Tuesday 21 July 2020

வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் இருந்து (1989) முஸ்லீம் காங்கிரஸ்சின் சுயாதீனத்தன்மை வரை: - எஸ்.எம்.எம்.பஷீர்

* பிரேமதாசாவுக்கும் புலிக்குமிடையே நடந்துகொண்டிருந்த தேன்நிலவைப் பேணுமுகமாக முஸ்லிம்கள் புலியின் கருணையில் மாத்திரம் தப்பிப் பிழைக்க விடப் பட்டிருந்தனர். 
 * ஜனவரி 30, 1990இல் முஸ்லிம் காங்கிரஸ்சின் 70 அங்கத்தவர்கள் புலிகளால் கடத்தப்பட்டனர். பிரேமதாசா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் புலியோடு கதைத்து அவர்களில் 50 முஸ்லிம்களை விடுதலையாக்கினர்.
கல்முனை பொலிஸ் பாசறை புலிகளால் சுற்றிவளைக்கப் பட்டதைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவர் மொகமட் யூனுஸ் லெப்பே, முகமட் மன்சூர் (முஸ்லிம் காங்கிரஸ்) கொல்லப்பட்டனர்.
* புலிகள் முஸ்லிம் காங்கிரசைத் தடைசெய்தனர்.
மாகாணசபை அங்கத்தவரான எம் .வை .எம் மன்சூர் அவர்களும் வடகிழக்கு மகாணசபை அங்கத்தவரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியுமான அலி உத்துமான் அவர்களும் முறையே புலியாலும் ஈ என் டி எல் எப் பாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
- எஸ்.எம்.எம்.பஷீர்


" யார் ஒரு அற்ப தற்காலிக பாதுகாப்புக்காக சுதந்திரத்தின் முக்கியமான விடயங்களைத் தாரைவார்க்கிறார்களோ அவர்கள் பாதுகாப்பையோ சுதந்திரத்தையோ பெற லாயக்கற்று விடுகிறார்கள்."
--
பென்ஜாமீன் பிராங்கிளின்.--

முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியற் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டவுடனேயே வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றியது.
இந்தோ-சிறீலங்கா ஒப்பந்தம் கைச்சாத்தாகியவுடனே முஸ்லிங்கள் தமிழர்களுக்கு அடிமையாக்கப்பட்டுவிட்டார்கள் என்று அஸ்ரப் கூறியபோதும் அதை உண்மையாக்கும் முகமாக வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலிற் பங்குகொண்டு அதிலே பதவிவகிப்பாளராகவும் ஆகினர்.
1987 இலே முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பங்குகொள்ளாமல் விட்டிருந்தால் இந்தோ-சிறிலங்கா ஒப்பந்தம் தனது தகுதியை இழந்திருக்கும். ஆதலால் இந்திய அரசாங்கம் முஸ்லிம காங்கிரசைத் தேர்தலில் பங்குகொள்ளும்படி உந்தித்தள்ளி இந்தோ-லங்கா ஒப்பந்தத்தைத் தப்பிப் பிழைக்கச் செய்தது.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி இந்தோ-லங்கா ஒப்பந்தத்தை எதிர்த்ததால் அது மாகாணசபைத் தேர்தலில் பங்குபற்றாமல் விடவே முஸ்லிம் காங்கிரஸ் யூ.என்.பியையும் தமிழ்க் கட்சிகளையும் எதிர்த்துப் போட்டியிடவேண்டி வந்தது. முஸ்லிம் காங்கிரஸ் யூ.என்பி விரோதப் பிரச்சாரத்தை மடைதிறந்து விட்டதோடு அதை நியாயப்படுத்த இஸ்லாம் மதத்தைத் துணைக்கு அழைத்ததோடு அதன் மதத்தீர்ப்பு  மரபையும் கூறி யூ என்பிக்கு வாக்களித்தல் பாவமும் (ஹறாம்) இஸ்லாமிற்  தடுக்கப்பட்டதென்றும் கூறியது.( ஹறாம் என்பது அரபுமொழியில் தடுக்கபட்டது என்ற மதவியாக்கியானத்தைக் கொண்டது).
முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் 1988 தேர்தலில் சிறீமாவோ பண்டாரனாயக்காவுக்கு ஒத்தாசை வழங்குவதென்று ஏகமனதாக முடிவெடுத்து சிறீமாவோ பண்டாரனாயக்காவோடு பேச்சுவார்த்தைகளை நடாத்தியது.
ஜனாதிபதி தேர்தல் காலங்களில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி வடகிழக்கு மாகாணத்திலுள்ள தமிழர்களுக்கும் முஸ்லிங்களுக்கும் சிங்களவர்களுக்கும் வெவ்வேறான நிர்வாக அலகுகளை ஏற்படுத்தும் பிரேரணையைப் பிரேரித்தது.

