Saturday, 30 May 2020

ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு 150 156

150: புலிகள் - முஸ்லிம்கள் உறவு!
"இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவருமே தமிழ் பேசும் முஸ்லிம்கள் ஆவார்கள். மதத்தால் வேறுபட்டவர்களே தவிர மொழியாலும் இனத்தாலும் முழுக்க, முழுக்க தமிழர்களே ஆவார்கள். உருது, அரபி, பாரசீகம் மற்றும் மலாய் பேசும் முஸ்லிம்கள் தமிழீழத்துக்கு வெளியே, கொழும்பு நகரை ஒட்டி, குறைந்த எண்ணிக்கையில் வாழ்ந்து வருவதை ஆரம்ப அத்தியாயங்களில் குறிப்பிட்டுள்ளோம்.
தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப் பூர்வமான தாயகம் என்று அழைக்கப்படுகிற பகுதியில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். எனவே உருவாகப்போகும் தமிழீழ நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாகத்தான் அவர்கள் திகழ்கிறார்கள்' இவ்வாறு புலிகள் - முஸ்லிம்கள் உறவு குறித்து "தென் செய்தி' வெளியீடு எண் 8 கூறுகிறது.
இந்நிலையில், "இலங்கை, வடக்கு - கிழக்கு மாநிலத்தில் வாழும் முஸ்லிம்கள் குறித்து உண்மைகளைத் திரித்துக் கூறும் தவறான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டதையொட்டி 1988-ஆம் ஆண்டு, சென்னையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் கிட்டுவுடன் முஸ்லிம் தூதுக் குழு ஒன்று பேச்சு நடத்தியது.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசில் மூத்த அமைச்சராக இருந்த பதுஃதீன் முகமது தலைமையில் வந்த தூதுக் குழுவினர் கிட்டுவுடன் பேசி, உருவாகப் போகும் தமிழீழத்தில் தங்களுக்குள்ள உரிமைகள் குறித்துப் பேசி உடன்பாடு கண்டதாக' -அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விடுதலைப் புலிகள் 1988-ஆம் ஆண்டு ஏப்ரல் 4-ஆம் தேதியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
அவ்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
தமிழ் தேசிய இனத்தில் தனித்துவமான கலை, கலாசாரம், பண்பாடுகளைக் கொண்ட இனக் குழுவினரான இலங்கைவாழ் முஸ்லிம்கள், அச்சம், ஐயப்பாடுகளின்றி தமது கலை, கலாசாரம், பண்பாடு, மதம் போன்றவற்றைப் போற்றி வளர்க்கவும் பாதுகாக்கவும் தமிழ் தேசிய இனத்தின் ஏனையவர்களுக்குள்ள அனைத்து உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் உத்தரவாதம் வழங்குகின்றோம். பின்தங்கிய நிலையில் இருக்கும் முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார, அரசியல் உரிமைகளை மேம்படையச் செய்ய எமது இயக்கம் எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பு வழங்கும். தமிழ் தேசிய இனத்தில் சமத்துவமான நிலைமையை அவர்கள் அடையும்வரை அவர்களுக்கு அவர்கள் பின்தங்கிய துறைகளில் சிறப்புச் சலுகைகள், உதவிகள் ஆட்சி நிர்வாகத்தின்கீழ் கிடைக்க எமது இயக்கம் ஆவனவற்றைச் செய்யும்.
இனத்தின் தனித்துவம் காப்பாற்றப்பட நிரந்தர வாழ்விடம் எவ்வளவு அவசியம் என்பதை நன்கறிந்தவர்கள் முஸ்லிம்கள். பாரம்பரியமாக இருந்து வந்த நிலத்தை, சியோனிஸ்டுகளான யூதர்களிடம் இழந்துவிட்டு இன்று பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் பல்வேறு நாடுகளில் அகதிகள் முகாம்களிலிருந்து தமது போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களது நிலைமைகளைப் போலன்றி, தம் நிலத்தைக் காப்பாற்ற தனித்துவமான தமது கலை, கலாசாரம், பண்பாடு, மதம் என்பவற்றைக் காப்பாற்ற எம்முடன் சேர்ந்து போராட முன்வந்திருக்கிறார்கள். அதன் ஒருபடிதான் முஸ்லிம் பிரதிநிதிகள் விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தி வெளியிட்டிருக்கும் கூட்டறிக்கை.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழியைப் பேசுபவர்களாக இருப்பினும் அவர்கள் வேறுபட்ட தனித்துவத்தைக் கொண்ட தமிழ் தேசியத்தினுள் உள்ளடங்கிய ஓர் இனக்குழு என்பதனையும் வடக்கு-கிழக்கு மாகாணம் ஏனைய தமிழ் மொழி பேசும் மக்களின் பாராம்பரியத் தாயகமாக உள்ளது போலவே முஸ்லிம்களது பாரம்பரியத் தாயகமாக உள்ளது என்பதனையும் ஏற்றுக் கொள்கிறோம்.
வடக்கு-கிழக்கு ஒன்றிணைத்த தாயகத்தில் வாழும் தமிழர்களும் முஸ்லிம்களும் ஐக்கியத்துடனும் சமாதானத்துடனும் வாழ, தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவர் என்பதையும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் வாழ்வதற்கு எதிர்பார்க்கப்படும் முழு உத்தரவாதமும் சட்ட ரீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம்.
தாயகத்தில், முஸ்லிம் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் எனவும் தாயகத்தில், உரிமைகளை வென்றெடுப்பதற்காக முஸ்லிம் மக்கள் ஏனைய தமிழ் பேசும் மக்களுடன் பெருமளவில் இணைவதன் மூலமாகத்தான் தமது மண்ணையும் கலாசாரத்தையும் காப்பாற்ற முடியுமென்பதையும் முஸ்லிம் மக்களின் நலனுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாகப் பாடுபாட்டு வருவார்கள் என்பதும் உறுதியாக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாகாண சபைக்கான 13-வது அரசியல் சட்டத் திருத்தம் முஸ்லிம் மக்களினதும் ஏனைய தமிழ் பேசும் மக்களினதும் அடிப்படை அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யவில்லை.
முஸ்லிம் மக்களது உரிமைகளைப் பாதுகாக்கவும் ஆட்சியதிகாரங்களை நியாயமான முறையில் பகிர்ந்து கொள்ளவும் கூடிய ஏற்பாடுகளைச் செய்யும்போது அத்தகைய நடவடிக்கைகள் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தின் ஒருமைப்பாட்டிற்குப் பாரதூரமான குந்தகமெதுவும் ஏற்படுத்தக்கூடாது.
மேற்கூறியதன் அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் ஏனைய தமிழ் பேசும் மக்களுக்குள்ள இன உரிமைகளையும் சலுகைகளையும் வாய்ப்பினையும் சுதந்திரத்தினையும் அனுபவிப்பதற்கு வடக்கு-கிழக்கு மாகாணத்தைத் தமது தாயகமாகக்கொண்ட முஸ்லிம்கள் உரித்துடையவர்கள்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் 33 சதவிகிதம் தொகையினர். வடக்கு-கிழக்கு ஒன்றிணைந்த மாகாணத்தில் முஸ்லிம்கள் 18 சதவிகிதத் தொகையினர். முஸ்லிம்கள் அதிகபட்ச பாதுகாப்பைப் பெற்று ஆட்சி அதிகாரங்களை, பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினையும் பெறக்கூடிய வகையில் ஒன்றிணைந்த தாயகத்திலுள்ள 30 சதவிகிதத்திற்குக் குறைவில்லாத வகையில், மாகாண சபையில் பிரதிநிதித்துவம் பெறுவதற்கும் அமைச்சரவையில் இடம் பெறுவதற்கும் உரித்துடையவர்கள் என்பதை ஏற்றுக் கொள்வதுடன் இவ் விகிதப்படியான உரித்துகளைப் பெறுவதற்குத் தேவையான அரசியல் சட்ட ஏற்பாடுகளைச் செய்வதற்கு இருதரப்பினரும் முழு முயற்சிகளையும் மேற்கொள்வர்.
வருங்கால அரச காணிப் பங்கீடு முஸ்லிம்களுக்குக் கிழக்கு மாகாணத்தில் 35 சதவிகிதம் குறைவில்லா வகையிலும் மன்னார் மாவட்டத்தில் 30 சதவிகிதத்துக்குக் குறைவில்லாத வகையிலும் வட மாகாணத்தில் ஏனைய பகுதிகளில் 5 சதவிகிதத்துக்குக் குறைவில்லாத வகையிலும் இருக்க வேண்டும்.
வடக்கு-கிழக்கு தாயகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களின் விகிதாசாரத்தின்படி பொதுத்துறை வேலைவாய்ப்பிற்கான உரிமையை முஸ்லிம்கள் கொண்டிருப்பர்.
கல்வித்துறையில் எல்லா இடங்களிலும் சம வாய்ப்புகள் பேணப்படும் வரை பல்கலைக்கழக அனுமதியின்போது கல்வித் துறையில் பின்தங்கியுள்ள பிரதேசங்களில் விசேஷ கவனிப்புச் செலுத்தப்படும்.
பல்கலைக்கழக மட்டம் வரையிலான பிரத்தியேகக் கல்வி வசதிகள் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்படும்.
முஸ்லிம் மக்களுக்காக இஸ்லாமியப் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
முஸ்லிம் மக்களது தனித்துவத்தின் உரிமைகள், அக்கறைகள் என்பவற்றைப் பாதிக்கக்கூடிய எந்தவித சட்டவாக்கியங்களும் அவற்றிற்கு முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தாலன்றி வடக்கு-கிழக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்படலாகாது.
வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் முறையாக நியமிக்கப்பட்டிருந்தாலன்றி, அம் மாகாண சபையின் துணை முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படுதல் வேண்டும்.
வடக்கு-கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அவர்கள் அரசியல், நிர்வாக, அபிவிருத்தி அலகுகள் பல்வேறு மாவட்டங்களில் உருவாக்கப்படுதல் வேண்டும். இதுபற்றி விடுதலைப் புலிகள் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். இவற்றுள் உள்ளடக்கப்பட வேண்டிய பாரம்பரிய எல்லைகள், மூலவளங்கள் என்பன பற்றி மேலும் இருபகுதியினரும் ஆய்வு நடத்தி இறுதி முடிவு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு பல நிலைகள் விவாதித்து முடிவு காணப்பட்டன. தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து வாழ வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய இந்த உடன்பாட்டில் விடுதலைப் புலிகள் சார்பில் கிட்டுவும், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி சார்பில் எம்.ஐ.எம். மொகைதீனும் கையெழுத்திட்டனர்.
