Thursday, 21 May 2020

மிகைப்படுத்தப்பட்ட வரலாறில் தொலைந்து விட்ட வீரம்

கையேந்தி நிற்கும் தமிழ்ப் பாசிசம்.
மிகவும் இறுக்கமான, கட்டுக்கோப்பான, இராணுவ பலம் பொருந்திய நீண்டகால வரலாறுடையதாக எண்ணப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கை அரச இராணுவத்தால் கடந்த மே மாத நடுப்பகுதியில் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. விடுதலைப்புலிகள் எக்காலத்திலும் யாராலும் வெல்லப்படமுடியாத, அழிக்கமுடியாத ஒரு இயக்க வடிவமைப்பைக் கொண்டதாக எழுதப்பட்டுக் கொண்டிருந்த வரலாறை முறியடித்திருக்கிறது இலங்கை அரசு. 
-Saturday, June 20th, 2009


கடந்த முப்பது வருட காலத்தில் அவ்வப்போதிருந்த அரசபடைகளால் யுத்தம் நடைபெற்றபோதும் விடுதலைப்புலிகளுடன் பெருஞ்சமர் புரிந்த போதும் பலத்த இழப்புக்களையும் வெற்றிகளையும் தோல்விகளையும் மாறிமாறி இருசாராரும் பெற்றுக்கொண்டனர்.

பூநகரி இராணுவமுகாம் அழிப்பிலும் மாங்குளம் இராணுவமுகாம் அழிவிலும் ஆனையிறவு இராணுவமுகாம் தகர்ப்பிலும் இலங்கை இராணுவம் பெருவாரியான இராணுவத்தை இழந்திருந்தது. இந்த இராணுவமுகாம் அழிவுகளில் புலிகள் அதிகமான இளைஞர்களைப் பலிகொடுத்து வெற்றியை ஈட்டினார்கள். 

பூநகரியில் இறுதிநாள் மாத்திரம் ஆயிரத்தைத் தாண்டிய இளைஞர்கள் பலியாகினார்கள். இருந்தும் வன்னியில் பலத்த இடைஞ்சல் ஏற்படுத்திய இந்தவகை இராணுவமுகாம்களை அழித்ததை தமிழ் மக்கள் வெகுவிமரிசையாக உலகெங்கும் கொண்டாடினார்கள். 

ஆனையிறவு இராணுவமுகாம் தகர்ப்பு தமிழர்களது வரலாற்றில் மிகப்பெரிய வரலாறாகப் பதிவு செய்யப்படுமளவுக்கு உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இதற்குப் புலிகள் கொடுத்த விலை கொஞ்சமல்ல. ஏறத்தாள நான்கைந்து மாதங்கள் நடைபெற்ற மோதல் அது. இறுதியில் இயக்கச்சியிலிருந்து இராணுவமுகாமுக்குப் போன குடிநீர்த் தொடர்பைப் புலிகள் துண்டித்ததன் மூலம் இலகுவாக வெற்றியை ஈட்டினார்கள்.

இந்த இராணுவமுகாம்களைப் புலிகள் அழித்தொழித்ததை தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முக்கிய கட்டங்களாக காட்சிப்படுத்திய அத்தனை தமிழ்ப்பத்திரிகைகளும் வீரவரலாறாகக் கொண்டாடின. இறந்து போன புலிகளது மறுபக்கம் எதுவும் தமிழ்ப்பத்திரிகைகளில் எங்கும் பதியப்பட்டதாக வரலாறு இல்லை. 

ஆனையிறவு இராணுவமுகாமிற்கு இறுதிக்கட்டங்களில் புலிகளின் தடுப்புமுகாம்களில் தண்டனைபெற்றுக் கொண்டிருந்தவர்கள் கூட கொண்டு செல்லப்பட்டார்கள். மாவீரர்களாக்கப்பட்டார்கள். மாவீரம் கொண்டாடிய பத்திரிகைகள் எதுவும் கொல்லப்பட்ட புலிகளது எண்ணிக்கையை ஒருபோதும் உண்மையாக எழுதியதில்லை. புலிகள் சொல்லும் கணக்கை இவர்கள் மீறியது கிடையாது. 

ஈழத்தில் நிலை அப்படியிருக்க புலம் பெயர்ந்த நாட்டுப் பத்திரிகைகளோ அதை விஞ்சி நின்றன. பாரீஸ் ஈழநாடு, ஈழமுரசு, கனடா முழக்கம் போன்றவை கொல்லப்பட்ட இராணுவத்தின் எண்ணிக்கையை எவ்வளவு அதிகரிக்க முடியுமோ அவ்வளவு அதிகரித்து எழுதி தமது வியாபாரத்தைப் பெருக்கியது. யார் அதிக இராணுவ எண்ணிக்கையை எழுதுகிறார்களோ அதுவே அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக இருக்கும் நிலையே தமிழர்களது நிலையானது. உண்மையான தகவல்களை நமது மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. ஆதலினால் இந்தவகைப் பத்திரிகைகள் மிகப்பெறுமதி வாய்ந்ததாக இருந்தது அவர்களுக்கு. புலிகளின் பினாமியாகச் செயற்படும் ஈழமுரசை விட கொல்லப்பட்ட இராணுவ எண்ணிக்கையை அதிகமாக எழுதிய ஈழநாடு குகநாதன் பாரீஸ் புலிகளால் அப்போது மிரட்டப்பட்டார்.

