Friday 17 July 2020

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம் (1- 5)

எஸ்.எம்.எம் பஷீர்

தற்பெருமையும், உலகின் பெரும் புகழும்வாளும்
கிரீடமும் மனிதனின் நம்பிக்கையை காட்டிக்கொடுத்தன
சிரத்தையுடன் தான் அமைத்த கோபுரமும்கோயிலும்
மண்ணோடு மண்ணாயின"
                                                           – கோகிம் நியண்தர்


இன்று புலிகளின் தலைவர் பிரபாகரனது உடலம் அவரது மரணத்தினை உறுதி செய்தும் இன்னமும் சிலர் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கின்றாரென புலம்பத் தொடங்கியுள்ளார்கள். சூழ்ச்சிக் கோட்பாடுகளில் (Conspiracy Theory) ஒன்றுதான் தொலைகாட்சியில் காட்டப்படும் கொலைக்காட்சி என்கின்றார்கள். தீவிர புலிப்பக்தர்கள் நம்ப மறுக்கின்றார்கள். புலிகளின் வியாபாரிகள் மிகவும் கீழ்தரமாக பிணத்தையும் வியாபாரமாக்கும் விவஸ்தையற்ற செயலில் கைதேர்ந்தவர்கள் இந்நிகழ்வையே மறுக்கிறார்கள் சுபாஸ் சந்திரபோஸ்  போல் தொலைந்தவர் வருவார் என்று ஒருபுறம், ஜேசுவைப்போல உயிர்த் தெழுவாரென மறுபுறமும் புத்தி பேதலித்துப் பிதற்றுவோரும் இருப்பாரென ஐயம் ஏற்படுகின்றது.

ஏனெனில் புலிப்பக்தர்களுக்கு இவர் மனிதரல்ல கடவுள்! இவ்வாறுதான் 1996 ம் ஆண்டு யூலையில் முல்லைத்தீவு இராணுவ முகாமை புலிகள் தாக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களை கொன்றதாக புலிகள் ஏக்காளமிட்டபோது பிரபாகரனுக்கும் காயமேற்பட்டதாக ஒரு புரளி கிளம்பியது. அப்போது புலிகளின் பிரமுகர் ஒருவர் கூறினார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை எவராலுமே அசைக்கமுடியாதுஅவர்மீது எதிரியின் சிறு தூசிகூடப் படமாட்டாது என்று கூறினார். இந்த வீறாப்பும், வீம்பும் மட்டுமல்ல ஆயிரமாயிரம் சாபங்களும் இவர்களை துடைத்தழித்திருக்கிறது. இப்புத்தாயிரமாம் ஆண்டு தொடங்கி ஒரு தசாப்தத்துள் நம்பமுடியாத பல நிகழ்வுகள் நடந்தேறி விட்டன. குறிப்பாக சதாம் உசைனின் தூக்கு, மிலோசவிச்சின் அந்திம விசாரணை ஏன் இயற்கைச் சீற்றம் சுனாமி இன்றைய புலிகளின் அஸ்தமனம். நீண்டகால வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்கள் மிக விரைவாகப் புரட்டப்பட்டுவிட்டன.

புலம்பெயர் தேசத்தில் புலிகளை ஆதரித்தோர் சொல்ல மறந்தது புத்திமதி, சொல்லிவைத்தது முகஸ்துதி.
உதாரணமாக புலி அரசனுக்கு சாமரம் வீசியவர்கள், மஹிந்தவிற்கு. சமாதானப் பேச்சுவார்த்தை குலைய முன்பே சவால் விட்டனர்.

மீழும்போர் என்றே சொல்லிவிட்டார்
மீட்சியாளர் பிரபாகரனே, கேட்டாய் தானே
ஆளும் இன்றைய மஹிந்தாவே கொஞ்சம்
அவதானி இன்றேல் போர் உறுதி” (தமிழினி, புதினம் 2005)

வம்பிற்கிழுத்து இன்று அழிந்துபோன புலிகளின் தலைவர் பிரபாகரனது மரணத்துடன் பல்வேறு சூழ்ச்சிக் கோட்பாடுகள் உலாவி வருகின்றன. அதில் ஒன்று தான் தப்பி ஓடும்போது கொல்லப்பட்டாரா, அல்லது சரணடையும்போது கொல்லப்பட்டாரா? ஹிட்லரைப் போல சாம்பலும் இல்லாமல் பெற்றோல் கலனுடன் நடமாடுவோர் என்று சொல்லப்பட்ட பிரபாகரன் எவ்வாறு உயிரற்ற உடலாய் மீட்கப்பட்டார் என்ற பின்னணியில் அவரது சயனைட் வில்லைகள் எங்கே போயின என்ற கேள்விகளும் எழுகின்றன. பச்சிளம் பாலகர்களையும், “மானத்துடன”; சயனைட் வில்லையை கடித்து சாகச்சொன்ன பிரபாகரன் ஒரு கோழையாக மானமின்றி சயனைட் வில்லைகளை கடிக்காமல் செத்திருக்கிறார். இவருக்கு சதாம் போல் பதுங்குவதற்குக்கூட ஒரு குழி தமிழீழத்தில்கிடைக்கவில்லை.

 மறுபுறம் பல புத்திஜீவிகளுக்கும், புலி ஆய்வாளர்களுக்கும், தமிழ் தேசியவாதிகளுக்கும், நாட்டுப்பற்றாளர், மாமனிதர் பட்டம் வழங்க இப்போது பிரபாகரன் உயிருடனில்லை. இந்த ஆதங்கம் இந்திய தமிழ் புலி ஆய்வாளர் அப்துல் ஜபார் பிரபாகரன் செத்திருக்க மாட்டார் என்ற அதீத நம்பிக்கையை வெளிப்படுத்துவதிலிருந்து புலப்படுகின்றது. அருட்திரு ஜெகத் கேஸ்பார் பிரபாகரனைப் பற்றி தனது விடுதலைப்போராளி கட்டுரையில் தலைப்பாக எங்கள் கனவையும் இல்லாதுபோனவர்களது உயிர் கனவையும் சுமந்தவர். என்று சொல்லியிருந்தார். இன்று இல்லாதுபோன பிரபாகரனின் கனவை யார் சுமக்கப் போகிறார்கள்? புகலிட பத்திஜீவிகளில் பேராசிரியர் கிருஸ்ரி ஜெயம் ஏலீசர் (Prof-christie Jeyam-Eliezer) மாமனிதர் விருது வழங்கப்பட்ட முதல் வெளிநாட்டுப் பிரஜையாகும்.