நாளை:
151: பிரித்தாளும் சூழ்ச்சி!
கிட்டுவும், மொகைதீனும் கையெழுத்திட்டு உருவான உடன்படிக்கை கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. ஆளும் தரப்பினர், தமிழர்-முஸ்லிம் இடையே பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைபிடிக்க ஆரம்பித்தனர். அமைதிப்படையும், விடுதலைப் புலிகளும் நேரடியாக மோதிய சூழ்நிலையில், தமிழர்கள்-முஸ்லிம்கள் இடையே முரண்பாடுகளும் வளர்த்து விடப்பட்டன.
இதுகுறித்து பழ.நெடுமாறன் தனது நூலில், "முஸ்லிம் காங்கிரஸ், ஜிகாத் அமைப்பினருக்கு அமைதிப் படை ஆயுதங்களை வழங்கி புலிகளுக்கு எதிராகப் போராடும்படி தூண்டியது. ஆனாலும், புலிகள் முஸ்லிம்களுக்கு எதிராகக் கலவரங்கள் நடைபெற அனுமதிக்கவில்லை' (தமிழீழம் சிவக்கிறது பக். 345) என்றும் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறியபோது, பிற போராளி குழுக்களுக்கும், மறுபுறம் ஜிகாத் இளைஞர்களுக்கும் ஏராளமான ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கி விட்டுத்தான் சென்றது' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் நோக்கம் இவர்கள் இலங்கையை விட்டு வெளியேறினாலும், புலிகள் தொடர்ந்து நெருக்கடியைச் சந்திக்க வேண்டும் என்பதே ஆகும் என்றும் அவர் குறிப்பிடுகிறார். இதே நிலையைத்தான் பிரேமதாசா அரசும் விரும்பியது.
பிரேமதாசா-புலிகள் பேச்சு முறிவடைந்து யுத்தம் பெருமளவில் மூண்ட நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில் "பொத்துவில்' என்கிற இடத்தில் தமிழர்-முஸ்லிம்களிடையே பெரும் மோதல் எழுந்தது. இதில் தமிழர்களின் வீடுகள் எரிக்கப்பட்டன.
பொத்துவிலில் தொடங்கிய மோதல் அம்பாறை மாவட்டம் முழுவதும் விரிவடைந்தது.
இதனால் தமிழர்கள் அந்தப் பகுதியிலிருந்து விரட்டப்பட்டார்கள். இவ்வாறாக 75 ஆயிரம் தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர நேர்ந்தது. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறந்ததாகவும் தகவல் உள்ளது. "நூற்றுக்கும் மேற்பட்ட பழந்தமிழ்க் கிராமங்கள் பல அடியோடு அழிக்கப்பட்ட நிலையில், பாண்டிருப்பு, காரைத்தீவு, கோமாரி, தம்பிலுவில், திருக்கோவில் கிராமங்களில் மட்டுமே தமிழ் மக்கள் வசிக்கிறார்கள்' (தமிழீழம் சிவக்கிறது-பழ.நெடுமாறன்-பக். 352).
இதன் தொடர் நிகழ்வாக, முஸ்லிம்கள் மீது புலிகள் நடத்திய தாக்குதல் குறித்து, "ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' நூலில் சி.புஷ்பராஜா வெளியிட்டுள்ளார். அந்தத் தகவலின்படி 1990-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி குருக்கள் மடத்திலும், ஆகஸ்ட் 3-ஆம் தேதி காத்தான்குடி பள்ளிவாசலிலும், அதே ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஏறாவூரிலும் ஆக மொத்தம் 271 பேர் கொல்லப்பட்டனர் என்றும் அவர் எழுதியுள்ளார். "ஈழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதல் மாபெரும் தவறுதான்' என்று குறித்துள்ள புஷ்பராஜா, தான் அங்கம் வகித்த ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர் அமைதிப்படையினருடன் சேர்ந்து 1987-இல் கல்முனையிலும், 1989-இல் சம்மாந்துறையிலும் முஸ்லிம் மக்களுக்குச் செய்த கொடுமைகளையும் குறிப்பிட்டிருக்கிறார் (பக்.502).
யாழ்ப்பாணக் குடா நாட்டிற்குள், புலிகளின் அரண்களையும் கொரில்லா நடவடிக்கைகளையும் ஜிகாதி இளைஞர்களில் சிலர் சிங்களப்படைக்குக் காட்டிக்கொடுத்து வந்தனர் என்றும், இந்த ஜிகாதி இளைஞர்களுக்கு யாழ் நகர முஸ்லிம்கள் புகலிடம் அளித்தனர் என்றும், இதனைக் கண்டித்த புலிகள் இந்தப் போக்கைக் கைவிடுமாறும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த எச்சரிக்கைக்கு பயன் ஏற்படாத நிலையில், ஜிகாதி இளைஞர்களின் துப்பு, சிங்களப் படையின் தாக்குதலைக் கடுமையாக்கியது. வேறு வழியின்றி விடுதலைப் புலிகள் முஸ்லிம் வட்டாரங்களில் வாழ்ந்தோரை குறுகிய காலக்கெடுவில் யாழ்குடா நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டனர் (புலிகள் அறிக்கை).
பலத்த விமர்சனத்துக்கு ஆளான இந்த உத்தரவு குறித்து பி.பி.சி. வானொலிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் அளித்த பேட்டியில்,
""1990-ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இனக் கலவரம் வெடித்துப் பெரும் தொகையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டபொழுது யாழ்ப்பாணத்திலும் கலவரம் பரவும் ஆபத்து எழுந்தது. அந்த வேளையில், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பைக் கருதி நாம் அவர்களை யாழ்ப்பாணத்திலிருந்து தாற்காலிகமாக வெளியேறும்படிக் கேட்டுக் கொண்டோம். ஆயினும், யுத்தம் முடிவடைந்து சமாதான சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் அவர்களை மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியமர அனுமதிப்போம்'' என்றார்.
முஸ்லிம் மக்கள் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன? என்று பி.பி.சி. நிருபர் கேட்ட இன்னொரு கேள்விக்கு வே.பிரபாகரன் அளித்த பதில்:
""முஸ்லிம் மக்கள் தனித்த பண்பாடு உடைய ஓர் இனக்குழு என்ற வகையில், அவர்களது பிரச்னை அணுகப்பட வேண்டும். முஸ்லிம் மக்களின் தனித்துவம் மற்றும் நில உரிமைப்பாடு பேணப்படும். அதேவேளை, அவர்கள் தமிழ் மக்களோடு ஒன்றிணைந்து வாழ்வதே அவர்களது சமூக, அரசியல், பொருளாதார வாழ்வைச் சிறப்பாக்கும் என நாம் கருதுகிறோம். சிங்களப் பேரினவாதிகளும் சுயநலம் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகளும், தமிழ்-முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையையும், விரோதத்தையும் வளர்த்துவிட முயலுகிறார்கள். இந்தச் சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்கள் பலிகடா ஆகக் கூடாது'' என்றும் அவர் பதிலளித்தார்.
இந்திய அரசியலில் ஒரு மாற்றமாக, பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பில் மண்டல் கமிஷனின் பரிந்துரை அமலாக்கத்தில் பிரச்னை எழுந்தது. ஆனால், மண்டல் பரிந்துரையை அமல்படுத்துவது என்பதில் வி.பி.சிங் உறுதியாக இருந்தார். இம் முயற்சியை இந்தியாவின் வட மாநிலங்களில் மாணவர்களும், படித்த வர்க்கத்தினரும் கடுமையாக எதிர்த்தனர். தீக்குளிப்பு சம்பவங்களும் நடைபெற்றன.
மண்டல் கமிஷன் அறிக்கை அமலாக்கம், இந்திய மக்களை இருவேறு பிரிவுகளாகப் பிளவுபடுத்தும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
வி.பி.சிங் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்த பாஜக எந்த நிலை எடுப்பது என்பது குறித்து அந்தக் கட்சிக்குள்ளேயே பலத்த விவாதம் எழுந்தது. இறுதியில் மண்டலுக்கு எதிராக, ராமர் கோயிலா - பாபர் மசூதியா? என்கிற பிரச்னையை பாஜக கையிலெடுத்தது. ஆறாயிரம் மைல்களை உள்ளடக்கிய ரதயாத்திரைத் திட்டத்தை, பாஜகவின் தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானி, 1990-ஆம் ஆண்டு செப்டம்பர் 25-இல், குஜராத்தின் சோமநாத் கோயிலில் இருந்து, தொடங்கினார்.
வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் புயலைக் கிளப்பிய இந்த ரதயாத்திரை, பீகார் எல்லையைத் தொட்டவுடன், அம்மாநில முதலமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ் யாத்திரையைத் தடை செய்து, அத்வானியைக் கைது செய்தார். அரசு விருந்தினர் மாளிகை ஒன்றில் அவர் சிறைவைக்கப்பட்டிருக்க, அவருடன் வந்த தொண்டர்கள் உத்தரபிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள்.
அங்கே, அம்மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவ், ஊர்வலத்தில் வந்தவர்களைக் கூட்டமாகக் கைது செய்து, நகரவிடாமல் செய்தார்.
அதனையும் மீறி ஒன்றரை லட்சம் பேர் தடுக்கப்பட்டனர். அதையும் மீறி "கரசேவகர்கள்' என்றழைக்கப்பட்ட தொண்டர்கள் சரயு நதியைத் தாண்டிச் சென்று, பாபர் மசூதி அமைப்பில் காவிக்கொடியை நட்டனர். சிறப்பு அதிரடிப் படைக்கும் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் உயிர்துறந்தனர். ஏராளமான பேர் படுகாயமுற்றனர்.