ஈழத்திலிருந்து வெளிவரும் புலிகளது பத்திரிகைகளாக இருந்தாலும் சரி கொழும்பிலிருந்து வரும் தமிழ்ப் பத்திரிகைகளாக இருந்தாலும் சரி புலம் பெயர்ந்த பத்திரிகைகள் என்றாலும் சரி தமிழர்களது வீரம் பற்றியும் தமிழினம் பற்றிய ஒரு மாயைத்தனமான மிகைப்படுத்திய கற்பனைக்கூடான எழுத்துமுறையை வளர்த்துக்கொண்டு வந்தது. தமிழர்கள் மீதான புனிதக் கதையாடலாக அது கொண்டிருந்தது. அது ஒவ்வொரு தமிழ் மனங்களிலும் மெல்ல மெல்ல இனவாதத்தைத் தூண்டி விட்டுக் கொண்டு வந்ததை யாரும் கணக்கிடவில்லை.
ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மாற்றுக் கருத்துக்கொண்ட பத்திரிகைகள் தொடக்கம் ஜனரஞ்சகப் பத்திரிகைகள் வரை தடைசெய்யப்பட்ட காலங்கள் இருந்தன. புலிகளது செய்தித் தாள்களும் புலிகளது சஞ்சிகைகளுமே மக்களின் வாசிப்புக்குக் கிடைக்கப்பெற்றன. அவற்றில் வருகின்ற புதினங்கள் மட்டுமே உண்மையாக இருந்தது அவர்களுக்கு. அதற்கு இயல்பாகப் பழக்கப்பட்ட மக்கள் புலம்பெயர்ந்த பின்னும் வெளியில் கிடைக்கக்கூடிய எவ்வித செய்திகளையும் உள்வாங்க விருப்பமற்றுப் போனார்கள்.  
புலிகள் மீதோ அல்லது ஈழவிடுதலைப் போராட்டம் மீதோ சிறிய விமர்சனத்தை முன்வைப்பவர்கள் அவர்களின் அறிவுப்படி துரோகிகளது சார்பிலிருந்து வருபவையாக முதல்வார்த்தையிலேயே நிராகரிக்கப்பட்டன. ஆதலினால் மிகக் குறைந்தளவு வெளியுலக அறிவு என்பதையும் பெற்றுக்கொள்ள வசதியிருந்தும் அவர்களால் முடியவில்லை.

இவ்வகையான மந்தநிலைப்போக்கு இறுதியில் புலிகளின் அழிவைக் கூட நம்பமுடியாமல் திண்டாடும் ஒரு கையறுந்த நிலையை நமது மக்களுக்குக் கொடுத்து விட்டிருக்கிறது. கடந்த இரண்டுவருடமாக தொடரும் போரில் இதுவரையான புலிகளது செய்திகள் அல்லது அதன் சார்பு ஊடகங்களது செய்திகள் மே 17ந்திகதி நடைபெற்ற அவர்களது மானங்கெட்ட நிலையை ஊகித்துக் கொள்ளக்கூடியதான ஒரு வாசிப்பு நிலையைக் கொடுக்கவில்லை. 

போர் ஆரம்பித்த மாவிலாற்றிலும் பின் மூதூர் சம்பூர் போன்ற இடங்களில் பாரிய இராணுவத் தோல்வியைச் சந்தித்த புலிகள் வழமைபோல தற்காலிக பின்வாங்கல் என்று தமது ஊடகங்களில் பொய் எழுதிக் கொண்டிருந்தன. 

கிழக்குமாகாணத்தை விட்டு முற்றாகப் புலிகள் துடைத்தெறியப்பட்டதை வரலாறு கொண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால் அநேகமானவர்கள் புலிகள் பதில்தாக்குதலுக்காகப் பின்வாங்குகிறார்கள் என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். புலிகளின் முரட்டுத்தனமான பிடிவாதத்தால் தமது வாழ்வை சீரழித்த மூதூர்மக்கள் மூன்றுமாதகாலம் எந்த உணவுமின்றி இருப்பிடங்களை விட்டு யாரும் கண்டுகொள்ளாமல் தெருவில் நின்றார்கள்.

கிழக்குமாகாணத்தை விட்டு வன்னிப் பிரதேசத்திற்குள் மட்டும் முடங்கிய புலிகள் மீது இராணுவம் போர் தொடுக்கத் தயாராக இருந்தது. அப்போது கூட புலிகள் சுதாகரித்துக் கொள்ளவில்லை. 

புலிகளும் புலிகளின் ஊடகங்களும் தமது ஒவ்வொரு பின்னடைவையும் முற்போக்கானதாகவே மக்களிடம் பரப்புரை செய்தன. தாம் மிகத் தந்திரோபாயமானவர்கள் என்பதை மக்கள் நம்பும்படி அந்தவகைப் பரப்புரை அமைந்தது. 
புலிகள் வீரம் செறிந்தவர்கள். அவர்களுடைய பின்வாங்கல்கள் எல்லாமே அரசின் மீதான மிகப்பெரிய தாக்குதலுக்கானது என்று மக்கள் நம்பிக்கொண்டார்கள்.  

வன்னிக்குள் இராணுவம் நுழைய நேர்ந்தால் இலங்கை பூராவும் இரத்த ஆறு ஓடும் என்று அர்த்தப்பட கிளிநொச்சியில் செப்படம்பர் 2008இல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தமிழ்ச்செல்வன் அறிவித்திருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்ச்செல்வன் சொன்னதையிட்டு தமிழ்ச்சமூகம் வெட்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக அவ்வாறானதொரு நிலை உருவாவதை தமிழ் மனங்கள் நியாயம் என்று நம்பியது. தமிழ் மக்களை சிங்கள இராணுவம் கொல்வதற்கு ஈடாக அப்பாவிச் சிங்கள மக்களை கொல்வது சரி என்பதாக நமது சமூகம் நம்பியது. 

