Sunday 12 February 2023

ஈழத்தின் வலி (2014) - பேராசிரியர் உமாகாந்

"ஈழத்தின் வலி" எனும் நூலின் ஆசிரியர் வைத்திய துறையைச் சார்ந்தவராக இருந்து கொண்டு இந்த தலைப்பில் பயன்
 மிக்க நூலினை எழுதியுள்ளமை பாரட்டதக்கது. இந்நூலினை ஈழத்தின் அனைத்து பொது மக்களுக்கும் சாதி-மத பேதமின்றி சமர்ப்பணம் செய்துள்ளமை நூலை முனைப்புடன் படிக்க தூண்டுகின்றது.

நூலாசிரியர் ஒரு அரச (சம்பளம் பெறும்) வைத்தியராக இருந்த போதிலும் தான் வைத்திய மாணவராக இருந்த காலத்திலும், அரச வைத்திய சாலையில் கடமையாற்றிய காலத்திலும் புலிகள் இயக்கத்திற்கு பல உதவிகள் புரிந்துள்ளமையை வெளிப்படையாக எழுதியுள்ளமையும் , தனது மூத்த சகோதரன் கண்ணப்பன் புலிகள் இயக்கத்தின் புலனாய்ப் பிரிவு உயர் அங்கத்தவராக இருந்தார் என்பதையும் (பக் -155) , பிரபாகரன் போர்க் குணம் கொண்டவர் என்பதையும் (பக் - 198) , இறுதிக் காலங்களில் விடுதலைப் புலிகள் மிருகங்கள் போன்று நடந்து கொண்டார்கள் (பக்- 93) என்பதையும் , இறுதி நேரத்தில் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்டனி " அப்பாவுக்கு ஒன்று நடந்தால் உங்களை சும்மா விடமாட்டேன் " எனக் கூறினார் (பக் - 152) என்பதையும் , 2006.08.14ம் திகதி புலிகளின் செஞ்சோலை பகுதியில் விமானப்படையின் குண்டு தாக்குதலுக்கு பலியான மாணவிகள் ஆயுதப் பயிற்சி பெற்று கொண்டிருக்கும் போதே கொல்லப்பட்டனர் (பக்-178) என்பதையும் , இறுதிக் காலப்பகுதியில் அங்கவீனமடைந்த நூற்றுக்கணக்கான தமது சொந்த போறாளிகளைக்கூட இரண்டு பஸ் வண்டிகளில் ஏற்றி புலிகள் வெடி வைத்து கொன்றளித்தனர் (பக்-142) என்பதையும், பிரபாகரன் நீர்மூழ்கியின் உதவியுடன் பெருங்கடல் சென்று தப்பித்தார் எனக் கூறுவது வேடிக்கையானது (பக்-147) என்பதையும் , பிரபாகரன் இறந்துவிட்டார் (பக்-170) என்பதையும் வெளிப்படையாக எழுதியுள்ளதன் மூலம் ஆசிரியர் புலிகள் இயக்கம் பற்றிய பல உண்மைகளை நிதர்சனமாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளமை வரவேற்கத்தக்கது.

ஈழத்தின் வலியை மாவில் ஆற்றில் இருந்து நந்திக் கடல் வரை எழுத முனைந்த ஆசிரியர் பல இடங்களில் (அவசியம் கருதி) அந்தக் கால கட்டத்திற்கு முன்னரான சம்பவங்களையும் தொட்டுக் காட்டியுள்ள போதிலும் தமிழ் ஈழப் போராட்டத்தின் போது முஸ்லிம் மக்கள் ஈழப் போராளிகளால் கொல்லபட்டது  தொடர்பில் ஒரு வாசனமேனும் எழுதாமல் விட்டிருப்பது வருத்தத்திற்குரிய விடயமாகும்.

விடுதலைப் புலிகளின் பல செயற்பாடுகள் பல இடங்களில் கண்டித்துள்ள ஆசிரியர் , குறைந்தது " புலிகள் ஏன் தோற்றார்கள் " (அத்தி - 33) அல்லது "புலிகளின் வரலாற்று தவறுகள்" (அத்தி-36) என்ற தலைப்புக்களில் எழுதப்பட்டுள்ள அத்தியாயங்களிலாவது முஸ்லிம் மக்கள் 1990ம் ஆண்டில் உடுத்த உடையுடன் தமது பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து விரட்டப்பட்டதையோ, அல்லது பள்ளிவாசல்களில் வணக்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டதையோ ஓரிடத்தில் கூட குறிப்பிடத்தவறியமை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

