Monday 3 August 2020

அந்த நாலு பேருக்கு நன்றி: - குவார்னிகா

''மன்னன் மக்களைக் காப்பாறிறியதாகச் சொன்ன காலம் போய் மன்னனைக் காக்க மக்கள் பலியெடுக்கப்படுகிறார்கள். எத்தனை மக்களைக் கொன்றாவது மன்னனைக் காப்பாற்றிவிட நமது சமூகம் முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது மன்னனை விட்டுவிடக்;கூடாது என்று அந்த நாலு பேர்கள் காத்திருக்கிறார்கள்.''

வன்னியை ஆண்ட கடைசி முடிசூடாமன்னன் பிரபாகரனது தலைநகராம் கிளிநொச்சி இலங்கை அரசிடம் வீழ்ந்த நாள் தமிழர் வரலாற்றில் கரிநாளா? கடற்படை காலாட்படை வான்படை சகிதம் தனது ஆட்சியைப் பலப்படுத்தியிருந்த மன்னன் எவ்வாறு தனது இறுதி நாளை எண்ணிக் கொண்டிருக்க வேண்டி வந்தது?

ஈழத்தின் மிகப்பெரிய இராணுவ முகாமான ஆனையிறவையே தன்வசப்படுத்திய மன்னன் ஒரு சத்தமும் இல்லாது ஆனையிறவை விடுடோடியது எப்படி?

ஒரே நாளில் 300க்கும் அதிகமான இளைஞர்களைப் பலிகொடுத்துக் கைப்பற்றிய பூநகரி இராணுவமுகாம் இராணுவத்திடம் திரும்பியது எப்படி?

தாண்டிக்குளத்தில் உள்ளுக்க விட்டடித்தவர்கள் முல்லைத்தீவில் சும்மா உள்ளுக்க வரவிட்டது எதனால்?

அந்தக்காலம் யாழ்ப்பாணத்தில காங்கேசந்துறை இராணுவ முகாமும் பலாலி இராணுவ முகாமும் கோட்டை இராணுவ முகாமும் மட்டுமே இருந்தபொழுது வன்னியில 7 பெரிய இராணுவமுகாம்கள் விளங்கி வந்தது.ஆனையிறவு, தள்ளாடி, புநகரி, மாங்குளம், கொக்காவில், முல்லைத்தீவு வவுனியா என்று எல்லாமே மிகப்பெரிய இராணுவபலம் கொண்ட முகாம்கள். இவற்றிற் இடையில் பல பொலிஸ் நிலையங்கள். இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்துக் கொண்டிருந்தவர்கள் வன்னிமக்கள். அப்போது புலிகளின் வன்னிப் பொறுப்பாளராக இருந்தவர் அவர்களது துணைத்தலைவர் மாத்தையா அவர்கள். அந்தத் துணைத் தலைவர் மாத்தையா எப்படி ஒரே நாளில் துரோகியானார் ?.

இதை எல்லாவற்றையும் விட முக்கியமானவர் ஒருவர், கிழக்குமாகாணப் பொறுப்பாளராக இருந்தவர் சந்தோசம் என்பவர். இன்றிருக்கிற புலிகளுக்கு தெரிந்திருக்காது அவரை. புரிந்தவர்களுக்கு அவர் காலமாகி விட்டார் என்பது மாத்திரமே தெரியும். ஆனால் எப்படிக்காலமானார் என்று தெரியுமா? 90களின் ஆரம்பத்தில் ஒரு புலியண்ண ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது சொன்னார் அண்ண சந்தோசத்துக்கென்றும் ஒரு நாலு பேர் இருப்பாங்கள் தானே என்று.