கடந்தகாலத்தில் புலிகளால் அறந்தலாவையிலும் ஹபரணையிலும் கென்பார்மிலும் புலிகள் நடாத்திய படுகொலைகளில் அனுபவப்பட்ட சிங்கள அரசு இந்த யுத்தம் தொடங்குவதற்கு முன்னாடியே அதற்கான அத்தனை வழிகளையும் அடைத்துவிட்டது. 
அவ்வப்போது பஸ்வண்டிகளில் வெடிக்கவைக்கப்பட்ட குண்டுகளைத் தவிர பாரிய அழிவுகளை புலிகள் சிங்கள மக்கள் மீது ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. 

புலிகளின் இந்தவகையான படுகொலைச் செயற்பாடுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுவந்தது தென்பகுதித் தமிழர்களே. புலிகளின் மிகத்துல்லியமாகப் பயிற்றுவிக்கப்பட்ட தற்கொலைக் குண்டுதாரிகள் இலங்கையின் பலபாகங்களிலும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் என்று நம்பிய சிங்கள அரசு கொழும்பிலுள்ள தமிழர்களை முக்கியமாக இளைஞர்களை ஜுன் 2007இல் பலவந்தமாக வெளியேற்றியது. பின் கண்துடைப்பிற்காக மீளக் கொண்டுவந்தாலும் வெளியேற்றியது எத்தனைபேர் திரும்பக் கொண்டுவந்தது எத்தனைபேர் என்ற கணக்கு யாரிடமும் இல்லை. 

இந்தமாதிரியான செயற்பாடுகளினூடு கொழும்புத் தமிழர்களை முதல் முறையாக வடிகட்டியது இலங்கை அரசு. ஆனால் நமது தமிழ்ப் பத்திரிகைகளோ அதன் ஆய்வாளர்களோ இதை ஒரு இனத்துவேசச் செயற்பாடு என்று வர்ணித்ததற்குப் பின்னால் மறந்துபோயினர்.

கிழக்கு மாகாணத்தை இராணுவம் கைப்பற்றிய வெற்றியின் பெருமிதத்துடன் வன்னிக்குள் மிகுந்த திட்டமிடலுடன் காலைவைத்தது. வவுனியாவிலிருந்து மடுவுக்கூடாக 27 மார்ச் 2007இல் முதல் தாக்குதலை மேற்கொண்ட இராணுத்தை புலிகள் தடுத்து நிறுத்த எடுத்த முயற்சிகள் மறுபடியும் தோல்வியைத் தழுவிக்கொண்டது. மடுவிலிருந்து பின்வாங்கிய புலிகள் மடுத் தேவாலயத்திலிருந்து மாதாவைத் தம்முடன் தூக்கிக் கொண்டு பின்வாங்கினார்கள். 

கிறிஸ்தவர்களது புனித தேவாலயமான மடுமாதா கோவில் வளாகத்துக்குள் யுத்தம் நடைபெற்று தேவாலயச் செயற்பாடுகள் முற்றாக இழந்த நிலையில் மாதாவைக் காப்பாற்றிக் கொண்டு போனதாக புலிகள் அறிவித்தார்கள். உலக அளவில் மதம் சார் பிரச்சனையாக மகிந்த அரசின்மீது இதனைத் திருப்பி விடலாம் என்று புலிகள் மிகச் சின்னத்தனமாக நினைத்திருந்தார்கள். 

இந்தக் கொடுமைகளைப் பார்த்து யாழ் அடைக்கலமாதா இரத்தக் கண்ணீர் விட்டதாகப் புலிகளது ஊடகங்கள் கதை பரப்பின. புகைப்படங்களைப் பிரசுரித்தன. ஆனால் அவர்களுக்குச் சாதகமாக அப்போதும் எதுவும் நடந்து விடவில்லை. யுத்தம் தனது கோரமுகத்துடன் பலவித குச்சொழுங்கைகளுக்குள்ளால் முன்னேறிக் கொண்டிருந்தது.

இராணுவம் முன்னெப்போதும் இல்லாதவாறு பல பிரிவுகளாகி பிரிவுகளின் பிரிவுகளாகி பலதிசைகளின் வழியே வன்னியின் உள் நுழைந்தன. விடத்தல் தீவுக்குள்ளால் வெள்ளாங்குளம் நோக்கி பண்டிவிரிச்சானுக்கூடாக மூன்றுமுறிப்பு வன்னிவிளாங்குளம் நோக்கி பனங்காமத்திலிருந்து பாலையடி மல்லாவி நோக்கி வன்னிவிளாங்குளமூடாக மாங்குளம் கண்டிவீதி நோக்கி நகர்வை நெறிப்படுத்தின. வன்னியின் கிழக்கில் நெடுங்கேணியூடாக ஒலிமடு ஊடாக முல்லைத்தீவை நோக்கி நகர்ந்தன. 

பல்குழல் பீரங்கி மற்றும் வான்தாக்குதல் சகிதம் முன்னேறிய இராணுவம் ஒவ்வொரு பிரதேசத்திலும் விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதலை சிறிய அளவிலேனும் எதிர் கொண்டனர். விடுதலைப்புலிகளால் இந்தவகைத் தாக்குதலுக்கு ஈடுகொடுக்கமுடியாது என்பது சாதாரண மக்களுக்கு இலகவாக விளங்கியது. ஆனால் தமது வீரம் செறிந்த தாக்குதலை தாம் இன்னும் தொடங்கவில்லை என்று விடுதலைப்புலிகளும் அவர்களது ஊடகங்களும் தெரிவித்துக் கொண்டன.