"யார் துரோகிகள்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள 39வது அத்தியாயத்தில் விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் இருந்த முஸ்லிம் போராளிகள் துரோகிகளாக பார்க்கப்பட்டு இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டனர் என எழுதப்படுள்ளது. இது விடுதலைப் புலிகளை பூசி மெழுகும் ஒரு முயற்சியாகும்.  விடுதலைப் புலிகள் தங்கள் இயக்கத்திலிருந்த முஸ்லிம் போராளிகளைக் கூட கொன்று குவித்தனர் என்பதே அனைவரும் அறிந்த  உண்மையான தகவலாகும். இவ்விடயத்தை திரித்து ஆசிரியர் புலிகளுக்கு வக்காலத்து வாங்கி , அவர்கள் முஸ்லிம் போராளிகளை இயக்கத்தில் இருந்து விலக்கியதுடன் மாத்திரம் நின்றுவிட்டார்கள் எனகூறியுள்ளார்.தங்களின் இயக்கத்திலிருந்த மத்தையா மற்றும் யோகி போன்ற பெரும் பெரும் முக்கிய (தமிழ்) தலைவர்களை கூடக் கொன்றளித்த புலித் தலைவர் தனது இயக்கத்திலிருந்த முஸ்லிம்களை விலக்கியதுடன் நின்றுவிட்டார் எனக் கூறுவது தர்க்க ரீதியாகக் கூட ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும். 

ஈழப்போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட வலியை எழுதத் தவறிய ஆசிரியர் " மாவிலாறு அணைக்கட்டு விவகாரம்" எனும் தலைப்பில் எழுதியுள்ளது 12வது அத்தியாயத்தில் 2007ம் ஆண்டு விடுதலைப் புலிகள் மூதூரைத் தமது பூரண கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்த போது அங்கிருந்த முஸ்லிம் மக்கள் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். புலிகளின் புலனாய்வுப் பிரிவினரால் சில முஸ்லிம் இளைஞர்கள் சிறைப்பிடிக்கபட்டனர். இவர்கள் "ஜிஹாத்" எனும் அமைப்புடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படுகின்றது என எழுதியிருப்பது முஸ்லிம்களுக்கிடையில் ஒரு போதும் இருக்காததும், முஸ்லிம்களுக்கு மிகவும் வருத்தத்தை தரக்கூடியதுமான ஒரு கருத்தை ஆசிரியர் அது தனது கருத்து அன்றி-கூறப்பட்ட ஒரு விடயம் என்பது போல எழுதியிருப்பது முஸ்லிம்களை மேலும் வருத்தத்திற்கு உள்ளாக்கும் ஒரு செயலாகும்.

1990ம் ஆண்டில் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்களை விரட்டியடித்தமையும் விடுதலை புலிகளின் வரலாற்று தவறுகளில் ஒரு மோசமான தவறாகும் என்பது பல ஈழத் தமிழர்களாலும் , சர்வதேச தமிழர்களாலும் மற்றும் அரசியல் விமர்சகர்களாலும் வெளிப்படையாக கூறப்பட்டது. 2002ம் ஆண்டில் பிரபாகரன் ஊடகவியலார்கள் முன்பு முதல் முறையாகவும் இறுதியாகவும் தோன்றிய போது அவ்விடயத்தை பிரபாகரனும் அன்ரன் பாலசிங்கமும் " அது ஒரு துன்பியல் சம்பவம் அது பற்றி மீண்டும் மீண்டும் பேச வேண்டாம்" எனக் கூறினர். இருந்தும் 16 வருடங்களிற்கு பின்னரும் புலிகள் அவர்களுக்கு கிடைத்த முதல் சந்தர்பத்திலேயே முஸ்லிம்களை மூதூர் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்தனர். இந்தச் சம்பவம் விடுதலைப் புலிகள் முஸ்லிம் மக்கள் அற்ற முழுக்க முழுக்க தமிழர்களை மாத்திரம் கொண்ட தமிழ் ஈழம் ஒன்றையே அமைக்க விரும்பினர் என்பதையே உறுதிப்படுத்துகின்றது.

விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் பல செயற்பாடுகளை விமர்சித்துக் கண்டித்துள்ள ஆசிரியர் தான் பிரபாகரனின் பக்தர் அல்லது பிரபாகரனின் விசிறி என்பதை புத்தகத்தில் பல இடங்களில் வெளிப்படுத்த தவறவில்லை - என்பது மிகை இல்லை .

இனி நூலின் நீதிக்கு வருவோம், ஆசிரியர் நூலின் நீதிக்கு எந்தவிதமான பங்கமும் இளைக்காமல் வாசிப்பு ஓட்டத்திலும், தகவல் கோர்வையிலும் மற்றும் சுவாரசியத்திலும் நடுநிலையினை பேணியுள்ளார் என்பது உறுதி. வரலாற்று படைப்பு கருதியும், தகவல் உள்ளடக்கம் கருதியும் நிச்சயமாக உங்கள் வரிசையில் இடம் பிடிக்க கூடியதொரு நூல் தான்.

ஆசிரியர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைகளையும் , பாரபட்சங்களையும் களையும் இடத்து இதை ஒரு முழுமைபெற்ற ஆக்கம் என்றே கூறமுடியும். ஏன் முடிந்தால் போற்றவும் முடியும்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.