின் வீட்டுக்குச் சென்றிருந்ததால்
தப்பித்தார். (ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்-சி. புஷ்பராஜா பக். 531). இந்தத்
துக்ககரமான சம்பவம் மறுநாள் தமிழ்நாட்டுப்
பத்திரிகைகளில் வெளிவந்து
அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது.
இந்தக் கொலைக்கு ஈபிஆர்எல்எஃப்
இயக்கத்தினரின் இந்திய உளவுத்துறை
அதிகாரிகளின் நெருங்கிய தொடர்பே
காரணமாகச் சொல்லப்பட்டது. இன்னொரு காரணமாக,
ஈபிஆர்எல்எஃப் எம்.பி.யான
யோகசங்கரி-பிரேமதாசா இடையே நடைபெற்ற ரகசிய
சந்திப்பும்கூடக் காரணமாகக்
கருதப்பட்டது. இந்தச் சந்திப்பு மூலம்,
சிங்கள ராணுவத்துடன்
சேர்ந்து புலிகளை ஒழிக்க பேரம் பேசியதாகவும் இதற்கு பத்மநாபா உடன்பட்டதாகவும்
தகவல்கள் வெளியாயின.
தொடர்ந்து, இலங்கை வடக்கில்
அரியாலையில் அமைந்திருந்த ஈபிஆர்எல்எஃப்
முகாம்,
தாக்கி அழிக்கப்பட்டு, யாழ்குடாப் பகுதி
முழுவதும் புலிகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்த, அன்னையர் முன்னணியைச்
சேர்ந்த பூபதி அம்மாளின் நினைவுநாள் ஏப்ரல் 19-ஆம் தேதி நல்லூர் கந்தசாமி கோவிலடியில் கடைபிடிக்கப்பட்டது.
இந்த கூட்டத்திற்கு யாழ் மற்றும் கிழக்கில் இருந்தும் பெருந்திரளாக மக்கள்
வந்து கலந்துகொண்டனர்.
அடுத்து வந்த மே தினக்
கொண்டாட்டத்திலும் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு பேரணியை சிறக்கச்
செய்தனர். இந்த மே தினக் கூட்டத்தில் பாலசிங்கம்,
யோகி உள்ளிட்டோர் பேசினர்.
இந்தக் கூட்டத்தில், அடேல் பாலசிங்கம்,
பெண்கள் நிலை குறித்துப் பேசினார்.
அடுத்த கட்ட ஈழப் போர் என்பது, மட்டக்களப்பில்
முஸ்லிம் மாது ஒருவர் ஜூன் 10-இல், சிறுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தையொட்டி எழுந்தது. இந்த சம்பவம் மட்டக்களப்பு காவல் நிலையத்தில் நடைபெற்றதால், இதனைத் தட்டிக்
கேட்கும் விதத்தில் விடுதலைப் புலிகள் பிரச்னையை முன்னெடுத்தனர். பிரச்னை, பேச்சுவார்த்தையில்
ஆரம்பித்து, துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இந்த மோதலில் காவல்
நிலையம் புலிகள் வசமாயிற்று. தொடர்ந்து அனைத்து காவல் நிலையங்களும்
கைப்பற்றப்பட்டன. சில காவல் நிலையங்களில் எதிர்ப்பு இருந்த நிலையில் தாக்குதலும்
நடந்தன. இம் மோதல்-படிப்படியாக புலிகள்-சிங்களப் படைகள் மோதலாக
உருவெடுத்தது.
நிலைமை மோசமடைவதற்கு முன்பாக, போர் நிறுத்ததைத்
தொடரும் விதமாக அமைச்சர் ஹமீது, பிரபாகரனைச் சந்திக்க,
பலாலி விமானநிலையத்தில் வந்திறங்கினார்.
அவரை விமான நிலையத்துக்கு வெளியே ஓரிடத்தில் சந்திக்க ஏற்பாடாகியிருந்தது. விமான நிலையத்தில் இருந்து சந்திப்பு நடக்கும் இடத்துக்கு
வாகனத்தில் ஹமீது சென்று கொண்டிருந்தபோது அவரது காரின் மீது துப்பாக்கிச் சூட்டை
நடத்தியது சிங்களப்படை.