இந்த வரிசை முன்னாள் எம்.பி நவத்தோடு நின்றுபோனது. இறந்தவர் பற்றி இகழ்ந்து பேசுதல் முறையல்ல என்ற நாகரீகக்காப்பு மனிதகுல விரோதிகளுக்கு பொருந்துமா? என்ற கேள்வி ஒருபுறமிருக்க வரலாற்றைப் பொறுத்தவரை மனித குலத்தின் விரோதிகள், இரக்கமற்ற கொலைகாரர்கள் தப்பித்துக் கொள்வது வரலாற்றுத் துரோகமாக அமைந்துவிடும. இன்றைய கொழும்புச் செய்திகள் இன, மத, பேதமற்று இலங்கைக்கு இன்னுமொரு சுதந்திரம் முப்பது ஆண்டின் பின்னர் கிடைத்திருப்பதனை பலர் குறிப்பிட்டுக்கூறினர். எனக்கொரு ஞாபகம் கருணா பிரிந்து கிழக்கு முரண்பட்டு நின்றபோது எனது தாயிடம் சொன்னேன் மாற்றங்கள் தொடங்கிவிட்டன. பயங்கரவாதம் இல்லாதொழியும் என்று, தாய் கேட்டார் அப்படியும் நடக்குமா என்று பொறுத்திருங்கள் எல்லாம் நடக்கும் என்றேன் ஆனால் அதனைப் பார்ப்பதற்கும் எனது தாயார் இன்று உயிருடனில்லை.
புறநானூறு வீரமுள்ள சேர மன்னன் சோழனின் கைதியானபின்னர் தாகத்திற்கு நீர் இரந்து கேட்க விரும்பாமல் இறந்த குந்தையையும், வாளால் வெட்டிப் புதைக்கும் மரபுபேசி இறந்துபோன வரலாற்றைவிட பிரபாகரனின் இறுதி இகழ்விற்குரியது.

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?



unmaikal May 2009

மீசைவைத்த சிங்களவன், அடங்காத் தமிழன், முடங்கிப்போன முஸ்லிம். (பாகம் -2)


மீசைக்காரச் சிங்களவன் என்ற தலைப்பு பிறந்ததே ஒரு ஊர்ஜிதமற்ற செய்தியிலிருந்துதான். ஒரு நண்பர் கூறினார் சமாதானப் பேச்சுவார்த்தை முறிந்து மஹிந்த அரசு கிழக்கில் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்தபோது மஹிந்த ராஜபக்ஸ பிரபாகரன் இதுவரை மீசைக்காரச் சிங்களவனைப் பார்க்கவில்லை என்று கூறியதாக. யோசித்துப் பார்த்தால் ஜே.ஆரோ, பிரேமதாசாவோ அன்றி டிங்கிரிபண்டாவோ ஏன் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்காவோ மீசை வைக்காத சிங்களவர்கள் தான். நான் அவர்களில் ஒருவன் அல்ல என்பதனை மஹிந்த இன்று நிரூபணம் செய்துவிட்டார். 

யூத சமூகம்போல் நாங்களும் மூளை வலுக்கூடியவர்கள.; புலம்பெயர்ந்தும் வளமுள்ளவர்கள் என்று பெருமைகொண்ட புலம்பெயர் புலித் தமிழர்கள் இன்னும் பிரபாகரன் சாகவில்லை போராட்டம் தொடரும், தமிழீழம் மலருமென்று கூக்கரலிடுவதன்மூலம் இவர்கள் அனைவருமே மூளையற்ற தமிழர்களா என்னும் சந்தேகமே ஏற்படுகின்றது. நல்லவேளை இவர்களிடம் பிரபாகரனின் உடலம் கிடைத்திருந்தால் அதனை மம்மிபண்ணி பாதுகாத்து வணங்குவார்கள்போல் தோன்றுகிறது. 

1959 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ந் திகதி ஈழம் எங்கள் தெய்வம”; என்னும் நூலினை வெளியிட்டதுடன் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குள் சிறுபான்மையின மக்களை அனுமதிக்கவிடாது தடியடி நடாத்தி அடங்காத் தமிழன் என்னும் பெயரினைத் தக்கவைத்துக் கொண்டவர். அதுமட்டுமன்றி மலையக மக்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாதவாறு மீசை வைத்த சிங்களவர் திரு டி.எஸ் சேனநாயக்கா அவர்களுக்கு உதவிபுரிந்தவரும் இந்த அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் தான் 

இவரின் மறுபக்கம் மகாராணிக்கு கணிதம் கற்பித்து மகாராணி கையுறையின்றி இவரின் கையைக் குலுக்கும் வாய்ப்பினையும் பெற்றவர். இந்த உயர்நிலை மனிதர்கள் அவர்களின் வாரிசுகள் அடங்காத் தமிழர்கள். ஆனால் தேவை ஏற்பட்டால் அடிக்கவும், கடிக்கவும் செய்பவர்கள். 

இன்றுவரை தமிழர்களுக்கு நடந்த அவலங்களுக்கு 30 வருடங்களாக இலங்கையில் கொலையும், கொள்ளையும் பொருளாதார அழிவுகளும் எற்பட்டமைக்கு ஆயதந்தாங்கிய பலர் காரணமாயிருந்திருப்பினும், அவர்கள் திருந்தி, ஜே.வி.பி கூட ஜனநாயகத்திற்கு திரும்பியபோதும் திருந்த முடியாத புலிகள் தமது அஸ்தமனத்தடன் தம்மை நம்பிய தமிழ் மக்களையும் அழித்துவிட்டே போயிருக்கிறார்கள். 

சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் திருமலையில் க.வே பாலகுமாரன் தமிழ் மக்களைப் பார்த்து நிம்மதியாக தூங்குங்கள் நாங்கள் (புலிகள்) உங்களைப் பாதுகாப்பார்கள் யாமிருக்க பயமேன் என்று கூறிய புலிகள்”; அம்மக்களை தமது பாதுகாப்பு அரணாக அமைத்து அவர்களை அழிக்கச்செய்து விழிப்பேயின்றி நிரந்தரமாய் தூங்கிப்போனார்கள்

புலம்பெயர் தமிழர்கள் தமது அறிவையும், வளத்தையும் பிரயோகித்து தமது மக்களை மட்டுமல்ல புலிகளையும் உருவாக்கி அழிக்கப்பண்ணிவிட்டார்கள். அடுத்த அழிவுத் திட்டத்திற்கு மீண்டும் தயாராகின்றார்கள். 