01-08-08இல் மல்லாவி நோக்கி முன்னேற முயன்ற சிறீலங்காப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தீவிரமான முறியடிப்பத் தாக்குதலை நடாத்தி விரட்டி அடித்தனர் என்றும் வெள்ளாங்குளம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது பொய் என்றும் வெள்ளாங்குளம் கைப்பற்றியிருந்தால் அது இலங்கை இராணுவத்திற்குப் பெரிய வெற்றி என்றும் அதனை அவர்கள் பெரிதாகக் கொண்டாடியிருப்பார்கள் என்றும் சொல்லிய ஒரு பேப்பர் என்ற புலிகளின் பத்திரிகை அப்படி அவர்கள் தம்பட்டம் அடிப்பது பொய் என்று எழுதியது. அதைவிட வன்னியில் வாழும் மக்கள் வீட்டுக்கு ஒருவரை விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கியுள்ளார்கள் என்று புலிகள் கட்டாயப்படுத்திப் பிடித்துச் சென்ற பிள்ளைகளுக்குக் கணக்குச் சொல்லி அவர்கள் சிறீலங்காப் படைகளை விரட்டி அடிக்கிற காலம் தானாக நெருங்கி வருகிறது என்று புலம் பெயர்ந்த மக்களுக்கு பொய் சொல்லியது.

ஆனால் விடுதலைப்புலிகளிற்கு தமது பலவீனம் நன்றாகவே தெரிந்திருந்தது. அதனால் தான் ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் பின்வாங்கும் போது மக்களை தம்மோடு சேர்த்து கிளிநொச்சிக்குள் இழுத்துப் போனார்கள். மாறாக புலிகளின் ஊடகங்கள் அத்தனை இராணுவத்திற்கும் கிளிநொச்சியில் தான் புதை குழிகள் என்று அறிக்கை விட்டன. கிளிநொச்சி பற்றிய மிகப்பெரிய விம்பத்தை ஊதிப் பெருக்கி விட்டிருந்தார்கள் இருதரப்பினரும். புலிகள் கிளிநொச்சிப்பிரதேசத்தை கடைசிவரையும் விடமாட்டார்கள் என்பதே அத்தனை மக்களது நம்பிக்கையாக இருந்தது. ஆகக்குறைந்தளவு இருந்த அந்த நம்பிக்கையையும் புலிகள் 02 ஜனவரி 2009 இல் இராணுவத்திடம் கிளிநொச்சியை ஒப்படைத்து இல்லாமல் செய்தார்கள்.
 
27மார்ச் 2007 பண்டிவிரிச்சானிற்கூடாக மிகப்பெரிய பலத்துடன் யுத்தத்தை தொடங்கிய இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்ற சரியாக இரண்டுவருடம் சென்றிருக்கிறது


இதே காலத்தில் புலிகளின் நூறுவீதக் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களான மல்லாவி துணுக்காய் கல்விளான் மற்றும் முறிகண்டி பிரதேசத்தில் கிளைமோர்த் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது.  

20-04-2008இல் மாங்குளம் மல்லாவி வீதியில் வெடித்த கிளைமோரில் கருணாரட்ணம் அடிகளார் கொல்லப்பட்டார். மே 2008இல் முறிகண்டி அக்கராயன் வீதியில் வைக்கப்பட்ட கிளைமோரில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினராலேயே இவை நடாத்தப்படுவதாக நமக்குச் சொல்லப்பட்டது. ஆனால் மிகப்பெரிய யுத்தத்தின்மூலம் மல்லாவி தென்பகுதியை இராணுவம் 24- 07 -2008இல்தான் வந்தடைகிறது. இதற்குள் சிறீலங்கா இராணுவத்திற்கு ஒரு படை மல்லாவியில் செயற்பட முடிவது என்பதை யார்தான் நம்பமுடியும்?  

யுத்தநிறுத்த காலத்தில் புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் ஜெனீவாவில் பேசிக்கொண்டிருந்த தருணங்களில் புலிகள் பொங்கி எழும் மக்கள் படை என்றும் எல்லாளன் படை என்றும் மாறுவேடத்தில் தாக்குதல் செய்ததை உலகம் பார்த்துக்கொண்டு இருந்தது. 

ஆழ ஊடுருவும் படை என்பது புலிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரகசியக் கொலைக்கான சொல்லாடல். புலிகள் எதைச் சொன்னாலும் எளிதாக நம்பிவிடும் மக்கள் இந்த ஆழ ஊடுருவும் படையின் இருப்பையும் நம்பினார்கள். மாற்று அரசியல் பேசக்கூட தமது பகுதியில் யாரையும் அனுமதித்த வரலாறு புலிகளிடம் இருந்ததில்லை. புலிகளின் இந்தக்கட்டுப்பாட்டுப் பகுதியில் புதிதாக யார் வந்தாலும் உடன் விசாரிக்கப்படுவார்கள். இப்படியிருக்க இராணுவம் ஆழ ஊடுருவும் படையை அனுப்பி கிளைமோர் வைக்கிறது. பொங்கி எழும் மக்கள் படை, எல்லாளன் படை தாக்குதல் செய்கிறது என்று புலிகள் மக்களுக்குப் பொய் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய போது அத்தனை இடம்பெயர்ந்த மக்களையும் அழைத்துக்கொண்டு புலிகள் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதி நோக்கி ஓடினார்கள் என்று நாம் சொல்லிவிடமுடியாது. கிளிநொச்சி புலிகளின் வெறும் பாசாங்கு நகரம். அங்கு அவர்களுக்கு எதுவுமில்லை. 

புலிகளது சிறைச்சாலைகள், பதுங்கு குழிகள், வதைமுகாம்கள், கடல்வழிப்பாதைகள் மற்றும் ஆயுதத் தொழிற்சாலை, இராணுவப் பயிற்சிச் சாலை, புலனாய்வுப் பாடசாலை, என்று அனைத்தும் முல்லைத்தீவின் கிழக்குப் பகுதியான புதுக்குடியிருப்பைச் சுற்றித்தான் இருந்திருக்கிறது. ஆக இவர்களுடைய கடைசி இருப்பிடத்தை நோக்கி மெல்ல மெல்லத் மக்கள் கொண்டு செல்லப்பட்டார்கள் என்பதுதான் உண்மை. 