இந்த வேலைத்திட்டம் கொள்கையளவில் முஸ்லிம் காங்கிரசாலும் தமிழ்க் காங்கிரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் தேர்தல் அறிக்கை மாத்திரம்தான் வடகிழக்கு மாகாண முஸ்லிம்களின் உரிமையை அங்கீகரித்தது.
ஜனாதிபதி தேர்தலுக்குச் சிலநாட்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இந்த நிலைப்பாட்டைப் தன்னிச்சையாகப் புறக்கணித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் நடுநிலமையாக இருக்கப் போவதாகவும் தாம் ஒரு கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் பிரகடனப்படுத்தியது.
கொழும்பில் நடந்த முஸ்லிம் காங்கிரஸ்சின் 8வது வருடாந்த மகாநாட்டில,; முஸ்லிம் காங்கிரஸ் சிறீமாவோ பண்டாரனாயக்காவுக்கோ அன்றி ரணசிங்க பிரேமதாசாவுக்கோ ஒத்தாசை வழங்கப் போவதில்லையென்று அஸ்ரப் எழுந்தமானமாகப் பிரகடனப் படுத்தினார். அவரது இந்தத் தன்னிச்சையான எழுந்தமானக் கொள்கைத் திருப்பமானது மத்திய குழு அங்கத்தவர்களையும் ஏன் தேசந் தழுவிய முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களையும் வியாகூலப் படுத்தியது. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே சிறீமாவோ பண்டாரனாயக்காவுக்கு வாக்களிக்கும்படி முடுக்கியிருந்தது.

இருந்தபோதும் ஒரு சிலர் துணிந்து முஸ்லிம்காங்கிரஸ்சின் தலைமைத்துவத்தை ஏன் இப்படியான திடீர் திருப்பம் என்ற கேள்வியைக் கேட்டனர். முஸ்லிம் சமூகத்தின் நன்மைமக்காகத் தலைவரின் உள்ளுணர்வு அப்படியான கொள்கைத் திருப்பத்தை எடுக்க வைத்ததாக முஸ்லிம் காங்கிரஸ்சின் முக்கியஸ்தர்கள் விடையிறுத்தனர். ஒரு சிலருக்கே இந்தத் திடீர் திருப்பத்திற்கான காரணம் தெரிந்திருந்தது. அனேகர் வியாகூலத்தில் பிரமித்துப்போய் இருக்க விடப்பட்டனர்.