யாழ் குடாநாடினது வீழ்ச்சிதான் தமிழீழத்தின் இறுதிப்போர் 40 ஆயிரம் சிங்களப் படைகள் உள்ளன. இவர்கள் இங்கிருந்து தப்பிப்போகும் ஒரேயொரு வழி கடல்பாதை மட்டும்தான். இந்தக் குடாநாட்டினது வீழ்ச்சிதான் தமிழீழ விடுதலைப்போரின் இறுதிப்போராயிருக்கும். என்று சூளுரைத்து பேருரையாற்றிய சூசைஇன்று குடாநாட்டிலே என்று குறிப்பிட்டு மூன்றரை வருடத்துள் முல்லைத்தீவு கடற்பாதையையேனும் பாவிக்க முடியாமல் தமிழீழக் கனவையே சேர்த்தழிக்கும் இறுதிப்போர் நடந்து முடிந்திருக்கின்றது.

சமாதான காலத்தில் 2003 ல் நான் இலங்கை சென்றபோது மனித உரிமை செயற்பாட்டாளரென அறியப்பட்ட புலி சார்பான லண்டனில் இயங்கும் தமிழர் ஸ்தாபனமொன்றின் முக்கிய பிரமுகர் அயர்லாந்தில் இருக்கும் முரண்பாடுகளுக்கும், தீர்வுகளுக்குமான சர்வதேச நிறுவனத்தின் பிரமுகர்கள் இருவருடன் இலங்கை வந்திருந்தார்கள். என்னையும் புத்தளம் அகதிகள் முகாமிற்குச் செல்லும் பயணத்தில் இணைந்துகொள்ளக் கேட்டபோது கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்று புத்தளத்திலுள்ள வடமாகாண அகதிகளைச் சந்தித்த பின்னர் வடக்குநோக்கிய தமது பயணத்தை தொடர்ந்து புலிகளின் பொலிஸ் மா அதிபர் நடேசனைச் சந்திக்க புறப்பட்டனர். என்னையும் அந்த மனிதஉரிமைவாதி அழைத்தார். 

அதற்கு நான் ஏனென்று கேட்டேன் கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினைபற்றி அவர்களுடன் கதைக்கலாம், அப்பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறிமுறை கட்டமைப்புபற்றி ஆராயலாம் என்றெல்லாம் என்னை தூண்ட முயன்றார். 

ஆனால் நான் புலிகளுக்கும் அவர்களின் பொலிஸ் அதிகாரப் பிரயோகத்திற்கும் கிழக்கு முஸ்லிம்களின் பிரதேசத்தில் இடமில்லை. உங்களது பொலிஸ் சேவையினை உங்களது பிரதேசத்தில் வைத்துக் கொள்ளுங்கள் எனக்கு அவரைச் சந்திக்கவேண்டிய அவசியமில்லை என புத்தளத்திலிருந்தே நான் கொழும்பிற்கு திரும்பிவிட்டேன். 

அந்த நடேசன் இன்று மாமனிதராக மரிக்காது தமிழ் சமூகத்திற்கு இறுதிவரை பொய்யுரைத்தே உத்தியோகபூர்வ மரணச் சடங்கின்றி மடிந்துபோனார். வடமாகாண புத்தளம் வாழ் முஸ்லிம்களின் சோகக்கதைகேட்டு புலிகளிடம் நியாயம் கேட்கப்போன அந்த இரு வெள்ளையர்கள் மீண்டும் முகங்காட்டவே இல்லை.;

இந்த அடங்காத் தமிழர்கள் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் பற்றி இன்று சிலாகித்துப் பேசுகிறார்கள். சர்வதேச நீதிமன்றக் குற்றங்களில் கூறப்படும் இனச்சுத்திகரிப்பு, இனப்படுகொலைகளை முஸ்லிம்கள் மீது புலிகள்தான் செய்தார்கள்.அப்போது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இருக்கவில்லை அதன் உருவாக்ககாலத்தில் லண்டனில் அதுதொடர்பாக உள்ள விடயங்கள் ஆராயப்படசட்டத்தரணிகள் குழுவில் சிலகாலம் நானும் அங்கம் வகித்தேன்.  

அதனையொத்த குற்றத்தை புலிகள் 2006 ல் மூதூரில் செய்தார்கள.; ஆனால் இன்று இந்தக் குற்றவாளிகள் உயிருடனில்லை. தண்டிக்கப்பட்டு விட்டார்கள்.; சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இவர்களுக்கு இதனைவிட குறைந்த தண்டனையைத்தான் வழங்கியிருக்கமுடியும்.

புலம்பெயர் புலிகளின் பேச்சாளர்களான எரிக் சொல்ஹெய்ம் இன்று தமிழர்களுக்கு சயாட்சி வழங்கத் தவறினால் போராட்டம் வேறு வழியில் தொடரலாமென எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நோர்வே அரசின் மூக்கு நுழைப்பு இந்த 30 ஆண்டுகாலப் போராட்டத்துடன் தொடங்கியது. நோர்வே அரசாங்கம் இலங்கையில் 1970 ற்கு பிந்திய காலத்தில் நோர்வேயின் சீனோர் () உத்தியோகஸ்தர் ஒருவர் சிங்கள 1977 இனவன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர் மீது பரிவுகொண்டு தான் அங்கு சேவையாற்றியமையை பயன்படுத்தி ஆயுத போராட்டத்தில் ஆர்வங்கொண்ட தமிழ் சக்திகளுடன் தொடர்பினை ஏற்படுத்தி அவர்களின் தனி நாட்டுப் போராட்டத்தினை ஆதரித்த அதற்கான பயிற்சி வழங்கி உதவுவதற்காக முல்லைத்தீவு பிரதேசத்தில் பாரிய நிலப் பிரதேசத்தினை இலங்கை அரசிடம் கேட்டுக்கொண்டதான தகவல்களை அறியமுடிந்தது.