கிளிநொச்சியை புலிகள் மிக இலகுவாகக் கைவிட்டபின்னர் மக்கள் தெளிவடையத் தொடங்கினார்கள். அதுவரையும் மக்களுக்கு புலிகளிடம் இருந்த நம்பிக்கை சிதறியது.
அதன்பின்னர் பனங்காமம் முன்றுமுறிப்பு, நட்டான் கண்டல், பாண்டியன்குளம், மல்லாவி துணுக்காய் போன்ற கண்டிவீதியின் மேற்குப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மெதுவாக இராணுவத்திடம் சரணடையத் தொடங்கினார்கள். அதனால் தான் அந்தப் பகுதி மக்கள் மற்றயவர்களுடன் ஒப்பிடும் போது பாதிப்புக் குறைவானவர்களாக குறைந்த அழிவுடன் தப்பியவர்களாக இருக்கிறார்கள். 

ஏப்ரல் 2008இல் மடுவைக் கைப்பற்றிய இராணுவம் கிளிநொச்சியைக் கைப்பற்றும்வரை ஒன்பதுமாதங்கள் மக்களின் இடைவிடாத அலைச்சல் நீடித்தது. இந்த ஓட்டத்தில் மக்கள் களைப்புற்றதும் அறியாத புதுக்குடியிருப்பு பற்றிய அச்சமும் புலிகளது பலவீனத்தை விளங்கிக் கொண்டதுமான காரணங்களே அவர்களை இடையிலேயே இராணுவத்திடம் சரணடைய வைத்தது.

மக்கள் சரணடையத் தொடங்கியதும் புலிகளுக்கு தமது இருப்பின் மீது பயம் தொற்றியது. எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்பதில் கவனமானார்கள். 

சரணடைந்தவர்களை இராணுவம் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் வைத்திருந்த பின்னரே வவுனியாவில் அமைக்கப்பட்ட முகாம்களுக்கு அனுப்பியது. அந்த முகாம்களை வதைமுகாம் என்றும் இராணுவத்தில் சரணடைபவர்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறார்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள் காணாமல் போகிறார்கள் என்றும் பரப்புரை செய்தார்கள். 

கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் இலங்கை இராணுவம் செய்த அட்டூழியங்களை தமிழ் மக்கள் அறிவார்கள். தாம் இராணுவத்திடம் போகும் போது என்னமாதிரியான சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டிவரும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தொடர்ந்தும் மக்கள் சரணடைந்தபடியே இருந்தார்கள். 

இதில் தாம் தோற்றுப்போவதாக எண்ணிய புலிகள் இராணுவத்திடம் போக இருந்த மக்களைத் தடுத்தார்கள். முடியாத பட்சத்தில் சுட்டுத்தள்ளினார்கள். அதையும் மீறி மக்கள் சரணடைந்தபடியே இருந்ததர்கள். 

புலிகள் மக்களை கவசமாகப் பாவிக்கிறார்கள். தப்பியோடுபவர்களைச் சுடுகிறார்கள் என்றும் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகமும் ஐ.நா.வும் தமது அறிக்கையில் தெரிவித்தன. ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளரான பா.நடேசன் அவர்கள் மக்கள் போக விருப்பமில்லாது இருக்கிறார்கள். புலிகள் தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்று மறுப்பறிக்கை விட்டார். ஆனால் அவருடைய அறிக்கையையும் மீறி மக்கள் பெருவாரியாகத் தப்பி வெளியேறிக் கொண்டிருந்தனர்.

இராணுவத்திடம் பாதுகாப்புக் கருதி சரணடைந்த மக்களை பொலநறுவைக்கு கூட்டிப்போய் வைத்து அவர்களுடைய சிறுநீரகம் இருதயம் நுரையீரல் போன்றவற்றை அறுத்தெடுப்பதாகவும், அதனைப் பாதிரியார் ஒருவர் பார்த்து படமெடுத்ததாகவும் சொல்லி புகைப்பட ஆதாரங்களுடன் புலிகளின் ஊடகங்களில் மிகப்பெரிய பொய்யைக் கட்டி விட்டார்கள். புலம் பெயர் புலி ஆதரவாளர்கள் அதனை ஐ.நா வரையும் கொண்டு போனார்கள். இந்தியாவின் ஆதிக்குடிகள் (பார்க்க:www.escapefrommindia.com) மற்றும் தலித்துக்கள் பற்றிய கட்டுரையில் இருந்து திருடப்பட்ட படங்கள் அவை. புலிகளின் இந்த ஏமாற்றை அநேக ஊடகங்கள் அம்பலப்படுத்தின.

தமது சொந்த நிலங்களில் நிம்மதியாக வாழ விரும்பும் மக்களை புலிகளின் மனித கேடையங்கள் என்று பிரச்சாரமிட்டு வதைமுகாம்களுக்குள் முடக்க முயற்சிக்கும் சிறிலங்காவின் திட்டத்திற்கு மனித நேயத்தினை மதிக்கும் நாடுகள் துணைபோக்ககூடாது என்றும் நலன்புரி நிலையம் என்று பெயரிட்ட வதைமுகாம்களில் நடைபெறும் கொடூரங்கள் நன்கு அம்பலமாகியுள்ள நிலையில் தமிழர்கள் ஏன் அங்கு போவதனை விரும்பப் போகின்றனர் என்றும் பெப்ரவரி 2009 இல் அறிக்கையிட்ட பா. நடேசன் அவர்கள் அதே இலங்கை இராணுவத்திடம் கேவலமான முறையில் மே 17ந்திகதி சரணடையச்சென்றார். 