பிரேமதாசா அமைச்சரவையில் உள்ள
அமைச்சர்கள் அனைவரும், போர் நிறுத்தத்தை
முடிவுக்குக் கொண்டு வந்து, விடுதலைப் புலிகள்
மீது தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன் விளைவுதான்
துப்பாக்கிச்சூடு. துப்பாக்கிச் சூட்டையும் மீறி ஹமீது-பிரபாகரன் சந்திப்பு
நடந்தது.
பிரேமதாசா மற்றும் அமைச்சர்களும், சிங்கள ராணுவமும்
விடுதலைப் புலிகளை ஒழிக்க இதுவே சரியான தருணம் என்று கருதினர். புலிகள்-பிரேமதாசா
இடையே போர்நிறுத்தம் அமலில் இருந்த காலத்தில், ராணுவத்தினர்
புத்துணர்வு பெற்றிருந்ததாகவும்,
அதேசமயம் புலிகளோ அமைதிப் படையுடன்
தொடர்ந்து போரிட்டு களைப்புற்றிருந்ததாகவும் கணிக்கப்பட்டிருந்தது.
இலங்கையின் தெற்குப் பகுதியில்
ஜே.வி.பி.யினரை அடக்கியதைப் போன்று
புலிகளையும் ஒடுக்கிவிடலாம் என்ற
நினைப்பில், மீண்டும் போர் என்பது
தவிர்க்க முடியாததாகியது.
பேச்சுவார்த்தைக் காலங்களில் நட்பாக இருந்து வந்த பாதுகாப்பு அமைச்சர்
ரஞ்சன் விஜயரத்னே நாடாளுமன்றத்தில் பேசும்போது,
"புலிகள் மீது முழுமையாகப் பாயப்
போகிறோம். அவர்களை அழிப்போம்' என்று வீரம்
பேசினார்.
போர் என்றால் போர்; சமாதானம் என்றால்
சமாதானம் என்று 1987-இல் வீம்பு
காட்டிய ஜெயவர்த்தனாவைப் போன்றே, பிரேமதாசாவும், அடக்குமுறைகளைக்
கையாள ஆரம்பித்தார். யாழ்ப்பாணப் பகுதியில், மின்சாரத்தை
நிறுத்தியதன் மூலம் நகரத்தை இருளில் மூழ்கடித்து கூட்டுத் தண்டனையை வழங்கினார்.
தொடர்புகளை மேற்கொள்வதைத் தடுக்கும் வகையில் தகவல், தொலைத் தொடர்பையும்
துண்டித்தார்.
யாழ்ப்பாணம் மீது மீண்டும்
பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டது. இதனால்
உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப்
பொருட்களின் வருகை தடைபட்டதால், பொருட்களின் தட்டுப்பாடு வானை எட்டியது. எரிபொருட்கள் வருகை
நின்றதால், தொழில்களும் முடங்கின. வியாபாரமும் நசித்தது. விவசாயம் இல்லை, வாழ்க்கை என்பது மக்களுக்கு பெரும் சுமையாகியது.
இதேவேளை,
விமானம் மூலம் குண்டுத் தாக்குதலும், யாழ் கோட்டை வழியாக பீரங்கித் தாக்குதலும் அதிகரித்தன. கடற்படையும் கரையோரப்
பகுதிகளில் குண்டுவீசித் தாக்குதலைத் தொடங்கியது.
மக்கள் மீண்டும் பதுங்கு குழியை
நாடினர். புதிய பதுங்கு குழிகளையும் வெட்டுவதற்குத் தலைப்பட்டனர்.
யாழ்ப்பாணம் புலிகள்வசம் வந்தபோதிலும்
யாழ் கோட்டை சிங்கள அரசின்
மேலாண்மையை வலியுறுத்தும் வகையில், சிங்கள ராணுவம் வசமே
இருந்தது. இந்தக் கோட்டையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்று
பிரபாகரன் திட்டமிட்டார். இந்தக் கோட்டையிலிருந்து ராக்கெட் மற்றும், பீரங்கித் தாக்குதல் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அதனை முறியடிக்கும் வகையில், புலிகள் மரபு வழித் தாக்குதலின்படி அரண்கள் அமைத்து, 1990 ஜூன் 18-இல் தாக்குதலைத்
தொடங்கினர்.