வி.பி.சிங் அரசுக்கு அளித்துவந்த தனது 86 உறுப்பினர்களின் ஆதரவை பாரதீய ஜனதாக் கட்சி விலக்கிக் கொண்டது. பிரதமர் வி.பி.சிங் தனது பதவியைத் துறந்தார். 1979-இல் மொரார்ஜி தேசாய் அமைச்சரவைப் பதவி விலகியதையொட்டி, சரண்சிங் பிரதமராவதற்குக் காங்கிரஸ் ஆதரவு அளித்த அதே உத்தியைப் பயன்படுத்தி, தற்போது சொற்ப எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட முன்னாள் "இளந்துருக்கியரா'ன சந்திரசேகர் பிரதமர் ஆவதைக் காங்கிரஸ் கட்சி வரவேற்று, ஆதரவு தெரிவித்தது. 1990-ஆம் ஆண்டு நவம்பர் 10-இல் சந்திரசேகர் பிரதமரானார்.
உடனடித் தேர்தலை யாருமே விரும்பாத நேரத்தில், சந்திரசேகர் ஆட்சி இடைக்கால ஏற்பாடாகவே அப்போது கருதப்பட்டது.
152: ராஜீவ் படுகொலை!
புலிகளின் மகளிர் பிரிவு, நேரடிப் போரில் கலந்துகொண்டது "கொக்காவில்' சிங்கள ராணுவ முகாம் தகர்ப்பில்தான். அதுநாள்வரை மகளிர் படைப்பிரிவு, தற்காப்பு யுத்தத்திலேயே பங்கெடுத்திருந்தார்கள். இந்த "கொக்காவில்' சிங்கள முகாம் தகர்ப்பில் புலிகளுடன் மகளிரும் சம அளவில் கலந்துகொண்டனர்.
1990-ஆம் ஆண்டு ஜூலை 10, 11-ஆம் தேதிகளில் நடைபெற்ற தாக்குதலில் ராணுவ முகாம் முழுமையாகத் தகர்க்கப்பட்டது. முகாம் பொறுப்பாளர் காப்டன் அலந்தெனியா உள்ளிட்ட எழுபதுக்கும் மேற்பட்டோர் உயிர் துறந்தனர்.
புலிகள் தரப்பிலும் 18 வீரர்கள் இறந்தனர். இதில் மகளிர் படைப் பிரிவைச் சேர்ந்த 6 பெண் புலிகளும் அடங்குவர். இந்தப் போரில் காப்டன் உஷா, இரண்டாம் லெப்டினன்ட் பிரியங்கா, சாலினி, மாலா, குமாரி, அஜந்தா ஆகியோர் இறந்தனர். பெண்புலிகளின் இந்தத் தாக்குதல் சிங்கள ராணுவத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
யாழ்கோட்டை விழுந்தபிறகு சிங்கள ராணுவம் வன்னிப் பகுதியில் மாங்குளத்தில் இருந்த ராணுவ முகாமை பலப்படுத்தியது. இந்த முகாமைத் தாக்குவது புலிகளின் திட்டமாயிற்று. 1990-ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் தாக்குதல் நடைபெற்றது. பெருமழையிலும், எதிரிகள் வானிலிருந்து குண்டு மழை பொழிந்த போதிலும் புலிகள் கடுமையாகப் போரிட்டனர். முகாமில் இருந்த அனைவருமே கொல்லப்பட்டனர். பெருமளவில் ஆயுதங்கள் மற்றும் கவச வண்டிகள், பீரங்கிகள், வெடிமருந்துகள், ரவைகள் கைப்பற்றப்பட்டன.
மாங்குளம் வீழ்ச்சியினால் எதிர்க்கட்சிகளின் கண்டனத்தையும் பிரேமதாசா அரசு சந்திக்க வேண்டியிருந்தது. இந்தப் போரில் விடுதலைப் புலிகளின் "பசீலன்' என்கிற 500 மீட்டர் தூரத்தில் இருந்து வீசக்கூடிய ராக்கெட் குண்டுகள், எதிரிகளை நிலைகுலைய வைத்தது.
புலிகள் 1991-ஆம் ஆண்டு ஜனவரியில் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். இந்தப் போர்நிறுத்தத்தை சிங்கள அரசு ஏற்கவில்லை. புலிகள் தங்களது ஆயுதங்கள் அனைத்தையும் ஒப்படைத்தால்தான் போர்நிறுத்தம் என்று சொன்ன பிரேமதாசா, போர்நிறுத்தக் கோரிக்கையை நிராகரித்தார்.
அதுமட்டுமன்றி, இந்தப் போர் நிறுத்த அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே, "புலிகளின் பலவீனப் போக்கை வெளிப்படுத்துகிறது' என்றார்.
"வல்வெட்டித்துறை முகாமில் பிரபாகரன் தங்கியிருக்கிறார்' என்ற தகவலையடுத்து, வடமராட்சிப் பகுதி, விமானத் தாக்குதலுக்கு ஆளானது. அமைதிப் படையின் தாக்குதலுக்குத் தப்பிய கட்டடங்கள், சிங்களப் படையின் விமானத் தாக்குதலால் தரைமட்டமாயின. சிங்களப் படைகள் இந்தத் தாக்குதலில் பீப்பாய் குண்டு என்கிற ஆயுதத்தை மேலிருந்து வீசினார்கள். பீப்பாய் குண்டில் வெடிமருந்துகள் அதிக அளவில் நிரப்பப்பட்டிருக்கும். இதனால் அது கீழே விழுந்து சிதறியபோது பெருமளவில் நாசத்தை ஏற்படுத்தியது.
"ஒரு லட்சம் வீரர்கள்' என்ற கோஷத்தை முன்வைத்த இலங்கை பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே, ராணுவத்துக்கு அப்போது இருந்த 60 ஆயிரம் வீரர்கள் என்ற எண்ணிக்கையை ஒரு லட்சம் வீரர்களாக உயர்த்தப் போவதாக அறிவித்தார்.
ஜெயவர்த்தனா ஆட்சிக் காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்த அதிரடி அரசியல்வாதிகள் காமினி திஸ்ஸநாயகா, அதுலத் முதலி போன்றோரை பிரேமதாசா ஒதுக்கி வைத்துதான் ரஞ்சன் விஜயரத்னேவுக்கு பதவி வழங்கி இருந்தார். தொடர்ந்த சில வாரங்களில், பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே குறிவைக்கப்பட்டார். இருவேறு தாக்குதல் முயற்சிகளில் தப்பித்த அவர், மூன்றாவது முயற்சியாக, வெடிபொருள் நிரப்பிய மினிபஸ் மோதலில் சின்னாபின்னமாக்கப்பட்டார் (2-3-1991).
இந்தக் காலகட்டத்தில், இந்தியாவில் பிரதமர் சந்திரசேகர் ஆட்சியில், நிர்வாகரீதியாக சொல்லப்பட்ட தகவலை, புலிகளுக்கு தெரிவித்ததாக திமுக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது.
தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் பர்னாலாவிடம் மத்திய அரசு அறிக்கை கேட்ட சூழ்நிலையில், அவர் மறுக்கவே, அவரை தில்லிக்கு அழைத்தனர். தில்லியில் உளவுத்துறை இயக்குநர் எம்.கே. நாராயணன், "ரா' உயர் அதிகாரி ஜி.எஸ். வாஜ்பாய் ஆகியோர் திரட்டித் தந்த தகவல்கள் கொண்ட கோப்பினை, அவரது பார்வைக்கு வைத்தனர். அந்த உளவுத் தகவல்கள், விடுதலைப் புலிகளுடனான தகவல் பரிமாற்றங்களை இடைமறித்துக் கேட்கப்பட்ட தகவல்கள் ஆகும்.
நிர்வாகரீதியில் அரசுக்குத் தரப்பட்ட தகவல்கள் புலிகளிடம் தெரிவிக்கப்பட்டதாக அத்தகவல்கள் கூறின. இதன் அடிப்படையில் 30-1-1991-இல் திமுக அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இலங்கையைத் தாயகமாகக் கொண்டதும், தமிழீழம் என்னும் தனி நாடுக்கான ஆயுதமேந்திய போராட்டம் நடத்தி வருவதுமான தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டில் தமக்கென்று சில பகுதிகளில் செல்வாக்கை ஏற்படுத்திக்கொண்டு சுதந்திரமாகச் செயல்படக்கூடிய அளவுக்கு வளரவிட்டதாகவும், அந்த இயக்கத்தின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டதாகவும் திமுக அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் காரணத்துக்காகவே மாநில அரசு கலைக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது (31-1-1991-தினமணி).
ஆளுநர் அறிக்கையைப் பெறாமல் திமுக அரசு கலைக்கப்பட்டது குறித்து எழுந்த விமர்சனத்துக்கு அப்போதைய வர்த்தகம் மற்றம் சட்டத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சுப்ரமணியன் சுவாமி "ஆளுநரிடம் அறிக்கை கேட்கலாம்; பெறவேண்டும் என்பது அவசியமில்லை' என்று தெரிவித்தார் (நாளிதழ்கள் செய்திகள்).
இதனையொட்டி, பிரதமர் சந்திரசேகர் பலத்த கண்டனத்துக்கு ஆளானார்.
ஆட்சிக்கலைப்பையொட்டி கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.கருணாநிதி, "ஜனநாயகத்துக்கு விடப்பட்ட அறைகூவல்; தமிழ்நாட்டு மக்கள் மீது தொடுக்கப்பட்ட போர்' என்று குறிப்பிட்ட அவர், மேலும் கூறுகையில், "ஜனநாயக நெறிமுறைகளைக் காப்பாற்றத் தவறியுள்ள சந்திரசேகர், எனது தலைமையிலிருந்த ஆட்சியைக் கலைத்ததன் மூலம் தனது ஆட்சியைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்' என்றும் தெரிவித்தார். பிப்ரவரி 6-ஆம் தேதி முழு அடைப்பு நடத்துவதாக, தேசிய முன்னணி மற்றும் இடதுசாரிக் கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுத்ததாக அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. 20, 23, 26-5-1991 ஆகிய தேதிகள் தேர்தல் நாள்களாக அறிவிக்கப்பட்டன.
இதில் தமிழகம், பாண்டிச்சேரி, மேற்கு வங்காளம், ஒரிசா, குஜராத் மாநிலங்களில் முழு அளவிலும், உத்தர பிரதேசத்தில் இறுதிக்கட்டமாக 43 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மையத்தில் ஆட்சியை இழந்திருந்த ராஜீவ் காந்தி, இம்முறை ஆட்சியைப் பிடிப்பதில் தீவிரம் காட்டி, பிரசாரத்தை முடுக்கிவிட்டிருந்தார். அந்தவகையில் அவர் தமிழகத்திலும் பிரசாரம் மேற்கொள்ள இருந்தார்.