அவரது வேண்டுகொளை ஏற்ற தீவிரவாத இளைஞர்கள் த.வி.கூட்டணி தலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்களை அணுகி அவர் அன்றைய பிரதம மந்திரி திரு பிரேமதாசாவிடம் சமூக நடவடிக்கைகளுக்காக அவ்வாறான நிலத்தினைப் பெறுவதற்கு முயற்சித்தார். அதுகுறித்து பிரேமதாசா வாளாவிருந்ததனைக்கண்டு அவ்விளைஞர்கள் தொழிற்சங்க வாதியும் பிரேமதாசாவிற்கு நெருங்கியவருமான கே.சி நித்தியானந்தனை அணுகினர். கே.சி ஏன் தன்னிடம் நேரடியாக வரவில்லை என குறைபட்டுக் கொண்டதாகவும் முயற்சித்துப் பார்த்தார். பிரேமதாசா மீண்டும் அதனைக் கவனிப்பதாகக்கூறி வாளாவிருந்துவிட்டார். இதனை என்னிடம் கூறிய மூலச் செய்தியாளர் பிரேமதாசா இக்கோரிக்கை தொடர்பில் சந்தேகப்பட்டிருக்க வேண்டுமெனக் குறிப்பிட்டார்..

தொடரும் ....


(பாகம் -3)

நோர்வேயினை வெளிநாட்டு அனுசரணையாளராக இலங்கை அரசு அங்கீகரித்து சமாதானப் பேச்சுவார்த்தையினை முன்னெடுப்பதற்கு புலம் பெயர் தமிழ் சக்திகள் நீண்டகாலமாக முனைப்புடன் செயற்பட்டு வந்தமைக்கான ஆதாரங்கள் பல உள்ளன. மேலும் நோர்வே 1970 களில் எண்ணை வளத்தினைக் கண்டுபிடித்து செல்வந்த நாடாக மாறியபோது உலகில் பிரச்சினைக்குரிய நாடுகளில் சமாதானத்தினை ஏற்படுத்தும் அனுசரணை நாடாக தன்னை ஈடுபடுத்தி பலஸ்தீனம், குவாட்டமாலா, சூடான், சைப்பிரஸ், கொலம்பியா முன்னாள் யூகோஸ்லாவியா போன்ற நாடுகளில் செயற்பட்டமையும் இலங்கையில் சந்திரிகாவும், ரணிலும் ஆட்சியிலிருந்தமையும் இவர்களின் அனுசரணை சாத்தியமானது. 

நோர்வே மட்டுமல்ல ஸ்கண்டி நேவிய நாடுகளில் புலம்பெயர் தமிழ் புலி ஆதரவு புத்திஜீவிகள், தீவிர தமிழ் தேசியவாதிகள் பல வெள்ளைப் புலி " என்ற பெருமிதம் கொள்ளும் பேராசிரியர்களை உருவாக்கியிருந்தனர்.

2008 ம் ஆண்டு ஏப்ரலில் நான் ஒஸ்லோ பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற சமாதானம் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டபோது புலிகளின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் பலர் பல்வேறு அறிமுகங்களுடனும், அடையாளங்களுடனும் கலந்துகொண்டனர். தமிழ் தேசிய ஆதரவு கல்விமான்களும் ஓரிரண்டு சிங்கள தேசிய கல்விமான்களும் கலந்துகொண்ட நிகழ்வில் பிரபாகரனை மெச்சும் சுவீடன் நாட்டு உபர்சலா பல்கலைக்கழக பேராசிரியர் அங்கு கலந்துகொண்ட முஸ்லிம் கல்விமான்களிடம் அதிகமான வெள்ளைப் புலிகளைப் பார்ப்பதென்றால் எங்களது பல்கலைக்கழகத்திற்கு வாருங்கள”; என அழைப்பு விடுத்திருந்தார். ஸ்கன்டிநேவிய நாடுகளின் இறுதிக்கட்ட சமாதான ஈடுபாடுகள் பலரும் அறிந்ததே.

பிரேமதாசா புலிகளுடன் 1989 ல் தேன் நிலவு கொண்டாடியபோது இந்திய அரசாங்கம் பிரபாகரனை நாடுகடத்த கோரிக்கை விடுத்தபோது பிரேமா ஒரு மூத்த சகோதரன் தனது இளைய சகோதரனை அவருடைய தவறுதலுக்காக அயலவரிடம் கையளிக்க மாட்டான் என்று உரிமையுடன் நிராகரித்தார். அவருக்கும் புலிகளுக்குமான உறவு பல சிங்கள, தமிழ், முஸ்லிம் உயிர்களை காவு கொள்வதற்கு காரணமாக அமைந்தது. இது இராணுவத்தினரைக்கூட சங்கடத்தில் ஆழ்த்தியது. 

முன்னாள் இராணுவத் தளபதியும் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கமைய இடம்பெற்ற புலிகளின் ஆயுதக் கையளிப்பின்போது அரசின் பிரதிநிதியாக கலந்து கொண்டவருமான சேபால ஆட்டியகலவை; முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷரப் அவர்களும் லத்தீப் என்னும் அவரது உதவியாளருடன் கொழும்பு பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தார். ;.அஷரப் தனக்கு வழங்கியுள்ள பாதுகாவலர்களின் எண்ணிக்கை போதாது என்பதற்காக சேபால ஆட்டியகல அவர்களைச் சந்தித்தபோது நான் தற்செயலாகவே அவருடன் செல்ல நேரிட்டது. 

ஆட்டியகல பிரேமதாசா மீதான  தனது மன உளைச்சலைக் கொட்டித் தீர்த்தார். நிபந்தனையாக எங்கள் இருவரையும் அஷரப்பிடம் யார் இவர்கள் என்று உறுதிசெய்த பின்னர் அவர் புலிகளுக்கு பிரேமதாசா வழங்கும் நவீன தொலைத் தொடர்பு சாதனங்கள் பல்வேறுபட்ட பொருட்கள் தொடர்பான விபரங்களை கூறியதுடன் தங்களுக்கு (இராணுவத்திற்கு) அவற்றினை இராணுவ முகாம்களைத் தாண்டி கொண்டு செல்வதற்கு அனுமதிக்குமாறு வழங்கப்பட்ட ஆணைகள் குறித்து அதிருப்தி தெரிவித்து தமது கையறு நிலையினை வெளிப்படுத்தினார்.