அஸ்ரப்பும் சேகு இஸ்சாடீனும் சிறீமாவோ பண்டாரனாயக்காவோடு கலந்துரையாடிக் கொண்டிருக்கும் அதே வேளையில் யூஎன்பியின் ஜனாதிபதி வேட்பாளரான ரணசிங்கா பிரேமதாசாவோடும் இரகசியப் பேச்சுக்களை நடாத்தினர். ஜனாதிபதித் தேர்தலில் தாம் நடுவுநிலையாக இருக்கப்போவதாக முஸ்லிம் காங்கிரஸ் பிரகடனப் படுத்தியிருந்த போதும் இரகசியமாகப் பிரேமதாசாவின் வெற்றிக்காகப் பிரச்சாரம் செய்யும்படி செய்திகள் எல்லாப் பிராந்திய கிளைகளுக்கும் 1989 இல் தேர்தலிற் போட்டியிட இருந்தவர்களுக்கும் மத்தியகுழு அங்கத்தவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருந்தபோதும் தனது கொள்கை மாற்றத்திற்கான இரகசியத்தை அஸ்ரப்பால் பாதுகாக்க முடியவில்லை. அவர் புத்திசாதுரியமற்று அந்த இரகசியத்தை பிரசித்தமாக வெளியிட்டு விட்டார்.
பிரேமதாசா அவருக்குத் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு 'அஸ்ரப் நீங்கள் என்னை வெற்றியீட்டப்  பண்ணியதற்காக நான் உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்வேன்.உங்களுடைய ஒத்தாசை இல்லாதிருந்தால் நான் ஒருபொழுதும் ஜனாதிபதியாகி இருக்கமாட்டேன்."
இதைக் கேள்வியுற்ற அந்தச்சந்தர்ப்பத்தில் கூடியிருந்தவர்கள் எல்லோரும் ஓர் இரட்சகரிடமிருந்து ஓரு மதபோதனையைச் செவிமடுத்த உணர்ச்சியோடு 'அல்லாஹ_அக்பர்"(அல்லாஹ்வே பெரியவன்) என்று கூச்சலிட்டனர். பின்பு அஸ்ரப் கூறினார்,

''அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் 12 வீதம் என்ற வெட்டுவீதமில்லாமல் அதை 5 வீதமாக்கி விகிதாசாரத் தேர்தல் முறையின்கீழ் அதிக முஸ்லிம்கள் பாரளுமன்றத்திற்குப் போவதற்கு ஒத்துக்கொண்டதாகக் கூறினார்.
இந்தப் படக்காட்சிகள் எல்லாம் இப்பொழுது பெருமளவு மாறிவிட்டபோதும் ஹக்கீம் போன்றவர்கள் தொடர்ந்து அஸ்ரப்பை ஒரு புனித மனிதனாகக் காட்டுகிறார்கள். அஸ்ரப்பின் கவிதைகள் கூட பொதுவான முஸ்லிம்களிடையே அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் தனிமனித வழிபாடென்பது அடிப்படை இஸ்லாத்திற்கு எதிரானது.
1989 பெப்ரவரிப் பாராளுமன்றத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாட்டின் இரணடு பிரதான கட்சிகளுக்குமெதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இருந்த போதிலும் அஸ்ரப் யூ.என்.பி முஸ்லிங்களின் நலன்களுக்கு எதிரான கட்சியென்று கருதியதோடு ஜனாதிபதித் தேர்தலில் சிறீமாவோ பண்டாரனாயக்காவை கழுத்தறுத்த போதும் பொதுவாகவே அவருக்கு சிறிலங்க சுதந்திரக் கட்சி மேல் எப்பொழுதும் ஒரு சின்ன வாஞ்சை இருந்தது.

பாராளுமன்றத் தேர்தலிலே 'எந்த உண்மையான முஸ்லிமும் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டான் " என்று அஸ்ரப் பிரகடனப் படுத்தினார்
.(இஸ்லாம் மதத்தின் பிரகாரம் உண்மையான முஸ்லிம் என்பது அல்லாஹ்வுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதும் தீர்க்கதரிசியின் வாழ்க்கை முறையப் பின்பற்றுவதுமாகும்.அவர்களை அரபு மொழியில் அல் மூமினுன் என்று அழைப்பார்கள். குரானிலுள்ள சூறாத் 49அல் ஹ_ஜூறாத் உண்மையான முஸ்லிங்களைப் பற்றி விஸ்தரிக்கிறது)