ராஜீவ் காந்தி தமிழகத்துக்கு வருவது என்பது புதிதல்ல; 1984 தொடங்கி 1991 வரை பிரதமர் என்கிற முறையிலும் பிரதமர் அல்லாத நிலையிலுமாக 64 தடவைகள் அவர் தமிழகம் வந்திருக்கிறார்; பத்திரமாகத் திரும்பிச் சென்றுமிருக்கிறார்.
அதேபோன்றுதான் தற்போதும் (1991) பிரசாரம் மேற்கொள்ள மே 21-ஆம் தேதி, இரவு 8.30 மணியளவில் சென்னை வந்திறங்கினார். விமானநிலையத்திலிருந்து குண்டு துளைக்காத காரில் ஏறி, நேரடியாகப் பிரசாரத்துக்குக் கிளம்பினார். வழியில் காரை நிறுத்தி, போரூர், பூவிருந்தவல்லி சந்திப்புகளில் வாக்குக் கேட்டுவிட்டு, ஸ்ரீபெரும்பூதூர் சென்றார். அங்குதான் விரிவான பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சாலையோரமிருந்த அன்னை இந்திரா காந்தி சிலைக்கு மாலையணிவித்துவிட்டு, அங்கிருந்து நடந்தே பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றார். வழியில் தொண்டர்களும், பொதுமக்களும் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர், மேடையை நெருங்கியபோது, அங்கே நின்றுகொண்டிருந்த காங்கிரஸ் பிரமுகர் லதா கண்ணனின் மகள் கோகிலா, ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து, தான் எழுதிய கவிதையை வாசித்துக் காட்டினார். அதைக்கேட்டு மகிழ்ந்த ராஜீவ், கோகிலாவின் முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுத் திரும்பினார்.
கையில் மாலையுடன் நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை போலீசார் தடுப்பதைப் பார்த்து, அவரை அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டார். அந்தப் பெண் ராஜீவ் காந்தியை நெருங்கி, பாதம் நோக்கிக் குனிந்தபோது, பெரும் சத்தத்துடன் குண்டு வெடித்து அங்கு கூடியிருந்த 18 பேர் உடல் சிதறி பலியாயினர்.
அந்த 18 பேரில் ராஜீவும் ஒருவராக இருக்கக்கூடும் என்று கனவிலும் கருதாத நிலையில், அவரைத் தேடினார்கள். அனைவரிடமும் பதைபதைப்பும், ஆற்றாமையும் பொங்கிக்கொண்டிருந்த நிலையில், ராஜீவ் காந்தி அணிந்திருந்த "கான்வாஸ் ஷூ'வுடன் கிடந்த கால்களும் மற்றும் சில உடல் பாகங்களும் அவர் இறந்துவிட்டார் என்பதைப் புரியவைத்தது. கூடியிருந்தவர்களும் செய்தி அறிந்தவர்களும் பதறினர்.
இந்தச் சம்பவத்துக்குக் காரணமான பெண்ணின் தலை சில அடி தூரத்தில் உடலிலிருந்து துண்டிக்கப்பட்டுக் கிடந்ததைக் கண்டெடுத்தார்கள். அந்தப் பெண் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. (ஆதாரம்: India after Gandhi by Ramachandra Guha. Page-637)
153: முதல்வராகிறார் ஜெயலலிதா!
லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் அலுவலகத்தில் இருந்த கிட்டு, ராஜீவ் கொலையைத் தாங்கள் செய்யவில்லையென்றும் இந்தப் படுகொலைக்கும் தங்களது இயக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மறுத்தார். ஆனால் படுகொலை நடந்த இடத்தில் கிடந்த காமிரா மூலம், ராஜீவ் காந்தியின் இறுதி நிகழ்ச்சிகளாகப் பதிவு செய்யப்பட்ட படங்களில் "தனு' படமும் இடம்பெற்றிருந்தது. அவர் "புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்' என்று கருதப்பட்டது.
இக் கொலைச் சம்பவத்துக்கு யார் காரணம் என்பது உறுதியாவதற்கு முன்பாகவே, விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழகத்தில் விமர்சனத்துக்கும், பலத்த கண்டனத்துக்கும் உள்ளானது. இதன் காரணமாக இவ்வியக்கம் பெருமளவில் பின்னடைவைச் சந்தித்தது.
இந்த சோகத்துக்கிடையே நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறுமா -ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. மூன்று கட்டங்களாக நடைபெறவிருந்த 1991 நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்டத் தேர்தல்கள் முடிவுற்றிருந்த நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தல்கள் முறையே மே மாதம் 23 மற்றும் 26 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தன.
நாடெங்கும் நிலவிய கொந்தளிப்பான சூழ்நிலையில், தில்லி, மும்பை, கொல்கத்தா நகரங்களில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ஏற்பட்ட வன்முறை காரணமாகத் தேர்தலை மறுபடியும் ஜூன் மாதம் 12 மற்றும் 15 தேதிகளில் நடத்துவது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கான தேர்தலும் சட்டமன்றத்துக்கான தேர்தலும் 15-ஆம் தேதியன்று நடத்தப்பட்டன.
தேர்தல் கருத்துக்கணிப்பு மூலம் தொங்கு நாடாளுமன்றமே அமையும் என்றும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றும் தெரியவருவதாகப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் ராஜீவ் காந்தியின் அகால மரணத்தால் எழுந்த அனுதாப அலை காரணமாக, காங்கிரஸ் கட்சி 244 இடங்களில் வென்று மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.
இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவரும், ஆந்திரப் பிரதேசத்தவருமான பி.வி.நரசிம்மராவ் ஆளும் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்றார்.
பாஜக கட்சியோ அனுதாப அலையையும் மீறி 120 இடங்களில் வென்றது.
தமிழக சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் அஇஅதிமுக -காங்கிரஸ் அணி பெரும்பாலான இடங்களில் வென்று பெரும்பான்மை பலம் பெற்றது. திமுக இரண்டு தொகுதிகளில் மட்டுமே வென்றது.
அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பு ஏற்றார்.
""ராஜீவ் காந்தி படுகொலையை நிகழ்த்தியது யார் என்பதில் பல்வேறு யூகங்களும் பதிவுகளும் வெளியான நிலையில், சி.பி.ஐ. கூடுதல் இயக்குநர் கார்த்திகேயன் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு அதற்கான அலுவலகமும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஒதுக்கப்பட்டது. தொடர்ச்சியாக நீதிபதி வர்மாவின் தலைமையில் "வர்மா கமிஷன்' அமைக்கப்பட்டு, ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடுகள் இருந்தனவா என்று ஆராயப்படும் என்றும், ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் சதிச் செயல் இருக்கிறதா -அதில் யாரெல்லாம் பங்கு பெற்றிருக்கிறார்கள் என்று ஆராய நீதிபதி ஜெயின் தலைமையில் "ஜெயின் கமிஷன்' ஒன்றும் அமைக்கப்பட்டது (ஆகஸ்ட் 1991).
யாழ்குடாவையும், வடபகுதியையும் இணைக்கும் பாதையில் ஆனையிறவு உள்ளது. யாழ் கோட்டையை இழந்த பின்னர் இங்கே பெருமளவில் சிங்கள ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது. இந்த முகாம் இருபகுதி மக்களையும் பிரித்து வைப்பதில் கண்ணாக இருந்தது. பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், எந்தப் பொருளும் இந்த ஆனையிறவு வழியாக யாழ்குடா செல்வதைத் தடுப்பதிலும் தீவிரமாக இருந்தது. யாழ்ப்பாணம்-கண்டி தேசிய நெடுஞ்சாலை, ரயில்பாதை ஆகியவை துண்டிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்பாக சிலாவத்துறையில் இருந்த சிங்களப் படை முகாமை நான்கு முனைகளில் முற்றுகையிட்டு, போர் புரிந்து சாதனை நடத்தியிருந்ததால், அந்த அனுபவம் மூலபலமாக கொள்ளப்பட்டது.
மன்னார் -மடு நெடுஞ்சாலையில் உள்ள பகுதி சிலாவத்துறை ஆகும். இப் பகுதி சிங்கள ராணுவ முகாம்களின் இருப்பிடமாக மாறி பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. தமிழர் வாழ்விடமான இப் பகுதியில் 6000 ஏக்கர் முந்திரிப் பண்ணையை உருவாக்கி சிங்களவர் குடியேற்றம் நிகழ்ந்த காரணத்தால் தமிழர்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்தார்கள். இந்த முகாம்களைத் தகர்ப்பது என முடிவெடுத்துதான் தாக்குதல் தொடுக்கப்பட்டது. நான்கு நாள்கள் இத்தாக்குதல் நேருக்கு நேர் நடத்தப்பட்டது.
சிலாவத்துறையில் பெண் புலிகளுக்குத் தலைமை ஏற்ற தளபதி ராதா, "கொக்கிளாய் சண்டை, மாங்குளம் சண்டை ஆகியவை எங்களுக்கு தரைப்படைச் சண்டை அனுபவத்தைப் பெற்றுத் தந்தன. சிலாவத்துறை போர் முப்படையையும் ஒரே சமயத்தில் சந்திக்கும் வல்லமையையும் அதற்குரிய அனுபவத்தையும் எங்களுக்குப் பெற்று தந்தது' என்று கூறியதற்கொப்ப ஆனையிறவுப் போர் திட்டம் வகுக்கப்பட்டது.
ஆனையிறவை சிங்களப் படை முக்கியமாகக் கருதுவதற்குண்டான காரணங்கள் என்ன?
* ஆனையிறவு முகாமை இழந்தால் தமிழீழம் கைவிட்டுப் போய்விடும் என்ற பயம் சிங்களவருக்கு உண்டு.
* ஆனையிறவு முகாம்- பல முகாம்களுக்குண்டான வலிமை கொண்டது.
* ஆனையிறவு முகாமைச் சுற்றி இயற்கை அரண் போல கடல்நீர் ஏரி உள்ளது. பெருங் கடலுடனும் அது தொட்டுக் கொண்டிருக்கிறது. பொட்டல் வெளியும் அதிகம்.