இந்தச் சம்பவத்தை இவர்கள் மூவரும் இன்று உயிருடன் இல்லை என்பதால் வெளிப்படுத்த வேண்டியது அவசியமெனக் கருதுகிறேன். ஒரு ராணுவ ஜெனறலின் மனக்குமுறலை கைகள் கட்டப்பட்ட நிலையை இன்றைய சூழ்நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றேன். இன்றைய இராணுவம் இலங்கை அரசின் தலைவர், இணைந்து செயற்பட்ட நிலை முன் ஒருபோதும் காணப்பட்டதில்லை. இந்த ஒருமித்த செயற்பாடு புலிப்பயங்கரவாதத்திற்கான வெற்றிக்கான காரணமாக அமைந்துள்ளது.


(பாகம் -4)

இலங்கையில் பண்டாரநாயக்காவின் படுகொலைக்குப் பின்னர் ஜே.வி.பியினரின் ஆயதக் கிளர்ச்சிக் காலகட்டங்களிலும், மறுபுறம் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் தொடங்கியதிலிருந்தும் அரசியல்வாதிகள் மக்கனிள் பாதுகாப்பை உறுதி செய்வதனைவிட தங்களைப் பாதுகாப்பதில் அதிக அக்கறையினை மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். பொத்துவில் பா.உ கனகரெத்தினம் புலிகளால் எவ்வாறு சுடப்பட்டர் என்பதனை என்னிடம் விபரித்த மட்டக்களப்பு நண்பன் இன்று உயிருடன் இல்லை. பின்னர் இராணுவத்தினரால் சுடப்பட்டு இறந்துபோனார். 

தங்கள் பாதுகாப்பு குறித்து அக்கறைகாட்டிய அரசியல்வாதிகள் பலர் புலிகளின் தாக்குதலிலிருந்து தப்பமுடியவில்லை.


குறிப்பாக கிழக்கு அரசியல்வாதிகளான முன்னாள் எம்.பி அலிசாஹிர் மௌலானா, ஹிஸ்புல்லா ஆகியோர் புலிகளுக்கு உதவிபுரிபவர்களாக நெருங்கிய தொடர்புகொண்டவர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். 

இந்த புலிப்பயம் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்காவை கூட விட்டுவைக்கவில்லை. கருணா புலிகளிலிருந்து பிளவுபட்டு புலிகளுக்கு சவாலாக கிழக்கில் அமைந்தபோது லண்டனிலுள்ள தமிழ் மனித உரிமைவாதிகளென சொல்லிக்கொள்பவர்கள், மேலும் தமிழ் தேசியவாதிகள் ஆகிய இருதரப்பிற்குமிடையில் சமரசப் பேச்சுவர்த்தை நடத்திக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்தே சொர்ணத்தின் தலைமையில் கடல்வழிப்பாதையால் வெருகலுக்கு புலிகளின் ஆயுததாரிகள் செல்வதற்கு அனுமதி வழங்கியது சந்திரிகா அம்மையார் என்னும் செய்தியினை தகவலறிந்த வட்டாரம் உறுதி செய்தது. இதில் கருணாவின் விசுவாசிகள் 310 பேர்வரை கொல்லப்பட்டனர்.

இந்தக் கொலைகள் கோரமாக செய்து முடிக்கப்பட்டன என்பதனை அப்பகுதி மக்களுடன் நான் பேசியபோது உறுதி செய்யமுடிந்ததது. பிரேமதாசாவிற்குப் பின்னர் புலிகளுக்கு எதிரானவர்களை அழிப்பதற்கு துணைபோன இலங்கை அதிபர் சந்திரிகா அம்மையார் என்றவிடயம் சட்டவிசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டிய விடயமாகும்.

புலிகள் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய பல நல்ல தீர்வுகளை தடுத்து இறுதியில் தமிழர்களை நட்டாற்றில் விட்டுச் சென்றிருக்கின்றார்கள். நல்லவேளை இந்திய அரசின் அனுசரணையுடன் அன்று மாகாணசபை அறிமுகஞ்செய்யப்பட்டு அமுலில் இல்லாதிருந்திருந்தால் தமிழர்களின் சகல அரசியல் செயற்பாடுகளும், ஆயதப் போராட்டங்களும் விழலுக்கு இறைத்த நீராகப்போயிருக்கும். புலிகள் இந்திய இலங்கை உடன்படிக்கையை நிராகரித்தது, பிரேமதாசாவுடன் தீர்வுகாண முற்படாமல் விட்டது, சந்திரிகாவின் அரசியலமைப்பு தீர்வுத் திட்டத்தினை தமிழர் விடுதலைக் கூட்டணியினர் உட்பட நிராகரித்தது. தமிழீழம் என்ற மரணமுடிவுகண்ட பாதையில் இட்டுச் சென்றுள்ளது.


மீண்டும் கிட்டத்தட்ட மஹாவம்ச வரலாறு திரும்பவும் எழுதப்பட்டுள்ளது. புலிகளின் நடைமுறை ஆட்சி (De Facto) முடிவிற்குவந்து இலங்கை முழுவதும் ஒரே ஆட்சியின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. சிங்கள அரசு மஹாவம்ச மனப்பதிவுடன் செயற்படுவதாக காலத்திற்குக் காலம் குற்றஞ்சாட்டிவந்த தமிழ் தேசியவாதிகளும், புலிகளும் எல்லாள மனப்பதிவில் துட்டகைமுனுவைப் பழிவாங்கி தமிழ் தாயகத்தின் ஆட்சியை உறுதிசெய்யும் மஹாவம்சகால மனப்பதிவுடன்தான் செயற்பட்டிருக்கின்றார்கள். 

புலிகள் அநுராதபுர விமானப் படைததளத்தை சென்ற வருடம் விமானத்திலிருந்து தாக்கி தற்கொலைதாரிகளால் முற்றகையிட்டபோது எல்லாளன் படைத்தாக்குதலென புலிகள் பெயரிட்டிருந்தார்கள்.  

மஹாவம்ச மனப்பதிவுடன் சிங்களவர்கள் இருக்கிறார்களோ இல்லையோ புலிகள் எப்போதுமே மஹாவம்ச காலத்திலேயே வாழ்ந்திருக்கிறார்கள். துட்டகைமுனுவை பழிவாங்கி எல்லாள வாரிசுகள் தங்களது நாட்டினை மீட்கவேண்டும் என்ற கருத்தியலை இலங்கை இனப்பிரச்சினைக்கு சுருதி சேர்க்கும செயற்பாடாக பேணிவந்துள்ளார்கள்.