தற்போதய மாகாணசபைத் தேர்தலில் யார் யூ.என்.பியின் சின்னமான யானைக்கு வாக்களிக்கவில்லையோ அவர்கள் உண்மையான முஸ்லீம்கள் அல்ல என்று ஹக்கீம் கூறக் கூடும். அவரது அண்மைக்கால (உம்றா) சின்ன யாத்திரையும் அதைத்தொடர்ந்த பாரளுமன்றப் பதவியை இராஜினாமாச் செய்ததும் அவரையோர் பாராளுமன்றப் பதவியைக்கூடத் தியாகம் செய்த தலைவர் என்று காட்டுவதோடு அவரை ஒரு மத நம்பிக்கையுள்ள அர்ப்பணிப்போடு கூடிய முஸ்லீம் என்று காட்டுவதற்காகவுமாகும். இந்த மதக் கடமைகள் எல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களின் கட்சி வியாபாரம் ஆகும். அதனூடே அவர்கள் சொந்தப் பிரதேச முஸ்லிங்களை மாத்திரமல்ல எத்தனையோ மைல்களுக்கு அப்பால் வசிக்கும் முஸ்லிங்களையும் இதனூடு நம்பவைக்கிறார்கள்.

முஸ்லிம் காங்கிரசின் ஒவ்வொரு நகர்வுகளையும் மதக் கிளைக் கதைகளோடு தொடர்பு படுத்தி அவர்களைப் புனிதர்களாக்குவதற்கும் சில முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இதை எழுதுபவர் ஓரு குறிப்புரையை அவதானித்தார். ஒரு பலமான முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவர் ஹக்கீமின் உம்றா யாத்திரையையும் அவரது மாகாணசபைத் தோதலில் பங்குபற்றுதலையும் பற்றிக்கூறும்பொழுது 'சர்வ வல்மைபடைத்த இறைவனான அல்லாஹ் மதிப்புக்குரிய ரவ் ஹக்கீமையும் அவரது குழுவையும் வெற்றிக்கு ஆசீர்வதிப்பாராக என்று வாழ்த்தியதோடு அதை புனித தீர்க்கதரிசியான மோசஸ்சை (Moses ) அவர் எதிர்கொள்ளும் எல்லாச் சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய பாதுகாப்புக்கும் போகும் வழிக்கும் வெற்றிக்குமாக ஆசீர்வதித்ததை ஒப்பிடுகிறார். இங்கே சவாலாகப் பிள்ளையான் PHAROAH ஆகவும் வடகிழக்கு மாகாண தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் ஹக்கீமையும் ((Moses ) மோசஸ்சாகவும் உவமிக்கிறார்.

ஜனாப் அஸ்ரப் அவர்களுக்கும் முன்னய ஜனாதிபதியான சந்திரிகா குமாரத்துங்காவுக்கும் இடையே நடைபெற்ற முரண்பாட்டை அடுத்து அஸ்ரப் அவர்கள் மெக்காவுக்குப் பறந்து உம்ரா தொழுகை செய்துவிட்டு அங்கிருந்து ஒரு நீண்ட கடிதமொன்றை எழுதி சிங்கள முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவரான அசிதா பெரேராவுக்குத் தொலைநகல் செய்து தனக்காக ஜனாதிபதியிடம் சொல்லச் சொன்னார். முஸ்லிம் காங்கிரஸ்சின் முதிர்ந்த அங்கத்தவர்கள் அஸரப் சந்திரிக்காவுக்கு எழுதிய கடிதம் ஒர் இலக்கியப் பெறுமதி வாய்ந்ததென்று கூறினார்கள். அவர் மேலும் கூறுகையில் மற்றைய உச்சியிலுள்ள எல்லா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்களைவிட அசிதா பெரேராவே தகுதிவாய்ந்தவர் என்றும் 2000ஆண்டு கல்முனையில் நடந்த ஒரு தேர்தற் பிரச்சாரக் கூட்டத்தில் அசிதா பெரேராவே மிகவும் நம்பகம் வாய்ந்தவர் என்றும் கூறினார்.
அசிதா பெரேரா சானக அமரத்துங்காவின் லிபரல் கட்சியிலிருந்து முஸ்லிம்காங்கிரஸ்சில் சேர்ந்தவராகும். இருந்தபோதும் அசிதா முஸ்லிம் காங்கிரஸ்சைப் பலப்படுத்துமுகமாக தனது பாராளுமன்றப் பதவியை ;இராஜினாமாச் செய்தார். அவரது கடைசிப்பாராளுமன்றப் பேச்சு அவரது தாராளவாத உள்ளத்தைப் பிரதிபலிக்கும். 'நான் கட்சி பலமடைய வழிதிறந்து விடுவதற்காகவே இராஜினாமாச் செய்கிறேன்" அவர் முக்கியமான சமுதாயச் சேவைகளான சுகாதாரம,; போக்குவரத்து மற்றும் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காகவும் மக்கள் முன்னணி அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒருபொது உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தவராகும்.