ஹிட்லரிலும் பார்க்க மிகக் கொடிய அரக்கனை காட்டு மிராண்டியைப்போல மக்களைக் கொலை செய்கின்ற ஒரு மனிதனை அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர் கொண்டு நிற்கிறோம் என்று சொன்ன புலிகளின் போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி அவர்கள் அவுஸ்ரேலிய காட்டுத்தீயில் இறந்தோருக்காக கதறிய உலகு சிங்களக் காட்டுமிராண்டியிடம் கொலைபடும் எமது மக்களுக்காக கவலைகூடப்படவில்லை என்று கோபம் கொண்ட யோகி அவர்கள் அதே சிங்கள காட்டுமிராண்டி இராணுவதிடம் தானும் தனது சக பொறுப்பாளர்களும் மட்டும் எப்படிச் சரணடைய முடிந்தது?

இங்கே நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடையம் ஒன்று இருக்கிறது. உலகில் மிகவும் இறுக்கமான ஒழுங்கையும் இராணுவக்கட்டுக்கோப்பையும் உறுதியையும் கொண்ட ஒரு இயக்கமாக விடுதலைப்புலிகள் அமைப்பு இருந்ததாக எல்லோராலும் நம்பவைக்கப்பட்டிருந்தது. தலைமைப் பீடத்தின் மீது அதிக விசுவாசமாக ஒவ்வொரு உறுப்பினர்களும் உருவாக்கப்பட்டார்கள். இயக்கத்திற்கு துரோகம் இழைப்பது மரண தண்டனைக்குரிய குற்றம். எதிரியிடம் பிடிபடும் போது சைனட் அருந்தி மரணிப்பது கட்டாயமானது. மீறியவர்களுக்கு பின் மரணதண்டனை வழங்கியதும் தண்டனை அனுபவித்ததும் நாம் கண்ட வரலாறு. My Daughter The Terrorist என்ற ஆவணப்படத்தில் இரண்டு பெண்புலிகளும் தலமை சொல்லும் எதையும் நாம் நிறைவேற்றத் தயாராய் இருக்கிறோம் எனவும் துரோகம் இழைப்பவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் எனவும் சொல்கிறார்கள். இதுதான் விடுதலைப்புலிகளுடைய கட்டுக்கோப்பு.

விடுதலைப்புலிகள் தமது கட்டுக் கோப்பு என்பதை மிக இரகசியமாக ஒவ்வொரு உறுப்பினர்களின் பிடரிக்குள்ளும் ஒழித்துவைத்த துப்பாக்கியினூடே கொண்டு சென்றார்கள். தனிப்பட்ட ஒவ்வொருவர் மீதும் கண்காணிப்பை உருவாக்கியதினூடு எப்போதும் ஒரு அச்சத்தை மரணபயத்தை வைத்திருப்பதனூடு தமக்குக் கீழ் ஒரு தேவையற்ற ஒழுங்கை கடைப்பிடிக்க வைத்தார்கள். 

விடுதலைப் புலிகளின் படை வீரர்கள் கரும்புலியாகப் போய் மரணித்துவிட ஆசைப்படுபவர்களாக, அதற்கு முதல்நாள் தலைவருடன் எடுக்கும் புகைப்படத்தில் சிரித்துக் கொண்டு நிற்கும் மனநிலை எப்படி ஊட்டப்பட்டது. 

இப்படி விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் மரணத்தைத் துச்சமாக மதிக்கப்பழக்கிய தலைமை, ஏன் தான் மட்டும் வெள்ளைத் துணியை நம்பி இராணுவத்திடம் சரணடையத் துடித்தது. வாழ்தலின் ஆசை ஏன் அவர்களை மட்டும் பற்றிக் கொண்டது? எப்படி எதிரியின் முன்னால் தாம் மட்டும் சைனற் அடிக்காமல் சரணடைய வேண்டிவந்தது? தமது பல்லாயிரம் உறுப்பினர்களை பச்சைப் பாலகர்களை சைனற் அடித்து சாக வைத்த தலைமை, தான் மட்டும் சரணடைந்தது ஏன்? அவர்களுக்கு வாழ்தலில் ஆசை தமது உயிரின் மீதான ஆசை என்பதெல்லாம் ஏன்? நாம் இவற்றிற்கான விடையை யாரிடம் கேட்பது?

கடந்த மே 17ந் திகதி புலிகளின் முக்கிய தளபதிகள் இராணுவத்திடம் சரணடைந்து புலித் தலைமை அழிக்கப்பட்டு விட்டதன் பின் புலிகள் ஒருபோதும் யாராலும் வெற்றி கொள்ள முடியாதவர்கள். அவர்கள் வீரம் செறிந்தவர்கள் என்று சொன்ன அநேகர் மௌனித்துப் போனார்கள். யார் அடுத்த தலைவர் என்பது அவர்களிடம் இருக்கும் மிக முக்கியமான கேள்வி. விடுதலைப் புலிகள் என்பதன் பெயரில் தொடர்ச்சியான ஒரு இருப்பு என்பது இனிச் சாத்தியமானதா?  

மறவர் குலம், வீரமரணம், மாவீரம் என்ற சொற்பதங்கள் நம்மிடையே மிகவும் கேலிக்கூத்தானதாகி விட்டிருக்கிறது. பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறிப் புதைக்கும் மனநிலை யாரிடம் இனிவரும்? ஈழத்தில் விடுதலைப்புலிகள் என்பது பெயருக்குக் கூட உச்சரிக்கப்பட முடியாதபடி அது கேவலமான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது. தனது அழிவுக்குப் பின் அதனைக் கொண்டு நடாத்த யாரையும் உருவாக்கி விடவில்லை அதன் தலைமை. 