மாவீரர் உரையிலும், பாலசிங்கத்தின் உரையிலும் ஏனைய புலி ஆய்வாளர்களின் உரைகளிலும் மஹாவம்ச மனப்பதிவு தவறாமல் நினைவு கூரப்படும்.. மறுபுறத்தில் அதிதீவிர சிங்கள தேசியவாத சக்திகள்கூட மஹாவம்சத்தையோ அல்லது அநாகரிக தர்மபாலாவின் குறுந்தேசியவாத கருத்தியல்களையோ ஒப்பீட்டளவில் மிகவும அபூர்வமாகவே குறித்துப் பேசுவர். ஆனால் பிரபாகான் அஸ்தியானபின்னும் புலி கொயபள்ஸ்கள் (Goebbels) பிரபாகனுக்கு உயிர் கொடுத்து ஒழித்து வைத்துக்கொண்டு ஓர்மப் பிரச்சாரம் செய்கிறார்கள். 

எல்லாளன்; துட்டகைமுனுவால் வெற்றி கொள்ளப்பட்டபோது எல்லாமக்களையும் அழைத்த மரணச்சடங்கினை துட்டகைமுனு செய்ததாகவும், எல்லாளனுடைய சமாதியைத் தாண்டிச் செல்லும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தங்களது தொப்பிகளையும் , பாதணிகளையும் நீக்கவேண்டுமென்றும் ஒரு கௌரவத்தினை ஏற்படுத்தினார். ஆனால் இன்று பிரபாகரனுடைய மரணத்திற்கு இன்றைய துட்டகைமுனு வழங்கினாரா? என்ற வினாவிற்கான விடை எல்லோருக்கும் தெரிந்ததே! ஏனெனில் எல்லாளன் பயங்கரவாதியல்ல, மக்களை நேசித்த மக்கள் நேசித்த மன்னன்.


சமாதான காலத்தின்போது நோர்வே அரசு இச்சமாதானத்தினை முன்னெடுக்கின்ற முயற்சியில் புலிகளினதும், புலம்பெயர் புலி ஆதரவாளர்களினதும் சுயாட்சி இலக்கைக்கொண்ட சமாதான சதுரங்கத்தில் காய்களை கவனமாக நகர்த்தியுள்ளார்கள். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸினை தமது வலைக்குள் ஈர்த்துக்கொள்ள அவற்றின் முக்கிய உறுப்பினர்களான சேகு தாவூத் பஸீரை நோர்வே பல்கலைக்கழகத்திற்கு அழைத்து சமாதானம் குறித்த பயிற்சி வகுப்பினையும் நடாத்தினார்கள். இதன் பின்னணியில் முன்னாள் புளொட் பின்னாள புலி அனுதாபியுமான வ.ஐ.ச ஜெயபாலன் (கவிஞர்) இருந்துள்ளார் என்பது குறித்து செய்திகள் வெளியாகின. சேகு தாவூத் மூலமாக அஷரப் அவர்களுக்கு அறிமுகமான வ.ஐ.ச ஜெயபாலன் புலிகளுக்கும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினருக்குமிடையில் குறிப்பாக சேக தாவூத, பஸீர் மூலம் எத்தகைய இடைத்தரகர் பணியினைப் புரிந்தார் என்பது குறித்த ஆராயவேண்டிய தேவையும் உண்டு.

ஏனெனில் பின்னர் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷரப் அவர்கள் புலிகளின் சதிவலையில் சிக்கி பலியாகிப் போனார். சேகு தாவூதின் சமாதமானப் கற்கைநெறி தொடர்பான விரிவுரையாளரை சந்திக்கும் வாய்ப்பு நோர்வேயில் எனக்குக் கிடைத்தது. நோர்வே பல்கலைக்கழகத்தில் பிரதான கல்விமானான இலங்கை சம்பந்தமான ஆய்வுகளை செய்பவரான டொக்டர் கிறிஸ்ரியன் ஸ்ரோக் (Dr. Kristian Stokke)தமிழீழ தேசத்தினை நிர்மாணித்தல:, இலங்கையில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் உருவாகிவரும் அரச நிறுவனங்களும், ஆளுமை அமைப்புக்களும்என்ற ஆய்வினை செய்தவர். இதன்மூலம் எத்தகைய சமாதான கருத்தியலை நோர்வே அரசும் அதன் கல்விமான்களும் கொண்டிருந்தார்கள் என்பதனை இது கோடிட்டுக் காட்டுகின்றது. மறுபுறம் இதற்கு எதிராக தமிழ் கல்விமான் டொக்டர் முத்துக்கிருஸ்ன சர்வானந்தன் தமிழீழ கற்பனா அரசினை தேடுதல் கிருஸ்ரின் ஸ்ரோக்கிற்குப் பதில் எனும தனது எதிர் ஆய்வினையும் முன்வைத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.   (தொடரும்)


May 2009
thenee, lankamuslims, unamikal and Mahavali


(பாகம் -5)

புலிகளின் அரசியல் முலாம்பூசப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தியல்களை உள்வாங்கிக்கொண்டு ஹக்கீமின் தலைமையிலான பிளவுபட்ட சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது அரசியலை வடகிழக்கில் தக்கவைக்கமுடியும் என்ற அடிப்படையில்தான் செயற்பட்டு வந்திருக்கின்றது. அத்தகைய அரசியல் கருத்தியல் மாற்றங்கள், செயற்பாடுகள் குறிப்பாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரான அஷரப் அவர்களின் மறைவிற்குப் பின்பே அதிலும் குறிப்பாக சேகுதாவுத் பஸீர், ரவூப் ஹக்கீம் ஆகியோரின் தலைமைத்துவங்கள் உறுதியானபின்பே இந்நிலை கூர்மையடைந்தது.

நோர்வேயின் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தான காலகட்டத்தில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நோர்வேயின் அனுசரணையாளர்களால் அணுகப்பட்டனர். அந்நிலையில் ஹக்கீம் எவ்வாறு செயற்பட்டார் என்பது குறித்த செய்திகள் கொழும்பிலுள்ள கிழக்கைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி ஒருவர் ஹக்கீமுடன் நடத்திய விவாதங்கள் குறித்தும் என்னிடம் விபரித்தார். அவ்வாறான சம்பவங்கள் நோர்வேயின் வலைக்குள் முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறு வீழ்த்தப்பட்டது என்பது பின்னர் தெளிவாக விளங்கியது. 