எனவே யுத்தம் என்றால் நேருக்கு நேர் மோதினால்தான் உண்டு. இது அனைத்து வகையிலும் சிங்கள ராணுவ முகாமுக்கு மிக மிக பாதுகாப்பானது. பல்வேறு துன்பங்களை அளித்து வந்த ஆனையிறவு முகாம் தகர்ப்பு என்பது புலிகளின் அவசியத் திட்டமாக இருந்தது.
154: ஆனையிறவுப் போர்!
ஆனையிறவுப் போர்த்திட்டம் குறித்தும், நடந்த போர் குறித்தும் பழ. நெடுமாறனின் தமிழீழம் சிவக்கிறது நூலின் 220-234 பக்கங்களில் விரிவான விவரணை உள்ளது. அதன் பகுதி மற்றும் சுருக்கம் வருமாறு:
ஆனையிறவுத் தளம் ஐந்து பெரிய முகாம்களைக் கொண்டதாக அமைந்திருந்தது.
1. தடை முகாம்; 2. உப்பள அலுவலக முகாம்; 3. உப்புக் கூட்டுத்தாபன முகாம்; 4. பாடசாலை முகாம்; 5. உல்லாச விடுதி முகாம்.
இதில் மையப் பகுதியில் இருக்கும் உப்புக்கூட்டுத்தாபன முகாமே தளத்தின் பெரியதும் தலைமை முகாமுமாகும். இங்கு ஹெலிகாப்டர் இறங்குதளம் உண்டு. இதன்மூலம் உணவு, வெடிமருந்துகள் வழங்க வசதியுள்ளது.
தளத்தின் வடபகுதியில் (இயக்கச்சிப் பக்கம்) இருக்கும் தடை முகாமிற்கும், தென் பகுதியில் உள்ள (பரந்தன் பக்கம்) உல்லாச விடுதி முகாமிற்கும் முன்னால் புலிகளின் காவலரண்கள் உண்டு.
தளத்தின் மற்ற பகுதிகளில் புலிகளின் காவலரண்கள் கிடையாது. ஏனெனில், அவை நீரிணையால் சூழப்பட்டுப் பாதுகாப்பாக உள்ளன. மேற்கூறப்பட்ட இரு முகாம்களுக்கு ஊடாகத்தான் தளத்தின் மற்ற பகுதிகளுக்குப் பாதை உண்டு.
தடை முகாமுக்கு முன்பாக சுமார் 200-300 மீட்டர் தூரத்திலும், உல்லாச விடுதி முகாமுக்கு முன்பாக சுமார் 500-600 மீட்டர் தொலைவிலும் புலிகளின் காவலரண்கள் உள்ளன. இந்த இடைவெளி முழுவதிலும் சிங்கள ராணுவம் மிதிவெடிகளைப் புதைத்து வைத்திருந்தது.
ஆயிரக்கணக்கான படை வீரர்கள், ஏராளமான இலகு இயந்திரத் துப்பாக்கிகள், ராக்கெட் ஏவுகணைகள், நீண்டதூரம் பாயும் ஆட்டிலறிகள், பலமான காவலரண்களையே தகர்த்தெறியும் பீரங்கிகள், ஆர்.சி.எல். எனப்படும் பீரங்கிகள், கவச வாகனங்கள் போன்ற தளவாடங்கள் இத் தளத்தில் குவிக்கப்பட்டிருந்தன. விமானங்களும் ஹெலிகாப்டர்களும் சிங்களவர்களுக்கு நம்பிக்கைக்குரிய முக்கிய ஆயுதங்களாக இருந்தன.
ஆனையிறவுப் பகுதி முழுமையுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பதால் இரண்டு அல்லது மூன்று அடி தோண்டினாலே நீர் சுரந்துவிடுகிறது. எனவே, பதுங்கு குழிகள் தோண்டுவது சாத்தியமற்றது.
இத்தனை தடைகளையும் மனத்தில் கொண்டுதான் புலிகள் தங்கள் போர்த் திட்டத்தை வகுத்தனர்.
இப்பெரும் போரைத் திறம்பட நடத்துவதற்காக ஒவ்வொரு போர் முனைக்கும் கள அனுபவம் வாய்ந்த தளபதிகள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
ஒட்டுமொத்தமாக ஆனையிறவுப் போரை நடத்துவதற்குப் பொறுப்பாக புலிகளின் மூத்த தளபதிகளுள் ஒருவரான பொட்டு நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனையிறவு ராணுவ தளத்தின் தென்பகுதி முனையில் நடைபெறும் போருக்குப் பொறுப்பாக சார்லஸ் அன்டனியும் சிறப்புப் படையணிக்குத் தளபதி பால்ராஜும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்குக் கீழ் இப்பகுதி தாக்குதல் அணிகளுக்கு நேரடித் தலைமை தாங்க தளபதி சூசை நியமிக்கப்பட்டிருந்தார். இவருடன் மகளிர் பிரிவின் தளபதிகளுள் ஒருவரான ஜெனாவும் நியமிக்கப்பட்டிருந்தார்.
அதேசமயம் இதே பகுதியில் வான்வழி தரை இறக்கத்தை எதிர்பார்த்து நின்ற காவல் அணிகளுக்குத் தளபதியாக தண்டேஸ் நியமிக்கப்பட்டிருந்தார். (பின்னர் நடந்த மணலாற்றுப் போரில் இவர் வீரமரணம் அடைந்தார்) இவருடன் மகளிர் படைப்பிரிவின் துணைத் தளபதி ராதா நியமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதியின் வழங்கல்களுக்குப் பொறுப்பாகத் தளபதி குட்டியும், தளபதி மனோவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இப்பகுதியின் மீட்பு வேலைகளுக்குப் பொறுப்பாகத் தளபதி மல்லியும் மருத்துவ வேலைகளுக்குப் பொறுப்பாகத் திவாகரும் நியமிக்கப்பட்டனர்.
இத் தளத்தின் வடமுனையில் நடைபெறும் போருக்குப் பொறுப்பாக யாழ் மாவட்டத் தளபதி தினேஷ் நியமிக்கப்பட்டிருந்தார். இவர் தலைமையின் கீழ் இப்பகுதி தாக்குதல் அணிகளுக்குத் தளபதி குணாவும் மகளிர் படைப் பிரிவின் தளபதிகளுள் ஒருவரான விதுஷாவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
வெற்றிலைக்கேணி-கட்டைக்காடு கடற்கரைப் போருக்குப் பொறுப்பாக லெப். கர்னல் சூட்டி நியமிக்கப்பட்டிருந்தார்.
1991-ம் ஆண்டு, ஜூலை மாதம், 10-ம் நாள் ஆனையிறவுப் போரைத் தொடங்குவது என முடிவு செய்யப்பட்டது.
ஜூலை 9 ஆம் நாள் இரவு, போராளிகளிடையே வே. பிரபாகரன் தோன்றி, ""எங்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருக்கும் ராணுவ வீரனது உயிர் பறிக்கப்படும் வரை எமது போராளிகள் உயிர் இழந்து கொண்டுதான் இருப்பார்கள். எனவே எதிரியின் அரண்களுக்குள் பாய்ந்து செல்லுங்கள். எதிரிகளை எவ்வளவு விரைவாக வீழ்த்த முடியுமோ, வீழ்த்துங்கள். அதன்மூலம் வெற்றியைப் பெறுங்கள்- செல்லுங்கள்- வீழ்த்துங்கள்- வெல்லுங்கள்- புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'' என்ற அவரின் பேச்சு போராளிகளுக்கு உரமாக அமைந்தது. பிரபாகரனிடம், போராளிகள் தங்களின் போர் உத்தி குறித்து விளக்கங்கள் கேட்டு அறிந்தனர்.
ஜூலைத் திங்கள் 10-ம் நாள் அதிகாலை 4.30 மணியளவில் "பசீலன்' ராக்கெட்டுகள் சிங்களப் படை முகாமில் விழுந்தன. இதற்கெனவே காத்திருந்தது போன்று சிங்கள ராணுவத்தின் ஹெலிகாப்டர்களும், சிறுரகப் போர் விமானங்களும் வானில் சீறிப் பறந்தன. இதை எதிர்பார்த்த போராளிகள் வானில் பறந்த ஹெலிகாப்டர்களுக்கும், விமானங்களுக்கும் குறிவைத்து தாக்கினர். இதன் காரணமாக அவை கீழே தாழ்ந்து பறக்க முடியாத சூழ்நிலை உருவாகியது. கவசமிடப்பட்ட புல்டோசர்களையும், உழவு எந்திரங்களையும் சிங்களப் படை முகாமை நோக்கி செலுத்தி, அதன் பின்னால் போராளிகள் முன்னேறினர். புலிகளின் முதல் இலக்கு "சுற்றுலா விடுதி முகாமை'. அன்றிரவே கைப்பற்ற வேண்டும் என்பதுதான். கடும் சண்டைக்குப் பின்னர், போராளிகள் இழப்புக்குப் பின்னர், காவல் அரண் தகர்க்கப்பட்டு, உள்ளே நுழைந்து "சுற்றுலா விடுதி முகாமை' நள்ளிரவில் கைப்பற்றினர். இதை வாக்கி டாக்கி மூலம், இத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய தளபதி சூசை அறிவித்தார்.
ஜூலை 11-ஆம் நாள், இரவு 7.30 மணியளவில் தடை முகாம் மீது யாழ் மாவட்டத் தளபதி தினேஷ், தளபதிகள் குணா, செல்வி விதுஷா ஆகியோர் தலைமையில் தாக்குதல் தொடுக்கப்பட்டது. கடும் சண்டை நடந்துகொண்டிருந்தபோது புல்டோசர்களும் உழவு எந்திரங்களும் மண்ணில் புதைந்து விட்டதால் பெரிய அளவில் போராளிகளுக்கு இழப்பு ஏற்பட்டும், காயமடைந்தும் போனதால் தங்களின் முகாமிற்குத் திரும்பினார்கள்.