புலம் பெயர்ந்த தேசங்களில் இருக்கும் புலிகளிற்குள் பிளவு வந்து விட்டது. இங்கு வரும் வருமானங்களை யார் கணக்கிடுவது என்பதில் மிகப்பெரிய சிக்கல் அவர்களுக்கு. இந்தச் சண்டையே முற்றி தமது தலைவன் உயிருடன் இருக்கிறான் என்றும் சிலர் இல்லை என்றும் சண்டையிட வேண்டி வருகிறது. 

புலிகளின் முக்கிய செயற்பாட்டாளரான பாதிரியார் இம்மானுவேல் அவர்கள் சண்டையை இடைமறித்து இருசாராருக்கும் இணக்கம் வேண்ட இடையில் நிற்க வேண்டி வருகிறது. தமிழ் மக்களிடம் நாம் ஒற்றுமையோடு இருந்து அடுத்த கட்டத்தை கண்டறிவோம் என்று தமிழ்மக்களிடம் கையேந்துகிறார் புலிகளின் கடைசி முகவர் பத்மநாதன் (KP).

இது எல்லாம் போக, விடுதலைப் புலிகள் என்பது ஈழத்து அரசியற் சூழலில் இனி எவ்வாறான நிலையில் ஈடுபடப் போகிறது என்பது நமக்கு முக்கியமானது. எஞ்சியிருக்கின்ற புலிகள் S.பத்மநாதன் போன்றவர்கள் தாம் இனி ஜனநாயக வழியில் போராடப் போவதாகவும் மிகுதித் தமிழ்க் கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு இணக்கத்திற்கு வர இருப்பதாகவும் சொல்லியிருப்பது நல்லதாக இருந்தாலும் அது சாத்தியமானதா என்பதையும் யோசிக்க வேண்டும். 

விடுதலைப்புலிகள் என்பது புலம் பெயர்ந்த நாடுகளிலும் மற்றும் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகவே இருக்கிறது. அந்தப் பயங்கரவாத இயக்கம் ஒரு கொடிய யுத்தத்தின் மூலம் அழிக்கப் பட்டிருக்கிறது. இறுதி யுத்தத்தில் தமிழர்களும் சிங்கள இளைஞர்களும் பெருவாரியாகக் கொல்லப் பட்டிருக்கிறார்கள். 

கடந்த முப்பது வருடத்தில் சமாதான முயற்சிகள் பேச்சுவார்த்தைகள் மூலம் புலிகள் தமிழர்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள நிறையவே சந்தர்ப்பங்கள் இருந்தன. 1987இல் வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் விடுதலைப் புலிகள் பங்கு பற்றினால் தாம் நிபந்தனையற்று விலத்துவதாக அத்தனை தமிழ்க்கட்சிகளும் அறிவித்ததும் புலிகள் மறுத்திருந்தனர்

புலிகளின் வரலாற்றில் ஒரு ஜனநாயகப் போக்கு என்பது மருந்துக்கும் இருக்கவில்லை. அவர்களால் தமிழ் சமூகத்திற்குள் ஜனநாயக முறைப்படி இயங்குவது என்பது எக்காலத்திலும் முடியாத காரியம். கடவுளிற்கு சமமாக வழிபட்ட தலைவன் கேவலமான முறையில் இறந்த பின்னர் இனி யாரையும் நம்ப அந்த மக்கள் தயாராய் இருக்கமாட்டார்கள். ஆதலினால் விடுதலைப்புலிகள் என்ற ஒரு அமைப்பு தமிழ் மக்களது பிரச்சனை பற்றிப் பேசுவது அவர்களுக்குள் அரசியல் வேலை செய்வது என்பதன் சாத்தியம் மிகக் குறைவே.
இந்த இறுதி யுத்தத்திலும் அத்தனை தமிழ்மக்களின் படுகொலையைத் தடுத்துவிட புலிகளுக்கே மிகஅதிகமான சந்தர்ப்பம் இருந்தது. அப்படி இருந்தும் இறுதிவரை அந்த அழிவை அவர்கள் கணக்கெடுக்கவில்லை. தமது மடியில் இறுகியதும், தமது உயிருக்கு ஆபத்து நெருங்கியதுமே அவர்கள் தமது ஆயுதத்தை மௌனிப்பதாக அறிவித்தார்கள். தாம் சரணடைவதாக அறிவித்தார்கள். குறைந்தபட்சம் கிளிநொச்சியை விட்டுப் போகும் போதாவது இதனைத் தெரிவித்திருக்கலாம். அவர்கள் செய்யவில்லை. மிகப் பெரிய அழிவுக்குப்பின் இறுதித் தருணத்தில் மட்டும் தமது சரணடைவைத் தெரிவித்தார்கள். 

ஆனால் இலங்கை அரசு நம்பவைத்துக் கழுத்தறுத்தது. பேசவரச் சொல்லிவிட்டு சுட்டுத் தள்ளினார்கள் என்றும் சரணடைந்தவர்களைக் காட்டுமிராண்டிகள் போல் சுட்டது என்றும் புலிகள் தமது ஊடகங்களில் கோபம் கொள்கிறார்கள். இந்தக் கோபம் உண்மையில் அவர்களுக்கு வருவது நியாயமானதல்ல. 

விமலேசுவரன்
விமலேசுவரனை பேசிவிட்டு விடுவதாகச் சொன்னவர்கள் உடலைத்தான் தந்தார்கள. பேசுவோம் கொஞ்சம் பொறுங்கள் என்ற சிறீசபாரத்தினத்தை ஒரு வினாடியில் பேசாமல் செய்தார்கள். இப்படி நம்பவைத்துக் கழுத்தறுத்த சந்தர்ப்பங்கள் புலிகளிடம் நிறையவே இருந்தன. அதனால் இதற்கெதிராக புலிகள் சார்பிலிருந்து யார் செய்யும் கண்டனங்களும் எந்தப் பிரியோசனத்தையும் தருவதாக இல்லை.