அதன்பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட முஸ்லிம் சமாதான செயலகம் மேலும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியலமைப்பு சட்ட ஆலோசகரான எம்..எச்.எம் சல்மான் போன்றோரை வேர்கோப் பவுண்டேசன் எனும் இன்னுமொரு வெளிநாட்டு சமாதானச் செயற்பாட்டு நிறுவனம் மூலமாக (Berghof Foundation) சுவிஸ்லாந்திற்கு அழைத்து முஸ்லிம்களுக்கான அரசியல் பிரச்சினைகளை ஆராய்வதனூடாக மொத்த தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளையும் அடிப்படையாகக் கொண்டு வடகிழக்கு பிரச்சினைக்கு ஒரு இணக்கப்பாட்டினூடாக தீர்வுகாணும் முயற்சியின் அடிப்படையில் புலம்பெயர் புலி உறுப்பினர்ளும்; கலந்துகொள்ளும் நிகழ்சியினூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

முஸ்லிம் சமாதானச் செயலகம் நோர்வேயின் நிதி உதவியுடன் அரசியல் நிலைப்பாட்டில் எதிரெதிராக செயற்படுகின்ற சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய ஐக்கிய முன்னணி என்பனவற்றின் பிரதிநிதிகளை மட்டும் உள்ளடக்கியதாகவும் மறுபுறம் ஏனைய முஸ்லிம் அரசியல் கட்சிகளை உள்ளடக்காததாகவும் புரிந்துணர்வின்அடிப்படையில் செயற்பட்டு வந்திருக்கிறார்கள்

இவர்களுடைய செயற்பாடு குறுகிய அரசியல் நலன்களையும் மறுபுறம் வடக்கு முஸ்லிம்ளின் அக்கறைகளை உள்ளடக்காததாகவும் செயற்பட்டது என்ற குற்றச்சாட்டின் மூலம் வடமாகாணத்திற்கான தனியான சமாதானச் செயலகம் ஒன்றினை நிறுவும் நிலைக்கு வடமாகாண முஸ்லிம்கள் சார்பாக செயற்படும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் வடபகுதி உறுப்பினரான அமைச்சர் றிச்சாட் பதியுதீன் வடமாகாண முஸ்லிம்களுக்கென தனியான சமாதானச் செயலகம் ஒன்றினை நிறுவி செயற்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். 

முஸ்லிம் சமாதானச் செயலகம் வடமாகாண முஸ்லிம்களுக்கென தனியாக உருவாக்கப்பட்டமைக்கான பிரதான காரணம் என்னவெனில் தொடர்ந்தேர்ச்சியாக வடமாகாண முஸ்லிம்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளாலும், அரசாங்கத்தினாலும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் 2007 ம் ஆண்டில் வடமாகாண புத்தளம் வாழ் அகதிகளுக்கென வீடமைப்புத் திட்டமொன்றினை அமைக்கும் திட்டத்தினை அமைச்சர் றிசாட் பதியுதீன் ஐ.எம்..எப் (I.M.F) என்னும் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்க முன்வந்த போது அதற்கு புத்தளப் பிரதேச அரசியல்வாதிகளும், அப்பிரதேச மக்களும் தடையாக அமைந்தனர். 

இதனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வீடமைப்பு நிர்மாணப்பணிகளை உடனடியாக நிறுத்தியதுடன் அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எழுத்துமூல சம்மதத்தினைப் பெற்றுவருமாறும் அப்போதுதான் நிர்மாணப் பணிகளை தொடரமுடியுமென்றும் ஆலோசனை வழங்கினார். எனினும் அக்கால கட்டத்தில் மஹிந்த அரசில் அமைச்சராக இருந்த ஹக்கீம் புத்தளம் வாக்குகளை தமது கட்சி இழந்தவிடுமென்பதால் அந்த ஆவணத்தில் அவர் கையொப்பமிடவில்லை

இதனைத் தொடர்ந்தே முஸ்லிம் சமாதானச் செயலகம் வடக்கு முஸ்லிம் சமாதானச் செயலகம் என்ற பிளவிற்கு உட்பட்டது. 

வடகிழக்கு இணைப்பு, பாரம்பரிய பிரதேசக் கோட்பாடுகள் என்பவற்றில் வெளிப்படையான எதிர்ப்பினைக் காட்டிவந்த அமைச்சர் அதாவுல்லா தேசிய முஸ்லிம் காங்கிரஸ் என்னும் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பினும் அவர் உள்வாங்கப்படவில்லை. 

முஸ்லிம் காங்கிரஸ் செயலகத்திலுள்ள எம்.எச்.எம் சல்மானைச் சந்தித்தபொழுது வடகிழக்கு பராம்பரியம் குறித்த கருத்தியல்களையும் ஒரு தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் போல அவர் வலியுறுத்திக் கூறியதையும் இதற்கு எதிரான கருத்தியலை கொண்டிருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் பிரதிநிதியான சட்டத்தரணி அவுல்கலாம் என்பவர் தமது அடிப்படை நலன்களைக்கருதி தாம் சார்ந்திருக்கின்ற கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க முனையவில்லை.

இச்சமாதானச் செயலகத்தின் உள்ளக நிதி தொடர்பான செயற்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் முன்வைத்தபோது அவைபற்றி நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை. 

அஷரப்பின் இறுதி ஹெலிபயணத்தின்போது அவர் சிறீலங்கா.மு.கா என்னும் இனரீதியான அரசியல் கட்சி அவசியமில்லை என அறிவித்து சிறீ. மு.காவிற்கு பிரியாவிடை கூறினார். அவர் புதிதாக ஸ்தாபித்த தேசிய ஐக்கிய முன்னணி மூலம் தனது பதிய அரசியல் பயணத்தினை தொடரும் நிலைப்பாட்டிலும் அதனூடாக 2012 ல் ஒரு முஸ்லிம் இலங்கையின் பிரதமராக வரமுடியுமெனவும் நம்பினார்.
 