அடுத்ததாக ஜூலை 13-ஆம் நாள், ஏற்கெனவே கைப்பற்றப்பட்டிருந்த உல்லாச விடுதிக்கு அடுத்திருந்த உப்பள அலுவலகம் மீது தளபதி பால்ராஜ் கண்காணிப்பிலும், தளபதி சூசை தலைமையிலும், பெண்புலிகளின் தளபதி ஜெனா தலைமையிலும் உப்பளப் பகுதிக்குள் புகுந்தனர். புல்டோசர் தாக்குதலுக்கு ஆளாகிச் செயலிழந்தது. இதனால் மேஜர் ரெட்டி தலைமையில் இன்னொரு அணி உள் நுழைந்தும், நினைத்தபடி காவல் அரண்களைக் கைப்பற்ற முடியவில்லை. இருப்பினும் சிங்கள ராணுவத்திடமிருந்து ஏராளமான ஆயுதங்களைக் கைப்பற்றிச் சென்றனர்.
ஆனையிறவு முகாம் மீது புலிகள் முற்றுகை நீடித்ததால், கடல் வழியாகப் படைவீரர்களைக் கொண்டு வந்து இறக்க, சிங்களப்படை முற்பட்டது. இதனை முறியடிக்க வெற்றிலைக்கேணி பகுதிக்குப் பொறுப்பாக இருந்த, தளபதி சூட்டி, ஜூலை 14-ஆம் தேதி தாக்குதல் தொடுத்தார். இத் தாக்குதலில் சூட்டி உயிரிழந்தார். இருப்பினும், இதற்கு முன்பு நடந்த ஒரு போரில் ஒரு கையை இழந்த மேஜர் யாசின் தலைமையில் புலிகள் சிங்களப் படையுடன் நேருக்கு நேர் யுத்தம் புரிந்தனர். இந்தப் போரில் சிங்கள ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் ஆஞ்சலோ பீரிஸ் கொல்லப்பட்டார்.
ஒவ்வொரு நாளும் போர் தணிவதும் உக்கிரமாவதுமாக இருந்தது. எண்ணிக்கையிலடங்கா வீரர்களைப் பலி கொண்ட இந்த யுத்தத்தில் இழந்த இடங்களையும் சிங்களப் படை இறுதியில் மீட்டது.
புலிகளுக்கு இந்தப் போரில் வெற்றி கிடைக்கவில்லை. ஜூலை 10-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஒரு மாதகாலம் நேருக்கு நேர் நடைபெற்ற யுத்தத்தில் புலிகள் பல படிப்பினைகளைப் பெற்றார்கள். அனைத்து நிலைகளிலும் பாதகங்களே சூழ்ந்திருந்தபோது நடைபெற்ற இந்தயுத்தத்தின் மூலம், புலிகளின் வீரம் உலகுக்குத் தெரியவந்தது; மரபுவழி ராணுவமாக புலிகளின் படை உருவெடுத்ததையும் உலகம் அறிந்தது. விமானங்கள், ஹெலிகாப்டர்கள், போர்க்கப்பல்கள், பீரங்கிப்படைகள், கவச வாகனங்கள் போன்ற கனரக சாதனங்களுடன் சிங்களப் படை போரிட்டது. அவர்களது படைப்பிரிவில் 10 ஆயிரம் சிங்கள வீரர்கள் இருந்தனர். புலிகள் தரப்பில் 2 ஆயிரம் போராளிகள் போரிட்டனர்.
ஆனையிறவுப் போர் தொடர்பாக பி.பி.சி.யின் கொழும்பு நிருபர் கிறிஸ்டோபர் மோரிஸ் என்பவருக்கும் லண்டன் தலைமையகத்தில் உள்ள விமர்சகருக்கும் 28-7-1991 அன்று நடந்த உரையாடல் வருமாறு:
விமர்சகர்: ஆனையிறவில் என்ன நடக்கிறது?
நிருபர்: புலிகள் ஆனையிறவை முற்றுகையிட்டு உக்கிரமான தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து நிறுத்த ராணுவம் கடுமையாக முயற்சி செய்துகொண்டிருக்கிறது. இழப்புகள் பற்றி ராணுவத் தரப்பில் இருந்து வரும் தகவல்கள் நம்பகத்தன்மை அற்றவையாக உள்ளன. பத்தாண்டுக் காலமாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் முதல் தடவையாக மரபுவழிப் போர் முறையில் புலிகள் போராடுகிறார்கள். ஸ்ரீலங்கா ராணுவமும் அதற்கெதிராக மிகப்பெரிய ராணுவ நடவடிக்கையை....
இடைமறித்த விமர்சகர்: ஆகவே, இப்பொழுது இலங்கையில் இரு ராணுவங்கள் இருப்பதாகக் கூறுகிறீர்களா?
நிருபர்: ஆம்! அப்படித்தான்!
155: சிங்கள ராணுவ முகாம்கள் அழிப்பு!
ஆனையிறவுப் போரில் 123 பெண்புலிகள் உள்பட 573 போராளிகள் கொல்லப்பட்டனர். இதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். இப்போரின்போது யாழ் மக்கள் காட்டிய ஆர்வமும் உதவியும் கணக்கில் அடங்கா. உணவுப் பொருள்கள் வாகன உதவிகள் என தாராளமாக வழங்கினர். யாழ்குடாவிலிருந்து வன்னிப் பகுதிக்குச் சுலபமாகச் செல்ல ஆனையிறவு முகாம் அழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் விரும்பியதே மேற்கண்ட உதவிகளுக்குக் காரணமாகும்.
காயமடைந்தவர்களுக்கு என சுண்டிக்குளத்தில் தற்காலிக மருத்துவ நிலையம் திறக்கப்பட்டது. இதில் அடேல் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் ஏற்பாட்டில் தாதிப்பெண் பயிற்சி பெற்றவர்களும், புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மருத்துவர்களும் சிகிச்சை மேற்கொண்டனர். ஆண்-பெண் போராளிகள் பல்வேறு வகையான காயங்களுடன் இங்கு கொண்டுவந்து போடப்பட்ட நிலையில், முகம் சுளிக்காது தாதிப் பெண்கள் சிகிச்சையளித்தனர்.
இவ்வகையான மருத்துவ நிலையம் திறக்கப்பட்டிருக்கிற செய்தி யாழ்ப்பாணம் முழுவதும் அறிந்த செய்தியாயிற்று. யாழ் மக்கள் இந்த மருத்துவ நிலையத்துக்கு முதலுதவி மருந்துகள், படுக்கைகள், விரிப்புகள் மற்றும் உணவுப் பொருள்கள் அனுப்பி வைத்தனர்.
இந்தச் செய்தி அறிந்த சிங்களப் படையினரின் குண்டுவீசும் விமானம் தாழப்பறந்து இரு குண்டுகளை வீசிவிட்டுப்போனது. மருத்துவ சிகிச்சை செய்துவிட்டு அப்போதுதான் தனது இருக்கைக்குத் திரும்பிய அடேல் பாலசிங்கம், குண்டுச் சிதைவின் அதிர்வில் தூக்கி வீசப்பட்டார். அடேலின் பாதுகாவலர்கள் அங்கே ஓடிவந்து குண்டுவீச்சு விமானம் போய்விட்டதாகத் தெரிவித்தனர். மருத்துவ நிலையம் இருந்த இடத்துக்குச் சென்று இவர்கள் பார்த்தபோது, நல்லவேளையாக அங்கே எந்த பாதிப்பும் இல்லை. விமானத்தின் ஓசை கேட்டதுமே நிலையத்தில் இருந்த காயம்பட்டவர்களும், தாதியர்களும் பதுங்குகுழிக்குள் ஓடி ஒளிந்து கொண்டதால் தப்பித்தனர்.
மணலாற்றுப் பகுதி, இலங்கையின் வடக்கு - கிழக்கு இரண்டையும் இணைக்கும் பகுதியாகும். இந்தப் பகுதியை ஆக்கிரமித்து அதனைத் துண்டிக்க வேண்டும் என்பது சிங்களவரின் திட்டமாகும். இங்கு சிங்களப் படைகள் குவிக்கப்பட்டு, ராணுவ முகாம்கள் அமைத்து, வடக்கு-கிழக்கைத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்தால் தமிழீழக் கனவைத் தகர்த்துவிடலாம் என்ற சிங்களவரின் திட்டத்தை, புலிகள் அவ்வப்போது முறியடிப்பது வழக்கமாயிற்று.
இதையும் மீறி, திருகோணமலையிலும் மணலாற்றுப் பகுதியிலுமாக நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களை சிங்களப் படை நிறுவியது. 30 ஆயிரம் வீரர்கள் இங்கு குவிக்கப்பட்டனர். புலிகளும் இதே பகுதியில் பல முகாம்களை அமைத்து சிங்களப் படைகளை நகரவிடாமல் தடுத்தனர்.
இந் நிலையில், 1991 அக்டோபர் 29-ஆம் தேதி மணலாற்றுக் காட்டுப்பகுதியில் சிங்களப்படை தாக்குதலை ஆரம்பித்தது. இத் தாக்குதலுக்கு "மின்னல்' என்றும் பெயரிட்டது. பெயருக்கு ஏற்ப வானிலிருந்து குண்டுமழை பொழியப்பட்டது. இருந்தபோதிலும் புலிகள், தங்களுக்கே உரிய வகையில் எதிர்த்தாக்குதலை நடத்தி, சிங்களத் தாக்குதலை முறியடித்தனர்.
200 பேருக்கும் மேலான வீரர்களைப் பலிகொடுத்த சிங்களப்படை ஓடி ஒளிந்தது.
இதன் பின்னர் மேலும் 1992 மார்ச் மற்றும் மே மாதங்களில் சிங்களப்படை இரு முயற்சிகளை மேற்கொண்டது. அவ்விரு முயற்சிகளையும் புலிகள் வெற்றிகரமாக முறியடித்த நிலையிலும் ஏராளமான போராளிகளை இழந்தது. 275 பேர்வரை உயிர் துறந்தனர். சிங்களப் படையினரோ 400 பேருக்குமேல் உயிர் துறந்தும், 100க்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
மணலாற்றைக் கையகப்படுத்த சிங்களப்படை இரு ஆண்டுகளில் மூன்றுமுறை முயன்றும், அது கைகூடாமல் போனதற்கு, போராளிகளின் வீராவேசத் தாக்குதலே காரணம் ஆகும்.