இதை எழுதுபவர் 1989 இல் மட்டக்களப்பில் ஒரு வயதான சூஃபி மனிதனோடு இலாவகமாகக் கலந்துரையாடும்பொழுது அவர் மிகச் சந்தோஷமாக மரச் சின்னத்தைத் தேர்ந்தெடுத்ததையும் குர்ரானில் 'சிட்ரத் அல் முந்தஹர்" மரத்தைப் பற்றி விவரிக்கப்பட்டிருப்பதையும் ஒப்பிட்டுக் கூறினார்;. முஸ்லிம் காங்கிரஸ்சின் சகதி அரசியல் எவ்வாறு மரச்சின்னத்தைப் புனிதமாக மாற்றியிருக்கிறதென்றதைக் கேட்டு இக்கட்டுரையாளர் அதிர்ச்சியடைந்தார்.
வடகிழக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்விளைவுகள்:-
இருபது வருடங்களுக்கு முன்னர், அப்பொழுது ரவூப் ஹக்கீம் ஒரு முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்தவராகக்கூட இல்லாத நாட்களில் முஸ்லிம் காங்கிரஸ்சின் அங்குரார்ப்பண அங்கத்தவர்கள் உயிராபத்தை விலைக்குவாங்கி வடகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பங்குகொண்டு போட்டியிட்டனர்.

பிரேமதாசாவுக்கும் புலிக்குமிடையே நடந்துகொண்டிருந்த தேன்நிலவைப் பேணுமுகமாக முஸ்லிம்கள் புலியின் கருணையில் மாத்திரம் தப்பிப் பிழைக்க விடப் பட்டிருந்தனர். புலி வாழைச்சேனை, மூதூர், தோப்பூர் முஸ்லிங்களைக் கொன்று குவித்த காலமான ரணில் பிரதமராக இருந்த நாட்களில், ரணில் தனது சமாதான ஒப்பந்தத்தைப் பாதுகாக்க மாத்திரம் கவலைப் பட்டாரே ஒழிய முஸ்லிம்களதும் மற்றவர்களதும் உயிர்போவதையல்ல.
ஜனவரி 30, 1990இல் முஸ்லிம் காங்கிரஸ்சின் 70 அங்கத்தவர்கள் புலிகளால் கடத்தப்பட்டனர். பிரேமதாசா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் புலியோடு கதைத்து அவர்களில் 50 முஸ்லிம்களை விடுதலையாக்கினர்.
அந்த அவல நாளில் கல்முனை பொலிஸ் பாசறை புலிகளால் சுற்றிவளைக்கப் பட்டதைத் தொடர்ந்து வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவர் மொகமட் யூனுஸ் லெப்பே, முகமட் மன்சூர் (முஸ்லிம் காங்கிரஸ்) கொல்லப்பட்டனர். ஜனாப் வை.எல் எம்.மன்சூர்  புலியால் அவரது வீட்டில் சுடப்பட்டு இரத்தம் பெருகவிடப்பட்டார். அவரைப் புலிகள் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர். அதையடுத்து அவரது உடலம் புலிகளால் பிடுங்கிச் செல்லப்பட்டு எவர்க்கும் தெரியாத ஓரிடத்திற்குக் கொண்டுசெல்லப் பட்டது.
அந்தத் தலைவிதி தத்தளித்த நாளில் புலி வேறு 5 நோயாளிகளை ஒரு தனியார் மருத்துவ மனையில் சுட்டுக் கொன்றதோடு மேலும் 10 பேரையும் ஒரு டாக்டரையும் கடத்திச் சென்றனர். இவர்களுள் முன்பு புலியின் அட்டூழியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அடங்குவர். 
புலி முஸ்லிம் காங்கிரசைத் தடைசெய்தது. அதையடுத்து முஸ்லிம் காங்கிரஸ் தானைத் தளபதிகள் பாதுகாப்பின் நிமித்தம் கிழக்கை விட்டு தெற்கிற்குக் குடிபெயர்ந்து  அங்கு தமது இரணடாம் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர்.
பாசறைகளை மாற்றுவது சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் நிகழ்வுப் போக்கு:-