யுத்தத்தின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பிரதேசம் சுடுகாடாய் மாறியிருந்தது. அரச இராணுவம் மிகக் கொடூரமான முறையில் எஞ்சியிருந்த மக்களை அழித்திருக்கிறது. மக்களே புலிகள் புலிகளே மக்கள் என்ற புலிகளின் பொய்யான கோசத்தை தனக்குச் சாதகமாக்கி இறுதியுத்தத்தில் பேரழிவை நடாத்தியிருக்கிறது. உலகின் எந்த மூலையிலும் இப்படி ஒரு அழிவை தான் பார்த்திருக்கவில்லை என்று பான்கிமூன் சொல்லுமளவுக்கு அங்கு யுத்தம் தாண்டவம் ஆடியிருக்கிறது. 


புலிகளின் சரணடைவுக்குப் பின் அங்கு எஞ்சியிருந்த காயம்பட்டவர்கள், அங்கவீனர்கள் எங்கே என்பதும் அவர்கள் எப்படிக் கொல்லப்பட்டார்கள் என்பதும் எல்லோருக்கும் அறிந்த பொய்யாகிக் கிடக்கிறது. யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் பெண்போராளிகளது உடல்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. நாம் இவற்றைச் செய்தது விடுதலைப் புலிகளா அல்லது இராணுவமா என்று நாங்கள் விவாதம் நடாத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த யுத்தத்தில் பங்குபற்றிய இருசாராரும் இதைச் செய்யமாட்டார்கள் என்று அடித்துச் சத்தியம் செய்ய முடியாமல் இருபகுதியினரும் செய்த மகோன்னதத் தவறுகள் நமது கண்முன் விரிந்து கிடக்கிறது. 

யுத்தத்தில் பங்கு கொண்ட அனேக இராணுவச் சிப்பாய்களின் கைகளில் புகைப்படக் கமராக்கள் இருந்திருக்கின்றன. இலங்கை அரசு இதைத் திட்டமிட்டே அனுமதித்திருக்கிறது. இலங்கை அரச அனுமதி பெற்ற புகைப்படங்களைவிட நமக்கு இன்னும் அதிக அதிர்ச்சியூட்டும் படங்கள் அந்தச் சிப்பாய்கள் மூலம் இனிவரும் காலங்களில் வந்து சேரப்போகின்றன என்பது மட்டும் உண்மை. அவற்றைக் கூட புலிகள் எடுத்தார்களா அல்லது இராணும் எடுத்ததா என்று நாம் பேசிக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

இராணுவம் வீசிய எறிகணைகளில் அங்கங்களை இழந்து துடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு துணியெடுத்துக்கட்ட ஆளில்லாமல் இருந்த தருணங்களில் புலிகள் புகைப்படமும் வீடியோவும் எடுத்துப் புலம் பெயர்ந்தவர்களுக்குச் சுடச்சுட அனுப்பிக் கொண்டிருந்தவர்கள்தான். இவர்களது கட்டுப்பாட்டிலிருந்த வங்காலையில் மிகத் துயரமான வங்காலைப் படுகொலை என்று பெயர்பெற்ற குழந்தைகளின் கழுத்தறுத்துக் கட்டித்தூக்கிய புகைப்படத்தையும் நாம் புலிகளின் ஊடகங்களில் பார்த்து வந்தவர்கள்தானே. ஆக யார் செய்தாலென்ன இந்த அழிவுகளுக்கும் அவலங்களுக்கும் நாமும் பலவகையில் பொறுப்புச் சொல்லியாக வேண்டும்.

இராணுவத்தினால் கடந்த யுத்தத்தின் இறுதி நாட்களான மே 16,17 களில் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா உட்பட அத்தனை மனித உரிமை அமைப்புக்களும் கேள்விக்கணைகளைத் தொடுத்தும் இலங்கை அரசு பதில் சொல்ல மறுக்கிறது. வெற்றியின் பெருமிதப்பில் அனைத்தையும் நிராகரித்துவிட்டு திமிரோடு நிற்கிறது இலங்கை அரசு. கடந்த முப்பது வருடமாக பாசிசவலயத்துள் வாழ்ந்து பழகிய ஈழத்தமிழினம் மே 17 புலிகளின் அழிவுக்குப்பின் அடுத்தகட்டம் நகரமுடியாமல் நிற்கிறது, புலிகளற்ற தமிழ் சமூகம் சிங்கள இனத்தால் முழுமையாக விழுங்கப்பட்டு விடும் என்று அனைத்து ஊடகங்களும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஏதாவதொருவகையில் தமது அடையாளத்தை உருவாக்குவதுடன் ஈழத்தமிழர்களது அரசியல் வாழ்வில் மீளப் புகுந்துவிட புலம் பெயர் புலிகள் விடாமுயற்சி செய்கிறார்கள். ஆனால் ஈழத்தமிழர்களின் சார்பில் இனிப் பேசவரும் யாரும் புலிகளது அடையாளத்துடனோ அல்லது அதன் நிழலாகவோ இருக்கமுடியாது என்பதுதான் உண்மை.
கற்சுறா
Saturday, June 20th, 2009 

(உயிர்மெய் -7  / வெளிச்சம் – 6 )
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை
 http://www.telonews.com/?p=10465

 https://tamil.oneindia.com/news/2009/01/27/lanka-prabhakaran-not-fleeing-fighting-for-people.html

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.