தமிழீழத்தின் எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த சிங்கள முகாம்களைத் தகர்ப்பது அங்கு வாழும் தமிழருக்கு நிம்மதியைத் தரும் என்ற அடிப்படையில் தாக்குதல் திட்டம் தயாரானது. 1992-ஆம் ஆண்டில் சிங்களப் படையினரின் முகாம்களில் தாக்குதல் நடத்தி அவற்றை அழித்தும், அழிக்க முடியாதவற்றை முகாமை விட்டு வெளியேற முடியாதவாறு செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் நடந்த போர் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
சீனன்குடாவில் சிங்களப் படையின் பிரமாண்டமான விமானதளம் இருந்தது. இந்த விமானதளத்தின் மீது புலிகள் 1992 ஜனவரியில் திடீர்த் தாக்குதல் நடத்தினார்கள். அங்கிருந்த 6 பாசறைகள் முற்றாக அழிக்கப்பட்டன. அதுமட்டுமன்றி 4 பயிற்சி விமானங்களும், ஹெலிகாப்டர்களும்கூட தாக்குதலுக்கு ஆளாயின. இதில் விமானிகள், சிறப்பு அதிரடிப் படையினர் உள்ளிட்ட 150 பேர் சிங்களத் தரப்பில் இறந்தனர்.
ஆயுதக் கிடங்கு வெடி வைத்து தகர்க்கப்பட்டதால், பல கோடி ரூபாய் பெறுமான ஆயுதங்கள் எரிந்து நாசமாயிற்று.
ஏப்ரலில், மணலாறு-கொக்குத்தொடுவாய் முகாமிலிருந்து கிளம்பிய சிங்களப்படை வீரர்களை, மறித்து நடத்திய தாக்குதல் 3 மணி நேரமே நீடித்தது. இத் தாக்குதலில் 26 ராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில், அதிநவீனமான பின்னுதைப்பற்ற பீரங்கி ஒன்றைப் புலிகள் கைப்பற்றினர். இந்த பீரங்கி அமெரிக்கத் தயாரிப்பாகும். ஒரு கிலோ மீட்டருக்கும் அப்பால் வருகின்ற டாங்கிகளை இந்த பீரங்கியால் குறிவைத்துத் தகர்க்க முடியும். இந்த பீரங்கி 34 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
தமிழீழப் பகுதி எல்லைப் பகுதியில் "காட்டுபொத்த' என்ற பெயரில் சிங்கள முகாம் ஒன்று இருந்தது. இம் முகாமையும் புலிகள் தாக்கி அழித்ததில் 55 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இன்னொரு எல்லைக் கிராமம் அனுராதபுரத்தையொட்டியுள்ள காட்டுப் பகுதியில் உள்ளது. அதன் பெயர் "வண்ணான்குளம்' ஆகும். இந்தப் பகுதியில் உள்ள தமிழ் கிராமங்களில் உள்ள தமிழர்களை விரட்டிவிட்டு, அங்கு சிங்களக் குடியேற்றத்தை நிறுத்துவதற்கு வசதியாக வண்ணான்குளம் சிங்கள முகாம் உதவி செய்தது.
எனவே, இந்த முகாமை அழிப்பது என்பது புலிகளுக்கு அவசியமான ஒன்றாக இருந்தது. 11-7-1992 அன்று இம் முகாம் மீது திடீர்த் தாக்குதல் நடத்தி, அழித்தனர். இந்தப் போர் அதிகாலை தொடங்கி, 30 நிமிடங்களில் முடிந்ததாகும்.
இந்த முகாமில் இருந்த கவச வாகனங்களும் புல்டோசர்களும் முற்றாக அழிக்கப்பட்டன. இந்த முகாமைக் காப்பாற்ற அருகிலிருந்த தந்திரிமலை முகாமிலிருந்து வெளியே வந்த சிங்கள வீரர்களை மறைந்திருந்து வரும் வழியிலேயே தாக்கி அழித்தனர்.
அக்டோபர் 2-ஆம் நாள் கட்டைக்காடு முகாம் மீது புலிகள் தாக்குதல் நடத்தினர். இந்தக் கட்டைக்காடு முகாமானது ஆனையிறவுப் போரில், சிங்களப் படையினரை விமானம் மூலம் தரையிறக்கிய இடமாகும். தரையிறங்கிய வீரர்கள் அங்கேயே குடிகொண்டு, முகாம் ஒன்றை அமைத்தனர். எனவே இந்த முகாமையும் அழிப்பது என்ற முடிவில் ஆனையிறவுப் போர் நடந்த 15 மாதங்கள் கழித்து, திடீர்த் தாக்குதல் நடத்தப்பட்டது.
56 மணி நேரம் நடந்த இந்தப் போரில் ராணுவத்தினர் அழிக்கப்பட்ட நிலையில், 50 விமான எதிர்ப்பு பீரங்கிகள், 28 ராக்கெட்டுகள், 180 பெல்ஜியத் துப்பாக்கிகள், 2 இலகுரகத் துப்பாக்கிகள், 3 லட்சம் துப்பாக்கி ரவைகள், குண்டுவீசும் சாதனங்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
ஒன்றன்பின் ஒன்றாக சிங்கள ராணுவத்தின் முகாம்களை அழிப்பதில் விடுதலைப் புலிகள் முனைப்புடன் இருந்தனர்.
156: புலிகள் வசம் யாழ்ப்பாணம்!
போருக்கு இடையிலும், போராளிக் குழுக்களின் போட்டிகளுக்கிடையிலும் வாழப் பழக்கப்பட்ட மக்களாக பாலஸ்தீனியரையும், ஆப்கானிஸ்தானியரையும் குறிப்பிடுவதைப்போன்றே யாழ்ப்பாண மக்களையும் குறிப்பிடலாம். அவர்களுக்குத் தற்போது அமைந்துள்ள சூழல் இயல்பான ஒன்றாக இருந்ததற்குக் காரணமே, யாழ்ப்பாண நிர்வாகத்தை புலிகள் மேற்கொண்டிருந்ததுதான்.
சிங்கள ராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள வவுனியாவிலிருந்து வெளியேறி, தமிழீழத்தில் நுழைந்ததற்கு அறிகுறியாக, தமிழீழ எல்லைக் காவல்படை, தமிழீழ ராணுவம், தமிழீழ உள்வரவு-வெளியேற்றப் பணியகம் முதலியவற்றால், வழங்கப்படும் அனுமதி அட்டை, தமிழீழம் என்ற புதிய நாட்டிற்குள் நுழைந்துவிட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தின.
தமிழீழத்துக்கான தேசியக் கொடியாக 27-11-1990 மாவீரர் நாளில் ஏற்றப்பட்ட, புலிகளின் கொடியில் உள்ள எழுத்துகள் நீக்கப்பட்ட கொடியே தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது. இக்கொடியில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு வண்ணங்கள் இருந்தன. மஞ்சள் நிறம் தனித்த தேசிய இனம் என்றும், தாயகம் தழைத்து உள்ளது என்றும், மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறுகிறது. சிவப்பு நிறம் வர்க்கம்-சாதி-பெண்ணடிமை நீங்கவும், சமத்துவ சமுதாயம் நிலவுவதையும் கொள்கையாகக் குறிக்கிறது. கறுப்பு நிறம் - விடுதலைப் பாதை கரடுமுரடானது; இழப்புகளும் துன்பங்களும் நிறைந்தது. இதனைத் தாங்க இரும்பு இதயம் வேண்டும் என்பதைக் குறிக்கிறது என்றும் கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் காவல்துறையைத் தவிர்த்துசில நிர்வாகக் கட்டமைப்புகளை சட்டம் ஒழுங்கு சார்ந்தும், சிவில் நிர்வாகம் சார்ந்தும் ஏற்படுத்தவேண்டிய அவசரத்தில் புலிகள் இருந்தனர். நிதி நிர்வாகம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் போன்றவை ஸ்ரீலங்கா அரசின் நிதியாதாரங்களைக் கொண்டே இயங்கி வந்தன. அவற்றை அதன்போக்கிலே விட்டு, மேற்பார்வை செய்யும் விதமான மாற்றங்களே தற்போது மேற்கொள்ளப்பட்டன. இவ்வகை மாற்றங்களில் அரசுப் பணிகளில் அனுபவம் பெற்று ஓய்வு பெற்றவர்களையும், சமூக ஆர்வலர்களையும் ஆலோசனை வழங்கக் கேட்டுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்குப் பணிப்பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது.
நிதி நிர்வாகம், புலிகளின் நிதியாதாரங்களைக் கவனித்து வந்த தமிழேந்தியின் பொறுப்பில் விடப்பட்டது. நிதியாதாரங்களுக்கு வரி வசூலிப்பது என்பது பெரும் வர்த்தகங்கள், நடுத்தர வியாபாரிகளிடம் மட்டுமே நடைபெற்றது. இதுகாறும் அல்லலுற்ற பொதுமக்களிடம் வரி வசூல் செய்வதைத் தவிர்த்தனர்.
சட்டம், ஒழுங்கு பராமரிப்புக்கு, புலிகள் அமைப்பிலிருந்தே போராளிகளைத் தேர்ந்தெடுத்து காவல்படை அமைக்கப்பட்டது. இந்தக் காவல்துறை அமைப்பை வே.பிரபாகரன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாத்தையா, தமிழ்ச்செல்வன், இளங்குமரன், யோகி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காவலர்களுக்கான சீருடை, நீலநிறத்தில் கட்டம்போட்ட மேற்சட்டையும், நீலநிற கால்சட்டையும் பிரபாகரனால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டது.
காவலர்கள் அணியும் தொப்பி - தமிழீழத்தின் தேசிய மரமான பனைமரத்தின் ஓலைகளால் ஆன தொப்பியில், நீல நிறத்துணி உறையிடப்பட்டிருந்தது.
ஒரே சமயத்தில் யாழ்பகுதியில் யாழ்ப்பாண நகரம், கோப்பாய், சுன்னாகம், சங்கானை, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, சாவகச்சேரி, பளை ஆகிய இடங்களில் காவல்நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இதன் தலைமையகம் யாழ்ப்பாணத்திலும், கிளைகள், புலிகள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் நிறுவப்பட்டன. காவல்துறையைத் தொடர்ந்து நீதித் துறையிலும் மறுகட்டுமானம் செய்யவும், வடமாநிலத்தில் கூடுமானவரை நிர்வாகத்தைச் செம்மையாக்கும் முயற்சியிலும் பிரபாகரன் இறங்கினார்.