(வடகிழக்கு மாகாணசபையிலிருந்து கீழ்மாகாணசபைக்கு)

சில சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு மாகாணசபை அங்கத்தவர்கள்  இப்பொழுதும் உற்சாகமாக அரசியல் செய்கின்றனர். துர்அதிஷ்ட வசமாக 1989இல் உயிராபத்தை விலைக்குவாங்கி அங்கு மாகாணசபையிற் போட்டியிட்டவர்களும் பாராளுமன்றத் தேர்தலிற் போட்டியிட்டவர்களும் இன்று எதிர்க்கட்சிக்குத் தாவி விட்டனர்.
இவர்களுள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் முதலாவது கட்சித்தலைவரும் முக்கியமான அங்கத்தவருமான சேகு இஸ்சாடீன். அவர் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விட்டோடீ தனது சொந்தக் கட்சியைத் ஸ்தாபித்து பின் பாராளுமன்ற அங்கத்துவப் பதவி பெறும் முகமாக யூ.என்.பி.யிற் சேர்ந்தார். பிறகு அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்திற் சேர்ந்து துணை மந்திரியானார். அவர் முதலாவது வடகிழக்கு மாகாணசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றவர்.
வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவரும் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதய செயலாளரான ஹசான் அலி இப்பொழுது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
மறைந்த முகிடீன் அப்துல் காதர் அவர்கள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவர். பின் யூஎன்பிக்கு மாறி மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் சேர்ந்து பாரளுமன்ற அங்கத்தவரானார். முஸ்லீம் காங்கிரஸில் உட்சதி நடந்த நாட்களில் அவர் அத்தாஉல்லாவோடு சேர்ந்து கொண்டார். பின்பு ஹக்கீமோடு சேர்ந்து 2001 இல் மரணமானார்.
எஸ்.நியாமுடீன் ;1992 இல் அவுஸ்திரேலியாவுக்குப் போய் மீண்டும் சிறிலங்காவுக்கு வந்து அரசியலில் ஈடுபட்டு இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருக்கிறார். அவர் யூஎன்பிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்குமிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தேர்வுப் பட்டியல் மூலம் பாராளுமன்ற அங்கத்தவர் ஆகினார்.
ஒரு வடகிழக்கு மாகாணசபை அங்கத்தவரும்  ஒருமுஸ்லீம் காங்கிரஸ் மாகாணசபை அங்கத்தவரும் கொடுமையாக ஆயுதந்தாங்கிய  தமிழ் போராட்டக் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாகாணசபை அங்கத்தவரான எம் .வை .எம் மன்சூர் அவர்களும் வடகிழக்கு மகாணசபை அங்கத்தவரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதியுமான அலி உத்துமான் அவர்களும் முறையே புலியாலும் ஈ என் டி எல் எப் பாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.


(
எஸ்.எம்.எம்.பஷீர் ஆங்கிலத்தில் எழுதிய இக்கட்டுரையை தமிழில் மொழிபெயர்த்தவர் : திரு. அழகலிங்கம்  
கட்டுரைகள்
http://vizhippu.net/| vizhippu@gmail.com 6 May, 2008 - 01:46 — editor