இந்த கோட்டையிலிருந்த வீரர்களுக்கு
உணவும், தளவாடங்களும் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதைத்
தடுக்க, வான் தாக்குதலும் குறிவைக்கப்பட்டது. கோட்டைக்குள்
ராக்கெட் வீச்சு நடத்தப்பட்டது. இத் தாக்குதலில் கோட்டையைக் காப்பாற்ற சிங்களப்
படை பெரிதும் முயன்றது. புலிகளின் நிலைகளின் மீது வெகுவாக குண்டுமழை
பொழிந்தது. இதுபோதாதென்று யாழ் நகரில் பல்வேறு இடங்களிலும்
குண்டுவீச்சும் நடத்தப்பட்டது.
யாழ் நகரிலிருந்து மீண்டும் மக்கள்
அகதிகளாக வெளியேறத் தொடங்கினர்.
மருத்துவமனை மீதும் தாக்குதல்
நடத்தியதால் நோயாளிகள், ஊழியர் அனைவரும்
பாதுகாப்பு தேடி ஓடினர். 107 நாள்கள் இந்தப்போர்
நடந்த பின்னர், செப்டம்பர் 26-ஆம் நாளில், கோட்டை புலிகள் வசமாயிற்று.
இதுகுறித்து யாழ்ப்பாணத்தில்
அமைதிப்படையின் அதிரடிப் படைத் தளபதியாக பணி புரிந்த அர்ஜுன்
காத்தோஜ், ""1990-ஆம் ஆண்டில் இந்திய அமைதிப்படையின் தளபதியான கல்கத், பெரிய சாதனை
புரிந்துவிட்டதாகவும், விடுதலைப் புலிகளின்
முதுகெலும்பை முறித்து விட்டதாகவும்
அவர்களை வவுனியா காட்டிற்குத் துரத்தி
விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், அமைதிப்படை வெளியேறிய பின்பு,
ஸ்ரீலங்கா ராணுவம் யாழ்ப்பாணக் கோட்டையை
இழந்தது; மாங்குளம் முகாமை
இழந்தது. இரண்டு வருட காலத்தில்
அமைதிப்படை இழந்த இழப்பை விட அதிகமான
இழப்பினை ஆறேழு மாதங்களில் ஸ்ரீலங்கா
ராணுவம் அடைந்தது. புலிகளின்
முதுகெலும்பை முறித்திருந்தால்-
இப்படியெல்லாம் புலிகளால் வெற்றி
பெற்றிருக்க முடியுமா?'' என்று எகனாமிக் அண்ட்
பொலிடிக்கல் வீக்லி என்னும்
ஏட்டில் எழுதிய கட்டுரையில்
குறிப்பிட்டிருக்கிறார் (தமிழீழம்
சிவக்கிறது-பழ.நெடுமாறன்).
இந்தக் கருத்து யாழ்ப்பாணத்தில்
பணியாற்றிய அமைதிப் படையின் தளபதிகளில்
ஒருவர் சொன்ன கூற்றானதால், புலிகளின் வலிமை
மீண்டும் நிரூபணமாயிற்று.
இதுவே,
பிரேமதாசாவுக்கு மாபெரும் அவமானகரமான
சம்பவம் ஆயிற்று. பாதுகாப்புத்துறை அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே யாழ்ப்பாண மக்களைத் துன்புறுத்தும் வேலையில் இறங்கி,
குண்டு மழை பொழிய வைத்தார்.
இந்தத் தடைகள் மற்றும் தாக்குதல்
குறித்து உலகம் முழுவதும் கண்டனங்கள்
எழுந்தன. அச்சமயம் பிரேமதாசாவின்
நண்பர்களாக இருந்த ஈபிஆர்எல்எஃப்
இயக்கத்தினரும் கண்டனம் தெரிவித்தனர்.
ஈரோஸ் அமைப்பு தங்களின் நாடாளுமன்றப்
பணிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அவ்வமைப்பின் 13 உறுப்பினர்களும் பதவி
விலகினர். இலங்கையில் உள்ள போராளி
அமைப்புகளும் மக்களும் தமிழ்நாட்டில்
உள்ளவர்களும் குரல் கொடுக்க
முடிந்ததேயொழிய, இந்தியா தலையிட வேண்டும் என்று குரலெழுப்ப
முடியவில்லை. காரணம், இவர்கள் இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேற
வேண்டும் என்று குரல் கொடுத்திருந்ததுதான். இந்தக் காரணமே பிரேமதாசாவுக்கும்
அவரது சிங்கள ராணுவத்துக்கும் சாதகமான அம்சமாக இருந்தது.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.