அஷரப்பினை படுகொலைசெய்த பின்பும் அதனை பகிரங்கமாக கூறமுடியாத சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் என்னிடம் தனிப்பட்டவகையில் நான் அவருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது இது நாலுகால்களின”; வேலைதான் என அவர் குறிப்பிட்டார். அவரது அரசியல் ஆலோசகரான சேகு தாவூத் பஸீர் தமது தலைவரை சந்திரிகா அரசுதான் படுகொரலை செய்ததென பகிரங்கமாக அரசியல் மேடைகளில் பேசியுள்ளார். இம்மரணம் குறித்து ஆணைக்குழு ஒன்று நியமிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கூறியபோதும் இதுவரை அதுவிடயம் தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளையும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினரோ அல்லது அஷரப்பின் பாரியாரோ மேற்கொள்ளவில்லை மறுபுறம் அஷரப் அவர்களைக் கொன்றது புலிகள் தான் என்று வெளிப்படையாக அதாவுல்லா குறிப்பிட்டு வந்துள்ளார். 

பிரபாகரனை சந்திக்கச்சென்ற விடயத்தில் சேகு தாவூத் பஸீரின் பின்புலச் செயற்பாடுகள் பற்றியும் தான் அதற்கு எதிராக கருத்து முன்வைத்ததையும் பல எதிர்கருத்துக்களில் ஒன்றாக தலைவரைக் கொன்றவர்களை தாம் சந்திக்கமுடியாது என்னும் கருத்தினையும் அவர் முன்வைத்ததாக அறிய முடிகின்றது. 

ஆனால் ஹக்:கீம் பிரபாகரன் வடகிழக்கு முழுவதையும் பெற்றுவிடுவார் தமக்கு ஒன்றும் கிடைக்காது என்னும் அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றினை புலிகளுடன் மேற்கொள்வதற்காக முனைந்தார். இதில் நோர்வேயின் பின்னணிகூட இருந்தது என்பதனை மறப்பதற்கில்லை. ஆனாலும் இந்த ஒப்பந்தம் குறித்து நடைமுறை குறித்த சந்தேகம் எழுப்பப்பட்டபோது பிரபாகரனின் ஆணை வடகிழக்கில் எங்கும் செல்லுமென்று குறிப்பிட்டிருந்தார் ரவூப் ஹக்கீம். அவரது ஆணை எவ்வாறு சென்றது என்பது முஸ்லிம்கள் மீது அவரது ஆணை எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே.! ஆனால் சிறி.ல.மு.காங்கிரஸின் தலைவரை புலிகள், தமிழ் தேசிய சக்திகள் இலகுவாக கையாளமுடியுமென்பதனை அறிந்து அரசியல்ரீதியாக தமது காய்களை நகர்த்தினர்.

இச்செயற்பாடு நோர்வேயின் அனுசரணையுடன் இலகுவாக்கப்பட்டது. அதற்கான பின்புலக்காரணம் புலிளைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் புலிகளது அவர்களது தயவில்தான்; வாழவேண்டுமென்னும் நிலைப்பாட்டினை அவா கொண்டிருந்தார். ஏனெனில் அவர் என்னிடமே 1990 களின் பிற்பகுதியில் ஹக்கீம் புலிகள் நினைத்தால் கிழக்கிலிருந்து முழு முஸ்லிம்களையும் வடக்கிலிருந்து வெளியேற்றியதுபோல் வெளியேற்றலாம் எனக் குறிப்பிட்டார்.
 
தமிழ் தேசியவாதக் கருத்தாக்கிரமிப்புக்கள,; செல்வாக்குகளுக்கு உட்படுத்தப்பட்ட ஹக்கீம் 1989 தேர்தலுக்குப் பின்னர் அஷரப் அவர்கள் கைவிட்ட சிங்களப் பேரினவாதக் கருத்தியலுக்கு மீண்டும் உயிர்கொடுத்தர். பேரினவாத சிங்கள எதிர்ப்புக் கருத்தியல்களிலும், தமிழ் தேசியவாதிய சக்திகளுடன் நெருக்கமாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார். தெற்கிலே உள்ள மூன்றில் இரண்டுபங்கு முஸ்லிம்களின் அரசியல், அபிலாசைகளை பொருட்படுத்தாது தனது கிழக்கு அரசியல் தளத்தினை மட்டும் சிறீ.மு.கா ஊடாக உறுதி செய்யும் செயற்பாட்டில் தீர்க்கமாக செயற்பட்டு வந்துள்ளார்

அதுகுறித்து அவரது கருத்து வெளிப்பாடுகளில் சிங்களப் பேரினவாதத்திற்கு அடிமையாகி தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தினை காட்டிக்கொடுக்கவோ, மளினப்படுத்தவோ மு.கா முயலாதுஎன்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும் பல தடவை மேற்கொண்டுள்ளார். இன்நிலைப்பாட்டிற்கு எதிரான முஸ்லிம் அரசியல் சக்திகளை சமாதான முயற்சிகளுக்கு எதிரான சக்திகளாக அடையாளங்காட்டி வந்திருக்கின்றார்

2004 ம் ஆண்டு பெப்ருவரியில் மு.கா.வின் ஊடக அறிக்கை ஒன்றில் தமிழ் பேசும் மக்களின் தாயகத்தை இரண்டாகக் கூறுபோட கோரும் அதாவுல்லா அணியினர் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு விரோதமான ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு துணைபோன நு.ஆ கட்சியினர் என்பவருக்கு எதிராக தாம் போட்டியிடுவதாக சிறீ.ல.மு காங்கிரஸ் தலைவா குறிப்பிட்டிருந்தார்

முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிளவுபட்டவர்களையும் துரோகிகளாக தண்டிக்கப்படவேண்டியவாகளாக புலிகளுக்கு நிகரான அரசியல் கருத்தியல்களையும், சொற்பதங்களையும் பிரயோகித்து வந்துள்ளார். 

புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், சர்வதேச அனுசரணையாளர்களான நோர்வேயும், ஏனைய சமாதான தொண்டர் நிறுவனங்களும் வடகிழக்கு இணைந்த பாரம்பரிய பிரதேச அரசியல் அபிலாசைகளுக்கு ஹக்கீம் கைப்பொம்மையாக செயற்பட்டு வந்திருக்கிறார். 

( தொடரும் )

May 2009
Thenee, lankamuslims,unmaikal,and mahavali

நன்றி - –எஸ்.எம்.எம் பஷீர் bazeerlanka.com