இதுகுறித்து, தமிழீழப் பகுதிக்குச் சென்று வந்த பத்திரிகையாளர் கே.பி.சுனில், "பிசினஸ் அண்ட் பொலிடிகல் அப்சர்வர்' இதழில் (1992 மார்ச்) எழுதிய கட்டுரையில் யாழ் காவல்துறையின் பொறுப்பிலிருந்த நடேசன் பேட்டி அளித்திருந்தார். அவர் கமிஷனர் "ரேங்கிங்' பணியிலிருந்தார். அந்தப் பேட்டி வருமாறு:
""நாங்கள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினர் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி, சட்டப்பிரிவை உருவாக்கி இருக்கிறோம். இதில் முன்னாள் நீதிபதிகள் தங்கள் ஆலேசனைகளை வழங்குகின்றனர். சட்ட விதிகளை தமிழ்ச் சூழலுக்கேற்ப உருவாக்க இருக்கிறோம். மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் அவ்வகையில் உருவாகும். இது நகரம் மற்றும் கிராமங்களில் செயல்படும். இதற்கானப் பணியில் ஓய்வுபெற்ற நீதிபதிகளை பணியில் அமர்த்தியுள்ளோம். சட்ட மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் ஸ்ரீலங்காவில் இருப்பது போலல்லாமல், தேசவழமைச்சட்டம், குற்றவியல் சட்டம் முதலியவற்றில் சூழலுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சட்டக் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் படித்து, தேர்வு பெற்றால் அவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
சட்டத்தின் முன் மாவீரர்களின் அளப்பரிய தியாகத்துக்கு மதிப்பளித்து போற்றுகிறோம். அவர்களது குடும்பங்களுக்குப் போக்குவரத்து வசதிகள் போன்ற சலுகைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் மீது புகார் வந்தால் முறைப்படி விசாரிக்கப்படும். அதேபோன்றுதான் போராளிகள் நிலையும். காவல்துறையில் பணியாளர்களுக்கு ரூ.1500 மாத ஊதியம் நிர்ணயித்துள்ளோம். மற்றும் சீருடை, மருத்துவ வசதி, தங்கும் வசதி ஆகியவையும் வழங்கப்படுகின்றன.
செஞ்சோலை என்பது காப்பகம். அநாதையாக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோர் தங்குமிடமாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் காப்பகத்தில் தற்போது (1991-இல்) 70 பேர் உள்ளனர். இவர்களுக்குப் படிப்பு, தோட்டவேலை முதலியவை சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. பெரும்பாலான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. போரினால் ஏற்பட்ட அவலங்களில் இந்த அநாதையாக்கப்பட்ட விஷயமும் ஒன்றாகும். வடக்கு-கிழக்குப் பகுதிகளில் உள்ள புலிகளின் நிர்வாகிகள் மூலம் இந்தவகைப் பிரிவினர் இங்கு கொண்டுவரப்படுகிறார்கள். இவர்களுக்குப் பிரபாகரனே தாயும் தந்தையுமாக உள்ளார். அவரின் சிறப்புக் கவனிப்பில் இந்தக் காப்பகம் செயல்படுகிறது.
"ரூட்' என்கிற (Research Organisation of Tamil Eelam) சமூகசேவை நிறுவனம், புலிகளால் 1990-லிருந்து இயக்கப்பட்டு வருகிறது. ஆராய்ச்சிகளை மேற்கொள்வது இதன் முக்கியப் பணி. விவசாயம், கால்நடை விஞ்ஞானம், மீன்வளம், குடிசைத்தொழில், பெருந்தொழில், உணவு பதனிடுதல், கட்டுமானத்தொழில், எரிசக்தி, கிராமநலன், வர்த்தகம், தகவல் தொடர்புத்துறை, பனைத்தொழில் போன்ற பிரிவுகளில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இதன் தலைவராக ரவி இருக்கிறார்.
இந்த அமைப்பு மூலம் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் உள்ளது. இந்த ஆராய்ச்சியகத்துக்கென்று 650 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, 295 திட்டங்களில் ஆய்வுப்பணிகள் நடைபெறுகின்றன.
இவர்களுக்கு வழிகாட்டிகளாக, ஒவ்வொரு துறையிலும் ஓய்வு பெற்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த அமைப்புக்கு நிதியாதாரமாக பிரபாகரன் 10 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில் 6 கோடி) ஒதுக்கியுள்ளார்.
ரூட் அமைப்பின் கீழ் "தேசநிர்மாணிகள்' என்ற பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் போரினால் பாதிக்கப்பட்ட சாலைகளை செப்பனிடுவதிலும், அமைப்பதிலும் ஈடுபட்டுள்ளார்கள். ஸ்ரீலங்கா அரசு எந்த நேரமும் மின்சாரத்தையும், எரிபொருளையும் பெட்ரோலியப் பொருள்களையும் முடக்கி, தடை போடுவதால் மாற்று எரிபொருள் ஆய்வும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சரியான கருத்தில், நாடகம் உருவாக்கப்பட்டு கிராமங்கள்தோறும் குழுக்கள் சென்று, நாடகம் போடுவதுடன், புலிகள் நடத்தும் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் 4 மணி நேரம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. போரில் சினிமா தியேட்டர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதால், தொலைக்காட்சி ஒளிபரப்பு விரிவுபடுத்தப்பட்டது'' என்றார்.
பெண்கள் பிரிவுக்குத் தலைவராக இருந்த ஜெயா கூறுகையில், "ஆண்களுக்கு நிகராக தோளோடு தோள் நின்று போர் புரிவதைப் பெருமையாகவே கருதுகிறோம். ஆனையிறவுப் போரில் எங்கள் பிரிவினரும் கலந்துகொண்டனர்' என்றார்.
புலிகளின் அரசியல் இயக்கமான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி அலுவலகம் கொண்டாவில் பகுதியில் திறக்கப்பட்டது. அதன் கிளைகள் வடக்குப் பகுதியின் ஒவ்வொரு ஊரிலும், வட்டத்திலும் அமைக்கப்பட்டன. சட்டம் ஒழுங்கு மற்றும் நிதிப் பொறுப்பு தவிர்த்து இதர நிர்வாகங்கள் மக்கள் முன்னணியின் பொறுப்பில் இருந்ததால், இதன் கிளைகளில் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், அரசு முன்னாள் ஊழியர்கள், பெண்கள் எனப் பலரும் உறுப்பினர்களாகச் சேர்ந்து கொண்டனர்.
மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போக்கைக் கட்டுப்படுத்த, விடுதலைப் புலிகள் சில கட்டுப்பாடுகளை விதித்தனர். இதற்கென "பாஸ்' முறை அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் புலிகளுக்கும், பெற்றோர்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. வெளிநாட்டில் தங்களது பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து, வளம் சேர்ப்பதைப் "பாஸ்' முறை தடுக்கிறது என்றும் கருத்து தெரிவித்தார்கள்.
அதேபோன்று விமர்சனத்துக்கு ஆளான இன்னொரு பிரச்னை தமிழ் சினிமா ஆகும். தமிழ் சினிமா மக்களின் வாழ்வைச் சிதைப்பது மட்டுமன்றி, மக்களின் வாழ்வை அடையாளப்படுத்துவதாகவும் இல்லை என்று புலிகள் படங்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தார்கள். இந்தக் கட்டுப்பாட்டில் மக்களின் கருத்துக்கும் புலிகளுக்கும் இடையே முரண்பாடு தலைதூக்கிற்று. எந்தப் படத்தையும் பார்ப்பதில் தங்களுக்குள்ளேயே சில மனக்கட்டுப்பாடு இருப்பதால் தடை தேவையில்லை என்பது மக்களின் வாதமாக இருந்தது.
அடுத்து, யாழ்ப்பாண சமூகத்தில் ஏற்பட்ட முணுமுணுப்பு புலிகள் இயக்கத்தில் பெண்கள் சம்பந்தப்பட்டதாகும். ஆரம்பத்தில், பெண்களைச் சேர்த்தபோது கண்டுகொள்ளாத யாழ்ப்பாண சமூகம், தற்போது பெண்புலிகள் சீருடை அணிந்து வீதியில் நடக்கவும், தமிழீழக் காவல்படைக்கு மாற்றப்பட்ட பெண் புலிகள், போலீஸ் உடை அணிந்து செல்வதும், நீண்ட கூந்தலைக் குறைத்துக் கொள்வதும் விமர்சனத்துக்குள்ளானது.
யாழ்ப்பாணத்தில் தாய்வழிச் சமூக நிலைப்பாடுதான் என்றபோதிலும், பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வழிவழிவந்த மரபு முறையே போற்றப்பட்டதால், பெண் புலிகள் தோற்றம்-பதவிப் பொறுப்பு-அன்றாட வாழ்க்கை போன்றவை கேள்விக்கும் விமர்சனத்துக்கும் உட்படுத்தப்பட்டது. தேசிய இனப் போராட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்ற உந்துதலில் பெண்களும் போரில் குதிக்கிறார்கள். அவர்கள் பணியின் நிமித்தம் சீருடை அணிவதோ, பயிற்சியின் நிமித்தம் ஆயுதம் தூக்குவதோ, நீள்முடியைக் கத்தரிப்பதோ ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விஷயமல்ல என்ற எதிர்வாதங்களும் எழுந்து பெண்கள் சார்ந்த முரண்பாட்டை சமன் செய்தன.
அதுவரை இருந்து வந்த அரசுரீதியான கல்வி முறையில் தலையிடாமல், இளங்குமரன் (பேபி சுப்ரமணியம்) தலைமையில் தமிழீழக் கல்விக் கழகம் அமைக்கப்பட்டு, தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு முதலியவற்றில் புதிய நூல்கள் படைக்கப்பட்டு, அறிமுகம் ஆயின. இதன்மூலம் அரசின் வரலாறுகளில் திரிக்கப்பட்டிருந்த தமிழர் வரலாறு சரிசெய்யப்பட்டது.
யாழ்ப்பாண நிர்வாகத்தைப் புலிகள் எடுத்துக்கொண்டதும், கோபம் கொண்ட பிரேமதாசா கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில், ராணுவத்தைக் குவித்தார். கடற்கரையோரமிருந்த நகரங்களில் கடும் மோதல் எழுந்த சூழ்நிலையில், புலிகள் நகரங்களில் இருந்து விலகி, காட்டுப் பகுதிகளில் நிலைகொண்டதுடன். அவ்வப்போது தாக்குதலையும் தொடுத்தனர்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.