மாத்தையாவிற்கு வன்னியிலிருந்த புலி உறுப்பினர்களிடம் சரியான மரியாதை இருந்தது. முன்பு கொக்கோ கோலாலும் கோடன்சேட்டும் சான்டில்சும் மட்டுமே தெரிந்த யாழ்ப்பாணத்துப் புலிகளுக்கு வன்னிப் புலிகள் என்றால் ஒரு இழக்காரம். யாழ் கோட்டையிலிருந்து வெளியேறிய இராணுவத்தைத் தடுக்க மாத்தையாவால் வன்னியிலிருந்து புலிகள் அனுப்பிவைக்கப்பட்டார்கள். அப்பொழுதிலிருந்தே வன்னிப்புலிகளுக்கும் யாழ்ப்பாணத்துப் புலிகளுக்கும் சகவாசம் சரியில்லாமல் இருந்தது. முறுகல் இருந்தது. பின்பு மாத்தையாவைத் துரோகி எனத் திட்டம் போட்டுத்தான் தீர்த்துக் கட்டினது என்று எல்லோருக்கும் தெரியும். இப்ப அந்தப் புலியண்ண சொன்னதப் பாருங்கோ மாத்தையாவுக்கென்றும் நாலுபேர் இருப்பாங்கள் தானே.

மன்னாரில விக்டர் என்று ஒருவர் இருந்தார் அவர் களத்தில் சாகும் பொது றோமன் என்றும் ஒரு சின்னப்பொடியன் இறந்தான். தமிழ் நாட்டு நெடுமாறனுக்கு நல்லாத் தெரியும். விக்டரின் நேர்மை மன்னார் சனத்துக்கு நல்லாத் தெரியும், என்ன செய்யுறது நெடுமாறனுக்குத் தெரியாது. மன்னார் சனத்துக்கு விக்டருக்கு பின்னால் இருந்து எப்படிக் குண்டு பட்டது என்று தெரியும். விக்டருக்குத் தெரியாமல் போட்டுது. ஆனால் பாருங்கோ விக்டருக்கென்றும் நாலு பேர் இருப்பாங்கள்தானே.

யாழ்ப்பாணத்தில கிட்டு என்று ஒருவர் இருந்தார். அவருக்கு காலைப்பறித்து பிறகு கடலில உயிரைப்பறித்ததை ஒருவரும் மறக்கமாட்டியள். கிட்டுவுக்கு கால் போகவைத்தது என்று சொல்லி யாழ்ப்பாணத்தில் எத்தனை பேரை போட்டார்கள். பிறகு அந்தக் குற்றம் மாத்தையாவுக்கு மாற்றப்பட்டது.

கிட்டுவை கடலில காட்டிக் கொடுத்தது என்று சொல்லி பிரான்ஸ் திலகரையும் காணவில்லை. இப்ப கிட்டுவுக்கும் நாலுபேர் இருப்பாங்கள். திலகருக்கும் நாலுபேர் இருப்பாங்கள்தானே.

மட்டக்களப்பில கருணா என்று ஒருவர் தான் தாண்டிக்குளத்தில நின்று உள்ளுக்க வரவிட்டு அடித்தது. அவரைத் துரோகியாக்கின கதை தெரியும் தானே.

அவரோட நிக்காம தலைவரை நம்பி வந்து நேற்றுவரை கூட இருந்த கரிகாலன் அண்ண எங்கே? புலித்தேவன் அண்ண எங்கே? இளந்திரையன் அண்ண எங்கே? இவர்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு நாலு பேர் இருக்கத்தானே செய்வாங்கள்.

இப்படி ஒவ்வொருவருக்கும் பின்னால் இருந்த நாலுபேரை யோசிக்காமல் விட்டபடியால எங்கட மன்னன் தனது நிலங்களையெல்லாம் பறிகொடுத்து. இன்னும் இருக்கிற நாளை எண்ணிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது.

மன்னன் மக்களைக் காப்பாறிறியதாகச் சொன்ன காலம் போய் மன்னனைக் காக்க மக்கள் பலியெடுக்கப்படுகிறார்கள். எத்தனை மக்களைக் கொன்றாவது மன்னனைக் காப்பாற்றிவிட நமது சமூகம் முயன்று கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது மன்னனை விட்டுவிடக்;கூடாது என்று அந்த நாலு பேர்கள் காத்திருக்கிறார்கள்.

 Courtesy - unmaikal